வியாழன், 24 ஏப்ரல், 2014


புலால் உணவு உட்கொண்டும் கண்ணப்ப நாயனார் சிவ பதம் பெற்றது எவ்வாறு ? சில விளக்கங்கள்.

'புலால் உணவை கைவிடுவது இல்லை' என்னும் முடிவுக்கு முன்னமே வந்து, பின்னர் அம்முடிவுக்கு சாதகமான புராண- இதிகாச நிகழ்வுகளை சேகரித்து வைத்துக் கொண்டு வாதிடுவது முறையன்று. தர்மங்களை புராணங்கள் - சாத்திரங்கள் - நீதி நூல்கள் மூலம் முறையாகக் கற்று, அதன் பின்னரே தர்ம - அதர்மம் குறித்த முடிவுக்கு வருதல் வேண்டும்.

கண்ணப்பர் வேடர் மரபில் தோன்றிய அருளாளர். தர்ம அதர்மம் குறித்த புரிதல் பெரிதாக இல்லாத வேடர்கள் நிறைந்த சூழலில் - வனப் பகுதியில் உதித்தவர். ஆனால் நம் நிலையோ முற்றிலும் மாறுபட்டது. எண்ணற்ற தர்ம சாத்திரங்களை கற்று உணர வாய்ப்பும், கல்வியும் நமக்கு இன்று அமையப் பெற்றுள்ளது. ஆகவே, கண்ணப்பரின் சூழலையும் நம் சூழலையும் ஒப்பு நோக்குவது முறையன்று.

நம் உடலின் ஊடு-கதிர்ப்படத்தை (எக்ஸ்-ரே) மருத்துவத் துறையில் வல்லுனரான ஒருவரின் துணையைக் கொண்டே அறிய முயல்கிறோம். அது போல புராண நிகழ்வுகளில் இருந்து நாம் உணர வேண்டிய நீதிகளை, சமயத் தொண்டாற்றும் ஆச்சார்யார்கள் மூலமே கற்றுத் தெளிய வேண்டும். அது விடுத்து, புராண நிகழ்வுகளை மேலோட்டமாக அணுகுவது நுனிப் புல் மேய்வதை ஒக்கும்.

கண்ணப்பர் வரலாறில் உள்ள சாரம் யாது எனில் 'இறை வழிபாட்டில் அன்பே பிரதானம். ஆச்சாரமும் நெறிமுறைகளும் அவசியமே. ஆனால் அவையால் மட்டும் வழிபாடு முழுமை பெறுவதில்லை. ஆச்சாரம் மிகுந்த வழிபாடு நாளடைவில் அன்பு வழிபாடாக பரிணாமம் பெறுகிறது. விதி முறைகள் வழிபாட்டின் தொடக்க நிலை; அன்பே அதன் இறுதி நோக்கம்'.

கண்ணப்பர் தன்னலமில்லா அன்பின் உறைவிடம். அன்பின் வெள்ளமான அப்பெருந்தகையுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதோ? அவ்வன்பில் கோடியில் ஒரு பங்கு வாய்ப்பினும் நாம் உய்வு பெறுவது உறுதி. இறைவனுக்கு கண்களை அகழ்ந்து அளிக்க நம்மால் ஆகுமா ? 'ஊக்கமது கைவிடேல்' என்னும் ஆத்திச்சூடி வாசகத்திற்கு 'ஊக்கத்தை தரும் மதுவை கைவிடேல்' என்றா பொருள் கொள்வது?

அடியவரை ஆட்கொள்ள எண்ணற்ற எளிய முறைகள் இருக்க, இக்கடுமையான முறையை சிவப்பரம்பொருள் தேர்ந்தெடுக்க 'வேடர் மரபின் காரணமாக அகிம்சையை பின்பற்ற முடியாத கண்ணப்பரின் சூழலும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்' என்பதும் சிந்திக்க வேண்டிய மற்றொரு கோணம்.

இந்து தர்மத்தின் ஞானிகள் - அருளாளர்கள் - ஆச்சாரியர்கள் அனைவரும் ஏக மனதாக, ஒருமித்தக் கருத்துடன் புலால் உணவை அறவே தவிர்க்குமாறு அறிவுறுத்தி வந்துள்ளனர். விதிவிலக்குகள் விதிகள் ஆகிவிடாது. தர்மமாகிய விதிகளை பின்பற்றுவோம். விதி விலக்கான நிகழ்வுகளை முறையாகப் புரிந்து கொள்வோம்!!

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிருந்தாவனம் (காங்கேயநல்லூர்)

வாரியார் சுவாமிகள் பிறவாமையை பெற்று அருளிய தினம் 7 - 11 - 93. சொற்பொழிவின் பொருட்டு லண்டன் சென்று இருந்த சுவாமிகள் விமானம் மூலம் மும்பையை அடைந்தார். பின்பு, மற்றொரு விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னைக்கு வருகை தரும் வேளையில், சுவாமிகளின் ஆன்மாவை பரமபதியான குமரவேள் (ஆகாயத்தில் பயணிக்கும் பொழுதே) தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டருளினார்.

தொண்டு; ஒழுக்கம்; பக்தி; நியமம்; புலமை; தியாகம்; ஈகை இவை அனைத்திலும் மிகவும் உயர்ந்து விளங்கிய தன்மையால், விண்வெளியில் உயரப் பறந்து கொண்டிருக்கும் நிலையில் வாரியார் சுவாமிகளை குமரக் கடவுள் ஆட்கொண்டார் போலும்! தொண்டால் பழுத்த உத்தம சீலரின் புனித உடலை, சுவாமிகளின் தலமான காங்கேய நல்லூருக்கு எடுத்துச் சென்றனர்.

காங்கேய நல்லூர் முருகப் பெருமானின் ஆலயத்துக்கு நேர் எதிரில், சுவாமிகளுக்கு சமாதிக் கோயில் எழுப்பி, அதில் சுவாமிகளின் புனித உடலைக் கோயில் கொள்ளச் செய்தனர். மிக அழகிய முறையில் அமையப் பெற்றுள்ளது வாரியார் பெருமானின் பிருந்தாவனம். இக்கோயிலில் சுவாமிகளின் திருவுருவம் தத்ரூபமாக வடிக்கப் பட்டுள்ளது.

நேரில் சுவாமிகளை தரிசிப்பதைப் போன்ற உணர்வை சர்வ நிச்சயமாய் ஏற்படுத்தும். அதீத சாந்தம் நிறைந்த, அதே கனிவான புன்னகையுடன் சுவாமிகள் இக்கோயிலில் அருள் புரிந்து கொண்டு இருக்கிறார். அடியவர் வழிபாடு இந்து தர்மத்தில் மிகமுக்கிய இடம் பெறுகிறது. அடியவர் வழிபாடு இறை வழிபாட்டை விட சிறப்புப் பொருந்தியது என்று குறிக்கிறார் திருமூலர்.

சுவாமிகளின் அவதாரத் தலம் காங்கேய நல்லூர். இத்தலத்தில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானின் ஆலயத்துக்கு எண்ணற்ற திருப்பணிகளை சுவாமிகள் புரிந்துள்ளார். இத்தலத்தில் வசித்து வரும் அனைத்து குடும்பங்களும் சுவாமிகளை குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். சுவாமிகள் சிறுவயதில் வசித்த வீடு தற்பொழுது நினைவாலயமாக மாற்றப் பட்டுள்ளது.

காங்கேயநல்லூரில் உறையும் முருகப் பெருமானின் ஆலயத்தையும், அதன் நேரெதிரில் வீற்றிருந்து அருளும் பரம குருநாதரான வாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தையும், கட்டாயம் தரிசித்து வினைகள் நீங்கப் பெறுவோம்.


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
விநாயகர் அகவல் (ஔவையார் அருளியது)

ஒரு சமயம், ஔவையார் ஆனைமுகக் கடவுளைப் பூஜித்துக் கொண்டு இருந்தார். அவ்வேளையில், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகாய மார்கமாக கயிலை மலைக்கு ஏகுவதைக் கண்னுற்றார். சுந்தரர், தன் அவதார நோக்கம் நிறைவுற்றதால், சிவபெருமான் ஏவலால் தம்மை அழைப்பிக்கும் பொருட்டு வந்த வெள்ளை யானையின் மீது ஆரோகணித்து, கயிலையம் பதிக்கு சென்று கொண்டிருந்தார்.


ஔவை பிராட்டி 'கயிலை மலைக்கு முன்னமே சென்று, சுந்தரருக்கு சிறப்பான வரவேற்பு புரிதல் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டார். பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.


புன்முறுவல் பூத்த ஸ்ரீகணேச மூர்த்தி 'ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை புரிவாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார். இத்தருணத்தில் ஔவையார் பாடி அருளியது தான் 'விநாயகர் அகவல்' என்னும் ஒப்பற்ற பாடல் தொகுப்பு. 72 வரிகளைக் கொண்டது. பாராயணம் புரிய மிகவும் எளிதானது.


அகவல் துதியால் பெரிதும் மகிழ்ந்த விநாயகக் கடவுள், தன் துதிக்கையால் ஔவையைப் பற்றித் தூக்கி, ஒரு நொடியில் கயிலை மலையில் சேர்ப்பித்து அருளினார். இந்நிகழ்வு நடந்தேறி வெகுநேரம் சென்ற பின்பே, சுந்தர மூர்த்தி சுவாமிகள் கயிலை மலை ஏகினார். ஔவை பிராட்டியும் வரவேற்றுப் பேருவகை கொண்டார். முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ?


'வி' நாயகன்' என்னும் பதம் 'தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத' பரம்பொருளின் தன்மையைக் குறிக்கும். அனைத்து வழிபாடுகளும் - யாகங்களும் - பூஜைகளும் இப்பெருமானின் ஆசியோடு அன்றோ தொடங்கப் பெறுகிறது! அனைத்து தொடக்கங்களின் தொடக்கமும் இப்பெருமான் அன்றோ!!


ஒரு ஆன்மா முக்தி நிலையை அடைய, ஆறு சக்கரங்களை கடந்து சகஸ்ராரம் என்னும் ஏழாம் சக்கரத்தை அடைதல் வேண்டும். முதல் சக்கரமான மூலாதாரத்தின் உபாசன தெய்வம் 'ஸ்ரீவிநாயக மூர்த்தி'. 'சைவமோ - வைணவமோ' விநாயகக் கடவுளின் திருவடி தொழுதால், ஒரு நொடியில் நம்மை முக்தி நிலையான 'கைலாயம் - வைகுந்தம்' முதலிய பதங்களில் சேர்ப்பித்து அருளுவார்.


விநாயகர் அகவலைப் பாராயணம் செய்வோம். ஆனைமுக இறைவனின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.
திருநாரையூர் - பொல்லா பிள்ளையார் (நம்பி ஆண்டார் நம்பி வணங்கிய ஸ்ரீவிநாயகர்)

திருநாரையூர் என்னும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் சிதம்பரம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விநாயகப் பெருமான் 'பொல்லாப் பிள்ளையார்' என்னும் திருநாமம் கொண்டு எழுந்தருளி உள்ளார். 'பொல்லா' என்னும் பதம் 'உளியால் செதுக்கப் படாத' தன்மையைக் குறிக்கும். சுயம்பு மூர்த்தி இப்பெருமான்.

இத்தலத்தில் 'நம்பி ஆண்டார் நம்பி' என்பார் வாழ்ந்து வந்தார். பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல் பதினோரு திருமுறைகள் வரைத் தொகுத்த அருளாளர். பதினோராம் திருமுறையின் சில தொகுப்புகளுக்கு இவர் ஆசிரியரும் கூட. திருநாரையூரில் உறையும் 'பொல்லாப் பிள்ளையார்' இவரின் குருவாக அமைந்தது ஒரு சுவையான வரலாறு.

நம்பிக்கு அப்பொழுது பள்ளிப் பருவம். நம்பியின் தந்தை அர்ச்சகராகத் தொண்டு புரிந்து வந்தார். ஒரு முறை, தந்தைக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால், நம்பி திருக்கோயிலுக்கு நிவேதன உணவை எடுத்துச் சென்றார். 'பொல்லாப் பிள்ளையார்' சந்நிதி முன்பு வைத்தார். பெருமான் உண்மையில் நிவேதன உணவை உட்கொள்வார் என்று அவரின் பிஞ்சு உள்ளம் நம்பியது.

ஆனால் நம்பியின் எண்ணமோ ஈடேறவில்லை. பெருமான் நிவேதன உணவை ஏற்காதது கண்டு நம்பி பதறித் துடித்தார். பெரும் தவறு இழைத்து விட்டதாக எண்ணினார். தந்தையின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்றும் அஞ்சினார். தன் இன்னுயிரை போக்கும் எண்ணத்தில், பெருமானின் திருவடியில் தலையை மோதிக் கொள்ளத் துவங்கினார்.

உண்மை அன்புக்கும் பக்திக்கும் மட்டுமே அகப்படும் பரம்பொருளான ஸ்ரீவிநாயகப் பெருமான், தன் விக்கிரக நிலையில் இருந்து நீங்கி, ஸ்தூல வடிவில் திருக்காட்சி அளித்து, நம்பியை தடுத்து ஆட்கொண்டார். நம்பி நேரில் காண, நிவேதன உணவை உண்டு அருளினார். நம்பியும் பெருமகிழ்வு கொண்டு வீடு திரும்பினார். நம்பியின் தந்தையோ 'பிள்ளையின் கூற்றை' அறவே நம்ப மறுத்தார்.

மறுநாள், பக்தனான நம்பியின் கூற்றை மெய்ப்பிக்க, பெருமான் நம்பியின் தந்தையும் காணும் படி, நிவேதன உணவை உட்கொண்டு அருளினார். மேலும் நம்பியின் வேண்டுகோளுக்கு இணங்க, நம்பியை சீடனாகவும் ஏற்று அருளினார். இம்மூர்த்தியே பின்னாளில் 'தேவாரப் பதிகங்கள் அனைத்தும் சிதம்பரம் திருக்கோயிலில், திருக்காப்பிட்ட ஒரு அறையில் உள்ளது' என்று நம்பி ஆண்டார் நம்பிக்கு உணர்த்தி அருளியவர்.

திருநாரையூர் தலம் சென்று 'பொல்லாப் பிள்ளையாரை' தரிசித்து உய்வு பெறுவோம்.
புராணங்களை இயற்ற வேத வியாசருக்கு அருளிய ஸ்ரீவிநாயகர் (விநாயகர் புராணம் விளக்கும் சக்தி வாய்ந்த 16 திருநாமங்கள்)

பதிணென் புராணங்களும் ஆதியில் சிவபெருமானால் நந்திதேவருக்கு உபதேசிக்கப் பட்டது. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு உபதேசித்தார். சனத்குமார முனிவரிடம் இருந்து வேத வியாசர் புராணங்கள் யாவையும் உபதேசமாகப் பெற்றார். பின்னர் புவியில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், 18 புராணங்களையும் எழுத்து வடிவில் சுலோகங்களாக இயற்றும் எண்ணம் கொண்டார்.

புராணங்களை எழுத முனைந்த வியாசரின் மனதில் பெரும் குழப்பம் பரவத் தொடங்கியது. புராண நிகழ்வுகள் அனைத்தும் அறிந்திருந்தும் ஒரு சுலோகம் கூட முழுமையாக இயற்ற முடியாத நிலை உருவானது. பணியின் தொடக்கத்திலேயே இவ்வித விக்கினம் தோன்றியதால், பிரமலோகம் சென்று நான்முகனிடம் 'இந்நிலை உருவாகக் காரணம் யாது' என வினவினார்.

பிரமன் வியாசரிடம் 'முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஆசி பெறாது தொடங்கிய காரணத்தால் உம் பணியில் இவ்விதம் விக்கினம் உருவானது' என்று விளக்கினார். மேலும், 'ஸ்ரீகணேசரை வணங்காது கற்ப கோடி காலம் முயன்றாலும் ஒரு பாடலைக் கூட புனைய இயலாது' என்றும் அறிவுறுத்தினார்.

வியாசருக்கு ஸ்ரீவிநாயகரை மகிழ்விக்கும் முக்கிய திருநாமங்கள் அடங்கிய மந்திரத்தையும் உபதேசித்தார் நான்முகன். பூலோகம் திரும்பிய வேத வியாசர் அம்மந்திரங்களால் ஸ்ரீவிநாயகரை துதித்து, 12 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். வியாசரின் தவத்துக்கு மகிழ்ந்து கோடி சூர்ய பிரகாசமாய் திருக்காட்சி அளித்து அருளினார் ஸ்ரீவிநாயக மூர்த்தி.

பணிந்து போற்றிய வியாசருக்கு ஆசியளித்து, புராணங்களை இயற்றும் வல்லமையையும் அளித்து அருளினார் ஆனைமுகக் கடவுள். வியாசர் துதித்த ஸ்ரீவிநாயகரின் 16 திருநாமங்கள் மிகவும் சக்தி பொருந்தியவை. அனுதினமும் இம்மந்திரங்களால் ஆனைமுகக் கடவுளை துதித்து, அப்பெருமானின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.

1. ஓம் சுமூகாய நம;
2. ஓம் ஏகதந்தாய நம;
3. ஓம் கபிலாய நம;
4. ஓம் கஜகர்ணகாய நம;
5. ஓம் லம்போதராய நம;
6. ஓம் விநாயகாய நம;
7. ஓம் விக்கினராஜாய நம;
8. ஓம் கணாத்பதியே நம;
9. ஓம் தூமகேதவே நம;
10. ஓம் கணாத்யஷாய நம;
11. ஓம் பாலசந்திராய நம;
12. ஓம் கஜானனாய நம;
13. ஓம் வக்ர துண்டாய நம;
14. ஓம் சூர்ப்பகன்னாய நம;
15. ஓம் ஏரம்பாய நம;
16. ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம;

அருணகிரிநாதருக்கு அருளிய பொய்யா கணபதி {வயலூர் முருகன் திருக்கோயில்}
 திருச்சிராப்பள்ளிக்கு மிக அருகில் அமைந்துள்ளது வயலூர் என்னும் சிறப்புப் பொருந்திய தலம். முருகப் பெருமான் இத்தலத்தில் 'சுப்ரமண்ய சுவாமி' என்னும் திருநாமம் கொண்டு ஸ்ரீவள்ளி - தெய்வயானையோடு எழுந்தருளி உள்ளார். திருமுருக வாரியார் சுவாமிகளால் எண்ணற்ற திருப்பணிகள் நடந்தேறிய தலம்.
*
மூலவர் ஸ்ரீசுப்ரமண்யர் தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஞான வேலால் உருவாக்கி அருளியது இத்தல தீர்த்தமான 'சக்தி தீர்த்தம்'. இந்து சனாதன தர்மத்தின் ஒரு பிரிவான 'கௌமாரம்' என்னும் முருக வழிபாட்டு சமயத்துக்கு தனிப்பெரும் குருநாதராக விளங்குபவர் அருணகிரிநாதர். இவர் முதன் முதலில் திருப்புகழ் பாடல்களை பாடத் துவங்கிய தலம் வயலூர்.
*
இத்தலத்தில் 'பொய்யா கணபதி' என்னும் திருநாமத்துடன் விநாயகப் பெருமான் எழுந்தருளி உள்ளார். அருணகிரிநாதர், பொய்யா கணபதியைப் போற்றிப் பாடி, ஆசி பெற்ற பின்னரே, முருகக் கடவுளைப் பாடத் துவங்குகிறார். 'கைத்தல நிறை கனி' என்ற இத்திருப்புகழ் பாடல் மிகவும் பிரசித்தம்.
****
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
*
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
*
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடிசெய்த அதி தீரா
*
அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே!!!!
****
எண்ணற்ற சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள வயலூர் தலம் சென்று ஸ்ரீபொய்யா கணபதியையும், இரு தேவியரோடு அருள் புரியும் ஸ்ரீசுப்ரமண்யரையும், முருகக் கடவுள் பூஜித்த சிவலிங்கத் திருமேனியான ஆதிநாதரையும், ஆதிநாயகி அம்பிகையையும் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுவோம்.

ஸ்ரீவிநாயகர் அவதாரம் (விநாயகர் புராணம் விளக்கும் அவதார ரகசியம்

விநாயகப் பெருமான், அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்துக்கும் மூலமான பிரணவத்தின் பரிபூரண திருவடிவம். ஒரு முறை சிவபெருமானும், அம்பிகையும் திருக்கயிலை மலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்துக்கு எழுந்தருளும் பொழுது, திருச்சுவற்றில் உள்ள 'யானை வடிவ' சிற்பத்தில் இறைவன் - இறைவி' இருவரின் திருப்பார்வையும், ஒருசேரப் பதிந்தது.

அச்சிற்பத்தில் இருந்து கோடி சூர்ய பிரகாசமாய் பிரணவ ரூபரான 'ஸ்ரீகணேசர்' யானை முகம் கொண்டு வெளிப்பட்டார். இந்த அவதாரத்தையே ஸ்ரீவிநாயகரின் முதல் அவதாரமாகக் குறிக்கிறது விநாயகர் புராணம். பின் பற்பல யுகங்களில் பல்வேறு அவதாரங்களை ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு எடுத்து அருளினார் ஸ்ரீவிநாயகர் .

பின்பொரு சமயம், மூஷிகாசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமானின் இடபாகத்தில் கோயில் கொண்டருளும் அம்பிகைக்கு, திருப்புதல்வனாக மீண்டும் அவதாரம் புரிந்து அருளினார். இந்நிகழ்வு ஸ்ரீவிநாயக மூர்த்தியின் தோற்றத்தைக் குறிக்க வந்தது அன்று - 'அப்பெருமானின் எண்ணற்ற அவதாரங்களில் இதுவும் ஒன்று' என்ற புரிதல் மிக அவசியம்.

(பதினோராம் திருமுறை - ஸ்ரீவிநாயகர் இரட்டை மணி மாலை):-
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் -தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
*51 சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு (முக்கிய சிவ புராண நிகழ்வுகள்

*பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சர்வேஸ்வரரான சிவபெருமானிடம் 'பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்' வரமாகப் பெற்றான்'. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

*எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். சில தொடர் நிகழ்வுகளால், வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

*ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி, யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.

*இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் பேசுகிறது. இத்தலத்தில் 'அம்பிகை தன் தெய்வ உடலை மாய்த்துக் கொண்ட ஹோம குண்டத்தை' இன்றும் தரிசிக்கலாம். இறைவனின் கருணையால் ஆட்டின் தலையுடன் மீண்டும் உயிர்த்து எழுந்தான் தட்சன்.

*சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.

*இறைவனின் இருப்பை உணரவும், தர்மங்களை பின்பற்றவும் மறுக்கும் ஒவ்வொருவரும் தட்சனின் வடிவங்களே. ஆன்மாக்கள், முதலில் இறைவனை மறுப்பதும், அறியாமையால் எதிர்ப்பதும், பின்னர் ஞானம் பெற்றுப் பணிவதும் காலகாலமாக நடந்து வரும் போராட்டம். ஆட்டின் தலை அஞ்ஞானத்தைக் குறிப்பது. ஞானம் என்றுமே அஞ்ஞானத்தை வெல்லும் என்பது இந்நிகழ்வின் உட்குறிப்பு.

51 சக்தி பீடங்கள் (தல யாத்திரை குறித்த முக்கியத் தகவல்கள்):
 *அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த சக்தி பீடங்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. சில புராணங்கள் பீடங்களின் எண்ணிக்கை 108 என்றும், வேறு சில புராணங்கள் 51 என்றும், 64 என்றும் குறிப்பிடுகின்றன. இருப்பினும் வடமொழியில் 'அ' முதல் 'ஷ' வரையிலான 51 பீஜ அட்சரங்கள் தோன்றிய தலங்களில் விழுந்த உடற்கூறுகளே பிரதான சக்தி பீடங்களாக வழிபடப் பட்டு வருகிறது.

*மற்ற தலங்கள் உப பீடங்களாகவே அறியப்பட்டு வருகின்றன. பிரதான பீடங்களைப் பற்றிய ஆதார பூர்வமான தகவல்களை '51 அட்சர சக்தி பீடங்கள்' என்னும் நூலின் வாயிலாக அறியலாம். இவ்வரிய நூலின் ஆசிரியர் 'திரு. ஜபல்பூர் நாகராஜ் சர்மா' அவர்கள். இவர் காஞ்சி மகாப் பெரியவரின் பரிபூரண ஆசியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

*51 பீடங்களுக்கும் நேரில் சென்று தரிசித்து, அரிய பல அனுபவங்களையும் பதிவு செய்து உள்ளார் நூலின் ஆசிரியர். மேலும் தல புராணம் - மூர்த்தி; தலம்; தீர்த்தம் இவைகளின் சிறப்பு அம்சங்கள் - கல்வெட்டுச் செய்திகள் - திருக்கோயில் அமைவிடம் - செல்லும் வழி - முதலிய பல அரிய விவரங்கள் இந்நூலில் சிறப்பான முறையில் விளக்கப் பட்டுள்ளது.

*51 சக்தி பீடங்களில், பாரத நாட்டில் 43 பீடங்களும், பங்களாதேஷ் நாட்டில் 2 பீடங்களும், நேபாளத்தில் 3 பீடங்களும், திபெத்தில் 2 பீடங்களும், பாகிஸ்தானில் ஒரு பீடமும் அமைந்துள்ளது. பாரத நாட்டின் 43 பீடங்களும், இருபது மாநிலங்களில் பரந்து, நிலை கொண்டுள்ளது.

*மிகவும் சக்தி வாய்ந்த இப்பீடங்களுக்கு யாத்திரை மேற்கொள்வது, அம்பிகையின் பரிபூரணத் திருவருளைப் பெற வழி வகுக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தல யாத்திரை மேற்கொள்வோருக்கு இந்நூல் 'ஒரு உன்னதமான வரம்' என்று கூறுவது மிகையாகாது.

*(நூல்: 51 அட்சர சக்தி பீடங்கள், ஆசிரியர்: ஜபல்பூர் நாகராஜ் சர்மா, விகடன் பிரசுரம். சென்னையில் 'கிரிட்ரேடர்ஸ்' நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்).

இந்து தர்ம நுட்பங்கள் (ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுதல் - விளக்கமும் பயன்களும்):
*
ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுவதால் விளையும் நற்பயன்களை புராணங்கள் வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றன. விளக்கின் ஒளி புற இருளைப் போக்க வல்லது. திருக்கோயிலில் திருவிளக்கு ஏற்றுதல் அக இருளாகிய அறியாமையைப் போக்கி, ஞானத்தையும் வழங்க வல்லது.
*
'விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்' என்று தன் தெய்வ வாக்கால் (தேவாரத்தில்) குறிக்கிறார் திருநாவுக்கரசர்.
*
சோழ நாட்டில் அமைந்துள்ள தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்). தேவாரப் பாடல் பெற்ற இத்தல ஆலயத்தில் திருவிளக்கு ஒன்று அணையும் தருவாயில் இருக்க, அவ்விளக்கில் உள்ள நெய்யை உண்ணும் பொருட்டு வந்த எலி ஒன்றினால் திரியானது நன்கு தூண்டப் பெற்று, பிரகாசித்து ஒளிவிடத் தொடங்கியது.
*
அப்புண்ணியத்தால் அந்த எலியானது அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாய் பிறப்பெடுத்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அபுத்தி பூர்வமாய் ஏற்றிய விளக்கிற்கே இத்தகு சிறப்பு எனில், அதன் ஏற்றம் அறிந்து திருவிளக்கு ஏற்றுவோர் பெறும் பலனை சொல்லவும் வேண்டுமோ!
*
அற்புதமான இந்நிகழ்வை திருவருட்பாவில் வள்ளலாரும், தேவாரத்தில் அப்பர் சுவாமிகளும் குறித்து உள்ளனர்.
*
இராமலிங்க வள்ளலார் (திருவருட்பா):-
நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவன் ஆக்கினையே.
*
திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம்:-
திருமறைக் காடு தன்னில் நீண்டெறி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிட கணன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் -உலகமெல்லாம்
குறைவரக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.
*
இந்த மகாபலிச் சக்கரவர்த்தியிடமே 'வாமன மூர்த்தியாய்' அவதரித்த ஸ்ரீமகாவிஷ்ணு மூன்றடி மண் தானமாகக் கேட்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்துப் பின் தன் திருவடியால் மகாபலியை ஆட்கொண்டும் அருளினார்.
*
இனி ஒவ்வொரு முறை திருக்கோயிலுக்கு செல்லும் பொழுதும் (எவ்வேளை ஆயினும்), மறவாது திருவிளக்கில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவோம். அறியாமை இருள் நீங்கப் பெற்று, உள்ளொளியாகிய ஞானம் பிரகாசிக்கப் பெறுவோம்..
பத்ராசலம் ஸ்ரீசீதாராமர் திருக்கோயிலும் பக்த ராமதாசரும் (கிளியை கூண்டில் அடைத்ததால் 12 வருட சிறை தண்டனை):
*
பத்ராசலம் என்னும் பிரசித்தி பெற்ற தலம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. தென் அயோத்தி என்று அழைக்கப் பெறும் சிறப்புப் பொருந்தியது. தலத்தின் மூலவரான ஸ்ரீராமசந்திர மூர்த்தி அன்னை சீதையை மடியில் அமர்த்திய நிலையில், இலக்குவனும் உடன் இருக்க, அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
*
ஸ்ரீராமதாசர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர். 'கோல்கொண்டா' பகுதியின் மன்னன் 'தானேஷாவிடம்' பணிபுரிந்து வந்தார். மன்னனின் ஆணையால் பத்ராசலப் பகுதியின் தாசில்தாராக பொறுப்பேற்றார். அங்கு சிறிய ஆலயத்தில் ஸ்ரீசீதாராமர் எழுந்தருளி இருப்பதைக் கண்ணுற்று வருந்தினார். பெருமானுக்கு பெரியதொரு ஆலயம் புதுக்க சங்கல்பம் பூண்டார்.
*
தன் செல்வமனைத்தும் திருப்பணிக்கு அர்ப்பணித்தும், நிதி போதாத நிலை உருவாக, அத்தல மக்கள் உதவ முன்வந்தனர். தங்கள் வரிப் பணத்திலிருந்து வேண்டிய நிதியை தற்சமயம் எடுத்துக் கொள்ளுமாறும், அவ்வருட விளைச்சலுக்குப் பின் தங்கள் பங்கை கொடுத்து விடுவதாகவும் வாக்களிக்க, திருப்பணியும் இனிதே நடந்தேறியது.
*
மன்னன் செய்தி அறிந்து வெகுண்டு, ஸ்ரீராமதாசரை கைது செய்து, சித்திரவதை செய்ய ஆணையிட்டான். சிறையில் அனுதினமும் கீர்த்தனைகள் புனைந்து, பெருமானிடம் தன்னைக் காத்தருளுமாறு கண்ணீர் மல்க முறையிடுவார் ஸ்ரீராமதாசர். 12 ஆண்டுகள் இதே முறையில் கழிய, ஸ்ரீராமர் இலக்குவனுடன் இரு வீரர்களின் உருக் கொண்டு அரண்மனையில் தோன்றி அருளினார்.
*
மன்னனிடம், ஸ்ரீராமதாசர் எடுத்த செல்வத்தை வட்டியுடன் செலுத்தி, ரசீதும் பெற்று மறைந்தார். இன்றும் பெருமான் செலுத்திய பொன் நாணயங்களை திருக்கோயிலில் தரிசிக்கலாம். பின்னர் ஸ்ரீராமர் சிறையில் ராமதாசருக்கு காட்சி அளித்து, ரசீதையும் சேர்ப்பித்தார். ராமதாசர் விழி நீர் மல்க, பன்முறை பெருமானைப் பணிந்து போற்றினார்.
*
'12 வருடங்களாக மனமுருக அழைத்தும், தன்னைக் காத்தருள வராததன் காரணம் யாது?' என பணிவுடன் வினவினார். 'முற்பிறவியில் ஒரு கிளியை கூண்டில் பல காலம் அடைத்து வைத்த பாவத்தால், இப்பிறவியில் ஸ்ரீராமதாசர் 12 வருடங்கள் சிறையில் துன்புறும் நிலை எய்தியது' என்று விளக்கியருளினார் ஸ்ரீராமர். ராமதாசர் சிறையிருந்த கோல்கொண்டா கோட்டையை இன்றும் தரிசிக்கலாம்.
*
இந்நிகழ்வில் இருந்து ராம பக்தியை மட்டும் அல்லாது, அகிம்சையையும் பாடமாகக் கற்போம். பரம பக்தரான ஸ்ரீராமதாசரையும் கர்மவினை விடவில்லை. உயிரினங்களை அடைத்து வைப்பது கொடிய பாவம். எனில், உயிரினங்களை வதைத்து உட்கொள்வது எவ்வளவு பாவம் என்று உணர்தல் மிகவும் அவசியம். இறைவன், பக்தியோடு அகிம்சையையும் நிச்சயம் எதிர்பார்க்கிறான்