திங்கள், 16 மே, 2022

வேதங்கள்


வேதம் என்ற சொல் ' வித்' என்ற தாதுவில் இருந்து உண்டானது. இதற்கு அறிதல் என்று பொருள். இதை அறிந்து கொள்ளும் வழி வித்தை எனப்படும். வித்தையினை அறிவினால் தான் பெற முடியும் எனவேதான் வித் என்ற தாதுவிலிருந்து வேதம் ,வித்யா என்ற இரண்டு சொற்களும் உண்டாயின. இந்த
வேதங்கள் என்பது உலகை படைத்து காத்து ரட்சிக்கும் ஈசனின் மூச்சுக் காற்றாக புராணங்கள் கூறுகின்றன.
பரம்பொருளை  அறியும் பேறறிவாக வேதங்கள் திகழ்கின்றது

பரம்பொருளில் இருந்து இடைவெளி வெளிப்பட்டது; ஆகாசம் தோன்றியது; அதிலிருந்து காற்று வந்தது . அந்தக் காற்றானது பொருள் படைத்த ஒலி வடிவைப் பெற்று, உலகின் காதுகளில் வந்து விழுந்தது. காதில் விழுந்த முதல் ஒலி வேதம் என்கிறது ஸனாதனம்.

வேத மந்திரங்கள் காலத்தால் அழிந்து போகாமல் இருக்க ரிஷிகள் இதனை மனனம் செய்து வழிவழியாக தங்கள் சீடர்களுக்கு கற்பித்தனர்.
சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை "ஸ்ருதி" என்றனர். வேதத்தை காது வழி கேட்டு பாடம் செய்யும் முறைக்கு அத்யயனம் என்று பெயர்.

ஆச்சாரியார் ஒரு முறை ஒரு மந்திரத்தை சொல்ல, மாணவர்கள் பத்து முறை திரும்பத்திரும்ப சொல்லி பாடம் செய்வதை திருவை சொல்லுதல் என்பார்கள்.

"ச்ரோத்ரம்" என்ற சொல்லுக்கு காது என்று பொருள்.  இப்படி வேதத்தை குருவிடமிருந்து காது வழியாக கேட்டு அத்யயனம் செய்தவர்களுக்கு "ச்ரெளதிகள்" என்று பெயர்.

வேதத்தை கற்பிக்கும் குருவானவர் நல்ல ஆச்சாரம் உள்ளவராகவும் வேத லக்ஷணம் ,அர்த்தம், ஆகியவற்றினை நன்கு தெரிந்தவராகவும், நன்கு புரியும்படி கற்பிப்பவராகவும், வேதத்தில் பக்தியும் ,சிரத்தையும் உள்ளவராகவும் இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் மாணவன் ஆசாரம் உள்ளவனாகவும் சோம்பல் இன்றி இருப்பவனாகவும் வேதம் மற்றும் குருவிடம் மிகுந்த பக்தி உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பவை வேதம் கற்பதற்குண்டான நியமங்கள்.

தொடர்வோம்..........

அறுபத்து மூன்று நாயன்மார்கள் 5 - ஆனாயநாயனார்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் தொடர் பதிவு..

5 - ஆனாயநாயனார்
 



பெயர் : ஆனாயர்
குலம்: இடையர்
பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம் :திருமங்கலம்
முக்தித் தலம் :திருமங்கலம்

வரலாறு சுருக்கம்:

“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்”
–திருத்தொண்டத் தொகை

சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது.அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும்
சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேசாதவர்....

தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.

தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.இப்படி நியதியாக ஒழுகுபவர் ஒரு நாள் தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில்
திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன் மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழ சென்றார்.

அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றையிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டு போய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்து கொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும் படி காட்டுக்குச் சென்ற பொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனை போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலே போய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார்.

அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. இடையர்கள் சூழப்பட்ட
பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் ஆனாயர் அடைந்து உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன.

எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக் கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.

விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து,

"மெய்யன்பனே; நம்முடைய உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்"
-என்று திருவாய்மலர்ந்தருளி, ஈசன் அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

தொடரும்.....

ஆத்மா

ஆத்மாவை உணருதல். எப்படி என்று பார்ப்போமா.


பரபிரம்மத்தை உணறதுலே எல்லா மனித பிறவியின் நோக்கம்.
எல்லாமே அவன் என்கின்ற எண்ணம் வந்து விட்டால் எதற்கு மன போராட்டம். மன பக்குவம் தான் தேடலில் ஆரம்பம். எதற்காக வேஷம்? நாம், நாமாக இருப்பதே நலம். அதற்கு சாட்சி நம் மனம் தானே. நல்ல மனதுடன் பிறரோடு பழகும் போது மனதில் மகிழ்ச்சி உருவாகும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் மனநிறைவு உருவாகும். அந்த மனநிறைவு தான் உடலில் புது சக்தியை உருவாக்கும். அந்த மந்திர சக்தி தான் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும்.
நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு அது தெரிய வரும்.


மனித உடல் இறைவனின் வடிவம். அதை இறைவனின் கோவிலாக மாற்றுவதும், வெறும் கூடாகவே வைத்திருப்பதும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் இதை கோவிலாக மாற்றுவதற்கான எளிதான முறையை சொல்வது தான் நமது நோக்கம். இதற்கு மிகவும் எளிதான வழியாக இருப்பது தான் இறைவனுடைய சிந்தனை. அதாவது மனதை ஆசை, பொறாமை போன்ற எதற்கும் உதவாத எண்ணங்களில் இருந்து மாற்றி இறைவனை தியானிப்பது.
மனதுக்கு திடம் கொடுப்பவை – மன திறம் – மந்திரம் என்பது. சில மந்திரங்களை நாம் குறிப்பிட்ட அதிர்வில் ஜெபிக்க, அந்த சக்தி நம் செயல்களை முறைப்படுத்தி, நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.


ஒவ்வொருவருக்கும் அவரவர் மூலாதாரத்தில் ஒரு மிகப் பெரும் சக்தி சுருண்டு கிடக்கிறது. முறையான மூச்சுப் பயிற்சியினாலும், மந்திர அதிர்வாலும், இந்த சக்தி தூண்டப்பட்டு மேல் நோக்கி எழும்பும். இந்த நிலையை அடைந்தவருக்கு அவர் எடுக்கும் முயற்சியில் தோல்வியே கிடையாது எனலாம். நாம் இந்த பிறவியில் செய்யும் நன்மை, தீமை எல்லாமே நம் மனதில் பதிவாகிறது இல்லையா? இதை யாரும் மறுக்க முடியாது. இறந்த பிறகும், இந்த நினைவடுக்குகள் அப்படியே தான் நம் ஆன்மாவில் இருக்கின்றன. நாம் அடுத்த பிறவி எடுக்கும் போது நமது நல்ல கெட்ட பலன்களுக்கு ஏற்ப நம் எண்ணங்களை, செயல்களை மனது தீர்மானித்து நம்மை செயல்பட வைக்கிறது.
நவ கிரகங்கள் நம் ஜாதக கட்டங்களில் உட்கார்வதும் அதற்க்கேற்ப்பத்தான். நம் தலை எழுத்து அல்லது விதி எனப்படுவது, இவ்வாறாக எழுதப்படுகிறது.


மிக நேர்த்தியாக முத்துக்கள், ஒரு கயிற்றில் கோர்க்கப்பட்டு இருக்கும் ஒரு முத்து மாலை ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் கோர்க்கப்பட்டுள்ள கயிறு நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் கயிறு நிச்சயம் இருக்கிறது இல்லையா? அந்த கயிறு போன்றது தான் நம் ஆத்மா. முத்துக்கள், நம் எண்ணங்கள் போன்றவை. ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியில் நம் ஆத்மாவை நம்மால் உணர முடியும். அப்படி என்றால், என்ன அர்த்தம் என்று உங்கள் மனம் கேட்கிறதா.


ஒரு எண்ணத்திற்கும், இன்னொரு எண்ணத்திற்கும் இடைவெளி தேவை. அல்லது எண்ணங்களே இல்லாத நிலையை அதிகமாக்க வேண்டும். அந்த நிலை


தான் – நம்மை பரவசப்படுத்தும் நிலை, பரமாத்மா குடிகொண்டுள்ள பேரானந்தமான ஆனந்த நிலை.

பூஜா சங்கல்பம் மந்திரம் பொருள்

பூஜா சங்கல்பம் மந்திரம் பொருள்




மமோபாத்த ஸமஸ்த#- என்னால் அடையப்பெற்ற அனைத்து, #துரித க்ஷயத்வாரா# – பாபங்களின் நிவர்த்தி வாயிலாகவும், #ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்# – இறைவனின் ப்ரீதிக்காகவும், #சுபே சோபனே முஹூர்த்தே# – சுபமான இந் நல்வேளையில், #அத்ய ப்ரஹ்மண# – இன்றைய பிரம்மாவின், #த்விதீய பரார்த்தே# – பிரம்மாவின் ஆயுளில் இரண்டாம் பாகம், #ஸ்வேத வராஹ கல்பே# – ஸ்வேத வராஹ கல்பத்தின், #வைவஸ்வத மன்வந்தரே# – வைவஸ்வத மன்வந்தரத்தின், #அஷ்டாவிம் சதிதமே# – இருபத்தெட்டாவது, #கலியுகே பிரதமே பாதே# – கலியுகத்தின் முதல் கால் பாகத்தில், #ஜம்பூ த்வீபே# – ஜம்பூ த்வீபத்தில், #பாரத வர்ஷே# – பாரத வர்ஷத்தில், #பரத கண்டே# – பரத கண்டத்தில், #மேரோர் தக்ஷிணே பார்ஸ்வே# – மஹா மேருவாகிய ஹிமயத்தின் தென்பக்கம், #சகாப்தே# – சக என்னும் ஆண்டு கணக்கின்படி, #அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே# – நமது தற்கால வழக்கிலுள்ள, #ப்ரபவாதி ஷஷ்டி ஸமவத்ஸரானாம் மத்யே# – பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளினிடையே, #அமுக ஸம்வத்ஸரே# – இன்ன பெயருள்ள ஆண்டின், #அமுக அயனே# – இன்ன அயனத்தில், #அமுக ருதௌ# – இன்ன ருதுவில், #அமுக மாசே# – இன்ன மாதத்தில், #அமுக பக்ஷே# – இன்ன பக்ஷத்தில் (பிறையில்), #ஸுபதிதௌ# – சுபதிதி, #அமுக வாசர யுக்தாயாம்# – இன்ன கிழமையும், #அமுக நக்ஷத்ர யுக்தாயாம்# – இன்ன நக்ஷத்திரமும், #சுபயோக சுபகரன# – நல்யோகமும் கரணமும், #விசேஷேன விசிஷ்டாயாம்# – மிக விசேஷமும், #அஸ்யாம் ஸுபதிதௌ# – கூடிய நல்ல நாளில், #ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம்# – நாராயண ப்ரீதிக்காகவும் (பரமேஸ்வரன் மற்றமுள்ள அம்பிகை போன்ற தங்களின் உபாசனைக் கடவுளர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்) #அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்# – நமது குடும்பத்தினரின், #க்ஷேம ச்தைர்ய தைர்ய# – க்ஷேமம், ஸ்திரத் தன்மை, தைர்யம், #வீர்ய விஜய ஆயுளாரோக்ய# – வீரம், வெற்றி வியாதியற்ற ஆயுளும், #அஷ்ட ஐஸ்வர்ய# – எட்டு செல்வங்களும், #அபிவ்ருத்யர்தம்# – பெருகும் பொருட்டும், #ஸமஸ்த மங்களா வாப்யர்தம்# – அனைத்து மங்களங்களும் கிடைக்கும் பொருட்டு, #ஸமஸ்த துரிதோப சாந்த்யர்தம்# – அனைத்து பாபங்களின் நிவர்த்திக்காகவும், #தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித# – றம், பொருள், இன்பம், வீடு, நால்வகை, #புருஷார்த்த சித்யர்த்தம்# – பேறுகள் கிட்டவும், #யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி# – சக்திக்கேற்ப, தியானம் ஆவாஹனம் கூடிய, #பூஜாம் கரிஷ்யே# – பூஜையை செய்கிறேன், #பூஜாம் கரிஷ்யாம்# – பூஜையை செய்கிறோம்.

ஸ்ரீமத் பாகவதம் – பரீக்ஷித் சரித்திரம்

ஸ்ரீமத் பாகவதம் – பரீக்ஷித் சரித்திரம் – அஷ்டம ஸ்கந்தத்தின் கதை என்ன?

முதலை வாயில் அகப்பட்டு ‘ஆதிமூலமே’ என்று கதறிய கஜேந்திரனைப் பகவான் காப்பாற்றியதும், கூர்மம் முதலிய அவதாரங்கள் செய்து தேவதைகளுக்கு அமிர்தபானம் கிடைக்கும் படி பகவான் செய்ததும், மஹாபலியை வாமனராகி மூன்றடி மண் யாசித்துத் திருவிக்கிரமராகி உலகை இரண்டடியால் அளந்து அவனைப் பாதாள லோகம் போகும் படி செய்து தேவர்களுக்குப் பகவான் ஸஹாயம் செய்ததும், மத்ஸ்யாவதாரம் செய்து பகவான் ஹயக்ரீவாசுரனைக் கொன்று அவன் திருடிச் சென்ற வேதங்களைப் பிரம்மாவிடம் ஒப்புவிக்கு முன் பிரளயோதகத்தில் வைவஸ்வத மனுவிற்கு ஞானோபதேசம் செய்ததுமே எட்டாம் ஸ்கந்தத்தில் அடங்கிய கதை.


ஸ்ரீமத் பாகவதம் – மூன்றாவது ஸ்கந்தம்

ஸ்ரீமத் பாகவதம் – 3வது ஸ்கந்தம்


– விதுரருக்கு மைத்திரேயர் இருக்கும் இடம், அவரது சிறப்பு முதலியன எவ்வாறு தெரியவந்தது?

விதுரர் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு வருகையில் யமுனா நதிக்கரையில் பதரிகாசிரமம் நோக்கிப் போய்க் கொண்டிருந்த பகவத் பக்தரான உத்தவ சுவாமியைக் கண்டு இருவரும் ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு க்ஷேம சமாசாரங்களை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது உத்தவரிடமிருந்து யாதவர்கள் ரிஷி சாபத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்ததும், முன் ஜன்மத்தில் வழியாக இருந்து அந்த ஜன்மத்தில் வேடனாக இருந்த ஒருவனது அம்பால் பகவான் பரமபதம் சென்றதையும் கேள்விப்பட்டு மிகுந்த துக்கமடைந்து பகவான் உலகம் விட்டுப் போகையில் சொல்லிப் போன ரகசியாதிகளைத் தனக்குச் சொல்லும்படி உத்தவரை விதுரர் கேட்டார். அவர் தாம் ஒரு விரதத்தோடு பகவான் உத்திரவின்படி சீக்கிரம் பதரிகாசிரமம் போய்ச் சேர வேண்டும் என்றும், தனக்கு ரகசியங்களைப் பகவான் பரமபதம் போகும் தருணத்தில் உபதேசிக்குங்கால் மைத்திரேயர் என்ற மகாமுனியும் அங்கு வந்திருந்தார் என்றும், பகவான் அந்தக் காலத்தில் தன்னையும் விதுரரயும்தான் ஞாபகத்தில் வைத்திருந்தார் என்றும், அப்பொழுது விதுரர் இல்லாமையால் அவருக்குத் தாம் எடுத்துச் சொல்லிய ரகசியங்களை ஆதியோடந்தமாகச் சொல்ல வேண்டும் என்று மைத்திரேயருக்குப் பகவான் உத்தரவு கொடுத்திருக்கிறார் என்றும், மைத்திரேயர் அப்பொழுது ஹரித்வாரத்தில் இருக்கிறார் என்றும், முக்கிய விஷயங்களை உத்தவர் விதுரருக்கு எடுத்துரைத்துப் பதரிகாசிரமம் சென்றார். விதுரருக்குப் பகவான் மேல் பக்தி அதிகரிக்க மைத்திரேயரைச் சீக்கிரத்தில் சென்று அடைந்தார்.

ஞாயிறு, 15 மே, 2022

சிவமே தவம் தவம் சிவம்

சிவமே தவம்..... தவமே சிவம்.....


பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி?.
 ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்...

கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயம் அல்ல.

கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்து உள்ளார்கள்.

சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக் கூடிய மூலவராக உருவாகும் கற்  சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது.

அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழி முறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.

சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன்  ஸ்தபதி அவர்கள் கூறும்போது “சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின் படி உருவாகும்  கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில்  வைக்கப்படுகிறது.

அதாவது தாமிரபரணி போல 3 புண்ணிய நதிகளின்  நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில்  வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட  சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி  ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய  பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை  வெளியே விடும்.

இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.

இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட  சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும்  கேட்டை உருவாக்கி விடும்.

அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.

48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தானிய வாசத்தில் வைக்கிறார்கள்.

அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.

இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி  மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன்  நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட  சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.

ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.

பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.

இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா  மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து  அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

இந்த ஆறு  வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது  ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால்  ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது.

எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.

சரி… ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது  ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம்  குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.

நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை  தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும்  வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.

தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக் கொடுத்து விடும்.

அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து  விடும். அதைப் போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான  நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.

அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.

6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள்,  பிரதிஷ்டை செய்யப் போகும் இரண்டு நாளுக்கு முன்னர்தான் திறக்கப்படும்.

இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப் பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம்,  தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம்  இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள்.

இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி
 வாசத்தில் சிலையை வைக்கிறார்கள்.

பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம்  மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை  பெறுகிறது.

புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும்  நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது.  நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள்  சிலையை வைத்து விடுகிறார்கள்.

இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.

தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது.

அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது  வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால்  ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும் இந்த  கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு  மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு  முழுமையான கடவுளாக.....நமசிவாய
"சிவாலயம் செல்வோம்" "சிவனருள் பெறுவோம்"

அனுபவபட்ட பின்பே அனைத்தும்  விளங்கும் அவனருளாலே என்று

சித்திரம், தியானமும்

சித்தரும்‌ தியானமும்

அந்த ஊருக்கு குருபாதம் என்ற சாது ஒருவர் வந்திருந்தார். ஊரின் வடகிழக்கு பகுதியில் குளக்கரை அருகில் உள்ள அரசமரத்தடியில் விநாயகர் கோயில் திண்ணையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு யோசனை செய்து கொண்டு இருந்தார்.

அவர் இமயமலை அடிவாரத்தில் இருந்து போன வாரம் இறுதியில் இங்கு வந்தவர்.

மக்கள் அவரிடம் வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.

அன்று அம்மாவாசை நள்ளிரவில் காலில் யாரோ ஒருவர் மிதித்து சறுக்கி அய்யோ யம்மா என்று கத்திக் கொண்டே கீழே விழுந்தார். குரு பாதம் கால் மிதிபட்டதும் வலி தாங்காமல் ராமா என்று கத்திக் கொண்டே எழுந்தார் தூரத்தில் எரியும் அந்த விளக்கின் ஒளி அவன் முகத்தில் பட்டு மங்களாக தெரிந்தது கறுத்த முகம் மேல் சட்டை இல்லை வியர்வை ஈரம். மாட்டு மாமிசம் உண்ணும் நபர் மீது இருந்து வரும் ஒரு வித வாசனை . மேலும் இரண்டு சமீபத்தில் பெண் போகம் செய்ததற்கான வாசனையும் இணைந்து ஆண்மை கலந்த ஒரு வாடையுடனும் பரந்த தோள்களுடனும் உள்ள ஒருவன் கீழே கிடந்தான் .

அய்யோ வலிக்குதே என்று முனகிக்கொண்டே இருந்ததால் . கையில் இருந்த டார்ச் லைட்டை முகத்தில் அடித்தார் குரு பாதம்.

கீழே இருந்தவன் சாமி தேள் கொட்டிவிட்டது காப்பாற்றுங்கள் என்று கூறினான்

திருடனுக்கு தேள் கொட்டியது போல்.

ஆம் அவன் பெயர் கருணாகரன் சிறுவயதில் இருந்தே திருட்டு வேலை மட்டுமே.

குரு பாதம் கனிவுடன் அவனுக்கு மருந்து கொடுத்து அவனுக்கு தனக்கு அருகில் உறங்க இடமும் தந்தார்.

அடுத்த நாள் காலை பொன் தகடுகளால் வேய்ந்தது போல ஏரியின் நீர் மீது பொன் ஒளி பரப்பிக் கொண்டு சூரியன் வரத்துவங்கிறது.

கருணாகரன் எழுந்து ஐயா நான் யோசித்து பார்த்தேன் சிறிது காலம் உங்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசை. நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டான்.

குரு பாதம் சரி இரு என்றார்.

உடனே காலை குளித்து விட்டு குரு பாதம் முன்பு அமர்ந்தான் தியானம் பயிற்சி அளிக்கப்பட்டது.

கண்களை மூடி தியானத்தில் மூழ்கினான்.

உள்ளே நிலவரை மெல்லிய வெளிச்சம் விசாலமான அறை மேற் கூரைக்கு அருகில் உள்ள காற்று துவாரம் வழியாக நிலவின் ஒளி நிசப்தம் பக்கத்து அறையில் ஒடிக் கொண்டு இருக்கும் மின்விசிறி சப்தம் மட்டுமே டொடக்கு டொடக்கு என்று கேட்கிறது.

மெதுவாக நகரந்து உள்ளே போக போக ஒரு கடவுளின் விக்ரகம் அது பொன் வெள்ளி ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அழகாக இருக்கிறது. மெதுவாக கைகளை விக்ரகத்தின் மீது வைத்தவன் கொண்டு வந்த கோணியை விக்ரத்தின் மீது போர்த்தி குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு நகர்ந்தான் .
தம்பி தம்பி என்று பின்னால் இருந்து குரு பாதம் அழைக்க திடீரென தியானம் விலகி எழுந்தான் கருணாகரன்.

ஆனால் இவ்வளவு நேரம் தியானத்தில் திருட்டு வேலை செய்திருக்கிறான் அவன்.

மக்களே நாம் கூட இதை போல்தான் தியானம் என்ற பெயரில் திருட்டுக்கு ஒத்திகை பார்க்கிறோம். அதன் பெயர் தியானம் இல்லை.

சிலர் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தவுடன் நிம்மதி அமைதி வரும் என்று கூறுகின்றனர்.

ஆனால் நெரய கஷ்டம் இருந்தால் எனது அட்வைஸ் தியானம் செய்து விடாதீர்கள் . உக்காந்தா உங்க மனமே உங்களை காலி பண்ணி விடும்.

வேலை பாத்துகிட்டே இருந்தா வேதனை தெரியாது. சும்மா உக்கார்ந்தா காலி நீங்கள்

சரி அப்போ தியானம் என்பது என்ன.

முதலில் உங்கள் மனம் அடங்க வேண்டும் பிறகுதான் தியானம் என்பது என்ன என்று புரியவே துவங்கும். தியானத்தால் மனம் அடங்காது.

எவன் ஒருவன் வாழ்க்கையில் சராசரியாக சிக்கலில்லாத சுழலை அமைக்கிறானோ அவனே தியானம் செய்ய முடியும்.

இதைத்தான் யமம். நியமம். ப்ரத்யாகாரம் என்று கூறினார்கள். வள்ளலார் நித்திய கரும விதி என்று கூறினார். இங்கு உள்ளவர்கள் காலமுள்ள போதே ஒழுக்கத்திற்கு வாருங்கள் என்று கூறுவதும் இதைத்தான்.

தியானம் என்பது மனதை சாந்த படுத்தும் ஆப்ரேஷன் கிடையாது. மனதையே வெட்டி அகற்றும் அறுவை சிகிச்சை.

நமக்கு மனதினை பற்றிய எதுவுமே தெரியாத போது தியானம் நடக்காது. தியானம் என்பது மனதினை நம்மிடம் இருந்து வெளியேற்றும் சாதனை . ஆனால் நாமோ தியானம் என்பது ஏதோ பிளான் போட கிடைக்கும் புது ஐடியா கிடைக்கும் ஒரு பயிற்சி என்றும். மன அழுத்தம் போவதற்கு தெரபி போலவும் கையாள்கிறோம்.

திருடன் தியானத்தில் பணபெட்டி கைபிடி காட்சி தருவது போல உங்களுக்கு ஆபீஸ். வீடு. புள்ளை. காதலி ‌ கள்ள காதலி. ரூவா. நகை. வீடு. நிலம். மனைவி மச்சான் மாமியார் அம்மா என மாறி மாறி இதுதான் ஓடும் இதுவல்ல தியானம்.

தெளிந்த ஓடை போல உங்கள் மனதை மாற்ற வேண்டும். அதற்கு ஆசைகளற்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலை எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம். காமம். தோசம்.மோகம்.ஆச்சர்யம் வெறி என அனைத்தையும் கையாளுதல் பற்றிய புரிதல் தேவை அதை நீங்கள் தியானத்தில் பெற முடியாது. காரணம் அதெல்லாம் அதில் இல்லை. அதெல்லாம் நமது வாழ்க்கை முறையில் இருக்கிறது.

நீங்கள் உங்களுக்கு கீழே உள்ள வேலையாளை வேலையை விட்டு தூக்கி விட திட்டம் போட்டு விட்டு தியானம் செய்தால் அதில் அவன்தான் வருவான்.ஆனால் தியானம் என்பது அப்படி அல்ல.

ஆண்டாண்டுகளாக காடு மேடு மலை வயல் காடு கரை என பரதேசியாய் அலைந்து அனைத்தையும் துறந்து ஆடை வரை பற்றில்லாம் மாறி முழுக்க முழுக்க இறைவனைத் தவிர வேறு எதையும் நினையாமல் அன்னம் தண்ணீர் இல்லாமல் தவம் தியானம் பாராயணம் செய்து கொண்டே இறைமார்க்கத்திற்காக பிரம்மச்சரியம்  இருப்பவர் என்ன பைத்தியமா .

நாம எவ்வளவு ஈசியாக தியானம் செய்கிறோம். அந்த ஆளு எதுக்கு இவ்வளவு கஷ்டபடுறார். அப்போ தியானம் செய்ய துறவு ஒழுக்கம் பற்றின்மை பொது நலம் சரனாகதி ............. இதெல்லாம் தேவையா இல்லையா.

அப்படி தேவை என்றால் நாம தியானம் செய்றது யாரை ஏமாற்ற.

இல்லை அதுமாதிரி எல்லாம் எதுவும் தேவையில்லை ங்க. ஜாலியாவும் இருக்கனும் தியானமும் செய்யலாம். பக்கத்துல உள்ள. பிகரையும் முடிஞ்சா கரெக்ட் பண்ணி வாட்சப்பில் சாட் பண்ணலாம். தியானம் பண்றதெல்லாம் ஈசி ஒரு வாரத்தில் குண்டலினி ஏறி மேல வந்துரும்.

குண்டலினி னா என்னானு சொல்லுங்கள்

 அது குட்டியா இருக்கும் பாம்பு . மொரட்டு முட்டாள்களாக இருக்கின்றோம்

ஞானிகள் கூறுவதை கடைசி வரை கேக்கவே மாட்டோம். பலரும் ஜாதகம் பார்க்க வரும் போது சித்தர் வழிபாடுங்க நாங்க னுவாங்க .

சரி என்ன பண்ணுவீங்க னு கேட்டா ஒரு மாதிரி பாப்பாங்க.

நம்மூரில் உள்ள எந்த சித்தன் தன்னை வழிபட சொன்னது . சித்தர்கள் எழுதியதை படித்து அதன் படி வாழ வக்கில்லை நமக்கு சித்தர் சமாதியில் இரண்டு பத்தி நாலு சூடம் ஏத்துனதும் அப்படியே சித்தர் சற்றுனு வந்து ஒளி தருவார்.

அடப்பாவிகளா சித்தர்களை அசிங்கபடுத்த வேற யாரும் தேவையில்லை.


இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் தலம் இலுப்பைக்குடி.

இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் தலம் இலுப்பைக்குடி.

மிக பழமையான பைரவர் தலங்களுள் இதுவும் ஒன்று.

காரைக்குடியிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில்  கிட்டதட்ட ஒரு 6 கி மீ தொலைவில் (அரியக்குடி அருகில்) இலுப்பைக்குடியில் உள்ளது ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கோவில்.    

இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த ஸ்தலம் என்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

சித்தர்களில் ஒருவரான கொங்கணர் மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் கோயிலில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.

அதனால் மாற்றூர் என்கிற மாத்தூர் இறைவன் பேயர் ஐநூற்றீஸ்வர்.

மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வேண்டி வேண்டினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார்.

பைரவர் இங்கே ஜொலிக்கிறார்.ஒரு கையில் தங்க அட்சயபாத்திரம் ஏந்தி உள்ளார்.

இங்கே வேண்டிக் கொள்ள வீட்டில் ஸ்வர்ணம் பெருகும் என்கிறார்கள்.

இரண்டு நாய்களுடன் காட்சிதருகிறார். பைரவர் சன்னதியில் எந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள். கொஞ்சம் தவத்தில் ஆழ்ந்து சொல்ல சுழலும் ஒரு அலையினை உணரலாம்.

கோவிலின் அம்பாள் சன்னதிக்கு எதிரே ஒரு மிகப்பெரிய குளம் உள்ளது.

பைரவருக்கு அருகே ஒரு சிறிய பலகையில் நாய் உருவம் உள்ளது, நாய்கடி பெற்றவர்கள் இங்கு வந்து இந்த தூணை வளம் வந்து ,  குளத்தில் நீராடி பைரவரை வேண்ட, பைரவர் விஷதன்மையை முறிப்பதாக சொல்கிறார்கள்.

சுயம்பிரகாசேஸ்வரர், சிவன் மிக சிறியவடிவில் உள்ளார்.தெய்வீகம் நிறைந்த அலைகள் சூழ்ந்துள்ளது.

கோயிலின் முன் மண்டபத்தூணில் ஒரு அங்குல அளவிலான விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கிரீடம் அணிந்த நிலையில் உள்ளார். இறைவி சன்னதியின் எதிரில் உள்ள தூணில் வராகி உள்ளார்.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமணம் விரைவில் நடைபெற, புத்திர தோஷங்கள் நீங்க இக்கோயிலில் உள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்தும், விசேஷ பூஜைகள் செய்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகின்றனர்.


சிவன் தலையில் கங்கை

 

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை யார்?

சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும்.

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டி ருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை எல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான்.

முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள். “தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.”

”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான்என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.

பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார்.

சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கை குடியிருக்கிறாள்.

தங்கம் தோன்றிய கதை பகுதி மூன்று

 தங்கம் தோன்றிய கதை 3

வஸிஸ்டர் பரசுராமர் உரையாடல் தொடர்ச்சி ;

தேவர்கள் அனைவரும் அக்னியை தேடி மறுபடியும் அலையத்தொடங்கினார்கள். அக்னி தவளைக்கு சாபம் கொடுத்துவிட்டு அரசமரத்தில் சென்று தஞ்சம் அடைந்தார். அப்போது தேவர்கள் அக்னியை தேடிவர, அங்குள்ள ஒரு யானையானது " அக்னியானார் அரசமரத்தில் இருக்கிறார் " என்று கூறிற்று. உடனே அக்னியனவர் யானைக்கு " உனது நாவானது தலைகீழாக மாறிப்போகும்" என்று சாபம் கொடுத்து விட்டு அரசமரத்தில் இருந்து வன்னிமரத்தில் புகுந்தார்.

தேவர்கள் தனக்கு உதவி செய்த யானைக்கு வரம் அளித்தனர். யானைகளே! மாறிப்போன நாவினாலும் எல்லா ஆகாரங்களையும் உண்பீர்கள். எழுத்துக்களில் தெளிவில்லாமலே உரத்தகுரலால் வாக்கை சொல்வீர்கள் என்று வரம் தந்து அக்னியை தொடர்ந்தனர்.

பின்பு வன்னிமரத்தில் புகுந்த அக்னியை ஒரு கிளியானது தேவர்களுக்கு காட்டிக்கொடுக்க மீண்டும் அக்னியானவர் கிளிக்கு வாக்கில்லாமல் போவாய் என்று சபித்தார். அதுகண்ட தேவர்கள் கிளிக்கு " நீ! அடியோடே வாக்கில்லாமல் போக மாட்டாய், உன் பேச்சு வளர்ந்த குழந்தையின் பேச்சு போல தெளிவில்லாமலே அழகாக இருக்கும் " என்று வரமளித்தனர்.

( இதுதான் கிளிபேச்சுன்னு சொல்வது).

உடனே தேவர்கள் அக்னியை வன்னிமரத்தில்கண்டு ,அந்த வன்னிமரத்தையே எல்லா கிரியைகளுக்கும் அக்னிஸ்தானமாக செய்தனர். அப்போது முதல் அக்னியானது வன்னிமரத்தில் காணப்படுகிறது.

பிறகு தேவர்கள் அக்னியிடம் உமாதேவியின் சாபம் மற்றும் தாரகன் வதம் பற்றி கூறி வேண்டிக்கொள்ள, அக்னியானவன் கங்கையின் இடத்திற்க்கு சென்று அங்கே கங்கையுடன் சேர்ந்து கர்ப்பத்தை உண்டு பண்ணினார்.கங்கை அக்னியின் வீரியத்தால் மயக்கமுற்று கொடிய தாபத்தை அடைந்து அதை தாங்கமாட்டாமல் போனாள். பின்பு அக்னியிடம் தன்னால் வீர்யத்தை தாங்க முடியவில்லை என்று கூற அக்னி சமாதானம் செய்து கர்பத்தை தாங்கும்படி செய்தார்.

ஆனால் கங்காதேவி , ருத்திரரின் வீர்யமும் கலக்கப்பட்டிருப்பதால் வீர்யத்தை தாங்காமல் மேருமலையில் விட்டாள். பிறகு , அக்னி கங்கையிடம்" உமது கர்ப்பம் ஸுகமாக வளருகிறதா! என்ன குணமுள்ளது ? எவ்வகை நிறமுள்ளது ?என சொல் என்றார்.

அதற்கு கங்கை, குற்றமற்றவனே! அந்த கர்ப்பமானது உன்னை போல பிரகாசமாகவும் தாமரை கடம்ப மலர் போல குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அது சூரியனொளி சேர்ந்தது போல பொன்மயமாக காணப்படுகிறது. அந்த வீரியமானது மலை அருவி நதியில் பாய்ந்ததால் மூவுலகங்களையும் ஒளியினால் விளங்க செய்கிறது.  ஒளியில் உன்னையும் சூரியனையும் போலவும் அழகில் இரண்டாவது சந்திரனை போலவும் இருப்பான் என்றாள். இந்த காரியத்தாலே அக்னிக்கு ஹிரண்யரேதஸ் என்னும் பெயரை கூறுகின்றனர்.

அப்போது அந்த கர்ப்பம் தேவலோகத்தில் நாணல் காட்டை அடைந்தது.அப்போது கிருத்திகை தேவிகள் அன்பு கூர்ந்து முலைப்பால் சுரப்புகளால் வளர்த்தனர். சிறந்த ஒளியுள்ள அந்த குழந்தைக்கு கார்த்திகேயன் என்று பெயர் பெற்றது. ரேதஸ் சிந்தினதால் ஸ்கந்தன் என்றும் குகையில் இருந்ததால் குகன் என்றும் பெயர் பெற்றது. இப்படியாக பொன்னானது அக்னிக்கு பிள்ளையாக பிறந்தது.

பொன்னிலும் ஜாம்பூநதம் என்னும் தங்கம் மிகச்சிறந்தது. அதுவே தேவர்களுக்கு ஆபரணமாகுகிறது. அதனாலே பொன் ஜாதரூபம் என்று சொல்லப்படுகிறது. அது ரத்தினங்களில் பரிசுத்தம். மங்களங்களுக்கு மங்களம். அதனால் பொன் என்பது அக்னி பகவானும் சிவபெருமானும் இருப்பது.

 பரிசுத்தங்களில் பரிசுத்தம் கனகமே! தங்கமானது அக்னியும் ஸோமனுமாக இருப்பதென்று சொல்லப்படுகிறது.

இப்படியாக தங்கமானது வியாபித்து நிற்கிறது.

இதே போலவே அக்னியானது அரச, வன்னி மரத்தில் நிலைத்திருப்பதும்.

#தங்கம்
#பரசுராமர்
#வசிஸ்டர்
#பீஷ்மர்
#மஹாபாரதம்