புதன், 16 அக்டோபர், 2013

பொறாமைக்காரர்களால் தொல்லையா?

வீட்டிலோ, பணியிடத்திலோ, தொழிலிலோ, உறவிலோ நாம் அறிந்தோ அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் இவர்கள் எதிரிகளாகக் கூட மாறி விடுகின்றனர்.  நான் யாருக்கும் ஒரு கெடுதலும் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் முளைக்கிறார்கள்! என்று சொல்லி வருத்தப்படுவர்கள் ஏராளம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் வழிபாடு உகந்தது. சனிக்கிழமைகளில் 12 முறை சக்கரத்தாழ்வார் சந்நிதியை வலம் வந்து வணங்கலாம். துளசிமாலை சாத்தி, கல்கண்டு பிரசாதத்தை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள். யோகநரசிம்மர் படத்தை கிழக்கு முகமாக வைத்து மாலையில் தீபமேற்றுங்கள். யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று 108 முறை உள்ளம் உருகிச் சொல்லுங்கள். பொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

காசேதான் கடவுளடா…

இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது.  அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு.  அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.

கலாட்டா கல்யாணம்

நம் பிள்ளைகளுக்கு சமமான வயதுடையவர்கள் எல்லோருக்கும் கல்யாணமாகி குழந்தை குட்டிகளுடன் வாழ்கிறார்கள். ஆனால் நம் பிள்ளைக்கோ ஒரு நல்ல வரன் அமைய மாட்டேங்குது. நிறைய வரன் பார்த்துட்டோம். அதில் எந்த வரனும் அமையவில்லை. எந்த வரன் வந்தாலும்  தடைபட்டுக் கொண்டே செல்கிறது என்று வருத்தப்படுபவர்கள்; ஏதாவது ஒரு செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். தங்கம், வெள்ளியால் தாலி செய்து அல்லது மஞ்சள் கிழங்கை குலதெய்வத்திற்கு காணிக்கையாக செலுத்துங்கள். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து உங்களுக்கு இஷ்டப்பட்ட அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மன் பெயரில் அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் நிச்சயம் ஆனவுடன் அந்த அம்மனுக்கு நன்றிகூறும் வகையில் சிறப்பு அர்ச்சனை செய்து விட்டு, ஏழை எளியவர் குறைந்தது ஏழு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். அத்துடன் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலத்திலுள்ள மாங்கல்யேஸ்வரர் கோயிலில் உள்ள மாங்கல்ய மகரிஷியை வழிபாடு செய்து, திருமணம் நிச்சயம் ஆனவுடன் முதல் பத்திரிக்கை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டால், உங்கள் வீட்டு கல்யாணம் கலாட்டா கல்யாணமாக சிறப்பாக நடக்கும்.

படித்தால் மட்டும் போதுமா?

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் அது மனதில் நிற்காமல்  மறந்து  விடுகிறது. அப்படியே ஞாபகம் இருந்தாலும், அதை சரியாக தேர்வில்  எழுத முடியவில்லை. பெற்றோரும், ஆசிரியர்களும் படித்தால் மட்டும் போதாது. நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என திட்டுகிறார்கள். படிக்க வசதியில்லாமல் படிப்பு பாதியிலேயே நின்று போய்விடுகிறது என்றெல்லாம் கவலைப்படுபவர்கள்; முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூருக்குச் செல்லுங்கள். அங்குள்ள நாழிக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு செந்திலாண்டவனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நான்முகனான பிரம்மனுக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான் என்பதன் அடிப்படையில் 40 லட்டுக்கும் குறையாமல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். திருச்செந்தூருக்கு சென்று வழிபட இயலாதவர்கள் முருகனின் உருவப்படத்தை வீட்டில் வைத்து அவரவர் பிறந்த கிழமைகளில் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். மேலும் கல்விக்கு அதிபதிகளான குருபகவான், சரஸ்வதி, ஹயக்ரீவர் போன்றோரின் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்.  அத்துடன் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மணல்மேடு குற்றம் பொறுத்த நாதருக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யுங்கள், அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். உங்களது கல்விக்கான தடைகள் அனைத்தும் நீங்கி, அதிக மதிப்பெண் பெற்று சிறப்பான வாழ்வு பெறுவீர்கள்.

வேலை கிடைச்சாச்சு

நான் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என வருத்தப்படுவர்கள்; திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்துக்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள். உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவன் காயத்ரி மந்திரத்தை மனதாரக் கூறுங்கள். வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை நோயாளிகளின் மருத்துவத்திற்கு செலவு செய்யுங்கள். அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புன்கூர் சிவலோகநாதருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள் தகுதிக்கேற்றபடி வேலை கிடைச்சாச்சு என்பதில் சந்தேகமில்லை.

நூறாண்டு காலம் வாழ்க

உடலில் சளி, இருமல் போன்ற ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுபவர்கள்; முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான பழநி ஆண்டவனை தரிசனம் செய்யுங்கள். சித்தர்களும், யோகிகளும் இவரை வழிபட்டுப் பயனடைந்துள்ளனர். பிரசாதத்தினை ஏழை எளியோருக்கு தானம் செய்யுங்கள். முருகனின் ராஜஅலங்காரப் படத்தினை வீட்டில் வைத்து தினமும் வணங்குங்கள். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 5 அகல் தீபங்களை ஏற்றி முருகனின் துதிகளைப் பாடி பக்தியடையுங்கள். நவகிரகசன்னதியில் முதலாவதான சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுங்கள். அத்துடன் 4448 நோய்களை குணப்படுத்தும் தலைமை இடமான வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சென்று, வைத்தியநாதரையும், அங்குள்ள தன்வந்திரியையும் வழிபடுங்கள்.  நோய் நொடிகளின்றி நூறாண்டு காலம் வளமோடு வாழ நல்லருள் கிடைக்கும்.

அடுத்த வாரிசு

தங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லை என்று வருத்தப்படுகிறவர்கள்; தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கோயிலில் உள்ள துர்கை அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். 9 உதிரி எலுமிச்சம் பழத்தை அம்மன் காலடியில் வைக்க சொல்லி வழிபட்டு விட்டு அந்த பழங்களை திருப்பி வாங்கக் கூடாது. அர்ச்சனை செய்த குங்குமத்தை வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு தினமும் பூசிவிடுங்கள். கதிராமங்கலம் வனதுர்கை ஆலயத்துக்குச் சென்று அம்மனுக்கு அரக்கு அல்லது சிவப்புப் புடவை சாற்றி, அபிஷேக ஆராதனை செய்து அம்மனை வழிபடுங்கள். உங்கள் வாரிசுகள் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள கோயில் நரசிம்மரை வழிபட்டு கல்கண்டு பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுங்கள். துர்கை, நரசிம்மர் காயத்ரி மந்திரங்களை தினமும் உச்சரியுங்கள். திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தியிடம் சென்று உங்களக்கு அடுத்த வாரிசுக்கு ஆயுஷ் ஹோம் செய்யுங்கள்.உங்கள் வாரிசுகளின் உடல் நலம் சீராக அமையும்.

ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே

வியாபாரத்தில் லாபம், நஷ்டம் இருப்பது சகஜம். தொழிலில் எப்பொழுதுமே நஷ்டமாக உள்ளது என வருத்தப்படுகிறவர்கள்; குபேரனுக்கே செல்வ வளம் கொடுத்தவர் சிவபெருமான், எனவே ஸ்ரீசைலம் சென்று அபிஷேக ஆராதனை செய்து சிவபெருமானை வழிபடுங்கள். அங்குள்ள விபூதி பிரசாதத்தை வாங்கி வந்து வீட்டிலும், வியாபாரம் நடக்கும் இடத்திலும் வைத்தால் நஷ்டம் குறைந்து லாபம் பெருகும். வியாபாரம் தொடங்கிய நாட்களில், திங்கட்கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குப் போய் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். அங்கு நடைபெறும் அன்னதானத்திற்கு இயன்ற உதவி செய்யுங்கள். தினமும் சிவன் காயத்ரி மந்திரந்தை உச்சரியுங்கள். பிரதோஷ நாட்களில் பிராணிகளுக்கு உணவு கொடுங்கள். திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கு சென்று உங்கள் வயதுக்கேற்றபடி நெய்தீபம் ஏற்ற வழிபாடு செய்யுங்கள். (இக்கோயில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் 32 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுகனூரிலிருந்து மேற்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. ) உங்கள் வாழ்க்கையில் நஷ்டமும், துன்பமும் விலகி லாபமும், மகிழ்ச்சியும் பெருகி, இனி எப்போதும் ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே...

கண்ணன் வருவான்

திருமணமாகி நீண்ட நாட்களாகியும் தனக்கு ஒரு வாரிசு இல்லை என வருத்தப்படுபவர்கள் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலுக்குச் சென்று முல்லைவனநாதரையும், கர்ப்பரட்சாம்பிகை அம்மைனையும் வழிபடுங்கள். அம்மனின் பாதத்தில் வைத்து அபிஷேகம் செய்த நெய்யை கணவன், மனைவி இருவரும் 48 நாட்கள் சாப்பிட்டுவர குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோயிலில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணரை மடியில் வைத்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிறந்த கிழமைகளில் வீட்டிலுள்ள இஷ்டதெய்வத்தின் முன் நெய் தீபம் ஏற்றி அபிராமி அந்தாதியில் தாமம் கடம்பு எனத் தொடங்கும் 73வது பாடலை தினமும் மனதார படியுங்கள். அரசமரத்தடி நாகர் மற்றும் விநாயகரை திங்கட்கிழமைகளில் வழிபடுங்கள். படிக்க வசதியில்லாத ஏழைச் சிறுவர்களின் படிப்புக்கு உதவுங்கள். விரைவிலேயே உங்கள் வீட்டில் சின்னக் கண்ணன் துள்ளி விளையாட வருவான்.

எதிரி தொந்தரவு நீங்க

உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படுபவர்கள், உங்களை விரோதியாக நினைப்பவர்கள் போன்றவர்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா; கும்பகோணம் அய்யாவாடி பிரத்யங்கிரா ஆலயத்தில் நடைபெறும் நிகும்பலா யாக பூஜையில் கலந்து கொண்டு அம்மனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வாரை மனதாரப் பிரார்த்தியுங்கள். அங்கு நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். சனிக்கிழமைகளில் உங்களுக்கு இஷ்டமான அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். இயலாதவர்களுக்கு பிரசாதத்தை தானம் செய்யுங்கள். உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள், விரோதிகள் என யாராலும் எந்த பாதிப்புமின்றி இரும்பு கோட்டை போல் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழலாம்.

நல்லதொரு குடும்பம்

உங்கள் குடும்பங்களில் உள்ள உறவுகளுடன் சிறு சிறு சண்டைகளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறதா; அவைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ ஆசைப்படுபவர்கள்; பிள்ளையார்பட்டிக்கு சென்று அங்குள்ள கற்பக விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து மனதார வழிபடுங்கள். அங்கு தரும் விபூதி பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சிறுதுணியில் கட்டி வீட்டு வாசல்படி முன் வைத்துவிடுங்கள். மேலும் குடும்பத் தலைவன், தலைவி என அவரவர் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அருகம்புல் மாலை சாற்றி, சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யுங்கள். வசதி படைத்தவர்கள் வீட்டில் கணபதி ஹோமம் நடத்தலாம். அல்லது வெள்ளிக்கிழமைகளில் பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளித்து, சாம்பிராணி புகை போட்டு இஷ்ட தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் குடும்பங்களில் அவ்வப்போது நிகழும் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி சந்தோஷமாக ஒற்றுமையுடன் நல்லதொரு குடும்பம் அமையும்.

வழக்குப் பிரச்சனைகள் தீர

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோர்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிவடையாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. உங்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பு அமைய விரும்புபவர்கள்; விழுப்புரம் பஞ்சவடிக்கு சென்று ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வெற்றிலைமாலை, வடைமாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றியும் வழிபடுங்கள். மேலும் அஷ்டமி தினத்தில் பைரவருக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமாக நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும்.

எங்கும் பயம்...எதிலும் பயம் நீங்க

பயம்.. பயம்.. பயம் என எதைப்பார்த்தாலும் பயமாக, நடுக்கமாக உள்ளது. என்னால் எந்த வேலையையும் நிம்மதியாக செய்து முடிக்க முடியவில்லை என வருத்தப்படுகிறவர்கள்; சிவகங்கை வைரவன்பட்டி பைரவரை வழிபடுங்கள். அவருக்கு உகந்த பிரசாதத்தை குறைந்தது 9 பேருக்காவது தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோயில் நரசிம்மரை வழிபட்டு பானகம் நிவேதனம் செய்து வணங்குங்கள். அவருடைய தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு பயமெல்லாம் போனதும் அவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். நரசிம்மர் வழிபாட்டினால் உங்களுடைய பயம் அனைத்தும் விலகி வெற்றியே உங்களுக்கு கிடைக்கும்.

இருமலர்கள்

கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக மலரும் மணமும் போல் வாழ ஆசைப்படுபவர்கள்; சிவனும், சக்தியும் சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் தலம் நாமக்கல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள மூலவருக்கு மாலை வாங்கி சாற்றி அபிஷேகம் செய்து மனதார வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானின் சாபத்தால் பூமிக்கு வந்த பார்வதி, மீண்டும் ஈசனை அடைய பஞ்சாக்னியில் நின்று தவம் செய்த தலம் காஞ்சி மாங்காடு வெள்ளீஸ்வரர் ஆலயம். இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். காஞ்சி காமாட்சியம்மன் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து அவரவர் பிறந்த கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். கணவன் மனைவி இருவருக்கிடையேயும் எந்தவித பிரச்சனையுமின்றி இரு மலர்களாக மணம்வீசி மனம் போல வாழ்வு சிறக்கும்.

கனவோ...நிஜமோ...

இரவில் தூங்கும் போது கெட்ட கனவுகள் வந்து தொல்லை செய்கின்றன. எங்கே கனவில் கண்டது நிஜத்தில் பலித்து விடுமோ என்று பயமாக உள்ளது என வருத்தப்படுபவர்கள்; உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்று 9 எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொடுத்து குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அதில் 3 எலுமிச்சம் பழத்தை மட்டும் திருப்பி வாங்கிட்டு வந்து ஒன்றை உங்கள் படுக்கை அறை அலமாரியில் வைத்து விடுங்கள். மீதி இரண்டை பூஜையறையில் வைத்தால் கெட்ட கனவுகள் வராது. மேலும் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தேவிபட்டணத்திற்கு சென்று அங்குள்ள நவகிரகங்களை மனதார வழிபாடு செய்யுங்கள். நல்ல செயல்களை நினைத்துக் கொண்டு நல்ல சிந்தனையோடு உறங்கச் செல்லுங்கள். தீய கனவுத்தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக உறங்குங்கள்.

ஞாபம் வருதே... ஞாபகம் வருதே...

மறதி பிரச்சனை இயல்பாகவே எல்லோருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஒருசிலர் தாங்கள் அன்றாடம் செய்யும் பணிகளை மறந்து விடுவார்கள், கேட்டால் எனக்கு ஞாபக மறதி என்று சொல்வார்கள். மறதிவிலகி ஞாபக சக்தி அதிகரிக்க ஆசைப்படுபவர்கள்; உங்களுக்கு இஷ்டமான அம்மன் ஆலயத்துக்குச் சென்று 5 அகல் தீபம் ஏற்றி அம்பிகையை மனதார வழிபடுங்கள். ஏழைப் பெண்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி,

யாதேவி சர்வ பூதேஷு ஸ்ம்ருதி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எல்லா உயிர்களிடமும் ஞாபக சக்தியாக விளங்கும் தேவியைத் துதிக்கிறேன் என்பதே இதன் பொருள். இந்த ஸ்லோகத்தையும், பொருளையும் தினமும் 11 முறை கூறுங்கள். ஞாபக மறதியிலிருந்து விடுபட்டு எந்த காரியத்தையும் மனதில் ஞாபகம் வைத்துக் கொண்டு செயலாற்றும் சக்தி கிடைக்கும்.

பயணப் பாதையில் ஆபத்து வராமல் இருக்க

நீங்கள் அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவராக இருக்கலாம். அலுவலகப் பணி அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது விபத்து மற்றும் ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க

ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ மங்களாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே
ஓம் நமோ ராகுவே

என்ற இந்த மந்திரத்தை வீட்டை விட்டுக் கிளம்பும் முன் உங்கள் வீட்டுப்பூஜையறையில் நின்று மனதார ஒருமுறை கூறிவிட்டு புறப்படுங்கள். அல்லது சுலபமாக,

சம்போ மகாதேவ தேவா - சிவ சம்போ மகாதேவ
தேவாதி தேவா நமோ மார்க்க பந்தோ

என்ற இந்தத் துதியை உங்க பயணம் ஆரம்பிக்கும் முன் குறைந்தது 11 முறை சொல்லுங்கள். நீங்கள் எந்தத் தடையுமின்றி பத்திரமாக உங்கள் பயணத்தை முடித்து விடுவீர்கள்.

வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்; வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும் முன்னே பலவிதமான தடைகள் ஏற்படும். இதில் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பது என்றால் அப்பப்பா சொல்லி முடிக்க இயலாது. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பு காளஹஸ்தி சென்று காளத்திநாதரையும், ஞான பிரசுன்னாம்பிகையையும் மனதார வழிபட்டு வாருங்கள். உங்களால் இயன்ற அளவு பச்சரிசியை கோயிலுக்கு தானமாகக் கொடுங்கள். ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். கோயிலில் தரும் விபூதியை தண்ணீரில் கலந்து பூமி பூஜை ஆரம்பிக்கும் முன்  பூஜை செய்யும் இடத்தில் ஊற்றுங்கள். வீடு கட்டத் தொடங்கிய பின்பு புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று புற்றுக்கு பால் வாங்கி ஊற்றிவிட்டு அம்மனை மனதார வழிபட்டு வாருங்கள். அங்கு தரும் குங்குமத்தை சிறிதளவு தண்ணீரில் கலந்து வீடு கட்டும் இடத்தில் தெளியுங்கள். தடைகளைத் தாண்டி சொந்த வீட்டில் நீங்கள் சந்தோஷமாக வசிக்கலாம்.

திருட்டுப் பயம் போக...

உங்கள் வீட்டிலோ அல்லது வெளியூர் செல்லும் போதோ ஏதாவது பொருள், நகை, பணம் திருடு போகிவிட்டதா, இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்ததை திருடி விட்டார்களே என வருத்தப்படுகிறவர்கள்; காரைக்குடி வைரவன்பட்டி பைரவர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து பைரவரை மனதார வேண்டுங்கள். தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுங்கள். பைரவரின் வாகனமான நாய்களுக்கு இயன்ற உணவு வாங்கிக் கொடுங்கள். கோயிலில் தரும் விபூதியை வீட்டு பூஜை அறையில் வையுங்கள். தேய்பிறை அஷ்டமி தினத்தில் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் உள்ள பைரவருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுங்கள். தினமும் பைரவர் காயத்ரி மந்திரத்தைக் கூறுங்கள்.

கடன்கள் அடைந்திட...

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கைவேந்தன் என்ற பழமொழிக்கேற்ப கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்படுகிறீர்களா; தஞ்சாவூர் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் உள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரரை வழிபடுங்கள். 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வாரம் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் உங்களது கடன் சுமை குறையும். மேலும் சுவர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுமாட்டுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள். அபிராமி அந்தாதியை தவறாமல் தினமும் கூறுங்கள். உங்களது கடன் பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து செல்வ வளம் பெருகும்.

பயணத் தடைப் பிரச்சனை விலக

வெகுநாட்களாக சுற்றுலா, தூர தேசப்பயணம் மேற்கொள்ள ஆசைப்பட்டு அது நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே செல்கிறதா, எங்கே நாம் ஆசைப்பட்ட இடத்திற்கு போகமுடியாமல் கனவாக இருந்து விடுமோ என நினைப்பவர்கள்; உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் கருடனுக்கும், சிவன் கோயில் நந்திக்கும் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். கருடன், நந்திக்கு செய்ய வேண்டிய சரியான வழிபாட்டை செய்யுங்கள். வெளிநாடு செல்ல வேண்டிய பயணத்தடை விலக காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று அங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடுங்கள். 8 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தர்ப்பாரண்யேஸ்வரரை மனதார வழிபாடு செய்யுங்கள். ஏதாவது ஒரு விநாயகர் கோயிலில் 3 சிதறுதேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்புங்கள். நீங்கள் விரும்பியபடியே உங்களது பயணம் எவ்விதத் தடையுமின்றி சிறப்பாக அமையும்.

அரசுப்பணி தடைகள் அதிரடிப்படையுடன் விரட்ட...

அரசுப்பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் தடைகள் விலகவும், அரசின் மூலம் கிடைக்க இருக்கும் அனுமதிக்கு காலதாமதம் ஏற்படுவதால் வருத்தப்படுபவர்கள்: அருகிலுள்ள ராகவேந்தர் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. முடிந்தால் மந்திராலயம் சென்று, தீபமேற்ற பசு நெய் வாங்கிகொடுத்து வழிபட்டு வருவது சிறந்த பலனைத்தரும். அத்துடன் அங்கு கிடைக்கும் இனிப்பான கோயில் பிரசாதத்தை குறைந்தது நாற்பது பேருக்கு கொடுக்கவும். மேலும்  தங்கள் காரியம்  விரைவில் நிறைவேற தினமும்  ராகவேந்திரர் படத்திற்கு பூபோட்டு வணங்கி வருவதால் காரியசித்தி விரைவில் கூடும். அடிக்கடி உங்கள் வீட்டின் அருகேஉள்ள ஏதேனும் ஒரு மகானின் பிருந்தாவனத்திற்கு, நீங்கள் பிறந்த கிழமையில் அவசியம் சென்று நெய்தீபமேற்றி மனதார வணங்குங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவான் சன்னதி முன்பு 9 நல்லெண்ணை தீபமேற்றி 9 சுற்றுக்கள் வந்து வணங்கினால் கிரக தோஷம் நீங்கும். இப்படியெல்லாம் செய்து வந்தால் அரசுப்பணி தடைகள், பகவானின் அருள் எனும் அதிரடிப்படை துணை கொண்டு விரட்டலாம்.

தேடும்....உன் பார்வை....

ஞாபகமறதி உள்ள நபர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு பொருளை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவர்.  சில சமயம் அவை கிடைத்துவிடும். சில சமயம் கிடைக்காமல் போனாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஏனெனில் அது சாதாரணப்பொருளாக இருக்கும். எப்போதும் உஷாராக இருப்பவர்கள் கூட,  சில நேரங்களில்,  ஏதேனும் ஒரு பொருளை தொலைத்து விடுவார்கள். மிகவும் விலை உயர்ந்த, அல்லது மதிப்பு மிக்க அந்தப்பொருளை தேடித்தேடி அலுத்துவிடுவார்கள். அத்துடன் எப்போதும் அவர்களது பார்வை அந்தப்பொருளை தேடிக்கொண்டிருக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  புதுக்கோட்டையிலுள்ள அரைக்காசு அம்மனை இருந்த இடத்திலிருந்து, தொலைந்த பொருள் விரைவில் கிடைத்தவுடன் நேரில் வந்து அர்ச்சனை செய்வதாக வேண்டிக்கொண்டால் உடனடி பலன் கிடைக்கும். இது தவிர திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதும், சென்னை வண்டலூர் அருகிலுள்ள லட்சுமி குபேரர் கோயிலில் உள்ள அரைக்காசு அம்மனுக்கு சர்க்கரை வாங்கி வைத்து வேண்டிக்கொள்வதும் சிறந்த பலனைத்தரும்.

கவலைப்படாதே சகோதரா...

தான் ஆடாவிட்டாலும்...தன் சதை ஆடும் என்பார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால். நமக்கு ஒரு பிரச்சனை என்றால், அதுபற்றி நாம் கவலைப்படாவிட்டாலும், நம் உடன் பிறந்தவர்கள் கவலைப்பட்டு, உண்மையான ஆறுதல் கூறி, பிரச்னை தீர வழி தேடுவார்கள் என்பதாகும். என்னதான் நண்பர்கள், பிற உறவினர்கள் இருந்தாலும், உடன்பிறந்தவர்கள் என்பதே தனி சுகம் தான். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் சகோதர, சகோதரிகளுக்குள் இடைவெளி உண்டாகி பெரும் வருத்தம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மன வருத்தங்களால் பிரியாமல் இருக்கவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் நினைப்பவர்கள்:  அருகிலுள்ள ராமர்கோயிலுக்கு சென்று ராம, லட்சுமண சகோதரர்களுக்கு பானகம் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. ஏனென்றால் இவர்கள் தான் சகோதர உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள். அத்துடன் பூஜையின் போதெல்லாம் ஸ்ரீராம ராம ராமேதி,ரமே ராமே மனோரமே, சகஸ்ரநாம தஸ்த்துல்யம், ராமநாம வராணனேஎன்ற ராம மந்திரத்தை மூன்று முறை ஜபித்து வணங்குங்கள். அத்துடன் ராமதூதனான அனுமனை வழிபட்டாலும் உடன்பிறந்தவர்களின் உறவுக்கு கை கொடுக்கும். உங்களது பிரார்த்தனையின் போதெல்லாம், ராமர் காயத்ரி, அனுமன் காயத்ரி மந்திரத்தை கூறி வணங்கவும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ராமருக்கு திருமஞ்சனம் செய்தும், அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றியும் நன்றி சொல்லுங்க.

அபிராமி... அபிராமி...

எந்த ஒரு பயத்திற்கும் எளிதில் நிவாரணம் கிடைத்து விடும்.  ஆனால் மரணபயத்திற்கு நிவாரணம் இறைவனை சரணடைவதை தவிர வேறில்லை. மரணபயம் வந்துவிட்டால் ...அந்த பயமே ஆளை கொன்றுவிடும். அதற்கு முன் இறைவனை சரணடைந்து விடுவோம். சரி ....எந்த கடவுளை சரணடைவது..... இதற்கெல்லாம் ஒருத்தர் தான் இருக்கிறார். அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள காலசம்ஹார மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவரை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. அங்கு போய் அவருக்கும், அபிராமி அம்மனுக்கும்  அர்ச்சனை செய்து விட்டு, அங்கு தரும் விபூதியை நாள் தோறும் பூசி வந்தால் மரண பயம் விலகும். முடிந்தால் அங்கேயே  மிருத்தஞ்ய ஹோமம் செய்வது சிறப்பு. ஏழை எளியவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும்  உதவுவது சிறந்த பலன் தரும்.  சிவனைத்தவிர எவருமில்லை என்பதால், பிரதோஷத்தன்று சிவ அர்ச்சனை செய்யுங்கள். தினமும் மகா மிருத்தஞ்ஜய மந்திரத்தை 11 தடவை ஜபியுங்கள்.இதனால் உங்களுக்கு மரண பயம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.

என்னதான் நடக்கும்...நடக்கட்டுமே...

பிரச்சனை...அலுவலகத்தில் பிரச்சனை...சொந்த பிசினஸில் பிரச்சனை...இதில் நாம் உண்டு என இருந்தாலும், பிரச்சனை நம்மை தேடி வந்து கதவை தட்டும். இதிலிருந்து தப்பிக்க. ஒரு சிலர் காக்காய் பிடிப்பார்கள். இதனால் பிரச்சனை நிரந்தரமாக தீர வாய்ப்பில்லை.  ஆனால் நீங்களோ பெருமாள் காலை பிடித்துக்கொள்ளுங்கள். அதிலும் பள்ளி கொண்ட பெருமாள் என்றால் இன்னும் விசேஷம். அவரிடம் சென்று நடந்தவற்றை கூறி காப்பாற்றும்படி கெஞ்சுங்கள். துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். அலுவலகத்திற்கு வந்தவுடன் ரங்கநாதரை மனதில் நினைத்து, அவரது காயத்திரி மந்திரத்தை கூறி விட்டு பணியை தொடங்கவும்.  முடிந்தால் ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள ரங்கநாதரையும், நரசிம்மரையும் வணங்கி, அர்ச்சனை செய்து வழிபடுங்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 10 பேருக்கு மேல் பிரசாதம் வழங்குங்கள். அத்துடன் உங்களது பிறந்த கிழமையில் பக்கத்து பெருமாள் கோயிலுக்கு சென்று தாயாருக்கும், பெருமாளுக்கும் துளசி அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். இதனால் நீங்கள் என்னதான் நடக்கும். நடக்கட்டுமே.. பெருமாள் பார்த்து கொள்வார் என தைரியமாக பணியை செய்யலாம்.

தூள்...

என்னன்னு தெரியல்ல...எனக்கு மட்டும் எதை தொட்டாலும் தோல்வி... எதைசெய்தாலும் நஷ்டம்... என்ன செய்றதுன்னு தெரியல்ல... என புலம்புவர்கள், முழு முதற்கடவுளான விநாயகரிடம் சென்று அருகம்புல் மாலை சாற்றி அர்சசனை செய்து வணங்கி வாருங்கள். அடிக்கடி மிகப்பிரபலமான விநாயகர் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி குறைகளை சொல்லுங்கள். எதை செய்தாலும், விக்ன விநாயகனை வணங்கி விட்டு செய்யுங்கள். வினை தீர்க்கும் விநாயகர் உங்கள் வினைகளை எல்லாம் தூள் தூளாக்கி விடுவார். கடல் தீர்த்தம், மற்றும் புனித தீர்த்தங்களை வீட்டில் வைத்துக்கொண்டு அடிக்கடி வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். நடப்பது நன்மையாகவே முடியும்.
புதுவீடுகளில் திருஷ்டி பூசணிக்காய் தொங்கவிடுவதன் நோக்கம் தெரியுமா?

கண்ணேறு கழித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே கடைபிடிக்கப்படும் மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்பதை இன்றைய விஞ்ஞான உலகமும் ஒப்புக் கொண்டிருக்கின்றது. இதனை நம் முன்னோர்கள் திருஷ்டி தோஷம் எனக் குறிப்பிட்டார்கள். இவ்வளவு அழகாக வீடுகட்டி விட்டார்களே என்று பொறாமையுடன் யாராவது பார்த்தால், இந்த திருஷ்டி தோஷம் ஏற்படும். இதனால் நமக்கும் பாதிப்புகள் வராமல் இருக்க பூசணிக்காய் தொங்கவிடுவர். புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டிதோஷம் குறையும் என்றனர்.
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்!

ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?

தியானம்.  தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!

ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.

பெண் புத்தி பின் புத்தி

நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும், சிவபெருமான் பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில் செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு  பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வழியாகக் கொடுத்து, அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக - சக்தியாக இருந்து செயல்படுகின்றார். இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது, பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப் பாதுகாக்கின்றாள்.  பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை வழி நடத்துபவள்.

ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?

பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள். தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.

ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.

குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்

நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது!

சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு. பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக் கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது. அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்

அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி அமைந்து விட்டது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது! ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் அவனுக்கு சாவு தான்; நூறு கௌரவர்களோடு இருந்திருந்தாலும் கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்

இந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது. ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி. பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.

அடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்

இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது.
பரதனுக்கு இராமர் சொன்ன அழியா உண்மைகள்!

அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான கருத்துக்களைக் கூறுகிறார். ராமகீதை என்று அழைக்கப்படும் இக் கருத்துகள் வருமாறு:

ஈஸ்வரனுக்கு உள்ள சுதந்திரம் இந்த ஜீவனுக்குக் கிடையாது. ஆகவே இங்கு யாரும் அவர்கள் இஷ்டப்படி நடக்க முடியாது. காலம் மனிதனை அங்கும் இங்கும் இழுத்துச் செல்லுகிறது. சேர்த்து வைக்கப்படும் பொருளுக்கு முடிவு அழிவுதான். லௌகிக உன்னதத்தின் முடிவு வீழ்ச்சிதான். கூடுவதின் முடிவு பிரிவு தான். எப்படி பழுத்த பழம் கீழே விழுந்துதான் ஆக வேண்டுமோ, அதேமாதிரி, பிறந்த மனிதன் இறந்துதான் ஆகவேண்டும். மூப்பு, மரணம் இவற்றுக்கு உட்பட்டு அழிந்துதான் ஆக வேண்டும். கழிந்த இரவு திரும்ப வராது. யமுனை நீர் கடலை நோக்கிச் செல்லும், ஆனால் திரும்பாது. பகலும், இரவும் மாறி மாறி கழிகின்றன. கூடவே மனிதனுடைய ஆயுள் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. மரணம் எப்பொழுதும் மனிதன் கூடவே இருக்கிறது. மனிதன் கூடவே செல்கிறது. சூரியோதயத்தைக் கண்டு மனிதன் மகிழ்கிறான். ஆனால் ஒவ்வொரு சூரியோதயத்தோடும் தன் ஆயுள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்கிறான்.  கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஒன்றோடொன்று சிறிது காலம் சேர்ந்து இருக்கின்றன. பிறகு பிரிந்து ஒவ்வொன்றும் ஒரு பக்கம் செல்கிறது. அதே மாதிரி மனிதனோடு, மனைவி, மக்கள், குடும்பம், பணம் எல்லாம் சேர்கின்றன. பிறகு பிரிந்து விடுகின்றன. அதனால் நாமெல்லோரும் நம் ஆத்மாவின் நன்மையைக் கோர வேண்டும். அதற்கு எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பூஜையின் போது என்ன உடை அணிய வேண்டும்?

நாம் நம்முடைய பல்வேறு ஆசைகள் ஈடேறுவதற்கு இறைவனைத் தொழுகிறோம். இதை நாம் தூய மனமும், சுத்தமான உடலும், உண்மையான வாக்கும் கொண்டு செய்யவேண்டும். உடம்பைப் பொறுத்தவரை, தூய்மையை அடைய நன்கு அழுக்கு நீங்கத் தேய்த்துக் குளித்தால் போதும். சாதாரணமாக நீரில் மூழ்கிக் குளித்தாலோ, எண்ணெய் தேய்த்துக் குளித்தாலோ, இந்தத் தூய்மையை உடல் பெற்றுவிடும். இந்த நீராடுதல் நைமித்திக ஸ்நானம், காம்ய ஸ்நானம், நித்ய ஸ்நானம் என்று மூன்று விதமாக அமையலாம். நதியில் மூழ்கி நீராடும் போது, நமது மனத்தில் வேண்டிக் கொண்டது நிறைவேற, இத்தனை தடவைகள் மூழ்கி எழுந்திருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. இதை வேண்டிக்கொண்டபடி உரிய அளவில் செய்து முடிக்க வேண்டும். இது காம்ய ஸ்நானம். நைமித்திக ஸ்நானம் என்பது குடும்பத்தில் நெருங்கிய உறவினர் இறந்துவிடும்போது செய்யும் ஸ்நானம். இது வீட்டிலும், உடம்பிலும் உள்ள கிருமிகளின் பாதிப்பு, நீங்க செய்யப்படுவதாகும். சூரிய அல்லது சந்திர கிரகண காலங்களிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு. நித்ய ஸ்நானம் என்பது அன்றாடம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலும் பீடை நீங்க இவ்வாறு செய்வதுண்டு.

நித்ய ஸ்நானம் என்பது தூய்மைப்படுத்திக் கொள்ள நீரில் மூழ்கிச் செய்வதாகும். இதைக் குளம் குட்டைகளிலோ, கிணற்றிலோ, நீரைப் பயன்படுத்திச் செய்து முடிக்கலாம். இதில் ஓடும் நதியில் நீரில் ஸ்நானம் செய்வது சிலாக்கியமானது. குட்டையில் நீராடுவது அடுத்த ரகம். கடைசி ரகத்தைச் சேர்ந்தது கிணற்றில் நீராடுவது. சில சமயம் உடம்பு முழுவதும் விபூதி பூசிக்கொண்டு ஸ்நானம் செய்த உணர்வை பெறுவது உண்டு. இதற்கு விபூதி ஸ்நானம், பஸ்ம ஸ்நானம் என்ற பெயர்களும் உண்டு. உடல் நலம் சரியாக இல்லாத நிலையில் இதைச் செய்யலாம். தூய்மை பெற, ஆண்கள் தலைமுடி நனைய மூழ்கி ஸ்நானம் செய்வதுதான் உத்தமம். பெண்கள் கழுத்துக்குக் கீழே ஸ்நானம் செய்தால் போதுமானது.  ஸ்நானம் செய்யும் போது கடவுளை நினைத்துக் கொண்டு கங்கை, யமுனா, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய புண்ணிய நதிகளை நினைவு கூர்ந்து நீராட வேண்டும். இதனால் உடலும் புனிதம் அடையும் புண்ணியமும் கிடைக்கும். இவ்வாறு ஸ்நானம் செய்தபிறகு கடவுளை வணங்கிப் பிரார்த்தனை செய்ய,  தூய்மையான உள்ளம் தேவை. அத்துடன் உடல்மீது அணிந்த உடையும், தூய்மையாக இருக்க வேண்டும். பூஜை செய்யும்போது ஈரத்துணியை உடுத்தி இருப்பது தவறானதாகும். உடுத்த உடை காய்ந்து உலர்ந்து இருக்க வேண்டும். பூஜை செய்யும் நேரத்தில், அன்று நனைத்து உலர்த்தி, காயவைத்த உடையை அறிவதே சிறப்பு. முந்தைய நாள் இவ்வாறு உலர்த்திக் காயவைத்த உடைகள் இரண்டாம் பட்சமானதுதான். மழையினால் காற்றில் சிலசமயம் துணிகள் உலருவது சிரமமாக இருக்கும். அப்போது துணியை ஏழு தடவைகள் நன்கு உதறிவிட்டால் காயவைத்ததற்குச் சமானம் ஆகும்.

முதல்நாள் உலர்த்திக் காயவைத்த உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டுபோய் குளியல் அறையில் வைத்துக்கொண்டு, பின் ஸ்நானம் செய்தபின் உடுத்திக் கொள்கிறார்கள். இவற்றைத் தூய்மையான மடி வஸ்திரத்துக்கு ஒப்பிட முடியாது. வர்ண உடைகளை பூஜை செய்யும் போது அணியக் கூடாது. வேஷ்டியின் இரண்டு முனைகளையும் சேர்த்துத் தைத்த கைலி போன்றவற்றையும் வஸ்திரமாக அணியக் கூடாது. புண்ணியதினங்களிலும் பண்டிகை நாட்களிலும் பட்டு வஸ்திரம் அணியலாம். பூஜாவஸ்திரம் அணிவதும் ஒன்றல்ல. பூஜைக்கேற்ப உரிய முறையில் அது பாங்காக அமைவது தான் உத்தமம். நாம் பூஜை செய்யும்போதும், கோயிலுக்குச் செல்லும்போதும் முறையான உடைகளை அறிந்து செல்ல வேண்டும். அது நம்முடைய பண்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். பூஜை அல்லது பிரார்த்தனையில் ஈடுபடும்போது கடவுளைப் பற்றிய சிந்தனையின்றி வேறு எதுவுமே மனத்தில் இருக்கக் கூடாது. இதற்கு மனத்தூய்மை மிகவும் முக்கியம். எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் வெற்றி அடைவதற்கு உள்ளத் தூய்மை மிகவும் அவசியமானது, கோபம், வெறுப்பு, கர்வம், பொறாமை ஆகிய உணர்வுகளுடன் பூஜையை மேற்கொண்டால், நாம் செய்வது பயனற்றதாக ஆகிவிடும். மனம் அமைதியாகவும், கட்டுப்பாடுடனும், நல்ல எண்ணங்களுடன் அமைவது மிக முக்கியம் எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும், அதில் வெற்றி கிடைக்க இவை முக்கியம். பூஜையைப் பொறுத்தவரை இது மிகவும் அவசியம். பூஜைக்கு அமரும்போது உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அப்போது நினைவில் வரவே கூடாது. பூஜை முடியும்வரையில் இவ்வாறு நிச்சலனமான மனத்துடன் ஆழ்ந்து ஈடுபடவேண்டும். பூஜையின் போதோ, பிரார்த்தனையின் போதோ கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடவே கூடாது. இது அபசாரம் ஆகும். வீட்டில் பூஜையில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமன்றி, ஆலயங்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கும் இது மிகமுக்கியம். பகவானின் அருகில் இருக்கும்போது அதற்கு அருகதை உள்ளவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

தொலைக்காட்சி பார்த்தவர்

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அணுவுருவில் நதிகள்

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

எதையெடுத்தாலும் தடங்கலா? இதற்கும் இருக்கு பரிகாரம்!

சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பது இல்லை. இவ்வாறு காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். இவர்களை யோகக்கட்டைகள் என்று கேலி செய்வார்கள். முற்பிறவியில் நல்வினைப்பயன் இருக்குமானால், இப்பிறவியில் செய்யும் எல்லாச் செயல்களும் வெற்றியைத் தரும். அதுவே எதிர் மறையான செயல்களை சம்பந்தப் பட்டவர்களோ அல்லது அவர்களின் முன்னோரோ செய்திருந்தால், தடங்கல் ஏற்பட்டு விடும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். ராமாயணத்தை இந்தியில் ராமசரிதமானஸ் துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும்,

பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!
ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண அனூபம் குண நிதான் ஸோ!!
என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும். இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம். ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்  இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.
ஏழையாய் பிறக்க காரணம் என்ன?

சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று பதில் சொல்கிறது. அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி யத் புரா! ததவே தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம்!! என்ற ஸ்லோகத்தில் நாஸ்தி நாஸ்தி என்றால் இல்லை இல்லை என்று பொருள். தேஹி தேஹி என்றால் கொடு கொடு என்று பொருள். யாரொருவன் முற்பிறவியில் இல்லை இல்லை என்று தன்னிடம் பிச்சை கேட்டவனை விரட்டினானோ, அவன்  இப்பிறவியில் கொடு கொடு என்று பிச்சை கேட்பவனாக பிறக்கிறான். அதற்காக, கையை நீட்டும் சோம்பேறிக்கெல்லாம் பிச்சை போடக்கூடாது. உண்மையிலேயே முடியாதவர்களுக்கு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு, ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதே நிஜமான பிச்சை. திருமால் கூட பிச்சையெடுக்கப் போகிறோமே என எண்ணி மகாபலி முன் உடலை குறுக்கிக்கொண்டு வந்தார். ஏனெனில், பிச்சை எடுப்பதைக் கேவலம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே நிஜமான ஏழைகளுக்கு தானம் கொடுத்து அடுத்த பிறவியிலாவது பணத்தை வாரிக் குவிப்பவராகப் பிறக்க வழி செய்து கொள்ளலாம்.
கோயில்களில் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்வது சரியா?

ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஐந்நூறு வருஷங்களுக்கு முன், நூறு வருஷங்களுக்கு முன், ஐம்பது வருஷங்களுக்கு முன் என்று காலப்போக்கில் நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். அவற்றை எல்லாம் தேவையோ, இல்லையா என்று சிந்திக்காமலேயே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பொட்டணப் (பாக்கெட்) பால் என்பது கிராமங்களில் வராது. நகரங்களில்தான் வரும். நகரங்களில் பொட்டணப் பாலை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்பதால், தப்பி எதுவும் வராது. இதுவே கிராமம் என்றால், வீட்டில் மாட்டையும் வைத்துக் கொண்டு எங்கோ போய் பால் பொட்டணத்தை வாங்கிக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால்தான் தப்பு!