அருள் மிகு கந்த ஸ்வாமி திருக்கோவில், செய்யூர்
தமிழ் கடவுளான முருகப்பெருமான் சேய் வடிவில் காட்சி தந்து அருளும் அற்புத திருத்தலம்.27 நட்சத்திரங்கள் பூத வேதாள கணங்களாக சன்னதி கொண்டு அருள் புரியும் ஒப்பற்ற தலம்.தமிழகத்திலேயே மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் துவாரபாலகர்களாக நின்று அருள்புரியும் ஒரே திருத்தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம்.சுமார் 1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம்.இவ்வாறு பெருமைகள் பல கொண்ட சிறப்பு வாய்ந்த திருத்தலம் இதுவாகும்.
ஸ்தல வரலாறு:சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன் இவ்வூர்"செய்கையம்பதி"என்று பெயர் பெற்று விளங்கியது.ஒரு முறை சிவபெருமானிடம் சாபம் பெற்ற 27 நட்சத்திரங்களும் பூத வேதாள கணங்களாக மாறின.பின்பு 27 நட்சத்திரங்களும் தங்கள் தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்டு வருந்தினர்.அதற்கு இறைவன் சிவபெருமான் எமக்கு உபதேசம் செய்த எமது “சேய்”முருகன் செய்கையம்பதியில் கோயில் கொண்டு அருள்கிறான்.நீங்கள் அங்கு சென்று வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.
இறைவனின் வாக்குப்படி 27 பூத வேதாள கணங்களும் செய்கையம்பதி வந்தடைந்தன.இத்தல இறைவனான கந்தசுவமியை வழிபட்டனர். கந்தசுவாமியான முருகப்பெருமான் சேய் வடிவில் கட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.அதனால் இவ்வூர் "சேயூர்"எனப்பெயர் பெற்று காலப்போக்கில் அப்பெயர் மருவி "செய்யூர்"என்று ஆனது. மேலும் இத்தலத்திற்கு வளவாபுரி செய்கையம்பதி வீர ராசேந்திர நல்லூர் எனப் பல பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.
முருகனின் அடியவரான அருணகிரிநாதர் திருப்புகழில் “சேயூர் பதிகம்”என்ற தலைப்பில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.மேலும் பூத வேதாள கணங்களுக்கு அருள் செய்த வரலாற்றை"கந்தரநுபூதி"யில் பாடியுள்ளார்.
ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை
ஆண்டது செப்பும் அதோ?கூதாள!கிராதகுலிக்கு
இறைவா! வேதாள கணம் புகழ் வேலவனே-அருணகிரிநாதர்
27 நட்சத்திரங்களான பூத வேதாள கணங்கள் இங்கு தனித்தனி பெயர்களில் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர்.
01.நாகாயுதபாணி வேதாளம்
02.வஜ்ரதாரி வேதாளம்
03.வைராக்கிய வேதாளம்
04.கட்கதாரி வேதாளம்
05.ஞான வேதாளம்
06.தோமர வேதாளம்
07.வக்ரதந்த வேதாளம்
08.விசாள நேத்ர வேதாளம்
09.ஆனந்த பைரவ பக்த வேதாளம்
09.ஞான ஸ்கந்த பக்த வேதாளம்
10.தர்பகர வேதாளம்
11.வீரபாகு சேவக வேதாளம்
12.சூரபத்ம துவம்ச வேதாளம்
13.தாரகாசுர இம்ச வேதாளம்
14.ஆனந்த குகபக்த வேதாளம்
15.சூரநிபுண வேதாளம்
16.சண்ட கோப வேதாளம்
17.சிங்கமுகாசுர இம்ச வேதாளம்
18.பரார்ரம வேதாளம்
19.மகோதர வேதாளம்
20.ஊர்த்துவ சிகாபந்த வேதாளம்
21.கதாபாணி வேதாளம்
22.சக்ரபாணி வேதாளம்
23.பேருண்ட வேதாளம்
24.கோர ரூப வேதாளம்
25.குரு பைரவ சேவக வேதாளம்
26.குரோதன பைரவ பக்த வேதாளம் என்பனவாம்
கோயில் அமைப்பு:வெளிப்பிரகாரத்தில் உள்ள பிரதான விநாயகரை வணங்கிவிட்டு ஆலயத்துக்குள் நுழையும்போது 5 அடி உயரத்தில் மேற்கு பார்த்த வண்ணம் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். அவருக்கு நேர் எதிரில் முருகப்பெருமான் தினமும் பூஜிக்கும் சோமநாதர் கிழக்கு நோக்கியும் மீனாட்சி அம்மன் தெற்கு நோக்கியும் அருள்புரிகிறார்கள்.
துவாரபாலகர்களாக மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் இருக்க நந்தி எதிரில் உள்ளார். சோமநாதர் சன்னிதியின் தென்புறம் பள்ளியறை உள்ளது. சோமநாதர் சன்னிதியின் வடபுறம் உள்ள வாசல் வழியே சென்றால் ஆலய பிரதான மண்டபத்தை அடையலாம்.
அதையடுத்த கருவறையில் மூலவராக முருகப்பெருமான் கந்தசுவாமியாக வள்ளி தெய்வானையுடன் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் வேலும் மயிலும் உடனிருக்க அபயஹஸ்தம் தாங்கி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். முருகன் என்றாலே அழகன் என்றுதான் பொருள்.இந்த வேலவனோ அதி அற்புத பேரழகுடன் காட்சி தருகிறார்.
கருவறை வாசலில் துவாரபாலகர்களாக சுவீரனும் சுஜனனும் உள்ளனர்.கருவறையின் வெளியே வாசலில் இருபுறமும் விநாயகரும்,கஜலட்சுமியும் உள்ளனர்.கருவறை வெளிச்சுற்று கோஷ்டங்களில் முருகப்பெருமானே பஞ்ச கோஷ்ட மூர்த்தியாக அருள்புரிகிறார்.
நிருத்திய கந்தர்,பால கந்தர், பிரம்ம சாஸ்தா,சிவகுருநாதர் வேடுவர்(புளிந்தர்)இவர்களே பஞ்ச கோஷ்ட மூர்த்திகளாவர். நர்த்தன விநாயகருக்கு பதிலாக நிருத்திய கந்தரும் தட்சிணாமூர்த்திக்குப் பதிலாக சிவகுருநாதரும் பிரம்மாவுக்குப் பதிலாக பிரம்ம சாஸ்தாவும், லிங்கோத்பவருக்குப் பதிலாக பாலகந்தரும் துர்க்கை அம்மனுக்கு பதிலாக புளிந்தர் எனும் வேடுவரும் உள்ளனர்.
வெளிப்பிரகாரத்தில் மூலவருக்கு நேர் எதிரில் கொடிமரம்,மயில்,பலிபீடம் உள்ளன.கொடிமரத்துக்கு வடக்கில் மயில் மண்டபத்தில் அம்மன் சன்னிதி உள்ளது.இங்கு தனித்தனி சன்னிதிகளில் வள்ளியும் தெய்வானையும் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர்.கொடிமரத்தின் பின்னால் மூலவருக்கு நேர் எதிரில் முருகனின் கடைக்கண் பார்வையில் நவக்கிரகங்கள் உள்ளன.ஆலய வாசலின் அருகில் சுவாமி ஐயப்பன் சன்னிதி இருக்கிறது.
பிரார்த்தனை:வேதாள கணங்களில் முதல் பூத வேதாளம் வேப்பமரம் அருகிலும் 27 வது பூத வேதாளம் வில்வ மரம் அருகிலும் உள்ளன.27 நட்சத்திரக்காரர்களுக்கும் மாதத்தின் தேய்பிறை அஷ்டமி நாளில்"தேய்பிறை அஷ்டமி பூஜை"வெகு சிறப்பாக நடைபெறுகிறது.இந்த பூஜை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 08.00 மணி வரை நடைபெறும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் மாலை சரியாக 4 மணிக்கு பிரதான விநாயகருக்கு அபிசேகம் பூஜை செய்யப்பட்டு பின்னர் வரிசையாக 27 பூத வேதாள கணங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படும்.அப்போது பூத வேதாளங்களுக்கு"தீவட்டி" கொளுத்தி வைக்கிறார்கள்.நிவேதனமாக பொரி கடலை வாழைப்பழம் சாத உருண்டை ஆகியவற்றை படையலிடுகிறார்கள்.
பின்பு அந்தந்த பூத வேதாளங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் உரித்தான ஸ்தோத்திரம் கூறி அர்ச்சிக்கப்படுகிறது.அதன் பிறகே மூலவர் கந்தசுவாமிக்கு அபிசேகம் அலங்காரம் பூஜை நடைபெறும்.தொடர்ந்து பைரவருக்கு அபிசேகம் செய்வதுடன் தேய்பிறை அஷ்டமி பூஜை நிறைவு பெரும்.
திருமணத்தடை அகலவும் கிரக தோஷங்கள் விலகவும் குழந்தைச் செல்வம் வேலை வாய்ப்பு கிடைக்கவும் செல்வம் செழிக்கவும் தீவினை அகலவும் இந்த பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறலாம். இதற்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்களே சாட்சி.
திருவடி மலரடி போற்றி! போற்றி!
தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை.மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 வரை.
போக்குவரத்து வசதி:மேல்மருவத்தூரில் இருந்து 22 கி.மீ.தொலைவிலும் செய்யூர் உள்ளது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்திலிருந்து 31 கி.மீ. தூரத்தில்"எல்லையம்மன் கோவில்"பேருந்து நிறுத்தத்தில் இருந்து 4 கி.மீ.சென்றாலும் செய்யூர் கந்தசுவாமி கோவிலை அடையலாம்.
முகவரி:அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில்;செய்யூர் கிராமம்;
காஞ்சிபுரம்