திருஉந்தியார் பகுதி-1
சைவ சித்தாந்தத்தில் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு. இவற்றுள் மணிமுடியாய் விளங்குவது மெய்கண்ட தேவ நாயனாரின் சிவஞான போதம். சிவஞான போதத்திற்குச் செய்யுள் நடையில் அமைந்த உரை சிவஞான சித்தியார். இந்நூல் சிவஞான போதத்தின் வழிநூலாகக் கொள்ளப்படும். அதன் பின்னர்த் தோன்றியது உமாபதிசிவம் தந்த சிவப்பிரகாசம். இது சிவஞான போதத்திற்குச் சார்பு நூலாகக் கொள்ளப்படும். இம்மூன்றும் தவிர இருபா இருபஃது உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக் கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய ஒன்பது நூல்களும் சிவஞான போதத்தை ஒட்டியும் அரண் செய்தும் நிற்பவை.
1.திருஉந்தியார்
பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களுள் திரு உந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும் மெய்கண்ட தேவ நாயனாரின் காலத்திற்கு முற்பட்டவை. ஆயினும் அவை சாத்திர நூல்கள் பதினான்கனுள் வைத்து எண்ணப்படும்.
மெய்கண்டாரின் காலத்துக்கு முற்பட்டு எழுந்த வாகீச முனிவரின் ஞானாமிர்தம் பதினான்கு சாத்திரங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதில்லை. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிச் செய்தது திருவுந்தியார். இவருடைய மாணவரின் மாணவராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிச் செய்தது திருக்களிற்றுப்படியார். இவை இரண்டும் கருத்தாலும், சொல்லாட்சியாலும் ஒத்திருப்பதால் இவற்றை இரட்டைச் சாத்திரங்கள் என்றே வழங்கலாம். திரு உந்தியாருக்கு விளக்கமாகவும் விரிவாகவும் அமைந்தது திருக்களிற்றுப்படியார்.
திரு உந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும் சமய குரவர்கள் நால்வரும் தமிழ் நாட்டில் வாழ்ந்து தம் அருளிச் செயல்களை வழங்கிய காலத்துக்குப் பிற்பட்டவை. மெய்கண்ட தேவ நாயனார் தோன்றிச் சிவஞான போதத்தை அருளித் தமது திருமரபை நிலைநிறுத்திய காலத்துக்கு முற்பட்டவை. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள். இந்த நான்கு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் சைவத் திருக்கோயில்களில் வழிபாடுகளும், சமய ஒழுக்கமும் மக்களின் சமய உணர்வும், பல ஏற்றத் தாழ்வுகளுக்கும் உட்பட்டு இருந்தன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
மூவர் முதலிகளின் தேவாரத் திருப்பாடல்கள் சிலகாலம் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பழக்கத்தில் இல்லாமல் இருந்தன என்றும் அவற்றைச் சோழ மன்னன் ஒருவன் மீட்டு எடுத்து நம்பியாண்டார் நம்பிகளின் பேருதவியுடன் மீண்டும் தமிழகத்தில் இசைக்கச் செய்தான் என்றும் வரலாறு கூறுகிறது.
அதன் பின்னர்க் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் கழித்த பிறகே மெய்கண்ட தேவ நாயனார் தம் திருமரபை நிலைநாட்டுகிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியவையே திருஉந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும். எனவே, இவ்விரு நூல்களும் தோத்திர காலத்துக்கும், முறைப்படுத்தப்பட்ட சாத்திர காலத்துக்கும் இடையில் தமிழகத்தின் சைவ சமய மரபுகளை நமக்கு அறிவிக்கும் அரிய நூல்களாகும். மெய்கண்ட சந்தானத்துக்குக் காலத்தால் முற்பட்ட சமய நெறி இத்தகையதென்று இவை நமக்கு உணர்த்துகின்றன.
மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் திரு உந்தியார் என்ற தலைப்பில் இருபது தாழிசைகள் கொண்ட ஒரு பதிகத்தை அருளிச் செய்துள்ளார். சிவபெருமான் முப்புரங்களை அழித்த வெற்றியையும், தக்கன் வேள்வியைத் தகர்த்த வெற்றியையும், இன்ன பிறவற்றையும் மாணிக்க வாசகரின் திருஉந்தியார் எடுத்துரைக்கிறது. எனவே, திரு உந்தியார் ஞான வெற்றி என்ற குறிப்பும் பெற்றுள்ளது.
திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாரும் தமது திரு உந்தியாரை, மாணிக்க வாசகரின் திருஉந்தியார் போலவே கலித்தாழிசைகளாக அருளிச் செய்துள்ளார்.
1 அகளமாய் யாரும் அறிவு அரிது அப்பொருள்
சகளமாய் வந்தது என்று உந்தீபற
தானாகத் தந்ததுஎன்று உந்தீபற
வடிவம் இல்லாததாயும், ஒருவராலும் அறியப்படாத அருமை உடையதாகவும், என்றும் நிலைபெற்றுள்ள சிவபரம்பொருள் பக்குவம் பெற்ற உயிர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்தது. இவ்வாறு எழுந்தருளி வந்தமை தனது பெருங் கருணையினாலே என்று உந்தீ பறப்பாயாக.
சிவபரம் பொருள் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்தது என்பது இங்கு, குருவடிவாக இறைவன் வந்தமையைக் குறிக்கும். அகளம் என்பது வடிவம் அற்ற தன்மை என்று பொருள்தரும். வடிவம் அற்ற தன்மை ஆகையினாலே அதற்கு முதலும் நடுவும் இறுதியும் இல்லை என்பதாம். அதுபோலவே, சொல்லுக்கும் மனதுக்கும் எட்டாதது
பரம்பொருள் என்பதையும் உணர்த்தும். சகளம் என்பது வடிவத்தோடு கூடிய நிலை. வடிவத்தோடு கூடியது என்றாலும் அதனை உயிர்கள் தாமாகச் சென்று அடைய முடியாது என்பதைக் குறிப்பதற்குப் பரம் பொருள் தானாகக் காட்சி தந்தது என்று கூறினார்.
உந்தி பறத்தல் என்பது இளமகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று என்பர். அது எவ்வாறு விளையாடப்பட்டது என்பது நமக்குத் தெரிய வரவில்லை. எனினும் இவ்விளையாட்டில் இருவர் மூவர் கூடி ஆடுவர் என்பதும் பாடுவர் என்பதும் தெரிகிறது. ஈயினைப் போன்று உந்தி பற என்றும், உந்தி ஈயே பற என்றும், உமது தீமைகள் எல்லாம் பறக்கட்டும் எனவும் பல்வேறு வகையாக இதற்குப் பொருள் கூறுவர். முதலிரண்டு அடிகளை ஒரு பெண் பாடவும், மூன்றாவது அடியை மற்றொருத்தி பாடவுமாக இவ்விளையாட்டு நிகழும் என்பது தெரிகிறது. இளைய மகளிர் விளையாட்டின் பாடல் வகையைப் பயன்படுத்தி அரிய மெய்ப்பொருள் கருத்துக்களை விளக்குவது ஆசிரியர்கள் கையாண்ட உத்தி என்பது புலனாகிறது.
அகள வடிவம் அதாவது அருவத் தன்மை இறைவனுக்கு உரியது என்பதை வேறு சில சமயங்களும் ஒத்துக்கொள்கின்றன. என்றாலும் அவை இறைவன் உயிர்களுக்கு அருள்புரியும் பொருட்டு எழுந்தருளும் போது அவன் பூமியில் மனிதனாக அவதரித்தான் என்று கூறுகின்றன. சிவபெருமான் திருமேனி தாங்கி எழுந்தருளுவார் என்று சைவ சமயம் கூறுமே தவிர அவர் கருமேனி கொண்டு பிறப்பார் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. சிவபிரானுக்கு அவதாரம் என்பது சைவ சமயம் ஏற்றுக் கொள்ளாத ஒன்று. பண்டைத் தமிழ் இலக்கியங்களும் சிவபெருமானை பிறவா யாக்கைப் பெரியோன் என்றே கூறும்.
மும்மலம் உடையோர்க்கு இறைவன் திருவருள் பாலிப்பதற்காக குருவடிவில் எழுந்தருளுவான். அவ்வாறு எழுந்தருளி உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்துவது அவன் திருவருளாலேயே அன்றி உயிர்களின் முயற்சியினால் அன்று. ஆகவேதான் தானாகத் தந்தது என்று ஆசிரியர் குறிப்பிட்டார். மேலும் பெருமைமிக்க வள்ளல் ஆகிய சிவபெருமான் கேட்ட பின் கொடுப்பதில்லை. கேளாமலே தகுதியறிந்து வழங்குவான்.
2 பழக்கம் தவிரப் பழகுவது அன்றி
உழப்புவது என்பெணே உந்தீபற
ஒரு பொருளாலே என்று உந்தீபற.
யாவர்க்கும் அறிய முடியாததாகிய பரம்பொருளே எழுந்தருளி வந்து அருள்பாலித்த பின்னரும், அதுவரை பழகி வந்த பழக்கத்தைத் தவிர்த்து இப்பொழுது கிடைக்கப்பெற்ற திருவருறைச் சார்ந்து பழகுவதே சிறந்தது. அதைவிட்டு உலகியல் பொருள்களிலேயே மீண்டும், மீண்டும் உழல்வதால் அகும் பயன் என்ன? பெண்ணே! ஒப்பற்ற தனிப்பொருளாகிய இறைவனையே சார்ந்து ஒழுகுவது இனிச் செய்யத் தக்க செயலாகும் பெண்ணே என்ற சொல்பெணே எனக் குறுகி நின்றது.
இளமகளிர் விளையாட்டு வகையாகிய உந்தி பறத்தல் என்ற வகையில் நூலினை அமைத்துக் கொண்ட ஆசிரியர் தன் தோழியை நோக்கி ஒருத்தி கூறுவதாக, பெண்ணே என்று விளிப்பதாக அமைத்தார். அதுவும் தவிரப் பெண்ணே என்ற சொல் ஆன்மாவைக் குறித்தது என்றும் சில ஆசிரியர்கள் கொள்ளுகிறார்கள்.
நெடுங்காலமாகத் தன்னையும் உணராமல் , தலைவனையும் உணராமல் உலகியல் பொருள்களைத் தான் எனக் கருதி அவற்றையே உறுதி என்று பயின்று வந்த உயிரின் செயல், பழக்கம் என்று குறிக்கப்பட்டது. இந்தப் பழக்கத்தைத் தவிர்த்தலாவது, உலகியல் பொருள்கள் நிலையற்றன என்று உணர்ந்து , ஆசிரியர் தமது அருளால் வழங்கிய ஞானச்செல்வமே நிலையானது என்று தெளிந்து, இதுவரை பற்றி நின்ற உலகப் பற்றுகளை ஒழித்துத் திருவருளின் சார்பில் நிற்கப் பழகுவது என்பதாகும். கிடைத்தற்கரிய அருட் செல்வம் கைகூடியும் அதனை ஏற்று அதன் வழி நிற்காமல் , முந்தை வாசனைகளால் அலைக்கழிக்கப்படுவது உழப்புவது என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது.
இவ்வாறு நெடுநாட் பழகிய பழக்கம் நீங்குவதற்கு உறுதுணையாய் நிற்பது ஞான ஆசிரியர் உரைத்த உபதேசமே என்பது ஒரு பொருளாலே என்பதனால் குறிக்கப்பட்டது. அன்றியும் பல்வேறு வகைப்பட்ட உலகியல் நுகர்ச்சிகளின் வழியாக அல்லாமல் ஒப்பற்ற தனிப் பொருளான இறைவனின் துணையாலேயே பண்டைப் பழக்கம் தவிரும் என்று குறித்ததும் ஆம்.
3 கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர்
பிண்டத்தில் வாரார் என்று உந்தீபற
பிறப்பு இறப்பு இல்லை என்று உந்தீபற
சகளமாய் எழுந்தருளி வந்து தானாகத் தந்த திருவருள் வலிமையினாலே தமது வினைத் தொடர்பை அறுத்துக் கொள்ள வல்லவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை.
சிவ பரம்பொருள் ஆசிரியத் திருமேனி கொண்டு தனது திருவருட் செல்வத்தைத் தானாகவே வழங்கிற்று. அதனைப் பற்றிக் கொண்டு உலகியல் சார்பை அறுத்தவர்களுக்கு வினைத் தொடர்பு அற்றுப்போகும். வினை மூன்று பிரிவுகளைக் கொண்டதாய் தொல்வினை( சஞ்சிதம்) நுகர்வினை (பிராரத்தம்) ஏறுவினை(ஆகாமியம்) என வழங்கும். இவற்றுள் ஆசிரியர் அருளிய தீக்கையினால் தொல்வினையும் நுகர்வினையும் ஒழியும். ஞானாசிரியனது திருக்கண் நோக்கினால் ஏறு வினையும் ஒழிந்து போகும். இவ்வாறு மூன்று வினைகளும் அற்றுப் போவதனால் மேலும் ஒரு பிறவி எடுத்து உழல வேண்டிய வினைத்தொடர்பு இல்லாமல்போம்.
மும்மலங்களிலே முதலில் அறுக்கப்படுவது கன்ம மலம். எனவே கருமம் முடித்தல் இங்குக் கூறப்பட்டது . கன்ம மலத்தின் தொடர்பு அற்றவர்களுக்குப் பிறப்பு இல்லை. ஆகையினால் அதனால் விளையும் துன்பம், சோர்வு, இறப்பு ஆகியவையும் தொடரா என்று உணர்த்தப்பட்டது.
4 இங்ஙன் இருந்தது என்று எவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ஙன் இருந்தது என்று உந்தீபற
அறியும் அறிவு அது அன்று உந்தீபற.
குருவாகி வந்த சிவம், தானாகத் தன் திருவருளை வழங்கி என்னை ஆட்கொண்ட போது யான் பெற்ற பேரின்பம் இவ்வாறு இருந்தது என்று எப்படிச் சொல்லுவேன் ? அப்பேரின்பம் சொல்லுக்குள் அடங்குவதன்று. அந்த இன்பம் எத்தகையது என்ற கேள்விக்கு அதற்கு ஒப்பானது அது தான். அது அப்படிதான் இருந்தது, என்றுதான் விடைகூற முடியும். ஏனெனில் உயிரின் அறிவுக்கு வேறாக நின்று உயிரால் அறியப்படும் தன்மை உடையதன்று. அறிவுக்கு அறிவாகவும் அப்பாலுக்கு அப்பாலாகவும் சொற்பதம் கடந்த நிலையில் உள்ளது அது.
நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்துநின்ற
சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை
என்ற அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டகமும், இக் கருத்தை வலியுறுத்தும். அறிவினால் அறியப்பட பொருள்கள் யாவும் நிலையற்றவை.அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி என்பது சிவப்பிரகாசம். அறிவுக்கு அடங்காத ஆனந்தமயமாகிய சிவபரம் பொருளைச் சொல்லில் அடக்கிச் சொல்லுதல் இயலாது.
ஏகனும் ஆகி அநேகனும் ஆனவன்
நாதனும் ஆனான் என்று உந்தீபற
நன்மையே ஆண்டான் என்று உந்தீபற
ஒருவனே ஆகிய பரம்பொருள், உயிர்களுக்கு அருள் பாலிப்பதன் பொருட்டுப் பலவும் ஆகினான். அவனே உலகுக்கெல்லாம் தலைவனும் ஆகினான். இப்போது நம்மை ஆண்டருளுவதற்காக ஆசிரியத் திருமேனி தாங்கி நம்மை ஆட்கொண்டான்.
இறைவன் ஒருவனே. உயிர்கள் மேல் அவன் கொண்ட கருணையால் தானும் தன் திருவருளும் எனப்பட்டுச் சிவமும், சத்தியுமாக விளங்கி அருளுவான். அவனே எண்ணற்ற உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய் நிற்கின்றான். உயிர்களின் மீது கொண்ட கருணையினால் ஐந்தொழிலும் இயற்றித் தலைமை பூண்டு விளங்குகிறான். எத்தனையும் அரிய அவன் எளிமைகாட்டி நம்மை ஆட்கொள்ளுதற்காக அருட் குரவனாகியும் எழுந்தருளி வந்தான்.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க, ஒன்றாய் முளைத்து எழுந்து எத்தனையோ கவடுவிட்டு என்ற மணிவாசகப் பெருமானின் திருவாக்குகள் இங்கு நினையத்தக்கன.
6நம்செயல் அற்று, இந்த நாம் அற்றபின், நாதன்
தன்செயல் தானே என்று உந்தீபற
தன்னையே தந்தான் என்று உந்தீபற.
இச்செயல் நமது என்றும் இதனை நாமே செய்தோம் என்றும் தன் முனைப்போடு செயல்படும் உயிர்கள். அப்பழக்கத்தை ஒழித்து யான் எனது என்னும் செருக்கை அறுத்தபின் எல்லாம் சிவன் செயல் என்ற உண்மை விளங்கும். தன்முனைப்பு அற்ற அவ்வுயிர்க்கு இறைவன் தன்னையே கொடையாகத் தந்தருளுவான்.
நுணுகிப் பார்த்தால் உலகில் நமக்கு ஏற்படுகிற துன்பங்கள் எல்லாம் யான் என்றும் எனது என்றும் தன்முனைப்போடு நாம் செயல் படுவதனால் விளைகின்றன என்பது புலப்படும். என தென்னும் உணர்வைக் கூட ஓரளவு வென்றுவிடலாம். ஆனால் யானென்னும் உணர்வு எளிதில் நீங்குவதில்லை. அதனை நீக்குவதற்காக முயலும் போது கூட யான் இம்முயற்சியைச் செய்கிறேன் என்ற உணர்வே தலை, தூக்குகிறது. அந்த உணர்வுமற்ற, எல்லாம் இறைவனின் ஆணைப்படி நடக்கிறது. நம் செயலாவது யாதொன்றுமில்லை என்று தெளிகிற உணர்வு மிகக் கடினமான பயிற்சிக்குப் பின்னரே வரும். அதுவும் பயின்று கொள்ளப்படாமல் , உறங்குகிறவன் கையிலிருந்த பொருள் தானே நழுவுவது போல் நிகழவேண்டும். இத்தகைய பக்குவமுடையார்க்கு இறைவன் தன்னையே அருட்கொடையாக வழங்கிவிடுகிறான்.
பதினோராம் திருமுறையில், நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த விநாயகர் திரு இரட்டை மணிமாலையில் இதனை
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர் கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் என்று குறிப்பிடுகிறார். உயிர்களுக்குப் பெறத்தகும் பேறு இனி இதன் மேல் உண்டோ?
7 உள்ளம் உருகில் உடன் ஆவர் அல்லது
தெள்ள அரியர் என்று உந்தீபற
சிற்பரச் செல்வர் என்று உந்தீபற.
சிவபரம் பொருள் தன்னையே தான் வழங்கும் என்பது மேற்பாட்டில் சொல்லப்பட்டது. யாரொருவர், உள்ளம் உருகிக் கசிந்தும் குழைந்தும் இறைவனை நினைந்தாலும், அவரோடு இறைவனும் இயைந்து நிற்பான். அல்லாமல் இறைவனை அறிவேன் என்ற முனைப்போடு கரணங்களாலும் அறிவாலும் தேடலுறுவார்க்கு இறைவன் அறிதற்கு அரியவன். அன்பால் உருகுவார்க்குச் செல்வன் கழல் ஏத்தும் செல்வமே செல்வமாம்.
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி என்று திருப்பாசுரத்திலே திருஞான சம்பந்தப் பெருமான் விளங்கியது இக்கருத்தையே. அதுவுமல்லாமல் அவர் பாடியருளிய திருப்பதிகங்கள் பெரும்பாலானவற்றில் ஒன்பதாவது பாடலில் திருமாலும் நான்முகனும் வழுவான மனத்தாலே தேடிச் சிவபிரானை எய்த மாட்டாமை குறித்து அருளிச் செய்வதும் இக்கருத்தை வலியுறுத்தவே. தீர்ந்த அன்பாய அன்பருக்கு அவரினும் அன்பன் என்ற மாணிக்கவாசகர் திருவாக்கும் இதனை வலியுறுத்தும்.
8 ஆதாரத் தாலே நிராதாரத்தே சென்று
மீதானத்தே செல்க உந்தீபற
விமலற்கு இடம் அது என்று உந்தீபற
முதலில் ஆறு ஆதாரங்களை அவ்வவ் இடங்களில் வைத்து அதனதனுக்குரிய அதிதெய்வங்களை வழிபடுதல் வேண்டும். இவ்வாறு வழிபட்ட பழக்கத்தால் எந்த ஆதாரத்தினையும் பற்றாது அதற்கும் மேல் உள்ளதாகிய மீதானம் என்னும் இடத்தில் சிவபெருமானை வழிபடுதல் வேண்டும் . மலங்களால் பற்றப்படாத சிவபெருமான் ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டதாகிய மீதானத்திலே இடங்கொண்டு விளங்குவான்.
யோக நெறியிலே இவ்வுடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன என்று கொள்வர். இந்த ஆதாரங்கள் முறையே மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்று வழங்கப்படும். இவை மனித உடலில் கீழிருந்து மேல் நோக்கி அமைந்துள்ளனவாகக் கூறப்படும். மூலாதாரம் நான்கு இதழ் கொண்ட தாமரை வடிவம் ஆகும். சுவாதிட்டானம் ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகம் பத்து இதழ்த் தாமரையும், அநாகதம் பன்னிரண்டு இதழ்த் தாமரை வடிவாகவும், அவற்றின் மேல் ஆஞ்ஞை இரண்டு இதழ்த் தாமரை வடிவமாகவும் விளங்கும் என்பர். ஒவ்வொரு ஆதாரத்துக்கும் ஓர் அதிதெய்வம் கூறப்படும். அதிதெய்வங்கள் முறையே விநாயகன் , பிரமன், திருமால் , உருத்திரன், மகேசன், சதாசிவன் என்பவர்கள் ஆவார். ஆஞ்ஞை புருவ நடுவில் உள்ளது. இந்த ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகத் தலையின் உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலத்திற்கு மேல் உள்ள இடம் பிரமரந்திரம் என்று குறிப்பிடப்படும். இது ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் வடிவில் அமைந்துள்ளதனால் சகத்திராரம் என்று வழங்கப்படும். இதுவே சிவ பெருமான் திருவருள் வடிவாக எழுந்தருளித் தோன்றுதற்குரிய இடம் என்பர். இது, இங்கு மீதானம் என்று குறிக்கப்பட்டது. ஆறு ஆதாரங்களுக்கும் அப்பால் இவ்விடம் நிராதாரம் என்றும் சொல்லப்படும்.
அலைபாயும் மனத்தை ஒவ்வோர் ஆதாரமாக அதனதனுக்குரிய ஆறு அதிதெய்வங்களையும் முறையே பற்றி நின்று வழிபட்டு அதன்பின் இவற்றைக் கடந்த பெருவெளியில் தன்னை இழந்த நிலையில் விமலனாகிய சிவபெருமானுடன் ஒன்றி நிற்பது நிராதார யோகம்.
9 ஆக்கில் அங்கே உண்டாய் அல்லது அங்கு இல்லையாய்ப்
பார்க்கில் பரம் அது என்று உந்தீபற
பாவனைக்கு எய்தாது என்று உந்தீபற.
எண்ணுகின்ற போது மட்டும் ஆதாரங்களிலே தோன்றுவதாய் எண்ணாது இருக்கிற போது தோன்றாததாய் இருப்பது இறைவனின் நிலையன்று . முதல் நிலை பாவனை நிலை. பாவனைக்கு எய்தாத நிலையே பரம்பொருளாகிய சிவபெருமானின் நிலை என்று அறிக.
சைவ சித்தாந்த சாத்திரங்களிலே இறைவனை அறிவதற்குரிய நெறிகள் நான்கு . அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன ஆகும். இவற்றுள் முதல் மூன்றும் இன்றியமையாதன ஆயினும் இவை யாவும் மிக உயர்ந்த பயனாகிய பரமுத்தியைத் தருவனவல்ல என்பர். நான்காவதாகிய ஞானம் ஒன்றே பரமுத்தியைத் தரவல்லது. ஆகையினால் முதல் மூன்றும் ஞானத்துக்கு இட்டுச் செல்லும் படிகள் ஆகின்றன ஈறில்லாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பப் பொருளாகிய சிவபெருமானை அடைவதற்கு பாவனை நிலை பயன்படாது என்று கூறுகிறார் ஆசிரியர்.
10 அஞ்சே அஞ்சாக அறிவே அறிவாகத்
துஞ்சாது உணர்ந்து இருந்து உந்தீபற
துய்ய பொருள் ஈது என்று உந்தீபற
திருவைந்தெழுத்தைக் கொழுகொம்பாகக் கொண்டு இமைப் பொழுதும் சலிப்பின்றி ஆசிரியனால் உணர்த்தப்பட்ட ஐந்தெழுத்தின் உட்பொருளைச் சிந்தித்து இருத்தல் வேண்டும். அவ்வாறு சிந்திப்பால் தூய்மையான பரம்பொருளைப் பொருந்துதல் கூடும்.
சிவாய நம என்னும் திருவைந்தெழுத்து சிவம், திருவருளாகிய சத்தி, உயிர், மறைப்பாற்றல், மலம் என்ற ஐந்தினையும் முறையே குறிப்பனவாகும். இவற்றின் பொருள் உணர்த்திய வழியிலே ஓய்வின்றி ஓதி வரவேண்டும். அவ்வாறு ஓதி வந்தால் உயிரின் சிற்றறிவு இறைவனின் பேரறிவோடு இயைந்து தற்போதம் இழந்து சிவத்தோடு பொருந்தி நிற்கும். அப்படிப் பொருந்திய காலத்தில் மலத்தால் பற்றப்படாத முற்றறிவு உடைய பரம்பெருள் ஈது என்று புலப்படும்.
இப்பாடல் வேறு ஒரு வகையாகவும் பொருள் கொள்ளப்படும். அதன்படி அஞ்சு என்று குறிக்கப்பட்டது ஐம்பூதங்களை உணர்த்துவதாகக் கொள்ளப்படும். ஐம்பூதங்களால் ஆகிய உடலில் உயிர் இடம் கொண்டுள்ளது. அதனால் தன் தனித்தன்மையை உணர இயலாது. தானே உடம்பு என்றும் உடம்பே தான் என்றும் கருதி நிற்கும். இந்நிலையில் இருந்து நீங்கி உடலுக்கு வேறாக உயிர் தனித்து உள்ளது என்பது விளங்கித் தோன்றும்போது, முற்றறிவு உடைய சிவபரம் பொருள் உயிரை ஆட்கொள்ளும். யானாகிய என்னை விழுங்கித் தானாக நிற்கும் தனிப்பொருள் ஆகிய அதுவே தூய பரம்பொருள் என்று உணர்க.
11 தாக்கியே தாக்காது நின்றது ஓர் தற்பரம்
நோக்கில் குழையும் என்று உந்தீபற
நோக்காமல் நோக்க என்று உந்தீபற.
சிவ பரம்பொருள் ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்கும் பெருந்தகைமை உடையது. எப்பொருளிலும் கலந்து நிற்கும் அந்த மெய்ப் பொருள் எதனாலும் தொடக்குறுவதில்லை. தன்னை நோக்கிச் சரண் புகுவார்க்கு அப் பரம்பொருள் குழைந்து அருள்பாலிக்கும். இவ்வாறு நோக்கும் உயிர்கள் தன் முனைப்போடு தன் அறிவால் நோக்காது அவன் அருளே கண்ணாகக் காணில் உடனே இரங்கி அருளும்.
எவ்வௌர் தன்மையும் தன் வயிற்படுத்துத் தானே ஆகிய தயாபரன் என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்கிறார். உலகத்துப் பொருள்களில் அணுத்தோறும் கலந்து நின்றாலும் அக்கலப்பினால் பாதிக் கப்படாமல் நிற்கின்ற இயல்பினை உடையவன் இறைவன். அவன் எங்கோ தொலை தூரத்தில் இல்லை. நம்மோடு மிக அருகே யாவற்றிலும் கலந்து நிற்கிறான். இத்தகைய தன்மை உடையவன் ஏன் உயிர்களால் அறிய முடியாமல் இருக்கிறான் என்று வினவில், நான் அறிகிறேன் என்ற முனைப்போடு அறிய முற்படும்போது அவன் எட்டாப் பொருளாயும் திருவருள் வழியே தேடுவார்க்கு எட்டும் பொருளாயும் விளங்குகின்றான்.
12 மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர் என்று உந்தீபற
தவத்தில் தலைவர் என்று உந்தீபற.
காரிட்ட ஆணவக் கருவறையிலே கண்ணில்லாக் குழவிபோல உயிர் கிடந்தது. அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அதற்குத் தன்னுடைய இழிநிலையை அறிந்து கொள்ளவோ, அதனை நீக்கிக் கொள்ளவோ ஆற்றலில்லை. சிற்றுயிர் படும் துன்பத்தை அறிந்து அதனைக் கேவல நிலையிலிருந்து மீட்டுப் படிப்படியாக உய்வடையும் பொருட்டு இறைவன் அதற்குக் கருவி கரணங்களைத் தருகிறான். அந்நிலையில் உயிர் படிமுறையாலே வளர்ந்து பக்குவம் அடைந்த நிலையில் அவன் ஞான ஆசிரியனாகவும் எழுந்தருளி வந்து பேரின்பப் பெருவெளியிலே இறைவன் உயிரைச் சேர்க்கிறான். அவனே சாலப்பெரியவன். அவனே தவத்தின் தலைவன்.
உயிர் மூன்று நிலைகளை உடையது. இந்த மூன்று நிலைகளும் முறையே கேவலம், சகலம், சுத்தம் என்று கூறப்படும். கேவல நிலையிலே உயிர் ஆணவ மறைப்பால் மூடப்பட்டுக் கருவி கரணங்கள் இன்றி அறிவு விழைவு, ஆற்றல்கள் அற்றுக் கிடக்கும், அதற்குத் தன்னைப் பிணித்துள்ள தளையும் தெரியாது. தனது இழி நிலையும் தெரியாது தானாக முயன்று தளையிலிருந்து விடுபடவும் அதற்கு வலிமையில்லை.
இந்த நிலையில் அவற்றுக்குப் பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் கருவி கரணங்களைத் தந்து உடல், கருவி, உலகம் நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றை இறைவன் கூட்டுகிறான். இவ்வாறு அருள் பாலிப்பது, அவற்றின் மீது இறைவன் கொண்ட பெருங்கருணையாலேயன்றிப் பிறிதில்லை. இந்த நிலை சகல நிலை என்று கூறப்படும். இத்தகைய சகல நிலையிலே மாறி மாறிப் பிறந்து இன்பத் துன்பங்களை நுகர்ந்து உயிர் பக்குவம் பெறுகிறது. பக்குவம் அடைந்த உயிர்களுக்கு இறைவனே ஞான குரவனாக எழுந்தருளி அவற்றைத் தனது அருள் வழியிலே விடுதலை பெற்ற பேரின்ப நிலையிலே உலவவிடுகிறான். இதுவே சுத்த நிலை எனப்படும்.
இப்பாடலில் மூலை என்பது உயிரின் கேவல நிலையையும் முற்றம் என்பது உயிரின் சுத்த நிலையையும் குறிக்கின்றன. அடிமைப் பட்ட உயிருக்குத் தானாக முன்வந்து தனது பெருங்கருணையை வழங்கிய இறைவன் மிகப் பெரியவன். தவத்திற்குத் தலைவன் என்று குறிப்பிடப் பெறுகிறான். உற்ற நோய் நோன்றலும் உயிர்க்கு உறுகண் செய்யாமையும் தவத்திற்கு உரு என்று திருவள்ளுவப் பெருமான் குறிப்பிடுவார். அந்தத் தவம் சிவபெருமானை நோக்கி இயற்றப்படுவதே அல்லாமல் தவத்தின் பயனைத் தருவதற்கு வேறு எவரும் ஆற்றலுடையர் அல்லர் என்பதும் விளக்கப்பட்டது.
13 ஒட்டு அற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டு அற்ற இடம் சிவம் உந்தீபற
தேடும் இடம் அது அன்று உந்தீபற.
புலன்வழி ஓடி எந்நேரமும் ஒன்றுவிட்டு ஒன்று பற்றி அலைந்து கொண்டிருக்கிற உணர்வு தன் சலனத்தை விட்டு ஒழிக்க வேண்டும். தலைவனாகிய சிவபெருமானை அவன் திருவருள் வழியே சென்று ஒப்பற்ற அன்போடு வழிபடுதல் வேண்டும். அதைவிட்டு அங்குமிங்கும் அலைந்து தேடிக் காணப்படும் பொருள் அன்று சிவ பரம்பொருள். தன்முனைப்பு அற்ற இடத்தில், தேடுதல் ஒழிந்த நிலையில் கிடைக்கப் பெறுவது.
திரு அங்கமாலையில் அப்பர் பெருமான்
தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித்
தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்
என்றும், தனித் திருநேரிசையில்
கள்ளளேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப்
தெள்ளியேனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்(போக்கித்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கிநானும் விலாவிறச் சிரித்திட்டேனே
என்றும் கூறியருளிய திருப்பாடல்கள் நினைவுகூர்தற்குரியன.
ஒட்டற்று என்பது, ஓடி ஓடிப் பலபொருளும் பற்றி ஒன்றிலும் படி யாது நிற்கும் உணர்வினைக் குறிக்கிறது. நின்ற இடமென்பது அத்தகைய ஓட்டத்தைத் தவிர்த்துத் திருவருளில் நிலைத்த இடத்தைக் குறிக்கிறது. முட்டுதல் என்பது நேர்படுதல் என்ற பொருளைத் தருகிறது. தேட்டற்ற இடம் என்பது சலனம் தவிர்த்து நிற்கின்ற நிலையைக் குறிக்கின்றது.
14 கிடந்த கிழவியைக் கிள்ளி எழுப்பி
உடந்தை உடனே நின்று உந்தீபற
உன்னையே கண்டது என்று உந்தீபற.
உயிர்க்கு உயிராக எக்காலத்தும் மறைந்து இருக்கும் திருவருளை ஞான ஆசிரியன் தன் அருட் கண்ணால் தீக்கை செய்து வெளிப்படுத்தி அருள, அதனை உணர்ந்து அத்திருவருள் வழியாகவே நின்று ஒழுகுதல் வேண்டும். அந்நிலையிலே சிவ பரம்பொருள் உன்னை ஈர்த்து ஆட்கொள்ளும் என்கிறார் ஆசிரியர்.
கிடந்த கிழவி என்பது உயிர்க்குயிராய் நின்றும் உயிரால் அறியப்படாத சிவசத்தியைக் குறிக்கின்றது. சிவபரம் பொருளை விட்டு ஒரு காலத்தும் நீங்காத உரிமை உடையது சிவசத்தி. ஆகையினாலே கிழவி என்ற சொல்லாலே ஆசிரியர் குறித்தார். உரிமை உடையவள் என்பது அதன் பொருள். கிள்ளி எழுப்புதலாவது ஆசிரியரால் விளக்கப்பட்டுத் திருவருள் விளங்கித் தோன்றுதல்.
யோக நெறியில் கிழவி என்பது குண்டலினி சத்தி என்று பொருள் கொள்ளப்படும். அப்போது யோகநெறி வழுவாமல் நின்று குண்டலினி சத்தியை எழுப்பி அதன் வழியே ஞான நெறியில் தலைப்படுதல் என்று பொருள் தரும்.
15 பற்றை அறுப்பது ஓர் பற்றினைப் பற்றில் அப்
பற்றை அறுப்பர் என்று உந்தீபற
பாவிக்க வாரார் என்று உந்தீபற.
உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவன யான், எனது என்னும் அகப்பற்றும், புறப்பற்றும் . இவ்விரு பற்றுகளையும் அறுத்து ஒழிக்கின்ற வன்மை உயிர்களுக்கு இல்லை. இறைவனையே பற்றிக் கொண்டால் அகப் புறப் பற்றுகள் அற்றுப்போம். இறைவனின் திருவடியைப் பற்றுவ தென்பது அவன் திருவருள் வழிச் சென்றே அன்றிப் பாவனையால் பற்ற இயலாது
பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்ற திருக்குறளை நினைவுறுத்துவதாக அமைந்தது இப்பாடல். மெய்கண்ட சாத்திரங்கள் பலவற்றுள்ளும் இவ்வாறு பல திருக்குறள் பாடல்கள் எடுத்தாளப்பட்டிருப்பதைக் காணலாம். திருவள்ளுவப் பெருந்தகையின் கருத்துக்களை பல சைவசித்தாந்த நெறியோடு பொருந்துவன என்பதை இத்தகைய மேற்கோள்ள விளக்ககுகின்றன. இப்பாடலில் திருக்குறளின் சொல்லும், பொருளும் பயின்று வருவதோடு அமையாமல் குறட்பாவுக்கு விளக்கமும் தரப்பட்டிருப்பதை உணரலாம். முதலில் வருகிற பற்று என்பது புறப்பற்றினைக் குறித்தது . முதல் வரியின் இறுதியிலும் இரண்டாம் வரியின் தொடக்கத்திலுமாக வரும் அப்பற்று என்பது அகப்பற்றினைக் குறித்தது. எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடாக நின்றும் அவற்றில் தோய்வற்று நிற்பவன் இறைவன் . அவனைப் பற்றுவதற்கு உரிய உபாயம் அவனது திருவருள் வழி நிற்றலே. அவ்வாறு திருவருள் வழியிலே நிற்கின்ற உயிர்களுக்கு யான் என்ற முனைப்பும் எனது என்ற பிடிப்பும் தானாகவே கழலும்.
திருவருள் வழியிலே தன் முனைப்பு அற்று நிற்பதை விடுத்து, யான் இப்பற்றுகளை அறுப்பேன் என்று தன்னுணர்வோடு கூடி முயலும் முயற்சி வெற்றி பெறாது. ஏனெனில் , பொன்னை வெறுப்பேன் பொருளை வெறுப்பேன் என்றவாறு நினையும் போது எதிர்மறை முகத் தினாலேனும் பொன்னையும், பொருளையும் , தன்னையும் நினைவுறுத்தம். ஆதலால் விட்டொழிக்க முனைந்த அவை யாவும் நினைவிலிருந்து அகலாமலே நிற்கும். இதனையே பாவிக்க வாரார் என்ற சொற்களால் ஆசரியர் குறித்தார்.
16 உழவாது உணர்கின்ற யோகிகள் ஒன்றோடும்
தழுவர்மல் நிற்பர் என்று உந்தீபற
தாழ்மணி நாவே போல் உந்தீபற
இறைவனின் திருவருளை முன்னிட்டுத் தமது முயற்சியை நெகிழ விட்ட சிவயோகிகள் தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் பற்றின்றி இருப்பார்கள். எனவே அவர்களுக்கு வரும் இன்பத் துன்பங்கள் அவர்களுக்கு மகிழ்சியையும் கொடுப்பதில்லை. துன்பதையும் தருவதில்லை. தொங்கவிடப்படாமல் தரையிலே வைக்கப்பட்ட வெண்கல மணியின் நாக்கு அசைவற்று இருப்பது போல அவர்களும் இருப்பார்கள்.
முந்தைய பாடலில் யான், எனது என்னும் அகப்பற்று, புறப்பற்றுகளை அறுப்பதற்குரிய வழியே விளக்கினார். அந்த நெறியிலே நின்று திருவருளிலே அழுத்தி நிற்கும் சிவ யோகியர் நுகர்வினையின் பயனாக இன்பத் துன்பங்கட்கு ஆட்படும் போது எவ்வாறு இருப்பர் என்பதை இப்பாடலில் விளக்குகிறார்.
உலகியலில் உழன்று கிடக்கிற மக்கள் இன்பம் வரும்போது மகிழ்ச்சியால் ஆரவாரித்தும், துன்பம் வரும் போது துயரத்தால் துவண்டு அலமருவதும் வழக்கம். தொங்கவிடப்பட்ட வெண்கல மணியை அடிக்கும் போது ஓசை எழுவதும் அடியாத போது ஓசையின்றி நிற்பதும் இயல்பு. மணியின் நாக்கு அசைவதனாலே இது நிகழ்கிறது. அதே மணியைத் தொங்கவிடாமல் தரை மீது வைத்துவிட்டால் மணியின் நாக்கு அசைவற்று இருக்கும். அசைவற்ற போது எழாது. யோகியர் உள்ளம் அசைவற்ற நிலையில் இருப்பதால் இன்பத்தில் மகிழ்வதும் இல்லை. துன்பத்தில் துவள்வதும் இல்லை.
கணியன் பூங்குன்றனார் புறானூற்றில் ,வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே : முனிவின் , இன்னாது என்றலும் இலமே. என்று கூறியது இங்கு நினையதக்கது.
17 திருச்சிலம்பு ஓசை ஒலிவழியே சென்று
நிருத்தனைக் கும்பிடு என்று உந்தீபற
நேர்பட அங்கே நின்று உந்தீபற.
இறைவனை மனம், மொழி மெய்களால் வணங்குவோர்க்கு அவன் தன் பாதச் சிலம்பு ஓசை கேட்கச் செய்தருளுகின்றான். அந்தச் சிலம்பு ஓசை வழியே சென்று இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொண்டு ஆடல்வல்லானை வணங்குதல் வேண்டும். அவ்வாறு வணங்குவார்க்கு அவன் நேர்படத் தோன்றி அருள் பாலிப்பான்.
முந்தைய பாட்டில் உலகச் சூழ் நிலைகளில் கருத்தைச் செலுத்தாது இறைவனையே பொருந்தி இருக்கும் சிவ யோகிகள் பற்றற்று நிற்பர் என்பதைக் கூறினார். இந்தப் பாடலில் அக்கருத்தினை மேலும் விளக்கும். வகையால் அகம் நெகிழ்ந்த அன்பினராய் இறைவனைப் பற்றி விலகாதவர்க்கு ஆடவல்லபிரான் தன் திருச்சிலம்பின் ஓசையைக் கேட்குமாறு செய்தருளுவான் என்றும் , அந்த ஓசையை பற்றிக் கொண்டு அது தோன்றும் இடமாகிய கூத்தப் பெருமானின் திருவடிகளை ஒரு முகப்பட்ட மனத்தோடு வழிபடுதல் வேண்டும் என்பதையும் அவ்வாறு வழிபடுவார்க்கு இறைவனை நேர்படக் காணுதல் கூடும் என்றும் விளக்குகிறார்.
அட்டாங்க யோகம் என்பது எட்டிடுப்பகுதிகளைக் கொண்டது. அவை இயமம், நீயமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை , தியானம், சமாதி என்பன. இவற்றுள் எட்டாம் நிலையாகிய சமாதிநிலை அட்டாங்க யோகத்தின் எல்லையாகும். அதற்கு முந்திய நிலையாகிய தியானத்தில் ஈடுபட்டிருக்கின்ற சிவ யோகிகளுக்கு இறைவன் பத்துவகையான நுண் ஒலிகளைப் கேட்டுமாறு அருள் பாலிப்பான். இந்நுண் ஒலிகளைப் பற்றிய விளக்கங்களை திருமூலதேவ நாயனார் திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரத்தில் கூறியருளுகிறார்.
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பிவளை பேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க்க ல்லது பார்க்க ஓண்ணாதே.( திருமந்திரம் 606)
அம்பலத்தாடுவான் மலர்சிலம்படியை மாறாத அன்போடு வணங்குபவர்களுக்கு அவன் சிலம் பொலியாகிய நுண்ஒலி அகச் செவியில் கேட்கும். இவற்றுள் திருச்சிலம்பு ஓசை ஒலிவழியே என்ற தொடருக்கு ஓசை என்பது பரவிந்து; ஒலி என்பது பரநாதம் என்பர் ,ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற அப்பர் திருவாக்கும் இங்கு நிவையத்தக்கது.
கழறிற்றறிவர் நாயனார் புராணத்தில் சேரமான் பெருமாள் நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயன் , நிறை தவமும் , தேடும் பொருளும் பெரும்துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்துள் ஆடும் கழலே எனத் தெளிந்ததனால் , எடுத்த திருப்பாதத்தைப் போற்றி வணங்குதற்கு அன்பினால் அருச்சனையை மேற்கொண்டார் என்று சேக்கிழார் நெருமாள் எடுத்துரைக்கிறார்.. ஒவ்வொரு நாளும் பூசையின் முடிவில் திருச்சிலம் பின்ஒலியைக் கூத்தப் பெருமான் அருளால் கேட்டார் என்பதையும் சேக்கிழார் பெருமான் எடுத்துரைக்கிறார்.
வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமஞ் சாந்தம் மணித்தூபம்
தேசிற் பெருகும் செழுந்தீபம் முதலா யினவும் திருவமுதும்
ஈசர்க் கேற்ற பரிசினால் அருச்சித் தருள எந்நாளும்
பூசைக் கமர்ந்த பெருங் கூத்தர் பொற்பார்.
சிலம்போசை என்பது பட்டுத் தெறிப்பதனால் எழும் ஓசை எனப் பொருள் காண்பர். இங்கே சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள் இறைவனின் இடையறாத் திருக்கூத்தின் போது எழுப்பும் ஓசையைக்ö குறிக்கிறது.
18மருளும் தெருளும் மறக்கும் அவன்கண்
அருளை மறவாதே உந்தீபற
அதுவே இங்கு உள்ளது என்று உந்தீபற.
உயிர்கள் பல நேரங்களில் அறியாமை யால் பற்றப்பட்டும், உணர்ந்த உணரும் நேரத்தில் தெளிவோடு கூடியும் மாறி மாறி வரும் இயல்பினை உடையன. அவை இறைவன் திருவருளில் ஒன்றி நீற்குமானால் மயக்கமும் தெளிவும் மாறிமாறி வருகின்ற நிலைமை முற்றிலும் அழிந்து போகும். எனவே திருவருளை மறவாதிருப்பாயாக அப்படி மறவாதிருத்தலே இங்கு செய்யத்தக்க செயலாகும்.
இறைவனின் திருவருள் எங்கும் எப்பொழுதும் நிறைந்தே இருக்கிறது. எனினும் , உயிர்கள் உலகியலில் கொண்ட ஆசாபாசங்களால் திருவருளை மறந்திருக்கின்றன. சிவஞான சித்தியார் கூறுவது போல பார்த்தடின் அருளை எல்லாம்
இன்றெனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயாலல் பிறிதுமற்று இன்மை
சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்
திருபெருந் துறையுறை சிவனே
ஒன்றும் நீயவில்லை அன்றியொன்று இல்லை
யார் உன்னை அறியகிற் பாரே.
என்று மாணிக்கவாசகப் பெருமான் பாடுகின்றமை இங்கு நினைவுகூரத் தக்கது. திருவருள் இறைவனோடு பிரிப்பின்றி ஒன்றாகவே நிற்கும். இறைவன் அருளே வடிவானவன் என்பதை ஏற்றுக் கொள்ளாத சில தத்துவ வாதிகள் இத்திருவாசகப் பாடலுக்கு உரை காண முற்பட்டுத் தமக்கு ஏற்றவாறே மாற்றியும் பிரித்தும் பிழைபடப் பொருள் கூறினர். இத்திரு உந்தியார்ப் பாடலில் அருளை மறவாதிருத்தல் வேண்டும் என்பதன் மூலம் அருள் ஒன்றே உயிர்கள் உய்வதற்கு உரிய பற்றுக் கோடாகும் என்பதனை வற்புறுத்தினார்.
19 கருதுவதன் முன் கருத்து அழியப் பாயும்
ஒரு மகள் கேள்வன் என்று உந்தீபற
உன்ன அரியன் என்று உந்தீபற
திருவருளைப் பற்றுக்கோடாகக் கொண்டு உயிர் இறைவனை நினையும் போது அந்த நினைப்பினும் வேகமாக உமையொரு பாகனாகிய இறைவன் அவ்வுயிரினை ஆட்கொள்ளுவான். அவன் ஆட்கொள்ளும் போது உயிர் அவனைக் கருதுகிற கருத்தும் அழிந்து இறைவனோடு ஒற்றித்து நிற்கும். இதுவல்லாமல் இறைவனை நான் நினைப்பேன் என்று கருதுகிற உயிர்களுக்கு அறிதற்கரியவன் இறைவன்.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைத்த வடிவோடு விரைந்து சேறலின் என்று உரை எழுதினார். மலர்மிசை ஏகினான் என்ற முதற்குறிப்புடைய திருக்குறளுக்குப் பரிமேலழகர். எனவே அன்பால் அடியவர்கள் நெஞ்சார நினைப்பதற்குத் தலைப்பட்ட அளவிலேயே மிகுந்த விரைவோடு இறைவன் அவர்கன் தானாகும் வண்ணம் அருள்செய்வான் என்று விளக்குவதற்கு கருதுவதன் முன் கருத்து அழியப் பாயும் என்றார் ஆசிரியர்.
ஒருவன் என்ற சொல் சிவபெருமானையே குறிப்பது போல் ஒருமகள் என்ற சொல் சிவபெருமானோடு பிரிப்பின்றிப் பிணைந்து நிற்கும் அவனுடைய திருவருளாகிய சக்தியைக் குறித்தது.
அருளது சத்தி ஆகும் அரன் தனக்கு அருளை இன்றித்
தெருள்சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சக்தி இல்லை என்று சிவஞான சித்தியாரும்,
தன்நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னம் இலான் எங்கள் பிரான்
என்று திருவருட் பயனும் இக்கருத்தை விளக்குகின்றன.
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் என்ற திருவெம்பாவைப் பாடல் வரி இறைவன் வாக்குக்கும் , மனத்துக்கும் எட்டாதவன் என்பதை வலியுறுத்தும்.
20 இரவு பகல் இல்லா இன்ப வெளியூடே
விரவி விரவி நின்று உந்தீபற
விரைய விரைய நின்று உந்தீபற.
அறிவும் அறியாமையும் மாறி மாறி வருகின்ற கட்டு நிலையிலிருந்து விடுபட்டு, இன்பமே வடிவாக என்றென்றும் விளங்கும் இறைவனின் திருவருள் வெளியிலே பிரிப்பின்றிக் கலந்து நிற்கும் பேரின்பத்தை விரைவிலே கூடுவாயாக.
உயிர் காரிட்ட ஆணவ அறைக்குள்ளே தனித்து ஆணவத்தில் கட்டுண்டு கிடக்கும் நிலையை இரவு என்பர். மாயையின் காரியங்களாகிய உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள்கள் இவற்றோடு கூடிச்சிற்றறிவு பெற்று நிற்கின்ற நிலையைப் பகல் என்று கூறுவர். பகலைத் தொடர்ந்து இரவும், இரவைத் தொடர்ந்து பகலும் வருவது உலகியல்பு, இரவே இல்லாத பகல் என்பது உயிர் இறைவனின் திருவடியில் கூடி என்றும் மாறாத இன்பத்தில் திளைத்து இருப்பதாகும். அந்த நிலை இப்பாடலில் இன்ப வெளி என்று குறிக்கப்பட்டது. இரவாகிய கேவலம், பகலாகிய சகலம் ஆகிய இரு நிலைகளும் உலக வயப்பட்டுப் பிறப்பு இறப்பு முதலிய துன்பங்களுக்கு எல்லாம் காரணமாவதால் அவற்றினின்றும் விடுபட்டுத் திருவருள் வழியிலே மிக விரைவாகச் சென்று இறைவனைக் கூடுவதே பேரின்பத்துக்கு வழி. விரவி விரவி, விரைய விரைய என்ற தொடர்கள் இன்றியமையாமையையும் . காலம் பெற வீடு பேற்றினை அடைய வேண்டியதன் தேவையையும் உணர்த்தின.