ஸிராத்தம் ஒன்று
மஹாளய பட்சத்தில் சொல்ல வேண்டு்ம் என்று தோணித்து...
இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாளில் அரசாண்ட ராஜாக்களுக்கு ரிஷிகள் சொல்லியருளியது... அதில் சிலதை சொல்ல னுமுன்னு தோணித்து....
அதாவது அன்னவாஹார்யம்ன்னு சொல்லப்படும் ஸிராத்தமானது ஒவ்வொரு அமாவாசை தோறும் செய்வது சிறப்பு. பிதுருயாகமானது தேவர் அஸுரர் மனிதர் கந்தர்வர் நாகர் அரக்கர் பிசாசர் கின்னரர்கள் ஆகியோரும் பிதுருக்களை பூஜிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாசமும் கைகூப்பி பணிவுடன் அந்த ஸிராத்ததை செய்ய வேண்டும். அதை தவிர ஷ்ண்ணவதின்னு சொல்லக் கூடிய 96 நாட்கள் வருடத்திற்கு உகந்தவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்...
உதாரணமாக பிரதமையில் பூஜிப்பதால் அழகான குழந்தைகளும் குடும்பபாங்கான ஸ்திரீயும் மணவாட்டியாக வருவாள். துவிதியையில் ஸிராத்தம் செய்ய பெண் குழந்தைகள் கிடைக்கும் திருதியையில் செய்வதால் குதிரைகளுக்கும் சதுர்த்தியில் செய்வதால் ஆடுமாடு நான்கு கால் பிராணிகளும் விருத்தியுண்டாகும்.
பஞ்சமியில் ஸிராத்தம் முறையாக செய்பவனுக்கு அதிக புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும். ஷஷ்டியில் செய்பவன் ஒளி பெறுவான். சப்தமியில் செய்பவன் பயிர் செழித்து வளரும். அஷ்டமியில் செய்பவன் வர்த்தக லாபத்தை அடைவான்.
நவமியில் செய்பவனுக்கு ஒற்றை குளம்புள்ள பிராணிகள் விருத்தியாகும். தசமியில் செய்தால் ஆட்கள் கிடைப்பார்கள். ஏகாதசி ஸிராத்ததால் வஸ்திராபரணங்களை மிகுதியாக அடைந்து மகிழ்வான். மேலும் சாஸ்திரோத்தமான பிள்ளைபேறு கிடைக்கும். துவாதசி சிராத்ததால் அதிக பொன் வெள்ளி விருத்தியாகும்.
திரயோதசியில் செய்பவனுக்கு மனிதரில் சிறந்தவனாக ஆக்கப்படுவான். சதுர்தசியில் செய்வது அவ்வளவு உசிதமல்ல... [தேவை இருப்பின் மட்டுமே அனுமதி]. அமாவாஸை ஸிராத்ததால் விரும்பினவற்றை அடைவான்.
கிருஷ்ணபட்சமானது சுக்கிலபட்சத்தை விட ஸிராத்தத்திற்க்கு விஷேஷமாகும். அதே போல முற்பகலை விட பிற்பகலே விஷேஷம்....
இதே போல் ஸிராத்த பொருட்கள் என்னென்ன குடுத்தால் எவ்வளவு திருப்தி என்பதையும் நட்சத்திரங்களில் செய்தால் என்ன பலன் அப்படிங்கறதையும் வரும் பதிவுகளில் சொல்லறேன்...
மஹாளபட்சம் முறையா அனுசரியுங்கள்... யதா சக்தியாக என்ன தரமுடியுமோ அதை தானம் தாருங்கள்...
இப்பவும் சொல்லறேன்...ஸிராத்தம் தர்ப்பணம் எல்லாம் பரிகாரம் அல்ல... நாம் வாங்கின கடன். அந்த கடனை இந்த ஜீவன் தேக காலம் இருக்கும் வரை முழுவதும் அடைக்கனும்... இதை பரிகாரமா சோதிடத்தில் சொல்வது பாபம். மனிதனா பிறப்பவருக்கும் பொது இது... அதிலேயும் ப்ராமணனா பிறந்து சந்தியாவந்தனம் செய்யாமல் தர்ப்பணம் செய்யாமல் இருப்பது கொடிய நரகத்தில் வாசம் செய்வதற்க்கு சமம்...
இது நம் தர்மம்... அனைவரும் முடிந்த வரை செய்யவும்...
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 10 ஜனவரி, 2024
ஸிராத்தம்....
வியாழன், 7 டிசம்பர், 2023
பல மடங்கு பலன் தரும் ஸ்படிக லிங்கங்கள்!
பல மடங்கு பலன் தரும் ஸ்படிக லிங்கங்கள்!
சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அவை செய்யப்படும் பொருளுக்கேற்ப அருள் வழங்கும் தன்மையவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த முப்பத்திரண்டு வகையிலும் சேராமல் சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம். அதனால் இது மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படுகிறது. ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனிலிருந்து விழுந்ததாகக் கூறுவோரும் உண்டு. ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும். இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன் மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு. ஸ்படிகம் இமய மலையின் அடி ஆழத்திலும் விந்திய மலை மற்றும் சங்ககிரி மலையின் சில பகுதிகளிலும் கிடைக்கும். இது மிகவும் விலைமதிப்புள்ளது. பாரதத்தின் வடபகுதியில் இருந்த ஸ்படிகம் தென்பகுதி வந்தது சுவாரசியமான கதை. ஆதிசங்கரர் கைலாய மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிவபெருமான் அவருக்குக் காட்சி அளித்து, ஐந்து ஸ்படிக லிங்கங்களை அளித்து அவற்றை பூஜிக்கும் முறை பற்றியும் விளக்கமாக கூறியருளினார். அவை முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் எனப் பெயர் கொண்டவை. அந்தப் பஞ்ச லிங்கங்களை ஆதிசங்கரர் ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.
முக்தி லிங்கம் - கேதார்நாத், வரலிங்கம் - நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம் -சிருங்கேரி, யோகலிங்கம் - காஞ்சி. சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது. முன்னால் இருந்த ஸ்படிக லிங்கத்தில் கீறல்கள் விழுந்ததால் அதற்குப் பதிலாக, இமயமலையிலிருந்து 6 இன்ச் உயர லிங்கம் எடுத்து வரப்பட்டு 2011-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்குதான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது. இது பழம் பெருமை வாய்ந்தது. அதே போல ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலையில் அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரை, இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. கோயிலில் இந்த தரிசனத்திற்கென்று தனி டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இந்த வழிபாடு முடிந்ததும் கோயிலில் இருக்கும் எல்லா தீர்த்தங்களிலும் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோயில்கள் தவிர வேறு சில இடங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை (நிராகார) குறிக்கும் வகையிலும், அவனின் குணமற்ற (நிர்க்குண) தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன. ஸ்படிகம், பக்கத்தில் உள்ள பொருளின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது. இதன் இருப்பு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம். ஸ்படிகத்தின் ஒவ்வொறு அணுவிலும் சிவனின் குற்றமற்ற தூய்மை நிறைந்திருக்கிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் விரிவாகக் கூறப்படுகிறது. சரி! இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை பயன் பெற எப்படி வழிபட வேண்டும்?
ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்க கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்கள் ஒரு பாண லிங்கத்துக்குச் சமம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பாண லிங்கம் என்பது கண்டகி நதிக்கரையில் இயற்கையாகக் கிடைக்கும் சாளக்கிராமங்களைப் போல நர்மதை நதியில் கிடைக்கும் இயற்கையான லிங்கங்களாகும். ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.
பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும். ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.
ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா? வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும் பழச்சாறுகளாலும் தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து, பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும்.
ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு, இது தாந்திரீகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாகும். மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பின்னி சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிகலிங்க வழிபாடு செய்வார்கள். அதனால் அபிசார தோஷம் (ஏவல் பில்லி சூனியங்களால் பிரச்சினை) உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன் மனமொடுங்கி தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம். வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ தங்கள் வியாபாரக் கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண சக்தி படைத்ததாக மாறுகிறது. அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் மேலும் விருத்தியடையும். மாணவர்களும் கூட ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். தொடர்ந்து இதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாலே நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை கிட்டும். இதற்கு தினமும் பூஜை செய்ய நல்ல மனத்திண்மையும் நேர் வழியில் செல்ல விருப்பமும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஸ்படிகம் நன்மையே செய்யும்.
சொரிமுத்து சாஸ்தா கோவில்...
சொரிமுத்தையனார்- சாஸ்தா கோவில் அதிசயம்!
பொதிகை மலையின் அடர்ந்த காடுகளின் நடுவே எழுந்தருளி இருக்கும் சொரிமுத்தையனார்- சாஸ்தா- பக்தர்கள் வியந்து போற்றும் தெய்வம். மிகப் பலரின் வாழ்விலே ஏராளமான அருளாடல்களைச் செய்தவர். இன்றளவும் இவர் தேவ சரீரத்துடன் காட்டில் உலா வருவதாகப் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இவருக்கு பிரார்த்தனையாக செலுத்தப்படும் காலணிகள் தேய்ந்திருப்பதும், மண் ஒட்டியிருப்பதும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள். அதே போல திருநெல்வேலியில் வீரராகவபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இராமர், ஆஞ்சநேயர் வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளுகின்ற கருணையின் வடிவம்...
முருகம்மையார்...
முருகம்மையார்
சோழநாட்டில் தற்போது சுவாமிமலை என்றழைக்கப்படும் பகுதியில் இறையன்பு மிக்க தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. முருகப்பெருமானிடம் அன்பு வைத்த அவர்கள், தமிழ் வேளே ! வள்ளி மணாளா ! கந்தப்பெருமானே ! நீ எங்கள் மீது கருணை கொள்ளமாட்டாயா ? எங்களுக்கு செல்வத்தைக் கொடுத்து பயன் என்ன ? மக்கள் செல்வமில்லாதவர் நரகம் எய்துவர் என சாஸ்திரங்கள் சொல்கிறதே ! நாங்கள் உன்னையே நினைந்தும் கூட, நரகத்திற்கு தான் செல்ல வேண்டுமா ? என மனமுருகிப் பிராத்தித்தனர்.கந்தக்கடவுள் அந்த கண்ணீர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தான். அன்பு மகளை ஈன்றார் அந்தத்தாய். முருகனின் பெயரையே மகளுக்கும் சூட்டினர். ஆம்.... அவளது பெயர் முருகம்மை.இளமை முதலே பெற்றோரைப் போலவே முருக பக்தியில் திளைத்தார் முருகம்மை. நடந்தால் முருகா, படுத்தால் முருகா, அமர்ந்தால் முருகா, சாப்பிடும் போது முருகா, தந்தையையும் முருகா, தாயையும் முருகா, தோழியரையும் முருகா, விளையாடும்போதும் முருகா, என்றபடி முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடியே இருப்பார். இதுகண்டு பெற்றோர் அகமகிழ்ந்தனர். வயதுக்கு வந்ததும், இப்பக்தைக்கு ஏற்ற பதி வேண்டுமே என்ற கவலை பெற்றோருக்கு ஏற்பட்டது. குணத்தில் சிறந்த தனஞ்செயன் என்ற வாலிபனுக்கு இவளை மணம் முடித்து வைத்தனர். கணவனின் மனம் கோணாமல், அவன் வைத்த மீதியை பிரசாதமாய்க் கருதி அருந்தி, கற்புநிலை பேணினாள் முருகம்மை. நாத்தனாரிடமும் அன்பு பேணினான்.
மனைவி மீது கணவனும் கொள்ளைப்பிரியம் வைத்திருந்தான். இது மாமியாருக்கும், நாத்தனாருக்கும் பொறுக்கவில்லை. இந்த தனஞ்செயன் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். அவள் இவனை மயக்கி வைத்திருக்கிறாள். நாளைக்கு, அவள் அவனுடைய எல்லா வருமானத்தையும் சுருட்டிக் கொண்டால், நம் வயிறு காயுமேடி, என தேவையில்லாமல் பொறாமைப்பட்டனர். அவளை பழிதீர்க்கும் நாளுக்காக எதிர்பார்த்திருந்தனர். இதற்கு சில உறவினர்களும் தூபம் போட்டனர். எப்பேர்ப்பட்ட மனிதனையும் கெட்டநேரம் விதியில் சிக்க வைத்துவிடும். இவள் மட்டும் விதிவிலக்கா என்ன ! தனஞ்செயனின் வணிகம் நஷ்டத்தில் ஆழ்ந்தது. மனம் வெறுத்த அவன் வேறுவேலைக்காக வெளிநாடு சென்று விட்டான். போகும்போது முருகன் என்ற வேலைக்காரனை வீட்டுப்பணியில் அமர்ந்தினான். மணாளன் திரும்பும் வரை அவன் நினைவிலேயே இருந்தாள் முருகம்மை. முருகா, முருகா என அவள் அடிக்கடி அழைப்பதைப் பயன்படுத்தி, அவளுக்கும், வேலைக்காரன் முருகனுக்கும் தொடர்பிருப்பதாக கட்டுக்கதை எழுப்பினர். ஊர்திரும்பிய தனஞ்செயனும் அதை நம்பி அவளது கைகளை வெட்டிவிட்டான். முருகா, உன் திருநாமம் சொன்னதற்காக எனக்கு இப்பேர்ப்பட்ட சோதனையைத் தந்தாயே, என அலறித்துடித்தாள். தன் கற்புக்கு விளைந்த களங்கத்தை துடைக்க முருகனே கதியென உண்ணாமல், உறங்காமல் கிடந்தாள். சோதனையை முடித்த முருகப்பெருமான் அவள் முன் வள்ளியுடன் வந்தார். இழந்த கைகளை திரும்பக் கொடுத்து அதிசயம் நிகழ்த்தினார். கணவன், அவளிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினான். விதியால் வந்ததை யார் தடுக்க முடியும் என அவள் கணவனைத் தேற்றினாள். மாமியார், நாத்தனாருக்கு எந்த தண்டனையும் தரக்கூடாது என அவள் முருகனிடம் வேண்டிக் கொண்டான். அவளது நல்ல மனதைப் பாராட்டிய முருகன், நீண்டகாலம் பூமியில் வாழச் செய்து, இறுதியில் தன்னுலகில் சேர்த்துக் கொண்டார்.
பாம்பன் ஸ்வாமிகள்
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம், தாம் துறவு பூணுவதற்கு பழநிக்கு செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு கிடைத்ததா ? என்று கேட்ட நண்பரிடம், சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார்.
அன்று பிற்பகல் சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது முருகப்பெருமான் அவர் முன் தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து, அசைத்து, பல்லை கடித்து அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது என்று சொன்ன பொய் அனுமதி இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக் கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என் அய்யனே ! நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான். ஆன்மலாபம் கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா?. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த துறவியார் வாழ்விலும் நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம் ஆடிமாதம், சுக்கிரவாரம் ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு கூர்ந்து தாங்களும் சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக சத்தியத்திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
ஒரு மூர்த்தி வழிபாடே சுவாமிகளின் கொள்கையாகும். பிற மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும் முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு, ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள் பல இயற்றியதோடு, சைவ சமய சாரம், நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த வியாசம் என்பது போன்ற ஞான சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக கவசம் ஒரு மந்திர மறையாக போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான மக்களுடைய இன்னல்களை தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம் செய்யாத முருக பக்தர்கள் யாருமிலர். பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான் என்று சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம் திரு உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.
மயூர வாகன சேவன விழா: முருகன் மீது சண்முக கவசம் உள்ளிட்ட 6666 பாடல்களைப் பாடிய அருளாளர் பாம்பன்சுவாமி. 1923, டிச.27ல் சென்னை தம்புச் செட்டித்தெருவில் குதிரை வண்டி மோதியதால் சுவாமியின் இடதுகால் முறிந்து போனது. அரசு மருத்துவமனை மன்றோ வார்டில் அனுமதிக்கப்பட்டார். வயது 73 என்பதாலும், உப்பு சேர்க்காமல் உணவு உண்பவர் என்பதாலும், குணமாவது சிரமம் என்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர். பாம்பன் சுவாமி தான் பாடிய சண்முககவசத்தை பாராயணம் செய்தபடியே இருந்தார். 1924, ஜனவரி 6 இரவில், மருத்துவமனையில் சேர்ந்த 11வது நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் தோகை விரித்தபடி இருமயில்கள் ஆடுவதை சுவாமி கண்டார். இன்னும் 15 நாளில் குணமாகும் என்று அசரீரி ஒலித்தது. குழந்தை வடிவ முருகனும் சுவாமிக்கு காட்சியளித்தார். அதன்படி பூரணகுணமும் பெற்றார். சென்னை அரசு மருத்துவமனை 11வது வார்டு பதிவுக்கல்லில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதியில், ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை பிரதமையன்று, மயூரவாகன சேவன விழாவை வாக மகா தேஜோ மண்டல சபையினர் நடத்துவர். அப்போது சுவாமி எழுதிய, அசோக சாலவாசத்தை வாசிப்பர். இதில் அவரின் தெய்வீக அனுபவம் இடம் பெற்றுள்ளது.
சிகண்டினி
சிகண்டினி
துருபதனின் மகளான சிகண்டினி இப்போது சிகண்டி! இந்த சிகண்டி அழகிய கந்தர்வன் வடிவில் அடுத்து நேராகச் சென்றது புத்புதகம் எனும் இடத்திற்கு தான்..! தன் தோற்றத்தை அளித்த கந்தர்வனே, அந்த இடத்திற்கு செல்ல அவனுக்கு வழி காட்டினான். புத்புதகம் வீரர்களை உருவாக்கும் இடம். குறிப்பாக எல்லாவித அஸ்திரங்களையும் பிரயோகிக்க கற்றுத் தரும் ஒரு இடமாகும். அந்த பயிற்சிகளைப் பெற்ற சிகண்டி, வெகு சிக்கிரத்தில் பெரும் வீரனாகி விட்டான். பெரும் வீரனாக மாறி கந்தர்வனுக்கான எழிலோடு ஒரு ஆண் வாரிசாக அவன் துருபத மன்னனை வந்து சந்தித்த போது துருபதனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு ஒரு அளவே இல்லை.இருந்தாலும் இப்போதும் பீஷ்மரை எண்ணி துருபதன் மனம் அச்சப்படவே செய்தது. ஆனால் அந்த அச்சத்தை சிகண்டி போக்கினான். தந்தையே... கவலையை விடுங்கள். விதிப்பாடு என்னை ஆளாக்கிவிட்டது. அந்த மாலையை நான் விளையாட்டாக அணிந்த வேளை இன்று நானொரு மாவீரன். என் வீரத்துக்கு எந்த நாளிலும் இழுக்கு ஏற்படப் போவதில்லை. தைரியமாக இருங்கள். என்று ஆறுதல் கூறினான்.
மகாபாரதத்தின் பெரும் வியப்பிற்கும் சிந்தனைக்கும் உரிய பாத்திரமே சிகண்டினியாக இருந்து பின் மாறிய சிகண்டி!மகாபாரத பாத்திரங்களில் சிகண்டியை போலவே பழிவாங்கவென்றே உருவான பாத்திரம்தான் திருஷ்டத்துய்மன்! பீஷ்மரால் சிகண்டி வந்தது போல, துரோணரால் வந்தவன் இவன்.அதாவது வில்வித்தையில் தலை சிறந்த அர்ஜுனன், ஏகலைவன் போன்ற பெரும் வில்லாளி களின் குருநாதரான துரோணரை பழி வாங்கவென்றே வேள்வி ஒன்றால் பெறப்பட்டவன். இவன் யாரோ அல்ல! பாஞ்சாலி எனப்படும் திரவுபதியின் சகோதரன். இவன் எப்படி வந்தான் என்று பார்ப்போம். துரோணரும், பாஞ்சால அரசன் துருபதனும் நல்ல நண்பர்கள். ஒன்றாக படித்தவர்கள். அப்போது துருபதன் துரோணரிடம், துரோணா! நாளையே நான் பாஞ்சால நாட்டுக்கு அரசனானாலும், உன்னுடனான நட்பை துளியும் பிரிய மாட்டேன். அதுமட்டுமல்ல! என்னுடையது அனைத்தும் உனக்கும் சொந்தம். நான் எதை அனுபவித்தாலும் அதில் சரிபாதி பங்கு உனக்கும் உண்டு. அந்த வகையில், எனது பாஞ்சால நாட்டை நான் ஆளத் தொடங்கும் போது உனக்கும் அதில் பாதியை அளித்து உன்னை அதற்கு அரசனாக்குவேன், என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தான். துரோணரும் அவனது நட்பின் சிறப்பை எண்ணி சந்தோஷப்பட்டார்.நாட்கள் கடந்தது. துருபதனும் பாஞ்சால நாட்டு மன்னன் ஆனான். அப்போது துரோணர் வறுமையின் பிடியில் இருந்தார். அவருக்கு அஸ்வத்தாமன் என்று ஒரு பிள்ளையும் பிறந்து அவனும் பெரும் வீரனாக வளர்ந்திருந்தான். இந்த நிலையில் தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காக பாஞ்சால நாட்டில் பங்கு கேட்டு, துருபதன் முன் சென்று நின்றார். ஆனால் துருபதன் மிக மாறிவிட்டிருந்தான். அரச போகமும் யோகமும் அவன் கண்களைக் கட்டியிருந்தன. துரோணர் வரவும் முதலில் யார் என்றே தெரியாதவன் போல் நடந்து கொண்டான். பின் துரோணரை தெரிந்து கொண்டவன், அடடே, குருகுலத்து நண்பனா? வேதம் படிக்க வேண்டிய நீ இங்கே எங்கே வந்தாய்? என்று கிண்டலாகக் கேட்டான். துரோணருக்கு அப்போதே துருபதன் பழைய நண்பன் இல்லை என்பது புரிந்து விட்டது. இருந்தும் அவன் குருகுலத்தில் செய்து தந்த சத்தியத்தை நினைவுபடுத்தினார். அது நினைவுக்கு வரவும் துருபதனுக்கு சிரிப்புதான் வந்தது. துரோணா! உன்னை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. பள்ளிப் பிராயத்தில் ஏதோ விளையாட்டாக சொன்னதை இவ்வளவு உறுதியாகவா எடுத்துக் கொள்வது? பாஞ்சால தேசம் என்ன வெட்டித்துண்டு போட்டுத்தர அது என்ன பட்டுத்துணியா? தேசமப்பா.... தேசம்! இந்த தேசத்தை ஒரு க்ஷத்திரியனான நான் ஆளவே பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது.
நீயோ வேதியன். பரத்வாஜ முனிவரின் புத்திரன். தவம்புரிவதை விட்டுவிட்டு நாடாள ஆசைப்படுகிறாயே...! வேடிக்கையப்பா பெரும் வேடிக்கை....என்று இழுக்காக பேசி சிரித்தான். துரோணருக்கு கூச்சம் எடுத்தது. இருந்தும், துருபதா.... உன் சத்தியத்தை நம்பி நான் மோசம் போய் விட்டேன். சத்தியத்தை மதிக்காத பாவத்துக்கு ஆளாகாதே. வாக்கில் நில். உன்னைவிட என்னால் இந்த தேசத்தை நன்றாக ஆளமுடியும், என்றார். ஆனால் துருபதன் கேட்கவில்லை. மாறாக மேலும் அவரை இழிவுபடுத்தி வேண்டுமானால் உனக்கு பொற்காசுகளை பிச்சையிடுகிறேன். பொறுக்கிக் கொள், என்று கைநிறைய காசுகளை அள்ளி துரோணர் முன்வீசி எறிந்தான். எப்போதும் நாம் தாழ்வாக இருக்கும் பொழுதைக் காட்டிலும், உயர்வாக இருக்கும் பொழுதுதான் மிகவே கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் செயல்களாலேயே நாம் மோசமான வினையை தேடிக் கொள்ள நேரிடும். துரோணர் வரையில் துருபதன் நடந்துகொண்ட விதம் துரோணரை கோபத்தின் உச்சிக்கே கொண்டுசென்றது. துருபதா! உன்னை நான் சும்மாவிடமாட்டேன். வேதியன் என்றா என்னை இகழ்ந்தாய்...? வேதமும் கல்வியும் எப்படி இரு கண்களோ அப்படித்தான் எல்லாமே! நீ தர மறுத்த நாட்டை மட்டுமல்ல! உன்னையே நான் என் அடிமையாக்கிக் காட்டுகிறேன். அப்போது தெரியும் இந்த துரோணாச்சாரி எப்படிப்பட்டவன் என்று...என சபதம் போட்டுவிட்டு சென்று விட்டார்.அடுத்து அவர் ஒரு வனத்தில் சந்தித்தது பாண்டவர்களையும் கவுரவர்களையும் தான்!இருசாரரும் ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தர்மரின் மோதிரம் அங்குள்ள கிணற்றில் விழுந்து விட்டது. அதை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் அவர்கள் விழித்து நின்றபோது, துரோணர் அந்த பக்கமாய் வந்தார். மோதிரம் விழுந்து விட்டதை அறிந்தவர், அர்ஜுனன் வசமிருந்த வில்லையும் அம்பையும் செலுத்தினார். அம்பின் நுனி மோதிரத்தை தன்னுள் பூட்டிக் கொண்டு துரோணர் முன் வந்து விழுந்தது. அதைக் கண்டு தர்மர் முதல் அவ்வளவு பேரும் ஆனந்தப்பட, அர்ஜுனன் துரோணரை அப்போதே தன் குருவாக வரித்துக் கொண்டான். பின், பீஷ்மரிடம் துரோணரை கொண்டு சென்று நிறுத்த அவர் இருசாரருக்கும் குருவாக துரோணரை நியமித்தார். துரோணரும் தான் அறிந்த அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்தார். ஒருநாள் அனைவருக்கும் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. அர்ஜுனன் ஒருபுறமும், துரியோதனன் மறுபுறமும் துரோணரிடம் தங்களது குருகாணிக்கை என்ன? என்று கேட்டனர். துரோணரும், நான் கேட்பதை நீங்கள் கட்டாயம் தருவீர்களா? என்று பலத்த பீடிகை போட்டார். அர்ஜுனன் வேகமாக முன் வந்து, குருவே! நான் என் உயிரைக் கூட தர சித்தமாக இருக்கிறேன், என்றான். அதைக் கேட்ட துரியோதனனும், குருநாதா.... நானும் ஒன்றும் அர்ஜுனனுக்கு சளைத்தவனில்லை. எதுவேண்டுமானாலும் கேளுங்கள்! தங்கள் காலடியில் அதை வைக்கிறேன், என்றான். அப்போது துரோணர் இருவரிடமும் கேட்டது ஒன்றைத்தான். அதுதான் துருபதனை ஒரு கைதியாக தன் காலடியில் கிடத்துவது என்பதாகும். ஒரு வினாடி இருவருமே அதிர்ந்தாலும், குருநாதரின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாராயினர்.
முதலில் துரியோதனன் துருபதன் மீது போர் தொடுத்தான். ஆனால், அதில் துருபதன் தான் வெற்றி பெற்றான். அடுத்து அர்ஜுனன் போர் தொடுத்தான். அவனுக்கு தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் என்று சகலரும் பெரிதும் உறுதுணை!போரில் அர்ஜுனன் வெற்றி பெற்றான். துருபதனைக் கைது செய்து தன் ரதத்திலேயே தூக்கிப் போட்டு இழுத்து வந்து துரோணரின் காலடி நோக்கி தள்ளி விட்டான். பின், குருநாதா! இப்போது உங்கள் காலடியில் கிடப்பது துருபதன் மட்டுமல்ல. இவனது பாஞ்சால தேசமும் தான்... நீங்கள் ஒருபாதியைதான் கேட்டீர்கள். ஆனால், முழு தேசத்தையே நான் இப்போது உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்றான்துருபதனுக்கும் தன் தவறு புரிந்தது. இருந்த போதிலும் பாண்டவர்களிடம் பிடிபட நேர்ந்து இப்படி காலில் விழுமளவு வந்தது மனதை ரணப்படுத்திவிட்டது. துரோணருக்கும் மனம் கசிந்தது. துருபதா.... என் பால் உனக்கு நட்பில்லாமல் போனாலும், என்னிடம் அது இப்போதும் உள்ளது. நீ செய்யத்தவறியதை நான் இப்போது செய்கிறேன். நீ தராத பாதி நாட்டை நான் உனக்கு தருகிறேன். பெற்றுக் கொள். இனியாவது அகந்தை கொள்ளாமல் தர்ம நெறிகளோடு வாழக் கற்றுக் கொள், என்று துருபதனுக்கு பாஞ்சால நாட்டின் வட பகுதியை தந்து அதற்கு அரசனாகவும் ஆக்கினார். தன் நாடு தனக்கே தானமாக வந்து சேர்ந்தது துருபதனை கொந்தளிக்க வைத்தது. அதுபெரும் கோபமாக மாறியது. அந்த கோபம் துரோணர் மேல்தான் திரும்பியது. துரோணரை வெற்றி கொண்டு பழிக்குபழிவாங்க துருபதன் மனது துடித்தது. துரோணரிடம் இருப்பதோ பிரம்ம தேஜோபலம்! தன்னிடம் இருப்பதோ க்ஷத்திரியபலம்.
க்ஷத்திரிய பலத்துக்கு, பிரம்ம தேஜோபலம் துளியும் ஈடாகாது என்பது துருபதனுக்கு புரிந்தது. இவ்வேளையில் தான் யாஜர், உபயாஜர் என்று இரண்டு பிரம்மரிஷிகளை துருபதன் பார்த்தான். அவர்களிடம் தன் ஆதங்கத்தைச் சொல்லி, பிரம்ம தேஜோபலத்தை வெல்லும் சக்தியை நான் பெற வழிகாட்டுங்கள், என்று கேட்டான். அவர்கள் சவுத்ராமணி எனும் யாகம் செய்யச் சொன்னார்கள். அப்படி ஒரு யாகத்தை உரிய முறையில் செய்தால் யாக பலனாய் மிகுந்த அழகும் அறிவும் வீரமும் உடைய புத்திரன் மட்டுமல்ல, புத்திரியும் தோன்றுவது நிச்சயம், என்றார் யாஜர். யாகமும் முறைப்படி நிகழ்த்தப்பட்டது. இந்த யாகத்தில் ஆகுதியை தேவர்களுக்கு அரசனும் அரசியும் சேர்ந்தே தர வேண்டும். ஆனால் துருபதனின் மனைவியான ப்ருஷதி, தான் இருக்கவேண்டிய இடத்தில் யாஜரையே தன்சார்பில் இருந்து யாகம்புரியச் சொன்னாள்.துருபதனும் யாஜரும் ஒன்றுபட்டு ஆகுதியை வழங்கவும். அந்த யாக நெருப்பில் இருந்து ஒரு அழகிய வீரன் வெளிப்பட்டான். அவன் வெளிப்பட்ட நொடியில் அசரீரி ஒலித்தது. இவனே துரோணருக்கு எமன். அவருக்கு நண்பனாகவும் திகழ்வான். இவனால் பாஞ்சால தேசம் நற்பெயர் பெறும், என்றது அந்த வாக்கு. இவனே திருஷ்டத்துய்மன்! ஜெயிக்க முடியாதவன் என்பது இதன் பொருள். திருஷ்டத்துய்மனைத் தொடர்ந்து அந்த யாகத்தில் அழகிய பெண்ணொருத்தியும் தோன்றினாள்! அவளே திரவுபதி.
சங்கல்பம்...
பூஜை துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே... என்ன அது?
சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது... இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்... இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...
சங்கல்பம்
சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.
அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.
கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.
இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.
“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”
என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும்.
ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.
பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.
“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.
இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.
அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.
இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.
ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,
வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;
இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;
ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;
அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;
சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;
சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;
ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;
இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;
மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;
அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;
ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;
அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;
பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;
பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;
சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே;
இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;
பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;
பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;
எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;
நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;
ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;
யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;
ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:
மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.
கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;
மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;
அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;
உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;
சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;
இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.
இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1. நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.
2. அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
3. அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.
4. புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.
5. காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.
6. இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?
செவ்வாய், 19 செப்டம்பர், 2023
36. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
36. ஸ்ரீ சித் சுகாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
முப்பத்தி ஆறாவது ஆசார்யர் கி.பி. 738 - 758
ஸ்ரீ சித் சுகாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பாலாற்றங்கரையில் உள்ள தோரூரில் தமிழ் அந்தண மரபினத்தவர். இவரின் தந்தையின் பெயர் ''ஸோம கிரி''. பெற்றோர் வைத்த பெயர் ''சுரேசர்'’.
இவரை கூடுதலாக ''சிதாநந்தர்'' என்றும் அழைக்கப்பட்டார்.
இவர் தமிழகம் எங்கும் பல யாத்திரைகள் செய்து மக்களுக்கு தனது ஆசிகளையும், அன்பையும் பொழிந்தார்.
ஸ்ரீ சந்திரமௌளீஸ்வர பூஜை செய்வதில் ஆளாதி ப்ரியமுடன் செய்வார்.
இவர் கி.பி. 758 ஆம் ஆண்டு, ஹேவிளம்பி வருடம், ஐப்பசி மாதம், பௌர்ணமி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 21 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
35. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
35. ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு
முப்பத்தி ஐந்தாவது ஆசார்யர் [கி.பி. 710 - 737]
ஸ்ரீ சித்சு சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு ஆச்சார்யர்.
இவர் வேதாசலத்தைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் ''விமலாக்ஷர்''. தந்தை இவருக்குச் வைத்த பெயர் “சுசீல கமலாக்ஷர்''.
சஹ்ய மலைத் தொடரில் காவிரி உற்பத்தியாகும் தலைக் காவேரிப் பகுதியிலுள்ள கவேர முனிவரின் குகையில் நீண்ட நெடும் காலம் உறைந்து தவமாய் தவமிருந்தவர். இவர் "பகுரூப சித்சுகர்” என அழைக்கப்பட்டார். இவர் தனது வாழ்நாள் பாதி காலம் கடும் தவத்திலேயே கழித்தார். பேசுவதை விட மௌனமாக இருப்பதையே அதிகம் விரும்பியபடி வாழ்ந்தார்.
இவர் கி.பி.737 ஆம் ஆண்டு, தாது வருடம், ஆடி மாதம், சுக்ல பக்ஷம், சஷ்டி திதியில் சஹ்ய மலையில் சித்தி அடைந்தார்.
இவர் 27 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
34. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
34. ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று
முப்பத்தி நான்காவது ஆசார்யர் [கி.பி.692 - 710]
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று வேகவதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிறிய ஊரில் பிறந்தார். தந்தையின் பெயர் ''மகா தேவர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சம்பு''.
இவர் இந்தியா முழுவதும் பல விஜய யாத்திரைகள் புரிந்தவர். செயற்கரிய செயல்கள் புரிந்தவர். ஒரு சமயம் காட்டுத் தீயில் ஒரு குழந்தை அகப்பட்டுக் கொண்டது. அந்த குழந்தையின் பெற்றோர் தவித்தனர். அப்போது அங்கே யாத்திரையாக வந்து கொண்டிருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன் அருள் கருனை கடாக்ஷத்தால் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொடுத்தார்.
இவர் காஷ்மீர யாத்திரை சென்ற போது காஷ்மீர மன்னன் ''லலிதாதித்யன்'' சபையில் பௌத்த மதத் தீவிரவாதியான "சங்குணன்" அமைச்சனாயிருந்தான். அவன் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை வாதத்திற்கு அழத்தான். ஸ்வாமிகளும் அவனை வாதில் வென்று அத்வைத நெறியை நிலை நாட்டி காஷ்மீரத்திற்க்கும் காஞ்சி மடத்திற்க்கும் ஒரு தொடர்பை ஏற்ப்படுத்தினார்.
இவர் கி.பி.710 ஆம் ஆண்டு, சௌம்ய வருடம், மார்கழி மாதம், அமாவாசை திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 18 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
33. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
33. ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
முப்பத்தி மூன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 672 - 692]
ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சந்திரபாகா நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ஆந்திர அந்தணர் குலத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் ''ப்ரௌத ராமண்ணா''. இவருக்கு பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "திம்மண்ணா''.
இவர் பல மொழியிலும் தேர்ச்சி பெற்ற புலவராக இருந்தார். “பாஷா பரமேஷ்டி" என்று போற்றப்பட்டவர். இவர் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கரமடம் மற்றும் மடத்துக்கு சொந்தமான பரத தேசம் முழுவதும் உள்ள மற்ற கட்டிடங்களையும் பழுது பார்த்து விரிவான திருப்பணிகளை செவ்வனே செய்தார். மேலும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சங்கர மடத்தின் கிளைகளை மேற்ப்பார்வை பார்க்க ஆங்காங்கே வேலைக்கு ஆட்களையும் வைத்து திறம்பட செயல்பட்டு வந்தார்
இவர் கி.பி.692 ஆம் ஆண்டு, கர வருடம், புரட்டாசி மாதம், கிருஷ்ணபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 20 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.3. ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
முப்பத்தி மூன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 672 - 692]
ஸ்ரீ சத்சிதாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சந்திரபாகா நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ஆந்திர அந்தணர் குலத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் ''ப்ரௌத ராமண்ணா''. இவருக்கு பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "திம்மண்ணா''.
இவர் பல மொழியிலும் தேர்ச்சி பெற்ற புலவராக இருந்தார். “பாஷா பரமேஷ்டி" என்று போற்றப்பட்டவர். இவர் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கரமடம் மற்றும் மடத்துக்கு சொந்தமான பரத தேசம் முழுவதும் உள்ள மற்ற கட்டிடங்களையும் பழுது பார்த்து விரிவான திருப்பணிகளை செவ்வனே செய்தார். மேலும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சங்கர மடத்தின் கிளைகளை மேற்ப்பார்வை பார்க்க ஆங்காங்கே வேலைக்கு ஆட்களையும் வைத்து திறம்பட செயல்பட்டு வந்தார்
இவர் கி.பி.692 ஆம் ஆண்டு, கர வருடம், புரட்டாசி மாதம், கிருஷ்ணபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 20 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.