வியாழன், 24 அக்டோபர், 2019

பத்ராசல ராமதாஸர்

கிருஷ்ணதேவராயர் ஆண்ட விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட, கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கண்ணா,காமாம்பாள் தம்பதியர் வசித்தனர்.இவர்களுக்கு தெய்வீகக்குழந்தையாக1630ல் கோபன்னா பிறந்தார்.இவரது இயற்பெயர் கஞ்செர்ல கோபராஜு.இளமையிலேயே ராமாயணக் கதையை விருப்பத்தோடு கேட்பார்.இதன் காரணமாக அவரது பிஞ்சுமனத்தில் ராமபக்தி ஆழமாக வேர் கொண்டது.மகான் கபீர்தாசரிடம் ராமநாம உபதேசம் பெற்று ஜபம் செய்யத் தொடங்கினார். இரவும் பகலும் அவருடைய நாவில் ராமநாமம் ஒலித்தது. தாய்மொழியாம் தெலுங்கிலும்,சமஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றிருந்த கோபன்னா,இறைநாமத்தை சொல்லும் அற்புதக் கவிதைகளை இயற்றினான்.இல்லறமே நல்லறம் எனப் பெற்றோர் உபதேசிக்க கமலம்மா என்ற பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையானார்.தம்பதியர் ஒருவருக்கொருவர் பக்தியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்வகையில் ஒரு நிகழ்ச்சி அவர்கள் வீட்டில் நடந்தது.

மகான் கபீர்தாசர் கோபன்னாவின் கனவில் தோன்றி ராமநாம உபதேசத்தை அருளினார்.அன்று கோபன்னாவின் வாழ்க்கை திசை திரும்பியது.எந்நேரமும் ராமநாமத்தை உச்சரித்து ராமபக்தியில் மூழ்கிப்போனார்.ஒருமுறை ஸ்ரீராமநவமியன்று வீட்டில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பாகவதகோஷ்டியினர் பஜனை செய்து கொண்டிருந்தனர்.அடியார்களின் அன்னதானத்திற்காக சமையல்வேலை மும்முரமாக ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. பஜனையில் ஈடுபட்டிருந்ததால் கமலம்மா குழந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டாள்.மகன் தவழ்ந்தபடியே அடுப்படிக்குள் நுழைந்து சாதம் வடித்த சுடுகஞ்சியில் விழுந்துவிட்டான்.சமையல் ஆட்கள் பதறிப்போய் கமலம்மாவிடம் தெரிவித்தனர்.பேச்சு மூச்சில்லாமல் கிடந்த பிள்ளையைக் கண்ட தாய் மனம் துடித்தாள்.ஆனால் யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டு கண்ணீர் பெருக்கி நின்றாள்.பஜனை முடித்த பாகவதர்கள் விருந்துண்ட பின் வீட்டுக்கு புறப்பட்டனர்.கோபன்னாவிடம் கமலம்மா நடந்த விஷயத்தைத் தெரிவித்தாள்.தம்பதியர் ராமபிரானிடம் முறையிட்டு அழுதனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.கீரைத்தண்டு போல துவண்டு கிடந்த பிள்ளையின் கண்கள் அசைந்தன.அம்மா என்று மெல்ல அழைத்தான்.இருவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர்.அன்று முதல் கோபன்னாவின் மனம் ராமபக்தியில் முழுமையாக ஈடுபட்டு விட்டது.ராமன் மட்டுமே இனி நமக்கு கதி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

கோபன்னாவின் தாய்மாமன்கள் அக்கன்னாவும், மாதன்னாவும் ஐதராபாத் அரசர் தானீஷாவிடம் பணியாற்றி வந்தனர்.தங்களின் மருமகன் கோபன்னாவிற்கும் சமஸ்தானத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்தனர்.பத்ராசலம் நகரத்தில் வரிவசூலிக்க கோபன்னா நியமிக்கப்பட்டார்.அன்பு,நேர்மை,நல்லொழுக்கம் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தவர்,நியாயமான முறையில் வரி வசூலித்து அரசு கஜானாவுக்கு வழங்கினார்.பத்ராசலத்தில் ராமர் கோயில் இருப்பதை அறிந்த கோபன்னா மகிழ்ச்சி அடைந்தார்.காகேதய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் புதர் மண்டிக் கிடந்தது.வழிபாடு இல்லாமல் மோசமாக கிடந்த ராமசன்னதியைக் கண்டு வருந்தினார் கோபன்னா. அரசாங்கத்துக்காக வசூலித்த வரிப்பணத்தில் கோயில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.கட்டுமானப்பணியைத் தொடங்கினார்.வரிப்பணம் முழுவதையும் ராமர் கோயில் திருப்பணிக்கு செலவிட்டார்.ஆறுலட்சம் வராகன் செலவில் கோயிலைக் கட்டியதோடு பலவிதமான தங்க ஆபரணங்களையும் செய்து கொடுத்தார்.கோபன்னாவின் ராமபக்தியைக் கண்ட மக்கள் அவரை ராமதாசர் என்று அழைக்கத் தொடங்கினர்.மக்கள் பாராட்டினாலும் வரிப்பணத்தை செலவிட்டால் அரசாங்கம் விடுமா? மன்னர் தானீஷா ராமதாசரை கோல்கொண்டா சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.தாய்மாமனார்களால் ராமதாசருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை.தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார்.அப்போது அவர் பாடிய பாடல்கள் மிகவும் உருக்கமானவை.இனிமேல் இந்த கோரமான அடிகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.உன்னைக் கும்பிட்ட கைகளை தடி கொண்டு அடிக்கிறார்களே!என்று இவர் பாடிய பாடல்வரிகள் கல்லையும் கரையச் செய்யும் தன்மை கொண்டதாகும்.இஷவாகுகுல திலகா என்று தொடங்கும் பாடலில் ராமனுக்காக கோயில் கட்டிய செலவுக் கணக்கைக் கூறி வேதனைப்படுகிறார்.ராமா! உனக்கு கிரீடம்,ஆபரணம் செய்து அழகு பார்த்தேனே!எனக்கு அளித்ததோ கை விலங்கு அல்லவா!அரசு பணத்தை உனக்காக செலவழித்தேன்.அதை நீயே மன்னருக்கு அளித்துவிடு!என்று உள்ளம் உருகி வேண்டுகிறார்.

ஒருநாள் நள்ளிரவில் பாதுஷா தானீஷா பள்ளியறையில் இருந்தபோது ராமலட்சுமணர் இருவரும் ராமதாசரின் சேவகர் போல அவர் முன் வந்தனர்.ராமதாசர் செலுத்தவேண்டிய ஆறுலட்சம் வராகன் பணத்தையும் திருப்பி அளித்து மன்னர் கையெழுத்திட்ட ரசீதையும் பெற்று ராமதாசரின் அருகில் வைத்து விட்டு மறைந்தனர்.ராமதாசரோ இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியது யாரென்று தெரியாமல் தவித்தார். பின் ராமரும், லட்சுமணரும் ராமதாசரின் சேவகர் போல வந்து பணத்தைத் திருப்பி செலுத்தியதை அறிந்தார்.பாதுஷா தானீஷா ராமதாசரை சிறையில் இருந்து விடுவித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.பத்ராசலம் ராமர் கோயிலுக்கு பல நன்கொடைகளையும் வழங்கினார்.இந்த நிகழ்ச்சிக்குப்பின் என் ராமனைக் கண்ட தானீஷாவே என்னும் பொருள்பட பாடிய தன்யுடை தானீஷா நீவு நன்னு கன்னய்யா பதமுலு என்ற அவர் பாடிய பாடல் புகழ்பெற்றது.பத்ராசலம் கோயிலில் தன் இறுதிக் காலத்தைக் கழித்து வந்தார்.1688ம் வருடம் ஸ்ரீராமனின் திருவடியில் கலந்தார்.ராமபக்தியில் சிறந்து விளங்கிய தியாகராஜருக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் ராமதாசர்.ராமசந்திர மூர்த்தியின் பரமபக்தனாக விளங்கும் ராமதாஸரைப் போற்றி வணங்குகிறேன் என தியாகராஜர் தனது கீர்த்தனையில் புகழ்ந்து பாடியுள்ளார்.ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த ராமதாஸரின் ராமபக்திக்கு ஈடு இணையேது. அவர் பத்ரகிரிமலையில் ஏறியபோது விஷ்ணு தூதர்கள் வந்து வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக பத்ராசலம் கோயில் தலவரலாறு கூறுகிறது.


ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 75 ॐ

       {நவீன விஞ்ஞானமும்}

தற்செயலாக ராமகிருஷ்ண விஜயம் புத்தகம் ஒன்று கிடைத்தது. சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த கடவுள் அணுவிற்கான ஆய்வு என்னும் பிரபஞ்சத் தத்துவத்திற்கான அறிவியல் தத்துவத்திற்கான சோதனை நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை பற்றிச் சொல்லி ஆகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் நடராஜரின் தலைமையிலேயே இந்த ஆய்வு நடக்கிறது என்றும் சொல்லலாம். ஜெனிவாவில் உள்ள European Center for Particle Physics Research-CERN தலைமையகத்தின் முகப்பில் கிட்ட தட்ட ஆறு அடி உயரம் ஆன நடராஜர் சிலை உள்ளது. அந்தச் சிலையின் கீழே உள்ள செவ்வகப் பீடத்தின் முகப்பில் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு பொறிக்கப் பட்டுள்ளதாயும் கூறுகின்றனர். எங்கும் நிறைந்தவனே! நற்குணங்களின் உருவே! இந்த அண்டசராசரத்தைப் படைத்தவனே! ஆடலரசே! அந்தி நேரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியவனே! உமக்கு நமஸ்காரம்! (மூலம் சிவானந்த லஹர், சுலோகம் 56, ஆதி சங்கரர் இயற்றியது. நன்றி இந்திய அணுசக்தித் துறை இந்திய அரசாங்கம்) இப்போது இந்திய அணுசக்தித் துறை எதுக்கு சர்வதேசப் புகழ் பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கூடத்திற்கு அன்பளிப்பாய்த் தர வேண்டும்? நடராஜத் திருமேனிக்கும் இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்?? கிட்டத் தட்ட 1,300 கோடி வருடங்கள் முன் பேரொலியுடன் கூடிய மிகப் பெரு வெடிப்பு எனப்படும் big bang உண்டாயிற்று. அதற்கு முன்னர் அடர்த்தியான அதிக வெப்பத்துடனும் அழுத்தத்துடனும் இருந்த ஒரு சக்தித் தொகுப்பானது அதிவிரைவாக விரியவும் சுருங்கவும் செய்தது. மாறி மாறி சூடும், குளிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படி ஒரு பெரு வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் விரிவடைய அதிக வெப்பம் காரணமாய் சக்தித் தொகுப்பு சிறு துகள்களாய் பிரியத் தொடங்கியது. பன்மடங்கான துகள்களின் எண்ணிக்கை உருவாக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பல துகள்கள் அழிந்தும் மேலும் பல துகள்கள் உருவாகவும் செய்தன. வெப்பம் குறையத் தொடங்கியதும் இச்சிறு துகள்கள் இணைந்து பெரிய துகள்கள் உருவாகிப் பிரபஞ்சமும் விரிவடைகின்றது. இவ்வாறு பல சிறு துகள்கள் சேர்ந்து இந்தப் பிரபஞ்சம் உருவானது. இன்றும் கூட இப்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சிறு அணுத்துகள்கள் சேர்ந்து பெரிய பகுதிகளாய் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல துகள்கள் அழிந்து கொண்டும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் விண்வெளியில் மட்டுமின்றி சூரியனிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளால் உருவாகும் காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தத் துகள்கள் நமது மூலக்கூறு பகுதியும் பிரபஞ்சத்தின் கட்டுமான கற்களும் ஆகும். தோன்றுவதும் இயங்குவதும் பின்னர் ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படை தத்துவம் ஆகும். இதையே நம் முன்னோர் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமாய்க் கருதினார்கள்.

நடராஜ வடிவின் உட்பொருள் : ஆகம சாஸ்திரம் புரியாமல் நடராஜரின் உடல் கூறு தத்துவம் புரியாது என்று சுவாமி விபுலானந்தர் கூறுகின்றார். எனினும் நமக்குப் புரிந்த அளவில் பார்ப்போம். ரிஷிகளின் தியானத்தில் தோன்றிய இந்த நடராஜ தாண்டவ வடிவம் மிக மிக நுட்பமானது. நடராஜரின் வைத்த திருவடியான வலப்பாதம் முயலகன் என்ற அசுரனின் மீதிருக்கும். அறியாமையைக் குறிக்கின்றது இது. தூக்கிய இடது திருவடியானது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலச்சக்கரத்திலிருந்து விடுபடும் ஆன்மாவைக் குறிக்கின்றது. உடுக்கை ஏந்திய திருக்கையானது ஆக்கலைக் குறிக்கும். உடுக்கை எழுப்பும் சப்தம் ஆனது பிரபஞ்சம் தோன்றும் போது முதன் முதல் எழுந்த சப்தத்தைக் குறிப்பதோடு அல்லாமல் அறிவியலாளர்களும் பிரபஞ்சம் தோன்றும் போது பெரும் சப்தம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். விஞ்ஞானிகள் இந்த ஒலியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆன்மீக அறிவாளர்கள் இந்த ஒலியைத் தான் பிரணவம் எனப்படும் ஓம் என்னும் ஒலியாகவும் குறிப்பிடுகின்றனர். வேதங்களிலும் பிரணவம் என்னும் ஒலியில் இருந்தே பிரபஞ்சம் பிறந்ததாய்க் குறிப்பிடுகின்றது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

புதன், 23 அக்டோபர், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 74 ॐ

{ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்}

சிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப்படையெடுப்பில் பாதிக்கப்பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760ம் ஆண்டில் இருந்து 1780ம் ஆண்டு வரையிலும் கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும் அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.
1749ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தக் கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை "செலம்பரம் பகோடா" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும் அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும் அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது.இரண்டாம் மைசூர் சண்டையின் போது கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம், அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும், தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

செவ்வாய், 22 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 72 ॐ
{ஆங்கிலேயர்&பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்}

சிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்பில் பாதிக்கப்பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760ம் ஆண்டில் இருந்து 1780ம் ஆண்டு வரையிலும் கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும் அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.
1749ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்த கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை "செலம்பரம் பகோடா" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும் அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும் அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது. இரண்டாம் மைசூர் சண்டையின் போது கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம் அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்து விட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும் தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 71 ॐ

{சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றது}

தில்லை அம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் நடராஜர் சர்வதாரி வருடம் மார்கழி மாதம் 25 ம் தேதி முதல் அட்சய வருடம் கார்த்திகை மாதம் பதினான்காம் தேதி வரையிலும் அதாவது ஆங்கில வருடம் கி.பி. 1648 டிசம்பர் 24 தேதி முதல் 1686 ம் வருடம் நவம்பர் மாதம் 14 ம் தேதி வரையிலும் கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் 10 மாதங்கள், 20 நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்திருக்கின்றார். மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் பற்பல இடங்களுக்கும் தில்லையாண்டவரை எடுத்துச் சென்றிருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு. குறிப்பாய் ஒரு இடம் எனச் சொல்ல முடியாமல் முடிந்தவரையில் எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்கே எல்லாம் மறைத்து வைத்திருக்கின்றனர் என்று புலனாகின்றது. பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு குடுமியான் மலையில் 40 மாதங்களும் பின்னர் மதுரையில் சில காலமும் வைக்கப்பட்டிருக்கின்றார். இந்தச் செய்திகள் 46 ம் எண்ணுள்ள செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது. சாம்போஜி மன்னர் 1684 ம் ஆண்டு ஆரம்பித்து 1686 ம் வருடம் வரையிலும் தில்லைக் கோயிலில் திருப்பணிகள் செய்து வந்ததாயும் தெரிய வருகின்றது. மேலும் அந்தக் கால கட்டத்தில் அம்பலவாணனுக்கு "ஊருடைய முதலியார்" என்ற பெயரும் வழங்கப் பட்டிருக்கின்றது.

"மருவிய சகாத்தமாயிரமும் ஐநூற்றெழுப
துக்கு மேல் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையினாற் பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதியின்
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியுவுந்
தில்லைமா னகர் வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே!"

இதன் பின்னர் தில்லைக் கூத்தன் மீண்டும் தில்லையில் இருந்து வெளியே சென்று 1696 ல் சிதம்பரம் மீண்டும் வந்தார் என்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் குறிக்கப் பட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. இதற்கு அப்போதைய முகலாய சாம்ராஜ்ய அரசன் ஆன ஒளரங்கசீப்பின் படை எடுப்புக் காரணமாய் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தென்னாட்டில் செஞ்சியில் 7 ஆண்டுகள் இந்தப் படைகள் தங்கி இருந்ததாயும் தெரிய வருகின்றது. தஞ்சை மராட்டிய வம்சத்து அரசர்களுக்குத் தில்லைக் கூத்தன் பால் உள்ள அன்பால் அச்சமயம் திருவாரூரில் தில்லைக் கூத்தனை மறைத்து வைத்திருந்ததாயும் சொல்கின்றனர். அப்போது எடுத்து செல்ல பட்ட செப்பேடுகள் பின்னாட்களில் அம்பலவாணன் தில்லைக்கு திரும்பும் போது திருவாரூரிலேயே தங்கி விட்டபடியால் அந்தச் செப்பேடுகள் திருவாரூர்ச் செப்பேடுகள் என்று அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார். தில்லைப் பேரம்பலத்தில் அம்பலவாணனை மறைத்து வைத்திருந்த பெட்டியை இன்றும் காண முடிகின்றது. அடுத்து சைவ மடங்களின் தொண்டுகளைச் சிறிது காணலாம். சைவ மடங்கள் ஆன தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் ஆகியவை தில்லைச் சிற்றம்பலக் கூத்தன் பால் பேரன்பு பூண்டு அங்கு தொண்டு செய்வதை பெரும் பாக்கியமாய்க் கருதும் மடங்கள் ஆகும். இந்த மடங்கள் தினசரி வழிபாட்டுக்கான கட்டளைகள் மட்டு மின்றி திருப்பணிகளும் செய்து கொடுக்கின்றன. இம்மடங்கள் முறை போட்டுக் கொண்டு ஓதுவார்களையும் தயார் செய்து கோயிலுக்கு அளித்து வருகின்றது. இந்த மடங்களால் நிர்வகிக்கப் படும் திருமுறைக் கழகம் தில்லை வாழ் அந்தணர்கள், ஓதுவார்கள், மற்றும் பொதுமக்களில் விரும்புபவர்களுக்குத் திருமுறை கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வருகின்றது. எல்லாக் கால பூஜைகளிலும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற பஞ்ச புராணங்கள் என்று சொல்லப் படும் தமிழ் பாக்கள் தான் பாடப்பட்டு வருகின்றன. தினசரி ஒவ்வொரு கால பூஜையின் போதும் கோயிலின் முறையான ஓதுவார்களால் திருவெம்பாவையும் ஓதப்படுகிறது. இவை நந்திக்குப் பின்னர் இருந்தே ஓதப்படவேண்டும் என்பது மரபு. இந்த ஓதுவார்களை இதற்கெனவே தயார் செய்து அளிப்பதில் இருந்து ஓதுவார்களுக்கான செலவுகளையும் சைவ மடங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுகின்றது. சிவன் கோயில்களில் மட்டுமே ஓதுவார்கள் என்ற தனி அடியார்கள் இருக்கின்றனர். இவர்களே தமிழிசைப் பாடல்கள் ஆன தேவார, திருவாசகப் பாடல்களை வழிபாட்டின் காலத்துக்கு ஏற்றாற்போல் பாடுகின்றனர். தற்சமயம் பாடி வருபவர்களில் ஒரு பெண்மணியும் சிதம்பரத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் (ஓய்வு) இருவரும் திருப்பனந்தாள் மடத்தால் நியமிக்கப்பட்டு பாடிவருவதாய்த் தெரிய வருகின்றது. பரம்பரை ஓதுவார்கள் போல பாவமும் ராகமும் அமையா விட்டாலும் இறைவன் மேல் கொண்ட ஆசையும் அன்பும் தமிழின் மேல் கொண்ட ஆர்வமும் இவர்களைப் பாட வைக்கின்றது. ஒவ்வொரு கால பூஜை வழிபாட்டின் போதும் அனைத்து பக்தர்களும் இறைவனைத் தரிசிக்கும் வண்ணம் கனகசபையில் வைத்தே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடக்கும் போது பக்தர்கள் அனைவரும் கட்டுக்கோப்புடனும் ஒழுங்கு முறையுடனும் நின்று கொண்டு தரிசிப்பதோடு அல்லாமல் வெளி ஊர் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தமிழ்நாட்டிலேயே இந்தக் கோயிலில் பார்க்க முடிகின்றது. மேலும் பாலபிஷேகம் செய்யும் போது பெரிய அண்டாக்களில் நிரப்பி வைத்து அபிஷேகம் செய்யப்படும் பாலை உள்ளூர் பக்தர்கள் தங்கள் சக்தி கேற்றவாறு பாத்திரங்கள் கொண்டு வந்து அங்கே உள்ள தீட்சிதர்களிடம் கொடுத்து அந்தப் பாலை அபிஷேகம் செய்யும் போதே நிரப்பித் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அநேகமாய் ஒரு லிட்டர் பாலுக்குக் குறையாமல் ஒருவருக்குக் கிடைக்கின்றது. அதே போல் இறைவனின் அபிஷேகத்துக்குப் பாலைக் கொண்டு வந்து கொடுத்த வண்ணமும் இருக்கின்றனர். அந்தச் சமயம் எந்த தீட்சிதர் வழிபாடுகள் நடத்த வேண்டிய முறையில் இருக்கின்றாரோ அவரைத் தவிர மற்றவர்கள் செய்வதில்லை. மற்றவர்கள் அவருக்கு உதவியாக அபிஷேகப் பொருட்களை எடுத்து வந்து கொடுப்பதிலும் பொது மக்களுக்குப் பிரசாத விநியோகங்கள் செய்வதிலும் ஈடுபடுவதோடு ருத்ரம், சமகம் போன்ற வேத கோஷங்களையும் ஓதுவார்களோடு சேர்ந்து அவர்களும் தேவார, திருவாசகப் பண்களை இசைப்பதிலும் ஈடுபடுகின்றனர். இறைவனைச் சிந்தையில் நிறுத்துவது தவிர வேறொன்று இருக்கக் கூடாது என்பதால் அந்த நேரம் இவை சொல்லப் படுகின்றன. கனகசபையில் ரத்தினசபாபதி, ஸ்படிக லிங்கம், பைரவர்(தனியாக அபிஷேகம் செய்வார்கள்) போன்றவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்துக் கடைசியாக ரத்தின சபாபதிக்கு கற்பூர ஆரத்தி காட்டும் போது முன்னும் பின்னும் அந்த கற்பூர ஒளியில் ரத்தின சபாபதி ஜொலிக்கும் போது கூட்டம் பித்துப் பிடித்தாற்போல் "தென்னாடுடைய சிவனே போற்றி!" "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" நடராஜா! திருச்சிற்றம்பலம்!" என்றெல்லாம் கோஷங்கள் எழுப்புகின்றனர். இங்கே இவை எல்லாம் முடிந்த பின்னரே மூலஸ்தானத்தில் நடராஜருக்கு கற்பூர தீபாராதனை காட்டப்படுகின்றது. நடராஜருக்குச் செய்யப்படும் அர்ச்சனைகளின் போது சொல்லப்படும் அஷ்டோத்திரம் சஹஸ்ரநாமம் மற்றும் மந்திரபுஷ்பங்கள் என்று சொல்லப் படுபவை தவிர வேறு எந்தவிதமான ஸ்தோத்திரங்களோ பாடல்களோ வேத கோஷங்களோ மூலஸ்தானத்தில் சொல்லுவதில்லை என்பதை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐசிதம்பர ரகசியம் பகுதி : 70 ॐ

{சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன}

தில்லைக் கூத்தனை ஹைதர் அலி காலத்தில் மறைத்து வைத்த இடம் பற்றிப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அனைத்துமே செவி வழிச் செய்திகள் ஆகவே காணப்படுகின்றன. புளியந்தோப்புப் பொந்தில் கூத்தனை ஒளித்து வைத்த இடம் சோழமண்டலத்தைச் சார்ந்த புளியங்குடி என்னும் சிற்றூர் என உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரி 2ம் பகுதி சொல்லுவதாய்த் தெரியவருகின்றது. ஆனால் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகரின் "சிதம்பரம்" என்னும் நூலிலோ மலைநாட்டில் ஒளித்து வைத்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆனால் பாண்டியநாடு மட்டும் சும்மா இருக்குமா என்ன? தங்கள் பங்குக்கு அவங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமம் தான் அந்த ஊர் என்றும் கூத்தன் ஒளிந்திருந்த இடம் இதுவே என்றும் அதற்குச் சான்றாக ராஜபாளையம் கடைவீதியை "அம்பலப் புளி பஜார்" என அழைப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்தப் பல்வேறுவிதமான தகவல்களும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்கின்றன. அது கூத்தன் தன்னிருப்பிடத்தை விட்டு மறைந்து இருந்தார் என்பதே! ஆனால் மராட்டியர் செப்பேடுகளோ இதைப் பற்றிய தெளிவான குறிப்புகளைக் கொடுக்கின்றன. திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப்படும் இவை எழுதிய காலம் சாம்போஜி மன்னன் காலம் ஆகும். மூன்று செப்பேடுகளிலும் வடமொழியிலும் தமிழிலும் எழுதப் பட்டிருக்கின்றது. செப்பேடுகள் எழுதப்பட்ட காலந்தொட்டே வடமொழி தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டு வந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆகவே இதுவும் அதைப் பின்பற்றியே எழுதப் பட்டிருக்கலாம். ஒரு செப்பேடு மட்டும் முழுதும் வடமொழியில் எழுதியிருக்கின்றது என்று சொல்கின்றார். செப்பேட்டின் ஒரு பகுதியில் வடமொழியும் மற்றொரு பகுதியில் தமிழிலும் எழுதி இருக்கின்றது. கி.பி. 1684 எழுதப்பட்ட இந்தச் செப்பேட்டில் கூத்தனின் பெருமையைக் குறித்தும் மன்னனின் குருவான முத்தைய தீட்சிதரால் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்யப்பட்ட விபரமும் காணக் கிடைக்கின்றது. இந்தச் செப்பேட்டை அளித்ததோ சேரநாட்டுச் சிற்பி எனவும் தெரிய வருகின்றது. இதில் வடமொழிப் பகுதியில் காணப்படும் சில சொற்களால் கூத்தன் மறைந்திருந்த இடம் சேரநாடு எனவும் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. எவ்வாறிருந்தாலும் கூத்தபிரான் சில காலம் தலைமறைவாய் இருக்க வேண்டி இருந்தது என்பது தெளிவு. மேற்கூறிய செப்பேட்டில் கண்டிருக்கும் பாடல் பின்வருமாறு உள்ளதாய்த் தெரிவிக்கின்றார்.

"இயல்வாம சகாத்தம் ஆயிரமோடறு நூற்றாறின்
இனிய ரத்தாட்சி வருடம்
இலகு கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்
தேதி சுக்கிரவாரமும்
செயமான தசமியும் அத்த நட்சேத்திரமும்
திகழ்கும்ப லெக்கினமுமே
திருந்துபவ கரணமும் ஆயிஷ்யமான யோகமும்
தினமும் வந்தே சிறப்ப

உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராசர்
ஒளிபெற நிருத்தமிடவே
ஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை யுரைக்க வெளிதோ
வயலாரும் வாவிசூழ் புலிசையழகிய திருச்
சிற்றம்பலத் தவமுனி
வையகம் துதி செயக் கும்ப அபிஷேகமும்
மகிழுற முடித்த நாளே"

இந்தப் பாடலின் படி சாலிவாகன சகாப்தம் 1606-ம் ஆண்டு கி.பி. 1684-ம் ஆண்டு தமிழ் ரத்தாட்சி வருடம் கார்த்திகை மாதம் இருபத்திரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதியும் ஹஸ்த நட்சத்திரமும் கும்ப லக்கினமும் சேர்ந்த சுபதினத்தில் தில்லையாண்டவர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்த்திய செய்தி செப்புத் தகட்டில் குறிக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் வடமொழிப் பகுதியில் கேரள தேசத்தில் மலைகளுக்கருகில் உள்ளவரும் மரங்களின் நிழலில் இருப்பவரும் மக்களின் அரசரும் ஆடுபவரும் அருந்தும் குடிநீருக்கருகில் இருப்பவரும் அம்பலம் என்ற சொல்லின் இலக்கணமாய் அமைந்தவரும் ஆன சிவபெருமானுக்குக் கேரளத்தைச் சேர்ந்த சிற்பி கொடுத்த செப்பேடு இது என்று சொல்லப்பட்டிருப்பதாய்த் தெரிவிக்கின்றார். இந்த மேற்கண்ட தகவல்களின் படி தில்லைக் கூத்தனைக் கேரளத்தில் சில காலம் மலைகளுக்கிடையே மர நிழலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் தில்லையில் வாழ்ந்து வந்த திருச்சிற்றம்பல முனிவர் என்பவரின் பெரு முயற்சியால் குடமுழுக்கு ஆகம விதிகளின் படி நடத்தப்பட்டிருக்கின்றது என்பதும் புலனாகின்றது. "சிற்சபையினைச் செம்பினால் மேய்ந்திடும் உண்மையினை" என்பதில் இருந்து பொன்னோடுகள் ஒருவேளை அகற்றப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றார். இதனை அடுத்து வந்த ஒரு செப்பேடும் உறுதி செய்வதாய் அவர் சொல்லுவதாவது : சர்வதாரி ஆண்டு மார்கழி மாதம் வெளியே சென்ற நடராஜருக்கு சாம்போஜி மன்னனின் ஆணையின் பேரில் கோபால் தாதாஜி என்பவர் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியதாகவும் இரத்தாட்சி ஆண்டு கார்த்திகையில் இருந்து ஆடவல்லான் தன் நடனத்தைப் பொன்னம்பலத்தில் தொடர்ந்ததாயும் சொல்லுகின்றார். விபவ ஆண்டு தை மாதம் 27ம் நாள் வியாழக்கிழமை பெளர்ணமி திதியில் இந்தக் கனகசபை மீண்டும் முழுக்க முழுக்கப் பொன்னால் வேயப் பெற்றுப் புதுப் பொலிவோடு குடமுழுக்கு நடத்தப் பெற்றதாயும் கூறுகின்றார். இது பற்றிய மேலதிக விளக்கங்கள் நாளை காண்போம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

சனி, 19 அக்டோபர், 2019

ॐசிதம்பர ரகசியம்  பகுதி : 69 ॐ

{சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன!}

சிவகாமி அம்மனின் சன்னதிக்கு நேரே பாண்டிய நாயகர் கோயிலுக்குக் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கே ஒன்பது சிவலிங்கங்கள் எழுந்தருளியுள்ள நவலிங்கம் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் பாடியுள்ள 63 நாயன்மார்கள் தவிர ஒன்பது தொகையடியார்களும் இருக்கின்றனர். இந்தத் தொகையடியார்களைக் குறித்து அவர்களைப் போற்றும் விதத்திலேயே இந்தக் கோயில் ஒன்பது சிவலிங்கங்களும் எழுப்பப்பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. கல்வெட்டுக்களில் திருத்தொண்டத்தொகையீஸ்வரம் என இது குறிக்கப்பட்டிருப்பதாயும் தெரிய வருகின்றது. இப்போது சமீபத்தில் சென்ற போதும் அதற்கு முன்னால் சென்ற போதுமே இந்தக் கோயிலைப் பார்க்க நேர்ந்தது. அதுவரையில் முடியவில்லை. மேலும் சில சரித்திரத் தகவல்கள் வெள்ளை வாரணனார் கொடுத்தவற்றில் இருந்து மேற்கோள் காட்டுகின்றேன். பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரத்து அரசர்கள் நாயக்க வம்சத்தவர் தவிர திருப்பணி செய்தவர்களில் மராட்டிய மன்னர்களும் இடம் பெறுகின்றனர் என்று இவர் தெரிவிக்கின்றார். சத்ரபதி சிவாஜியின் முதல் மகன் ஆன சாம்போஜி என்பவர் காலத்தில் தில்லை நடராஜர் சிதம்பரத்தை விட்டு வெளியே சென்று மறைத்து வைக்கப் பட்டிருந்தவர் வெளியே வந்ததாயும் இவர் காலத்திலேயே சிற்றம்பலத்திற்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடைபெற்றதாயும் தெரிவிக்கின்றார். இவரின் அதிகாரியான கோபால் தாதாஜி என்பவர் இவருக்காக இந்தப் பணிகளை நிறைவேற்றித் தந்ததாயும் அரசரின் குருவான முத்தையா தீட்சிதர் குடமுழுக்கை முன்னின்று நடத்தி வைத்ததாயும் சொல்லுகின்றார். இவரின் இந்தத் திருப்பணிகள் பற்றிய குறிப்புகள் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட, “தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50 என்னும் நூலில் சொல்லி இருப்பதாயும் சொல்லுகின்றார். அந்தக் குறிப்புகள் திருவாரூர்ச் செப்பேடுகளில் இருந்து எடுக்கப்பட்டதாயும், ஆரம்பத்தில் தில்லையிலே இருந்த இந்தச் செப்பேடுகள் நடராஜர் மறைந்து வாழச் சென்ற போது அவருடன் திருவாரூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலப்போக்கில் திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப்பட்டிருப்பதாயும் இவர் கூறுகின்றார். நடராஜர் மறைத்து வைக்கப்பட்ட வரலாறு பற்றிச் சில குறிப்புக்களைப் பார்த்துவிட்டுப் பின்னர் சமகாலத் திருப்பணிகள் பற்றியும் பார்த்துவிட்டு இதை முடிக்கலாம் என எண்ணம். மகமதியர் படை எடுப்பின் போது தென்னாட்டிற்கு வந்த ஒளரங்கசீபின் படைகள் செஞ்சியில் தங்கி இருந்ததாயும் அப்போது நடராஜருக்கும் கோயிலுக்கும் ஆபத்து நேருமோ என எண்ணிய தில்லை தீட்சிதர்கள் நடராஜரை இடம் பெயர்த்துத் திருவாரூருக்கு எடுத்துச் சென்றதாய் ஒரு குறிப்பும் ஹைதர் அலி காலத்திலும் ஒரு முறை நடராஜர் இடம் பெயர்ந்ததாயும் சொல்லுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுக்களில் இருப்பதாயும் கூறுகின்றார். இது தவிர மராட்டிய மன்னன் சாம்பாஜி காலத்துச் செப்பேடுகளிலும் இந்த விஷயம் வடமொழி தமிழ் இரண்டிலும் பொறிக்கப்பட்டிருப்பதாயும் கூறுகின்றார். அவை பற்றிய விபரங்கள் நாளை.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 68 ॐ
        {சில தகவல்கள்}
சீக்கிரம் முடிக்கணும்னு நினைச்சாலும் சில பல தகவல்களுக்குக் காத்திருப்பதால் நேரமும் ஆகி விடுகிறது. அநேகமாய் இன்னொரு பயணம் சிதம்பரம் போனால் தான் சரியா இருக்குமோ என்னமோ?? இப்போ அடுத்துப் பார்க்கலாம்.

பொதுவாக சிவன் கோயில்களில் விஷ்ணு ஒரு பரிவார தேவதையாகவோ அல்லது தனி சன்னதியிலோ குடி இருப்பார். ஆனால் விஷ்ணு கோயில்களில் அப்படி சிவன் இருப்பதில்லை. ஒரு சில கோயில்கள் தவிர அதில் திருமலையிலும் கடல் மல்லையிலும் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து இருந்ததாய்த் தெரிய வருகின்றது. சில ஆழ்வார்களின் பாடல்களின் மூலமும் சிவ, விஷ்ணு சன்னதிகள் ஒரே கோயிலில் இருந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. அத்தகைய கோயில்கள் மிகப் பழமையானவை என்றும் அத்தகைய பழமையான கோயில்களில் சிதம்பரமும் ஒன்று எனவும் தெரியவருகின்றது. இதன் மூலம் மூலப் பரம்பொருள் ஒன்றுதான் என்றும் அந்த மூலப்பரம் பொருளிடம் இருந்தே சிவனும் விஷ்ணுவும் தனியாகத் தோற்றுவிக்கப்பட்டு இறை அன்பர்களால் வணங்கப் படுகின்றனர் என்பதும் புலனாகின்றது. புராணங்களில் தான் கடவுளர்களின் பல்வேறு வடிவங்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அதன் முன்னால் பிரம்மம் என்ற ஒரே தத்துவமே இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. அந்த ஒரே சக்தியை பரமேஸ்வரன் என்று எடுத்துக் கொண்டால் அவரால் தோற்றுவிக்கப் பட்டவர்களே மும்மூர்த்திகள் என்று சொல்லப் படும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர். இவர்கள் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து வருகின்றனர் என்பதும் முறையே முக்குணங்களின் சொரூபம் என்றும் (சத்வம், ரஜஸம், தமஸம்) சொல்லப்படுகின்றது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மூவருக்குள் வேற்றுமையோ அல்லது ஒருவர் உயர்ந்தவர் மற்ற இருவர் தாழ்ந்தவர் என்றோ இல்லை எனினும் அந்த அந்தப் புராணங்களுக்கு ஏற்ப விஷ்ணு சில இடங்களில் உயர்ந்தவராயும் சிவன் சில இடங்களில் பிரம்மனையும், விஷ்ணுவையும் விட உயர்ந்தவராயும் இருந்து வந்திருக்கின்றனர். பிரம்மாவும் உயர்ந்தவராய் வெகு சில சமயங்களில் இருந்து வந்திருப்பதாயும் அவரின் வழிபாடு அவருக்கு ஏற்பட்ட சாபம் காரணமாய் நிறுத்தப்பட்டது என்றும் புராணங்கள் வாயிலாய் அறிகின்றோம். சிதம்பரம் கோயில் அத்தகைய சிவ, விஷ்ணு சேர்ந்து இருந்து வழிபடும் முறைக்கு ஒரு முக்கிய சான்று ஆகும். நடராஜர் எங்கே இருந்து ஆடுகின்றாரோ அதை தினமும் பார்க்கும் வண்ணம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கோவிந்தராஜரின் சன்னதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் ஒரே சமயத்தில் தில்லை கோவிந்தராஜரின் தரிசனமும், தில்லை நடராஜரின் தரிசனமும் கிடைக்கும் வண்ணம் கோயிலின் சன்னதிகள் அமைக்கப் பட்டுள்ளன. மாணிக்க வாசகர் தம் திருக்கோவையாரில்

புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்

னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று

வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.

என்று சிவனின் அடி முடி கண்டதைக் குறிப்பிட்டுச் சொல்லுகின்றார். மேலும் சிவ புராணத்திலும் பத்ம புராணத்திலும் சிவனும், விஷ்ணுவும் ஒருவரே என்றும் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இருவரும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத சக்திகள் என்றும் குறிப்பிடுகின்றனர். பக்தி இலக்கியம் வேரூன்றப்பட்ட சமயங்களுக்குப் பின்னரே தனித்தனியாய்ப் பிரிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. ஆகவே அதற்கு ஏற்ப பின்னர் வந்த அரசர்களும் ஒரு சமயம் தீவிர சைவர்களாயும் ஒரு சமயம் தீவிர வைஷ்ணவர்களாயும் மாறி மாறி இருந்து வந்திருக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு அரசர்களும் ஒவ்வொரு வகையில் சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை மறுக்கவே முடியாது. மேலும் பொய்கையாழ்வார் தம் முதலாம் மூன்றாம் திருவந்தாதியில் கீழ்க்கண்டவாறு ஹரியோடு ஹரனையும் கண்டதாயும் சொல்லுகின்றார்.

"தாழ் சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னானுந்தோன்று மால் - சூழத்
திரண்டருவி பாயுந் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 67

(நடராஜரும், தியாகராஜரும் சில விளக்கங்கள்)

தில்லை நடராஜர் ஆடியது ஆனந்தக் கூத்து என்றால் திருவாரூர் தியாகராஜர் ஆடியதோ தாளத்தை மறைத்துச் சொல்லப்பட்ட அஜபா நடனம். ஆனால் இருவருக்குமே ஆதிரைத் திருநாளே விசேஷ நாளாகச் சொல்லப்படுகின்றது. திருவாதிரைத் திரு நாளில் இருவரின் தேர் உலா மிக மிகப் பிரசித்தி பெற்றது. நடராஜரும் தியாகராஜரும் தேரில் மட்டுமே உலா வருவார்கள். அதன் பின்னர் பெரிய அளவிலான அபிஷேகங்கள் இருவருக்கும் நடைபெறும். ஆண்டுக்கு ஆறு முறைகள் மட்டுமே இருவருக்கும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தில்லையில் ரகசியம் என்று சொல்லப்படும் சிதம்பர ரகசியம் காண 96 கண்கள் உள்ள சாளரம் மூலமே பார்க்க வேண்டும். ஆனால் திருவாரூரிலோ அப்பனின் திருமேனியே ரகசியம். இது சோமகுல ரகசியம் என்று சொல்லப்படும். தில்லை அம்பலத்தைப் பொன்னம்பலம் என்று சொன்னால் திருவாரூரை பூவம்பலம் என்று சொல்லுவார்கள். தில்லையில் நம சிவாய ஓதப்பட்டால் திருவாரூரில் தியாகேசா ஆரூரா என்றே சொல்லுவார்கள். இருவருக்குமே செங்கழுநீர் மாலை விசேஷமாய்ச் சொல்லப்படுகின்றது. இரு கோயில்களும் ஆயிரங்கால் மண்டபம் கொண்டது. தில்லைக் கோயிலை ஆகாச ரூபமாய்ப் பார்த்தால் திருவாரூரோ பூமி வடிவாய்ப் பார்க்கப் படுகின்றது. ஈசன் இரு இடங்களிலுமே விண்ணாகி மண்ணாகி எல்லாமாய்த் தான் இருப்பதைத் தெரிவிக்கின்றான். இந்த இரு கோயில்களிலும் இருந்த பழைய மூலஸ்தான லிங்கத் திருமேனி மூலட்டானேஸ்வரர் என்றே அழைக்கப்படுகின்றது. தில்லைக் கூத்தனின் பாத தரிசனமும் விசேஷம் அதே போல் திருவாரூர் தியாகராஜாவின் பாத தரிசனமும் விசேஷம். பதஞ்சலி வியாக்ரபாதர் இருவருமே இந்த இரு இடங்களிலுமே பாத தரிசனம் கண்டதாய்ச் சொல்லப்படுகின்றது. தில்லையிலே அதிர வீசி ஆடிய இடப் பாதத்தைக் கண்டால் திருவாரூரில் இருந்து ஆடிய கூத்தைக் கண்டனர். இன்று நாமும் காண முடிகின்றது. திருவாரூரில் கமலாம்பிகையும் நீலோற்பலாம்பிகையும் தேவியர். தில்லையிலே சிவகாமி அம்மையும் மூலட்டான நாயகியும் தேவியர். நடராஜர் சேக்கிழாருக்கு "உலகெலாம்" என்று துவங்கும் அடியை எடுத்துக் கொடுத்துப் பெரிய புராணத்தை பாடச் சொல்லும் முன்னரே திருவாரூரில் சுந்தரருக்கு "தில்லை" என்று அடி எடுத்துக் கொடுத்திருக்கின்றார். இப்படி விண் தத்துவத்தையும் மண் தத்துவத்தையும் அடியார்கள் மூலம் இருவருமே பாமர மக்களுக்கு உணர்த்துகின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

வியாழன், 17 அக்டோபர், 2019

ஐப்பசி ஸ்பெஷல் ! துலா ஸ்நானம் !

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால் இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர். ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம் என்கின்றன ஞான நூல்கள். துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மஹா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அதில் ஸ்நாநம் செய்தவர்கள் அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.

துலா மாதத்தில் காவேரிக் கரையில் எவனோருவன் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் இவற்றைச் செய்கிறானோ அப்படிச் செய்யப்பெற்ற அவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை த்ருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. ப்ரஹ்மா முதலான ஸகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்த்ராணி முதலியவர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும் துலா மாதத்தில் ஸ்நாநம் செய்ய விரும்பி வருகின்றனர். காவேரிக் கரைகளில் பிறந்து வளர்ந்த பசு பக்ஷி முதலானவையும் அதன் காற்றினால் பரிசுத்தங்களாக ஆகி மோக்ஷத்தை அடைகின்றன என்றால் பக்தி ச்ரத்தையுடன் ஸ்நானம் செய்தவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

மேலும் மஹான்களின் பெருமை, துளஸியின் மஹிமை, கங்கையின் ப்ரபாவம், துளஸியைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனையின் வைபவம், ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவேரியின் பெருமை இவற்றை உபதேசிக்கக் கேட்பவர்கள் மஹாபாக்கியசாலிகள். ஐந்மாந்தரங்களில் புண்யம் செய்தவர்களே காவேரியைக் காணும் பாக்கியத்தையும் அதில் ஸ்நாநம் செய்ய யோக்யதையையும் பெற்றவர்களாக ஆகின்றனர். ஸாமான்யமானவர்களுக்கு இது கிட்டாது. நதிகளில் மஹா விஷ்ணுவின் திருவடியிலிருந்து உண்டான கங்கை எப்படி உயர்ந்ததோ, புஷ்பங்களில் துளஸி எவ்வாறு மேற்பட்டதோ, வ்ரதங்களுக்குள் ஏகாதசி வ்ரதம் எப்படி உயர்ந்ததாக உள்ளதோ க்ருஹஸ்தர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களுள் பஞ்ச மஹாயஜ்ஞங்கள் எவ்வாறு உயர்ந்தவையோ, சுத்திகளுக்குள் மநஸ்ஸுத்தி எப்படி உயர்ந்ததோ, தேவதைகளுள் ஸ்ரீமந்நாராயணன் எவ்வாறு உயர்ந்தவராக விளங்குகிறாரோ அக்ஷரங்களுக்குள் ஓங்காரம் எவ்வாறு உயர்ந்ததோ, வேதங்களுள் ஸாமவேதம் எப்படி உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறதோ, பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரம் எப்படி உயர்ந்தவராக உள்ளாரோ, ப்ராஹ்மண ஸ்த்ரீகளுள் அருந்ததி எவ்வாறு மேம்பட்டவளோ, ஸ்த்ரீகளுக்குள்மஹாலக்ஷ்மி எப்படி உயர்ந்தவளோ, தானங்களுக்குள் அந்நதானம் எப்படி உயர்ந்ததோ அதே போல் நதிகளுக்குள் உயர்ந்தது காவேரி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.

ஐப்பசி முதல் நாளன்று  திருப்பராய்த்துறையிலும் ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மஹா விஷ்ணுவின் அருள் கிட்டும். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்குமுன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி முப்பதாம் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

‘ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீ மஹா விஷ்ணு "நீ காவேரி நதியில் நீராடு உன் பாவம் நீங்கும்" என்றார்.

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

அதன் படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புரான இதிகாசங்களில் போற்றப்படுகின்றது

துலா மாதத்தில் காவிரியில்  ஒரு முறை நீராடுபவன் ஸ்ரீமன் நாராயணனாக மாறுகிறான். மற்ற விரதங்களில் ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால், காவிரி துலா ஸ்நானத்திற்கு அப்படி எதுவுமில்லை. மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும் முன்னோர்களின் பாபங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே காவிரியை நினைத்தாலும் சிறப்பைக் கேட்டாலும் பாபங்கள் விலகும் என்றார் பிரம்மா நதி தேவதைகளிடம் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும்,
தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும் அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள் புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக்குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில் ஸ்ரீ ரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வார்கள்.

துலா காவேரி மஹாத்மியம்:

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத் திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி - பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்த போது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன், மேலும் கூறலானார்:

"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும் தரிசித்தாலும் அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.

நாத சந்மா என்பவன் பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள் தங்கள் பத்திநிகளுடனும் புத்திரர்களுடனும் தங்கி ஹோமாக்னி செய்து பலவித தானங்களை செய்து வரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால் காவேரி மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று அனவித்யை கேட்க நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

காவிரி உருவான கதை:

காவேரன் என்ற அரசன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர் "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லா விட்டாலும் ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண் தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர் அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து லோபா முத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்து கொண்டவுடன் அவள் விரும்பியபடியே நதி ரூபமாகி பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால் தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். துலா மாதத்தில் காவேரியில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது. தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்.

அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது. முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மஹா விஷ்ணுவிற்கு பற்றிய #வீரஹத்தி தோஷம் போக்க காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம். ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன் அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து அதை வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும். காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும். துலா காவேரி ஸ்நானம் செய்யும் முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.

"கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"

ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் போற்றப் படுவதுபோல் ஐப்பசி பௌர்ணமி
அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப் படுகின்றன.

புதன், 16 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 66 ॐ

{திருக்குறிப்புத் தொண்டர் தொடர்ச்சி}

குளிர் தாங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த அடியார் திருக்குறிப்புத் தொண்டர் தன் துணியைத் துவைத்துத் தருவதாய்ச் சொல்லக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்து விட்டு மேலும் சொல்லுவார் ஆஹா இந்த ஒரு கந்தல் தான் என்னிடம் மீதி உள்ளது. இதையும் தங்களிடம் கொடுத்து விட்டு நான் செய்வது என்னவோ??? ஏற்கெனவே குளிர் தாங்க மாட்டாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றேனே! என்று சொல்கின்றார். மன வேதனை திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் தெரிய தன் பக்தன் மனம் வாடுவது பொறுக்காத அந்த கைலைவாசன் சற்று நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்து விட்டுப் பின்னர் மாலைக்குள் துணியைத் துவைத்துச் சுத்தமாய் உலர்த்தித் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் துணியைக் கொடுக்கின்றார். அப்படியே ஒத்துக் கொண்டு திருக்குறிப்புத் தொண்டர் துணியை பெற்றுக் கொள்கின்றார். குளிர் தன்னால் பொறுக்க முடியாது என்று அந்தக் கூத்தன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் நீர்த்துறைக்கு வந்து துணியைத் துவைக்கத் தொடங்கினார். ஆரம்பம் ஆயிற்று ஈசனின் திருவிளையாடல். வருணனுக்குக் கட்டளை இட திடீரென சூரிய ஒளியால் பிரகாசமாய் இருந்த வானம் கார் மேகங்களால் மூடிக் கொண்டது. கும்மிருட்டு சூழ்ந்தது அந்தப் பகல் வேளையிலேயே. தொண்டரின் மனமும் இருள் சூழ்ந்து கலங்கியது. எவ்வாறு துவைப்பது? எங்கே காய வைப்பது??? கலங்கும் வேளையிலேயே திடீரெனக் காற்று, இடி, மின்னல், பெருமழை! பேய்க் காற்று என்பது இது தானோ??? ஊழிப் பெரும் மழையோ?? அண்டசராசரமும் குலுங்கும் வண்ணம் இடி இடிக்க மின்னல் கண்ணைப் பறித்தது. மழையோ நிற்கக் காணோமே?? என்ன செய்வது? கலங்கினார் தொண்டர். ஆஹா தவறு செய்துவிட்டோமே?? ஏற்கெனவே உடல் இளைத்து மெலிந்து இருந்தாரே சிவனடியார்? இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே? மழை ஆரம்பிக்கும் போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒரு வேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ?? தவறு செய்து விட்டோமோ? அடியாருக்கு சிவனடியாருக்குத் துரோகம் புரிந்த நம் உயிர் உடலில் தங்கலாமா? இதோ உயிரைப் போக்கிக் கொள்ளலாம். என்று எண்ணிய வண்ணம் துவைக்கும் கல்லிலே தன் தலையைத் தானே மோதிக் கொள்ள துவங்கினார்.

125. கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத் தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை 1202-4

126. வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின் மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர் தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் 1203-4

127. முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் 1204-4

அப்போது ஈசன் தன் பக்தனைச் சோதிக்க விரும்பாமல் அந்தப் பாறையினின்றும் தன் மலர்க்கையை நீட்டி அவரது சிரத்தைத் தாங்கிக்காக்க நிமிர்ந்த திருக்குறிப்புத் தொண்டரின் கண்களிலே ரிஷபவாகனன் காட்சி கொடுக்கின்றான். மேலும் இந்த வண்ணார் மடம் பற்றிய தகவல்களை மீண்டும் சிதம்பரம் செல்லும் போது அறிந்து வரவேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ