படித்ததில் பிடித்தது...
எவ்வளவு அருமையான உபதேசம்...
நமது குடும்பங்களில் சிலவற்றில் அல்ல பலவற்றில் லக்ஷ்மி என்கிற பெயர் லஷ்மி, லெஷ்மி, லெச்சுமி, எச்சுமி, எச்சம்மா என்றெல்லாம் அபிமானத்தோடு அழைக்கப்படுபவை.
இப்போது நாகரிகமாக பெயர்கள் வைத்துக் கொள்ளும் பெண்கள் இப்படி கூப்பிட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள், மரியாதை பண்ணுவார்கள் என்று எண்ணிப் பார்க்க பயமாக இருக்கிறது.
நமது எச்சம்மா பாட்டி பாவம் அடுத்தடுத்து கணவன், பிள்ளை, ரெண்டு பெண்களை இழந்து அனாதையானவள். இருந்தும் குரு கடாக்ஷத்தால் வாழ்வில் துன்பங்கள் தொடராது என்று நம்பிக்கை கொண்டவள்.
இளம் வயதில் விதவை, படிப்பு வாசனை கிடையாது. யாரும் இல்லாதவளுக்கு போக்கிடம் எது? அவள் நம்பிக்கை அவளை ஸ்ரீ ரமணரிடம் கொண்டு சேர்த்தது. முதலில் பகவானை தரிசித்தவள் ஒரு மணி நேரம் அங்கே அவர் முன் அமர்ந்தாள். மகரிஷி அவளோடு பேசவில்லை. ஆனால் அந்த ஒருமணி நேரத்திலும் அதற்கப்புறமும் கூட அந்த ஆஸ்ரமத்தில் அவளுக்கு இது வரையில் காணாத ஒரு மன நிம்மதி ஏற்பட்டது.
அவள் அன்று முதல் சந்தோஷத்தை அனுபவிக்க தொடங்கினாள். வானில் பறந்தாள் என்று கூட சேர்த்து சொல்லலாம். துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் விடுபட்டவர்களுக்கு தான் அந்த சுகம் தெரியும் அனுபவம் புரியும்.
ஏதோ ஒரு காந்த சக்தி அவளைக் கவர்ந்து விட்டது. தேனுண்ட நரி சுற்றுவதை போல எச்சம்மா ரமண மஹரிஷி இருந்த விரூபாக்ஷ குகை அருகே காணப்பட்டாள். அவளுக்கு என்ன தோன்றியதோ பகவானுக்கு நல்ல மடி சமையல் பெற்ற தாய் செல்லக் குழந்தைக்கு அளிப்பது போல் தினமும் கொண்டுவர ஆரம்பித் தாள். விரூபாக்ஷ குகை அப்போ எல்லாம் அதிக ஜன நடமாட்டம் இல்லாத காடு மண்டிக்கிடந்த மலைமேல் ஒரு இடம். கையில் சாப்பாட்டுக் கூடையோடு மலைமேல் ஏறி செல்வாள் எச்சம்மா. வழியில் மலைமேல் இருந்து கீழே இறங்குபவர்களை பார்ப்பாள். அநேகர் முகம் ஏமாற்றத்தோடு காணப்படும்.
'பாட்டிமா எதுக்கு கஷ்டப்பட்டு மூச்சு வாங்க மலை ஏறுகிறே. அங்கே பகவானை குகையில் காணோம். வெகுநேரம் காத்திருந்து தரிசிக்காமல் திரும்புகிறோம். எங்கே போயிடுவார் அங்கே தான் இருப்பார். வாங்கோ எங்கூட நான் காட்றேன், எச்சம்மா அவர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டு மலை ஏறுவாள். என்ன மாய மந்திரம் எச்சம்மாவுக்கு தெரியும்?
அவர்கள் முதலில் குகைக்கு சென்ற போது பகவான் ஒரு கோவணாண்டியாக குகைச் சுவரை கற்களை மண்ணில் குழைத்து பூசி சுவர் எழுப்பிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு ரமணரை தெரியாது, பார்த்ததில்லை.
ஆகவே அந்த கோவணாண்டியை வேலையாளாக மதித்து.
''சுவாமி எங்கேப்பா இருக்காரு?'' என்று கேட்டார்கள்.
''எனக்குத் தெரியாதே'' என பதில் சொல்லி இருக்கிறார் பகவான் ரமணர்.
வெகு நேரம் காத்திருந்து விட்டு அவர்கள் கீழே இறங்கியிருக் கிறார்கள். இப்போது எச்சம்மாவோடு சென்ற போது அவரைப் பார்த்ததும் திடுக்கிட்டார். ஸ்வாமியையா நாம் சாதாரண வேலைக்காரனாக எண்ணிவிட்டோம்'' அவர்கள் சென்றதும் எச்சம்மா வருத்தத் தோடு பகவானைக் கேட்டாள், ''ஏன் இப்படி பண்ணிட்டேள். பாவம் அவா தெரியாம தானே அப்படிக் கேட்டிருக்கா?''
''என்னை என்ன பண்ணச் சொல்றே நீ. நான் என்ன பண்ண முடியும். என் கழுத்திலே ஒரு அட்டையிலே ''நான் தான் ரமண மஹரிஷி'' எழுதி கழுத்திலே தொங்கவிட்டுக்க சொல்றியா?'' என்று சொல்லி சிரித்தார். எச்சம்மாள் தன்னிடமிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் பகவானுக்கும் அவரது பக்தர்களுக்கும் உபயோகமாக ஏதாவது செய்வாள்.
ரமணரின் தாய் அழகம்மாள் தன்னுடைய கடைசி காலத்தில், விரூபாக்ஷ குகைக்கு மகனைப் பார்க்க வந்த போது கூட அவளைத் தன்னோடு தங்க அனுமதிக்கவில்லை .
எச்சம்மா அழகம்மாளை தன்னோடு திருவண்ணாமலை கிராமத்துக்கு கூட்டிச்சென்று விட்டாள். அழகம்மாவால் தினமும் மலைமேல் ஏறி ரமணரை பார்ப்பது சிரமமாக இருந்தது.
பாவம் அழகம்மா, எல்லாவற்றையும் விட்டு விட்டு எல்லோரையும் துறந்து விட்டு மகனைப் பார்க்க இங்கே வந்திருக்கிறாள். அவளை பகவானோடு தங்க அனுமதிக்க கூடாதா என்று பகவானுடைய சீடர்களை கேட்டாள் எச்சம்மா.
''அம்மாவானாலும் பெண்கள் எவரையும் இங்கே ஸ்வாமியோடு இருக்க அனுமதிப்பது தவறு. இப்போது அம்மாவை அனுமதித்தால் பின்னால் எச்சம்மா நீயோ மற்றும் ஆஸ்ரமத்தில் உள்ள பெண்களும் அந்த உரிமை கோருவார்களே. அப்புறம் இது என்ன ஆஸ்ரமம்?'' என மறுத்தார்கள் சீடர்கள்.
''அதெப்படி அப்பா சரியாகும். இந்த உலகில் நானோ வேறு எந்த பெண்ணோ, அம்மாவாக முடியுமா? அவளுக்கு என்று தனி உரிமை கிடையாதா? நான் இப்போ ஒரு சபதம் எடுத்துக்கறேன்.
நானோ ஆஸ்ரமத்தில் வேறு எந்த பெண்ணோ பகவானை இப்படி வந்து இருக்க அனுமதி கேட்க மாட்டோம். இவர்கள் பேசுவது அனைத்தும் ரமண மஹரிஷி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மெளனமாக இருப்பது சீடர்கள் சொன்னதை ஆமோதித்து என்று விளக்கினார்கள் சீடர்கள்.
பகவான் மெதுவாக எழுந்தார், அம்மா அழகம்மாவின் கையை பிடித்துக் கொண்டார். ''வா நாம் வேறு எங்காவது போவோம். நாம் இங்கே தங்குவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
அப்புறம் என்ன சீடர்கள் பகவான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். அழகம்மா மகனோடு இருப்பதில் ஆக்ஷேபணை எதுவும் இல்லை. கடைசி வரை அம்மா மகனைப் பிரிய வில்லை.
இந்த பாக்யம் அழகம்மாவுக்கு எச்சம்மாவால் தானே கிடைத்தது. திருவண்ணா மலையில் அப்போது இன்னொரு மஹான் வாசம் செய்து வந்தார். அவர் பெயர் சேஷாத்ரி சுவாமிகள். சேஷாத்திரி சுவாமிகளால் ரமணர் உலகத்துக்கு, நமக்கு கிடைத்தார். சேஷாத்ரி ஸ்வாமி ஒரு ப்ரம்மஞானி. அவர் இந்த உலகுக்கு காட்டிய ஆத்ம ஞானி தான் பகவான் ரமணர்...
வெளியே அதிகம் தெரியாத மஹான் திருவண்ணா
மலையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அதிசயம், ஆச்சர்யம் நிறைந்த சம்பவங்களாக இருந்த போதிலும் அவற்றைப் பற்றி அதிகம் வெளியே தெரியாத காரணம் அவர் விளம்பரப்பிரியர் அல்லர்.
மற்றும் எவரையும் அருகிலே சேர்க்காதவர் என்பதால் இதை கவனித்து வெளியே சொல்ல அதிக பக்தர் இல்லை. இது தவிர அவரிடமிருந்து அதிசய அனுபவங்கள் பெற்ற பக்தர்களும் அவற்றை வெளிப்படுத்த முற்படவில்லை. ஆங்காங்கே அவர்கள் மூலம் அறிந்த கசிந்த விஷயங்கள் தான் ஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் போன்றவர்களால் நமக்கு இன்று கிடைத்துள்ளது.
ஒரு சில சம்பவங்கள் சொல்கிறேன்.
சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகிலே எப்போதும் சிஷ்யனாக சேவை செய்யும் மாணிக்க சாமிக்கு ஒரு நாள் சேஷாத்திரி ஸ்வாமிகள் அபூர்வமான ஒரு உபதேசம் செய்தார்.
''இதோ பார் மாணிக்கம், நீ ஈயைப் போல் சுத்தமாக,
எறும்பைப் போல பலத்தோடு, நாயைப்போல் அறிவோடு, ரதியைப்போல் அன்போடு இருக்க கத்துக்கோ. அப்போ குரு தெரிவார்'' என்றார்.
மலர்களின் மதுவும், மலமும் ஈக்கு ஒன்றே. ஆகவே இரண்டிலும் அது ஆனந்திக்கிறது. ஆனால் மனதளவில் அது சுத்தமானது. பலமுள்ளவன் தான் சோர்வடைய மாட்டான். இரவும், பகலும் உழைக்கும் எறும்பு சுறுசுறுப்புக்கு பேர் போனது. ஆகவே அதை பலமிக்கது என கருதலாம்.
காதையும், வாலையும் எவனோ குறும்பு சாமி வெட்டி விட்டான் என்றாலும் காது இருந்த இடத்தை உயர்த்தியும், வால் இருந்த இடத்தை ஆட்டியும் நாய் அறிவை உபயோகித்து ஒருவேளை உணவை அளித்தவனை நன்றியோடு நெருங்குகிறது.
அதால் நன்றியை தெரிவிக்க முடிந்தது இந்த செயல் தானே.
எந்த மனைவி கணவனின் நலம் கருத்தில் கொண்டு எப்போதும் அவனுக்கு பணி விடை செய்து, அவன் அடிபணிந்து கிடக்கிறாளோ அவளே அழகிய குணம் படைத்த ரதி என்று கருதப்படுபவள். இதைத் தான் ஸ்வாமிகள் மாணிக்க சாமிக்கு உணர்த்தி இருக்கிறார்.
எனவே ஐம்புலன் வசமாகாமல் சுறுசுறுப்பாக தனது நித்ய கடமைகளை செய்பவன் கஷ்டத்தை கஷ்டமாகவே உணர மாட்டான். லோக க்ஷேமத்திற்காக தன் உழைப்பை ஈடு படுத்திக் கொள்வான்.
நமது கர்மங்கள் பயனை அளிப்பவை. ஆனால் ஈஸ்வரார்ப் பணமாக செய்த கர்மங்கள் வறுத்த விதையை நட்டது போல. எந்த கர்மபயனும் சம்பந்தப்படுத்தாது என்றார்.
ஒரு நாள் ஸ்வாமிகள் எச்சம்மா (நம்ம லட்சுமி அம்மா! ) வீட்டுக்கு போனார். அவள் பூஜை பண்ணும் நேரம் அது. ''நீ என்ன பூஜை பண்றே?'' ''உங்க படத்தையும், ரமணர் படத்தையும் வைத்து தான் பூஜை பண்றேன் இதோ பாருங்கோ '' என்றாள்.
''எவ்வளோ நாள் இந்த மாதிரி எல்லாம் பூஜை பண்ற, தியானத்தில் இருக்க வேண்டாமா?'' என்கிறார் சுவாமி.
''எப்படின்னா சொல்லிக் கொடுங்கோ? பண்றேன் ''
''இப்படித்தான்'' என்று சுவாமி தரையில் பத்மா ஸனம் போட்டு அமர்ந்தார். அவ்வளவு தான். அவர் சிலையாகி விட்டார். காலை பத்து மணிக்கு இது நடந்து மாலை நாலு மணி கிட்டத்தட்ட அவர் அசையவே இல்லை. சமாதி நிலை. மாலை நாலரை மணி அளவில் இதுவரை எதிரே அமர்ந்து எத்தனையோ பேர் தன்னையே பார்த்து கொண்டிருந்தது எதுவுமே தெரியாது அவருக்கு. மெதுவாக கண் திறந்தார். ''எச்சம்மா, பார்த்தியா. இப்படி தான் தியானம் பண்ணணும் நீ'' அப்போது ''ஈஸ்வரனை எப்படி தியானம் பண்ணுவது?'' என்று கேட்க, ''பலாப் பழத்திலுள்ள பலாச்சுளை போல, பலாக்கொட்டையை போல பண்ணணும்'' என்கிறார். பக்தருக்கு புரியாமல் வாயைப் பிளந்தார். ஸ்வாமியே விளக்கினார்.
''பலாக் கொட்டையை ஈஸ்வரன் என்று வைத்துக்கொள். எப்படி தன்னுடைய பீஜ சக்தியால் அநேக மரங்கள், கோடி கணக்கான பழங்களை உற்பத்தி பண்ணுகிறது. அது மாதிரி தான் ஈஸ்வரன் தன்னுடைய மாயா சக்தியால் அளவற்ற ஜீவன்களை உண்டு பண்ணுகிறான். சின்னதும், பெரிசுமாக, தித்திப்பு வேறே வேறே மாதிரி வெவ்வேறு நிறமாக, வெள்ளை, மஞ்சள், வெளிறிய கலர் என்று பலாப்பழசுளை மாதிரி, எவ்வளவோ உயிர்களை படைக்கிறான்.
பலாக்கொட்டை மேலே உறை இருக்கிற மாதிரி ஈஸ்வரன் ஜீவனை அன்னமயம் முதலான பஞ்ச கோசங்களை வைத்து மூடி இருக்கிறான். பலாக்கொட்டை மேலே இருக்கிற உறையை எடுத்துட்டு சுட்டு சாப்பிடறோமே. அது போல பஞ்ச கோசங்களை நீக்கணும். அப்போ தான் பகவான் தெரிவான்.
இன்னொண்ணும் சொல்றேன் கேளு. நாம எல்லோருமே ஒருத்தர் தான். ஒரு ஸ்வரூபம் தான். ஆனால் கண்ணாடியில் பார்க்கும் போது, நாமும் தெரியறோம். நம்ம ஸ்வரூபமும் கண்ணாடியில் ஒன்றாக தெரியறது. தெரிவது இண்டாயிடுத்து. அது மாதிரி ஆத்மா ஒண்ணு தான்.
அதை நிர்மலமான புத்தியில் பிரதி பலிக்க பண்ணினால் தான் தியானத்தில் அனுபவிக்கிறோம். தியானம் பண்றவன், தியானம், யாரை தியானம் பண்றோமே மூணும் ஒண்ணா யிடணும். அதை தான் த்ரிபுடி என்கிறோம்.
ஒன்றறக்'' கலந்து என்று தமிழ் பாட்டிலே வருமே அதுதான் இது. மேலும் அவர் சொல்கிறார்.....
ஒவ்வொரு மனிதனும் தனியாகவே இந்த உலகில் அறிமுக மாகிறான். இந்த உலகை விட்டு விலகும் போதும் அவ்வாறே, அவன் எவ்வளவு பெரிய மக்கள் தலைவனாக இருந்த போதும், தனியே தான் செல்ல வேண்டும் என்பது நியதி.
அவனது பூர்வஜென்ம கர்மாக்கள் அவனை அவன் வாழ்நாளில் அவனை நல்ல வனாகவோ, கெட்ட வனாகவோ அவன் செயல்களில் காட்டுகிறது.
நரகமோ, ஸ்வர்க்கமோ எங்கு செல்ல வேண்டுமானாலும் அவன் தனித்தே தான் போக வேண்டும். நம்மை எல்லாம் தாங்கும் இந்த பூமி ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப் பட்டுள்ளது. அந்த சத்யம் தனது சக்தியால் சூரியனை ஒவ்வொரு நாளும் நேரம் தவறாமல் தனது பணியை, உலகை ஒளி பெற செய்விக்கிறது. காற்றை வீசச் செய்கிறது. எல்லாமே அந்த சத்தியத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. நம்மையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் இந்த மனிதர்கள் தான் சத்தியதிற்கும் தர்மதிற்கும் கட்டுப்பட மறுக்கிறார்கள்.
காலம் தான் உலகத்தின் சகல ஜீவராசிகளையும் உயிருடன் இயக்குகிறது. அதுவே முடிவைத் தருகிறது. எல்லாம் உறங்கும் வேளையிலும் காலம் உறங்காமல் விழித்துள்ளது. காலத்தை வெல்ல முடியாதது. எவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. அதுவும் மேலே சொன்ன ஒரு சத்தியத்துக்கு உட்பட்டு செயல்படுகிறது. என்று சேஷாத்ரி சாமிகள் மாணிக்கம் சாமிக்கு செய்த உபதேசங்கள் இவைகள்.