வியாழன், 1 ஆகஸ்ட், 2019

முதல் அத்தியாயம்

கட உபநிஷதத்திற்கு ஒரு முன்னுரைபோல் அமைகிறது இந்த முதல் அத்தியாயம். மரணத்தை ஆராய, மறு வாழ்க்கையைச் சிந்திக்க, உயர் வாழ்க்கையை விரும்ப, ஆன்மாவை உணர, இறைவனை நாட எத்தகைய மனப்பக்குவம் தேவை, என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையெல்லாம் இங்கே நாம் காண்கிறோம். நசிகேதன் என்ற சிறுவனிடம் இவையெல்லாம் இருந்தன என்று கூறுவதன்மூலம், உயர்வாழ்க்கையை விரும்புவர்களிடம் இத்தகைய பண்புகள் வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் சுட்டிக்காட்டுகிறது.

நசிகேதனின் தந்தை செய்த யாகம்

1. ஓம் உசன் ஹ வை வாஜச்ரவஸ: ஸர்வவேதஸம் ததௌ
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ

ஹ வை-முன்பொரு சமயம்; வாஜச்ரவஸ-வாஜசிரவஸ்; உசன்-பலனில் ஆசை கொண்ட வராய்; ஸர்வவேதஸம்-தன்னிடமுள்ள எல்லாப் பொருட்களையும்; ததௌ-கொடுத்தார்; தஸ்ய-அவருக்கு; நசிகேதா நாம-நசிகேதன் என்ற பெயருள்ள; புத்ர:-மகன்; ஆஸ ஹ-இருந்தான்.

பொருள் : முன்பொரு சமயம் வாஜசிரவஸ் என்பவர் பலனில் ஆசை கொண்டவராய் தன்னிடமுள்ள எல்லாப் பொருள்களையும் தானமாகக் கொடுத்தார். அவருக்கு நசிகேதன் என்ற மகன் இருந்தான்.

இயற்கையை எண்ணற்ற சக்திகள் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு சக்தியையும் ஒரு தேவனாகக் கண்டார்கள் வேத முனிவர்கள். காற்று வீசுவதும். சூரியன் சுடுவதும், மழை பெய்வதும் எல்லாம் இந்த தேவர்களின் ஆற்றலால் என்று அவர்கள் கருதினர். இந்த தேவர்களை வழிபடுவதன்மூலம் உலக வாழ்க்கைக்கான அனைத்தையும் பெறலாம் என்று கண்ட அவர்கள், தேவர்களை வழிபடுவதற்காகக் கண்ட வழிமுறையே யாகம். இக உலக வாழ்க்கைக்கான வசதிகளைப் பெறுவதற்கானாலும், சொர்க்க போகங்களை அனுபவிப்பதற்கானாலும், மோட்ச மார்க்கத்திற்கு ஆனாலும் அவர்கள் யாகத்தை வழியாகக் கொண்டனர்.

யாக குண்டத்தில் அக்கினி வளர்த்து, குறிப்பிட்ட தேவனை உத்தேசித்து, உரிய மந்திரங்களுடன் உரிய பொருட்களைச் சமர்பித்து வழிபடும்போது அந்த யாகம் அதற்குரிய பலனைத் தருகிறது. அத்தகையதொரு யாகம் விசுவஜித். பேரரசனாகி உலகத்தையே ஆள்வது இந்த யாகத்தால் பெறப்படும் பலன். ஆனால் அந்த யாகத்திற்கான நிபந்தனை வினோதமானது-அனைத்தையும் ஆள்வது நோக்கம், நிபந்தனை என்னவென்றால் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.

வாழ்க்கையைக் கொடுத்தால் வாழ்க்கையைப் பெறலாம் என்பார் சுவாமி விவேகானந்தர். எல்லாம் நமக்கு வேண்டுமென்றால் நாம் எல்லாவற்றையும் விட வேண்டும். அதாவது அனைத்தையும் துறந்தவனுக்கு அனைத்தும் உரியதாகும். வேதகாலத்திலிருந்தே வந்திருக்கின்ற கருத்துச் செல்வம் இது. உலகையே ஆளும் நோக்கத்துடன் விசுவஜித் யாகத்தைச் செய்தார் வாஜசிரவஸ். யாக முடிவில் தமது செல்வம் அனைத்தையும் தானம் செய்தார்.

தானப் பொருட்களைக் கண்ட நசிகேதனின் சிந்தனை

2. தம் ஹ குமாரம் ஸந்தம் தக்ஷிணாஸு நீயமானாஸு ச்ரத்தா விவேச ஸோமன்யத

தக்ஷிணாஸு-தட்சிணைகள்; நீயமானாஸு-எடுத்துச் செல்வதைக் கண்டபோது; குமாரம்-சிறுவனாக; தம் ஹ ஸந்தம்- இருக்கின்ற அவனை; ச்ரத்தா-சிரத்தை; ஆவிவேச-வந்தடைந்தது; ஸ-அவன்; அமன்யத-சிந்திக்கலானான்.

பொருள் : தட்சிணைகள் எடுத்துச் செல்வதைச் சிறுவனான நசிகேதன் கண்டான். சிரத்தை அவனை வந்தடைந்தது. அவன் சிந்திக்கலானான்.

சிரத்தை என்றால் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை என்று பொருள் கொள்ளலாம். நம்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதல்ல; அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது, அந்த நம்பிக்கையின் லட்சியத்தை அடையப் பாடுபடுவது-இதுவே சிரத்தை. உயர் லட்சியத்தை அடைவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் சிரத்தை தேவை (ச்ரத்தா யத்பூர்வக: ஸர்வ புருஷார்த்த ஸாதன ப்ரயோக-முண்டக உபநிஷதம்)என்கிறார் ஸ்ரீ சங்கரர். இத்தகைய சிரத்தையே இன்று நமக்கு வேண்டியது என்பார் சுவாமி விவேகானந்தர். சிரத்தையின் பெருமையைப் போற்றுவதாகவும் அது நம்மிடம் வருமாறு பிராத்திப்பதாகவும் ரிக் வேதத்தில் ச்ரத்தா ஸூக்தம் என்று ஒரு பாடலே உள்ளது. சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. இதய தாகத்தால் அது அடையப்படுகிறது என்று அந்தப் பாடல் கூறுகிறது. அத்தகைய சிரத்தை நசிகேதனிடம் வந்தது.

நசிகேதனின் சிந்தனைக்கான காரணம்

3. பீதோதகா ஜக்தத்ருணா துக்ததோஹா நிரிந்த்ரியா
அனந்தா நாம தே லோகாஸ்தான் ஸ கச்சதி தா ததத்

பீத உதகா-தண்ணீர் குடித்து முடித்த: ஜகத் த்ருணா-புல் மேய்ந்து முடித்த; துக்த தோஹா-பால் கறந்து முடித்த; நிரிந்த்ரியா-கன்று போடும் சக்தி இழந்த; தா-அந்தப் பசுக்களை; ததத்-தானம் செய்பவன்; அனந்தா நாம-மகிழ்ச்சி இல்லாத; தே லோகா; தான்-அந்த உலகங்களை; கச்சதி-அடைகிறான்.

பொருள் : தண்ணீர் குடித்து முடித்த, புல் மேய்ந்து முடித்த, பால் கறந்து முடித்த, கன்று போடும் சக்தியை இழந்த பசுக்களைத் தானம் செய்பவன் மகிழ்ச்சி இல்லாத உலகங்களை அடைகிறான்.

ஒருவனிடம் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையை வைத்து அவனது செல்வாக்கை அந்த நாட்களில் மதிப்பிட்டார்கள். எனவே பசுக்களைத் தானம் செய்வது தானங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்பட்டது. விசுவஜித் யாகத்தின் முடிவில் அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். ஆனால் வாஜசிரவஸ் தனக்கு உதவாதவற்றையெல்லாம் தானம் என்ற பெயரில் கொடுத்தார், ஒன்றுக்கும் உதவாத கிழட்டு பசுக்களைக் கொடுத்தார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல, தானத்தின் அடிப்படைக் கருத்தைச் சரியாகக் கடைபிடிக்காததால் இரட்டைத் தவறுக்கு உள்ளானார் வாஜசிரவஸ். அதற்குத் தண்டனையாக மகிழ்ச்சியற்ற உலகங்களில் வாழவும் நேரும் என்பதைப் புரிந்துகொண்ட நசிகேதன் ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டான்.

நசிகேதன் தந்தைக்கு உண்மையை அறிவுறுத்துதல்

தந்தை செய்யும் தவறை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் நோக்கத்துடன் நசிகேதன் அவரிடம் சென்று கூறினான் :

4. ஸ ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸீதி
த்வதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா ததாமீதி

ஸ-அவன்; தத-அப்பா; மாம்-என்னை; கஸ்மை-யாருக்கு; தாஸ்யஸி-கொடுக்கப் போகிறீர்கள்; இதி-என்று; பிதரம்-தந்தையை; உவாச ஹ-சொன்னான்; த்விதீயம்-இரண்டாவது முறை. த்ருதீயம்-மூன்றாம் முறை; த்வா உன்னை; ம்ருத்யவே-எமனுக்கு; ததாமி-கொடுக்கிறேன்; இதி-என்று; தம்-அவனிடம்; உவாச ஹ-சொன்னார்.

பொருள் : நசிகேதன் தந்தையிடம் சென்று, அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான். இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்குத் தந்தை, உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் என்று கூறினார்.

தந்தை தவறு செய்வதைக் கண்டு ஆழ்ந்து சிந்தித்த நசிகேதன், அவரைத் தவறிலிருந்து காப்பாற்றி, அவர் மகிழ்ச்சியற்ற உலகங்களை அடையாமல் தடுப்பது தனது கடமை என்று உணர்ந்தான். சிறுவனான தான் நேரடியாக நீங்கள் செய்வது தவறு என்று தந்தையிடம் கூறினால் அது அதிகப்பிரசங்கித்தனமாக ஆகிவிடும் என்று கருதி, மறைமுகமாக அவருக்கு விஷயத்தைத் தெளிவுபடுத்த எண்ணினான்.

சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது யாகத்தின் நிபந்தனை. ஒரு தந்தைக்கு நல்ல மகனைவிடச் சிறந்த செல்வம் இல்லை. எனவே என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று நசிகேதன் வாஜசிரவஸிடம் கேட்டான். இதன் மூலம் சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே! என்று அவருக்கு நினைவூட்டினான்.

நசிகேதனின் இந்தக் கேள்வியை முதலில் வாஜசிரவஸ் பொருட்படுத்தவில்லை. சிறுவன் ஏதோ சொல்கிறான் என்று விட்டுவிட்டார். ஆனால் நசிகேதன் விடவில்லை. தந்தையை அணுகி மீண்டும் கேட்டான். அதற்கும் வாஜசிரவஸ் பதில் சொல்லவில்லை எனவே மூன்றாம் முறையாகக் கேட்டான். அதனால் கோபமுற்ற வாஜசிரவஸ், உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன், அதாவது, நீ செத்துத் தொலை என்று ஆத்திரத்துடன் கூறினார்.

நசிகேதனின் சுய மதிப்பு

5. பஹூனாமேமி ப்ரதமோ பஹூனாமேமி மத்யம
கிம் ஸ்வித் யமஸ்ய கர்த்தவ்யம் யன்மயாத்ய கரிஷ்யதி

பஹூனாம்-பல விஷயங்களில்; ப்ரதம: ஏமி-முதல் நிலையில் உள்ளேன்; பஹூனாம்-பல விஷயங்களில்; மத்யம: ஏமி-இடைநிலையில் இருக்கிறேன்; யமஸ்ய-எமனுக்கு; கிம்ஸ்வித்-என்ன; மயா-என்னால்; கரிஷ்யதி-செய்யப் போகிறார்; அத்ய-இப்போது; கர்த்தவ்யம்-செய்யத் தக்கது; யத்-என்ன.

பொருள் : பல விஷயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விஷயங்களில் இடைநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதன்மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? என்று சிந்தித்தான் நசிகேதன்.

நசிகேதனிடம் நாம் காணும் ஒரு முக்கியப் பண்பு இது: சுய மதிப்பு. தன்னை, வாழ்க்கையில் தனது இடத்தை, தனது குறைநிறைகளை அறிந்து வைத்திருந்தான் அவன். எனவே, அவன் பல விஷயங்களில் முதல் நிலையில் உள்ளேன், பல விஷயங்களில் இடை நிலையில் உள்ளேன். ஆனால் எதிலும் கடை நிலையில் இல்லை என்று துணிச்சலாக தன்னை மதிப்பிடுகிறான்; அப்படிப்பட்ட என்மீது தந்தை ஆத்திரப்படுகிறாரே! எதற்காக நான் அவரிடம் இதைச் சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளாமல் என்னை எமனிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டாரே என்று ஆதங்கப்படுகிறான்.

நசிகேதன் தந்தையிடம் சிந்திக்குமாறு கூறியது

தந்தை ஆத்திரத்தால் சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், தான் எமனிடம் போயே ஆக வேண்டும் என்பதை நிச்சயித்துக்கொண்டான் நசிகேதன். ஆனால் போகுமுன் அவருக்கு உண்மையை உணர்த்த விரும்பிய அவன் அவரிடம் கூறினான்.

6. அனுபச்ய யதா பூர்வே ப்ரதிபச்ய ததாபரே
ஸஸ்யமிவ மர்த்ய பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புன

பூர்வே-முன்னோர்; அனு-முறையே; யதா-எப்படி இருந்தார்களோ; பச்ய-பாருங்கள்; ததா-அப்படியே செய்யுங்கள்; மர்த்ய-மனிதன்; ஸஸ்யம் இவ-செடிகொடிகளைப் போல்; பச்யதே-அழிகிறான்; புன-மீண்டும்; ஸஸ்யம் இவ-செடிகொடிகளைப் போலவே; ஆஜாயதே-பிறக்கிறான்.

பொருள் : முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இப்போதுள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துப் பாருங்கள். செடிகொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான் என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.

வாழ்க்கையில் அனுபவங்கள் பெரிய வழிகாட்டிகள். நமது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால் பிறருடைய அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தீ சுடும் என்பதை நாமே அனுபவித்துப் பார்க்க வேண்டியதில்லை. பிறருடைய அனுபவத்திலிருந்தே அதைப் புரிந்துகொள்ளலாம். அதுபோல், பிறருடைய அனுபவங்களிலிருந்து உண்மையைக் கற்றுக்கொள்ளுமாறு வாஜசிரவஸிடம் கூறினான் நசிகேதன். நல்லவர்கள் இவ்வாறு தானம் செய்யவில்லை, அப்படிச் செய்தவர்கள் மகிழ்ச்சியற்ற உலகங்களை அடையாமலும் இல்லை. எனவே உண்மையாக நடந்துகொள்ளுங்கள் என்று தந்தைக்கு அறிவுறுத்துகிறான் அவன்.

அதுமட்டுமல்ல; தன்னை எமனுக்குக் கொடுப்பதாக தந்தை ஆத்திரத்திலோ கோபத்திலோ சொல்லியிருந்தாலும் அவர் சொன்ன வாக்கு காப்பாற்றப்பட வேண்டும், தான் எமனிடம் போயே ஆக வேண்டும் என்று அதனை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டான் நசிகேதன், அவனுக்குத் தந்தையிடம் வருத்தமோ கோபமோ வரவில்லை  என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

பிறகு, எமலோகம் போவதான தன் முடிவைத் தந்தையிடம் கூறினான் நசிகேதன். ஆத்திரத்தில், தான் செய்து விட்டதை எண்ணிய வாஜசிரவஸ் கவலையில் ஆழ்ந்தார். அதைக் கண்ட நசிகேதன் அவருக்கு வாழ்க்கையின் உண்மையை எடுத்துக் கூறினான். வாழ்க்கை நிலையற்றது. மனிதன் செடிகொடிகளைப்போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் உறுதி. எனவே நான் எமலோகம் போவதுபற்றி கலங்க வேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டு, எமலோகம் சென்றான் அவன்.

எமதர்மனிடம் மந்திரிகள் கூறியது : 7-8

நசிகேதன் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை. எனவே அவன் எமனின் மாளிகையின் முன்னால் மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது, அதன்பிறகே எமதர்மன் வந்தான். அவனது மந்திரிகள் அவனிடம் சென்று நசிகேதன் வந்து காத்திருப்பதைப் பற்றி கூறினர்.

7. வைச்வானர: ப்ரவிசதி அதிதிர் ப்ராஹ்மணோ க்ருஹான்
தஸ்யைதாம் சாந்திம் குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம்

அதிதி-விருந்தினனாக; ப்ராஹ்மண:-தூயவன்; வைச்வானர-நெருப்பு; க்ருஹான்-வீட்டில்; ப்ரவிசதி-நுழைகிறான்; தஸ்ய-அவனுக்கு; ஏதாம்-இவற்றைக் கொடுத்து; சாந்திம்-அமைதியை; குர்வந்தி-செய்கின்றனர்; வைவஸ்வத-எம தர்மனே; உதகம்-தண்ணீர்; ஹர-கொண்டுவா

பொருள் : தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்புப் போலவே நுழைகிறான். நல்லவர்கள், அவனுக்குத் தண்ணீர் முதலானவற்றைக் கொடுத்து, உபசரித்து அவனை அமைதிப்படுத்துகின்றனர். எமதர்மனே! நீயும் அந்தச் சிறுவனுக்கு தண்ணீர் முதலியவற்றைக் கொடு என்று மந்திரிகள் எமதர்மனிடம் கூறினர்.

விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்குரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அவர் கூறுவதுபோல், விருந்தினரை உபசரித்தல் என்பது இந்தியாவில் ஒரு காலத்தில் வழிபாடாகவே செய்யப்பட்டு வந்தது. அதன் முக்கியத்துவத்தை இங்கே மந்திரிகள் எமதர்மனிடம் தெரிவிக்கின்றனர்.

8. ஆசா ப்ரதீ÷க்ஷ ஸங்கதம் ஸூன்ருதாம்ச
இஷ்ட்டாபூர்த்தே புத்ர பசூம்ச்ச ஸர்வான்
ஏதத் வ்ருங்க்தே புருஷஸ்யால்பமேதஸோ
யஸ்யானச்னன் வஸதி ப்ராஹ்மணோ க்ருஹே

அல்பமேதஸ-அற்ப புத்தியுடைய; யஸ்ய புருஷஸ்ய-எந்த மனிதனின்; க்ருஹே-வீட்டில்; ப்ராஹ்மண-தூயவன்; அனச்னன்-உணவின்றி; வஸதி-வசிக்கிறானோ; ஆசா-நம்பிக்கைகள்; ப்ரதீக்ஷõ-எதிர்பார்ப்புகள்; ஸங்கதம்-புண்ணிய பலன்; ஸூன்ருதாம்-இனிய பேச்சின் பலன்; இஷ்ட்டா பூர்த்தே-யாக பலன். நற்பணிகளின் பலன்; ஸர்வான்-எல்லாம்; புத்ர பசூன் ச-பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம்; ஏதத்-அனைத்தையும்; வ்ருங்தே-நாசமாக்குகிறான்.

பொருள் : யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்ப புத்தி உடையவனான அவனது நம்பிக்கைகள், எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன. தான் செய்த புண்ணியங்களின் பலன், இனிய பேச்சின் பலன், யாகங்கள் வழிபாடு போன்றவற்றின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறான். அவனது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன.

தூயவன் ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவனை உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது. உபசரிக்காவிட்டால் எல்லா செல்வமும் அழியும். அதேவேளையில், உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப் பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பது உணர்த்தப்படுகிறது.

எமதர்மனின் உபசாரம்

மந்திரிகள் கூறியதைக் கேட்ட எமதர்மன் நேராக நசிகேதனிடம் சென்று அவனை உபசரித்தான்

9. திஸ்ரோ ராத்ரீர் யதவாத்ஸீர் க்ருஹே மே
னச்னன் ப்ரஹ்மன் அதிதிர் நமஸ்ய
நமஸ்தேஸ்து ப்ரஹ்மன் ஸ்வஸ்தி மேஸ்து
தஸ்மாத் ப்ரதி த்ரீன் வரான் வ்ருணீஷ்வ

ப்ரஹ்மன்-வழிபாட்டிற்கு உரியவனே; அதிதி-விருந்தாளி; நமஸ்ய-வணங்கத் தக்க; திஸ்ர; ராத்ரீ-மூன்று இரவுகள்; அனச்னன்-உணவின்றி; மே-எனது; க்ருஹே-வீட்டில்; யத் அவாத்ஸீ-வசித்தாய்; ப்ரஹ்மன்-தூய பாலனே; தஸ்மாத்-அதனால்; மே-எனக்கு; ஸ்வஸ்தி-நன்மை; அஸ்து-உண்டாகட்டும்; தே-உனக்கு; நம: அஸ்து-வணக்கம்; ப்ரதி-அதற்காக; த்ரீன்-மூன்று; வரான்-வரங்களை; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்.

பொருள் : வழிபாட்டிற்கு உரியவனே! விருந்தாளியும் வணங்கத் தக்கவனுமான நீ உணவின்றி என் வீட்டில் மூன்று இரவுகள் தங்க நேர்ந்தது. தூய பாலனே! அந்தக் குற்றம் என்னைப் பாதிக்காமல் எனக்கு நன்மை உண்டாகட்டும். உனக்கு வணக்கம். நீ மூன்று இரவுகள் தங்க நேர்ந்ததற்காக என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக்கொள்.

முதல் வரம் : தந்தையின் நலம்(10-11)

நசிகேதன் கேட்டது

10. சாந்த ஸங்கல்ப: ஸுமனா யதா ஸ்யாத்
வீதமன்யுர் கௌதமோ மாபி ம்ருத்யோ
த்வத் ப்ரஸ்ருஷ்ட்டம் மாபி வதேத் ப்ரதீத
ஏதத் த்ரயாணாம் ப்ரதமம் வரம் வ்ருணே

ம்ருத்யோ-எமதர்மனே; கௌதம-கௌதமர்; த்வத் ப்ரஸ்ருஷ்ட்டம்-உன்னால் அனுப்பப்பட்ட; மா அபி-என்னை; ப்ரதீத-நினைவைப் பெற்று; சாந்த ஸங்கல்ப-மனக்கவலை அற்றவராக; ஸுமனா: தெளிந்த மனத்தினராக; வீத மன்யு-கோபம் அற்றவராக; ஸுமனா-தெளிந்த மனத்தினராக; வீத மன்யு-கோபம் அற்றவராக; யதா ஸ்யாத்-எவ்வாறு ஆவாரோ; வதேத்-பேச வேண்டும்; த்ரயாணாம்-மூன்று வரங்களுள்; ஏதத்-இதனை; ப்ரதமம் வரம்-முதல் வரமாக; வ்ருணே-கேட்கிறேன்.

பொருள் : எமதர்மனே! உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தையாகிய கவுதமர் புரிந்துகொள்ளவேண்டும். என்னை ஏற்றுக்கொண்டு, மனக்கவலை அற்றவராக, தெளிந்த மனத்தினராக, கோபம் அற்றவராக என்னுடன் பேச வேண்டும் மூன்று வரங்களுள் இதையே முதல் வரமாகக் கேட்கிறேன்.

எமனைச் சந்தித்து வருகின்ற இவன் ஆவியல்ல, என் மகன்தான் என்று வாஜசிரவஸ் புரிந்துகொள்ள வேண்டும், தான் ஒரு தவறு செய்ததாகக் கோபம் கொண்ட அவர் இப்போது அந்தக் கோபத்தை விட்டிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நசிகேதன் முதல் வரமாகக் கேட்டான்.

எமதர்மன் வரமளித்தல்

11. யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத
ஒளத்தாலகிராருணிர் மத்ப்ரஸ்ருஷ்ட்ட
ஸுகம் ராத்ரீ: சயிதா வீதமன்யு
த்வாம் தத்ருசிவான் ம்ருத்யு முகாத் ப்ரமுக்தம்

ஆருணி-அருணனின் மகனான; ஒளத்தாலகி: உத்தாலகர்; புரஸ்தாத்-முன்னால்; யதா-எப்படி; ப்ரதீத: நினைவைப் பெற்று; மத்ப்ரஸ்ருஷ்ட்ட-என்னால் அனுமதிக்கப்பட்டு; ராத்ரீ-இரவில்; ஸுகம்-நன்றாக; சயிதா-தூங்குபவராக; ம்ருத்யு-முகாத்-எமனிடமிருந்து; ப்ரமுக்தம்-திரும்பிச் செல்கின்ற; த்வாம்-உன்னை; தத்ருசிவான்-கண்டு; வீதமன்யு-கோபம் அற்றவராக; பவிதா-ஆவார்.

பொருள் : அருணனின் மகனும் உனது தந்தையுமாகிய உத்தாலகர் உன்னைக் காணும்போது முன்பு போலவே உன்னைப் புரிந்துகொள்வார். என் அருளால் இரவுகளில் கவலையற்று தூங்குவார். என்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற உன்னைக் கண்டு கோபம் கொள்ளவும் மாட்டார் என்று கூறி முதல் வரத்தை அளித்தான் எமதர்மன்.

இரண்டாம் வரம் (12-18)

இரண்டாம் வரம்: சொர்க்க லோகம் 12-13

12. ஸ்வர்கே லோகே ந பயம் கிஞ்சனாஸ்தி
ந தத்ர த்வம் ந ஜரயா பிபேதி
உபே தீர்த்வா சனாயாபிபாஸே
சோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே

ஸ்வர்கே லோகே-சொர்க்கத்தில்; கிஞ்சன-சிறிதும்; பயம்-பயம்; ந அஸ்தி-கிடையாது; தத்ர-அங்கே; த்வம்-நீ; ந-இல்லை; ஜரயா-மூப்பினால்; ந பிபேதி-பயப்படுவதில்லை; ஸ்வர்க லோகே-சொர்க்கத்தில் உள்ளவன்; அசனாயாபிபாஸே-பசியையும் தாகத்தையும்; உபே-இரண்டையும்; தீர்த்வா-தாண்டி; சோகாதிக-கவலையற்றவனாய்; மோததே-மகிழ்கிறான்.

பொருள் : சொர்க்கத்தில் சிறிதும் பயம் கிடையாது. மரண தேவனாகிய நீயும் அங்கில்லை. அங்கே யாரும் மூப்பினால் பயப்படுவதில்லை. அவர்களுக்குப் பசி, தாகம் இரண்டும் கிடையாது. அவர்கள் கவலையற்றவர்களாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

13. ஸ த்வமக்னிம் ஸ்வர்க்யமத்யேஷி ம்ருத்யோ
ப்ரப்ரூஹி தம் ச்ரத்ததானாய மஹ்யம்
ஸ்வர்கலோகா அம்ருதத்வம் பஜந்தே
ஏதத் த்விதீயேன வ்ருணே வரேண

ம்ருத்யோ-எமதர்மனே; ஸ்வர்கலோகா-சொர்க்க லோகத்தில் வாழ்பவர்கள்; அம்ருதத்வம்-தேவத்தன்மையை; பஜந்தே-பெறுகின்றனர்; ஸ்வர்க்யம் அக்னிம்-சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப் பற்றி; ஸ: த்வம்-உனக்கு; அத்யேஷி-தெரியும்; ச்ரத்ததானாய-சிரத்தை மிக்கவனான; மஹ்யம்-எனக்கு; த்வம்-நீ; ப்ரப்ரூஹி-சொல்; ஏதத்-இதனை; த்வதீயேன வரேண-இரண்டாவது வரமாக; வ்ருணே-கேட்கிறேன்.

பொருள் : எமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல். இதனை இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்

மனிதனுக்கு இன்ப நுகர்ச்சியிலுள்ள நாட்டம் முடிவற்றது, ஆயுளோ குறைவு. எனவே இங்கே கிடைக்காத, இங்கே பூர்த்தி செய்ய முடியாத இன்பங்கள் வேறோர் உலகத்தில் இருப்பதாகக் கொண்டு, அங்கே சென்று தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர நினைக்கிறான் அவன். இதன் விளைவாக எழுந்ததே சொர்க்கம் என்ற கருத்து. எல்லா நாட்டுப் புராணங்களிலும் இந்தக் கருத்து இருப்பதைக் காணலாம். பசி, தாகம், மூப்பு, அனைத்திற்கும் மேலாக மரணம் போன்றவை சுகபோகங்களுக்குத் தடையாக உள்ளன. எனவே அந்தத் தடைகள் இல்லாத உலகமாக சொர்க்கத்தைக் கருதினான் மனிதன்.

சொர்க்கத்திற்குப் போவது எப்படி?

வாழ்வில் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தை நாடினான் வேதகால மனிதன் என்பதை 1.1.1 விளக்கவுரையில் கண்டோம். சொர்க்கத்திற்குப் போவதற்கென்றும் தனியாக யாகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றைப்பற்றி எமதர்மனிடம் இரண்டாவது வரமாக நசிகேதன் கேட்கிறான்.

நசிகேத வித்யை

யாகங்கள் புறத்தில் செய்யப்படுபவை. சில பொருட்களைக் கொண்டு புறத்தில் செய்யப்படுகின்ற கிரியைகள் புண்ணியத்தைத் தரலாம், சொர்க்க வாழ்வைப் பெற்றுத் தரலாம்; ஆனால் அக வளர்ச்சியைத் தருமா, அனுபூதியைத் தருமா என்ற கேள்வி காலப்போக்கில் எழுந்தது. அகப் பயிற்சிகளே அக வளர்ச்சியைத் தர முடியும் என்ற கருத்து வலுப்பெற்றது யாகங்கள் அகமுகமாக்கப்பட்டன. வித்யைகள் உருவாயின. இந்த மந்திரத்தில் யாகம் வித்யை யாகப் பரிணமிப்பதைக் காண்கிறோம்.

14. ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத
ஸ்வர்க்யமக்னிம் நசிகேத: ப்ரஜானன்
அனந்த கோலகாப்திமதோ ப்ரதிஷ்ட்டாம்
வித்தி த்வமேதம் நிஹிதம் குஹாயாம்

நசிகேத: நசிகேதா; தத் உ-நீ கேட்ட அதை; ப்ரஜானன்-அறிந்த நான்; தே-உனக்கு; ப்ர ப்ரவீமி-சொல்கிறேன்; ஸ்வர்க்யம்-சொர்க்கத்தைத் தருவதான; அக்னிம்-யாகத்தை; நிபோத-விழிப்புற்றவனாகக் கேள்; அனந்த லோக ஆப்திம் அதோ-சொர்க்கத்தைத் தருவதும்; ப்ரதிஷ்ட்டாம்-பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதும்; குஹாயாம்-இதயக் குகையில்; நிஹிதம்-இருப்பதாகவும்; த்வம்-நீ; ஏதம்-இதனை; வித்தி-அறிந்துகொள்.

பொருள் : நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப்பற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்குச் சொல்கிறேன். விழிப்புற்றவனாகக் கேள்.  சொர்க்கத்தைத் தருவதும், பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக்குகையில் உள்ளது.

சொர்க்கத்திற்குப் போவதுபற்றிய யாகத்தை அறிய விரும்பினான் நசிகேதன். அது தனக்குத் தெரியும் என்கிறான் எமதர்மன். புறக் கரியையாகச் செய்யும் போது சொர்க்கத்தைத் தருகின்ற அதே யாகம் அக அக்கினியாக, ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச்  செய்யப்படும்போது பிரபஞ்சத்திற்கு ஆதாரமான இறைவனை அடைவதற்கான ஒரு சாதனை ஆகிறது.

இறை வாழ்வில் முன்னேற முன்னேறத்தான் உபநிஷதங்களின் உட்பொருள் விளங்கும் என்று ஏற்கனவே கண்டோம். விழிப்புற்றவனாகக் கேள் என்று எமதர்மன் அதையே குறிப்பிடுகிறான். அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது என்கிறான் எமதர்மன். இதுவே நசிகேத வித்யை. இதயக்குகை என்பதை அறிவதற்கான, புத்தியை விழிப்புறச் செய்வதற்கான ஒரு பயிற்சியாக இது இருந்திருக்க வேண்டும்.
ஆன்மீக உண்மைகளை இறைவனைப்பற்றிய உண்மைகளை அறிய புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும். இந்தக் கருத்து பல இடங்களில் வலியுறுத்தப் படுவதைக் காணலாம்.

நசிகேத யாகம்: 15-16

சொர்க்கத்தை அடைவதற்கான வழி இதயக் குகையில் இருக்கிறது என்று நசிகேத வித்யையைச் சுட்டிக்காட்டிய எமதர்மன், புறத்தில் அதை யாகமாகச் செய்வதற்கான வழிமுறைகளைக் கூறுகிறான்.

15. லோகாதிமக்னிம் தமுவாச தஸ்மை
யா இஷ்ட்டகா யாவதீர்வா யதா வா
ஸ சாபி தத்ப்ரத்யவதத் யதோக்தம்
அதாஸ்ய ம்ருத்யு: புனரேவாஹ துஷ்ட்ட

லோகாதிம்-ஆதியில் தோன்றிய; தம் அக்னிம்-அந்த யாகத்தை; யா இஷ்ட்டகா-எத்தகைய செங்கற்கள்; யாவதீ: வா-எத்தனை; யதா வா-எவ்வாறு; தஸ்மை-நசிகேதனுக்கு; உவாச-சொன்னான்; ஸ: சஅபி-நசிகேதனும்; தத்-அதனை; யதா உக்தம்-சொன்னதுபோலவே; ப்ரதி அவதத்-திருப்பிச் சொன்னான்; அத-பிறகு; தஸ்ய-நசிகேதனின் பதிலால்; துஷ்ட்ட: மகிழ்ந்த: ம்ருத்யு-எமன்; புன: ஏவ-மீண்டும்; ஆஹ-சொன்னான்.

பொருள் : ஆதியில் தோன்றிய அந்த யாகத்தைப்பற்றி எமதர்மன் நசிகேதனுக்குக் கூறினான். அந்த யாகத்திற்கு எத்தகைய செங்கற்கள் வேண்டும், எத்தனை வேண்டும், எவ்வாறு யாக குண்டத்தை அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் உபதேசித்தான். எம தர்மன் கூறியவற்றை நசிகேசன் அப்படியே திருப்பிக் கூறினான். நசிகேதன் அவற்றைப் புரிந்துகொண்டதைக் கண்டு மகிழ்ந்த எமதர்மன் மீண்டும் கூறினான்.

16. தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா
வரம் தவேஹாத்ய ததாமி பூய
தவைவ நாம்னா பவிதாயமக்னி
ஸ்ருங்காம் ச இமாமனேகரூபாம் க்ருஹாண

ப்ரீயமாண-மகிழ்ச்சியுற்ற; மஹாத்மா-மகாத்மாவாகிய எமதர்மன்; தவ-உனக்கு; பூய-மீண்டும்; வரம்-வரத்தை; இஹ-இங்கே; ததாமி-தருகிறேன்; தம்-நசிகேதனிடம்; அப்ரவீத்-கூறினான்; அயம்-இந்த; அக்னி-யாகம்; தவ-உனது; நாம்னா ஏவ-பெயராலேயே; பவிதா-விளங்கட்டும்; அனேக ரூபாம்-பல்வேறு வண்ணங்களைக் காட்டுகின்ற; இமாம்-இந்த; ஸ்ருங்காம்-மாலையை; க்ருஹாண-பெற்றுக்கொள்.

பொருள் : நசிகேதனின் பதிலால் மகிழ்ச்சியுற்ற மகாத்மாவாகிய எமதர்மன் அவனிடம், உனக்கு இன்னொரு வரமும் தருகிறேன்: இந்த யாகம் இனி உனது பெயராலேயே விளங்கும். மேலும், பல வண்ணங்களைக் காட்டுகின்ற இந்த மாலையையும் பெற்றுக்கொள் என்று கூறினான்.

நல்ல திறமையான மாணவர்களிடம் ஓர் ஆசிரியருக்கும், தகுதிவாய்ந்த சீடனிடம் குருவிற்கும் ஏற்படுகின்ற உணர்ச்சியில் எமதர்மன் கூறிய வார்த்தைகள் இவை. இரண்டாவது வரத்தையும் அளித்துவிட்டு, இந்த இரண்டு வரங்களையும் அதிகமாகக் கொடுத்தான் அவன். எந்த யாகத்தால் சொர்க்கத்தை அடைய முடியமோ அது நசிகேத யாகம் என்று வழங்கப்படும் என்பது முதல் வரம். இரண்டாவதாக ஓர் அழகிய ரத்தின மாலை. இந்த ரத்தின மாலை என்பது பல்வேறு யாகங்களைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது( ஸ்ருங்காம் அகுத்ஸிதாம் கதிம் கர்ம மயீம் க்ருஹாண-ஸ்ரீசங்கரர்)

நசிகேத வித்யையின் மகிமை: 17-19

17. த்ரிணாசிகேதஸ்த்ரிபிரேத்ய ஸந்திம்
த்ரிகர்மக்ருத் தரதி ஜன்ம ம்ருத்யூ
ப்ரஹ்ம ஜஜ்ஞம் தேவமீட்யம் விதித்வா
நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

த்ரிணாசிகேத-நசிகேத யாகத்தை மும்முறை செய்து; த்ரிபி-மூவருடன்; ஸந்திம் ஏத்ய-தொடர்புகொண்டு; த்ரிகர்ம க்ருத்-மூன்று பயிற்சிகளைச் செய்து; ஜன்ம ம்ருத்யூ-பிறப்பையும் இறப்பையும்; தரதி-கடக்கிறான்; ப்ரஹ்மஜஜ்ஞம்-பிரம்மத்திலிருந்து தோன்றிய; ஈட்யம்-வழிபடத் தகுந்த; தேவம்-இறைவனை; விதித்வா-அறிந்து; நிசாய்ய-அனுபவித்து; இமாம்-இந்த; அத்யந்தம்-நிலைத்த; சாந்திம்-அமைதியை; ஏதி-பெறுகிறான்.

பொருள் : நசிகேத யாகத்தை மும்முறை செய்தவன் மூவருடன் தொடர்பு கொண்டு மூன்று பயிற்சிகளைச் செய்யும்போது பிறப்பையும் இறப்பையும் கடக்கிறான். பிரம்மத்திலிருந்து தோன்றியவரும் வழிபடத்தகுந்தவருமான இறைவனை அறிந்து அனுபவித்து அவன் நிலைத்த அமைதியைப் பெறுகிறான்.

நசிகேதனின் இரண்டாவது வரம் சொர்க்கத்திற்குப் போவதற்கான வழிபற்றியது. அந்த வழி நசிகேத யாகம். அந்தப் புற யாகத்தை சில நிபந்தனைகளுடன் செய்தால் அதுவே ஓர் அகப் பயிற்சியாக, ஒரு வித்யையாக இறை நெறியில் நம்மைச் சேர்க்கும் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது. அந்த நிபந்தனைகள் என்னென்ன?

1. மூவருடன் தொடர்பு: தாய், தந்தை, குரு ஆகிய மூவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். தாயின் அரவணைப்பு, உலக விஷயங்களில் தந்தையின் வழிகாட்டுதல், அக வாழ்க்கையில் தகுந்த குருவின் வழிநடத்தல் ஆகிய மூன்றும் உரிய வேளையில் சரியாகக் கிடைப்பவனின் வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் அந்த வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. எனவே இந்த மூவரின் ஆசிகளால் வாழ்க்கை நிறைவு பெற்றவனாக இருக்க வேண்டும்.

இந்த மூவரின் தொடர்பால் ஒருவன் இறைவனை அறிகிறான்; அதாவது இறைவன் ஒருவர் இருக்கிறார், அவரை அடைவதே வாழ்க்கையின் நோக்கம் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. இதனையே மந்திரத்தில் வரும் அறிந்து (விதித்வா) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது ஆனால் அப்படி அறிவது மட்டும் போதாது. அனுபூதியில் இறைவனை உணர வேண்டும், அனுபவிக்க வேண்டும் இதனை மந்திரத்தில் வரும் அனுபவித்து (நிசாய்ய) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அதற்கான பயிற்சிகள் எவை?

2. மூன்று பயிற்சிகள்: தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம் என்பவை மூன்றும் கர்மங்கள் அல்லது மூன்று பயிற்சிகள் என்று பதஞ்ஜலி முனிவர் கூறுகிறார்( தப: ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியாயோக:).

சொந்த தேவைகளைச் சுருக்கிக்கொள்வதும், தனது வாழ்க்கை பிறருக்குப் பயனுள்ளதாக அமையும் வண்ணம் வாழ்வதும் தவம். நல்ல நூல்களைப் படித்தல், நல்ல கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லுதல், மந்திர ஜபம், சுய ஆராய்ச்சி போன்றவை ஸ்வாத்யாயம். இறைவனை வழிபடுவதும், அவரைச் சரணடைந்து வாழ்வதும் ஈசுவர ப்ரணிதானம். இவ்வாறு மூவரின் தொடர்புடன் மூன்று பயிற்சிகளைச் செய்பவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவன் யார்?

பிரம்மத்திலிருந்து தோன்றியவர். உருவமற்ற, குணங்களற்ற அறுதி நிலையில் இறைவன் பிரம்மம் என்று வழங்கப்படுகிறார். சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ளத்தக்க நிலையில் குறிப்பிட்ட வடிவத்துடனும் குணங்களுடனும் இருக்கின்ற நிலையில் இறைவன், கடவுள் மற்றும் சிவன், விஷ்ணு, தேவி என்றும் பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இந்த நிலையிலுள்ள இறைவனை அவன் அடைகிறான்.

அதனால் விளையும் பலன் என்ன? நிலைத்த அமைதி.

இறைவனைத் தவிர வேறு எதன்மூலம் கிடைக்கின்ற அமைதியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதி, அந்தக் காரணம் விலகியதும் குலைந்துவிடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி, எதனாலும் குலையாது.

18. த்ரிணாசிகேதஸ் த்ரயமேதத் விதித்வா
ய ஏவம் வித்வாம்ச் சினுதே நாசிகேதம்
ஸ ம்ருத்யுபாசான் புரத: ப்ரணோத்ய
சோகாதிகோ மோததே ஸ்வர்க லோகே

த்ரிணாசிகேத:-மும்முறை நசிகேத யாகம் செய்த; ய-யார்; ஏதத்-இந்த; த்ரயம்-மூன்றையும்; ஏவம்-இவ்வாறு; வித்வான்-அறிந்தவன்; விதத்வா-அறிந்த பிறகு; நாசிகேதம்-நசிகேத யாகத்தை; சினுதே-செய்கிறானோ; ஸ-அவன்; ம்ருத்யுபாசாத்-எமனின் பாசக்கயிற்றை; புரத-முன்பே; ப்ரணோத்ய-உதறிக்கொண்டு; சோகாதிக-கவலையைக் கடந்து;ஸ்வர்கலோகே-சொர்க்கத்தில்; மோததே-மகிழ்கிறான்.

பொருள் : (முந்தின மந்திரத்தில் கூறிய) மூன்றையும் அறிந்து யார் நசிகேத யாகத்தைச் செய்கிறானோ அவன் உடல் விழும்முன்பே மரணத்தை வென்று, கவலைகளைக் கடந்து சொர்க்க லோகத்தில் மகிழ்ந்திருக்கிறான்.

நசிகேத யாகத்தை ஒரு வித்யையாகச் செய்யுமாறு இந்த சுலோகம் வலியுறுத்துகிறது. வெறுமனே நசிகேத யாகத்தைச் செய்வதால் சொர்க்க லோகத்திற்குச் செல்கிறான். மூன்றையும் அறிந்து நசிகேத வித்யையைச் செய்பவன் மரணத்தை வெல்கிறான்.

உடல் விழும் முன்பே, அதாவது வாழும்போதே மரணத்தை வெல்வது என்றால் என்ன என்பதை அற்புதமாக விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். அவன் அறியாமையிலிருந்து விடுபடுகிறான்; ஆசை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்கிறான் என்கிறார் அவர் (ம்ருத்யுபாசான் அதர்ம அஜ்ஞான ராக த்வேஷாதி லக்ஷணான்) அறியாமை, ஆசை போன்றவற்றின் வசப்பட்டு பிணைக்கிறது; தொடர்ந்த பிறவிக்கு வழியாகிறது. ஆசையோ வெறுப்போ அற்றவனாக வாழும்போது பிறவியற்றுப் போவதால் அது மரணத்தை வென்ற வாழ்க்கை ஆகிறது.

19. ஏஷ தேக்னிர் நசிகேத: ஸ்வர்க்யோ
யமவ்ருணீதா த்விதீயேன வரேண
ஏதமக்னிம் தவைவ ப்ரவக்ஷ்யந்தி ஜனாஸ
த்ருதீயம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ

நசிகேத: நசிகேதா; த்விதீயேன-இரண்டாவது; வரேண-வரத்தால்; யம்-எதனை; அவ்ருணீதா-கேட்டாயோ; ஸ்வர்க்ய-சொர்க்கத்தைத் தருவதான; ஏஷ-இந்த; அக்னி-யாகம்; தே-உனக்கு; உக்த; சொல்லப்பட்டது; ஏதம்-இந்த; அக்னிம்-யாகத்தை; ஜனாஸ-மக்கள்; தவ ஏவ-உனது பெயராலேயே; ப்ரவக்ஷ்யந்தி-அழைப்பார்கள்; நசிகேத-நசிகேதா; த்ருதீயம்-மூன்றாவது; வரம்-வரத்தை; வ்ருணீஷ்வ-கேள்

பொருள் : நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற எந்த யாகத்தைப்பற்றி கேட்டாயோ அதை உனக்குச் சொன்னேன். இந்த யாகத்தை மக்கள் இனி உன் பெயராலேயே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தைக் கேள்.

மூன்றாவது வரம்(20-29)

மரணத்திற்குப்பிறகு மனிதனின் நிலை: 20-22

இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது.

20. யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே
ஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே
ஏதத்வித்யாமனுசிஷ்ட்டஸ்த்வயாஹம்
வரணாமேஷவரஸ்த்ருதீய

ப்ரேதே மனுஷ்யே-மரணத்திற்குப் பிறகு; அஸ்தி-இருக்கிறான்; இதி-என்று; ஏகே-சிலரும்; அயம்-இது; ந அஸ்தி-இல்லை; இதி-என்று சிலரும்; யா இயம் இந்த-விசிகித்ஸா-சந்தேகம்; ஏதத்-இதனை; அஹம்-நான்; த்வயா-உன்னிடமிருந்து-அனுசிஷ்ட்ட-கேட்டு; வித்யாம்-தெரிந்துகொள்கிறேன்; ஏஷ-இது; வாராணாம்-வரங்களுள்; த்ருதீய-மூன்றாவது; வர-வரம்.

பொருள் : மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.

எமதர்மனின் பதில்

21. தேவைரத்ராபி விசிகித்ஸிதம் புரா
ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம
அன்யம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ
மா மோபரோத்ஸீரதி மா ஸ்ருஜைனம்

நசிகேத:-நசிகேதா; அத்ர-இந்த விஷயத்தில்; தேவை: அபி-தேவர்களுக்கும்கூட; புரா-முன்னர்; விசிகித்ஸிதம்-சந்தேகம் உள்ளது; ஏஷ-இந்த; தர்ம-விஷயம்; அணு-நுண்மையானது; ந ஹி ஸுவிஜ்ஞேயம்-எளிதாக அறியக்கூடியதல்ல; அன்யம்-வேறு; வரம்-வரத்தை; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்; மா-என்னை; மா உபரோத்ஸீ-கட்டாயப்படுத்தாதே; ஏனம்-இதனை; மா-என்னை; அதிஸ்ருஜ-விட்டுவிடு.

பொருள் : நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும்கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது; எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டுவிடு.

நசிகேதனின் பதில்

22. தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில
த்வம் ச ம்ருத்யோ யன்ன ஸுஜ்ஞேயமாத்த
வக்தா சாஸ்ய த்வாத்ருகன்யோ ந லப்யோ
நான்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கச்சித்

அத்ர-இந்த விஷயத்தில்; தேவை: அபி-தேவர்களுக்கும்; விசிகித்ஸிதம் கில-சந்தேகம் உள்ளதா; ம்ருத்யோ-எமதர்மனே; ந ஸுஜ்ஞேயம்-எளிதாக அறிய முடியாது; த்வம் ச-நீயும்; யத்-எதனால்; ஆத்த-சொல்கிறாயோ; அஸ்ய-இதனை; வக்த-உபதேசிப்பவர்; த்வாத்ருக்-உன்னைப்போல்; அன்ய-வேறொருவர்; ந லப்ய-கிடைக்க மாட்டார்; அன்ய-வேறு; கச்சித் வர-எந்த வரமும்; ஏதஸ்ய-இதற்கு; துல்ய-இணையாக; ந-ஆகாது.

பொருள் : இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.

நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயற்சி : 23-25

23. சதாயுஷ: புத்ர பௌத்ரான் வ்ருணீஷ்வ
பஹூன் பசூன் ஹஸ்தி ஹிரண்யமச்வான்
பூமேர் மஹதாயதனம் வ்ருணீஷ்வ
ஸ்வயம் ச ஜீவ சரதோ யாவதிச்சஸி

சதாயுஷ: நூறாண்டு ஆயுள் உள்ள; புத்ர பௌத்ரான்-மகன்களையும் பேரன்களையும்; வ்ருணீஷ்வ-கேள்; பஹூன்-ஏராளம்; பசூன்-பசுக்கள்; ஹஸ்தி ஹிரண்யம்-யானை, பொன், அச்வான்-குதிரைகள்; பூமியில்; மஹத்-பரந்த; ஆயதனம்-அரசையும்; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்; யாவத்-எதுவரை; இச்சஸி-விரும்புகிறாயோ; சரத-வருடங்கள்; ஸ்வயம் ச-நீயும்; ஜீவ-வாழ்க.

பொருள் : நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றைக் கேள். பூமியில் பரந்த அரசைக் கேள். நீயும் எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்துகொள்.

24. ஏதத் துல்யம் யதி மன்யஸே வரம்
வ்ருணீஷ்வ வித்தம் சிரஜீவிகாம்
மஹாபூமௌ நசிகேதஸ்த்வமேதி
காமானாம் த்வா காமபாஜம் கரோமி

ஏதத் துல்யம்-இதற்கு இணையான; வரம்-வரமாக; யதி மன்யஸே-நினைத்தால்; வ்ருணீஷ்வ-கேள்; வித்தம்-செல்வம்; சிர ஜீவிகாம் ச-நீண்ட ஆயுள்; நசிகேத-நசிகேதா; மஹா பூமௌ-பரந்த பூமியில்; த்வம்-நீ; ஏதி-இரு; த்வா-உன்னை; காமானாம்-ஆசைகளையெல்லாம்; காமபாஜம்-அனுபவிப்பவனாக; கரோமி-செய்கிறேன்.

பொருள் : நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக் கேள். செல்வம், நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எதை வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும்  அனுபவிப்பவனாகச் செய்கிறேன்.

25. யே யே காமா துர்லபா மர்த்யலோகே
ஸர்வான் காமான்ச் சந்தத: ப்ரார்த்தயஸ்வ
இமா ராமா: ஸரதா: ஸதூர்யா
நஹீத்ருசா லம்பனீயா மனுஷ்யை
ஆபிர்மத்ப்ரத்தாபி: பரிசாரயஸ்வ
நசிகேதோ மரணம் மானுப்ராக்ஷீ

நசிகேத-நசிகேதா; மர்த்யலோகே-மானிட உலகில்; துர்லபா-அடைதற்கரிய; காமா-ஆசைகள்; யே யே-எவை எவை; ஸர்வான் காமான்-யுல்லா ஆசைகளையும்; சந்தத-விருப்பம்போல்; ப்ரார்த்தயஸ்வ-கேட்டுக்கொள்; ஸரதா-தேர்களுடனும்; ஸதூர்யா-வாத்தியக் கருவிகளுடனும்; ராமா-ஆண்களை மயக்குகின்ற; இமா-இந்தப் பெண்கள்; ஈத்ருசா-இத்தகைய பெண்கள்; மனுஷ்யை-மனிதர்களால்; ந லம்பனீயா: ஹி-அடையக் கூடியவர்கள் அல்ல; மத் ப்ரத்தாபி-என்னால் தரப்பட்ட; ஆபி-இவர்களால்; பரிசாரயஸ்வ-பணிவிடை பெற்றுக்கொள்; மரணம்-மரணத்தைப்பற்றி; மா அனுப்ராக்ஷீ-கேட்காதே

பொருள் : நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல் கேட்டுக்கொள் சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப்பற்றி மட்டுமே கேட்காதே.

நசிகேதனின் ஆசையின்மை : 26-29

26. ச்வோபாவா மர்த்யஸ்ய யதந்தகைதத்
ஸர்வேந்த்ரியாணாம் ஜரயந்தி தேஜ
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ
தவைவ வாஹாஸ்தவ ந்ருத்ய கீதே

அந்தக-மரணதேவனே; ச்வோ பாவா-நிலையற்றவை; மர்த்யஸ்ய-மனிதனின்; ஸர்வ இந்த்ரியாணாம்-எல்லா புலன்களின்; யத் தேஜ-ஆற்றலையும்; தத் அவை; ஜரயந்தி-வீணாக்குகின்றன; ஸர்வம் ஜீவிதம் அபி-எல்லா வாழ்க்கையும்; அல்பம் ஏவ-குறுகியதே; தவ-உனது; வாஹா-குதிரைகளும்; ந்ருத்ய கீதே-ஆடல்களும் பாடல்களும்; தவ ஏவ-உன்னிடம் இருக்கட்டும்

பொருள் : மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.

உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள் வரும். அது மட்டுமல்ல, இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகிறது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது; உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்த வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்துவிட்டான் நசிகேதன்.

27. ந வித்தேன தர்ப்பணீயோ மனுஷ்யோ
லப்ஸ்யாமஹே வித்தமத்ராக்ஷ்ம சேத் த்வா
ஜீவிஷ்யாமோ யாவதீசிஷ்யஸி த்வம்
வரஸ்து மே வரணீய: ஸ ஏவ

மனுஷ்ய-மனிதன்; வித்தேன-பணத்தால்; ந தர்ப்பணீய-திருப்தி அடையக்கூடியவன் அல்ல-த்வா-உன்னை; அத்ராக்ஷ்ம சேத்-பார்த்ததால்; வித்தம்-செல்வம்; லப்ஸ்யாமஹே-பெறுவோம்; த்வம்-நீ யாவத்-எதுவரை; ஈசிஷ்யஸி-ஆள்கிறாயோ; ஜீவிஷ்யாம-வாழ்வோம்; மே-என்னால்; வரணீய-கேட்கத் தக்க; வர: து-வரமோ; ஸ ஏவ-அதுவே.

பொருள் : மனிதன் பணத்தால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்ததால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீ ஆளும்வரை என் ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எதுவும் எனக்கு வேண்டாம். நான் கேட்கத் தக்க வரம் அது ஒன்றே.

பத்து ரூபாய் கிடைத்தால் நூறு போதும் என்று தோன்றும் நூறு கிடைத்தால் ஆயிரம் சரி என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்வது பணத்தின்மீது உள்ள ஆசை என்று எழுதுகிறார் கேரளத்தில் வாழ்ந்த மகானான பூந்தானம். அதனால்தான் ஆசையை ஒரு சங்கிலி (நிகளம்) என்று குறிப்பிட்டார் அருணகிரி நாதர்( ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே), பணம் என்று மட்டுமல்ல, உலக இன்பங்கள் எதிலும் திருப்தி என்பது வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும்; அதாவது திருப்தி கிடைக்கப்போவதில்லை. எனவே அதை நாடிப் பலனில்லை,

புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவரது ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவனே அளித்துள்ளான். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை. அதனால், மரணத்தைப்பற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அது மட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.

28. அஜீர்யதாமம்ருதானாமுபேத்ய
ஜீர்யன் மர்த்ய: க்வத ஸ்த: ப்ரஜானன்
அபித்யாயன் வர்ணரதி ப்ரமோதான்
அதிதீர்கே ஜீவிதே கோ ரமேத

அஜீர்யதாம்-மூப்பற்றவர்களும்; அம்ருதானாம்-மரணமற்றவர்களும்; உபேத்ய-அடைந்து; ப்ரஜானன்-அறந்து ஜீர்யன்-மூப்படையக்கூடிய; மர்த்ய-இறக்கக்கூடிய; க்வத; ஸ்த-கீழ் உலகங்களில் வாழ்கின்ற ஒருவன்; வர்ண ரதி ப்ரமோதான்-பாடல், உடல்சுகம்-இவற்றால் உண்டாகும் இன்பத்தை; அபி த்யாயன்-சிந்தித்து; அதி தீர்கே-நீண்ட காலமானாலும்; ஜீவிதே-வாழ்க்கையில்; க-யார்; ரமேத-ஆசைப்படுவான்.

பொருள் : மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன். நானோ; மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன்; பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன். எனவே எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்க்கையில் நான் ஆசை வைப்பேனா?

தேவர்கள் மூப்பற்றவர்கள், மரணமற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதாவது நம்முடன் ஒப்பிடும் போது அவர்கள் இன்னும் நீண்ட காலம், மிக நீண்ட காலம் வாழ்கிறார்கள், ஆனால் அவர்களும் அநதக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகியே தீர வேண்டும். உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன் என்று நசிகேதன் குறிப்பிடுவது இதைத்தான். தேவர்களே ஒருநாள் மரணத்தைத் தழுவ வேண்டுமானால் மனிதனின் ஆயுள் எவ்வளவு சிறியது! அதனை இந்த நிலையற்ற உலக இன்பங்களில் செலவிடுவேனா என்பது நசிகேதனின் கேள்வி. மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறான் அவன்.

29. யஸ்மின்னிதம் விசிகித்ஸந்தி ம்ருத்யோ
யத்ஸாம்பராயே மஹதி ப்ரூஹி நஸ்தத்
யோயம் வரோ கூடமனுப்ரவிஷ்ட்டோ
நான்யம் தஸ்மான்னசிகேதா வ்ருணீதே

ம்ருத்யோ-மரண தேவனே; யஸ்மின்-எதைப்பற்றி; இதம் விசிகித்ஸந்தி-இந்த சந்தேகம் நிலவுகிறதோ; மஹதி-பெரும் பலனைத் தருகின்ற-ஸாம்பராயே-மறு உலக விஷயத்தில்; யத்-எது உண்டோ; தத்-அதை; ந-எங்களுக்கு; ப்ரூஹி-சொல்; ய: வர-எந்த வரம்; கூடம் அனுப்ரவிஷ்ட்ட-ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ; அயம்-இந்த; தஸ்மாத்-அதைவிட; அன்யம்-வேறு வரத்தை; நசிகேதா-நசிகேதன்; ந வ்ருணீதே-கேட்க மாட்டேன்.

பொருள் : மரண தேவனே! எந்த விஷயத்தில் இந்தச் சந்தேகம் நிலவுகிறதோ, மறுஉலக விஷயத்தைப் பற்றிய எதனை அறிந்தால் பெரும் பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே ப்ரதமா வல்லீ இவ்வாறு கட உபநிஷதத்தில் முதல் அத்தியாயத்தில் முதல் பகுதி நிறைவுறுகிறது

மூன்று வரங்கள்: ஒரு கண்ணோட்டம்

நசிகேதன்

உயர் உண்மையை நாடுபவர்களுக்கு நசிகேதனின் கதை ஒரு கலங்கரை விளக்கம். அவர்களிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான குணங்கள் நசிகேதனின்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

முதலாவதாக சிரத்தை(2) வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அந்த நம்பிக்கையைச் சாதிக்கின்ற செயல்திறன்.

இரண்டாவது சுய மதிப்பு. தனது மதிப்பு நசிகேதனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதாவது, தன்னைப்பற்றி அவன் அறிந்திருந்தான். சிரத்தை மிக்கவனான எனக்குச் சொல் என்று (13) அவன் சொல்வதிலிருந்து இதனை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. சிரத்தை உள்ளவரிடம் சொன்னால் அது வீண் போகாது. ஏனெனில் அதை அவன் செயல்படுத்துவான். தன்னால் செயல்படுத்த முடிந்ததையே அவன் கேட்பான். கேட்டதைச் செயல் படுத்துவான். தன்னிடம் அந்தப் பண்பு இருப்பதை, எமன் சொல்வதைக் கடைபிடிக்கின்ற திறமை தன்னிடம் இருப்பதை உணர்ந்திருந்தான் நசிகேதன். இதுவே சுய மதிப்பு என்பது.

அது மட்டுமின்றி, செல்வம், பதவி, பெண் என்று பல விஷயங்களைக் காட்டி திசைதிருப்ப எமதர்மன் முயற்சித்த போது இந்த இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன் நான்(28) என்று தைரியமாகக் கூறுகிறான் நசிகேதன். இதுவும் அவன் தன்னைப்பற்றி அறிந்திருந்தான், தன்னைப்பற்றிய உயர்ந்த மதிப்பு வைத்திருந்தான் என்பதையே காட்டுகிறது. சுயமதிப்பை ஆணவத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்டிக் கொள்வதும், பலவீனங்களை மறைப்பதற்காக இடுவதுமான முகமூடியே ஆணவம். சுய மதிப்பு என்பது தன்னிடம் இருப்பதைப் புரிந்துகொள்வது. ஆணவம் பிறரைக் கீழாகப் பார்க்கும், சுய மதிப்பு அனைவரையும் சமமாகப் பார்க்கும். எனவே தன்னறிவு, அதன் விளைவாக வருகின்ற சுய மதிப்பு இரண்டும் உயர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.

அடுத்தது உண்மையை ஏற்றுக்கொள்ளல். வாஜசிரவஸ் நசிகேதனை மரண தேவனிடம் அனுப்பத் துணிந்தபோதும் கோபமோ ஆத்திரமோ அடையாமல் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆழ்ந்து சிந்திக்கிறான் அவன்(5,6) சூழ்நிலை கொண்டு வருபவற்றை, அவை நல்லவையானாலும் கெட்டவையானாலும், அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உயர் உண்மையை நாடுபவன் ஒருபோதும் சூழ்நிலைகளை மாற்றியமைக்க முயற்சி செய்யக் கூடாது. எத்தகைய சூழ்நிலை வந்தாலும், உடனே மனத்தை உள்ளே திருப்பி அதனை அகவளர்ச்சிக்கான ஒரு படியாக மாற்றும் திறமை வேண்டும்.

அடுத்தது துணிச்சல்(10). எமனையே நேரில் சந்தித்துப் பேசுகின்ற துணிச்சலை நசிகேதனிடம் காண்கிறோம். பாதையில் எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனையையும் எதிர்கொண்டு, தான் லட்சியமாகக் கொண்டதைச் சாதிப்பதற்கான துணிச்சல், உண்மையை நாடுபவனிடம் வேண்டும்.

கடைசியாக ஆசையின்மை(29). உயர் உண்மையை நாடுபவனிடம் உலகைப்பற்றிய, அதன் சுகபோகங்களைப் பற்றி தெளிவான கருத்து இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அவன் தனது லட்சியத்தை அடைய முடியும். உலகம், அதன் சுகபோகங்கள் என்றால் என்ன? அவற்றிற்கு வாழ்க்கையில் எந்த அளவு இடம் கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. உலகின் சுகங்கள் அத்தனையையும் எமதர்மன் கொடுத்த பிறகும் நசிகேதன் அவற்றை உதறிவிட்டு, லட்சியத்திலேயே குறியாக இருக்கிறான். ஏனெனில் அந்த சுகபோகங்களின் நிலையாமையை அவன் சிந்தித்து அறிந்திருக்கிறான்(28). எனவே உண்மையை நாடுபவனுக்கு உலகின் கவர்ச்சிகள் எதனாலும் நிலைகுலையாத மனம் வேண்டும்

மூன்று வரங்கள்

நசிகேதன் எமனிடம் கேட்கின்ற மூன்று வரங்களில் ஒரு தெளிவான, படிப்படியான லட்சிய நாட்டத்தைக் காண்கிறோம். உயர் வாழ்க்கையை, ஆன்மீக வாழ்க்கையை நாடுகிறோம் என்பதற்காக உலகின் உண்மையையோ சமுதாய உறவுகளையோ தூக்கி எறிய வேண்டும் என்பதில்லை. நசிகேதனின் முதல் வரம் தந்தை தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. இது குடும்பத்தில் ஒரு நல்ல உறவு நிலவ வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. பெற்றோருடனும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் சரியான உறவு நிலவ வேண்டும்.

இரண்டாம் வரம் யாகம் பற்றியது. யாகங்களின் மூலம் இயற்கை சக்திகளுடன் நாம் தொடர்புகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை இயற்கை சக்திகளின்மூலம் சாதித்துக் கொள்கிறோம். அதாவது, இயற்கையைப் பேணுதல் சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ நாம் கற்றிருக்க வேண்டும்.

மூன்றாம் வரம் உயர் உண்மையைப்பற்றியது

குடும்பத்துடனும் சமுதாயத்துடனும் இயற்கையுடனும் நல்ல உறவை வைத்துக்கொண்டே உயர் ஆன்மீக உண்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இந்த மூன்று வரங்களும் நமக்குக் காட்டுகின்றன.
2. பிராண சக்தியின் மகிமை

ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் முதலில் படைக்கப்பட்டன 1:4. அனைத்துப் பொருட்களாவும் ஆகியிருப்பது ஆகாசம். ஆகாசத்தைப் பொருட்களாக ஆக்கியதும், அவற்றை இயக்குவதும் பிராணன். புறத்தில் காணும் இயற்கையும், அதுபோலவே உடல், மன இயக்கங்களும் அனைத்தும் பிராண சக்தியின் மகிமையே, பிராண சக்தியின் மகிமை பல்வேறு விதமாக இங்கே கூறப்படுகிறது.

நாம் யாரைச் சார்ந்தவர்கள்?

1. அத ஹைனம் பார்க்கவோ வைதர்பி பப்ரச்ச
பகவன் கத்யேவ தேவா ப்ரஜாம் விதாரயந்தே? கதர ஏதத் ப்ரகாசயந்தே?
க புனரேஷாம் வரிஷ்ட்ட இதி

அத ஹ-அடுத்ததாக; வைதர்பி-விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த; பார்கவ-பார்க்கவன்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; ப்ரஜாம்-ஒருவனை; கதி ஏவ-எத்தனை; தேவா-தேவர்கள்; விதாரயந்தே-தாங்குகின்றனர். கதரே-அவர்களில் யார்; ஏதத்-இதனை; ப்ரகாசயந்தே-இயக்குகின்றனர்; புன-மேலும்; ஏஷாம்-இவர்களில்; க-யார்; வரிஷ்ட்ட-முக்கியமானவர்; இதி-என்று.

பொருள் : அடுத்ததாக விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:  தெய்வ முனிவரே! ஒருவனை எத்தனை தேவர்கள் தாங்குகின்றனர்? அவர்களில் யார்யார் இவற்றை இயக்குகின்றனர்? இவர்களில் யார் முக்கியமானவர்?

மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் தனி மனிதர்கள் என்று தோன்றலாம். ஆனால் சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, நமது வாழ்க்கை எத்தனையோ புற, அக சக்திகளுடன் பிணைந்துள்ளது தெரியவரும். கண், காது போன்ற புலன்களாலும் மனத்தாலும் நாம் அனுபவங்களைப் பெறுகிறோம். இந்தப் புலன்கள் மட்டுமே நமக்கு அனுபவங்களைத் தந்துவிட முடியுமா? முடியாது. நமது பங்குடன் இயற்கையின் பங்கும் சேர்ந்தால் தான் நாம் எந்த அனுபவத்தையும் பெற முடியும்.

உதாரணமாக, கண்களை எடுத்துக் கொள்வோம். நாம் உண்கின்ற உணவிலிருந்து பெறப்படுகின்ற பிராண சக்தியால் கண்கள் பார்ப்பதற்கான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அதேவேளையில் சூரிய சக்தியாலோ மின்சாரத்தாலோ அங்கே ஒளியும் இருக்க வேண்டும். இரண்டும் சேரும்போது மட்டுமே நம்மால் பார்க்க முடியும். இவ்வாறே ஒவ்வொரு புலனும். அக சக்தியும் இணையும்போது மட்டுமே நமது அனுபவம் முழுமை பெறுகிறது.

காண்கின்ற புற உலகை இயக்குகின்ற தூல சக்திகளாயினும் சரி, காணாத அக உலகை இயக்குகின்ற சூட்சம சக்திகளாயினும் சரி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாகக் கண்டனர் உபநிஷத ரிஷிகள். இந்த தெய்வங்கள் அபிமானி தேவதை எனப்பட்டனர். ஒவ்வொரு தேவதையும் பிரபஞ்சத்தில் ஒன்றையும் மனிதனில் ஒன்றையும் இயக்குவதாகக் கொள்ளப்பட்டனர். உதாரணமாக சூரியனுக்கும் கண்ணுக்கும் அபிமானி தேவதை அர்யமான்(3:8 விளக்கவுரையும் காண்க)

இவ்வாறு எத்தனை தேவர்கள் அல்லது தேவதைகள் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறார்கள், யார் முக்கியமானவர் என்பது கேள்வி.

நமது வாழ்க்கைக்கு ஆதாரமானவர்கள் : கதை 2-4

பார்க்கவனின் கேள்விக்கான விடையை ஒரு கதைபோல் தருகிறார் பிப்பலாத முனிவர்.

2. தஸ்மை ஸ ஹோவாச ஆகாசோ ஹ வா ஏஷ தேவோ வாயுரக்னிராப ப்ருதிவீ வாங்மனச்சக்ஷú; ச்ரோத்ரம் ச
தே ப்ரகாச்யாபிவதந்தி வயமேதத் பாணமவஷ்ட்டப்ய விதாரயாம

தஸ்மை-அவரிடம்; ஸ-பிப்பலாதர்; உவாச ஹ-கூறினார்; ஏஷ-இந்த; தேவ-தேவர்; ஆகாச-ஆகாசம்; வாயு-காற்று; அக்னி-நெருப்பு; ஆப-தண்ணீர்; ப்ருதிவீ-பூமி; வாக்-பேச்சு; மன-மனம்; சக்ஷú-பார்வை; ச்ரோத்ரம்-கேட்கும் தன்மை; தே-அவை; ப்ரகாச்ய-இயக்கி; அபிவதந்தி-கூறின; வயம்-நாங்கள்; ஏதத்-இந்த; பாணம்-உடம்பை; அவஷ்ட்டப்ய-ஒருங்கிணைத்து; விதாரயாம-தாங்குகிறோம்.

பொருள் : பிப்பலாத முனிவர் பார்க்கவனிடம் கூறினார்: ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் தன்மை ஆகியவையே அந்த தேவர்கள். அவர்களே மனிதனை இயக்குகிறார்கள். ஒருமுறை இந்த தேவ சக்திகள், நாங்கள்தான் இந்த உடம்பை ஒருங்கிணைத்துத் தாங்குகிறோம் என்று கூறின.

மனித வாழ்விற்கு ஆதாரமான 9 தேவ சக்திகளை இங்கே பிப்பலாத முனிவர் குறிப்பிடுகிறார். ஆகாசம் அல்லது வெளி முதல் பூமி வரையுள்ள முதல் ஐந்து சக்திகளும் தூலமானவை. இவற்றால் நம் உடம்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. பேச்சு, மனம் போன்ற நான்கும் நுண் சக்திகள். இந்த 9 சக்திகளும் நமது வாழ்க்கையை இயக்குகின்றன என்கிறார் முனிவர்.

இந்த 9 சக்திகளும் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளன என்பதை விளக்குவதற்கு இரண்டு வார்த்தைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம். ஒன்று, ஒருங்கிணைத்தல்(அவஷ்ட்டப்ய); மற்றது இயக்குதல் (விதாரயாம) நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்கள், நூல் இல்லாவிட்டால் எப்படி சிதறிப்போகுமோ அப்படி இந்தச் சக்திகள் இல்லாவிட்டால் நமது உடம்பும் சிதறிப்போகும். உண்மையில் இந்தச் சக்திகள்தான் நமது உடம்பை ஒருங்கிணைத்து வைத்திருக்கின்றன. இது இந்த தேவ சக்திகளின் முதற்பணி. இரண்டாவதாக, நமது உடம்பை இயக்குவதும் இந்த தேவ சக்திகளே.

பார்க்கவனின் கேள்விக்கான விடையின் முதற்படி இது. தாம் கூறியதை விளக்குவதற்காக இந்தக் கருத்தை ஒரு கதையாகத் தொடர்கிறார் பிப்பலாத முனிவர்.

3. தான் வரிஷ்ட்ட ப்ராண உவாச
மா மோஹமாபத்யத அஹமேவைதத் பஞ்சதாத்மானம் ப்ரவிபஜ்யைதத் பாணம்
அவஷ்ட்டப்ய விதாரயாமீதி தேச்ரத்ததானா பபூவு

தான்-அவற்றில்; வரிஷ்ட்ட-முக்கியமான; ப்ராண-பிராணன்; உவாச-கூறியது; மோஹம்-குழப்பத்தில்; மா ஆபத்யத-ஆழ்ந்து போகாதீர்கள்; அஹம் ஏவ-நானே; ஆத்மானம்-என்னை; பஞ்சதா-ஐந்தாக; ப்ரவிபஜ்ய-பகுத்துக் கொண்டு; ஏதத்-இந்த; பாணம்-உடம்பை; அவஷ்ட்டப்ய-ஒருங்கிணைத்து; விதாரயாமி-தாங்குகிறேன்; இதி-என்று; தே-அவை; அச்ரத்ததானா;பபூவு-நம்பவில்லை.

பொருள் : தேவ சக்திகள் கூறியதை கேட்ட முக்கியப் பிராணன் அவற்றிடம், குழம்பாதீர்கள். என்னை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு, இந்த உடம்பை ஒருங்கிணைத்து இயக்குவது நானே, என்று கூறியது. ஆனால் பிராணனின் பேச்சை அந்த தேவ சக்திகள் நம்பவில்லை.

மின்சாரத்தால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்; விசிறிகள் சுழல்வதைக் காண்கிறோம்; இன்னும் பல இயக்கங்களைக் காண்கிறோம். ஆனால் மின்சாரத்தை நாம் காண்பதில்லை. அதுபோல் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது. இவ்வாறு எத்தனையோ செயல்களைக் காண்கிறோம். இதற்குக் காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இந்தப் பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாகச் செயல்படுகிறது. பிராணனின் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு ஐந்து விதமாகப் பிரிக்கப்படுகிறது.(இது 3:4-10-இல் விரிவாக விளக்கப்படுகிறது).

உடம்பு, மனம் ஆகியவற்றின் இயக்கங்களுக்குக் காரணமாக இருப்பது, இன்னும் சொல்லப் போனால், இயக்கங்கள் அனைத்திற்கும் வேண்டிய ஆற்றலை அளிப்பது பிராணன். எனவேதான், தானே அனைத்தையும் இயக்குவதாக இங்கே பிராணன் கூறுகிறது.

4. ஸோபிமானாதூர்த்வமுத்க்ரமத இவ தஸ்மினுத்க்ராமதி அதேதரே
ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ச்ச ப்ரதிஷ்ட்டமானே ஸர்வ ஏவ ப்ராதிஷ்ட்டந்தே
தத்யதா மக்ஷிகா மதுகர ராஜானமுத்க்ராமந்தம் ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ச்ச ப்ரதிஷ்ட்டமானே
ஸர்வா ப்ராதிஷ்ட்டந்த ஏவம் வாங்மனச் சக்ஷúச்ரோத்ரம் ச தே ப்ரீதா ப்ராணம் ஸ்துன்வந்தி

ஸ-அது; அபிமானாத்-பெருமையுடன்; ஊர்த்வம்-மேலே; உத்க்ரமதே இவ-வெளியேறுவதுபோல்; தஸ்மின்-அது; உத்க்ரமதி அத-வெளியேறிய உடனே; இதரே-மற்ற; ஸர்வே ஏவ-அனைத்தும்; உத்க்ராமந்தே-வெளியேறின; தஸ்மின் ச-அது; ப்ரதிஷ்ட்டமானே-நிலைபெற்றதும்; ஸர்வே ஏவ-அனைத்தும்; ப்ராதிஷ்ட்டந்தே-நிலைபெற்றன; தத் யதா-எப்படி; மதுகர ராஜானம்-அரச தேனீ; உத்க்ரமாந்தம்-வெளியேறியதும்; ஸர்வே ஏவ-வெளியேறுகின்றனவோ; தஸ்மின் ச-அது; ப்ரதிஷ்ட்டமானே-அமர்ந்ததும்; ஸர்வே ஏவ-அனைத்தும்; ப்ராதிஷ்ட்டந்தே-அமர்கின்றனவோ; ஏவம்-அதுபோல்; வாக்-பேச்சு; மன-மனம்; சக்ஷú-கண்; ச்ரோத்ரம் ச-காது; தே-அவை; ப்ரீதா-மகிழ்ச்சியுடன்; ப்ராணம்-பிராணனை; ஸ்துன்வந்தி-துதித்தன.

பொருள் : பிராணன் தன் பெருமையை விளக்குவதற்காக வெளியேறுவதுபோல் காட்டியது. அது வெளியேறியதும் மற்ற புலன்கள் அனைத்தும் செயலிழந்து விட்டன. அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல் படத் தொடங்கின. அரச தேனீ வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் எப்படி அதைத் தொடர்ந்து வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அனைத்தும் அமர்கின்றனவோ அப்படி இது நிகழ்ந்தது. உடனே பேச்சு, மனம், கண், காது போன்ற மற்ற புலன்கள் மகிழ்ச்சியுடன் பிராணனைத் துதித்தன.

பல வடிவங்களில், பல நிறங்களில் பல்புகள் எரிகின்றன; மின்விசிறிகள் சுழல்கின்றன; குளிர்பதனப் பெட்டி குளிரச் செய்கிறது; மின் அடுப்பு வெப்பத்தைத் தருகிறது. ஆனால் இவை அனைத்தும் மின்சாரம் இருக்கும் வரைதான். மின்சாரம் விடைபெற்றால் இவை அனைத்தின் இயக்கங்களும் நின்றுவிடும். அதுபோலவே பிராண சக்தி இருக்கும் வரை மட்டுமே கண்களும், காதுகளும் மற்ற புலன்களும் அனைத்தும் வேலை செய்யும். பிராணன் விடைபெற்றால் அனைத்தின் இயக்கமும் நின்றுவிடும். மரணவேளையில் நிகழ்வது இதுவே. பிராணன் வெளியேறிய பின் உடம்பு கட்டைபோல் ஆகிவிடுகிறது. எனவே நான், நீ என்று போட்டியிட்ட புலன்கள், பிராணன் வெளியேறினால் தங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டன; அதன் மகிமையைத் துதிக்கலாயின.

பிராணனின் மகிமை : 5-13

புலன்கள் பிராணனைத் துதிப்பது போல், தொடரும் 9 மந்திரங்கள் பிராணனின் மகிமையைக் கூறுகின்றன.

5. ஏ÷ஷாக்னிஸ்தபத்யேஷ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மகவானேஷ வாயு
ஏஷ ப்ருதிவீ ரயிர்தேவ ஸதசச்சாம்ருதம் ச யத்

ஏஷ-இது; அக்னி-நெருப்பு; தபதி-எரிகிறது; ஸூர்ய-சூரியன்; பர்ஜன்ய-மேகம்; மகவான்-இந்திரன்; வாயு-காற்று; ப்ருதிவீ-பூமி; ரயி-ஜடப்பொருள்; தேவ:- தேவ சக்தி; ஸத்-தூலப் பொருட்கள்; அஸத்-நுண் பொருட்கள்; யத் ச-எது; அம்ருதம்-அமுதம்.

பொருள் : பிராணனே நெருப்பாக எரிகிறது. சூரியன், மேகம், இந்திரன், வாயு, காற்று, பூமி, ஜடப்பொருள் ஆகிய அனைத்துமாக விளங்குவது பிராணனே. அந்த தேவ சக்தியே தூலப் பொருட்களாகவும் நுண் பொருட்களாகவும் அமுதமாகவும் விளங்குகிறது.

சூரியன், மேகம் என்று இங்கே கூறப்பட்டுள்ள அனைத்தும் இயற்கை சக்திகளின் வடிவம். அந்த சக்திகள் இயக்குவதற்குக் காரணமான பிராணன் விளங்குகிறது. அதையே இந்த மந்திரம் விளக்குகிறது. அமுதம் என்றால் தேவர்கள் நிலைபெறக் காரணமானது (தேவானாம் ஸ்திதி காரணம்) என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். தேவர்கள் என்பவர்கள் இயற்கை சக்திகள். அவை இயங்க வேண்டுமானால் பிராணன் வேண்டும். அதனால்தான் இங்கே பிராணன் அமுதம் என்று கூறப்பட்டுள்ளது.

6. அரா இவ ராநாபௌ ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம்
ரிசோ யஜூம்ஷி ஸாமானி யஜ்ஞ க்ஷத்ரம் ப்ரஹ்ம ச

ரத நாபௌ-தேர்ச்சக்கரத்தின் அச்சில்; அரா இவ-ஆரக்கால்கள் கூடுவதுபோல்; ப்ராணே-பிராணனில்; ஸர்வம்-அனைத்தும்; ப்ரதிஷ்ட்டிதம்-நிலைபெற்றுள்ளன; ரிச-ரிக் வேதம்; யஜூம்ஷி-யஜுர் வேதம்; ஸாமானி-சாம வேதம்; யஜ்ஞ-வேள்வி; க்ஷத்ரம்-வீரம்; ப்ரஹ்ம ச-அறிவு.

பொருள் : தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், வேள்வி, வீரம், அறிவு என்று அனைத்தும் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

வேதங்களைப் படிக்க வேண்டுமானாலும் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் பிராணன் வேண்டும். பிராண சக்தி இல்லாமல் வேதங்களை ஓத முடியாது,
வேள்வி என்பது இறைவனுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி, அதாவது இறைநெறி. இறைநெறியில் செல்ல வேண்டுமானால் அதற்கும் பிராணன் வேண்டும். வீரம் உடம்பின் ஆற்றல், அறிவு மனத்தின் ஆற்றல். உடம்பு, மனம் இரண்டையும் இயக்குவது பிராணன். எனவே வீரமும் அறிவும் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

7. ப்ரஜாபதிச்சரஸி கர்ப்பே த்வமேவ ப்ரதிஜாயஸே
துப்யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா பலிம் ஹரந்தி ய ப்ராணை ப்ரதிதிஷ்ட்டஸி

கர்ப்பே-கருவில்; ப்ரஜாபதி-உயிராக; சரஸி-இயங்குவது; த்வம் ஏவ-நீயே; ப்ரதிஜாயஸே-பெற்றோரின் பிரதிபிம்பமாக பிறப்பது; ப்ராண-பிராணனே; இமா-இந்த; ப்ரஜா; து-உயிரினங்கள்; பலிம்-ஆஹுதிகளை; துப்யம்-உனக்கு; ஹரந்தி-கொண்டுவருகின்றன; ய-யார்; ப்ராணை-புலன்களுடன்; ப்ரதிதிஷ்ட்டஸி-நிலை பெற்றுள்ளாய்.

பொருள் : பிராணனே! கருவில் உயிராக இயங்குவது நீயே. பெற்றோரின் பிரதிபிம்பமாகப் பிள்ளை வடிவில் பிறப்பதும் நீயே. உயிரினங்கள்(புலன்களின் மூலம்) உனக்கு ஆஹுதிகளைக் கொண்டு வருகின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

பிராண சக்தியே அனைத்திற்கும் ஆதாரம் என்பது மீண்டும் இங்கே வலியுறுத்தப்படுகிறது. ஆணில் விந்துவாகவும் பெண்ணில் கருவாகவும் இருப்பது பிராணனே. பெற்றோருடைய சாயலில் பிள்ளையாகப் பிறப்பதும் பிராணனே. உடம்பில் உயிராக இருந்து உலகை அனுபவிப்பதும் பிராணனே. பிராணன் உலகை அனுபவிப்பதற்குப் புலன்கள் அனுபவங்களைக் கொண்டு வருகின்றன. அந்தப் புலன்களை இயக்குவதும் பிராணனே.

8. தேவானாமஸி வஹ்னிதம பித்ரூணாம் ப்ரதமா ஸ்வதா
ரிஷீணாம் சரிதம் ஸத்யமதர்வாங்கிரஸாமஸி

தேவானாம்-தேவர்களுக்கு; வஹ்னிதம-மிகச் சிறந்த தூதன்; அஸி-இருக்கிறாய்; பித்ரூணாம்-இறந்த முன்னோர்களுக்கு; ப்ரதமா-முதல்; ஸ்வதா-உணவாக; அதர்வாங்கிரஸாம் ரிஷீணாம்-அதர்வாங்கிரஸ முனிவர்களில்; ஸத்யம்-உண்மையான; சரிதம்-முயற்சியாக; அஸி-இருக்கிறாய்.

பொருள் : பிராணனே! தேவர்களுக்கு மிகச்சிறந்த தூதனாகவும், இறந்த முன்னோர்களுக்கு முதல் உணவாகவும், அதர்வாங்கிரஸ முனிவர்களில் உண்மையான முயற்சியாகவும் நீயே இருக்கிறாய்.

யாக அக்கினியில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆஹுதிப் பொருட்களை உரிய தேவர்களிடம் சேர்ப்பிக்கின்ற புரோகிதனாக அக்கினி தேவன் கருதப்படுகிறான் (அக்னிம் ஈளே புரோஹிதம்-ரிக் வேதம்) அக்கினிக்கு ஆற்றலை அளிப்பது பிராணன் (5). எனவே  ஆஹுதிப் பொருட்களைக் கொண்டு செல்கின்ற தூதனாக பிராணன் இங்கே கூறப்படுகிறது.

இறந்த முன்னோர்களை உத்தேசித்துப் செய்யப்படுகின்ற நாந்தீமுகம் என்ற கிரியை இங்கே கூறப்படுகிறது. இந்தக் கிரியை தேவர்களுக்குச் செய்யப்படுகின்ற கிரியைகளுக்கும் முன்பாகச் செய்யப்படுகிறது. தேவர்களுக்கு ஆஹுதி அளிக்கும்போது ஸ்வாஹா என்ற மந்திரம் பயன்படுவது போல், இறந்த முன்னோர்களுக்கு ஸ்வதா என்ற மந்திரம் பயன்படுகிறது. ஸ்வதா மந்திரத்தை உச்சரித்துச் செய்யப்படுகின்ற முதல் கிரியையான நாந்தீமுகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆஹுதிப் பொருட்களாக இப்பது பிராணன்; அவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் பிராணனே.

அங்கிரஸ பரம்பரையில் வந்தவர்கள் அதர்வாங்கிரஸ முனிவர்கள். இறைநெறியை நாடுபவர்களுக்கு ஓர் உதாரணமாக இவர்கள் இங்கே குறிப்பிடப்படுகிறார்கள். இறை நெறியை நாடுபவர்களிடம் ஆற்றலாகத் திகழ்வது பிராணனே.

9. இந்த்ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோஸி பரிரஃக்ஷிதா
த்வமந்தரி÷க்ஷ சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி

ப்ராண-பிராணனே; த்வம்-நீ; இந்த்ர-இந்திரன்; தேஜஸா-வலிமையால்; ருத்ர; அஸி-ருத்திரனாக இருக்கிறாய்; பரிரக்ஷிதா-எல்லா திசைகளிலும் காப்பவன்; அந்தரி÷க்ஷ-ஆகாசத்தில்; ஸூர்ய-சூரியன்; சரஸி-சஞ்சரிக்கிறாய்; ஜ்யோதிஷாம்-ஒளிகளின்; பதி-தலைவன்.

பொருள் : பிராணனே! நீயே இந்திரன். வலிமையால் நீ ருத்திரனாக இருக்கிறாய். எல்லா திசைகளிலும் காப்பவனாக இருப்பவன் நீயே. ஆகாசத்தில் சூரியனாக நீ சஞ்சரிக்கிறாய். ஒளிகளின் தலைவனும் நீயே.

பிரபஞ்சத்தில் நிகழ்கின்ற முத்தொழில்களைப்பற்றி இங்கே கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகியவையே அந்த மூன்று தொழில்கள். இந்த மந்திரத்தில் இந்திரன் என்று கூறப்பட்டது பிரம்ம தேவனைக் குறிக்கிறது. படைப்புத் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவாகவும், காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், அனைத்தையும் ஒடுக்குகின்ற கடவுளான ருத்திரனாகவும் இருப்பது பிராணனே. அதாவது பிராண சக்தியாலேயே அவர்கள் இந்தத் தொழிலைச் செய்கின்றனர்.
உலகின் இயக்கத்திற்கான பிராண சக்தியை அளிப்பது சூரியன். அந்தச் சூரியன் முதலான ஒளிப் பொருட்கள் அனைத்திற்கும் தலைவனாக, அதாவது அவற்றிற்கு ஆற்றலை அளிப்பவனாக இருப்பது பிராணனே.

10. யதா த்வமபிவர்ஷஸ்யதேமா ப்ராண தே ப்ரஜா
ஆனந்தரூபாஸ்திஷ்ட்டந்தி காமாயான்னம் பவிஷ்யதீதி

ப்ராண-பிராணனே; யதா-எப்போது; த்வம்-நீ அபிவர்ஷஸி-மழையாகப் பொழிகிறாயோ; அத-பிறகு; இமா-இந்த; தே-உனது; ப்ரஜா-உயிரினங்கள்; ஆனந்தரூபா-மகிழ்ச்சியுடன்; திஷ்ட்டந்தி-இருக்கின்றன; காமாய-வேண்டிய அளவு; அன்னம்-உணவு; பவிஷ்யதி-கிடைக்கும்; இதி-என்று.

பொருள் : பிராணனே! நீ மழையாகப் பொழியும்போது, இனி வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று உயிரினங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றன.

வாழ்க்கைக்கு ஆதாரம் உணவு. உணவுக்கு ஆதாரம் மழை. அந்த மழையாகப் பொழிந்து உயிரினங்களின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது பிராணன்.

11. வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விச்வஸ்ய ஸத்பதி
வயமாத்யஸ்ய தாதார பிதா த்வம் மாதரிச்வன

ப்ராண-பிராணனே; த்வம்-நீ; வ்ராத்ய-தூய்மைப் படுத்தப்படாதவன்; ஏகர்ஷி-ஏகர்ஷி யாகமாக; அத்தா-உண்பவன்; விச்வஸ்ய-உலகின்; ஸத்பதி-அனைத்திற்கும் தலைவன்; வயம்-நாங்கள்; ஆத்யஸ்ய-உண்ணும் உனக்கு; தாதார-தருபவர்கள்; மாதரிச்வன-காற்றின்; பிதா-தந்தை; த்வம்-நீ.

பொருள் : பிராணனே! நீ தூய்மைப் படுத்தப்படாதவன். ஏகர்ஷி யாகமாக இருந்து, ஆஹுதிப் பொருட்களை உண்பவன் நீ. உலகிலுள்ள அனைத்திற்கும் தலைவன் நீ. ஆஹுதிப் பொருட்களை உண்ணும் உனக்கு அவற்றைத் தருபவர்கள் நாங்கள். காற்றின் தந்தையாக இருப்பதும் நீயே.

தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை சில சடங்குகள் மூலமும் மந்திரங்களின் மூலமும் தூய்மைப்படுத்தபட வேண்டும் என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிராணன் இறைவனிலிருந்து முதலில் தோன்றிய ஒன்று (1:4). தனக்கு முன்பு தோன்றிய யாரும் இல்லாததால், அதனைச் சடங்குகள் மூலம் தூய்மைப்படுத்த யாரும் இல்லை. அதனால் பிராணன் தூய்மைப் படுத்தப்படவில்லை. பிராணன் இறைவனிலிருந்து தோன்றியது. எனவே அது இயல்பாகவே தூய்மையானது, அதனைச் சடங்குகள் மூலம் தூய்மைப் படுத்தத் தேவையில்லை என்பதுதான் இங்கே வஞ்சப் புகழ்ச்சியாக தூய்மைப் படுத்தப்படாதவன் என்று கூறப்பட்டுள்ளது.

ஏகர்ஷி யாகம் என்பது அதர்வண வேதத்தைப் பின்பற்றுபவர்கள் செய்கின்ற ஒன்றாகும். அது மிகவும் பிரபலமாக இருந்தது என்பதால் இங்கே அது குறப்பிடப்பட்டுள்ளது. படைப்புக் கிரமத்தில் காற்று ஆகாசத்திலிருந்து தோன்றியது. இங்கே பிராணன் ஆகாசத்துடன் ஒன்றுபடுத்தப் பட்டு, காற்றின் தந்தையாகக் கூறப்பட்டுள்ளது.

12. யா தே தனூர்வாசி ப்ரதிஷ்ட்டிதா யா ச்ரோத்ரே யா ச சக்ஷஷி
யா ச மனஸி ஸந்ததா சிவாம் தாம் குரு மோத்க்ரமீ

யா-எந்த; தே-உனது; தனூ-அம்சம்; வாசி-பேச்சில்; ச்ரோத்ரே-கேட்பதில்; சக்ஷஷி-பார்ப்பதில்; ப்ரதிஷ்ட்டிதா-உள்ளதோ; மனஸி-மனத்தில்; ஸந்ததா-வியாபித்துள்ளதோ; தாம்-அவற்றை; சிவாம்-அமைதியுடன்; குரு-இருக்கச் செய்; உத்க்ரமீ; மா-கிளம்பிவிடாதே.

பொருள் : பிராணனே! பேசுவதிலும் கேட்பதிலும் பார்ப்பதிலும் உனது எந்த அம்சங்கள் உள்ளனவோ, மனத்தில் உனது எந்த அம்சம் வியாபித்துள்ளதோ அவற்றை அமைதியுடன் இருக்கச் செய், கிளம்பி விடாதே.

நமது செயல்கள் அனைத்திற்கும்-அவை உடம்பின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி, மனத்தின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி-தேவையான ஆற்றலை அளிப்பது பிராணன். ஆனால் ஒவ்வொரு புலனுக்கும் அதற்குத் தேவையான அளவு பிராணனே செல்ல வேண்டும். உதாரணமாக, பார்ப்பதைவிட பேசுவதற்கு அதிகமான பிராண சக்தி வேண்டும். எனவே பேச்சிற்கு அதிகப் பிராணன் செல்ல வேண்டும். சில வேளைகளில் உங்கள் உடலில் பிராணன் ஒரு பகுதியில் அதிகமாகவோ குறைவாகவோ செல்கிறது. அப்போது சமநிலை குலைகிறது. சமநிலை குலையும்போது. நோய் என்று நாம் அழைக்கின்ற ஒன்று உண்டாகிறது. என்கிறார் சுவாமி விவேகானந்தர். அத்தகைய ஒரு நிலை வராமல் இருக்கட்டும் என்று இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

பிராணன் புலன்களுக்குச் செல்ல வேண்டும், அமைதியாகச் செல்ல வேண்டும். அதாவது ஒவ்வொரு புலனுக்கும் அதற்குத் தேவையான அளவு பிராணன் செல்ல வேண்டும். பிராணன் கிளம்பிவிட்டால், அதாவது செல்லாமல் இருந்துவிட்டால் புலன்கள் எதுவும் இயங்க முடியாது (4). அப்படியும் நிகழக் கூடாது என்று பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

13. ப்ராணஸ்யேதம் வசே ஸர்வம் த்ரிதிவே யத் ப்ரதிஷ்ட்டிதம்
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஸ்ரீச்ச ப்ரஜ்ஞாம் ச விதேஹி ந இதி.

த்ரிதிவே-மூன்று உலகங்களிலும்; யத்-எவை; ப்ரதிஷ்ட்டிதம்-உள்ளனவோ; இதம்-இந்த; ஸர்வம்-அனைத்தும்; ப்ரமணஸ்ய-பிராணனின்; வசே-கட்டுப்பாட்டில்; மாதா-தாய்; புத்ரான்-பிள்ளைகள்; இவ-போல்; ரக்ஷஸ்வ-காப்பாய்; ஸ்ரீ:ச-செல்வமும்; ப்ரஜ்ஞாம் ச-தெளிவான புத்தியும்; ந-எங்களுக்கு; விதேஹி-தருவாய்; இதி-என்று.

பொருள் : மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பிராணனே! ஒரு தாய் பிள்ளைகளைக் காப்பதுபோல் எங்களைக் காப்பாய். செல்வமும் தெளிவான புத்தியும் எங்களுக்குத் தருவாய்.

செல்வமும் இருந்தாலும் அதைக் காக்கவும், உரிய வழியில் செலவிடவும் தெளிந்த புத்தி வேண்டும். தெளிவான புத்தி இல்லாதவனின் செல்வம் அவனை அழிவுப்பாதையிலேயே செலுத்தும். எனவே செல்வத்தையும். கூடவே தெளிந்த புத்தியையும் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.இதி ப்ரச்னோபநிஷதி த்விதீய: ப்ரச்ன
விஷ்ணு புராணம் முதல் அம்சம் (பகுதி-1)
                       1. புராணம் கேட்ட வரலாறு

18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் கொண்டது. ஒருநாள் அதிகாலையில் பராசர முனிவர், காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே! உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் அருள்புரிய வேண்டும்! மேலும், இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது? எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்? இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மகாகல்பங்களையும், நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும், சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும், பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார். அதற்குப் பராசர முனிவர், அவரை நோக்கிக் கூறலானார். தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலகஉற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச்செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர். அதாவது, முன்பு ஒரு சமயம், விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன். உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும்படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன். அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர், பிள்ளாய் உன் கோபத்தை விட்டுவிடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது. இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்! யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை. அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும் அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள்.

ஆகையால், பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்தவிதமான அபராதமும் செய்வதறியாத பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்துபோனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்திவிடு. பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து, என் யாகத்தை நிறுத்தி விட்டேன் அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும் (இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார். மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி, பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக, பொறுமையடைந்தாய். ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய். கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி, உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம். அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்! தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இதுதான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இருவகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும், சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை, உனக்குச் சித்தியாகட்டும்! என்றார்.

இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள்பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான், யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும். புராணக்கருத்தின்படி பார்த்தால், உலகமானது ஸ்ரீவிஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு, அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரேதான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.

2. பிரபஞ்ச உற்பத்தி

மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி, அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார். விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்களவிக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும்போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும், காக்கும்போது ஹரிரூபியாகவும், சங்கரிக்கிறபோது சங்கர ரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலையளிப்பவருமான ஸ்ரீவாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக! ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும், காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும் காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி, அனாதியான பிரகிருதி வாசனையாலே, கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய், நிமேöஷான் மேஷ சூரியகமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும், அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும், சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக! பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதிசூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய், எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய், கல்யாண குணங்களால் புரு÷ஷாத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்தஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய், அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து, தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு, தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள், உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும், எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும், யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க அவர் அருளியதைச் சொல்கிறேன். பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள், உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு, தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள். அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான். அந்த மாமுனிவரின் திருவருளால், நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக, ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து இந்த மகாபுராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும், தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய், சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய், தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய், தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும் சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால், சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர் என்று சொல்லக்கூடியவராய், தோனா சேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும் தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய, சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய், ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும்படிப் பிரகாசிப்பவராகையால், ஸ்ரீவாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார். சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும் ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரேவிதமான சொரூபனுமாய், துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே, நிர்மலராய் தோன்றுவதும், தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய், புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா? அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான ÷க்ஷத்திரக்கியன் முக்கிய சரீரம்.

அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர். இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப்பிரகிருதியும், சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும். அது எப்படியெனில் வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான ÷க்ஷத்ரக்கியனும் களாகாஷ்டாதி ரூபமானகாலமும் ஸ்ரீவிஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும். சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின், அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல, பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக. இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள்: எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ, அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது. அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும் மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று, அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய், சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய், ஜகத்துக்குக் காரணமாய் காரணம், உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.

இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில், மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயரே! வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள், பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில், அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும், சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல் மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபத்தினின்று, பிரதானம் என்கிற பிரகிருதியும் புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி, சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய், அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும். மைத்ரேயரே! வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால் மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது. அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே, சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.

மைத்ரேயரே! பிரகிருதி சமகுணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன்மயனும், சர்வக்தனும் சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும், பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி, தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப் பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து, பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார். எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ, அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான். வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல தானே சலனமுண்டாக்குகிறவனாய், சலிப்பிக்கப்படுவதுமான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான். ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும், வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும் மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புரு÷ஷாத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே, காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.

மைத்ரேயரே! ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீவிஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது. தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய், விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது. அப்பால், அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்றுவித அகங்காரம் பிறந்தது. அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும். அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே, பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும். பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு, சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து, சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது. அந்த ஆகாசம் விகாரப்பட்டு, ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க, அதனால் காற்று தோன்றியது. அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது. அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.

ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது. தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது, ரச தன்மாத்திரையான அப்புவும், ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு, கந்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால் பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும். தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும், அற்புதப் பிரகாசமும், பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற சாந்தமான சாத்வீக குணமும், வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும், நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும். இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும், தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள். வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள். இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம். ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.

இனி, இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்! மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்! இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள், வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள், (பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன்மேலும் அதிகமாகப் பெற்று, அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால், சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும் நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின. அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும், தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன. இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும் நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய், ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும் பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.

இப்படி, பஞ்சபூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றேயல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை, இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான அதிவிசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது. இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகாபூத சரீரகனும் ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார். அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும். உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன்மீது சுற்றியிருக்கிற கருப்பை, கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள், மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து, ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அதுபோலவே, பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது. அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர், பிரமரூபியாகி, ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு, அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய், லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும் ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும், பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான். அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி, மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து, ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில், சயனித்துக் கொண்டு பிறகு பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி, முன்போலவே, பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.

ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன், அந்தந்தச் சொரூபங்களில் நின்று, சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுகமுடிவில் தானே சங்கரிக்கின்றான். ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும் சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் ÷க்ஷத்ரக்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல, பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும். இனிமேல், நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது, சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில், படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன்-அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன்; சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும்போது, பிரம்மாதிகளை இடையில் வைப்பது ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும்படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன். ஆகையால் தான், மைத்ரேயரே! அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்!

3. காலப் பிரமாணம்

பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்? என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார் : மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான். ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன். நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.

இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன். மைத்ரேயரே! நிமிஷகள் பதினைந்து கூடியது ஒரு காஷ்டை; அந்தக் காஷ்டை முப்பதானால் அது ஒரு கலை, அந்தக் கலைகள் முப்பதானால் ஒரு முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு ஒரு அகோராத்திரம்; அதாவது ஒருநாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் இரண்டு பக்ஷங்களோடு கூடிய ஒரு மாதம் அந்த மாதம் பன்னிரண்டானால் தட்சணாயனம் உத்திராயணம் என்ற இரண்டு அயனங்கள் சேர்ந்து ஒரு வருஷமாகும். தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம். அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்தறு நூறு ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும் சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது, கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக;

மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி நூறு தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே, முப்பது கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும். இப்படிப் பதினாலு மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள். அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால், ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய், முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன். இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!

4. ஸ்ரீவராஹ அவதார வைபவம்

குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தைக் கொண்ட அந்தப் பிரம ஸ்வரூபியான பகவான். இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார் என்பதையும் முந்திய பாத்தும கல்பத்தைப் பற்றிய பிரளயத்துக்குப் பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பைப் பற்றியும் எனக்கு விளக்க வேண்டுகிறேன் என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! பிரஜாபதிகளுக்கு அதிபதியாய், நாராயணத்துமகனாய், தேவ தேவனுமான அந்தப் பிரமரூபியான பகவான், பிரஜைகளைப் படைத்த விதத்தைக் கூறுகிறேன். முன்பு சொன்னது போல சதுர்யுக சஹஸ்ர சங்கையான இரவெல்லாம் யோக நித்திரை செய்து, விடியற்காலத்தில் நித்திரை தெளிந்து பிரபோதம் அடைந்து, சத்வகுணம் மேலிட்டவனாகிய சதுர்முகப் பிரமன், சூனியமான மூன்று உலகங்களையும் படைக்கத் திருவுள்ளம் கொண்டான் பராத்பரனும் ஷட்குண சம்பன்னனும் அனாதியும் சர்வ ஜகத்காரண பூதனும் சதுர்முக ஸ்வரூபனுமான அந்த ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே சகல லோகங்களுக்கும் பிரபு ஆவார். படைப்புக் காலத்தில் அவரே பிரமாவினிடத்தில் அனுப்பிரவேசித்துப் படைப்பைப் படைக்கின்றார்.

அவர், மகாஜலத்திலே சயனித்திருந்தார் அல்லவா? அதனால் மநுவாதி ரிஷிகள், நாராயண சப்த நிர்வசனத்தை தெரிவிக்கிற சுலோகத்தை அருளிச் செய்தார்கள். நரசப்த வாச்சியனனான பரமாத்மாவினிடத்தில் ஜனித்த உதகங்கள் நாரங்கள் என்று சொல்லப்படும். ஏனென்றால் அவை நாராயணருக்குப் பிறப்பிடமான படியினாலும் அவரிடமிருந்து அவை தோன்றியதாலும், அவை பிரம்மனின் முதலாவது சயனத்தில் நிகழ்ந்ததாலும் அவர் நாராயணன் என்று வழக்கப்பட்டார். இத்தகைய திவ்வியத் திருநாமமுடைய எம்பெருமான் நீர் மீது தாமரை இலை ஒன்று மிதக்க கண்டு, ஏகார்ணவமான பிரளயயோகத்தில் பூமியானது மூழ்கியுள்ளதாக முடிவு செய்து, அதனை மேலேயெடுக்க முந்தைய கல்பங்களின் மஸ்ய, கூர்மாதி திவ்விய அவதாரங்களைச் செய்தருளியது போல; இந்தக் கல்பத்தில் ஸ்ரீவராகவதாரம் எடுக்க விழைந்தார். அத்தகைய திருவவதாரத்தை, வேதங்களால் சொல்லப்பட்ட யாகாதிகர்மங்களால் நிரூபிக்கத் தக்கதாகவும், சர்வலோக ரக்ஷணர்த்தமாகவும் தாம் மேற்கொண்டு, ஜனக ஸனந்தனாதி யோகிகளால் வேதவசனங்களால் துதிக்கப் பெற்று, தமக்குத் தாமே ஆதாரமாகி, ஏகார்ணவ பிரளயோதகத்தில் பிரவேசித்தருளினார். இவ்விதமாகப் பூமியாகிய தன்னை உத்தரிப்பதற்காகப் பாதாளத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானை. பூதேவியானவள் வணங்கி பக்திபூர்வமாகத் துதிப்பாளாயினள்.

பூதேவியின் துதி : தாமரை போன்ற திருவிழிகளையுடையவனே! சங்குசக்கரகதாதி திவ்விய ஆயுதமுள்ளவனே! உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். பூர்வத்தில் மகார்ணவத்தில் மூழ்கிக் கிடந்த என்னை நீயே உத்தரித்தாய்; இப்போதும் அது போன்றே என்னை உத்தரித்தருள வேண்டும். ஜனார்த்தனா! உன் மகத்தகங்கார தன்மாத்திரைகளும் பிரகிருதியும், சீவனும் யாவுமே உனது திருச்சரீரமல்லவோ! ÷க்ஷத்திரக்கிய சொரூபனும் பரமாத்மாவும் சமஸ்த ஜகத் வியாபகனுமான உனக்கு நமஸ்காரம்! அவ்வியக்தமான பிரபஞ்சமும் காலமும் சொரூபமாகவுடைய உனக்கு நமஸ்காரம்! பிரம ரூப, ஸ்வயரூப, ருத்திர ரூபமும் தரித்து சர்வ பூதங்களுக்கும் சிருஷ்டிகர்ததாவாகவும் ரக்ஷகனாகாவும் சங்காரகனாகவும் இருந்து கல்பாந்த காலத்தில் சகல பூதங்களையும் கிரகித்து மூன்று லோகங்களையும் தண்ணீரானது பொங்கி அமிழ்த்தும் படிச்செய்து, பின்னர் அந்த மகா பிரளயத்திலேயே சயனம் செய்து, பரமயோகிகளாலே கோவிந்தா என்று தியானிக்கப்படுபவனும், நீயே அன்றே! பரமாத்பனும் திவ்வியனுமான உனது நிஜஸ்வரூபத்தை எவரே அறிவர்? நீ ஜகத்தை ரக்ஷிப்பதற்காக, லீலார்த்தமாகத் தரித்த உனது அவதாரங்களை யன்றே தேவர்களும் ஆராதிக்கிறார்கள்? மோட்சத்தை விரும்பும் மாமுனிவர்களும் பரப்பிரமமான உன்னையே ஆராதித்து முத்தராய் பரமானந்தத்தை அடைகின்றனர். யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதேயமும், தாரகனும் பிரகாசகனுமாகையால் ஸ்ரீவாசுதேவன் என்கின்ற திருநாமம் கொண்ட உன்னை ஆராதிக்காமல் எவன் தான் முக்தியடைவான்? மனத்தால் கிரகிக்கப்பகிற சுகம் முதலானதும், கண் முதலிய இந்திரியங்களாலே கிரகிக்கத்தக்க ரூபாதிகளும் புத்தியினாலே பரிசோதிக்கும்படியான பிரமாணந்தரங்களும் உனது சொரூபங்களன்றே?

தேவதேவா! உன்னிடத்திலே பிறந்து, உன்னையே ஆஸ்ரயித்து, உனது சரீர பூதையாய் உன்னிடத்திலேயே நிலைத்திருப்பவளாகையால் உலகங்கள் யாவும் என்னை மாதவி என்று சொல்லும்; சகல ஞான சொரூபனே! நீ ஜெயசாலியாகக் கடவை! ஸ்தூலப் பிரபஞ்ச ஸ்வரூபனே! நீ வாழ்க! அவ்யயனே! அளவில்லாதவனாகையனாலே அனந்தன் என்ற திருநாமமுடையவனே! வியக்த பூதாதி சொரூபனே; அவ்வியக்த ரூபனே! உத்கிருஷ்டங்களுக்கும் நிசருஷ்டங்களுக்கும் ஆன்மாவானவனே! விசுவாத்மகனே! யக்கியங்களுக்கு அதிபதியே! நீ வாழ்க! யக்யங்களும் வஷட்காரமும் நீயே! பிரணவமும் திரேதாக்கினிகளும் நீயே! சதுர்வேதங்களும் நீ! யக்ஞத்திற்கு உரிய புருஷனும் நீ! ஓ! புரு÷ஷாத்தமா; சூரிய சந்திராதி கிரகங்களும், அசுவினியாதி நட்சத்திரங்களும் மூர்த்தமான திரவியங்களும், மூர்த்தமல்லாதவைகளும் காணப்படுபவைகளும், காணப்படாதவைகளும் நான் சொன்னவைகளும், சொல்லாதவைகளும் சமஸ்தமும் நீயே! சகலமான தேவதைகளுக்கும் மேலான ஸ்வாமி! இப்படி யாவற்றுக்கும் ஆத்மபூதனான உனக்குத் தெண்டன் இடுகிறேன். இவ்விதமாகப் பூமிபிராட்டியானவள் வெகுவாய் ஸ்துதி செய்தாள். அந்தப் பூமியைத் தரிப்பவனான ஸ்ரீயப்பதியானவன் வராக ரூபத்திற்கு அநுகுணமான சாம வேதமயமான இர்குர் என்ற சப்தத்தினாலே பூமிப்பிராட்டியார் செய்த தோத்திரத்திற்குத் திருவுள்ளம் உகந்ததைக் காட்டியருளினான். பிறகு மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையுடையவனும் கருநெய்தற் பூவையொத்து விளங்கும் திருமேனியுடையவனுமான மகா வராக ரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன், தனது கொம்பு நுனியினாலே பூமியை உயர எடுத்து மகா நீலமலைபோல பாதாளத்திலிருந்து எழுந்தருளினான். இவ்விதம் தோன்றிய ஸ்ரீயக்கிய வராக மூர்த்தியின் மூச்சுக்காற்று வேகத்தால் எழும்பிய வியர்வை ஜலமானது ஜனலோகம் வரைப் பாய்ந்து, அங்கு பகவத் தியானஞ்செய்து கொண்டு மிகவும் தூயவராயிருக்கும் ஜனக சனந்தருடைய தேகங்களிற்பட்டு, அவர்களை மேலும் தூயவராக்கியது.

அதே சமயத்தில், வராக மூர்த்தியாரின் குளம்புகளால் தாக்கப்பட்ட அந்த ஜலமானமானது அண்ட கடாகத்தினுள்ளே பாதாளத்துக்கு வெகு இரைச்சலுடன் இறங்கிற்று. அந்த மஹா வராஹமூர்த்தியினுடைய சுவாச நிசுவாச வேகத்தால் பூலோகவாசிகளான ஜனங்கள் தள்ளப்பட்டு, ஒதுங்கலாயினார்கள். இவ்வாறு பிரளயார்ணவோதகத்தினால் நனைந்த திருவுதரத்தோடு, தனது கோட்டுமுனையில் பூமியை எடுத்துக் கொண்டு, ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார். அவர் தமது திவ்வியத் திருமேனியை உதறியருளுமளவில், அந்த வராக மூர்த்தியினுடைய ரோம கூபங்களின் நடுவே நின்று காணப்பட்ட ஜனக ஸனந்தன ஸ்னந்குமாராதியான யோகிகள் ஆனந்தம் மிகுந்து பக்தியுடன் வணங்கித் துதி செய்தருளினார்கள். பிரமன் முதலான லோக ஈஸ்வரருக்கெல்லாம் மேலான ஈசுவரனே! சங்கு சக்கரம், கதை வாள் வில் என்ற பஞ்சாயுதங்களைத் தரித்தவனே! முத்தொழில்களுக்கும் கர்த்தாவும் ஆள்பவனும் நீயே ஸ்வாமி! வேதங்கள் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றன. யூபஸ்தம்பங்கள் உன்னுடைய கோரைப்பற்கள் யக்கியங்களெல்லாம் உன்னுடைய தந்தங்கள் நானாவிதமான வேதிகைஸ்தான சயனம் எல்லாம் உனது திருமுகத்திலிருக்கின்றன. அக்கினியே உனது நாக்கு! உன்னுடைய ரோமங்கள் தருப்பைப் புற்கள்; ஆகையால் யக்கிய ரூபமாய் யக்கியத்தினால் ஆராதிக்கப்படும் புருஷன் நீயே இரவும் பகலும் உனது திருக்கண்கள் சகல வேதங்களுக்கும் ஆதியான பிரணவமே உனது சிரசு புருஷ சூக்தம் முதலான சூக்தங்கள். எல்லாம் உன்னுடைய பிடரியின் ரோமங்கள் சாமவேதமே உன்னுடைய கம்பீரமான நாதம் பிராக் வம்சமென்கிற அக்கினி சாலையின் முன்புறமானது உன்னுடைய திருமேனி! இப்படியாக மூர்த்தியாய், அனாதியாயுள்ள ஷட்குண ஐசுவரியை சம்பன்னனான எம்பெருமானே! உன் திருவடிவைப்பினாலே பூமியை ஆக்கிரமித்து பதம் கிரமம் என்ற ஏற்பாடுகளுடன்கூடிய அளவற்றதாய், ஆதியில் நின்ற சப்த பிரமமும் நீயே! அக்ஷர சொரூபியாயும் அழியும் தன்மையற்றவனாயும் சகல சொரூபியாயுமிருக்கிற ஸ்வாமி! சராசர மயமான உலகங்களுக்கு எல்லாம் நீயே ஒப்பில்லாத ஈஸ்வரன்! தம்தம் விருப்பங்களைப் பிரார்த்திக்கத் தக்கவனாக நீயே இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆகையால் உன்னையே பிரார்த்திக்கின்றோம். கிருபை செய்ய வேண்டும். திவ்வியமான உனது கோரைப் பல்லின் நுனியிலே காணப்படுகின்ற இந்த சமஸ்த பூமண்டலமானது தாமரைத் தடாகத்திலே பிரவேசித்து விளையாடிய மதயானையானது தனது கொம்பிலே, சேறுடன் கூடிய தாமரையைத் தூக்கிவந்தால் எப்படிக் காணப்படுமோ, அப்படித் தோற்றமளிக்கிறது.

ஒப்பற்ற மகிமையுடையவனே, ஓ ஜகந்நாதா! உண்மையான பொருள் நீ ஒருவனேயன்றி வேறொன்றுமில்லை. எப்படியெனில், சராசர மயமான சகலமும் உன்னால் வியாபிக்கப்பட்டு உனது திருமேனியாக இருப்பதனால், இவையாவுமே உனது மகிமையாகும். நீயே பரமார்த்தமாகிறாய். உலகத்துக்குக் காரண பூதனாய், உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உன் மகிமை சொல்லாத முடியாததன்றே! சத்து, அசத்து என்னும் விவேகம் இல்லாத அஞ்ஞானிகள், உன்னுடைய சரீரமான பிரபஞ்சத்தைப் பிராந்தி ஞானத்தால் வேறான தேவமனுஷ்யாதி ரூபமாக நினைக்கிறார்கள். புத்தியீனர்களான ஜனங்கள் ஞானமயமான தமது நிஜ சொரூபங்களை அறியாமல், தான் அமரன் என்றும் தான் மனுஷியன் என்றும் இது மிருகம், இது தாவரம் என்றும் பிராந்தி வசத்தினாலே நினைத்து மோகார்வணத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆத்ம சொரூபத்தை எவர் ஞானசாரமாக அறிந்து பகவானை அனுபவிக்கத்தக்க யோக நிலைக்குத்தக்கதான பரிசுத்த மனமுடையவர்களோ, அவர்கள் பிரகிருதிவிகாரமான தேவ மனுஷ்யாகி ரூபமாகக் காணப்படுகிற இந்தப் பிரபஞ்சத்தையே ஞான குணமுள்ள ஆன்ம சொரூபமாகவும் உனது திருமேனியாகவும் காண்கிறீர்கள்; யாவற்றிலும் அந்தர்மியாக இருக்கும் ஸ்வாமி! சகல உலகங்களுக்கு இருப்பிடமாக இருப்பவனே! அறியக்கூடாத மகிமையை உடையவனே! சேவிப்பவர்களின் இதயம் குளிரத் தகுந்ததான செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடையவனே! இந்தப் பூமியை உத்தரித்து அடியேங்களுக்கு சுகத்தினைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும். கோவிந்தா! நீ உலக உபகாரத்திற்காகவன்றே சிருஷ்டியில் பிரவேசிக்கிறாய் உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம். அடியேங்களுக்குச் சுகம் அருள்வாயாக! என்று ஜகன சனந்தனர் முதலிய யோகிகள் துதித்தார்கள். இப்போது ஸ்ரீவராக ரூபமுடைய பரமாத்மாவானவன் மகார்ணவத்திலிருந்து பூமியை எடுத்து பழையபடியே ஜலத்தின் மீது நிறுத்தி அருள்புரிந்தான்.

இவ்விதம், அந்தப் பெருவெள்ளத்தின் மேல் நிருமிக்கப்பட்ட பூமியானது, கப்பல்போல உருக்குவிந்து பரந்ததாகையாலே அது அந்த மகார்ணவ ஜலத்தில் மிதந்ததேயல்லாமல் மூழ்கவில்லை. பிறகு, சர்வகாரணனும் அனாதியுமான ஸ்ரீஹரிபகவான், பூதேவி பிரார்த்தித்தவண்ணம் அந்தப் பூமியில் தன்னுடைய சங்கல்பமாத்திரத்தாலே, முன்பு எரிந்து போன பர்வதம் முதலியவற்றையெல்லாம், மீண்டும் முன்போலவே படைத்து அருளினான். இவ்விதமான ஸ்ரீமந் நாராயணன், ரஜோ குணப்பிரமமாய், ஏழு தீவுகளாக இருக்கிற பூமியின் பகுதிகளையும் மற்றும் புவர்லோகம் முதலிய உலகங்களையும் மீண்டும் படைத்தருளினான். எம்பெருமான் சிருஷ்டிக்கு, நிமித்தம் மட்டுமேயாகிறான். அவனால் படைக்கப்படும் வஸ்துக்களுடைய சக்திகளே முக்கிய சக்திகளாகின்றன. மைத்ரேயரே! எம்பெருமான் நடுநிலைமையானவன், நிமித்த காரணன் ஆகையால் இப்படிஅவன் படைப்பதனால், அவனுக்கு வைஷம்மியமும் நிர்த்தயத்துவமும் இல்லை. உயிரினங்கள் அனாதி கர்மவசத்தினாலே பூர்வ கர்மானுரூபமாக நானாவித கர்ம மார்க்கங்களிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. சர்வ சமநிலையாளனும் சாட்சிபூபதனுமான பரம புருஷனைத் தவிர பிரபஞ்சத்துக்கு வேறொரு காரணமுமில்லை. சீவாத்துமாக்களுடைய அனாதி சர்மவாசனா சக்தியினாலே, நல்ல பிறவிகளும் கெட்ட பிறவிகளுமாய் அந்தந்த வஸ்துகள் மாறிவிடும். ஆகையால் தான் ஸ்ரீயப்பதி முக்கிய காரணமாக இருந்தாலும் சேதனர்களுடைய கர்மங்களைக் கொண்டே சிருஷ்டி நானாவிதம் ஆகவேண்டியிருப்பதால், அவை பிரதானமாக உபசார வழக்கை முன்னிட்டு சொல்லப்பட்டன என்று அறிவீராக!

5. தேவ மனிதப் படைப்புகள்

ஓ குருநாதரே! ஆதிகாலத்தில் தேவதைகள், ரிஷிகள், பிதுர்க்கள், அசுரர், மனிதர் முதலானவர்களையும் மிருகங்களையும், பறவைகளையும், மற்றுள்ள தாவரங்களையும் பூசரங்களையும் கேசரங்களையும் நீர்வாழும் உயிரினங்களையும் பிரம்மதேவர் எப்படிப் படைத்தார்? அவைகளுக்குக் குணங்களும் சுபாவங்களும் ரூபங்களும் யாவை? இந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாக அடியேனுக்கு கூறியருள வேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே; அந்தப் பிரமதேவன் பிரபஞ்ச சிருஷ்டி செய்ய நினைத்துக் கொண்டிருக்கும்போது சர்வ நியாமகனான நாராயணனால் ஏவப்பட்ட நினையாத நினைவினாலே தாமச குணப் பிரதானமான சிருஷ்டியொன்று உண்டாயிற்று. அது தமஸ் மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் என்று சொல்லப்பட்ட பேதங்களினாலே ஐந்துவிதமாக, விருட்சங்களும், புதர்களும், கொடிகளும், பூண்டுகளும் புல்லுகளுமென ஐவகையான தாவரப்படைப்பாக இருந்தது. அது சுத்த தாமச படைப்பாகையால்; தண்ணீர் முதலானவைகளைக் கிரகிப்பது முளைப்பது, செழிப்பது முதலிய காரியங்களுக்கு ஏற்ற அற்ப அறிவுள்ளவனேயன்றி தன்னை இப்படிப்பட்டதென்று அறிவதும் சப்தாதி விஷயங்களையும், சுகதுக்கங்களையும் அறிவதுமாகிய அறிவற்றதாக இருக்கும். பிரமன்; அவற்றைப் பார்த்து, தமோகுணப் பிரசுரமான இந்தத் தாவரங்கள் முன்னே பிறந்தன என்றனன், ஆகையால் தாவரங்களே முக்கிய படைப்பாயின சதுர்முகப் பிரமனே, இந்தத் தாவரங்கள் லோகவியாபாரத்திற்குரிய ஆற்றல் அற்றவை; ஆகையால், இவற்றில் பயன் இல்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது பிரமனின் பாரிசபாகங்களிலிருந்து மிருகங்கள் முதலிய திரியக்குசாதிகள் பிறந்தன. அவை பக்கங்களின் குறுக்காகப் பிறந்தனவாகையால் திரியக்குகள் என்று சொல்லப்பட்டன. அவையும் விவேமில்லாதவைகளாய், ஞான சூன்யமாகவும், ஒழுக்கமற்ற நடத்தையுடனும் தாயைச் சேர்தல் முதலிய அக்கிரமச் செயல்களுடனும் தமது ஞானம் என்ற நினைப்புடனும் தேகத்தையே ஆன்மாவாக எண்ணிக்கொண்டும் அகங்கார மயமாய், இருபத்தெட்டு வகையினவாய் சுகதுக்கங்களை மட்டுமே தெரிந்தவைகளாய், தகப்பன், தாய், அண்ணன், தம்பி என்ற சம்பந்தமெதையும் அறியாதனவாய் இருந்தன.

அதைக்கண்ட சிருஷ்டி கர்த்தாவான பிரமன்; ஆகா! ஈனமான இந்தத் திரியக்கு சாதிகளாலும் பயன் எதுவுமில்லை. ஆகையால் சிறப்புடைய சிருஷ்டியைச் செய்யவேண்டும் என்று சிந்தனை செய்யலானான்; அப்பொழுது மூன்றாவது படைப்பு தோன்றலாயிற்று. பிரமனின் சரீரத்தின் ஊர்த்துவ பாகத்திலிருந்து சத்வகுணப் பிரதானராயும் சுகானுபவமும் ஆனந்தமும் மிகுந்தவராயும் ஆன்ம ஞானமும் விவேகமும் உள்ளவராயும்; நித்திய சந்தோஷமுடையவர்களான தேவதைகள் உதித்தார்கள். அவர்கள் ஊர்த்துவஸ்தானத்திலிருந்து பிறந்ததால், ஊர்த்துவ சுரோதசுகள் என்ற பெயரைப் பெற்று; பூமியைத் தீண்டாதவர்களாக இருந்தனர். பிரமன்! இந்த வகையாகத் தமது மூன்றாவது படைப்பில்; சத்துவகுணப் பிரதானராகப் பிறந்த தேவர்களைக் கண்டு மகிழ்ந்தார். ஆயினும் கர்மசாதகம் ஏற்படாததால், தேவர்களின் படைப்பினாலேயும் பயனில்லை என்று பிரமன் நினைத்து லோகசாதகமான வேறொரு சிருஷ்டியை உண்டாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, சத்திய சங்கல்பனான அவருடைய மத்யப் பகுதியிலிருந்து, பூமியை நோக்கிய சிருஷ்டி ஒன்று உண்டாயிற்று. அதில் தான் மனிதர்கள் பிறந்தார்கள். அவர்கள் பிரமனின் மத்திய தேகத்திலிருந்து தோன்றியதால் மத்திய லோகத்தில் வாசஞ்செய்யத் தக்கவர்களானார்கள் அவர்கள் ஒரு காலத்தில் சாக்துவிக குணாதிக்கமும், ஒரு காலத்தில் ராஜசகுணோ திரேகமும் ஒரு காலத்தில் தாமச குணம் கொண்டவர்களாய் துக்கத்துக்கு உட்பட்டவர்களாய் உணவு உட்கொள்ளல் முதலிய காரியங்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு, ஆத்தும, மன, புத்தி; இந்திரியாதி விவேகங்களும் புறத்துள்ள வஸ்துக்களின் ஞானங்களையும் கொண்டவர்களாய், உலகியல் செயல்களைச் செய்யாதவராய் இருந்தார்கள். இவர்கள் அர்வாக் சுரோதஸுகள் என்று வழங்கப்படுகிறார்கள்.

அதன் பிறகு; அம்புஜாசனனான பிரமன், தாவர ஜாதிகளுக்கும் மிருக ஜாதிகளுக்கும் தேவதைகளுக்கும் மனிதர்களுக்கும் அவித்தை, அசக்தி, சந்துஷ்டி, சித்தி என்ற நான்கு வகை குணச்சிறப்புகளை உண்டாக்கினான். இது தாமசமாயும் சாத்வீகமாயும் இருந்ததால் அனுக்கிரக சிஷ்டியென்று சொல்லப்படும். அப்பால் சனக, சனந்தன, சனத்குமார ருத்திராதிகளையும் பிரமன் படைத்தார். இது கவுமார சிருஷ்டி என்று சொல்லப்படும். மைத்ரேயரே! இவ்விதம் தாவரப்படைப்பு, திரியக்குப் படைப்பு, தேவப் படைப்பு, மனிதப் படைப்பு அனுக்கிரகப் படைப்பு, கவுமாரப் படைப்பு என்ற ஆறுவிதமான படைப்பு சிறப்புகளைக் கூறினேன். இந்தப் படைப்புகள் ஒன்பது வகை என்றும் சொல்லப்படும். அதாவது முன்பே கூறிய மகத்தத்துவப் படைப்பும், ஏகாதச இந்திரியங்களுக்குக் காரணமான சத்துவ, ராஜச தமோ குணத்துமகமான அகங்காரப் படைப்பும், அதற்கப்பால் ஆகாசாதி பஞ்ச மகாபூத காரணங்களான தன்மாத்திரைகளின் படைப்பும் ஆகிய அந்த மூன்றும் சமஷ்டி சிவ ஸ்வரூபனான இரண்யகர்ப்பனுடைய சங்கல்பமில்லாமல் தோன்றியிருந்ததனால் அது பிராகிருதப் படைப்பு என்று சொல்லப்படும். ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்று சொல்லப்படும். ஆயினும் அதையும் அவனால் உண்டான படைப்பு என்றே சொல்லலாம். எப்படியென்றால், நித்திரையிலிருக்கும் என்னுடைய இச்சையில்லாமலேயே சுவாச நிவாசங்களும் நித்திரையும் பிறந்திருக்க, அவற்றுக்கு அவனையே கர்த்தாவாக வழங்குவதைப் போல், மகத்தகங்கார தன்மாத்திரைகள் சதுர்முகனுக்கும் முன்னமே சம்பவித்தவைகளாகையினால், இரண்யகர்ப்பனுடைய கர்ம விசேஷத்தினால் உண்டானதாக, அதுவும் அவனுடைய செயலாகவே சொல்லப்படும். முன்னே சொன்ன பிராகிருத சிருஷ்டி மூன்று ஒழிய; நான்காவதான தாவர சிருஷ்டியும் ஐந்தாவதான திரியக்கு சிருஷ்டியும், ஆறாவதான தேவசிருஷ்டியும் ஏழாவதான மனிதப்படைப்பும்; எட்டாவதான அவித்தை முதலான அனுக்கிரகப்படைப்பும் ஆகிய படைப்புகள் ஐந்தும் பிரம்மாவின் விகிருதியினால் உண்டானதால் வைகிருதங்கள் என்று சொல்லப்படும் ஒன்பதாவது படைப்பாகிய கவுமாரம்; பிராகிருதம் வைகிருதாத்துமகமாக இருக்கும். இப்படி இரணியகர்ப்பனாலே உண்டாக்கப்பட்ட ஜகத்துக்கு மூலங்களான ஒன்பதுவித படைப்பையும் சொன்னேன் இனி இந்தப் படைப்புகளின் விஷயமாக நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்? இவ்வாறு பராசர மகரிஷி கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, முனிவரே! படைப்பு வகைகளைத் தாங்கள் சுருக்கமாகத்தான் சொன்னீர்கள். இதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்றார். பராசரர் சொல்லத் துவங்கினார்.

மைத்ரேயரே! அனாதி கர்ம வாசனையினால் கட்டுண்டவர்களும் நானாவித கர்ம பயன்களை அனுபவிப்பவர்களான சேதனர்கள் பூர்வ வாசன வசத்தினால்; சங்காரகாலத்தில்; சங்கரிக்கப்பட்டு படைப்புக் காலங்களில் தேவ மனிஷ்யத் திரியிக்கு தாவர ஜன்மங்களாகப் பிறப்பார்கள். சிருஷ்டித் தொழிலிலுள்ள பிதாமகனுடைய இச்சையினால்; அம்பஸ் என்ற பெயரால் வழங்கப்படும் தேவாசுர பிதுர் மனுஷ்ய ஜாதிகள் நான்கும் உண்டாயின அதன் விவரங்களையும் கூறுகிறேன். கமலாசனன் : படைப்புத்தொழில் விஷயமாக ஒரு தேகத்தோடு சிந்தித்திருக்கும்போது; தமோகுண உத்திரேகத்தினால்; அவருடைய இடையின் கீழ்ப்புறத்திலிருந்து அரசர்கள் தோன்றினார்கள் பிறகு அந்த விரிஞ்சன்; தமோகுணத்துமகமான அந்தத்தேகத்தை ஒழித்துவிட; அது இருள் மிகுந்த இரவாயிற்று. பிறகு; அவர் திரும்புவம் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து வேறொரு தேகந்தரித்து; சந்துஷ்ட சிந்தனாக இருக்க; அந்தத்தேவனின் முகத்திலிருந்து சத்துவகுணாதிக்கமுள்ள தேவர் தேவதைகள் ஜனித்தார்கள். பிறகு, அந்தப்பிதாமகன்; அந்த உடலையும் விட்டுவிட்டார். அது சத்துவ குணமயமான பகலாயிற்று. பிறகு அவன் ரஜோகுணாதிசகமான மனிதர்களை படைத்து அந்தத் தேகத்தையும் விட்டுவிட; அது பிரகாசமான பிராதக்கால சந்ததியாயிற்று. அதனால் மனிதர்கள் பிராதச்சந்தியிலேயும் பிதுர்க்கள் சாயஞ்சந்திலேயும் பலவான்களாக இருப்பார்கள்.

மைத்ரேயரே! பகல், இரவு, சாயங்காலம், விடியற்காலம் ஆகிய இந்த நான்கும் பிரமதேவனுக்கு முக்குணங்களோடு கூடிய சரீரங்கள். பிறகு அந்தப் பிரமதேவன் மேலும் சிருஷ்டி செய்வதற்கு தமோகுணாதிக்கமுள்ள மற்றொரு சரீரத்தைத் தரித்தார். உடனே அவருக்குப் பொறுக்கமுடியாத பசியுண்டாயிற்று. அதனால் தீவிரக்கோபம் உண்டாயிற்று. அந்தக் கோபத்தினால் இருட்டிலிருந்து விகாரரூபம் பயங்கரமுமான தாடி மீசைகளுமுள்ள ஒருவிதமான புருஷர்களை பிருமன் படைத்தார். அவர்களில் பசியுற்ற சிலர் ஜக்ஷõம (உண்ணக் கடவேம்) என்றனர். பசியுறாத சிலர் ரக்ஷõம (காக்கக்கடவேம்) என்றனர். இப்படிக் கூறிய அவர்களைப் பார்த்துப் பிரமன் புன்னகை செய்து, பசியைப் பொறுக்கமுடியாமல் ஜக்ஷõம என்று கூறியவரை, யக்ஷராகக் கடவர் என்றும், ரக்ஷõம என்றவர்கள் ராக்ஷசராகக் கடவர் என்றும் அருளிச்செய்தார். இரணியகர்ப்பன் இவ்வாறாகப் பிறந்த யக்ஷரையும் ராக்ஷஸரையும் பார்த்து, மனதில் பிரியமற்று மீண்டும் சிந்திக்கலானார். அப்போது அவரது சிரத்திலிருந்த கேசங்கள் ஈனமாய்க் கழன்று விழுந்து, மறுபடியும் சிரத்தின் மீது ஏறின. இப்படி நகர்ந்து ஏறியதாலே அவை சர்ப்பங்கள் என்றும் அவை ஈனமானதினாலே அகிகள் என்றும் சொல்லப்பட்டன. மீண்டும் பிரமன் கோபாவேசத்தினாலே சிருஷ்டிக்க நினைக்க, கபில நிறத்தோடு கூடி, ரத்தமாமிச ஆகாரங்களுள்ளவைகளான பூதங்கள் அநேகம் உண்டாயின.

பிறகு, தியான பாராயணனாய், விரிஞ்சன் தனது அங்கங்களினின்றும் அந்தக் கணத்திலேயே கந்தருவர்களை உற்பத்தி செய்தார். அவர்கள் சமத்காரமாய்ப் பாடிக்கொண்டிருந்ததால் கந்தர்வர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாகச் சதுர்முகனால் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள் சக்திகளினால் ஏவப்பட்டு, அதனதன் கர்மானுகுணமாய் வெகுவிதமான பூதங்களைப் படைத்து மீண்டும் சுயேச்சையான வயதைக் கண்டு, பாரிசங்களினால் பறவைகளையும், மார்பினால் ஆடுகளையும், முகத்தினால் வெள்ளாடுகளையும், உதரத்தினால் பசுக்களையும், பாதத்தினால் குதிரைகளையும், யானைகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும், கடம்பு மான்களையும் மற்றுமுள்ள மிருகஜாதிகளையும் படைத்தார். மீண்டும் ரோம தபங்களினாலே பலவித உபயோகமுள்ள ஒளஷதாதிகளையும் தானியங்களையும் உண்டாக்கினார். இவ்விதமாய்ப் பிதாமகன் கல்பாதியான கிருதயுகத்தில் ஓஷதிகளையும், பசுக்களையும், பறவைகளையும், மாடுகளும், ஆடுகளும், குதிரைகளும், ஒட்டகங்களும், வெள்ளாõடுகளும், கோவேறு கழுதைகளும் கிராமியங்களால் பசுஜாதிகள் என்று அறிவீராக. சிங்கம், புலி முதலிய துஷ்ட மிருகங்களும், இரு குளம்புள்ள மிருக வகைகளும், யானைகளும், குரங்குகளும், பறவைகளும், சலசரங்களான மச்ச கூர்மாதிகளும் சர்ப்பங்களும் ஆகிய ஏழு ஜாதிகளும் ஆரணிய பசு விசேஷங்கள் என்று அறிவீராக. அதன் பிறகு பிதாமகன் காயத்திரி சந்தமும் இருக்கு வேதமும் திரிவிருத் என்ற ஸ்தோமமும் ரதந்தர சாமமும் அக்கினிஷ்டோமமும் தனது கிழக்கு முகத்தினால் உண்டாக்கினர். யஜுர்வேதமும் திருஷ்டுபு, சந்தமும், பஞ்சதஸ்தோமமும் பிருதச்சாமமும், உத்தியம் என்கிற யாக விசேஷமும், தக்ஷிண முகத்தினால் உண்டாகச் செய்தார். சாம வேதமும் செகதீச்சந்தமும், வைரூப்பியம் என்கின்ற சாம விசேஷமும் அதிராத்திரியாகமும் பச்சிம முகத்தினால் உண்டாக்கினார். அதர்வண வேதமும், ஏகவிம்சஸ்தோமமும், அனுஷடுப் சந்தமும் வைராசம் என்கின்ற சாம விசேஷமும் அப்தோர்யாமம் என்கின்ற யக்கியமும் உத்தரமுகத்தினாலே உண்டாக்கினார். நானாவிதமான உயிரினங்களைப் பலவித அவயங்களினாலே நான்முகப் பிரமன் உண்டாக்கினார். இவ்விதமாகப் பிதாமகன், தேவ அசுர, பிதுர் மனுஷியாதி பூதசாதிகளைச் சிருஷ்டித்துத் திரும்பியும் பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்று உற்சாகத்தோடு சங்கல்பித்து, கின்னரர் கந்தர்வர் அப்சரஸுகள், யக்ஷர்கள், ராக்ஷதர், பைசாசர் முதலியவர்களையும் பசு, பட்சி, சர்ப்ப மிருகங்களையும் தாவர சங்கமங்களையும் உண்டாக்கினார்.

இப்படி ஆதிகர்த்தாவும் லோகேசுவரனுமான சதுர்முகப்பிரமன் பலவித பூதஜாதிகளை உண்டாக்கினார். அவை சில குரூர சுபாவங்களும் சில மென்மையான சுபாவங்களும் சில இம்சை செய்பவைகளும், சில இம்சை செய்யாதவைகளும், சில தர்ம சொரூபங்களும், சில அதர்ம சொரூபங்களும், சில சத்திய மயங்களும் சில அசத்திய மயங்களுமாகப் பூர்வப் படைப்பில் எப்படிப்பட்ட கர்மங்களை அடைந்தனவோ அப்படிப்பட்ட கர்மங்களையே இந்தப் படைப்பிலும் அடைந்தன. பிறகு தேக, இந்திரிய மனபுத்திச் சிறப்புகளுக்கும் சப்த ஸ்பரிசாதி, யோக்கிய வஸ்துக்களுக்கும் வேத வசனங்களைக் கொண்டே தேவ, ரிஷி, பிதுர், மனுஷ்ய பட்சி, மிருகாதிகளுக்கு பெயர்களையும், ரூபங்களையும் அறிந்து பெயர்களையும் உருவங்களையும் பிருமன் உண்டாக்கினார். மைத்ரேயரே! இவ்விதமாகவே முனிவர்களுக்கும் வசிஷ்டாதி நாமங்களை நித்தியமான வேத சப்தங்களைக் கொண்டே உண்டாக்கினார். ஏனெனில், வசந்தம் முதலிய ருதுக்காலங்கள் தோறும் அந்தந்தக் காலத்துக்குரிய வாசனை முதலியவை இயல்பாகவே உண்டாவதைப் போல் கிருத திரேதா யுகங்களிலே, அந்தந்த யுகத்திற்கான சிறப்புக்கள் தாமாகவே உற்பவிக்கும். இந்த விதமாகப் பிரம்மா கல்பாதி காலத்தில் எம்பெருமானுடைய சக்தியினாலே; அனுப்பிரவேசித்து தூண்டப்பட்டு பிரபஞ்சங்களை அதனதன் கர்மங்களின்படியே படைத்தான்; இதில் சகல படைப்புகளும் கல்பாதி கிருதயுகத்திலும் யாகாதிகளும் அவற்றின் உபகரணங்களும் திரேதாயுகாதியிலும் படைத்தான். இப்படியே ஒவ்வொரு கல்பத்திலும் படைப்புகள் படைக்கப்பட்டு; சிருஷ்டிகள் நடைபெற்றுவரும்.

6. வருணாசிரமங்கள்

தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் முதலியவற்றின் படைப்புக் கிரமங்களைப் பற்றிப் பராசர முனிவர் கூறியதும் மைத்ரேய முனிவர் அவரை நோக்கி, மகரிஷியே! மனிதர்கள் படைக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் சுருக்கமாகச் சொன்னீர்கள். இனி அவர்களுடைய குணங்களைப் பற்றியும், வருணாசிரம விவரங்களை பற்றியும், ஆசார வேறுபாடுகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்! என்றார். அதற்குப் பராசரர் பின்வருமாறு கூறலானார்: பூர்வத்தில் பிரமன் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தபோது, அவரது முகத்திலிருந்து சத்வகுணமுடையவர்களான பிராமணர்கள் தோன்றினார்கள். அவரது மார்பிலிருந்து ராஜசகுணமுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினார்கள். தொடைகளிலிருந்து ராஜசகுணமும் தாமஸகுணமும் கலந்தவைசியர்கள் தோன்றினார்கள். பாதங்களிலிருந்து தமோ குணமுடைய சூத்திரர்கள் தோன்றினார்கள். இவ்விதம் பிரமதேவனின் முகம், மார்பு, தொடைகள், பாதங்கள் என்னும் அவயங்களிலிருந்து பிறந்த பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களை யாகங்களுக்குரிய செயல்களை செய்யும்படி அவர் நியமித்தார். மைத்ரேயரே! இந்த நால்வகையான மக்களும் யாகங்களுக்கு முக்கியமானவர்கள். யாகங்களால் தேவதைகள் திருப்தியடைந்து, காலாகாலத்தில் மழைபொழிந்து மனிதரைத் திருப்தியுறச் செய்வார்கள். ஆகவே உயர்வுக்கு ஏதுக்களான யாகங்கள் மக்களால் முக்கியமாகச் செய்யத் தக்கவையாகும். வேத சாஸ்திரத்திற்கு விரோதமான ஒழுங்கீனங்களை விட்டு சன்மார்க்கத்தில் நடக்கிற சத்புருஷர்கள் சொர்க்கசுகத்தையும் மோக்ஷõனந்தத்தையும் தம் மனிதப்பிறவியிலேயே அடைவார்கள். இவ்விதமாக இரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட நான்கு வர்ண மக்களும், சாஸ்திர விசுவாசத்தினால் சதா சாரமும் விநயமும் அடைந்து, நிர்மலமான இருதயமுடையவராய் சகலவிதமான சத்கருமங்களையும் செய்துகொண்டு காமக்குரோத லோபம் இல்லாமல், நினைத்த இடத்தில் நினைத்தபடி வசித்து, நிர்மலமான இதயத்தில் இறைவனைத் தியானித்துத் தத்துவ ஞானம் பெற்று தெளிந்தவர்களாய் சற்கதியடைந்தார்கள்.

இதுபோல் கிருதயுகத்திலிருந்து திரேதாயுகத்தின் இடைக்காலம் வரை நடந்தது. பிறகு, நாராயணாம்சம் என்று சொல்லப்பட்ட காலவசத்தினாலே, மனிதருடைய சத்துவ புத்தியும் தைரியமும் ஆயுளும் குறையும்படி நேரிட்டது. அதனால் மோகமும் லோபமும் மேலிட்டன. அதருமம் மிகுதியாயிற்று அதனால் மோட்சமார்க்கத்திற்கு விரோதமான ராகத்துவேஷங்கள் பிரபலமாயின. ஆகையால் இயல்பாகவே உண்டாகத்தக்க ஞானமும், தொந்தங்களை வெல்லத்தக்க சக்தியும் மக்களிடம் குறைந்தன முன்பெல்லாம் பெண்கள் முதலியவை இல்லாமலேயே ஆனந்தம் உண்டாவதுண்டு. யோகப் பயிற்சியினால் சிரசிலுள்ள சந்திர மண்டலத்தினின்றும் ஒழுகும் அமிருதத்தினாலே பசியுங்கூட இல்லாமல் இருந்தது. ஒருமுறை மழை பெய்தாலே பயிர்கள் செழுமையாக வளர்ந்தன. நினைத்தபோதே மரங்கள் பலிதமாயின. நினைத்தவை நினைத்தவாறே கைகூடின பரத்வாச முனிவருக்கு நடந்தது. போலவே, கற்பக விருட்சங்கள் வந்து வேண்டியதைக் கொடுத்தன. வேண்டும்போதெல்லாம் மழை பெய்தது. உழுது வருந்தாமல் பூமி விளைந்தது இவ்விதமான எட்டுச் சித்திகளும் நாளடைவில் க்ஷீணித்து பாதகச் செயல்கள் அதிகமாயின.

அதனால் பூமியில் வாழும் மக்கள், ராகத்துவேஷ. லோப, மோகாதி தொந்த துக்கங்களினால் பீடிக்கப்பட்டு, ஒருவரையொருவர் விசுவாசியாமல் மலைப் பிரதேசங்களிலும், தண்ணீர் சூழ்ந்த நிலப்பகுதியிலும் வசித்தார்கள். அங்கு கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள் முதலியவற்றை அமைத்தார்கள். நகரங்களையும் வீதிகளையும் வீடுகளையும் கட்டிக்கொண்டார்கள். மழை, காற்று, வெய்யில் இவற்றின் உபத்திரவங்களை நீக்கிக் கொள்வதற்கான உபாயங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பிழைப்பிற்காகப் பயிர்த்தொழில்கள், ஆடு மாடுகள் வளர்த்தல் வாணிபம் முதலியவற்றைச் செய்தார்கள். பயிர்த்தொழிலால் விளைந்த சம்பா முதலிய நெல், யவம், கோதுமை, சோளம், கேழ்வரகு, தினை, உளுந்து, பயிறு சிறு கடலை, துவரை, மொச்சை, கொள்ளு, கடலை, சணல் ஆகிய தற்காலிக பயன்களை அனுபவித்தார்கள். இந்தப் பதினேழு வகையான தானியங்களும் கிராமியங்கள் என்று வழங்கப்படும். நெல், யவம், உளுந்து, கோதுமை, சிறுதானியம் என்ற பிரியங்கு, கொள்ளு, சாமை; செந்நெல், காட்டு எள், கெவீது, மூங்கிலரிசி, மற்கடகம் என்ற பதினான்கு விதமான தானியங்களும் கிராமிய ஆரணியங்கள் என்று பெயர் பெற்று யாகங்களுக்குப் பயன்பட்டன. இவை யக்கியங்களுக்கும் பிரஜா அபிவிருத்திக்கும் காரணமாயின. எனவே, அவற்றைக் கொண்டு, பராபரவிவேகமுள்ள ஞானிகள் நாள்தோறும் பாவங்களைப் போக்கதக்க பஞ்ச மகா யாக்கியங்களைச் செய்வார்கள். முனிவரே! தினமும் யாகாதி கர்மங்களைச் செய்வதால், புருஷர்கள் சகலபாவ விமுக்தராய்ப் பரம சுகத்தை அடைவார்கள். ஆதிகாலத்தில் எவருடைய மனமானது கால வசத்தால் பாபதூஷிதமாயிற்றே, அவர்கள் யக்கியாதி நற்கருமங்களில் விசுவாசமில்லாமல் பாதங்களை அபிவிருத்தி செய்து; வேதங்களையும் நற்கருமங்களையும் நிந்திக்கலானார்கள். யாகங்களுக்கு இடையூறுகளைச் செய்தார்கள். தேகத்தைப் போஷிப்பதற்கான செயல்களை மட்டுமே செய்தார்கள். லோக விருத்திக்கு விரோதிகளாய், துராத்மாக்களுமாய்; துராசாரமுடையவர்களுமாய்; குடில் புத்தியை உடையவர்களானார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

பிரம; க்ஷத்திரிய: வைசிய; சூத்திராதி (நான்கு) வருணங்களையும் நான்கு ஆசிரமங்களையும் இரண்யகர்ப்பன் நிர்மித்து, வர்ணாசிரமத்திற்கு உரிய மரியாதைகளையும் ஏற்படுத்தி; அவரவரது தாரதம்மானு குணமாகப் புண்ணிய லோகங்களையும் ஏற்படுத்தினார். ஸ்வதர்ம அனுஷ்டான பராயணரான பிராமணர்களுக்குப் பிரஜாபத்திய லோகத்தையும், போரில் புறங்கொடாத க்ஷத்திரியர்களுக்கு; இந்திரலோகத்தையும், ஸ்வதர்ம நிரதரான வைசியருக்கு மருத்துக்களின் லோகத்தையும்; பணிவிடைக்காரரான சூத்திரர்களுக்கு கந்தர்வலோகத்தையும், குரு பணிவிடை செய்வதில் ஊக்கமுடைய பிரம்மச்சாரிகளுக்கு ஊர்த்தரே தஸரான எண்பத் தெண்ணாயிரம் யதீச்சுவர்கள் வாசம் செய்யும் திவ்விய லோகத்தையும்? வானப்பிரஸ்தருக்கு சப்தரிஷி லோகத்தையும், கிரகஸ்தருக்குப் பிரஜாபத்திய லோகத்தையும்; சந்நியாசிகளுக்குப் பிரமலோகத்தையும் தோற்றுவிக்க சங்கல்பம் செய்தார். இவையாவும் கர்ம மார்க்கத்தினால் உண்டான புண்ணிய லோகங்களாகும். இனி ஞானியருக்குக் கிடைக்கும் உலகங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆத்மத் தியானிகளான யோகீசுரர்களுக்கு அமிர்தஸ்நானம் உண்டாம். (அமிர்த ஸ்நானம் என்பது துருவலோகத்துக்கு மேலே; கங்கை தோன்றும் இடம்.) தினமும் யோகப்பயிற்சிகளைச் செய்தும்; பிரமத் தியானத்தை செய்து கொண்டும் இருக்கிற மகாத்மாக்களுக்கெல்லாம்; நித்திய சூரிகளாலே காணப்பட்ட பரமபதம் உண்டாகும்.

புதன், 31 ஜூலை, 2019

சப்தரிஷிகள்

கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகள்! (மற்றொரு விதமாகவும் சொல்வதுண்டு).

1*கச்யபர்: தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே  மனித குலம்!

2*அத்ரி: இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும்  அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனசூயை தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை  வாழ்த்துகிறது ரிக்வேதம்.

3*பரத்வாஜர்: இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர்  என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

4*விஸ்வாமித்திரர்: இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர்.  விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட  நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு.

5*கவுதமர்: அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

6*ஜமதக்னி: துஷ்டர்களை அடக்க அவதாரம் இஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

7*வசிஷ்டர்: இவரின் ஆன்மிகத் தகவல்கள் இன்றும் பயனுள்ளவையாகப் போற்றப்படுகின்றன. அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச  தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும்  சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள். இவர்களை பெண்ணினம் வழிபடும் நாளே ரிஷி பஞ்சமி!  ஆவணி மாத வளர்பிறை  5-ம் நாளில் இவர்களை வழிபட, மறுபிறவியே இல்லாத பேரின்ப நிலையில் இணைவார்கள் என்கிறது புராணம்.