திங்கள், 13 ஜனவரி, 2014

51சக்தி பீடங்கள்-பகுதி-13
அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்

மூலவர்:மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
அம்மன்/தாயார்:பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம்:மருதமரம்
தீர்த்தம்:பாலாநதி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருப்பருப்பதம்
ஊர்:ஸ்ரீசைலம்
மாவட்டம்:கர்நூல்
மாநிலம்:ஆந்திர பிரதேசம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.-திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று.

திருவிழா:தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை, மஹா சிவராத்திரி, யுகாதி பண்டிகை, கார்த்திகை சோமவாரம் திருவிழா, பிரதோஷம்

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்திதேவர் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது. ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சைல சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 268 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 5 மதியம் 3 மணி, மாலை 5.30 - இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.

முகவரி:அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம் - 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம்.
போன்:+91- 8524 - 288 881, 887, 888.

பொது தகவல்:கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.

ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது.

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் "ரங்க மண்டபம்' எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன.

மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது. அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.

சனகல பசவண்ணா நந்தி: இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சாட்சி கணபதி: ஸ்ரீசைல சிகரத்திற்கு 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹா விஷ்ணுவானவர், விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காணவரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் (ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவரை சாட்சி கணபதி என்பர். எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி தத்தம் கோத்திரங்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் ஸ்ரீ சைலம் வாயில் நுழைகின்றனர்.

பிரார்த்தனை:பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சுவாமிக்கும் அம்மனும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:மல்லிகார்ஜுனர்: மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் "மல்லிகார்ஜுனர்' எனப்படுகிறார்.

சிறப்பம்சம்: பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.

ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார்.

நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசைலம் - பக்தி ஞானம் உலகப்பற்றின்மை ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது. ஸ்ரீசைலம் வேதாந்திகள், பரமயோகிகள், சித்தி பெற்ற புருஷர்கள், மகாதவசிகள், இருக்கும் தவஸ்தலமே இப்புண்ணிய ஷேத்திரம் இதற்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு.

கிருதாயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும், ஆதிசங்கரரும், பூஜைகள் செய்த புண்ணிய ஷேத்திரம்.

ஸ்ரீசைல சிகரத்தை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை. இந்த புண்ணிய தலத்திற்கு ஈடானது எங்கும் என்றும் இல்லையென இதன் புகழ் பரவிக்கிடக்கின்றது.

ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீ கிரி, ஸ்ரீ சைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஷேத்திரம் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் (ஆந்திரா கர்நூல் மாவட்டத்தின்) கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. ஸ்ரீபிரம்மராம்பா தேவி பதினெட்டு மஹாசக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறாள். சித்தி பெறுபவருக்கும், சாமான்ய பக்தருக்கும் அபூர்வமான அனுபவத்தை இந்த ஷேத்திரம் கொடுக்கின்றது.

எல்லா கோயில்களிலும் குளித்து கைகால்கள் கழுவி ஒன்றும் சாப்பிடாமல் கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு எந்த வித நித்திய கர்மங்களையும் செய்யாமல் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்யலாம். இதற்கு தூளி தரிசனம் என்பர். தூய்மையான மனதோடு, சாதி, மத பேதமின்றி மூலவரான ஜோதிர் லிங்கத்தின் தலையை தொட்டு வணங்கலாம். வெறும் தரிசனத்தினாலேயே எல்லாவிதமான சுகங்களையும் பக்தர்கள் அனுபவிப்பார்கள் என்ற பெயரும் புகழினை பெற்றிருக்கும் இறைவன் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி ஆவார்.

மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். படைவீரர்களை தெற்கு நோக்கி யாத்திரை தொடங்க உத்திரவிட்டான். ஸ்ரீ மல்லிகார்ஜுனேசுவரரை தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்துவிட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு:சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,""தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,''என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.

நந்தி தவம் செய்த "நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

51சக்தி பீடங்கள்-பகுதி-12
அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:சுவேதாரண்யேஸ்வரர்
அம்மன்/தாயார்:பிரமவித்யாம்பிகை
தல விருட்சம்:வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்:முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:ஆதிசிதம்பரம், திருவெண்காடு
ஊர்:திருவெண்காடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்
தேவாரப்பதிகம்

வாரப்பதிகம் கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.

திருவிழா:மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும், ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன. பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறக்க நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 11 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91-4364-256 424

பொது தகவல்:ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது.

கரையில் சூரியதீர்த்தலிங்க சன்னதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சன்னதி தனிக் கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை:இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

தலபெருமை:காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.

சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

நடராஜர் : இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

அகோர மூர்த்தி : ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.

சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.

அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.

பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

காளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

துர்க்கை தேவி : துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.

புதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.

பிள்ளையிடுக்கி அம்மன்: திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.

புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.

இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது.

காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது.

சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.

பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.

தல வரலாறு:பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

51சக்தி பீடங்கள்-பகுதி- 11

 அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில்

மூலவர்:உலக நாயகி, மகிஷாசுரமர்த்தினி
தீர்த்தம்:சர்க்கரை தீர்த்தம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:தேவிபுரம், தேவிப்பூர்
ஊர் :தேவிபட்டினம்
மாவட்டம்:ராமநாதபுரம்
மாநிலம்:தமிழ்நாடு


திருவிழா:நவராத்திரி, பவுர்ணமி

தல சிறப்பு:அம்மன் இங்கு சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வீர சக்தி பீடமாகும்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில், தேவிபட்டினம்-623 514. ராமநாதபுரம் மாவட்டம்.போன்:+91 4567 - 221 213, 264 010, 94444 57971, 94444 57978

பொது தகவல்:கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. கோயில் நுழைவு வாயிலில் 5 நிலை 7 கலசத்துடன் கூடிய பிரமாண்டமான கோபுரம் அமைந்துள்ளது. மூலவருக்கு மேல் ஏகதள விமானம் அமைந்துள்து. கோயில் எதிரில் சர்க்கரை தீர்த்தம் அமைந்துள்ளது. கோயில் உள்புறம் பலிபீடம், கொடிமரம், சிம்ம வாகனம் உள்ளது. கொடிமரம் அடுத்து பதினாறு கால் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்புறம் இருபுறமும் சிங்கம் வீற்றிருக்க அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதை சிற்பம் உள்ளது. அடுத்துள்ள பதினாறு கால் மகாமண்டபம் முழுவதும் கருங்கல் திருப்பணி. அதற்கடுத்து அர்த்தமண்டபம் தாண்டி , கர்ப்பக்கிரகத்தில் அம்மன் அருள்பாலிக்கிறாள். சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை:எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி பீடமான இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:சுயம்பு மூர்த்தியான இத்தல அம்மனுக்கு பலவகையான அபிஷேகம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:தேவி பட்டினம் என்றாலே அனைவருக்கும் ராமர் தோஷ நிவர்த்திக்காக கடலுக்குள் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ராமர் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன் இங்குள்ள உலகநாயகி அம்மனை வழிபட்டுள்ளார். இந்த உலகை காப்பதற்காக மகிஷாசுரனுடன் 9 நாள் போராடி 10ம்நாள் வெற்றி பெற்று இங்கு ஓய்வு எடுக்க சயன கோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் தங்கியதாகவும், அந்த தேவியால் இந்த பட்டினம் தேவிபட்டினம் ஆனதாகவும் கூறப்படுகிறது. நவராத்திரி நாயகியான இந்த தேவியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தல அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது.அம்மனின் 51 சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சி ராஜமாதங்கி சியாமள பீடம், காஞ்சி காமாட்சி காமகோடி பீடம், காசி விசாலாட்சி மணிகர்ணிகாக பீடம் என்பது போல், தேவி பட்டினம் அம்மனின் வீரத்தை பறை சாற்றும் வகையில் வீரசக்தி பீடமாகும். ராவண வதத்திற்கு முன் ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோர் ராமநாதபுரம் அருகிலிலுள்ள உப்பூர் விநாயகரை தரிசித்துவிட்டு, வீரசக்தி பீடமான இத்தலத்தில் தங்கி அம்மனை வணங்கி ஆசி பெற்று சென்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

தல வரலாறு:பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். எருமை போல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள். இவளுக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பாண பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும் அளித்தார்கள். ஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷனை அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: அம்மன் இங்கு சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வீர சக்தி பீடமாகும்.