திங்கள், 28 ஏப்ரல், 2014

ஆதிசங்கரர் அருளிய ஞானோபதேசம்!

காஷ்மீர் முதல் குமரி வரை பல முறை யாத்திரை செய்து, ஞான நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர். தன் அவதாரம் பூர்த்தியாகும் காலத்தில், தன்னைப் பிரிய வேண்டியிருப்பது குறித்து வருந்திய சீடர்களுக்கு, சில உபதேசங்களைச் செய்து உள்ளார். அவை:

நித்யம் வேதம் ஓது; அதன் விதிப்படி தர்மத்தை செய். கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூஜை செய்; காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே; உலகப் பற்றை ஊட்டும் இன்பங்களெல் லாம், முடிவில் துன்பங்களா கவே மாறும் என்பதை மறவாதே; உன்னை நீ அறிவதில் ஆவல் கொள்; தன்னலப் பற்றிலிருந்து உன்னை மீட்டுக் கொள்; நல்லவர்களிடத்தில் உறவு கொள். பகவானிடத்தில் மாறாத அன்பு வை; புலன்களை அடக்குதல் போன்ற உத்தம குணங்களை பழகிக் கொள்; இல்லறத்துக்குரிய கர்மங்களை விடுத்து, துறவறத்தை மேற்கொண்டு, ஆத்ம ஞானியை குருவாக நாடி, அவரது திருவடித் தொண்டை மேற்கொள்; அவரிடம் பிரண உபதேசத்தை வேண்டிக் கொள்; வேதங்களின் முடிவான பொருளை உரைக்கும் வாக்கியங் களைக் கேட்டு தெரிந்து கொள்; வீண், தர்க்க வாதங்களில் ஈடு படாதே.

வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்கு துணை செய்யும் நியாயமான காரணங்களை மட்டும் நன்கு ஆலோசித்து கொள்; எங்கும் நிறைந்த பரம்பொருளே இந்த உடலில், நான் என்னும் அறிவுப் பொருளாக நிற் கிறது என்ற உண்மையை, நினைவில் வைத்துக் கொள்; நான் ஞானவான் என்னும் கர்வத்தை அறவே ஒழித்து விடு; படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்; பசிப் பிணிக்கு அன்னத்தை மருந்தாக உட்கொள்; ருசியுள்ள உணவைத் தேடியலையாதே; தெய்வாதீனமாக தானாகக் கிடைத்ததைக் கொண்டு மகிழ வேண்டும்.

குளிர், உஷ்ணம் போன்ற உபாதைகளைப் பொருட்படுத் தாமலிரு; பயனில்லாத வார்த்தைகளை சொல்லாதே; பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசு; எதிலும் பற்றற்ற நிலையில் இரு; உலகத்தாரின் போற்றுதல், தூற்றுதல் இவைகளை மனதில் வாங்கிக் கொள்ளாதே; ஏகாந்தத்தை நாடு.

உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய்; எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்த பரிபூர்ண நிலையில் பார்; ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமுமாய் நிற்பதால், இந்த பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருட்களும் வெறும் தோற்றமே எனும் தெளிவைப் பெறு; இவ்விதத் தெளிவினால், முன் செய்த வினைகளை யெல்லாம் அழித்து விடு; இவ்விதத்தெளிவின் பலத்தினால், வருங்காலத்தில் ஏற்படும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு; இந்தப் பிறவியின் இன்ப, துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று அனுபவித்து விடு; இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள். — இப்படியெல்லாம் உபதேசங்களைச் செய்து உள்ளார். அவரது ஞானோபதேங்களைப் பலரோ, சிலரோ பின்பற்றுவதால் தான், இன்னமும் மனித வர்க்கம் நல்லபடியாக இருக்கிறது என்பது பெரியோர்களின் கருத்து. இந்த உபதேசங்கள், சோபான பஞ்சகம் என்ற ஐந்து சுலோகங்களாக அமைந்துள்ளது. இந்த உபதேசம், சீடர்களாகிய நம் எல்லாருக்கும் சொல்லப்பட்டது தான் என்பதை யும் மறந்து விடக்கூடாது. முடிந்த வரையில் அனுசரித்து நடப்பது நல்லது. சொல்வதும், எழுது வதும் சுலபம் தான். அனுசரிக்க முடியுமா சார்? என்று கேட்டால், அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னார். முயன்று பார்க் கலாம். முடியாவிட்டால், மனசே ராஜா, புத்தியே மந்திரி. நம் இஷ்டம்!



அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்

மூலவர்:ஆயிரத்தெண் விநாயகர்
பழமை:3000 வருடங்களுக்கு முன்
ஊர்    :ஆறுமுகமங்கலம்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:ஆதிசங்கரர்    
           
திருவிழா:சித்திரை மாதத்தில் பத்துநாள் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. ஏழாம் நாளன்று பஞ்சமுகத்துடன் கூடிய ஹேரம்ப கணபதி நடராஜருடன் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.    
           
தல சிறப்பு:"விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில், ஆறுமுகமங்கலம் - 628 802, தூத்துக்குடி மாவட்டம்.     போன்:+91- 461 232 1486   
          
பொது தகவல்:ஆரம்ப காலத்தில் இந்த ஊர் குளத்தின் தென்கரையில் அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டனர். முதலில் கர்ப்பகிரகமும் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சன்னதிகளுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டது. பிறகு கோயில் விரிவடைந்தது. திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் தரப்பட்டன. சமீப காலத்தில் சுற்று மண்டபமும், மேற்கூரை தளமும் அமைக்கப்பட்டன.
   
பிரார்த்தனை:அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை  இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. வீடு கட்ட, திருமண வேலைகள் ஆரம்பிக்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க  என நாம் எந்த காரியம் தொடங்கினாலும் முதற்கடவுளின் முதல் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் போதும் அதில் எவ்வித தடைகளும் வராமல் இவர் பார்த்துக்கொள்வார்.   
          
நேர்த்திக்கடன்:வேண்டியது நிறைவேறியதும் 108, 1008 தேங்காய் சார்த்தி விநாயகரை வழிபடுகிறார்கள். அத்துடன் 108 தீப வழிபாடும் நடக்கிறது.   
          
தலபெருமை:ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் "கணேச பஞ்சரத்தினம்' பாடி, பின் திருச்செந்தூர் சென்று "சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம்' பாடி வியாதி நீங்கப் பெற்றார்.

தல வரலாறு:தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற  தகவல் புதுமையானதாகவே உள்ளது.மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளார். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார்.யாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.    
           
சிறப்பம்சம்:விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.



[Image1]
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்

மூலவர் :  மூகாம்பிகை
தீர்த்தம் :  அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :கொல்லூர்
மாவட்டம் :உடுப்பி
மாநிலம் :கர்நாடகா
பாடியவர்கள்:ஆதி சங்கரர்.  
      
திருவிழா:பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா. இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி. கொல்லூர் அன்னை மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன. அவை ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா, மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகியன. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள்.  
      
தல சிறப்பு:ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி:நிர்வாக அதிகாரி அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் -576 220, குந்தாப்பூர் தாலுகா, உடுப்பி மாவட்டம். கர்நாடகா மாநிலம்.போன்:+91- 8254 - 258 245, 094481 77892 
     
பொது தகவல்:கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர்,பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சனேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும்.
தினமும் இரண்டு முறை இங்கு அன்னதானம் நடைபெறுகிறது.
 
பிரார்த்தனை:மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள். 
     
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம். 
     
தலபெருமை:அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி அருள் பெற்றார். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.சகலநோய் நிவாரணி: ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார்.

குடஜாத்ரிமலை: கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.
மாசி மகா தேர்த்திருவிழா வைபவம் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாகவும், மிகவும் விமரிசையாகவும் நடைபெறும். அன்னையின் புன்னகை பூத்துக்குலுங்கும் எழில் வதனமும், புவனத்தை ஈர்க்கும் வைர மூக்குத்தியும், அனைவரின் கவனத்தைக் கவரும் தங்கக் கிரீடமும், தாமரைத் திருவடிகளும், அருள் சுரக்கும் அழகிய நேத்திரங்களும், சிம்மத்திவ் மீதமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூகாம்பிகையின் திருக்கோலத்தை காணக் கண்கோடி வேண்டும். திருத்தேர்விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்கிறார்கள். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள், மலைவாசிகள் கலந்து கொண்டு அம்பிகையின் அருளைப் பெறுகிறார்கள்.
 
தல வரலாறு:முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்கு துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக் கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, "மூகாம்பிகை' என்ற பெயரில் தங்கினாள்.
 
சிறப்பம்சம்: இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.


[Image1]


அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

மூலவர்    :குக்கி சுப்ரமண்யர்
தீர்த்தம்    :குமாரதாரா
ஆகமம்/பூஜை     :வைகானஸம்
பழமை    :2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :குக்கி சுப்ரமண்யா
மாவட்டம்    :தட்ஷின கன்னடா
மாநிலம்    :கர்நாடகா
பாடியவர்கள்:ஆதிசங்கரர்    
           
திருவிழா:கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகிறது.    
           
தல சிறப்பு:முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா-577 238 தட்ஷின கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.போன்:+91- 8257 - 281 224, 281 700.   
          
பொது தகவல்:சமஸ்கிருதத்தில் இத்தலம் "குக்ஷி' என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "குக்கி சுப்ரமண்யா' என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. நாக தோஷ பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.    
           
பிரார்த்தனை:நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:சர்ப்பஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு ரூ. 1500 கட்டணத்தில் சிறப்பு பூஜையும், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு வேண்டுபவர்களுக்கு ரூ. 250 கட்டணத்திலும் பூஜை நடத்தப்படுகிறது.   
          
தலபெருமை:தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது "குக்கி சுப்ரமண்யா' கோயிலாகும்.இது பல யுகம் கண்ட கோயிலாகும்.
கந்தபுராணத்தில் "தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா' அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.    
           
தல வரலாறு:காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது.
வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின.சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, ""எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்,'' என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே "சுப்ரமண்யா' என்பது தான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், "குக்குட த்வஜ கந்தஸ்வாமி' என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.    
           
சிறப்பம்சம்:முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.



[Image1]
அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில்

மூலவர்    :சாரதாம்பாள்
தீர்த்தம்    :துங்கபத்ரா
பழமை    :2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :சிருங்கேரி
மாவட்டம்    :சிக்மகளூர்
மாநிலம்    :கர்நாடகா
பாடியவர்கள்:ஆதிசங்கரர்.    
           
திருவிழா:ஏப்ரல், மே மாதத்தில் வரும் வைகாச சுக்ல பஞ்சமியில் 5 நாள் சங்கர ஜெயந்தி, வியாசர் பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாபா விரதம், உமாமகேஸ்வர விரதம் ஆகிய விசேஷ நாட்களுடன், மகாசிவராத்திரி, நவராத்திரி முக்கிய திருவிழாக்களாக உள்ளன.    
           
தல சிறப்பு:சந்திரமவுலீஸ்வரர் பூஜை : துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி - 577 139, சிக்மகளூர் மாவட்டம். கர்நாடகா மாநிலம்.போன்:+91 8265 - 250 123, 250 192   
          
பொது தகவல்:சங்கரர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவருக்கு பின் 13 நூற்றாண்டு காலத்தில் சுரேசுவரர் முதல் 36 பேர் பீடாதிபதிகளாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதிசங்கரர் கூறியபடி அத்வைத வேதத்தை பரப்பி வருகின்றனர்.

தற்போது சிருங்கேரி மடத்தின் 36வது பீடாதிபதியாக "ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள்' உள்ளார். இவருக்கென கோயில் அருகேயே துங்கபத்திரை ஆற்றைக்கடந்து தனி மடம் உள்ளது. தர்பார் தரிசனம் ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் சிருங்கேரியில் தர்பார் தரிசனம் காண்பது சிறப்பு. இந்த தரிசனத்தின் போது பஞ்சாங்கம் வாசித்து, நான்கு வேதங்கள் ஓதி, மேளதாளங்கள் ஒலிக்க தேவிக்கு தீபாராதனை நடக்கும். சாரதாதேவியின் இடதுபக்கம் தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் தரிசனத்தின் போது பொன்னாடை போர்த்தி, தலையில் கிரீடம் வைத்து, கழுத்தில் விலை உயர்ந்த நகைகள், கையில் ருத்ராட்ச மாலை, விரல்களில் பெரிய மோதிரங்களுடன் அம்மனின் பிரதிநிதியாக பீடாதிபதி அமர்ந்து தரிசனம் தருவார். இதுவே தர்பார் தரிசனம் ஆகும். மடத்தின் காவல் தெய்வங்கள் கிழக்கே - காலபைரவர் மேற்கே - அனுமன் வடக்கே - காளி தெற்கே - துர்க்கை கோயில் அமைப்பு சாரதாதேவி பெரிய ராஜகோபுரத்துடன் தனி கோயிலில் அருளுகிறாள். அருகே வித்யாசங்கரர் பிரமாண்டமான கருங்கல் கோயிலில் இருக்கிறார். ஆதிசங்கரர், ஜனார்த்தனர், அனுமன், கருடன், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர், ஹரிஹரன், மலையாள பிரம்மா, சுப்ரமணியர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. 1907ல் இக்கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1916ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 12 முதல் 3 மணிவரையிலும், இரவு 7 முதல் 9 மணிவரை அன்னதானம் நடக்கிறது.
   
பிரார்த்தனை:இவளை வேண்டினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமுன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு.   
          
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யலாம். இங்கு தினமும் லலிதா சகஸ்ரநாமம் கூறப்படுகிறது.   
          
தலபெருமை:சிர்ங்க கிரி என்பதே சிர்ங்கேரி என வழங்கப்படுகிறது. தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் "ரிஷ்யசிருங்கர்' என்ற முனிவர். இவர் விபாந்த முனிவரின் புதல்வர். ரிஷ்யசிருங்கர் என்றால் "மான் கொம்பு உடையவர்' என்று பொருள். அவர் வாழ்ந்த இப்பகுதி "சிருங்கேரி' ஆனது.

துங்கபத்ரா நதி:சிருங்கேரியில் ஓடும் புண்ணிய நதி துங்கபத்ரா. துங்கை, பத்ரா ஆகிய இரண்டு நதிகள் இணைந்து ஓடுவதால் இப்பெயர் பெற்றது. இவை இரண்டும் சகோதரி நதிகள். துங்கை கர்நாடகாவின் வடக்கே உள்ள வராஹ மலையில் உற்பத்தியாகி, 16 கி.மீ. தூரம் ஓடி, பத்ரா என்ற நதியுடன் இணைகிறது.

பீடத்தின் அமைப்பு:ஆதிசங்கரர் அமைத்த நான்கு பீடங்களும் தனி சிறப்பு பெற்றவை. இந்தியாவின் பரப்பளவு 1960 சதுர மைல். இதை நான்கு சம வட்டங்களாக்கினால் ஒவ்வொன்றும் 490 சதுர மைல் அளவானது. இந்த முறையில் தான் நான்கு பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, வடக்கே பத்ரி, தெற்கே சிருங்கேரி ஆகிய இடங்களில் ஆதிசங்கரர் மடங்களை ஸ்தாபித்தார். சிருங்கேரியில் ஆச்சாரியார் சுரேசுவரா தலைமையில் யஜுர்வேத முறையில் சாரதா பீடம் அமைக்கப்பட்டது.

மழைக்கடவுள்:சிருங்கேரியிலிருந்து 10கி.மீ. தூரத்தில் மலஹானிகரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள தூணில் பிரசித்தி பெற்ற விநாயகர் உள்ளார். இவரது உருவம் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மழை வருவதற்காகவும், இயற்கையின் சீற்றத்தை தடுக்கவும் இவருக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இங்கு சிர்ங்க முனிவர் வழிபட்ட மலஹானிகரேசுவரரும், அம்மன் பவானியும் அருளுகின்றனர்.
   
தல வரலாறு:மாகிஷ்மதி நகரில் மண்டனமிசிரர் என்ற விசுவரூபரிடம் ஆதிசங்கரர் வேதம் குறித்து வாதம் செய்தார். வாதத்திற்கு விசுவரூபரின் துணைவி உபயபாரதி நடுவராக இருந்தார். இவர் சரஸ்வதி தேவியின் அவதாரம். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நிபந்தனை. வாதம் ஆரம்பிக்கும் முன் சங்கரருக்கும் விசுவரூபருக்கும் மாலைகளை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது.

17 நாள் போட்டியின் முடிவில் விசுவரூபரின் மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விசுவரூபர் துறவறத்திற்கு தயாரானார். உடனே அவரது மனைவி,"" சங்கரரே! மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது. என்னிடம் இல்லறம் பற்றி வாதம் செய்து வெற்றி பெற்றால் தான் அது முழு வெற்றியாகும்,''என்றார். சங்கரரோ பிரமச்சாரி. ஒரு மாதத்திற்கு பின் இல்லறம் பற்றிய வாதம் வைத்துக் கொள்ளலாம் என்றார் சங்கரர்.

இல்லறம் பற்றி யோசித்து கொண்டு செல்கையில், அமருகன் என்ற மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன் யோக சக்தியால் மன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார். மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்தார். உபயபாரதி தோற்றார்.  தன் கணவர் விசுவரூபர் துறவறம் ஏற்க அனுமதித்தார். சங்கரர் இவருக்கு "சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.

சரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம் சங்கரர்,""தான் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வர வேண்டும்,''என்ற வரத்தை பெற்றார். அதற்கு சம்மதித்த உபயபாரதி,""சங்கரரே! உம்மை தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீர் திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். திரும்பிபார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன். அதன் பின் தொடர்ந்து வரமாட்டேன்,''என்ற நிபந்தனையுடன் புறப்பட்டார்.

சங்கரருக்கு விசுவரூபருடன் நான்கு சீடர்கள் அமைந்தனர். இவர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். பின்னால் உபயதேவி "கலீர்',"கலீர்' என கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அனைவரும் சிர்ங்ககிரி வந்து சேர்ந்தார்கள். இந்த இடத்தில் நல்லபாம்பும் தவளையும் சேர்ந்திருந்தது. பசுவும்புலியும்இணைந்திருந்ததை கண்ட சங்கரர், யோகிகள் தங்குவதற்கு தகுந்த இடம் என தீர்மானித்தார்.இந்த இடம் வரை கேட்டு வந்த தேவியின் சிலம்பொலி நின்று விட திரும்பிபார்த்தார் சங்கரர்.நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் உபயபாரதி. அங்கேயே பாறை மீது ஸ்ரீசக்ரம் வடித்து தேவியை "சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். இவருக்கு காட்சி கொடுத்த அன்னை,""சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சிர்ங்கேரி சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள். சுரேசுவரரே சங்கர பீடத்தின் முதல் ஆச்சார்யர் ஆனார்.
   
சிறப்பம்சம்: சந்திரமவுலீஸ்வரர் பூஜை : துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.



[Image1]