புதன், 16 அக்டோபர், 2024

அருமையான உபதேசம்...

படித்ததில் பிடித்தது...
எவ்வளவு அருமையான உபதேசம்...

நமது குடும்பங்களில் சிலவற்றில் அல்ல பலவற்றில் லக்ஷ்மி  என்கிற பெயர் லஷ்மி, லெஷ்மி, லெச்சுமி, எச்சுமி, எச்சம்மா என்றெல்லாம் அபிமானத்தோடு அழைக்கப்படுபவை.

இப்போது நாகரிகமாக பெயர்கள் வைத்துக் கொள்ளும்  பெண்கள் இப்படி கூப்பிட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்,  மரியாதை பண்ணுவார்கள் என்று எண்ணிப் பார்க்க பயமாக இருக்கிறது.

நமது எச்சம்மா பாட்டி பாவம் அடுத்தடுத்து கணவன், பிள்ளை, ரெண்டு பெண்களை இழந்து அனாதையானவள். இருந்தும்  குரு கடாக்ஷத்தால் வாழ்வில் துன்பங்கள் தொடராது என்று நம்பிக்கை கொண்டவள்.

இளம் வயதில் விதவை, படிப்பு வாசனை கிடையாது. யாரும் இல்லாதவளுக்கு போக்கிடம் எது? அவள் நம்பிக்கை அவளை ஸ்ரீ ரமணரிடம் கொண்டு சேர்த்தது. முதலில் பகவானை தரிசித்தவள் ஒரு மணி நேரம் அங்கே அவர் முன் அமர்ந்தாள்.  மகரிஷி அவளோடு பேசவில்லை. ஆனால் அந்த ஒருமணி நேரத்திலும் அதற்கப்புறமும் கூட அந்த ஆஸ்ரமத்தில் அவளுக்கு இது வரையில் காணாத ஒரு மன நிம்மதி ஏற்பட்டது.

அவள் அன்று முதல் சந்தோஷத்தை அனுபவிக்க தொடங்கினாள். வானில் பறந்தாள் என்று கூட சேர்த்து சொல்லலாம். துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் விடுபட்டவர்களுக்கு தான் அந்த  சுகம் தெரியும் அனுபவம் புரியும்.

ஏதோ ஒரு காந்த சக்தி அவளைக் கவர்ந்து விட்டது. தேனுண்ட நரி சுற்றுவதை போல எச்சம்மா ரமண மஹரிஷி இருந்த விரூபாக்ஷ குகை அருகே காணப்பட்டாள். அவளுக்கு என்ன தோன்றியதோ பகவானுக்கு நல்ல மடி சமையல் பெற்ற தாய்  செல்லக் குழந்தைக்கு அளிப்பது போல் தினமும் கொண்டுவர ஆரம்பித் தாள். விரூபாக்ஷ குகை அப்போ எல்லாம் அதிக ஜன நடமாட்டம் இல்லாத காடு மண்டிக்கிடந்த மலைமேல் ஒரு இடம்.  கையில் சாப்பாட்டுக் கூடையோடு மலைமேல் ஏறி செல்வாள் எச்சம்மா. வழியில் மலைமேல் இருந்து கீழே இறங்குபவர்களை பார்ப்பாள். அநேகர் முகம் ஏமாற்றத்தோடு காணப்படும்.

'பாட்டிமா எதுக்கு கஷ்டப்பட்டு மூச்சு வாங்க மலை ஏறுகிறே.  அங்கே பகவானை குகையில் காணோம். வெகுநேரம் காத்திருந்து தரிசிக்காமல் திரும்புகிறோம். எங்கே போயிடுவார் அங்கே தான் இருப்பார். வாங்கோ எங்கூட நான் காட்றேன், எச்சம்மா அவர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டு மலை ஏறுவாள். என்ன மாய மந்திரம் எச்சம்மாவுக்கு தெரியும்?

அவர்கள் முதலில் குகைக்கு சென்ற போது பகவான் ஒரு கோவணாண்டியாக குகைச் சுவரை கற்களை மண்ணில்  குழைத்து பூசி சுவர் எழுப்பிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு  ரமணரை தெரியாது, பார்த்ததில்லை.

ஆகவே அந்த கோவணாண்டியை வேலையாளாக மதித்து.  
''சுவாமி எங்கேப்பா இருக்காரு?'' என்று கேட்டார்கள்.  
''எனக்குத் தெரியாதே'' என பதில் சொல்லி இருக்கிறார் பகவான் ரமணர்.

வெகு நேரம் காத்திருந்து விட்டு அவர்கள் கீழே இறங்கியிருக் கிறார்கள். இப்போது எச்சம்மாவோடு சென்ற போது அவரைப் பார்த்ததும் திடுக்கிட்டார். ஸ்வாமியையா நாம் சாதாரண வேலைக்காரனாக எண்ணிவிட்டோம்'' அவர்கள் சென்றதும்  எச்சம்மா வருத்தத் தோடு பகவானைக் கேட்டாள், ''ஏன் இப்படி பண்ணிட்டேள். பாவம் அவா தெரியாம தானே அப்படிக் கேட்டிருக்கா?''

''என்னை என்ன பண்ணச் சொல்றே நீ. நான் என்ன பண்ண முடியும். என் கழுத்திலே ஒரு அட்டையிலே ''நான் தான் ரமண மஹரிஷி'' எழுதி கழுத்திலே தொங்கவிட்டுக்க சொல்றியா?''  என்று சொல்லி சிரித்தார். எச்சம்மாள் தன்னிடமிருந்த  பொருள்கள் எல்லாவற்றையும் பகவானுக்கும் அவரது   பக்தர்களுக்கும் உபயோகமாக ஏதாவது செய்வாள்.

ரமணரின் தாய் அழகம்மாள் தன்னுடைய கடைசி காலத்தில்,   விரூபாக்ஷ குகைக்கு மகனைப் பார்க்க வந்த போது கூட  அவளைத் தன்னோடு தங்க அனுமதிக்கவில்லை .

எச்சம்மா அழகம்மாளை தன்னோடு திருவண்ணாமலை கிராமத்துக்கு கூட்டிச்சென்று விட்டாள். அழகம்மாவால் தினமும்  மலைமேல் ஏறி ரமணரை பார்ப்பது சிரமமாக இருந்தது.

பாவம் அழகம்மா, எல்லாவற்றையும் விட்டு விட்டு எல்லோரையும் துறந்து விட்டு மகனைப் பார்க்க இங்கே வந்திருக்கிறாள். அவளை பகவானோடு தங்க அனுமதிக்க கூடாதா என்று பகவானுடைய சீடர்களை கேட்டாள் எச்சம்மா.

''அம்மாவானாலும் பெண்கள் எவரையும் இங்கே ஸ்வாமியோடு இருக்க அனுமதிப்பது தவறு. இப்போது அம்மாவை அனுமதித்தால் பின்னால் எச்சம்மா நீயோ மற்றும் ஆஸ்ரமத்தில் உள்ள பெண்களும் அந்த உரிமை கோருவார்களே. அப்புறம் இது என்ன ஆஸ்ரமம்?''  என  மறுத்தார்கள் சீடர்கள்.

''அதெப்படி அப்பா சரியாகும். இந்த உலகில் நானோ வேறு எந்த பெண்ணோ, அம்மாவாக முடியுமா? அவளுக்கு என்று தனி உரிமை கிடையாதா? நான் இப்போ ஒரு சபதம் எடுத்துக்கறேன்.

நானோ ஆஸ்ரமத்தில் வேறு எந்த பெண்ணோ பகவானை இப்படி வந்து இருக்க அனுமதி கேட்க மாட்டோம். இவர்கள் பேசுவது அனைத்தும் ரமண மஹரிஷி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மெளனமாக இருப்பது சீடர்கள் சொன்னதை ஆமோதித்து என்று  விளக்கினார்கள் சீடர்கள்.

பகவான் மெதுவாக எழுந்தார், அம்மா அழகம்மாவின் கையை பிடித்துக் கொண்டார். ''வா நாம் வேறு எங்காவது போவோம். நாம் இங்கே தங்குவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
அப்புறம் என்ன சீடர்கள் பகவான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். அழகம்மா மகனோடு இருப்பதில் ஆக்ஷேபணை எதுவும் இல்லை. கடைசி வரை அம்மா மகனைப் பிரிய வில்லை.

இந்த பாக்யம் அழகம்மாவுக்கு எச்சம்மாவால் தானே  கிடைத்தது. திருவண்ணா மலையில் அப்போது இன்னொரு மஹான் வாசம் செய்து வந்தார். அவர் பெயர் சேஷாத்ரி சுவாமிகள். சேஷாத்திரி சுவாமிகளால் ரமணர் உலகத்துக்கு, நமக்கு கிடைத்தார். சேஷாத்ரி ஸ்வாமி ஒரு ப்ரம்மஞானி. அவர் இந்த உலகுக்கு காட்டிய ஆத்ம ஞானி தான் பகவான் ரமணர்...

வெளியே அதிகம் தெரியாத மஹான் திருவண்ணா  
மலையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அதிசயம், ஆச்சர்யம் நிறைந்த  சம்பவங்களாக இருந்த போதிலும் அவற்றைப் பற்றி அதிகம் வெளியே தெரியாத காரணம் அவர் விளம்பரப்பிரியர் அல்லர்.

மற்றும் எவரையும் அருகிலே சேர்க்காதவர் என்பதால் இதை கவனித்து வெளியே சொல்ல அதிக பக்தர் இல்லை. இது தவிர  அவரிடமிருந்து அதிசய அனுபவங்கள் பெற்ற பக்தர்களும் அவற்றை வெளிப்படுத்த முற்படவில்லை. ஆங்காங்கே  அவர்கள் மூலம் அறிந்த கசிந்த விஷயங்கள் தான் ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரிகள் போன்றவர்களால் நமக்கு இன்று கிடைத்துள்ளது.

ஒரு சில சம்பவங்கள் சொல்கிறேன்.

சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகிலே எப்போதும் சிஷ்யனாக  சேவை செய்யும் மாணிக்க சாமிக்கு ஒரு நாள் சேஷாத்திரி ஸ்வாமிகள் அபூர்வமான ஒரு உபதேசம் செய்தார்.

''இதோ பார் மாணிக்கம், நீ ஈயைப் போல் சுத்தமாக,  
எறும்பைப் போல பலத்தோடு, நாயைப்போல் அறிவோடு, ரதியைப்போல் அன்போடு இருக்க கத்துக்கோ. அப்போ குரு தெரிவார்'' என்றார்.

மலர்களின் மதுவும், மலமும் ஈக்கு ஒன்றே. ஆகவே  இரண்டிலும் அது ஆனந்திக்கிறது. ஆனால் மனதளவில் அது சுத்தமானது. பலமுள்ளவன் தான் சோர்வடைய மாட்டான். இரவும், பகலும் உழைக்கும் எறும்பு சுறுசுறுப்புக்கு பேர் போனது. ஆகவே அதை பலமிக்கது என கருதலாம்.

காதையும், வாலையும் எவனோ குறும்பு சாமி வெட்டி விட்டான் என்றாலும் காது இருந்த இடத்தை உயர்த்தியும், வால் இருந்த இடத்தை ஆட்டியும் நாய் அறிவை உபயோகித்து ஒருவேளை உணவை அளித்தவனை நன்றியோடு நெருங்குகிறது.

அதால் நன்றியை தெரிவிக்க முடிந்தது இந்த செயல் தானே.

எந்த மனைவி கணவனின் நலம் கருத்தில் கொண்டு  எப்போதும் அவனுக்கு பணி விடை செய்து, அவன் அடிபணிந்து கிடக்கிறாளோ அவளே அழகிய குணம் படைத்த ரதி என்று  கருதப்படுபவள். இதைத் தான் ஸ்வாமிகள் மாணிக்க சாமிக்கு உணர்த்தி இருக்கிறார்.

எனவே ஐம்புலன் வசமாகாமல் சுறுசுறுப்பாக தனது நித்ய கடமைகளை செய்பவன் கஷ்டத்தை கஷ்டமாகவே உணர மாட்டான். லோக க்ஷேமத்திற்காக தன் உழைப்பை ஈடு படுத்திக் கொள்வான்.

நமது கர்மங்கள் பயனை அளிப்பவை. ஆனால் ஈஸ்வரார்ப் பணமாக செய்த கர்மங்கள் வறுத்த விதையை நட்டது போல.  எந்த கர்மபயனும் சம்பந்தப்படுத்தாது என்றார்.

ஒரு நாள் ஸ்வாமிகள் எச்சம்மா (நம்ம லட்சுமி அம்மா! ) வீட்டுக்கு போனார். அவள் பூஜை பண்ணும் நேரம் அது. ''நீ  என்ன பூஜை பண்றே?'' ''உங்க படத்தையும், ரமணர் படத்தையும் வைத்து தான் பூஜை பண்றேன் இதோ பாருங்கோ '' என்றாள்.

''எவ்வளோ நாள் இந்த மாதிரி எல்லாம் பூஜை பண்ற, தியானத்தில் இருக்க வேண்டாமா?'' என்கிறார் சுவாமி.

''எப்படின்னா சொல்லிக் கொடுங்கோ? பண்றேன் ''

''இப்படித்தான்'' என்று சுவாமி தரையில் பத்மா ஸனம்  போட்டு அமர்ந்தார். அவ்வளவு தான். அவர் சிலையாகி விட்டார். காலை பத்து மணிக்கு இது நடந்து மாலை நாலு மணி கிட்டத்தட்ட அவர் அசையவே இல்லை. சமாதி நிலை. மாலை நாலரை மணி அளவில் இதுவரை எதிரே அமர்ந்து எத்தனையோ பேர் தன்னையே பார்த்து கொண்டிருந்தது எதுவுமே தெரியாது அவருக்கு. மெதுவாக கண் திறந்தார். ''எச்சம்மா, பார்த்தியா. இப்படி தான் தியானம் பண்ணணும் நீ'' அப்போது ''ஈஸ்வரனை எப்படி தியானம் பண்ணுவது?'' என்று கேட்க, ''பலாப் பழத்திலுள்ள பலாச்சுளை போல, பலாக்கொட்டையை போல பண்ணணும்''  என்கிறார். பக்தருக்கு புரியாமல் வாயைப் பிளந்தார். ஸ்வாமியே விளக்கினார்.

''பலாக் கொட்டையை ஈஸ்வரன் என்று வைத்துக்கொள். எப்படி தன்னுடைய பீஜ சக்தியால் அநேக மரங்கள், கோடி கணக்கான பழங்களை உற்பத்தி பண்ணுகிறது. அது மாதிரி தான் ஈஸ்வரன் தன்னுடைய மாயா சக்தியால் அளவற்ற ஜீவன்களை உண்டு பண்ணுகிறான். சின்னதும், பெரிசுமாக, தித்திப்பு வேறே வேறே மாதிரி வெவ்வேறு நிறமாக, வெள்ளை, மஞ்சள், வெளிறிய கலர் என்று பலாப்பழசுளை மாதிரி, எவ்வளவோ உயிர்களை படைக்கிறான்.

பலாக்கொட்டை மேலே உறை இருக்கிற மாதிரி ஈஸ்வரன் ஜீவனை அன்னமயம் முதலான பஞ்ச கோசங்களை வைத்து மூடி இருக்கிறான். பலாக்கொட்டை மேலே இருக்கிற உறையை எடுத்துட்டு சுட்டு சாப்பிடறோமே. அது போல பஞ்ச கோசங்களை நீக்கணும். அப்போ தான் பகவான் தெரிவான்.

இன்னொண்ணும் சொல்றேன் கேளு. நாம எல்லோருமே   ஒருத்தர் தான். ஒரு ஸ்வரூபம் தான். ஆனால் கண்ணாடியில்   பார்க்கும் போது, நாமும் தெரியறோம். நம்ம ஸ்வரூபமும் கண்ணாடியில் ஒன்றாக தெரியறது. தெரிவது இண்டாயிடுத்து. அது மாதிரி ஆத்மா ஒண்ணு தான்.

அதை நிர்மலமான புத்தியில் பிரதி பலிக்க பண்ணினால் தான் தியானத்தில் அனுபவிக்கிறோம். தியானம் பண்றவன், தியானம், யாரை தியானம் பண்றோமே மூணும் ஒண்ணா யிடணும். அதை தான் த்ரிபுடி என்கிறோம்.

ஒன்றறக்''  கலந்து என்று தமிழ் பாட்டிலே வருமே அதுதான்  இது. மேலும் அவர் சொல்கிறார்.....

ஒவ்வொரு மனிதனும் தனியாகவே இந்த உலகில் அறிமுக மாகிறான். இந்த உலகை விட்டு விலகும் போதும் அவ்வாறே, அவன் எவ்வளவு பெரிய மக்கள் தலைவனாக இருந்த போதும், தனியே தான் செல்ல வேண்டும் என்பது நியதி.

அவனது பூர்வஜென்ம கர்மாக்கள் அவனை அவன் வாழ்நாளில் அவனை நல்ல வனாகவோ, கெட்ட வனாகவோ அவன் செயல்களில் காட்டுகிறது.

நரகமோ, ஸ்வர்க்கமோ எங்கு செல்ல வேண்டுமானாலும் அவன் தனித்தே தான் போக வேண்டும். நம்மை எல்லாம்  தாங்கும் இந்த பூமி ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப் பட்டுள்ளது. அந்த சத்யம் தனது சக்தியால் சூரியனை ஒவ்வொரு நாளும் நேரம் தவறாமல் தனது பணியை, உலகை ஒளி பெற செய்விக்கிறது. காற்றை வீசச் செய்கிறது. எல்லாமே  அந்த சத்தியத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. நம்மையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் இந்த மனிதர்கள் தான் சத்தியதிற்கும் தர்மதிற்கும் கட்டுப்பட மறுக்கிறார்கள்.

காலம் தான் உலகத்தின் சகல ஜீவராசிகளையும் உயிருடன் இயக்குகிறது. அதுவே முடிவைத் தருகிறது. எல்லாம் உறங்கும் வேளையிலும் காலம் உறங்காமல் விழித்துள்ளது. காலத்தை வெல்ல முடியாதது. எவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று. அதுவும் மேலே சொன்ன ஒரு சத்தியத்துக்கு உட்பட்டு செயல்படுகிறது. என்று சேஷாத்ரி சாமிகள் மாணிக்கம் சாமிக்கு செய்த உபதேசங்கள் இவைகள்.

அருள்மிகு உத்தமர் திருக்கோவில்

அருள்மிகு உத்தமர் திருக்கோவில்
 
மூலவர் : புருஷோத்தமன்
உற்சவர் : பூர்ணவல்
தாயார் : பூர்ணவல்லி,
அம்பாள்: சவுந்தர்ய பார்வதி
தல விருட்சம் : கதலி [வாழை மரம்]
தீர்த்தம் : கதம்ப தீர்த்தம்
ஆகமம் பூஜை : வைகானஸம்
பழமை : 2500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர்
ஊர் : உத்தமர் கோவில்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்.
       
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே;திருமங்கையாழ்வார்.   

விழா: சித்திரையில் பெருமாளுக்கும் வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா   
       
தல சிறப்பு: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்ய தேசம்.   
      
திறக்கும் நேரம்: காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி: அருள்மிகு உத்தமர் திருக்கோவில், திருக்கரம்பனூர், பிச்சாண்டார் கோவில் - 621 216.மணச்சநல்லூர் வட்டம்,திருச்சி மாவட்டம்.போன்:+91- 431 - 2591 466, 2591 040.  
     
தகவல்: சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் "பிச்சாண்டார் கோவில்'' என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் "கதம்பனூர்'' என்றும் "கரம்பனூர்'' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக் கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை "உத்தமர் கோவில்'' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

சிவன் - பெருமாள் வீதி உலா!

பக்தர் ஒருவருக்காக பிரம்மா, சிவன், திருமால் என மூன்று தெய்வங்களும் காட்சித் தந்த தலம் உத்தமர் கோவில். தன் மனைவி சரஸ்வதியுடன் பிரம்மா அருள் பாலிக்கும் இத்தலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகைத் திருநாளன்று சிவனும், பெருமாளும் சேர்ந்து வீதி உலா வருவது தனிச் சிறப்பு.
      
பெருமை: பிரம்மன் சன்னதி, படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோவில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே மகா விஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும் படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகா விஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகா விஷ்ணு காட்சி தந்து நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோவில்கள் இல்லா விட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது. பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கிய படி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெப மாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின் போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

மும்மூர்த்திகள் தலம்: விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகா லட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின் புறத்தில் சிவன் மேற்கு பார்த்த படி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும் மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும் மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. சிவகுரு தெட்சிணா மூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குரு பெயர்ச்சியின் போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் "சப்தகுரு தலம்'' எனப்படுகிறது.
 
ஸ்தல வரலாறு: சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதி தேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன் குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாளமும் [மண்டை ஓடு] அவரது கையுடன் ஒட்டிக் கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாளத்தை பிரிக்க முடிய வில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாளம் மட்டும் நிறையவே இல்லை. பசியில் வாடிய சிவன் அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்த போது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும் படி மகா லட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் "பூரணவல்லி'' என்ற பெயரும் பெற்றாள். மகா விஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார். 




செவ்வாய், 15 அக்டோபர், 2024

55. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

55. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஐம்பத்தி ஐந்தாவது ஆச்சார்யர் [கி.பி.1507 - 1524]

ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு, தென்னாற்காடு மாவட்டத்தில் மணி முக்தா நதிக்கரையில் உள்ள அஸ்மசாலா என்ற ஊரில் "புராரி - ஸ்ரீ மதி" தம்பதிகளின் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் "அருணகிரி".

அப்போது விஜய நகரத்தை ஆண்டவர் "கிருஷ்ண தேவராயர்". அவர்கள் ஸ்ரீ மடத்திற்கு ‘'பொடவூரை'' நிவந்தமாக [மானியமாக] அளித்ததை [கி.பி. 1514] கீழம்பிக் கல்வெட்டு விளம்புகிறது.

காட்டுப்பத்து, அம்பிகாபுரம் ஆகிய ஊர்களை மான்யமாக அளித்ததுடன் ‘'சகல சாஸ்திரங்களையும் முற்றிலுமாகக் கற்ற மகாத்மா'’ எனவும் இவரைப் போற்றி செப்பேட்டில் பதித்திருக்கிறார் கிருஷ்ண தேவராயர்.

இவர் 1524 ஆம் ஆண்டு, சுபானு வருடம், பங்குனி மாதம், வளர்பிறை, ஏகாதசி திதி அன்று சித்தி அடைந்தார்.

இவர் 17 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார். 



ஞாயிறு, 13 அக்டோபர், 2024

முத்தாரம்மன் சிலை உருவான வரலாறு...

முத்தாரம்மன் சிலை உருவான வரலாறு...

குலசேகரப் பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது.

அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர். அப்போது ஒருநாள் கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள். எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு செல்.அனைத்தும் நிறைவேறும் என்று கூறினாள்.

மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர்.இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார்.அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள். அதுமட்டுமல்லாமல் தன் உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள்.

பின்னர் தனது மற்றும் சுவாமியின் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை தங்களை நன்கு உற்று நோக்குமாறும் தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள். தங்கள் சிலைகளைச் செய்து தாங்கள் சுயம்புவாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்தக் கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்தக் கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி.

கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார். அதன் பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார்.
முத்தாரம்மன் கனவில் கூறிய படி குலசை அர்ச்சகர் அவ்வூரைச் சேர்ந்தச் சிலருடன் மைலாடி சென்றார். சுப்பையா ஆசாரியார் என்று விசாரித்தறிந்து அவரைச் சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர்.

முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞான மூர்த்தி வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும்.

இதுபோல் அம்பாளும் சிவனும் ஒரு சேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் சுவாமி அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது. மேலும் அம்பாளுக்கும் சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும்.இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது.


 

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்
 
மூலவர் :உலகளந்த பெருமாள்,திரிவிக்கரமப் பெருமாள்
உற்சவர் :பேரகத்தான்
தாயார் :அமுதவல்லி நாச்சியார்,ஆரணவல்லி, அம்ருதவல்லி
தீர்த்தம் :நாக தீர்த்தம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :திரு ஊரகம்
மாவட்டம் :காஞ்சிபுரம்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருமங்கையாழ்வார்
      
கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும்
காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்
மல்லடர்ந்து மல்லரை யன்றட்டா யென்றும்
மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று
துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே.
திருமங்கையாழ்வார்
       

சிறப்பு:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 51 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு,சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்,திரு ஊரகம், காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:9443597107, 9894388279  

தகவல்:இத்தல இறைவன் மேற்கு நோக்கி உலகளந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஸாகர ஸ்ரீகர விமானம் எனப்படும்.  இத்தல இறைவனை ஆதிசேஷன்,மகாபலிச் சக்கரவர்த்தி ஆகியோர் தரிசித்துள்ளனர்.   
       
பிரார்த்தனை:ஆணவம் நீங்கவும்,குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபாடு செய்யப்படுகிறது.  
     
பெருமை:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருஊரகம்எனப்படும்.இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே கொடிமரத்திற்கு எதிரே  உள்ள திவ்ய தேசம் ஆகும்.இந்த கோயிலின் உள்ளேயே  திருநீரகம்,திருக்காரகம்,திருகார்வனம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது.அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம்,நீரகம்,காரகம்,கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் மிகவும் பிரம்மாண்டமானவர்.108 திருப்பதிகளில் இந்த அளவு பிரமாண்ட தரிசனத்தை எங்கும் காணமுடியாது. இதே போல் இங்கு ஆதி சேஷனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நடக்கிறது. இவருக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.   
       
ஸ்தல வரலாறு:மகாபலி சக்ரவர்த்தி என்பவன் அசுர குலத்தை சேர்ந்தவன். இருந்தாலும் நல்லவன். தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்கு மிகுந்த கர்வம் ஏற்பட்டது. நல்லவனுக்கு இந்த கர்வம் இருக்ககூடாது என்பதால்,பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்கிறார். இதைக்கண்ட மகாபலி, தாங்களோ குள்ளமானவர். உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே என்றான். அவனது குல குருவான் சுக்கிராச்சாரியார், வந்திருப்பது பகவான் விஷ்ணு என்பதை அறிந்து அவன் செய்ய போகும் தானத்தை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இது வரை செய்த தானம் எல்லாம் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி நிலம் கொடுக்க சம்மதித்தான். பெருமான் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை படித்த மகாபலி தலை குனிந்து,இதோ என் தலை. இந்த இடத்தை தவிர வேறு ஏதுமில்லை,என்றான்.பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பினார்.. பாதாளம் சென்ற மகாபலிக்கு,பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோமே, தன்னால் அவரது உலகளந்த காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான்.
 
எனவே பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து,மகாபலி கடும் தவம் இருந்தான்.இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள்,அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார். இவனோ பாதாள உலகத்தில் இருந்தான். எனவே அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க


முடியவில்லை. எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான். பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார். இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது.இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது. 


படலம் 98: ஸர்வ தானோத்தம விதி...

படலம் 98: ஸர்வ தானோத்தம விதி...

98 வது படலத்தில் ஸர்வ தானோத்தம விதி, கூறப்படுகிறது. இங்கு துலாரோஹதான விதிப்படி மண்டபம் அமைத்து வேதிகை, குண்டம், மண்டலம் இவைகளோடு கூடியதாக செய்யவும் என கூறி கொட்டகையிலோ, இந்த விதியை அனுஷ்டிக்கவும் என விசேஷமாக கூறப்படுகிறது. மண்டலத்தின் மத்தியில் பரமேஸ்வரனை பிரம்மா, விஷ்ணு சஹிதமாக சந்தன, புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு குண்டத்தில் நல்ல மனதை உடையவர்களால் சேஷ ஹோமம் செய்யவும் என கூறி அதன் மந்திரங்கள் கூறப்படுகின்றன. பிறகு நான்கு வேதங்களை அறிந்த மூன்று நபர்களை ஏற்றுக் கொள்ளவேண்டும். அந்த பிராம்ணர்களுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன்களை உத்தேசித்து நியாயப்படி பஞ்சாங்க பூஷணம், நல்ல வஸ்திரங்களுடன் கூடியதாக தனித்தனியாக 108 கணக்குகள் ஸ்வர்ணங்களை கொடுக்கவும், இங்கு கூறப்படாத எந்த கர்மா உண்டோ அவை எல்லாம் முன்பு கூறப்பட்ட முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 98வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தானங்களை காட்டிலும் உத்தமமான முதல் தானத்தை கூறுகிறேன். முன்பு போல் வேதிகை குண்டம் இவைகளுடன் மண்டபத்தை அமைக்க வேண்டும்.

2. முன்பு கூறிய விதமாக மண்டலத்துடன் மண்டப நிர்மாணத்தை தண்ணீர் பந்தலில் அமைக்கவும். மண்டலத்தின் நடுவில் பிரம்மா, விஷ்ணு, இவர்களுடன் பரமேஸ்வரனை

3. சந்தனம் முதலியவைகளால் சிவன், பிரம்மா விஷ்ணுவிற்கும் பூஜை செய்யவும். தனத்தை கொடுக்கும் பிரம்மாவிற்கும் (விஷ்ணுவிற்கும்)

4. சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் ஸ்வாஹா, ஸ்வதா, வவுஷட், வஷட், நம என்பதாக பூஜிக்கவும். (நாராயாணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்தோ விஷ்ணு: ப்ரசோதயாது)

5. என்பதாகவும் மீதமுள்ள ஹோமத்தை சமாதான முள்ளவர்களால் குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும். நான்கு வேதங்களை அறிந்த மூன்று நபர்களை ஜபம் செய்ய சொல்ல வேண்டும்.

6. அந்த பிராம்மணர்களுக்கு கூறிய முறைப்படி தட்சிணையை கொடுக்கவும். நூற்றிஎட்டு ஸுவர்ணம் தனித்தனியாக கொடுப்பது உத்தமமாகும்.

7. அவர்களுக்கு ஐந்து அங்களுக்கும் ஆபரணம் ஸமர்ப்பித்து வஸ்த்ரம் முதலியவைகளை கொடுக்கவும். இங்கு கூறப்படாததை முன்பு கூறப்பட்டது போல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸர்வதானோத்தம விதியாகிய தொண்ணூற்றி எட்டாவது படலமாகும். 

உத்தர காமிக ஆகமத்தில் உள்ள 98 படலங்கள், 7128 ஸ்லோகங்கள் முற்றும்...

படலம் 97: எட்டு திசை நாயகர்களை தான செய்யும் முறை...

படலம் 97: எட்டு திசை நாயகர்களை தான செய்யும் முறை...

97 வது படலத்தில் 8 லோக பாலகர்களின் தான விதி கூறப்படுகிறது. துலாரோஹதான விதியில் கூறப்பட்டுள்ள இடம் காலம் இவைகளில் அவ்வாறே அந்தந்த விதியில் கூறப்பட்டுள்ள படி நிர்மாணிக்கப்பட்ட வேதிகை, மண்டலம், குண்டம், இவைகளுடன் கூடிய மண்டபத்தில் அந்த படலத்தில் கூறியுள்ள முறைப்படியே சிவ பூஜை ஹோமம் செய்து நல்ல லக்ஷணத்துடன் கூடிய எட்டு சிவாச்சாரியர்களை கூப்பிட்டு புதிய வஸ்திரத்தின் மேல் வடக்கு முகமாக அமர்த்தி அவர்களை சந்தனம், புஷ்பம் இவைகளால் அஷ்டதிக்பாலக மந்திரங்களாலும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. வேறு ஒருமுறை கூறப்படுகிறது. பிறகு அந்த சிவாச்சாரியர்களுக்கு வஸ்திரம் ஆபரணங்கள் வாசனை திரவ்யங்கள் கம்பளம் முதலியவைகளை கொடுக்கவும். ஆபரணங்களுடன் கூடி நூறு நிஷ்கத்துடன் கூடியதாக தட்சிணைகள் கொடுக்கவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாத எந்த சிறிய முறை உண்டோ அதை துலாரோக விதிப்படி செய்யவும். முடிவில் திக்பாலகர்களின் தானம் எல்லா சம்பத்தையும் ஸம்ருத்தியாக கொடுக்கக் கூடியதாகவும் பிறரால் ஏவப்பட்ட சக்ரங்களை அழிக்க வல்லதாகவும் யானை குதிரை இவைகளை விருத்தி செய்வதாகவும், குழந்தையை கொடுக்கக் கூடியதும், ராஜ்யத்தை அபிவிருத்தி செய்வதாகவும், பசு பிராம்ணர்கள் இவர்களுக்கு சுகத்தை கொடுக்கக் கூடியதுமாக ஆகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு 97வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு எட்டு திக்பாலகர்களின் தானம் கூறுகிறேன். முன்பு கூறப்பட்ட இடம், காலத்தில் வேதிகை, மண்டலத்துடன் கூடிய இடத்தில்

2. குருவானவர் முன்பு போல் சிவபூஜையும், ஹோமமும் செய்து எல்லா அமைப்பும் உள்ள எட்டு ஆதி சைவர்களை அழைத்து

3. வடக்கு முகமாக அமர்த்தி, புதிய வஸ்திரங்களை உடுத்தியவர்களாக சந்தனம், புஷ்பம் இவைகளாலும் திக்பால மந்திரங்களாலும் பூஜிக்க வேண்டும்.

4. ஒரு குண்டம் அல்லது ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். ஆபரணங்களுடன் கூடியதாக பத்து நிஷ்க அளவுள்ள தட்சிணையை கொடுக்க வேண்டும்.

5. ஆஸனம், கம்பளம், வஸ்திரம், உத்தரீயங்களையும் கொடுக்கவும். இங்கு கூறப்படாதது ஏதாவதிருப்பின் துலாபார விதிப்படி செய்ய வேண்டும்.

6. எல்லா ஸமிருத்தியான ஐஸ்வர்யத்தை கொடுக்கக்கூடிய லோக பாலதானம் இவ்வாறாகும். இது பிறரால் ஏவப்பட்ட சக்கரங்களை அழிக்க வல்லதும் யானை குதிரை இவைகளை விருத்தி செய்வதும் ஆகும்.

7. புத்ரனை கொடுக்கக் கூடியதும், அபிவ்ருத்தியான ராஜ்யத்தை கொடுக்கக் கூடியதும் பசு, பிராம்மணர்களுக்கு நலத்தை கொடுக்கக் கூடியதும் ஆகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் லோகபாலாஷ்டக தான முறையாகிற தொன்னூற்றியேழாவது படலமாகும்.

படலம் 96: யானையை தானம் செய்யும் முறை....

படலம் 96: யானையை தானம் செய்யும் முறை...

96 வது படலத்தில் யானையை தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. ஆயிரம், ஐநூறு, இருநூற்றி ஐம்பது, 100, 50, 125, 108, என்ற இந்த அந்த எண்ணிக்கையில் தங்கத்தாலோ, வெள்ளியாலோ, லக்ஷண முறைப்படி யானை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு துலாரோஹதான முறைப்படி வேதிகை குண்டம், மண்டலம் இவைகளுடன் கூடியதாக மண்டபம் அமைத்து அதன் மத்தியில், கஜேந்திரனை வைத்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும். துலாரோஹதான முறைப்படி சிவனை பூஜித்து ஹோமம் செய்யவும். சிரத்தையுடன் கூடி யானையை சிவனுக்கும் சிவபக்தனுக்கும் கொடுக்க வேண்டும், அங்கு கூறப்படாத எல்லா கர்மாவையும் துலாபார விதியில் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இவ்வாறாக 96வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு யானை தானத்தை பற்றி கூறுகிறேன். பிரம்மணோத்தமர்களே அந்த யானையானது தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ நிர்மாணிக்க வேண்டும்.

2. ஆயிரம் ஸ்வர்ணங்களாலோ, அல்லது ஐநூறு தங்கத்தாலோ அல்லது இருநூற்றி ஐம்பது தங்கத்தாலோ அல்லது நூற்றி இருபத்தி ஐந்து தங்கத்தாலோ அல்லது நூற்றிஎட்டு ஸுவர்ணங்களாலோ யானையை நிர்மாணிக்க வேண்டும்.

3. முன்பு போல் வேதிகை மண்டலம் நிர்மாணித்து இவற்றுடன் மண்டபத்தை நிர்மாணித்து அதன் நடுவில் யானையை பிரதிஷ்டை செய்து சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

4. முன்பு போல் சிவபூஜை செய்து விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும். பிறகு சிவார்ப்பணமாக சிரத்தையுடன் சிவபக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

5. இதில் கூறாத எல்லாவற்றையும் துலாரோஹ விதிப்படி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கஜதான விதியாகிற தொண்ணூற்றி ஆறாவது படலமாகும்.

படலம் 95: தங்க விருஷபதான முறை...

படலம் 95: தங்க விருஷபதான முறை...

95 வது படலத்தில் தங்க விருஷபதான முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு ஆயிரம், ஐநூறு, இருநூத்தி ஐம்பது, நூற்றி இருபத்தி ஐந்து, நூறு இந்த அளவுள்ள நிஷ்கம் என்ற அளவு முறையில். தங்கத்தால் விருஷபம் செய்து அதன் நெற்றியில் ஸ்படிகத்தினால் அர்த்த சந்திராகாரமான ஆபரணமும் வெள்ளியால் குளம்பும், பத்மராக கல்லால் காதும், கோமேதக கல்லால் திமிழும், கழுத்தில் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட கண்டாமாலையும் செய்யவும். வேறு விருப்பத்திற்கு அங்கமாக சலங்கையும் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு துலாரோஹதான முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடியதாக அமைத்து மண்டலம், அதன் மத்தியில் விருஷபரை மேற்கு முகமாக ஸ்தாபிக்கவும். விருஷப காயத்திரியால் பூஜிக்கவும் துலாரோகன விதியில் கூறப்பட்டுள்ளபடி சிவபூஜை ஹோமம் செய்யவும். பிறகு அங்கு பூஜித்த விருஷபரை சிவனுக்கும் சிவபக்தர்களுக்கும் கொடுக்கவும். பிறகு சமித்து, ஆஜ்ய, ஹவிஸ்சுடன், கூடி சாந்தி ஹோமமோ செய்யவும் என்று விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத கர்மாவை துலாபார முறைப்படி தேசிகன் அனுஷ்டிக்கவும் என்று தங்க விருஷப தான முறையில் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறாக 95வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தங்கத்தால் செய்யப்பட்ட வ்ருஷபத்தின் தானம் இப்பொழுது சுருக்கமாக சொல்லப்படுகிறது. ஆயிரம் ஸ்வர்ணத்தாலோ ஆயிரம் நிஷ்கத்தாலோ அல்லது அதில் பாதியோ (ஐநூறு)

2. அதில் பாதி இருநூற்றி ஐம்பதோ அதில் பாதி நூற்றி இருபத்தி ஐந்தோ அல்லது நூற்றி எட்டு ஸ்வர்ணத்தாலோ லக்ஷணத்துடன் கூடிய வ்ருஷபத்தை நிர்மாணிக்க வேண்டும்.

3. நெற்றியில் ஸ்படிகத்தால் அஷ்டமீ சந்திரன் போன்ற ஒளி உள்ளதும் வெள்ளியால் ஆன குளம்பையும் பத்மராகத்தால் காதுகளிலும், தோள்பாகம் கோமேதகத்தாலும்

4. கழுத்தில் மணிகளின் மாலையையும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டும் சலங்கை மாலைகளுடன் கூடியதாகவும் வ்ருஷபத்தின் அவயவங்களை நிர்மாணிக்க வேண்டும்.

5. முன்பு போல் வேதிகை, மண்டலத்துடன் மண்டபம் அமைத்து அதன் நடுவில் மேற்கு முகமாக வ்ருஷபத்தை வைக்க வேண்டும்.

6. வ்ருஷபத்தை காயத்ரி மந்திரத்தால் பூஜிக்க வேண்டும். வ்ருஷபத்தின் மேலே பரமேஸ்வரனை வைத்து முன்பு போல் சிவபூஜையையும் விசேஷமாக ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

7. ஆசார்யன் ஸமித்து, நெய், ஹவிஸ் இவற்றுடன் சாந்தி ஹோமத்தையோ செய்ய வேண்டும். மிகப் பெரியதான வ்ருஷபத்தை சிவனின் பொருட்டு சிவ பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

8. இங்கு எது சொல்லப்படாமல் விடப்பட்டதோ அதை துலாபாரத்தில் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தங்க வ்ருஷப தானம் செய்யும் முறையாகிய தொன்னூற்றைந்தாவது படலமாகும்.

படலம் 94: கன்னிகாதான முறை...

படலம் 94: கன்னிகாதான முறை...

94 வது படலத்தில் கன்னிகாதான முறை கூறப்படுகிறது. பிறகு எல்லா தானத்திற்கும் மேன்மையான கன்னிகாதானம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்கிறார் யஜமானன். ஸர்வ லக்ஷணம் உடைய தோஷம் இல்லாத வேறு கோத்திரத்தில் உன்டான தனக்கு அனுகூலமான தினத்தில் பிறந்த கன்னிகையை அவர்களுடைய தந்தையரிடம் இருந்து சொல்லப்பட்ட முறைப்படி இவர்களின் மனதை அறிந்து தனம் முதலானவற்றை கொடுத்து ஸ்வீகரித்து அவளை தன்னுடைய புத்திரியாக ஆக்கி அவளுக்கு ஸ்னாநம் செய்வித்து, சந்தனம், புஷ்பம், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு முறைப்படி தானம் செய்யவும் என்று கன்யாதான முறை கூறப்படுகிறது. பிறகு துலாபார முறைப்படி வேதிகை குண்டம் மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைத்து அதில் முறைப்படி செய்த ஹோமத்தினால் பரமேஸ்வரனை பூஜிக்கவும். பிறகு ஜோஸ்யரால் கூறப்பட்ட சாந்தம், சிவபக்தியுடன் கூடிய, வரனை ஈஸ்வர புத்தியோடு சந்தனம், புஷ்ப மாலைகளாலும், பஞ்சாங்க பூஷணங்களாலும் பூஜித்து அந்த வரனின் பொருட்டு வஸ்திரம் பூமி தனம், இவைகளுடன் கூடியதாகவும், வீட்டிற்கு உபயோகமான பொருளோடும், தாசி, தாசனுடன் கூடிய கன்னிகையை சிரத்தையோடு சிவனை ஸ்மரித்து கொடுக்கவும் என்று கன்னியாதான விதியில் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது. முடிவில் இவ்வாறு யார் கன்னிகாதானம் செய்கிறானோ அவன் கன்னிகையின் மேல் எவ்வளவு ரோமம் இருக்கிறதோ அவ்வளவு எண்ணிக்கை உள்ள நூறு வருஷம் சுகமாக இருப்பான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 94வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தானத்தை காட்டிலும் சிறந்ததான கன்யகா தானத்தை கூறுகிறேன். பிராம்மணோத்தமர்களே எல்லா லக்ஷணத்துடன் கூடியவரும் குற்றமற்றவளும்

2. வேறு கோத்ரத்தில் பிறந்தவளும் நல்ல சுப தினத்தில் பிறந்தவளுமான கன்னிகையை பணம் முதலியவைகளை கொடுத்து, பெண், மாப்பிள்ளை இவர்களின் முன்னோர் பேர்களை கூறி

3. ஒருவருக்கொருவர் மனம்புரிந்து கொண்டு பெண்ணை தன் சொந்த பெண்ணாக பாவித்து மங்கள ஸ்நானம் செய்வித்து சந்தனம், பூமாலை, ஆபரணங்கள் பட்டு புடவைகளுடனும்

4. அலங்கரித்து க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை அனுஷ்டிப்பதற்கு அனுகூலமாய் இருப்பதற்கு கன்யகா தானம் முறைப்படி செய்ய வேண்டும். முன்பு போல் வேதிகை மண்டலம் இவற்றுடன் கூடியதாய் மண்டபம் அமைத்து

5. அங்கு பரமேஸ்வரனை ஆராதித்து முன்பு போல் ஹோமம் செய்யவும். அமைதியானவரும் கன்யா தானத்திற்காக வரிக்கப்பட்டவரும் சிவபக்தியுள்ள வரனை

6. ஐந்து அங்கத்தின் அணிகலன்களுடன் கூடிய வரும் சந்தனம் புஷ்பமாலை இவைகளால் அலங்கரிக்கபட்டவரும் வஸ்திரம் பூமி ஐஸ்வர்யம் கூடி பரமேஸ்வரனாக பூஜித்து பாவித்து

7. வீட்டுக்கு வேண்டிய உபகரணங்களுடன் மிகவும் பொறுப்பாக வேலைகாரர்களுடன் கன்னிகையை சிவனாக பாவிக்கப்பட்ட வரனுக்கு கொடுக்க வேண்டும்.

8. பிராம்மனோத்தமர்களே! இவ்வாறாக எவன் கன்னிகா தானம் செய்கிறானோ அவனுடைய அந்த கன்னிகை சுகத்தை அடைகிறான். அந்த கன்னிகையின் சரீரத்தில் எவ்வளவு ரோமங்கள் உள்ளனவோ அந்த எண்ணிக்கையில் நூறு வர்ஷகாலம் சுகமாக இருக்கிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கன்யாதானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றி நான்காவது படலமாகும்.

படலம் 93: தங்கக்குதிரை தானம் செய்யும் முறை...

படலம் 93: தங்கக்குதிரை தானம் செய்யும் முறை...

93 வது படலத்தின் தங்கக்குதிரை தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் இந்த ஆகமத்தில் வெற்றிக்காக சொல்லப்பட்ட தங்க குதிரை தானம், பத்தாயிரம் அஸ்வமேதயாக பலத்தைவிட உயர்ந்ததான பலத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. பிறகு ஆயிரத்தி எட்டு, ஐநூற்றி நான்கு, 52, 108 கணக்குள்ள தங்கத்தால் லக்ஷணத்துடன் கூடிய குதிரை செய்து, அதன்மேல் வெள்ளியால் பஞ்ச கல்யாணம் என்ற அங்க அழகை செய்யவும். பிறகு துலாபாரதான முறைப்படி வேதிகை, குண்டம், மண்டலம் அமைத்து அதன் மத்தியில், தங்கத்தால் செய்யப்பட்டதும் ஸர்வ அலங்காரம் உடையதுமான அந்த குதிரையில் உச்சை ஸ்ரவஸ் என்று பெயர் இட்டு பூஜிக்க, மண்டல பூஜை, ஹோமம், கலசஸ்தாபனம் முதலியவை துலாரோஹண முறைப்படி செய்து, இந்திர புத்தியுடன் சந்தனம், முதலியவைகளால் பூஜித்து பிராம்ணர்களுக்கு ஐந்து நிஷ்கம் தங்க தானம் செய்து அந்த குதிரையை தானம் செய்யவும். ஏழை, குருடு, கருமி, அனாதை இவர்களுக்கு உணவு அளித்தல் முதலியவைகளால் சந்தோஷிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 93வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. வெற்றிக்காக தங்க குதிரை தானம் பற்றி கூறப்படுகிறது. பத்தாயிரம் அச்வமேத யாக பலனைவிட மிகவும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

2. ஆயிரத்தெட்டு அதில்பாதி ஐநூறு, அதில் பாதி இருநூற்றி ஐம்பது, அல்லது நூற்றி எட்டு அளவுள்ள தங்கத்தினால் லக்ஷணத்துடன் கூடியதாக குதிரையை அமைக்க வேண்டும்.

3. வெள்ளியால் பஞ்ச கல்யாணி அடையாளத்தை செய்யவும், கலைகளால் எல்லா அலங்காரத்துடன் கூடியதாகவும்,

4. வேதிகை மண்டலத்துடன் முன்புபோல் மண்டபம் தீர்மானித்து அதன் நடுவில் உச்சை ச்ரவஸ் என்று பெயருள்ள குதிரையை செய்து வைக்க வேண்டும்.

5. சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து பிராம்மணர்களுக்கு குதிரையை கொடுக்கவும். பிராம்மணர்களை தேவேந்திரனாக பாவித்து ஐந்து நிஷ்கம் தங்கத்தை கொடுக்க வேண்டும்.

6. ஏழை குருடானவன், கருமி, அனாதை இவர்களை உணவு முதலியவைகளால் திருப்தி செய்து, மண்டலார்ச்சனை, கலசஸ்தாபனம் ஹோமம் முதலியவற்றை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஹிரண்யாச்வப்ரதான முறையாகிய தொன்னூற்றி மூன்றாவது படலமாகும்.