ஞாயிறு, 15 டிசம்பர், 2019

சுதீட்சணர்

சுதீட்சணர் அகத்தியரின் சீடர். அகத்தியர் தந்த சிலையை பாதுகாக்க தவறியதால் அவரிடம் சாபம் பெற்றவர். ஐந்து வயதில் பெற்ற சாபம் ஐம்பது ஆண்டுகள் கடந்துதான் தீர்ந்தது. சுதீட்சணர் என்றால் கூர்மையான புத்தி உடையவர் என பொருள். சிறுவயதில் பெற்றோரை இழந்துவிட்ட சுதீட்சணர், அகத்தியரின் சீடரானார். அகத்தியர் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சிறு குழந்தை என்பதால் மிகவும் குறும்புத்தனம் செய்வான் சுதீட்சணன். ஆனால் அவனை நல்லமுறையில் வளர்ப்பதற்காக இளம் வயதிலேயே பூஜை, புனஸ்காரங்கள் பற்றி கற்றுக்கொடுத்தார் அகத்தியர். ஒருமுறை அவர் தலயாத்திரை கிளம்பினார். அப்போது தன்னிடமிருந்த சாளக்கிராமம் என்ற மூலிகைகளால் செய்யப்பட்ட நாராயணனன் சிலை ஒன்றை சுதீட்சணனிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், அதற்கு தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்யும்படியும் கூறினார். சுதீட்சணனும் அதை வாங்கிக்கொண்டான். ஆனால் அகத்தியர் சொன்னதை விளையாட்டுப்பிள்ளையான அவன் கடைபிடிக்க வில்லை. ஏனோதானோவென சிலையை கண்ட இடத்தில் வைத்துவிடுவான். அகத்தியர் கிளம்பும்போது அந்த சிலைக்கு நதியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து அபிஷேகம் செய்யும்படி சொல்லியிருந்தார். ஆனால் சுதீட்சணன் அதைக் கேளாமல் நதிக்கே சிலையை எடுத்துச் சென்று அங்கு வைத்து அபிஷேகம் செய்தான். நதியிலிருந்து குடத்தில் தண்ணீர் எடத்துவர சோம்பல்பட்டு இப்படி செய்து வந்தான். அந்தச்சிலையை ஒரு பெட்டியில் வைத்து நதிக்கரைக்கு எடுத்துச்சென்று பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தான்.

நதிக்கரையில் ஒரு நாவல்மரம் இருந்தது. மிகப்பெரிய பழங்கள் பழுத்துக்கிடந்தன. ரிஷிகுமாரர்கள் அந்த பழங்களை பறிப்பதற்காக நதிக்கரைக்கு கூட்டமாக வருவார்கள். சிறுவனான சுதீட்சணனுக்கும் நாவல்பழங்களை தின்பதில் விருப்பம் அதிகம். அவனும் ரிஷிகுமாரர்களுடன் சேர்ந்து கல்லெறிந்து பழங்களை பறிப்பான் . ஒருநாள் இவ்வாறு பழம் பறித்துக்கொண்டிருந்தபோது மரத்தின் உச்சியில் மாம்பழம் அளவுக்கு பெரிதான நாவல்பழம் ஒன்று தொங்கியது. அதை எப்படியாவது பறித்துவிடவேண்டும் என்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. சுற்றும்முற்றும் பெரிய கல் ஏதாவது கிடக்கிறது எனதேடிப்பார்த்தான். கல் கிடைக்கவில்லை. எனவே தன்கையில் இருந்த சாளக்கிராம சிலையை மரத்தின்மீது வீசினான். பழம் கீழே விழுந்தது. ஆனால் சிலை மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டது. சுதீட்சணனுக்கு பயம்தொற்றிக் கொண்டது. அகத்தியர் வந்தால் என்ன பதில் சொல்வது ? என தெரியாமல் திண்டாடினான். மரத்தின் மீது ஏறி சிலையை எடுக்க ரிஷிகுமாரர்கள் பயந்தனர். அந்த மரத்திலிருந்த பொந்தில் ஒரு பாம்பு வசித்தது. மரத்தில் ஏறினால் பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் யாரும் ஏற மறுத்துவிட்டனர். சுதீட்சணன் கவலையுடன் ஆசிரமத்திற்கு திரும்பினான். அவன் எதிர்பாராத விதமாக அகத்தியர் அன்று வந்து சேர்ந்து விட்டார். நாராயணன் சிலைக்கு தினம்தோறும் அபிஷேகம் செய்தாயா ? அதை எங்கே வைத்திருக்கிறாய் ? உடனே எடுத்துவா, பூஜை செய்ய வேண்டும், என்றார். சுதீட்சணன் விழித்தான். ஒரு சிலையை எடுத்துவந்தான். அது முன்னம் கொடுத்த சிலைபோல இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.தொட்டுப்பார்த்தபோது நசுங்கியது. தான் பறித்த நாவல் பழத்தில் நாராயணன் போல் சித்திரம் எழுதி, அதை அகத்தியரிடம் கொடுத்துவிட்டான். அகத்தியர் அதை கண்டுபிடித்து விட்டார். அதன்பிறகு மரத்தில் சிலை சிக்கிக்கொண்டது பற்றி சுதீட்சணன் பயத்துடன் சொன்னான். அகத்தியருக்கு கோபம் வந்த விட்டது. உண்மையைச் சொல்லாமல் தன்னை ஏமாற்றிய சீடனுக்கு, சிறுவன் என்றும் பாராமல் சாபம் கொடுத்து விட்டார். எப்போது நீ நாராயணன் சிலையுடன் வருகிறாயோ, அப்போது இங்கு வந்தால் போதும் அதுவரை உனக்கு இடமில்லை. என சொல்லி விரட்டி விட்டார்.

சுதீட்சணன் மீண்டும் மரம் இருக்கும் இடத்திற்கு சென்றான். மரத்தில் ஏறினான். ஆனால் பாம்பு அவனை விரட்டியது. பயந்துபோன சுதீட்சணன் அருகிலிருந்த காட்டுக்குள் ஓடி விட்டான். அவனுக்கு 50 வயதை எட்டிவிட்டது. அகத்தியரின் சீடன் என்பதால் காட்டிலிருந்த மற்ற முனிவர்கள் சுதீட்சணனுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். காட்டில் காலத்தை வீணாக கழிக்காமல் தன் குருவின் விருப்பப்படி மீண்டும் நாராயணன் சிலை கிடைக்கவேண்டும் என, அந்த நாராயணனை நினைத்தே தவம் இருந்தான். இதனால் சுதீட்சணன் சுதீட்சண முனிவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். அவரும் சாளக்கிராமத்தில் பல வணங்கி வந்தார். அந்த சிலைகளை சில குரங்குகள் எடுத்துச் சென்று அருகிலுள்ள ஏரியில் வீசி வந்தன. சுதீட்சணரும் மீண்டும் மீண்டும் சிலைகள் செய்து வணங்கிவந்தார். அகத்தியருக்கு பிடித்தமான சிலையை தொலைத்துவிட்டதால் தான் குரங்குகள் இவ்வாறு தனக்கு துன்பம் செய்வதாக சுதீட்சணர் நினைத்தார். மனம் தளராமல் பல சிலைகளை செய்து நாராயணனை வணங்கிவந்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் குரங்குகள் அவற்றை ஏரியில் வீசிவந்தன. இதைக்கண்டு மனம் பொறுக்காத சுதீட்சணர், நளன், நீலன் என்ற அந்த குரங்குகளிடம், நீங்கள் இனிமேல் எந்த பொருளை தண்ணீரில் வீசினாலும் அவை மிதக்கும் என சாபம் கொடுத்தார். பிற்காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு சென்றபோது அனுமானுடன் சென்ற நளன், நீலன் என்ற இந்த குரங்குகள் தான் கடலில் பாறைகளை தூக்கி வீசி பாலம் அமைத்தன. அந்த பாறைகள் தண்ணீருக்குள் மூழ்காமல் கடலில் மிதந்ததால் பாலம் அமைப்பது எளிதாக அருந்தது. இதனால் சுதீட்சணர் அளித்த சாபம்கூட ராமனுக்கு உதவியது. இதைக்கேள்விப்பட்ட ராமன். சுதீட்சணர் இருக்கும் இடத்திற்கு வந்து, இலங்கைக்கு செல்ல உங்களது சாபம்தான் எனக்கு மிகவும் பயன்பட்டது, எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். நாராயணனே ராம அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தவர் என்பதை உணர்ந்த சுதீட்சணர், அவரை அழைத்துக்கொண்டு தனது குருவான அகத்தியரிடம் சென்றார். ராமனே தன் ஆசிரமத்திற்கு வந்ததும் மகிழ்ச்சியடைந்த அகத்தியர் அவரை வணங்கினார். சுதீட்சணர் அகத்தியரிடம், தாங்கள் நாராயணன் சிலை இல்லாமல் உங்களை பார்க்கக்கூடாது என சொன்னீர்கள். ஆனால் நான் நாராயணனையே இங்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன். உங்கள் சாபம் இன்றோடு தீர்ந்தது. என்னை மீண்டும் உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் என்னை வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் நாராயண தரிசனம் எனக்கும் கிடைத்திருக்காது. என்மீது கொண்ட உண்மையான பாசத்தால், ராம தரிசனம் கிடைக்க எனக்கு தாங்கள் உதவியதை இப்போது புரிந்து கொள்கிறேன். உங்கள் சீடனாக இருக்க இனியாவது அனுமதிப்பீர்களா என கேட்டார். அகத்தியர் அவரை மகிழ்வோடு அணைத்து மீண்டும் தன் சீடனாக்கி கொண்டார்.
ஓத சுவாமிகள்

மலைகளுக்கும் மகான்களுக்கும் பெயர் பெற்றது நம் பாரத தேசம். இன்றைக்குத் திகிலைக் கிளப்பி, மனிதர்கள் நடமாடுவதற்கு சவாலாக இருக்கும் பல மலைகளில் சித்த புருஷர்கள் ஒரு காலத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். இவ்வாறு காடு மலைகளியே சுற்றித்திரிந்த சித்தபுருஷர்கள் நேர்மை, நியாயம், தர்மம் போன்றவற்றில் இருந்து தடம் மாறிப் போன மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு ஆசி புரிவதற்கென்றே மலைகளை விட்டு இறங்கி வந்தார்கள். பதிணெண் சித்தர்களில் ஒருவரான போகரின் வழியைப் பின்பற்றி எண்ணற்ற சித்தர்கள் அவதரித்தனர். இவர்களில் ஓத சுவாமிகளும் ஒருவர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்பக்கம் இவர் ஜீவசமாதி அடைந்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காத்து அருள்புரிந்து வருகிறார். ஸ்ரீமத் ஓத சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இவரை சுப்பையா சுவாமிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவரது திரு அவதாரமே மிகவும் சிலிர்க்க வைக்கும் ஒன்று. கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவர் ஓத சுவாமிகள். காசியில் வாழும் விஸ்வநாதரின் ஆசியோடும், அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான் ஓதசுவாமிகள். பழநியில் இருந்து சுமார் 11 கி.மீ., தொலைவில் உள்ள பாலசமுத்திரம் என்கிற கிராமத்தில் வாழ்ந்து வந்தது சுவாமிகளின் குடும்பம்.  ஓத சுவாமிகளின் தந்தையாரான பரமேஸ்வர ஐயர், இறை பக்தி மிக்கவர். ஒருமுறை வடமாநிலங்களுக்கு ÷க்ஷத்திராடனம் சென்றார்.

வாகன வசதி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் சுமார் ஏழு வருடங்கள் நீடித்தது இந்த யாத்திரை. அதாவது வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழு வருடங்களுக்குப் பிறகு தான் மீண்டும் வீடு திரும்பினார் பரமேஸ்வர ஐயர். அந்தக் காலத்தில் யாத்திரை என்றால் இப்படித்தான் இருக்கும்.யாத்திரை நிகழ்ந்த ஏழு வருடமும் கடுமையான விரதம். காய்ந்த சருகு மட்டுமே உணவு. எங்காவது நீர்நிலைகளில் ஓடுகின்ற தண்ணீரை மட்டுமே அருந்துவார். இப்படிக் கஷ்டப்பட்டுச் சென்று காசி விஸ்வநாதருக்கு கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்து ஆனந்தப்பட்டார் பரமேஸ்வர ஐயர். அந்த ஜோதிர்லிங்க சொரூபனின் சன்னதியிலேயே ஆசிர்வாதமும் கிடைத்தது. பரமேஸ்வரா... இந்த காசிவிஸ்வநாதனே உனக்கு மகனாகப் பிறக்க போகிறான் பார், என்று அங்கே ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வர ஐயர். அதன் பின் பூரி, திருப்பதி, ராமேஸ்வரம் முதலான ÷க்ஷத்திரங்களைத் தரிசனம் செய்து பாலசமுத்திரம் திரும்பினார் பரமேஸ்வரர். மகான் வழங்கிய ஆசி மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது. தன் மனைவியிடம் அவ்வப்போது இதைச் சொல்லி பூரிப்பார். உத்தம மகன் பிறக்கப் போகும் நாளை அந்தப் பெற்றோர் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலங்கள் ஓடின. காசி விஸ்வநாதரின் அருளால் பரமேஸ்வரரின் துணைவியார் கருவுற்றார். பிரசவ காலமும் நெருங்கியது. பிரசவ வலி ரொம்பவும் வாட்டியது. எனவே உள்ளூரில் இருந்த மருத்துவச்சியின் துணையோடு வீட்டின் தனியான ஓர் அறையில் கிடத்தப்பட்டார் பரமேஸ்வரரின் துணைவியார். வீட்டிற்கு வெளியே தவிப்புடன் காணப்பட்டார் பரமேஸ்வரர். என்னதான் இறைவனின் ஆசியோடு மகன் பிறக்கப் போவதாக திருவாக்கு மலர்ந்திருந்தாலும், உள்ளே தன் மனைவி படும் அவஸ்தையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு சில நிமிடங்கள் உருண்டோடின. உள்ளே எந்தவிதமான அலறல் சத்தமும் இல்லை. மருத்துவச்சியின் ஆறுதல் குரலும் கேட்கவில்லை. மாறாக வேத ஒலி கன கம்பீரமாக அட்சர சுத்தமாகக் கேட்டது. பிரசவ அறைக்குள் இருந்து வேத ஒலி எப்படி? வெளியே தவிப்புடன் நின்றிருந்த பரமேஸ்வர ஐயரும், அவரது உறவினர்களும் பிரமித்தனர். மருத்துவச்சி வந்து தகவல் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் வெளியே காத்திருந்த அனைவருக்கும் பிரமிப்பு தாங்க முடியவில்லை. எனவே, கதவை வேகமாகத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சியில் நிலை குலைந்து போனார்கள். பேசுவதற்கு வார்த்தைகள் எதுவும் எழவில்லை. உள்ளே ரோஜாப்பூக்களுக்கு நடுவில் ஒரு ஆண் குழந்தை புன்னகை ததும்பும் முகத்தோடு காணப்பட்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகளின் அருளோடு அக்குழந்தை பிறந்தது. இவ்வாறு பிறக்கும் போதே பல அற்புதங்களை நிகழ்த்தினார் ஓத சுவாமிகள். குழந்தைக்கு முருகப்பெருமானின் திருநாமமான சுப்ரமண்யன் என்பதையே சூட்டி விட்டார் பரமேஸ்வர ஐயர். பின்னாளில் இவர் சுப்பையா என எல்லோராலும் அழைக்கப்பட்டார். சுவாமிகளுடைய ஐந்தாவது வயதில் அவருக்கு உபநயனம் நடந்தது. சிறு வயதில் இருந்தே இறை இன்பத்தில் நாட்டம் அதிகம் கொண்டவராகத் திகழ்ந்தார் சுவாமிகள். ஓம் என்றும் ஆதிசங்கரா என்றும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தந்தையார் மறைந்து விட்டார். அதன் பின் காடு, மலை என்று சுற்றித் திரிய ஆரம்பித்தார். ஒருமுறை தன் தாயாரிடம் நீ என்னை எப்போடு கூப்பிடுகிறாயோ அப்போது நான் வருகிறேன். எனக்கென்று சில பணிகள் இருக்கின்றன என்று சொல்லி, அன்னையின் ஆசியுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

தனது எட்டு வயதிலேயே அஷ்டமா சித்திகளும் சுவாமிகளுக்கு கைவரப் பெற்றதாகச் சொல்வர். தெருவில் குடிநீர் எடுத்துக்கொண்டு போகும் ஒரு வண்டியில் உள்ள ஒட்டுமொத்த நீரையும் ஒரே மடக்கில் விறுவிறுவெனக் குடித்து விடுவார். பின்பு அதை அப்படியே உமிழ்ந்து விடுவார். இவ்வாறு எண்ணற்ற லீலைகளை சிறு வயதிலேயே நிகழ்த்திக் காண்பித்தார் சுவாமிகள். பகவான் ரமண மகரிஷியைத் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்த பெருமை ஓத சுவாமிகளையே சாரும். ஸ்ரீரமணர் திருச்சுழியில் பிறந்தவர். தந்தையின் பணி மாறுதல் காரணமாக அவரது குடும்பம், திண்டுக்கல்லுக்கு இடம் பெயர்ந்தது. அபிராமி அம்மன் கோயில் அருகே ரமணரின் குடும்பம் வசித்து வந்தது. அப்போது நகராட்சி பள்ளியில் சேர்க்கப்பட்ட ரமணர் துவக்கத்தில் ஒழுங்காகத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால், ஒருமுறை அவதூராகத் தெருக்களில் வலம் வரும் ஓதசுவாமிகளைப் பார்த்த மாத்திரத்தில் அவர் செல்லும் இடமெல்லாம் ரமணரும் செல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சிறுவனான ரமணரை அடையாளம் கண்டுகொண்ட ஓதசுவாமிகள், அவரை அருகே அழைத்து திருவண்ணாமலைக்குச் செல்... அங்கே உனக்கான பணி காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலையார் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறார் என்றார். அதன்பின் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு புறப்பட்டார் ரமணர். ஒரு சமயம் சிருங்கேரி மடத்தின் முப்பத்திரண்டாவது பீடாதிபதியான ஜகத்குரு நரசிம்ம பாரதி சுவாமிகள் திண்டுக்கலுக்கு விஜயம் செய்திருந்தார். அபிராமி அம்மன் ஆலயத்தின் எதிரே இருக்கும் சாலையில் சிருங்கேரி மடம் இருந்தது. அங்கே முகாமிட்டிருந்தார் ஆச்சார்யர். சிருங்கேரி மடத்தின் மீது அபிமானம் கொண்ட எண்ணற்ற பக்தர்கள் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வந்து திண்டுக்கல் மடத்தில் குவிந்திருந்தார்கள். பக்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்பதற்றகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு தெருவழியாக செல்லும் போது அங்குள்ள சாக்கடை நீரில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார் ஓத சுவாமிகள். சிருங்கேரி ஆச்சாரியாரின் பல்லக்கை பார்த்து பெருமூச்சுவிட்டு ஹும்... பல்லக்கு, பட்டு பீதாம்பரம் தெரு வழியே போகுது பார் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். இதை ஞானத்தால் உணர்ந்த பாரதி சுவாமிகள் பல்லக்கை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி நடந்து வந்தார். சாக்கடையில் அமர்ந்து ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஓதசுவாமிகளின் அருகே வந்தார் ஆச்சார்யார். அண்ணா என்ன கோலம் இது! என்று சுவாமிகளை பார்த்துக் கேட்டார். ஓ.. நரசிம்மனா வா நரசிம்மா, வா வா என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். உடனே அங்கிருந்தவர்கள் இவன் பித்து பிடித்தவன், இவனை ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் என்று கூறினர். அப்படியெல்லாம் கூறாதீர்கள் என்ற ஆச்சார்யார் மற்றவர்களின் அழுக்கைப் போக்குவதற்காகவே இவ்வாறு நீராடுகிறார். மாபெரும் சித்த புருஷர். இறை பக்தியில் இத்தகைய நிலையை அடைவது என்பது எவருக்கும் எளிதில் கைகூடாது. நானும் இது போன்ற நிலையை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பின்னர் சிருங்கேரி ஆச்சாரியாரின் மடத்திற்கு சென்ற ஓத சுவாமிகள் அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இவ்வாறு பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருப்பார் ஓதசுவாமிகள். இவ்வாறு பல லீலைகளை செய்து கொண்டிருந்த சுவாமிகள் ஒரு நாள் அவரது பக்தரான சதாசிவ ஐயரின் கனவில் தோன்றி, சதாசிவா... இன்னும் சில நாட்களுக்குள் நான் சித்தி ஆகப் போகிறேன். நிரந்தரமாகக் குடிகொள்ள எனக்கென்று ஒரு இடத்தை தேர்வு செய் என்று சொல்லி மறைந்தார். ஓத சுவாமிகள் 1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேத சித்தி ஆனார். அன்று திருவாதிரை நட்சத்திரம். சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தற்போது அதிர்ஷ்டானம் அமைக்கப்பட்டு அனைவரும் ஓதசுவாமிகளை வழிபட்டு வருகின்றனர்.
கணேச பஞ்சரத்னம்

1.முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்

கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்

அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்

நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநயகம்.

2.நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்

நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்

ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்

மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்.

3.ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்

தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்

க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்

மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்.

4.அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்

புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்

ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்

கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்.

5.நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்

அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்

ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்

தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்.

6.மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்

ப்ரஜல்பதி ப்ரபாதகே ஸ்மரந் கணேச்வரம்

அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்

ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்

.....கணேசபஞ்சரத்நம் ஸம்பூர்ணம்

இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் ஸ்ரீ கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாற்களோ, அவர் நோயின்றி குறை யேதுமின்றி, நல்ல கல்விகளையும் நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
ராமகிருஷ்ணர் பகுதி இரண்டு

அந்த அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் நெருங்கிய நண்பர். தன் நண்பனின் கஷ்டகாலத்தில் உதவுவது தனது கடமை என நினைத்தார். தனது ஊருக்கே வந்து விடும் படி நண்பரை அழைத்தார். சுதிராமிற்கு வேறு வழியில்லை. மனைவி இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கமார்புகூரில் குடியேறினார். தேரேய்பூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் இருந்தது. கமார் என்ற வங்காள சொல்லுக்கு கொல்லர்கள் என்பது பொருள். புகூர் என்ற சொல்லுக்கு குளம் என்பது பொருள். இவ்வூர் செழிப்புமிக்க கிராமம். தண்ணீர் வசதி அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் வயல் வெளிகளில் தாவரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. தாமரை பூக்கள் நிறைந்த குளங்கள் ஆறு இக்கிராமத்தில் இருந்தது. கோஸ்வாமி தனது நண்பருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதில் சில குடிசைகளும் இருந்தன. அந்த இடத்திற்கு லட்சுமிஜாலா என பெயர். பல கஷ்டங்களை அனுபவித்தாலும் நடப்பதெல்லாம் பகவான் செயல் என உணர்ந்து இறைவனிடம் நம்பிக்கையை விடாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். துன்பங்கள் தொடரும் வேளையில் சுதிராமின் மனைவி சந்திராதேவி மிகுந்த பதட்டத்திற்கு ஆளானார். அவர் படும் வேதனையைக் கண்டு பொறாத சுதிராம் ஆறுதல் சொல்வார். சந்திரா! இவை சாதாரண துன்பங்கள். நாம் பட்டினி கிடக்கிறோம். பட்டினி என்பது ஒரு நோயல்ல. அதைக்கண்டு கலங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் செல்வம் இருந்தும் பகவானுக்காக நோன்பிருக்கிறார்கள். அவர்களே பட்டினி கிடக்கும்போது ஏழைகளான நாம் பட்டினி கிடந்தால் என்ன? இறைவன் நம்மை நோன்பிருக்கச் செய்துள்ளார். அது அவரது விருப்பமாக இருக்கிறது. சற்று காலத்தில் நாம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவோம். கவலைப்படாதே! என்பார். காலப்போக்கில் நண்பர் கோஸ்வாமி தந்த நிலம் விளையத் தொடங்கியது. சுதிராமின் குடும்பத்தில் பட்டினிக்கு இடமில்லாமல் போனது. எஞ்சிய உணவுப் பொருளை ஏழைகளுக்கு அவர் அளித்து வந்தார். ராமபக்தரான சுதிராம் வயலுக்கு சென்றதும் ஹே.. ராமா! ரகுவீரா! என்று அழைப்பார். அதன் பிறகே கூலியாட்களை வயலுக்குள் இறக்குவார். நடுகையின் போது ராமனின் பெயரை உரக்கச்சொல்லி முதல் நாற்றை நடுவார். தொடர்ந்து பணியாட்கள் வேலை செய்வார்கள். ஒரு முறை பக்கத்து ஊருக்கு ஏதோ பணி நிமித்தமாக சென்றிருந்த சுதிராம் அதை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரால் நடக்கக்கூட முடியாமல் தளர்வு ஏற்பட்டது. அங்கிருந்த மரத்தடியில் படுத்தார். காற்று இதமாக இருந்தது. மரம் தந்த நிழலின் சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். அப்போது கனவு ஒன்று தோன்றியது. சுதிராம்! நான் சொல்லும் இடத்திற்கு செல். அங்கே கவனிப்பாரின்றி நான் கிடக்கிறேன். என்னை உன் வீட்டிற்கு எடுத்துச்செல் என ஒரு சிறுவனின் வடிவில் தோன்றிய ராமர் சொன்னார். சுதிராம் திடுக்கிட்டு விழித்தார். சற்று தூரம் சென்றார். ராமர் கனவில் சொன்னதுபோலவே ஒரு இடம் தென்பட்டது. அங்கே ஒரு பாம்பு படமெடுத்து நின்றது. அதன் கீழ்  ஒரு சாளக்கிரம ராமர்சிலை கிடந்தது. அதை எடுப்பதற்காக சுதிராம் விரைந்தார். பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. சிலையை எடுத்துக்கொண்டு கண்களில் நீர் மல்க வீடு திரும்பினார் சுதிராம். ராமரே தந்த சிலை என்பதால் அவரது பக்தி உணர்வு மிகவும் அதிகரித்தது. அந்தச்சிலையை வீட்டில் வைத்து பூஜித்து வந்தார். அவரது குலதெய்வமான சீதளாதேவி ஒரு சிறுமியின் வடிவில் வந்து தினமும் பூ பறித்து தருவாள். அவளுடன் சுதிராம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருப்பார். அந்தக்குழந்தை அவரோடு தோட்டத்திற்கு சென்று மரக்கிளைகளை வளைத்துக் கொடுப்பாள். சுதிராம் இலகுவாக மலர்களை பறித்துக்கொள்வார். தெய்வத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கொண்டவரான சுதிராமின் வாழ்வில் மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. கமார்புகூரில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள மேதினிப்பூர் என்ற ஊருக்கு சுதிராம் சென்று கொண்டிருந்தார். வழியில் வில்வ மரம் ஒன்று நின்றது. பொதுவாக அந்தக்காலத்தில் மரத்தில் இலைகள் உதிர்ந்திருக்கும். ஆனால் இந்த மரத்தில் மட்டும் இலைகள் ஏராளமாக இருந்தது சுதிராமிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது சிவபெருமானின் கருணை என்றே நினைத்தார். வில்வ இலைகளை பறித்தார். மேதினிப்பூருக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டார். வெளியூருக்கு புறப்பட்ட காரணத்தையே மறந்து விட்டார். மறு நாள் தான் அவருக்கு அந்த நினைவே வந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ராமபக்தராகவும், சிவபக்தராகவும் விளங்கினார் சுதிராம். எந்தச் சூழ்நிலையிலும் அவர் நேர்மை மாறவே இல்லை. யாரிடமும் கடனாகவோ இலவசமாகவோ எதையும் பெற மாட்டார். ஒழுக்கமற்ற மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கிப்போவார். அவர் காயத்ரி ஜெபம் செய்யும் போது ஒரு தெய்வீக ஒளி வீசும். கன்னங்களில் கண்ணீர் வழியும். ராமசேவையிலேயே அவரது காலம் கழிந்தது. இதனிடையே மூத்த மகன் ராம்குமாருக்கும், மூத்த மகளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ராம்குமார் ஜோதிடக்கலையில் வல்லவர். தந்தையாரின் தொழிலில் உதவியாக இருந்தார். இதனால் குடும்பத்தில் மீண்டும் செல்வவளம் செழித்தது. ராம்குமாரிடமும் தெய்வீகசக்திகள் இருப்பதாக ஊரார் நம்பினர். அவரது ஜோதிடம் சரியாக இருந்ததால் கூட்டம் மொய்த்தது. காளிதேவியை ராம்குமார் வழிபட்டு வந்தார். ஒருமுறை காளி கோயிலுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அதிபயங்கர வடிவத்தில் காளிதேவி அவர் முன்பு தோன்றினாள்.

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே

சனி, 14 டிசம்பர், 2019

இருள் நீக்கியிலிருந்து இருள் நீக்க வந்த இறையருளே!

மாகாதேவர் தந்த மஹா தேவரே!
சரஸ்வதி அம்மாள் சுமந்த சரஸ்வதியே!

ஜனிக்கும் போது கூப்பிய கரங்களுடன் பிறந்தீர்!

இன்று ஜகம் அனைத்தும் உம்மை கை கூப்பி வணங்குகிறது!

அவனிக்கு வரும் போது அனைவரும் அழுது கொண்டு தான் வருகிறோம்!

ஆனால் நீர்மட்டம் தொழுது கொண்டு வந்ததால் தான் உம்மையே தெய்வமென தொழுது கொண்டு கொஞ்சம் நிற்கிறது இவ்அவனி!

சுப்பிரமணியனாய் பிறந்து ஜயேந்திர சரஸ்வதியாய் வந்து ஜகம் அனைத்தும் ஆளும் ஜகத் குருவே!

பொன்மாரி பொழிய வைத்த சங்கரின் வழி வந்த பொன்னாக மின்னும் எங்கள் பொக்கிஷமே!
உயர் பொலிவுடன் திகழும் பொன் மயமே!

உயர் சந்திரகேகரேந்திர சரஸ்வதி மகிழ்ந்த சங்கராச்சாரிய குருதேவா!

சரஸ்வதி புகழும் சதுர்மறை கூறும்
அருளே வா!

சங்கரருக்கு பிறகு மஹா கைலாஷ
சிகரத்தில் அவருக்கு சிலை வைத்த சிகரமே!

பல்கலைக்கழகம் கண்ட பல்கலை வித்தகரே!

சமய தொண்டுடன் சமுதாய தொண்டும் ஆற்றிய வித்தகரே ஆன்மீக குருவே!

குருநாதரின் கனவுகளை நினைவாக்கிய குருபக்த சிகாமணியே!

ஆன்மீக சமாஜத்தின் அருள் பாலித்த அருட்கொடை வள்ளலே!

ஊங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் எங்களை காத்தருள்வாயாக!

ௐ ப்ரத்யக்ஷ ஸ்ரீநிவாஸனே சரணம் சரணம்.

ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர
தீபாவளி🎆🎇🎇
பட்ஷணங்கள் ஆத்தில் இருந்து செய்து தரப்படுகிறது. பட்ஷணங்கள் விவரம் மற்றும் விலை.
   
காரவகைகள்      

                         கிலோ
1.  தட்டை       -      200ரூ

2. மனோப்பு     -    200ரூ

3.தேங்குழள்    -     200ரூ

4.ரிப்பன் பகடா  -   200ரூ

5.மிக்ச்சர்         -      250ரூ

6.ஓமப்பொடி    -     250ரூ


இனிப்பு  வகைகள்

1.  ரவாலட்டு    - 6ரூ(ஒன்று )

2. தேங்காய்  பர்பி  -   200ரூ கிலோ


3.மைசூர் பாகு -400ரூ கிலோ    

4. பூந்தி லட்டு   - 300ரூ கிலோ 


அனைத்து  பட்ஷணங்களும்  சுத்தமாகவும் தரமாகவும் செய்து  தரப்படும். ஒருவாரத்திருக்கு முன்     ஆடர் செய்யவும். சென்னையில்  உள்ளவர்களுக்கு மட்டும்  செய்து தரப்படும். தொடர்புக்கு : லஷ்மி  மாமி 8015032463, வாட்ஸ்அப்  6385805723

நன்றிகள்🙏🙏🙏 இதை பகிரவும்.
எட்டின் மகிமை தெரியுமா?

மனிதப் பிறப்பில் எட்டாவது மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்சியைப் பெறுகிறதாம். கருப்பையில் இடம்போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னுடைய கை-கால்களை மடக்கிக்கொண்டு, உடல் உறுப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முதல் அறிவை அப்போதுதான் அந்தக் குழந்தை பெறுகிறது. முற்பிறவியில் செய்த தீவினையால்தானே, ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் தவறு ஏதும் செய்யக் கூடாது எனும் சிந்தனை ஞானம் ஏற்பவதும் 8-வது மாதத்தில்தான் என்கிறது கீதை. ஆனால் பிறந்ததும் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் நிச்சயம் தோன்றுமாம். இதனாலேயே 8 எனும் எண்ணை ஞான எண்ணாகக் கூறுவார்கள். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்... என்று கருப்பையில் உள்ள 8 மாத சிசுவின் வடிவை, மிக அற்புதமாக விவரிக்கிறது. அதுசரி.. மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, அந்த நடராஜ பெருமானே தன் கைப்பட எழுதிய பெருமை மிக்க நூலான திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? 8 - வது திருமுறையாகத்தான் !

அஷ்ட கணபதிகள்: முழுமுதற் கடவுளாம் கணபதியை அஷ்டகணபதிகளாகவும் கொண்டாடுவர். ஆதி கணபதி, மகாகணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, வாலை கணபதி, உச்சிஷ்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி ஆகிய அஷ்ட பிள்ளையார்களை வழிபட வினைகள் யாவும் நீங்கும் !

அஷ்ட புஷ்பங்கள்: புன்னை, செண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை ஆகிய மலர்களை தெய்வ பூஜைக்கு சிறந்த அஷ்ட புஷ்பங்களாகப் போற்றுகின்றன ஞானநூல்கள் !

திசை யானைகள் எட்டு: ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் ஆகியவையே திசை யானைகள் 8 எனப் போற்றுகின்றன புராணங்கள் !

அஷ்ட ஐஸ்வரியங்கள்: தனம், தானியம், நிதி, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம் ஆகியன அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இறைசிந்தையும், அறவாழ்வும் இந்தச் செல்வங்களைப் பெற்றுத் தரும்.

அருள் தரும் அஷ்ட பிரபந்தங்கள்: மாலவனின் பெருமைகளை விவரிக்கும் நூல்களில் எட்டு குறிப்பிடத்தக்கவை. அவை: திருவரங்கக் கலம்பகம். திருவரங்கத்துமாலை. திருவாங்கத்து அந்தாதி, ஸ்ரீரங்கநாயகர்ஊசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி !

அஷ்ட பந்தனம்: சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன் மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி.... ஆகிய எட்டு பொருட்களுமே, ஆலயங்களில் விக்கிரக பிரதிஷ்டையில் பயன்படும் அஷ்ட பந்தனமாகும்.

அட்டமா ஸித்திகள்: தவமுனிகள் செய்யும் யோக முறையால் எட்டுவிதமான ஸித்திகளை அடையலாம். அற்புதமான அந்த ஸித்திகள்: அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் !

அஷ்ட வசுக்கள்: அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ! இவர்களில் பிரபாசன் என்பவனே, வசிஷ்ட முனிவரின் சாபத்தால் பூமியில் பிறந்து, பீஷ்மராகத் திகழ்ந்தான் !

அஷ்ட வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி ஆகியோரை அஷ்ட வித்யேச்வரர் எனப் போற்றுவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.

எட்டெட்டந்தாதி: காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனின் மீதான ஒரு பாடல் இது. எட்டெட்டு பாடலாக 64 செய்யுள்கள் அடங்கிய அந்தாதியாக திகழ்கிறது என்பார்கள். ஆனாலும், விநாயகர் வழிபாடாக முதலில் ஒரு பாடலும், செய்யுள் பலனாக கடைசியில் ஒரு பாடலும் அதிகம் உண்டு.
---------------------------------------------------------------------------------‐--
அக்னி நட்சத்திரம் பிறந்தது எப்படி?

அக்னி நட்சத்திரம்  இந்த வருடம் மே 4ம்தேதி இரவு 12.35 மணிக்கு ஆரம்பித்து, மே 29ம் தேதி காலை 6.45 மணிக்கு முடிகிறது.

முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம்  அக்னிக்கு உதவச் சொன்னார். அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந்தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள் மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம் என புராணக்கதை கூறுகிறது.

அக்னி நட்சத்திரம் அசத்தி எடுத்துடும்: அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று வியர்த்து வழிவதில் ஆரம்பித்து அப்பாடா என்று களைத்து அமர்வதில் இது முடியும். இப்படி அசத்தி எடுக்கும் அக்னி நட்சத்திர நாட்களுக்கும், புராணத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? அக்னி நட்சத்திர நாளில் சந்திரனும் பூமியும் சூரியனுக்கு சற்று அருகே இருப்பதால்தான் இந்த நிலை என்கிறது விஞ்ஞானம். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன். இது நெருப்பைக் கக்கும் நட்சத்திரம் எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.

ஆறுதல் பெற ஆண்டவனை கும்பிடுங்க: அக்னி நட்சத்திர காலத்தில் அதிகாலை துயிலெழுந்து நீராடியபின் சூரிய பூஜையும், சூரிய நமஸ்காரமும் செய்வது சிறந்தது. முருகனையும், மீனாட்சியையும் வழிபடுவதுடன், பரணிக்குரிய துர்க்கையையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும், கிருத்திகைக்கு உரிய அக்னியையும் வழிபாடு செய்வதும் நல்லது.

தாகம் தீர்க்க தானம் பண்ணுங்க: குடை, விசிறி, காலணிகள் தானம் செய்யலாம். அத்துடன் அன்னதானமும் ஆடைதானமும் செய்வது நல்லது. தண்ணீர்ப் பந்தல் அமைத்து தண்ணீர், நீர்மோர் போன்றவத்தைத் தருவது நற்பலன் தரும். அக்னி நட்சத்திர நாட்களில் நோய்கள் பல பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. அக்னிக் காற்று நோய் பரப்பும் தன்மை கொண்டது. அதனால் தினமும் குடத்தில் நீர் நிரப்பி மஞ்சள் கரைத்த அதனை வேப்பிலைக் கொத்துகளால் நனைத்து வீடு முழுதும் தெளிக்கலாம். நரசிம்மரை வழிபட்டு தயிர்சாதம், நீர்மோர், பானகம் படைத்து தானம் செய்யலாம். விஷ்ணு நாமத்தை 108 முறை ஜபிக்கலாம். சீதளா தேவி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் நல்லது.

கருணை மழையில் நனையுங்க: எளிய எல்லோராலும் இயன்ற வழி, இக்காலத்தில் அகமும் புறமும் தூய்மையுடன் இருப்பதும், பிறர் மனம் குளிரும் வண்ணம் நடப்பதும், இயன்ற அளவில் தருமம் செய்வதும், மனம் உருகி இறைவனை வழிபடுவதும், கடவுள் அருள் மழையில் நம்மை நனைக்கும் என்பது நிச்சயம். இறைவன் கருணை மழையில் நனைந்து விட்டால் கத்திரி வெயிலும் நம்மை வாட்டாது குளிரும் வாழ்வும் மலரும்.
---------------------------------------------------------------------------------‐--
பழநி முருகனின் கோவண ரகசியம்!

ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.
---------------------------------------------------------------------------------‐--
பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?

ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம்  என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.  அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.
---------------------------------------------------------------------------------‐--
அரவானின் தியாகம்!

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன்.

வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன.

அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்து கொண்ட அந்த அழகி யார்? அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான். முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது. பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
---------------------------------------------------------------------------------‐--