திங்கள், 23 டிசம்பர், 2019

ஆதிசங்கரர் - 1

ஆதிசங்கரர் அவதாரம்-1

கி.பி. 4ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள். வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார். சோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கூறினார்கள்.

இளம் குழந்தையைச் சுற்றி நாகமொன்று சிறிது நேரம் விளையாடிய பின், விபூதியாகவும் ருத்ராட்சமாகவும் மாறியதாலும், உடலில் சிவச்சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரர் என்று பெயர் சூட்டப்பட்டது. குறும்புக் கண்ணனைப் போலவே, குட்டிச் சங்கரரும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். இரண்டு வயதிலேயே சங்கரர் எழுத்துக்களை வாசிக்க வல்லவரானார். படிக்காமலேயே காவியம் முதலியவற்றை அறிந்தார். குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போதே தந்தை சிவகுரு காலமானார். மிகவும் துக்கமடைந்த தாய் ஆர்யாம்பாள் உறவினர்களின் உதவியுடன் அவருக்கு பூணூல் போட்டு, தகுந்த குருவிடம் வேதம், சாஸ்திரம் முதலியவைகளை பயில சேர்த்து விட்டார். இவர் சிவனின் அவதாரமானதால் குருவால் கூறப்பட்டதையெல்லாம் ஒரு தடவையிலேயே புரிந்து கொண்டார். அத்துடன், அறிய வேண்டிய சகல முக்கிய சாஸ்திரங்களையும், இரு வருடங்களுக்குள்ளேயே கற்றுக் கொண்டார்.

வெள்ளி, 20 டிசம்பர், 2019

பாஸ்கர ராயர்

பாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை இருக்கலாம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார். அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார்.

இவருக்கு வித்யையை <உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வென்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது <உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் <உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பியிருக்க வேண்டும். அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது.

பாஸ்கரராஜபுரத்தில் வெகுகாலம் வசித்து, அம்பாளின் உபாசனையில் திளைத்து, தமது இறுதிக்காலத்தை மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூரில் கழித்த பாஸ்கரராயர், அங்கு தமது 95-வது வயதில் தேவி சரணங்களை சென்றடைந்தார். அவர் காலத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேச்வர் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார். இந்த ஆலயம் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் உள்ள  திருவாலங்காடு அருகே அமைந்துள்ளது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் தலைசிறந்தவரான பாஸ்கரராயர் அம்பாளின் வரப்பிரசாதத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறார். நமது சநாதன வைதீக மார்க்கத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தவர். குப்தவதீ என்னும் தமது சப்தசதீ வியாக்கியானத்தில் ஆதிசங்கர பகவானை வெகுவாகத் தோத்திரம் செய்துள்ளார். பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல எழுதியுள்ளார் என்றும், அவற்றில் பெரும்பகுதி தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவியம், சுருதி, ஸ்மிருதி, புராணம், தோத்திரங்கள், மந்திர சாஸ்திரம் முதலிய துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்களை ஆராய்ந்தோர், இம்மகானுக்குத் தெரியாத வித்தையோ, சாஸ்திரமோ இல்லை என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள். மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்கள் பற்றி அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. மந்திர சாஸ்திரத்திலேயே பதினேழு நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவற்றில் ஒன்றுதான் சௌபாக்ய பாஸ்கரம் என்ற லலிதா சகஸர நாமம் விளக்க உரை நூல். இவர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதியதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள். அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு "சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார். அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர், கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம், மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம், தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது, வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.

பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உ<பாசனை செய்து வந்திருக்கிறார். இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் கூறப்படுவது உண்டு. அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு <உட்கார்ந்திருப்பது வழக்கம். அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். ஆனால், பாஸ்கர ராயர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யமாட்டார். இது அவ்வூர் மக்களுக்கு சற்று வியப்பை ஊட்டியது. சிலர் ஆத்திரமடைந்தார்கள். ஒருநாள் கோயிலில் பாஸ்கர ராயரும் அந்த சந்நியாசியும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், துறவியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதற்கு பாஸ்கரராயரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது பாஸ்கரராயர், இல்லறத் தர்மத்தின்படி தாம் சந்நியாசிக்கு நமஸ்காரம் செய்திருந்தால், அவரது தலை சுக்கு நூறாக உடைந்திருக்கும் என்றும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். பின்னர் அதை நிரூபிப்பதற்காக அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் முதலியவற்றை ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்தார். அடுத்த கணம் அவை மூன்றும் சுக்கு நூறாக உடைந்து சிதறின. அதைக் கண்டதும் அத்துறவி பாஸ்கரராயரின் மகிமையை உணர்ந்தார். பொது மக்களும் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.

இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார்.

பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம்செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.

பாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர்.

நீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது.

மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. கூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து நின்றார். பாட்டி! உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. உடனே அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது. இதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள் தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார். அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.

ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
ஸ்ரீபடே சாஹிப்

விழுப்புரம் - பாண்டிச்சேரி மெயின் ரோட்டில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம். அதாவது கண்டமங்கலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு சுமார் 20 கி,மீ,; பாண்டிச்சேரிக்கும் சுமார் 20 கி. மீ. தொலைவு. இந்தப் பேருந்து தடத்தில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் இறங்கிக் கொண்டு, சுமார் 2 கி. மீ. தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்கிற ஊர் உள்ளது. இங்குதான் ஸ்ரீபடே சாஹிப்பின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தார். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். சாயபு என்பது பொதுவான பெயர். படே என்றால் உயர்ந்த என்று பொருள். உயர்ந்த உத்தமமான மகான் என்கிற பொருளில் இவர் படே சாயபு என்று அழைக்கப்பட்டு வருகிறார். மகான் படே சாஹிப் எவரிடமும் பேசியதில்லை. எப்போதும் மௌனம்தான். தன் வாழ்நாளில் இவர் காத்து வந்த மௌனம், இவருடைய தியானத்துக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. தன் வாழ்வில் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். மகானின் அருள் பெற்றுத் திரும்பிய பலரின் வாழ்வும் ஜகஜோதியாகப் பிரகாசித்தது. இவரது சந்திப்பிலேயே சகாயம் பெற்றார்கள், இவரைத் தேடி வந்தவர்கள்.

ஆசிர்வாதத்தால் நோயாளிகள் குணமடைந்தனர். தீரவே தீராது என்று பலர் அனுபவித்து வந்த வியாதிகள், இவரது ஸ்பரிசத்துக்குப் பின் நிரந்தரமாக நீங்கி விட்டது. ஒருமுறை இவரை கருநாகம் தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார். பக்தர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்றிருந்த வேளையில் சாஹிப்பை தீண்டிய கருநாகம் வந்து விஷத்தை அனைத்தும் எடுத்து விட்டு அவர் பாதங்களுக்கருகில் விழுந்து வணங்கி உயிர் விட்டது. அந்த கருநாகத்திற்கு மோட்சம் அளித்தார் மகான் அவர்கள். மேலும் திருடுவதையேக் குலத்தொழிலாக வைத்திருந்த திருடர்கள் திருந்தினார்கள். மொத்தத்தில், படே சாஹிப்பின் தரிசனம் பெற்று சகல ஜீவ ராசிகளும் பலனடைந்துள்ளன. மகான் அவர்கள் தன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். வியாதியின் அவஸ்தையுடன் தன்னிடம் வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்புவார். இன்னும் சிலருக்குத் தன்னிடம் உள்ள கொட்டாங்குச்சியில் இருந்து நீர் தருவார். நோயின் வீர்யம் அதிகம் இருப்பவர்களிடம் அங்குள்ள கொன்னை மரத்தை அடையாளம் காட்டி, அதைச் சுற்றி வா என்று ஜாடையால் சொல்வார்.

படே சாஹிப்பிடம் வந்தாலே, வியாதிகள் தீர்கின்றன என்ற பேச்சு எங்கெங்கும் பரவி, அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் இவரைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர். படே சாஹிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவருடைய அவதார தினம் எது போன்ற தகவல்கள் தெரியவில்லை, என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது கி.பி. 1868-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி என்கிற குறிப்பு இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. ஆயில்ய நட்சத்திரம். எனவே, இவரது ஜீவ சமாதியில் செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு விசேஷமாக இருக்கும். மகானின் அருளாசி வேண்டி திரளான பக்தர்கள் குவிவார்கள். வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும். தவிர குருவாரம் என்பதால் வியாழக்கிழமைகளிலும், விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பிஸ்கெட், சாக்லெட் மிகவும் உகந்த பிரசாதம் என்கிறார் இந்த ஜீவ சமாதியின் பூசாரி. ஜீவ சமாதிக்கு வருகிற பக்தர்கள் வாங்கி வரும் பிஸ்கெட் மற்றும் சாக்லெட்டுகளை அதிஷ்டானத்தில் வைத்து விட்டு பக்தர்களிடம் தருகிறார் பூசாரி. அங்கு இருக்கும் அனைவருக்கும் அது விநியோகிக்கப்படுகிறது. இன்றைக்கும் தன் ஜீவ சமாதி தேடி வரும் பக்தர்களின் பிணியை - அபூர்வ மருத்துவராக இருந்து தீர்த்து வருகிறார் படே சாஹிப். இவரது தரிசனத்தால் பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சி!
பாணினி மாமுனிவர்

கல்லைப் போல் வறட்சியான மொழி அறிவியலை வாடாத மணமுள்ள மலராக்கியவர் பாணினி. பாணினியின் அஷ்டாத்யாயி, நவமணிகள் நன்கு பதித்த ஒரு பெரிய அணிகலன். 395 சூத்திரங்களில் சம்ஸ்கிருதத்தின் சொல்வளம் முழுவதையும் நுணுக்கமாக அமைத்தார் பாணினி. எந்த மொழியிலும் பெயரும் வினையும் முக்கியமான சொல்வகைகள், ஒரே விகுதி கொள்ளும் பல சொற்கள் ஒரு விதிக்குள்ளே அடங்குவதை பாணினி கண்டார். வகை வகையான விதிகளுக்குள் அடங்கும் இத்தகைய பெயர்ச் சொற்களைக் கூட்டங் கூட்டமாக வகைப்படுத்தினார். பெயர்ச்சொற்களின் இக்கூட்டத்துக்கு, கணபாடம் என்பர், உதாரணமாக நத்யா திப்யோ டக் என்ற சூத்திரத்தால், நதியில் உண்டானது - நாதேயம் என்றாகிறது. இது போல, சம்ஸ்கிருதத்திலுள்ள சொற்கள், 2115 தாதுக்களைக் (வினைவேர்களை) கொண்டு இயங்குவதை பாணினி கண்டார். இவற்றை அவர் பத்துப் பிரிவுகளாகத் தொகுத்தார்; தாதுக்களும் அவற்றின் அர்த்தங்களும் அடங்கிய இத்தொகுதி தாதுபாடம் எனப்படும். பெயர்ச் சொற்களில் வரும் வேற்றுமை விகுதிகளை பாணினி ஒரே சூத்திரத்தில் ஸு என ஆரம்பித்து ப் என்று முடித்தார். அதனால் இதற்கு ஸுப் என்று பெயர். இப்படிப் பல எழுத்துக்களை சூத்திரத்திலிருந்து சுருக்கின் கூறும் முறை ப்ரத்யாஹாரம் என்ப்படும். இப்படி வினை விகுதிகள் எல்லாம் ஒரே சூத்திரத்தில் தி என்று தொங்கி ங் என முடிக்கிறார். அதனால் இதற்கு திங் என்று பெயர். ஸுப்திஙந்தம் பதம். ஸுபதம் என்பது பெயர்ச்சொல்; திஙந்தம் என்பது வினைச்சொல்.

பெயரடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு தத்திதம் என்றும், வினையடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு க்ருதந்தம் என்றும் பெயர். இப்படி சம்ஸ்கிருத மொழியிலுள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்து அறிவியல் முறையில் இலக்கணத்தை அமைத்தவர் பாணினி. அதனால்தான் பதஞ்சலி, பாணினி சூத்திரத்தின் அமைப்பில்தான் என்ன அழகு ! என வியக்கிறார். உழைப்பும் ஆராய்ச்சியும் :  பிற்காலத்தில் வியாகரணத்துக்குத் தம்மையே மக்கள் ஆதாரமாகக் கொள்வார்கள் என்று தமது பொறுப்பை நன்கு உணர்த்த பாணினி, தர்ப்பத்தை அணிந்து தூய கையினராக, கிழக்கு முகமாக அமர்ந்து, ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் பேருழைப்புடனும் அஷ்டாத்யாயியை இயற்றினார் என மஹா பாஷ்யகாரரான பதஞ்சலி குறிப்பிடுகிறார். பாணினி வாக்கு : பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத மொழியை மட்டுமின்றி, பழங்காலக் கல்வெட்டுக்களையும் நாணயங்களையும் போல் பாரதப் பண்பாட்டைப் பற்றியும் அறிவதற்கு முக்கியச் சான்றாகத் திகழ்கிறது. பாணினி தாம் கண்ட ஐநூறு ஊர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த ஊர்கள் அத்தனையும் இன்றும் இருக்கின்றன. பாணினி மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டவர். வாழ்வில் நாம் அன்றாடம் வழங்கும் சொற்களைப் பாணினி விளக்கும் முறை எளிது. பாணினி இலக்கணம், உலகம் கண்ட இலக்கியப் படைப்புகளுள் மிகச் சிறந்தது; பாணினியின் வியாகரணம்உண்மையிலே சமஸ்கிருதத்தின் ஒரு வகையான இயற்கைச் சரித்திரம் என்றார் கோல்ட்ஸ்டுகர்.

அக்காலத்திய பல மொழிகளில் பாணினி வல்லவர்;  பாணினியின் வாக்கு, இன்றும் உலகெங்கும் பெருவழக்காக நீடித்திருந்து, மேலோங்கி வாழ்கிறது - பாணிநீ சப்தோ லோகே ப்ரகாசதே என்று காசிகாகாரர் சொன்னது எவ்வளவு உண்மை ! தம்மையே தந்தவர் : பாடலிபுத்திரத்துக்குப் புறப்பட்ட நாளிலிருந்து தமது இறுதி நாள் வரையில், பாணினி சொல்லுலக யாத்திரிகராகவே வாழ்ந்தார். பல மாணவர்களுக்கு பாணினி பாடம் கூறி வந்தார். அவரது மாணவர்களில் முக்கியமானவர் கௌத்ஸர்.  ஒரு நாள் மாலை, காட்டில் சீடர்களுக்கு பாணினி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நீரருந்த ஒரு புலி ஏரிக்கு வந்தது. புலி வருவதைக் கண்ட மாணவர்கள் மரங்களில் ஏறிக்கொண்டனர். பாணினி புலியைப் பார்த்தார். ஆனால் அவர் அசையவில்லை. அசைவனவும் நிற்பனவுமான இந்த உலகை விழுங்கி ஆட்கொள்ளும் பரம்பொருளே புலியுருவில் நம்மிடம் வருகிறது - அத்தா சராசரக்ரஹணாத் என் அவர் கருதினார். அக்கணத்திலும், புலியைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பற்றி அவர் ஆராய்ந்தார் ! புலிக்கு வ்யாக்ர : என்று பெயர். காட்டு விலங்குகள் எல்லாவற்றுக்குமே மோப்பச் சக்தி உண்டு. புலிக்கு அது சிறப்பாக அமைந்தது. புலி சுற்றிச் சுற்றி வந்து மோப்பம் பிடிப்பதால், வ்யாஜிக்ர தீதி வ்யாக்ர: - வ்யாக்ரம் என்று அதைச் சொல்கிறார்கள் என அவர் கண்டுபிடித்தார். இறக்கும் தறுவாயிலும் உலகுக்கு ஒரு சொல்லின் தன்மையை அவர் உணர்த்திச் சென்றார். பாணினி சிங்கத்துக்கு இரையானதாகப் பஞ்ச தந்திரம் கூறும். பாணினி உடலை உகுத்த தினம் திரயோதசி என்பர். மாதமும் பக்ஷமும் தெரியாமையால், இன்றும் காசி முதலிய இடங்களில் ஒவ்வொரு திரயோதசியையும் வியாகரணம் பயிலாத (அநத்யயன) தினமாக வைத்துள்ளார்கள். மக்கள் அறியாமையுடன் பேசும் சொற்களிலுள்ள குறைகளை, பாணினி புனிதமாக்கி, மங்கலச் சொற்களை வழங்க வைத்து, மக்களின் அறியாமையை அறவே நீக்கினார். அந்த மாமுனி பாணினியை நாம் வணங்குவோம்.
சுத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்தர் 11.5.1897 அன்று சிவகங்கையில் ஜடாதரர், காமாட்சி அம்மையாரின் நான்காவது மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன் என்பதாகும். அன்னை மீனாட்சி அம்மனின் பேரருளால் தனது எட்டு வயதில் சுத்தானந்தர் கவிதா சக்தி பெற்றார். சிறிய பாட்டனார் பூர்ணானந்தரிடம் யோகம் பயின்றார். இமாலய மகான் ஞான சித்தர் சுத்தானந்தம் என்ற தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். சிருங்கேரி நரஸிம்ஹ பாரதி சங்கராசார்ய சுவாமிகள் கவியோகி பாரதி என்றும், சுவாமி சிவானந்தர் மஹரிஷி என்றும் சிறப்புச் செய்தனர். ஷீரடி சாய்பாபா ஓமொலி வழங்கினார். பகவான் ரமணர் தன்னறிவு பெறச் செய்தார். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் தொடர்ந்து மோனத்தவம் புரிந்து சாதனை படைத்தார். காட்டுப்புத்தூரிலும், தேவகோட்டையிலும் சுத்தானந்தர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். விடுதலைப் போராட்ட காலத்தில் தலைமறைவுத் தொண்டராக பணியாற்றிய போது திலகர், காந்திஜி, நேதாஜி, வ.வே.சு. அய்யர், சிதம்பரனார், சிவா, பாரதியார், செண்பகராமன், ராஜா மகேந்திர பிரதாப் போன்ற தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். காந்திஜி அறிவுரைப்படி கிராமப்பணி, கதர்ப் பணியாற்றியும் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, உயிர்ப்பலி தடுத்தல் போன்ற சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். இயற்கை, சமரஸ போதினி, பாலபாரதி, ஸ்வராஜ்யா (தமிழ்) ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ், வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு உள்பட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் இயற்றினார். தமது நூல்களில் சுத்தானந்தர் பெரிதும் போற்றியவை பாரதசக்தி மகா காவியம் மற்றும் யோகசித்தி என்ற நூல்களாகும். பாரத சக்தி தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. அனைத்து சமய நூல்களையும் கற்று அவை காட்டிய நெறிகளைப் பழகி வாழ்ந்தார். ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்ம நேயர் நாம் என்று உலகிற்கு அறிவுறுத்தினார். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் ஆன்மீக, கலாசாரப் பயணங்கள் மேற்கொண்டார். சுத்தானந்தரின் செய்தி சமயோகம். அகவாழ்வு சிறந்த யோகம்; புறவாழ்வு செழிக்க அறிவியல். யோகமும் அறிவியலும் மனித வாழ்வில் இணைந்து விட்டால் மானுடம் தெய்வ நிலை எய்தும்; மண்ணில் விண்ணரசு தோன்றும். 1977-ஆம் ஆண்டு சிவகங்கையில் சுத்தானந்த யோக சமாஜம் என்ற அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். 1979-இல் சுத்தானந்த பாரத தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை சோழபுரத்தில் நிறுவினார். சோழபுரத்தில் தவக்குடில் அமைத்துக் கொண்டு தமது இறுதி காலம் வரை அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்த கவியோகி சுத்தானந்தர் 7.3.1990 அன்று மகா சமாதி அடைந்தார்.

சிவானந்த ஜோதி

கங்கையைப் போலத் தெளிந்தநல் உள்ளம்,
கருணைமா முகிலெனத் தோற்றம்;
திங்களைப் போல நிலவிடும் சாந்தம்,
தினகரன் போலொளிர் ஞானம்,
தங்கமே யனைய சாதுக்க ளுடனே
சதானந்தக் குடிலில்வே தாந்தச்
சிங்கமே போன்று ப்ரணவ கர்ஜனைசெய்
சிவானந்த ஜோதியைப் பணிவாம்.

உலகெலாம் புகழும் உத்தமச் சோதி,
ஓம் சிவம் ஓம் சிவம் என்றே
சலசலத்தோடும் சாந்தமாச் சோதி
தற்செருக் கிம்மியும் இன்றி,
நிலவிடும் அன்பு நிறைந்ததற் சோதி
நிமலவே தாந்தமாச் சோதி
இலகிடும் வெள்ளி இமாலயச் சோதி
சிவானந்த ஜோதியைப் பணிவோம்.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான பாரத சக்தி மகாகாவியம் அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். இவர் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் காலம்: 1891-1990 அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் சுத்தானந்தர், ஆயுட்காவியம் என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் பாரத சக்தி மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
துக்காராம்

பதினாறாம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவை சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்து வந்தார். இக்காலகட்டத்தில் அருளாளராக துக்காராம் அவதரித்தார். இவரை நாமதேவரின் மறுஅவதாரம் என்று குறிப்பிடுவர்.  தேவநகரம் என்னும் ஊரில் மாதவராவ் என்னும் பக்தசீலரின் பிள்ளையாக 1598ல் பிறந்தார். தந்தை செய்து வந்த தானிய வியாபாரத்தை இவரும் செய்தார். கல்வியறிவு பெறாவிட்டாலும் இயற்கையிலேயே இசைஞானம் பெற்றவராக இருந்தார். கவிதை எழுதும் ஆற்றலும் இருந்தது. குடும்பத்தினர் வழிவழியாக பாண்டுரங்கன் மீது பக்திசெலுத்தியதை துக்காராமும் பின்பற்றினார். இசைஞானமும், பக்தி ஞானமும் துக்காராமின் இருகண்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் தானிய வியாபாரம் குறைந்து, துக்காராமின் குடும்பம் வறுமையில் சிக்கியது. வாழ்க்கை கசந்தது. இந்த நிலையிலும், பாண்டுரங்கன் மீதான பக்தி மட்டும் குறையவில்லை. பாண்டுரங்கன் பல அற்புதங்களை இவருடைய வாழ்வில் நிகழ்த்தினார். ஒரு சவுகாரிடம் கடன் பெற்று தானியம் வாங்க வெளியூர் சென்றார். தானியத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவுவேளை.. பலத்தமழை புயல்காற்றுடன் பெய்தது. மாடுகளை அவிழ்த்துவிட்டு ஓரிடத்தில் ஒதுங்கினார். களைப்பாக இருக்கவே தூங்கி விட்டார். மறுநாள் விழித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வண்டி, மாடு, தானியம் எதையும் காணவில்லை. மனவேதனைக்கு ஆளானார். மிகவும் சோர்வுற்ற துக்காராம், பாண்டுரங்கனைக் குறித்து தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில், பாண்டுரங்கனே துக்காராம் போல் உருவை மாற்றிக்கொண்டு, மாட்டுவண்டியில் புறப்பட்டார். தானிய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை மனைவி ஜீஜாபாயிடம் கொடுத்துவிட்டு, நீராடக் கிளம்பினார். ஜீஜாபாய் கடனாக வாங்கிய பணத்தைக் கொடுக்க சவுகார் வீட்டுக்குச் சென்றாள். ஆனால் அவர், துக்காராம் நேரில் வந்து கடனைத் திருப்பி கொடுத்து விட்டார், என்று சொன்னதும் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த துக்காராமையும் காணவில்லை.  தியானத்தில் இருந்து கண்விழித்த துக்காராம் வருத்தத்துடன் வீடு திரும்பிவந்தார். வீட்டில் நடந்த விபரங்களை ஜீஜாபாய் மூலம் அறிந்து கொண்ட துக்காராம் ஆச்சரியத்தில் மூழ்கினார்.  தன்னைப் போல வந்து அற்புதத்தை நிகழ்த்தியர் பாண்டுரங்கனே என்பதை எண்ணி தம்பதியர் இருவரும் ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். துக்காராம் பாண்டுரங்கன் கோயிலில் பாடல்கள் பாடுவதை தன் முழுநேரப் பணியாகக் கொண்டார். கோயிலில் பக்தர் கூட்டம் பெருகியது. பலரும் இவருடைய சீடர்களாக மாறினர். சிலர் அவர் மீது பொறாமையும் கொண்டனர்.

அதில் ராமேஸ்வரபட் என்பவர், துக்காராம்! நீ பிறப்பால் தாழ்ந்தவன்! அதனால், நீ பாடும் பாடல்களை பாண்டுரங்கன் ஏற்றுக் கொள்ளமாட்டான். நீ எழுதிய பாடல்களை இந்திராயணி ஆற்றில் நானே எறிந்து விடுகிறேன் என்று சொல்லி ஆற்றில் தூக்கி எறிந்தார். துக்காராம் பாண்டுரங்கனை எண்ணி தியானத்தில் மூழ்கினார். நதிதேவதை மூலம் மீண்டும் பாடல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. இதனை தன் கவிதையில், என் கவிதைகளே என் மூலதனச் சொத்து. பாடல்கள் ஆற்றில் அமிழ்ந்ததைக் கண்டு என் உள்ளம் அளவிலா துன்பம் கொண்டது.ஆனால், நாராயணன் என்னைக் காத்தருள்செய்தான் என்று பாடியுள்ளார்.  இந்நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு துன்பம் செய்த ராமேஸ்வரபட்டும் துக்காராமின் சீடராக மாறினார். துக்காராம் மீது வீரசிவாஜி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். ஒருமுறை அவர், துக்காராமைச் சந்திக்க மாறுவேடத்தில் வந்திருந்தார். ஒற்றர்கள் மூலம் இவ்விஷயத்தை அறிந்த அவுரங்கசீப்பின் படைகள் பாண்டுரங்கன் கோயிலைச் சுற்றி வளைத்தன. சிவாஜியைக் காப்பாற்றும்படி பாண்டுரங்கனை துக்காராம் வேண்டிக் கொண்டார். பாண்டுரங்கனே, வீரசிவாஜி போல குதிரையில் தப்பி ஓட, அவுரங்கசீப்பின் படைவீரர்கள் பின்தொடர்ந்தனர். அதனால், உண்மையான சிவாஜி காப்பாற்றப்பட்டார். இதற்காக, துக்காராமுக்கு பொன்னும் பொருளும் சன்மானமாக வீரசிவாஜி கொடுத்தபோதும், அவற்றை துக்காராம் ஏற்றுக் கொள்ளவில்லை.

துக்காராமுக்கு கமலாபாய் என்ற மனைவியும் உண்டு. ஒருநாள் அவள் தன் சேலையை துவைத்து வெயிலில் உலர்த்தப் போட்டுவிட்டு ஏதோ வேலையாக வெளியில் சென்றுவிட்டாள். கிழிந்த சேலை கட்டியிருந்த ஒரு ஏழைப்பெண்ணுக்கு உதவும் எண்ணிய துக்காராம், கமலாபாயின் சேலையை அவளிடம் கொடுத்து விட்டார். அவளும் அதை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கமலா, தன் சேலையை உடுத்தியிருந்த பெண்ணைக் கண்டதும், துக்காராமிடம் கோபித்தாள். பாண்டுரங்கா! பாண்டுரங்கா! என்று சொல்லி வீட்டையும் பாழாக்குறீங்களே!  என்று கத்தினாள். குழவிக்கல்லை எடுத்துக் கொண்டு பாண்டுரங்களை அடிக்க கோயிலுக்கு புறப்பட்டாள். கோயிலில் புன்னகையுடன் ருக்மணியே கமலாபாயின் புடவையைக் கட்டிக் கொண்டு காட்சி அளித்தாள். பலவிதமான ஆடை, ஆபரணங்களை கமலாபாய்க்கு கொடுத்து அருள்புரிந்தாள். ஓடிவந்து துக்காராமின் பாதங்களில் விழுந்து கதறி அழுதாள் கமலா.  துக்காராம் கமலாபாயிடம், கமலா! நீயே பாக்கியசாலி! வழிபட்டும் காணமுடியாத பிராட்டியைக் கண்ணாரக் கண்டு தரிசிக்கும் பாக்கியம் பெற்ற விட்டாயே! நீ பாக்கியவதி என்று சொல்லி மகிழ்ந்தார். அவர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு பாண்டுரங்கனே ஒரு அதிதியாக(விருந்தினனாக) அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டு வந்தார்.

துக்காராம், கமலாபாய் இருவரும் பாண்டுரங்க நாம சங்கீர்த்தனத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டனர். இன்றும் துக்காராமின் பாடல்கள் மக்கள் மனதில் பக்தியை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.  நாற்பத்தைந்து ஆண்டுகளே பூவுலகில் வாழ்ந்த துக்காராமின் முடிவும் அதிசயமானது. பலர் பார்த்துக்கொண்டிருந்தனர், அவர் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, வெளியூருக்குக் கிளம்புவார்கள் நான் போய்விட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் எப்படிச் சொல்லிக்கொண்டு போவார்களோ, அதுபோல் எல்லோரிடமும் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டே வைகுண்டம் கிளம்பினார். எப்படி என்கிறீர்களா ? இறந்தபிறகு அல்ல ! இந்தப் பூத உடலுடன் பாடிக்கொண்டே, அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே ! அவருடைய அனுக்கிரகத்தின் மகிமை எத்தகையது என்பதை, அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். துக்காராம் எப்பொழுதும்போல் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள்போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது.

விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. ஹ்ருதயத்தில் பக்தியானது, ஊற்றாகக் கிளம்பி காட்டாற்று வெள்ளம்போல கட்டுக்குள் அடங்காமல் கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை, அன்பு, அமைதி, திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்றுசேர்ந்து குடிகொண்டிருந்தது. இப்படி ஒருவரைக் காண முடிந்தால், நமக்கும் அத்தகைய நிலையை அடையவேண்டும் என்ற ஆசை அந்த நேரத்திலாவது ஒருவருக்குத் தோன்றத்தானே செய்யும் ! அப்படித்தான் துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி ஸித்திக்க, தாங்கள் அருள்செய்ய வேண்டும் என்று மன்றாடி பிரார்த்திக்கின்றனர். துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தனுப்பினார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம். நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால், இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது, ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருந்தார். அதுதான் அவருடைய வேலை. வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அது அவரிடத்தில் தன் வேலையைக் காண்பித்தது. ஆம் ! அவர் மகா பக்தராகிவிட்டார். சாங்கேவர்மன் என்பது அவருடைய பெயர். குருவின் பெருமைகளைப் பாடிய அவருடைய குருத்யாயி என்ற பாடலை பக்தர்கள் இன்றும் பாடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. மகான்களின் சம்பந்தம் பெற்ற எதுவுமே மகத்தானது என்பதை இதன்மூலம் அறியலாம்.

வியாழன், 19 டிசம்பர், 2019

பண்டரீபுரம் ராமதாஸர்

ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால், பதின்மூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒருமுறை ஜபம் செய்து விட்டால், ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை, இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம், அருகிலுள்ள மகா÷க்ஷத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா, அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும், தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும்.

பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும், பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால், ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு, அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி, பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம், பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன், தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து, ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி, தங்களால் நாளை வரமுடியாது என்றால், வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

ராமதாஸரோ, நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை, திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ, தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர், சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும், அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ, நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு, ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால், அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ, திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான், ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர், ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்தவிநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி, ராமனும் நானே, பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.
ஸ்ரீஹர்ஷர்

நளமகராஜாவின் சரித்திரத்தை வடமொழியில் எழுதியவர் ஸ்ரீஹர்ஷர். இவருடைய தந்தை பெயர் ஸ்ரீஹிரர். ஸ்ரீஹிரரின் பெரும் புலமை அவரை மன்னர்பால் ஈர்த்தது. மன்னர் அவரைத் தனது ஆஸ்தான புலவராக்கிப் பொன்னும் பொருளும் கொடுத்து ஆதரித்தார். ஸ்ரீஹிரரின் மனைவி மாமல்ல தேவி.

ஒரு சமயம் அயல்நாட்டுப் புலவர் ஒருவர் இந்த மன்னனின் அரசவைக்கு வந்தார். அவர் மன்னனிடம், என் புலமையோடு போட்டி போட உம்மிடம் யாராவது புலவர் இருந்தால் வரச்சொல்லும். இல்லையென்றால் ஒரு கோடிப் பொற்காசுகளைக் கொடுத்து, எனது புலமைக்கு ஈடான புலமை உமது நாட்டில் இல்லையென்று எழுதிக்கொடுங்கள் என்றார். மன்னன் சிரித்தான். புலவரே, கர்வம் வேண்டாம். எனது சபையில் உள்ள என் ஆஸ்தான புலவர் ஸ்ரீஹிரர் ஒருவரே போதும், உமது சவாலை எதிர்கொள்ள என்றார். நாளை உங்களுடன் அவர் போட்டியிவார் என்றார் மன்னர். ஸ்ரீஹிரரும் தேச கௌரவத்தைக் காக்க அவருடன் போட்டியிட்டார். ஆனால் அவருடைய புலமை வெளிநாட்டுப் புலவரின் புலமை முன் எடுபடாமல் தோற்றுப் போனார். மன்னன் குனிந்த தலையுடன் ஒரு கோடி பொற்காசுகளையும் கொடுத்து, தன் தேசப்புலமையைத் தாழ்மைப்படுத்தி ஓலையும் எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்றே என்று வருத்தமுற்றார். வெட்கமடைந்த ஸ்ரீஹிரர் வீட்டுக்குப் போய் தன்மானத்துடன் நாட்டின் கௌரவமும் தன்னால் தாழ்ந்ததே என்று வருத்தமடைந்தார். அந்த வருத்தத்தில் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்பதற்கேற்ப தனது வாழ்நாளை முடித்துக் கொண்டார். அவர் மனைவி மாமல்ல தேவி அழுதாள், புரண்டாள். என்ன செய்வது? விதி சதி செய்துவிட்டது. கணவனில்லாத கைம்பெண்ணாக வாழ்வதை விட மானம் பெரிதென உயிர்விடுவதையே அவள் விரும்பினாள். ஆனால், தனது மகனை என்ன செய்வது என்ற கவலையும் கூடவே எழுந்தது. அவளது தந்தை அவளுக்குச் சிறிய வயதில் சிந்தாமணி என்ற மந்திரத்தை உபதேசம் செய்திருந்தார். மகளே! அந்த மந்திரத்தை 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஜெபித்தாலோ அல்லது ஒருநாள் ஒரு இரவு முழுவதும் ஒரு உயிரற்ற சடலத்தின் மீது அமர்ந்து எந்த பயமும் இல்லாமல் உச்சரித்தாலோ சரஸ்வதி மாதா உன் முன் தோன்றுவாள், நீ விரும்பும் வரத்தை அவளிடமிருந்து பெறலாம் என்று கூறியிருந்தார். தனது கணவனால் தேசத்துக்கு ஏற்பட்ட களங்கம் மகன் ஸ்ரீஹர்ஷனால் நீங்க வேண்டுமென விரும்பிய அவள், தனக்குத் தெரிந்த அந்த மந்திரத்தை மகனுக்குச் சொல்லிக் கொடுத்து, தொடர்ந்து பயிற்சியளித்தாள். சில நாட்களில் பயிற்சி முடிந்தது.

ஒருநாள் இரவு தன் மார்பின்மீது அமர்ந்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும்படி மகனை வற்புறுத்தினாள். அப்படி அவன் சொல்லிக்கொண்டிருந்த போது தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு மாண்டு போனாள். இதையறியாத சிறுவன் தாயின் அரவணைப்பில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மந்திரத்தை விடிய விடிய உச்சரித்துக் கொண்டிருந்தான். அவன் முன்பு சரஸ்வதி பேரழகுடன் தோன்றினாள். சிறுவனின் நாக்கில் ஓம் என்று எழுதினாள். அவன் மிகச் சிறந்த கவிஞனாவான் என்று வாக்களித்தாள். பிறகுதான் தாய் இறந்து கிடப்பதை அறிந்தான் சிறுவன், அவளுக்கு மீண்டும் உயிரளிக்க வேண்டினான். சரஸ்வதி அவளை உயிருடன் எழுப்பினாள். இந்த மகானே நள சரிதம் எழுதிய  ஸ்ரீஹர்ஷர். மனிதனாகப் பிறந்தவன் எந்தவிதமான கஷ்ட சூழ்நிலையிலும் மனம் கலங்கக் கூடாது என்று அறிவுறுத்தியவர். நைஷதம் என்ற வடமொழி நூலையும் இவரேதான் எழுதினார். ஒழுக்கம், நேர்மை, நிதானம், கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்வியலை இவர் தனது நூலில் வற்புறுத்தியுள்ளார். இந்த வடமொழி நூல் அதிவீரராம பாண்டியனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
சிரஞ்ஜீவி அஸ்வத்தாமா!

பூதவுடல் அகன்றாலும் புகழுடன் நிரந்தரமாக இருப்பவர்களை சிரஞ்ஜீவீ என்பார்கள் அப்படி, ஏழு சிரஞ்ஜீவிகளில் முதலாமவன் அஸ்வத்தாமா ! 60-ஆம் கல்யாண வைபவத்தில், அஸ்வத்தாமானை வணங்குவது உண்டு. தனது தவத்தால் ஈசனை மகிழ்வித்த துரோணாச்சார்யர், இறையருள் அம்சத்துடன் இணைந்த மகனைப் பெற்றார். அவன் தான் அஸ்வத்தாமா. இவன் பிறந்ததும், உச்சை : ஸ்ரீ அவஸ்ஸீ என்ற தேவலோக குதிரையின் சத்தம் போன்ற ஒலியை எழுப்பியதால், அஸ்வத்தாமா எனப் பெயர் அமைந்ததாம் ! சக்தியின் அளவை, குதிரை வேகத்துக்கு ஒப்பிடுவார்கள், அல்லவா ?! போர்க்களத்தில் குதிரைபோல் செயல்படும் தகுதி கொண்டவன், இவன். வேதம் ஓதும் பரம்பரை, ஆயுதம் ஏந்தாது. அரசாணை காரணமாக அஸ்திரத்தை ஏந்தினான் அஸ்வத்தாமா. ஸ்ரீமந் நாராயணரின் அருளால், நாராயண அஸ்திரத்தை அஸ்வத்தாமாவுக்கு வழங்கினார் துரோணர். அத்துடன், இதனை தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதுவும், தருணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார், அஸ்திர பலத்துடன் அவனது பலமும் சேர்ந்தது. தனுர் வேதம் கற்றதால், அஸ்திரத்தின் முழு அறிவும் அவனிடம் இருந்தது. மந்திரத்தின் மூலம் தேவதைகளின் அம்சம் அஸ்திரத்தில் இணைவதால், எதிரியை அழிப்பதிலான நம்பிக்கை உறுதிப்பட்டுவிடும். மகாபாரத யுத்தத்துக்காகவே பிறந்தவன்போல், போரில் பெரும் பங்காற்றினான் அஸ்வத்தாமா; பீமனின் புதல்வன் கடோத்கஜனையும், அவனுடைய மகன் அற்ஜனபர்வாவையும் அழித்தான்; இதனால், பீமனின் பரம்பரையே நிர்மூலமானது. அதுமட்டுமா ? துருபத ராஜகுமாரன், சத்ரும்ஜயன், பலாநீகன், ஜயாநீகன், ஜயாச்வான், அரசன் சிருதாஹு போன்றவர்களை அழித்து, வெற்றிக்கு உரமூட்டினான், துரியோதனனுக்கு ! குந்திபோஜனின் பத்து மகன்களையும் அழித்து, எதிரிகளுக்கு தனது வீரத்தை உணர்த்தினான். கோழைகள், ஏமாற்று வழியில் தன்னுடைய தந்தையை அழித்த சேதி கேட்டு, கொதித்தெழுந்தான்.

நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்தி, த்ருஷ்டத்யும்னனை அழிக்க முற்பட்டான். இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தினால், போரின் போக்கினை திசைதிருப்பிவிடும் என அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து வீரர்களையும் தேரில் இருந்து இறங்கி, ஆயுதங்களைக் களைந்து, அஸ்திரத்துக்கு அடிபணியும்படி உத்தரவிட்டார். அப்படிச் செய்தால் தான், அஸ்திரத்துக்கு இரையாகாமல் தப்பிக்க முடியும் ! ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தையை பீமன் கேட்கவில்லை. நாராயணாஸ்திரம், அவனைத்  தாக்க முயன்றது. அப்போது, அவனை வலுக்கட்டாயமாக தேரிலிருந்து இறக்கிக் காப்பாற்றினார். கிருஷ்ண பகவான் ! நாராயணாஸ்திரம் வலுவிழந்தும்கூட, பதறவில்லை அஸ்வத்தாமா. முழு நம்பிக்கையுடன் ஆக்னேயாஸ்திரத்தை ஏவினான். நெருப்பை உமிழும் அந்த அஸ்திரத்தால், திக்குமுக்காடிப் போனார்கள் எதிரிகள், பகவான் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் நெருங்கவில்லை அஸ்திரம். அதுமட்டுமின்றி, த்ருஷ்டத்யும்னனையும் அழிக்க இயலவில்லை. இதைக் கண்டு அதிர்ந்தான் அஸ்வத்தாமா. அப்போது வியாசர் தோன்றி, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமந் நாராயணன் ஆவார். அர்ஜுனன், அவரது அம்சத்துடன் விளங்கும் நரன். நர நாராயணரை வெல்வது சுலபமல்ல என அறிவுறுத்தினார். எனவே, நர நாராயணர்களை மனதில் வேண்டி, படைகளுடன் வெளியேறினான் அஸ்வத்தாமா, பிறகு, கர்ணனின் தலைமையில் போரில் இணைந்தவன், த்ருஷ்டத்யும்னனை அழிக்காமல் அஸ்திரத்தைக் களையமாட்டேன் என சூளுரைத்தான். 18-ஆம் நாள் யுத்தம். பீமனும் துரியோதனனும் கதாயுதத்தால் சண்டையிட்டனர். இதில் அடிபட்டு தரையில் வீழ்ந்தான் துரியோதனன். அவனை அங்கேயே விட்டுவிட்டு, பாண்டவர்கள் வெளியேறினர். வேதனையுடன் இருந்த துரியோதனனுக்கு அருகில் ஸஞ்சயன் வந்தார். அஸ்வத்தாமா, கிருபாசார்யர், கிருதவர்மா ஆகியோரை அழைத்தான் துரியோதனன்; நடந்தவற்றை விளக்கினான். அறத்துக்குப் புறம்பான வழியில் துரியோதனனை பீமன் வீழ்த்தியதை அறிந்து, கோபமுற்றான்; பாண்டவர்களைப் கூண்டோடு அழிப்பேன் எனக் கொக்கரித்தான் அஸ்வத்தாமா. இதையடுத்து, கௌரவப் படையின் சேனாதிபதியானான்.

பதவியேற்ற அன்றைய இரவு, அஸ்வத்தாமா தூங்கவே இல்லை. கொடுத்த வாக்குறுதியால் தூக்கம் வரவில்லை. தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றான். உடன் இருந்த இருவரும் உறங்கிவிட, இவன் மட்டும் மரத்தடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடுமென ஆந்தையின் ஒலி கேட்டு, மரக்கிளையை கவனித்தான். ஆந்தை ஒன்று, கூட்டினில் உறங்கிக்கொண்டிருந்த காக்கைக் குஞ்சுகளை அழித்துவிட்டு வெளியேறியது. சட்டென்று அவனுக்குள், பாண்டவர்களின் வாரிசுகளையும் அப்படித்தான் அழிக்கவேண்டும் எனச் சிந்தித்தான். இது தெய்வம் காட்டிய வழி எனச் சிலிர்த்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, தனது திட்டத்தை எடுத்துரைத்தான். ஆனால் கிருபாசார்யர், தவறான வழியில் பழிவாங்குவது தவறு; கௌரவ அழிவுக்குக் காரணமாகிவிடும். வேண்டாம். எதையும் போர்க்களத்தில் சந்திப்போம்; சாதிப்போம் என்றார். அவற்றைக் கேட்கும் மனநிலையில் அஸ்வத்தாமா இல்லை. வேறுவழியின்றி, மூவரும் அன்றிரவே பாண்டவர்களின் கூடாரத்தை நெருங்கினர். இருவரையும் காவலுக்கு வைத்துவிட்டு, தனியே உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமா. அங்கே இருந்த காவலன் ஒருவன் தடுத்து நிறுத்த, அஸ்வத்தாமாவிடம் இருந்த அஸ்திரங்கள் யாவும் மறைந்தன. அந்தக் காவலாளி, ஈசனே என அடையாளம் கண்டு கொண்டான் அஸ்வத்தாமா ! அவரைப் பணிந்து வணங்கி, எனது செயலில் வெற்றி பெற ஒரு வாள் தந்து உதவுங்கள் என வேண்டினான். அதன்படி உடைவாள் ஒன்றைத் தந்து மறைந்தார் ஈசன். அந்த வாளுடன் உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமா. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த த்ருஷ்டத்யும்னன், உத்தமோஜா, யுதாமன்யு, சிகண்டி மற்று திரௌபதியின் ஐந்து புதல்வர்கள் ஆகியோரைக் கண்டதுண்டமாக வெட்டி வீழ்த்தினான். அதையடுத்து, துரியோதனனிடம் சென்று, வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகச் சொன்னான். அந்த நிம்மதியுடன் செத்துப் போனான் துரியோதனன். மகன்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. அஸ்வத்தாமாவின் சிரசைக் கொய்து உன்னிடம் தருகிறேன் என சூளுரைத்தான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட ஆயத்தமானான்.

அஸ்வத்தாமாவுக்கு பிரம்மாஸ்திரத்தை ஏவத் தெரியும். ஆனால் அதனைத் திரும்பப் பெறத் தெரியாது, நேருக்குநேர் போர் புரியும் வேளையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும். அர்ஜுனனை வீழ்த்தவும் வேறு வழியின்றி பிரம்மாஸ்திரத்தை ஏவினான் அஸ்வத்தாமா. அதேவேளையில், அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அப்போது வியாசரும் நாரதரும் வந்து, உலகை அழிவிலிருந்து காப்பாற்ற, இருவரிடமும் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெறும்படி வேண்டினர். அதற்கு இணங்க, அர்ஜுனன் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றான். ஆனால், அஸ்வத்தாமாவால் அஸ்திரத்தைத் திரும்பப் பெற இயலவில்லை. முழு அழிவிலிருந்து திசை திருப்பும் வகையில், உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை நோக்கித் திருப்பினான். அப்போது, பகவான் கிருஷ்ணர், அந்த சிசுவைக் காத்தார்; பரீக்ஷித்து உதயமாவதற்கு உதவினார். பிறகு அஸ்வத்தாமாவைச் சிறைப்பிடித்து, திரௌபதியிடம் நிறுத்தினான் அர்ஜுனன். இரக்க சுபாவம் கொண்ட திரௌபதி, அவனை மன்னிக்கும்படி கூறினாள். அவனது சிரசில் உள்ள ரத்தினத்தை எடுத்து,திரௌபதியிடம் வழங்கினான் அர்ஜுனன். பின்னர், பாண்டவர்களுடனான பகையை மறந்தான் அஸ்வத்தாமா என்கிறது புராணம்! அரசனாகப் பிறக்கவில்லை; அரசனாகவும் ஆசைப்படவில்லை. காலத்தின் தூண்டுதலால் களம் இறங்கினான். அரசாணையை மதித்தான். எடுத்த காரியத்தை முடிப்பதில் வெற்றி கண்டான். பாண்டவர்களின் தலைமுறையை வேரோடு அழித்தான். உத்தரையின் கர்ப்பத்தை அழிக்க முனைந்தான். அதில் அவனுக்குத் தோல்வி இல்லை. பகவான் கிருஷ்ணரின் தலையீட்டால், இறந்த குழந்தை உயிர் பெற்றது. மரணப் படுக்கையில் இருந்த துரியோதனனுக்கு பாண்டவர்களின் இந்த அழிவு சொல்லப்பட.... நிம்மதியுடன் இறந்தான் துரியோதனன். ஆக, இறக்கும் தருணத்தில் அவனுக்கு நிம்மதியைத் தந்தான் அஸ்வத்தாமா. போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்ற ஸ்ரீகிருஷ்ணரை, திரைமறைவில் அவர்களுக்கு உதவி செய்யத் தூண்டியது, அஸ்வத்தாமாவின் வீரம். தனது அழிவை பொருட்படுத்தாமல், திரும்பப் பெற முடியாது என்று தெரிந்தும் அஸ்திரத்தைத் திசை திருப்பிவிட்ட அவனது நெஞ்சுரம், வாக்குறுதியைச் செயல்படுத்துவதில் இருந்த உறுதி ஆகிய இரண்டுமே வெளிப்பட்டது !

தகாத வழியில் தந்தையைக் கொன்றவர்களை, அதே வழியில் அழிப்பதில் தவறொன்றுமில்லை. உள்நோக்குடன் செயல்படுபவனை அதே வழியில் எதிர்கொள்ளலாம் என்கிறார் சாணக்யன் (சடே சாட்யம் ஸமாசரேத்). தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் மோதலை ஏற்படுத்தி, கடைசியில் தர்மம் வெல்லும் எனும் தத்துவத்தை உணர்த்த மகாபாரதத்தைப் பயன்படுத்தினார் கிருஷ்ணர்.  பாண்டவர்களைக்கொண்டு, கௌரவர்களை அழிக்க முடிந்தது. ஆனால், பாண்டவர்களை கிருஷ்ண பரமாத்மா அழிப்பது பொருந்தாது. அன்பைச் செலுத்திய பாண்டவர்களை அன்பு செலுத்தியவன் அழிப்பது முரணல்லவா ?! விஷச் செடியாக இருந்தாலும், அதை வளர்த்தவன் அழிக்கத் தயங்குவான் (விஷ விரு÷ஷாபிஸம்வர்...). இரு சாராரும் அழிவைச் சந்திக்க வேண்டும் என்பதே கிருஷ்ணரின் எண்ணம். அதை நிறைவேற்ற கிருஷ்ணருக்கு மறைமுகமாக உதவினான் அஸ்வத்தாமா. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில், அவன் துயரத்தைச் சந்தித்தது அவனது பெருந்தன்மை, வீரத்தின் மறுஉருவமும் அவனே ! அவனது மனஉறுதியை எவராலும் குலைக்க முடியவில்லை. செயல்படுத்துவதில் சுயமாக இறுதி முடிவெடுக்கு திறன்ம் அவனிடம் உண்டு. அதர்மத்தின் மூலம் தந்தையையும் துரியோதனனையும் கொன்றனர். இது, ஆறாத காயத்தை உண்டு பண்ணியது; இலக்கினை அடைவதற்கான வழியை ஆராய முற்படவில்லை அவன். மாற்று வழியில் சென்றால், இலக்கை அடையமுடியாது. அஸ்வத்தாமாவின் சரித்திரம், நாம் சிந்தித்துச் செயல்படுவதற்கான திறவுகோல்; வழிகாட்டி  ! மனோவலிமையும் செயல்படுவதில் தீவிரமும் கொண்டு தன்மானத்துடன் வாழ வேண்டும்; உலக நன்மைக்கு பங்கம் வராதபடி செயலாற்ற வேண்டும். அஸ்வத்தாமா நிலைத்த புகழுடன் இருப்பதற்குக் காரணங்கள், இவைதான் !
சாது சிதம்பர சுவாமிகள்!

சாது சிதம்பர சுவாமிகள். இவரது பெற்றோர் சண்முக சுவாமிகள் - உலகம்மை. இவர்  20.10.1922 வெள்ளிக்கிழமை, தீபாவளி தினத்தன்று சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தார்.  இவரது ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியிலுள்ள  வல்ல நாடாகும்.  இவர்தான்  பின்னாளில் அனைவராலும் போற்றப்பட்ட சாது சிதம்பர சுவாமிகள் ! இவர் வள்ளலார் வழி வந்தவர் என்பதை அருட்பெருஞ்ஜோதி அணிந்துரை பாடலில் காணலாம்.

அருட்பெரும் ஜோதி அருட்பிரகாசர்
அகத்தும் புறத்தும் அணிந்தெழுந்து
பொருட்பெரும் உலகில் புதுயுகம் தோன்றப்
போந்த நாள் தருமச் சாலை நாளாம்
மருட்டவிர்த் தன்பர் மகிழ்வினில் வாழ
வல்ல நாட்டடிகள் வழி திறந்தார்
அருட் சுடர் உள்ளே அகவற் பொருளை
அருட்குரு வாய்க்கண்டு போற்றுதுமே

என்பதே அப்பாடல். வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வகுத்தருளிய பாதையிலேயே தன் ஆன்மிகப் பணியைச் செய்துவந்தார். கருணை, அடக்கம் போன்ற உயர் பண்புகளின் உறைவிடமாக - மிகவும் எளிமையாக - மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்தவர் சாது சிதம்பர சுவாமிகள். இவர் தினமும் தம் தாய் - தந்தையரை வணங்கி விட்டு - அதுவும் 108 முறை தாயாருக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கிய பின்புதான் தனது அன்றாட வாழ்க்கை முறையைத் தொடங்குவார். அவரது பெற்றோர்கள் லட்சுமி என்னும் உத்தமியை அவருக்குத் திருமணம் செய்வித்தனர். இல்லற இன்பத்தில் நாட்டமில்லாத சுவாமிகள் பேரின்ப நாட்டமுடையவராகவே வாழ்ந்து வந்தார். வள்ளலார் வழங்கிய சன்மார்க்க நெறியை பாமர மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வாழ்ந்து காட்டினார். மனிதனுக்கு அருளும் ஆறுதலும் கிடைக்க ஒரே வழி மனிதன் மனித குலத்துக்கு தொண்டு செய்வது ஒன்றே. நாமெல்லாம் தொண்டர் குலம்; தொண்டு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு விநாடியைக்கூட வீணாக்காமல் தொண்டு செய்து கொண்டேயிருந்தார்.

திருக்கோயில் குடமுழுக்கு, திருமணம், மஞ்சள் நன்னீராட்டு, நீத்தார் நினைவு, புதுமனை புகுதல் போன்ற அனைத்து விழாக்களையும் சன்மார்க்க வழியில் நடத்தி வைத்தார். கோபூஜை. கணபதி ஓமம், 108, 1008 தீபஜோதி வழிபாட்டு முறையில் விநாயகர் அகவல், அருட்பெருஞ்ஜோதி அகவல், சிவபுராணம், தேவார - திருவாசக - திவ்யபிரபந்த பக்திப் பாடல்களைப் பாடச் செய்து, சமபந்தி போஜனம் நடத்தி விழாக்களை நிறைவு பெறச் செய்வார். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல், தீப தரிசனமே பாவ விமோசனம் என்னும் அருள்வாக்கை தான் செல்லும் இடங்களில் எல்லாம் செயற்படுத்திக் காட்டினார். எண்ணற்ற சித்துகள் செய்தவர் சிதம்பர சுவாமிகள். தீர்க்க முடியாத வியாதிகளைத் தனது ஆத்மசக்தியாலும் மூலிகை மருந்துகளாலும் தீர்த்து வைத்துள்ளார். சுவாமிகள் பாதம்பட்ட வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சுவாமிகளின் அருள் பெற்று, தம் கர்மவினை நீங்கி ஆத்மானந்தமும் அமைதியும் அடைந்தனர். வல்லநாட்டு சுவாமிகள் பல இடங்களில் 1008 தீபங்கள், லட்ச தீபங்கள் ஏற்றி, அருட்பெருஞ் ஜோதி அகவலைப் பாராயணம் செய்து, அன்னதானம் சிறப்பாக நடத்தி உலகில் அமைதியை ஏற்படுத்த பணிபுரிந்துள்ளார். இறந்தவர்களை எரிப்பது தவறு; சமாதி செய்வதே சாலச் சிறந்தது என்பது சுவாமிகளின் கொள்கையாகும். சமாதி நிலை கூடிய முன்னோர்களுக்கு, அவர்களின் குரு பூஜை நாளன்று மகேசுவர பூஜை நடத்தி நன்மைகள் பெற வழிகாட்டினார். தம்மை நாடி வந்த மங்கையர்க்கரசி அம்மையாருக்கு காசியில் முக்தி கொடுத்தார்.

குறுக்குத்துறை அமாவாசை பரதேசி என்பவருக்கு, ஒரு அமாவாசை நாளன்று முக்தி நிலைக்கு உதவினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்ற அறவோர்க்கும் சமாதி நிலை அமைத்து உதவினார். ஞானி மாதவானந்தா, ஐந்நூறு வயதுக்குமேல் வாழ்ந்த யோகி சடைநஞ்சப்ப சுவாமிகள் போன்ற மகான்களுக்கு நிர்விகல்ப சமாதி அடைய துணை புரிந்து, மண்டல பூஜையையும் இயற்றி அருளினார். பொதிகை மலையில் வாழ்ந்த தெய்வீக வெள்ளை யானையோடும், சதுரகிரி மலையில் வாழ்ந்த ஒற்றைக் கொம்பன் என்ற தெய்வீக யானையோடும் சுவாமிகளுக்கு நட்பு இருந்தது. வள்ளலார் தண்ணீர்விட்டு விளக்கெரித்த தன்மைபோல், வல்லநாட்டு சுவாமிகளும் தீபஜோதி வழிபாட்டில் அவசியம் நேரும் பொழுது தண்ணீர் விட்டு விளக்கெரித்துள்ளார். பிறர் தம் காலில் விழுந்து வணங்குவதை சுவாமிகள் ஒப்புக்கொள்வதில்லை. அறியாமல் விழுந்தால், தாமும் அவரடியில் வீழ்ந்து வணங்குவது சுவாமியின் வழக்கம். நவகிரக நூதன ஸ்தாபனம் இவர் செய்த புதுமையாகும். நடுவில் தீபத்தண்டும், அதைச் சுற்றி நவகிரக மூர்த்திகள் வெளிப்பார்வையாகவும் அமைத்தலே அந்த முறை. இந்த மூர்த்திகள் யாவும் அனுக்கிரக மூர்த்திகளாகச் காட்சியளிக்கும். இத்தகைய நூதன நவகிரகங்களை வல்லநாடு, வீரசிகாமணி, ஐவர் மலை, பூண்டி போன்ற திருத்தல கோயில்களில் இன்றும் காணலாம். இத்தகைய மகிமை வாய்ந்த வல்லநாட்டுச் சுவாமிகள் 1981-ஆம் ஆண்டு, வைகாசி பூசத்தில் அருட்ஜோதியில் கலந்து அருள்பாலித்து வருகிறார்.

குரு பூஜை: மார்கழி மாத அவிட்டத்தில் சுவாமியின் தந்தைக்கும், ஆனி மாத மகத்தில் தாயாருக்கும், வைகாசி பூசம், மாதப் பூசம் போன்ற நாட்களில் வல்லநாட்டு சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் (லட்சம் பேருக்கு) நடைபெற்று வருகின்றது. பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும் என்பது வல்லநாட்டாரின் அருள்மொழியாகும். ஏழைகளின் பசியாற்றினால் இறைவன் அருள் தானாகக் கிட்டும் என்பது அவரின் வேதவாக்கு. வல்லநாட்டு சுவாமிகளின் தாய் - தந்தை சமாதி, வல்லநாட்டு சுவாமிகளின் ஜீவசமாதி, சுவாமிகள் அன்புடன் பழகி வளர்த்த மணிகண்டன் என்ற யானை சமாதி அனைத்தும் வல்லநாட்டு சித்தர் பீடத்தில் உள்ளன. அணையா விளக்கு எப்பொழுதும் அங்கு எரிந்து கொண்டிருக்கும். இன்றும் தினசரி வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. எண்ணற்ற பக்தர்கள் சுவாமிகளின் சமாதிக்குச் சென்று வழிபட்டு, தம் கர்மவினை நீங்கி செல்வச் செழிப்புடன் பிணியில்லாத வாழ்வு வாழ்கின்றனர்.