திங்கள், 13 ஜனவரி, 2014

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்

மூலவர் :திருநீரகத்தான்
உற்சவர்:ஜெகதீசப்பெருமாள்
அம்மன்/தாயார்:நிலமங்கை வல்லி
தீர்த்தம்:அக்ரூர தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநீரகம்
ஊர் :திருநீரகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
-திருமங்கையாழ்வார்

திருவிழா:வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம், காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 94435 97107, 98943 88279

பொது தகவல்:இத்தல இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஜெகதீஸ்வர விமானம் எனப்படும். இத்தல இறைவனை அக்ரூரர் தரிசனம் செய்துள்ளார்.

பிரார்த்தனை:ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருநீரகம் எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தல வரலாறு:"நீரகத்தாய்' என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த "திருநீரகம்' முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்

மூலவர்:ஏகாம்பரநாதர்
உற்சவர்:உற்சவர்சொர்ணாம்பாள்
அம்மன்/தாயார்:காமாட்சி (ஏழவார்குழலி)
தல விருட்சம்:மாமரம்
தீர்த்தம்:சிவகங்கை
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கச்சி
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்:பண்டு செய்த பழவினையின் பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டுலா மலரச் செஞ்சடை யேகம்பன் தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.

திருவிழா:பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

தல சிறப்புஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501,போன்:+91- 44-2722 2084.

பொது தகவல்:மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

பிரார்த்தனை:இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

தலபெருமை:காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.

இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

தல வரலாறு:கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
 


51சக்தி பீடங்கள்-பகுதி-16
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
அம்மன்/தாயார்:வண்டார்குழலி, மகாகாளி
தல விருட்சம்:பலா
தீர்த்தம்:முத்தி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:திருவாலங்காடு
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே.-திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

திருவிழா:மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 248 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும்.

முகவரி:அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். போன்:+91- 4118-272 608.

பொது தகவல்:முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை:நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

நேர்த்திக்கடன்:மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.

தலபெருமை:காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

தல வரலாறு:சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 


51சக்தி பீடங்கள்-பகுதி-15


அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில்

மூலவர்:காளத்தியப்பர், காளத்தீசுவரர்
அம்மன்/தாயார்:ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பொன்முகலியாற்று தீர்த்தம்
பழமை:3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:சீகாளத்தி, திருக்காளத்தி
ஊர்:காளஹஸ்தி
மாவட்டம்:சித்தூர்
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
பாடியவர்கள்:அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:கொண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே வண்டாரும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய் அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தொண்டை நாட்டு தலங்களில் இது 19வது தலம்.

திருவிழா:மாசித்திருநாள், திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி 10-நாட்கள் உற்சவம். திருத்தேர் பவனி. சிவராத்திரி இரவு நந்திசேவை தரிசிக்க சிறப்பு, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.

தல சிறப்பு:இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இது வாயு தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் - உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 5 முதல் 12 மணி, மாலை 5 முதல் 9 வரை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9.00 மணி வரை

முகவரி:அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி - 517 644 சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.போன்:+91 8578 222 240, 94444 79057

பொது தகவல்:கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், 60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும், நந்தியும் உள்ளன.

பிரார்த்தனை:ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. இது ராகு, கேது தலம் என்பதால் கோயிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே - அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது. கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு "மணி கர்ணிகா கட்டம்' என்று பெயர். இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல, பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று ஒரு கதை வழங்கி வருகிறது. அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக்கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலக்காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள். சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.

தல வரலாறு:முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: ""வாயுதேவனே... நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்,''. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.

வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும்.




51சக்தி பீடங்கள்-பகுதி-14


அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
அம்மன்/தாயார்:கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி
தீர்த்தம்:கோடி தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருக்கோகர்ணம்
ஊர்:திருக்கோகர்ணம்
மாவட்டம்:உத்தர் கன்னடா
மாநிலம்:கர்நாடகா
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர்

தேவாரப்பதிகம்:பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லாதான் காண் கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் கட்டங்கன் காண்கையிற் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான் காண் ஆடினான் காண்பாணி யாக நின்று மறையோடு மாகீதம் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
-திருநாவுக்கரசர்.தேவாரப்பாடல் பெற்ற துளுவ நாட்டுத்தலம்.

திருவிழா:மாசி சிவராத்திரியில் 9 நாள் திருவிழா. முதல் நாள் தேர்த் திருவிழாவும் 8ம் நாள் பிரமோற்ஸவமும் நடைபெறுகிறது. கார்த்திகை பவுர்ணமியில் திரிபுரதகன விழா.

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 267 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.போன்:+91- 8386 - 256 167, 257 167

பொது தகவல்:கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன.மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.

விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் "துவிபுஜ விநாயகராக'க் காட்சிதருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் சிவலிங்கவடிவில் ஆதிகோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.

பிரார்த்தனை:சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:நதி வடிவ அம்பிகை: கைலாயத்தில் சிவன் மலை வடிவிலும், அம்பிகை நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும், அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்மனே இங்கு நதியாக ஓடுவதாக கூறப்படுகிறது.

இக்கோயிலின் முன்புறம் நதியும், அதற்கடுத்து மலையும் இருக்கிறது. சிவன் மலையாக வீற்றிருக்கும் தலங்களில், கிரிவலம் மிகவும் விசேஷம். ஆனால், இங்கே நதி இருப்பதால் கிரிவலம் வர முடியாது.

சித்தி தலம் : சிவபெருமான், சுயம்புவாக எழுந்தருளிய தலங்களில் ஒன்று இது. சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பதால் இது ஒரு சித்தி தலமாக விளங்குகிறது. இவரை மகாபலேஸ்வரர் என்கின்றனர். இங்குள்ள அம்மன் "தாமிர கவுரி' எனப்படுகிறாள்.

பிசாசு மோட்சம்: இத்தலத்தில் அதிகளவில் பித்ருபூஜை செய்கிறார்கள். இதனால் முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் சொர்க்கம் செல்வார்கள் என்பதும், பவுர்ணமியன்று இந்த ஆற்றில் நீராடி சிவனை வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்ததற்கு ஈடான பாவம்) விலகும் என்பதும் நம்பிக்கை.

இத்தலத்தில் செய்யப்படும் ஒரு புண்ணிய காரியம் கோடி மடங்கு செய்ததற்கான பலன் தரும். சிவன் இத்தலத்தில் தானே தோன்றியதால் மற்ற சிவத்தலங்களை விட மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். அகத்தியர் இங்கு பூஜை செய்துள்ளார். தேவாரப்பாடல் பெற்ற தலம். மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் "பிசாசு மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது.

ருத்ர பூமி : பிரம்மனின் படைப்பில் அதிருப்தியடைந்த ருத்ரன், பிரம்மாவின் படைப்புக்களை அழிக்க பூதகணங்களை தோற்றுவித்தார். இதையறிந்த விஷ்ணு ""ருத்ரனே! பிரம்மனை மன்னித்தருள வேண்டும். அவரது படைப்புக்களை பிரளய காலத்தில் மட்டும் அழித்து அருள்புரிய வேண்டும். அத்துடன் நீங்கள் இத்தலத்தில் இருந்து வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தந்தருள வேண்டும்,''என்றார். ருத்ரனும் அதை ஏற்றார். அன்றிலிருந்து இத்தலம் "ருத்ரபூமி' ஆனது.

தாமிர கவுரி : ஒருமுறை பிரம்மா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்போது ருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி கவுரி என்ற பெயரில் நதியாக ஓடிக்கொண்டிருந்த பார்வதி அவரது வலக்கையில் தோன்றினாள். பிரம்மா அவளிடம் நீ விரைவில் ருத்ரனின் மனைவி ஆவாய் என்றார். அவளும் ருத்ரரை சந்திக்க சென்றாள். அவரை அடைவதற்காக பக்தியுடன் தாமிர பர்வத மலையில் நதிவடிவில் தவமிருந்தாள். இவளது பக்திக்கு மகிழ்ந்த ருத்ரன் அவளை திருமணம் செய்து கொண்டார்.

இதன்பிறகு அந்த இடம் "வைவாஷிக பர்வதம்' (கல்யாண கிரி) என்று அழைக்கப்பட்டது. அம்பிகை "தாமிர கவுரி' ஆனாள். இந்த நதி கோயிலுக்கு எதிரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆத்மலிங்க பூஜை: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஆத்மலிங்க பூஜை செய்வார்கள். இந்த லிங்கத்தை இராவணனிடமிருந்து விநாயகர் மீட்டுத் தந்தார். அதைத்தான் இப்படிப் பூஜிக்கின்றனர். ஓரடி உயரமுள்ள சாளக்கிரம ஆவுடைமீது சொர்ண ரேகையுடன் நடுவில் குழியோடு இந்த ஆத்ம லிங்கம் காட்சி தருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பீடத்தை அகற்றி பூஜித்து, பக்தர்கள் தரிசனத்திற்கும் வைக்கிறார்கள்.

தல வரலாறு:இத்தலத்தின் வரலாறு, விபீஷணன் ரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை கணபதி தடுத்ததை ஒத்துள்ளது. கணபதியைப் பார்த்தால் பக்தர்கள் தான் தலையில் குட்டிக் கொள்வார்கள். ஆனால், இத்தலத்தில் குட்டு வாங்கிய கணபதி இருக்கிறார். இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட ராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக, கயிலை மலை வந்து, சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான்.

இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம், ""ராவணன் இந்த லிங்கத்தை கொண்டு சென்றால், தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும்,''என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் ராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான்.

ஈசன் இந்த லிங்கத்தை ராவணனிடம் கொடுக்கும் முன், ""ராவணா! நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதை கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராது,''என கூறி அனுப்பியிருந்தார். அவனிடமிருந்து அந்த லிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு, ராவணன் சந்தியாவந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து, கணபதியை அழைத்து,""நீ பிரமச்சாரி வேடத்தில் ராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. ராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் லிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான்.

நீ அவனிடம், லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால், லிங்கத்தை கீழே வைத்து விடுவேன் என்று சொல்,'' என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, ராவணன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண லிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை ராவணனை அழைத்தார்.

அப்படி அழைத்தும் ராவணன் வராத காரணத்தினால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர். சந்தியாவந்தனம் முடித்து வந்த ராவணன், லிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு கணபதியின் தலையில் கோபத்தில் குட்டினான். தன் 20 கைகளாலும் லிங்கத்தை தூக்கி பார்த்தான். முடியாமல் போனதால் அங்கேயே விட்டுவிட்டு இலங்கை சென்றான்.

பிறகு தேவர்கள் தேவசிற்பியை அழைத்து லிங்கத்தை சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவனை மகாபலேஸ்வரர் என்றும், நதிவடிவிலுள்ள அம்பிகையை தாமிரகவுரி என்றும் அழைக்கின்றனர்.

கோகர்ணம்- பெயர் விளக்கம் முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய ருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று அவரை வேண்டினார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு, தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார்.

இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால், அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி, ""இறைவா! தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து, தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள்,''என கெஞ்சினாள்.

இவளது வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து, ""பூமாதேவியே! நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் "ருத்ரயோனி' என்றும், அதற்கு காரணமான நீ "கோ' (பசு) என்றும், உனது காது "கர்ணம்' என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் "கோகர்ணம்' ஆனது. எனவே, இத்தலத்தை "காது துவார தலம்' என்றும் அழைக்கிறார்கள்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்