புதன், 23 அக்டோபர், 2013

மாமியார் உடைத்தால் மண் குடம்: மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதன் விளக்கம் தெரியுமா?

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.
ரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்?

சூரியனுக்குரிய வடதிசைப்பயணம் துவங்கும் மாதம் தை. இம்மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சூரியனின் தேர் மேற்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் வலம்வரும் பொன்மயமான தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்களும், ஏழு ஜ்வாலைகளும், ஏழு சமித்துகளும், ஏழு ஹோமங்களும் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன என்று வேதங்கள் சொல்கின்றன. பொதுவாக, தேருக்கு எட்டு குதிரைகள் பூட்டுவார்கள். ஆனால் சூரியனின் தேருக்கு ஏழு குதிரை மட்டுமே உள்ளது. ஒளியின் வண்ணங்கள் ஏழு. அதுவே ஏழு குதிரைகள் என்று கூறப்படுகிறது. அவை: காயத்ரி, பிரகுஹதி, உஷ்ணிக், ஜகதி, திரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பங்கி என்பனவாகும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதால், அன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

ரதசப்தமி குளியல்: சூரிய உதயத்துக்குமுன் எழுந்து சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளில் ஏழு எடுத்து, அத்துடன் அட்சதையும்(பச்சை அரிசி சிறிதளவு), சிறிதளவு விபூதியும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்குத் திசை நோக்கி நீராட வேண்டும். சுமங்கலிகள் குளிக்கும்போது, ஏழு எருக்க இலைகளை அடுக்கி, மேல் இலையில் சிறிது மஞ்சள் தூளும், அட்சதையும் வைத்து, உச்சந்தலையில் வைத்து நீராட வேண்டும். ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் தேர்க்கோலமிட்டு, சுற்றிலும் செங்காவிப்பட்டை இட்டு சூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழி பாட்டால் ஆரோக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!

சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும் பலன்களை ஆண் மற்றும் பெண்களுக்கு கீழ் கண்டவாறு குறிபிட்டுள்ளனர்.

ஆண்களுக்கான பலன்கள்: புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள், நெற்றியின் வலது புறம் – தனயோகம், வலது புருவம் – மனைவியால் யோகம், வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம், வலது கண் – நண்பர்களால் உயர்வு, வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம், இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி, மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை, மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம், மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை, மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல், மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம், வலது கன்னம் – வசீகரம், தயாள குணம், இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு,வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம், இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம், காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம், தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம், கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை, இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார், வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர், வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை,அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

பெண்களுக்கான  பலனகள்: நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து, நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு, நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி, மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி, மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள், மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம், மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர், இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு, வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை,வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம், நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம், கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்,இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்,  தலை – பேராசை, பொறாமை குணம், தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை, தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம், தொப்புள் – ஆடம்பரம், படாடோபம், வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை, அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள், இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால்  நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.
அமாவாசையன்று வாசலில் கோலம் போடகூடாது என்பது ஏன்?

பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாள் என சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் தான், கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சம் உகந்தவை. கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இந்நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பது நல்லது. திருமணத்தடை, வேலையின்மை, நோய்நொடி போன்ற கவலைகள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.

எங்கு நீராடலாம்: சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் அமாவாசை, இருவரும் உலகின் ஆன்மாக்கள், கண்ணுக்குத் தெரியும் கடவுளர்கள். தை அமாவாசையன்று பித்ருக்கள் பிரசன்னமாவார்கள் அன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது பரிபூரண ஆசி கிட்டுவதோடு உயர்ந்த பலனும் பெறலாம். இதை கருடபுராணமும் தெரிவிக்கிறது. அமாவாசையன்று ஈர்ப்பு விசையால் கடல் நீர் மேலும் கீழும் புரளும். கடலடியில் உள்ள சங்கு, சிப்பி, வாயுக்கள் மேலே வரும் அப்போது நீரில் கரைந்துள்ள சக்திகள் உடலில் ஊடுருவி ஆரோக்யம் உட்பட அநேக பலன் ஏற்படும். ராமபிரான் தேவிபட்டின கடற்கரையில் மணலைப் பிடித்தபோது அது இறுகி நவகிரகங்கள் ஆயின என்பர். இங்கு தை அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி புண்ணியம் பெறுவர். அதுதவிர ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடலிலும்; குற்றாலம், பாபநாசம், பாணதீர்த்தம் அருவிகளிலும்; காவேரி, வைகை, தாமிரபரணி நதிகளிலும் நீராடுவது அதிக பலன் தரும்.
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
பிதுர் வழிபாட்டிற்கு உகந்த தை அமாவாசையின் சிறப்பு தெரியுமா?

ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு. எனவேதான் உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.

தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. இந்த இடம் காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது. ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது. இந்த நதிக்கரை அருகில்தான் மயானம் உள்ளது. காசி மணிகர்ணிகா காட் என்னுமிடத்தில் உள்ள மயானத்தில் சடலங்கள் தகனமாகிக் கொண்டேயிருக்கும். வெகுதூரத்திலிருந்து சடலங்களைக் கொண்டு வந்து தகனம் செய்வார்கள். இங்கு சிவன் ஏற்றி வைத்த நெருப்பு இன்றும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து நெருப்பு எடுத்துதான் தகனத்திற்குத் தீமூட்டுவர்.

அதேபோல, ஐவர் மடம் மயானம் பஞ்சபாண்டவர்கள் மோட்சமடைந்த இடம் என்று கருதப்படுவதால், அவர்களது சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. (இது குறித்து வேறு கருத்துகளும் உள்ளன) விடியற்காலையிலேயே இந்த மயானம் சுறுசுறுப்படைகிறது. இங்கு காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்பட வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், வெகுதூரத்திலிருந்தும் வாகனங்களில் குறித்த நேரத்திற்குள் வந்து, சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து எரியூட்டுகிறார்கள். இங்கு மின்சார தகனம் என்பது கிடையாது. (காசியில் மின்சாரத் தகனம் செய்ய வசதி உள்ளது. தொடர்மழையால் விறகுக் கட்டைகளைப் பயன்படுத்த முடியாதபோது மின்சாரத் தகனத்தை மேற்கொள்கிறார்கள்.)

ஒவ்வொரு அமாவாசையிலும் ஐவர் மடத்தில் தர்ப்பணம், நீத்தார் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை, ஆடி, ஐப்பசி, புரட்டாசி அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கான வழிபாடுகள் செய்ய கூட்டம் நிரம்பி வழியும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு சிறப்புப்பூஜை, சடங்குகள் செய்தால், அவர்கள் ஆவியாக அலையாமல் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மயானத்தின் அருகேயுள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது!
என்றும் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடாது. பிறர் கூறும் நல்ல கருத்துக்களை கேட்க வேண்டும்.பிறர் நம்மை நம்பும் படி நாம் நடந்து கொள்ள வேண்டும். மனதில் சாந்தி இருக்கும் பொழுது தான் ஆனந்தம் ஏற்படுகிறது. பணம் இருந்தும் அடக்கமாய் இருப்பவன் உயர்ந்தவன். பலம் இருந்தும் பொறுமையாய் இருப்பவன் வீரன். அடிக்கடி கோபம் கொள்ளாதீர்கள். ஏனெனில் கோப உணர்ச்சி கல்லீரலைப் பாதிக்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படாதீர்கள். ஏனெனில் பய உணர்ச்சி சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. நெய்யில் அடியில் தங்கியிருக்கும் கசடைப் பயன்படுத்தக் கூடாது. வெண்ணெயில் உள்ள அழுக்குகளின் திரட்சி இது. எளிதில் ஜீரணமாகாது. இதை உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கல்லீரல் மந்தம் உள்ளவர்களுக்குக் காமாலை நோய் ஆகியவை ஏற்படும். எனவே இதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மனதை ஒருநிலைபடுத்தி இறைவனை நினைத்து தியானம் செய்வது நல்லது. தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அமைதியாய், தெளிவாய், நிதானித்து பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்து விடுகிறது.
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் தெரியுமா?

ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே. நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும், பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
வாழ்வில் உயர்வு பெற தேவை எது தெரியுமா?

மனிதனுக்கு வியாதி என்பதே வரக்கூடாது. தலைவலி வந்தால் தாங்க முடியாது. அவதிப்படும் போது, பல்வலி வந்தால் தலைவலி பரவாயில்லை என்று தோன்றும். வயிற்று வலி வந்தால் இவை இரண்டும் பரவாயில்லையே என்று தோன்றும். இதேபோல் மனிதன் பொருளாதாரத்தினாலும், சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் போது தன்னைவிட தன் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் குறைந்தவனை நினைத்தால் நமது கஷ்டம் பரவாயில்லை என்று தோன்றும். ஒருவனுக்கு பெரிய கஷ்டம் அல்லது ஆபத்து வரும்போது இதைவிட பெரிய ஆபத்திலும் கஷ்டத்திலும் உள்ளவனை நினைத்தால் இந்தக் கஷ்டம் பெரிதாகத் தெரியாது. இதற்கெல்லாம் பொறுமையும், தன்னடக்கமும், தெய்வ நம்பிக்கையும் வேண்டும். இன்று என்ன செய்வது என்று யோசிப்பதை விட முதலில் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையே ஒருவனது வாழ்க்கையை உயர்த்தும். வெற்றிக்கும் அதுவே சிறந்த வழி.
மலையேறி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் விரும்புவது ஏன்?

தற்போது மலை தரிசனத்துக்கு மவுசு அதிகம் உள்ளது, கைலாஷ், சபரிமலை போன்ற கடினமான யாத்திரைகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். திருப்பதியில் பாதை வசதி ஏற்படுவதற்கு முன், பக்தர்கள் மலையேறியே சென்றனர். சபரிமலையில் இப்போதும் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை நடந்தே செல்ல வேண்டியுள்ளது. நன்றாகப் பசித்த பிறகு சாப்பிட்டால் தான், உணவு உடலில் ஒட்டும் என்பார்கள். அதுபோல, கஷ்டப்பட்டு யாத்திரை செய்தால் தான் தரிசனபலன் பூரணமாக மனிதனுக்கு கிடைக்கும். இதன் காரணமாகவே இறைவன் மலைகளிலும், காடுகளிலும் பதுங்கியிருக்கிறான். ஒரு காலத்தில் ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீசைலத்துக்கு போவது என்றால் மிகவும் கடினம். செல்லலுற அரிய சிவன் சீபர்ப்பத மலை என்கிறார் சுந்தரர். சீபர்ப்பதம் என்பது ஸ்ரீசைலத்தைக் குறிக்கும். பர்வதம் என்றால் மலை. இதையே பர்ப்பதம் என்றார் சுந்தரர். ஸ்ரீ என்பதையே தமிழில் சீ என்றார். மலைக்கோயில்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இருந்தாலும், வலுவான உடல்நிலை உள்ளவர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வாருங்கள். அதிக பலனை அடைவீர்கள்.