சனி, 14 செப்டம்பர், 2019

9:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

              9:ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                     (கி.மு.28-69கி.பி.)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர நாட்டு அந்தணர் ஆத்மன ஸோமயாஜி என்பவரின் திருமகனார். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் கங்கையா. கர்க்கா என்பது குலவழிப்பட்டம். இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொற்காலமென்றே குறிப்பிடலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடுபட்ட இவர் 'தாந்திரீய' வழிபாட்டு முறைகளை வேரறுத்தார். காலத்தால் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான மார்க்கத்தை பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்தாலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு முன்னோடி எனத்தக்க இவர் காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திரப் பிரதிஷ்டை செய்தார். அரும்பணிகளாற்றிய இவர் கி.பி.69-ல் விபவ ஆண்டு கார்த்திகை மாதம் க்ருஷ்ணபக்ஷம் திருதியை திதியில் விந்திய மலைப்பகுதியில் சித்தியடைந்தார்.
நல்லன யாவும் கிட்டும் நந்தி தரிசனம்!

நந்தி என்றால் ஆனந்தத்தைத் தருபவர் என்று பொருள்.நல்லன யாவும் நந்தி தரிசனத்தால் கிட்டும் என்பது நம்பிக்கை.நலமும் வளமும் பெற சிறப்பான  சில நந்திகளை தரிசிப்போம்.

தஞ்சாவூர் நந்தி:நமக்கு மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இருப்பவர்களுக்கும் கூட நந்தி என்றால் இந்த தஞ்சை நந்தியின் நினைவுதான் வரும்.அளவில் மட்டுமல்ல அருளிலும் பெரியவர் இவர்.

மதுரை நந்தி:மதுரை புதுமண்டபம் முன்பாக கீழ ஆவணி மூல வீதியில் சுதையால் அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தி கம்பீரம் மற்றும் அழகுமிக்கது.இது போன்ற பிரமாண்ட நந்திகளை ராமேஸ்வரம் திருநெல்வேலி சுசீந்திரம் திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களில் நாம் காணலாம். இவை மாக்காளைகள் எனப்படுகின்றன.

திருவண்ணாமலை நந்தி:அண்ணாமலையில் அருள் மணக்க வலம் வரும் அலங்கார நந்தி... அதிகார நந்தி !

சாமுண்டிமலை நந்தி:மைசூரையொட்டிய சாமுண்டிமலை மீது ஏறும்போது மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான நந்தி கலையழகுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

ஹளேபீடு நந்தி(ஹொய்சளேஸ்வரா ஆலயம்):மாக்கல்லில் வடிக்கப்பட்ட நுணுக்க வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்களை உடைய இந்த நந்தியின் கழுத்து மடிப்புகளும் முகத்தில் புடைத்துக் காணப்படும் ரத்த நாளங்களும் சிற்பியின் திறமையை பறைசாற்றுவன.

லேபாட்சி நந்தி:ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள இந்த நந்தியே இந்தியாவில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி என்ற பெருமையைப் பெறுகிறது.

காஞ்சி கைலாசநாதர் ஆலய நந்தி:பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலய நுழைவாயிலிலிருந்து சுமார் 100 அடி தள்ளி ஒரு பெரிய மேடையின் மீது முன்பக்கம் இந்த நந்தி அமைக்கப்பட்டுள்ளது.மேலே சாந்துக்கலவை பூசீ வர்ணம் தீட்டப்பட்டது போன்று அமைக்கப்பட்ட இந்த நந்தி காலமாற்றத்தில் மழையிலும் வெயிலிலும் காய்ந்து வண்ணங்கள் மறைந்தாலும் வனப்பு மாறாது காட்சியளிக்கிறது.

வைக்கம் நந்தி:கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ் ஆலய நந்தி.வெளிப்பிராகார நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள நந்திகளுக்கு அழகிய பித்தளைக் கவசம் சாத்தி மெருகிட்டு வைத்துள்ளனர்.

கங்கைகொண்ட சோழபுரம் நந்தி:தஞ்சைப் பெரிய கோயிலின் தம்பிபோல் காட்சி தரும் சோழீச்வரர் கோயிலில் அமைந்திருக்கும் எழில்மிகு இடபம்.

புனே நகரத்து நந்தி:புனேயில் பாண்டேஸ்வரராக காட்சிதரும் இறைவனின் திருக்கோயிலில் புராதனச் சிறப்போடு புனிதம் நிறைந்ததாக அமைந்திருக்கும் கருவறை நந்தி.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலய நந்தி:இந்த ஆலயத்தின் முகப்பில் உள்ள நந்தியும் மண்டபமும் ஒரு சேர மிக அழகு.இந்த நந்தியைப் பார்த்தாலே பரவசம் ஏற்படும்.

நஞ்சனகூடு நந்தி:இந்த பிரமாண்டமான நந்தி கலைநயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.நஞ்சன்கூடு ஆலயத்தின் உள்ளே நுழையும்போது நம்மை நந்தி பார்ப்பதுபோல் திசை மாறி அமைந்திருப்பது வித்தியாசமானது.

அதிகார நந்தி: எப்போதும் அமர்ந்தவாறே கம்பீரமாகத் தரிசனமளிக்கும் நந்தி திருவாரூர் தியாகேசர் சன்னதியில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல அவசரமாகப் போகும் ஈசனை ஆச்சரியமுடன் பார்த்தவாறு எழுந்து நின்று கிளம்பும் நிலையில் காட்சியளிக்கிறார். ஏறக்குறைய இதே நிலையில் வடமாநிலம் உ.பி.யில் தென்படுகிறார் என்பதும் விசேஷம்.

பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றான உஜ்ஜயினி மகா காலேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது குண்டேஷ்வர் மகாதேவ் ஆலயம்.கருவறைக்கு முன் காணப்படும் நந்தி தேவர் தொலைவிலிருந்து பார்க்கையில் சாதாரணமாகக் கால்களை மடித்து அமர்ந்திருப்பதாகவே தோன்றும்.ஆனால் சற்று அருகில் சென்று உற்று நோக்கினால் உண்மையில் அவர் எழுந்து நிற்கும் நிலையில் தென்படுவதைக் கண்டு ரசிக்கலாம்!இவரையும் லிங்கத் திருமேனியில் விளங்கும் குண்டேஸ்வரரையும் ஒருசேரத் தரிசித்தால் செய்த பாபங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.சுங்க வம்சத்து அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இக்கோயில்.இதற்கு அருகில்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் அவரது தமையன் பலராமனும் குருகுல வாசம் செய்த சாந்தீபனி மகரிஷியின் ஆசிரமம் உள்ளது.
மிகுந்த ஞானம் தோன்றும்

காந்தாரியின் கனவு

“நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா!  நீ

 பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா?

நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா?

 ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது.

இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்!

உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது!  இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!”

என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள்.

லோகநாயகன், ஜகத்ரக்ஷகன், புருஷோத்தமன் என தானே தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்குத் தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.

 எனினும், அவள் கோபம்  அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும் போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத் தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

திடீரென எதோ சப்தம் கேட்க, தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.

 கிருஷ்ணன் கையில் குழல், துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான்.

ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க

“எங்கே வந்தாய்? இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு? வாய்க்கு வாய் நான் உன் பக்தை எனச் சொல்வாயே? இது தான் உன் பக்தரக்ஷண லக்ஷணமா?”

“காந்தாரி இன்னும் கோபம் தீரவில்லையோ?”

“என் நூறு புதல்வர்கள், கோடி வீரர்கள், பல கோடி குதிரை, யானை என இவ்வளவு பேரழிவு தேவையா கிருஷ்ணா? நீயே இதைத் தடுத்திருக்கலாமே? உன்னால் முடியாததா என்ன?

“என் முடியாது? தடுத்திருக்க முடியும். அல்லது அனைத்தையும் என் ஸங்கல்பத்தாலேயே நினைத்த மாத்திரத்தில் அழித்திருக்க முடியும்”

“பிறகு ஏன் செய்யவில்லை?

“காந்தாரி! நீ என் பரம பக்தை. அதோடு சிறந்த பதிவ்ரதையும் கூட. அதனால் உனக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். கேள்!

 இந்த யுகம் பாரதப்போரோடு முடிகிறது. ஸம்பவாமி யுகே யுகே என்பது படி, புது யுகம் பிறக்க, பழையது அழிய வேண்டும். பாசம் எனும் கருமேகம் உன்னை மட்டுமல்ல உன் கணவனின் கண்களையும் மறைத்தது.

அந்த மாயத்திரை இன்னும் விலகவில்லை. அந்தகம் நிறைந்த இந்த மாளிகையில் ஒரே ஒரு அகல் விளக்கு விதுரன் மட்டுமே. அவன் மட்டுமே என்னை பூரணமாக அறிவான்”

“கிருஷ்ணா! உன்னை நான் இன்று அறிந்து கொண்டேன். நீயும், விதுரனும்  பக்ஷபாதம் கொண்டவர்கள்”

“காந்தாரி! என் பக்தனை நிந்தித்தால் வரும் பாவம் என்னை நிந்திப்பதினும் கொடியது. அதனால் தான் இன்று உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டேன். உன்னுடைய இந்த கேள்விக்கு நான் விடைகூறுமுன்  நீ பதில் சொல்.

முதலில் ஏன் நீ உன் கணவனைச் சபிக்கவில்லை? சக்கரவர்த்தி நினைத்திருந்தால், இந்தப் போரே நிகழ்ந்திருக்காது.

 பாண்டவர்கள் நியாயமாகக் கேட்ட ஆட்சியை ஏன் அவர் கொடுக்க விரும்பவில்லை? ஆரம்பத்திலிருந்து துரியோதனை பாபியாக வளரவிட்டதே அவரது கண்மூடித்தனமான பிள்ளைப்பாசம் அல்லவா?

நீ பதிவ்ரதை என்பது உன் கணவனுக்கு! ராஜமாதாவாக இந்த நாட்டு மக்களின் நலனை நீ ஒரு கணம் எண்ணிப்பார்த்திருப்பாயா?

பிறகு, பீஷ்ம, கிருப, துரோணாதிகளை ஏன் நீ சபிக்கவில்லை? தன் சஹோதரர்களின்  தர்ம பத்தினியையே பல்லாயிரம் பேர் முன்னிலையில் துரியோதனனும், துச்சாதனனும் மானபங்கப்படுத்திய பின்பும் மௌனம் சாதித்தனரே?

 மேலும், விபீஷணன் போல விதுரன் மட்டுமல்லவா மனசாட்சிக்குப் பயந்தான்? மற்றோர் எல்லாரும் செஞ்சோற்றுக்கடன் என்ற போர்வையில் துரியனுக்காக போரும் புரிந்தனரே? பெரியவர்களைச் சபிக்க முடியாது என்ற எண்ணமோ?

உன் மகன்?  தன் சகோதர்களையே  அடிமைகளாக்கி, அவமானப்படுத்தி அவர்களின் மனைவியையே “மடியில் வந்து அமர்வாய்” என விளித்து மாபாதகம் செய்தானே?

மேலும்,  “ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு சமான:” என்று உனக்குத் தெரியாதா? தன் 99 சகோதரர்களுக்குத் தந்தையாக இருக்க வேண்டியவன் தன் சுயநலத்திற்காக அவர்களைப் பலி கொடுத்தானே? அவனை ஏன் சபிக்கவில்லை?

 பிள்ளைப்பாசம் அறிவுக்கண்ணை மறைத்ததோ? நீ இப்போது கேட்கும் நியாயம் அன்று எங்கே போனது? அவனைக் கேட்டாயா?

ஏன் சகுனியை சபிக்கவில்லை? அவன்தான் உண்மையில் உடன்பிறந்தவள் குடும்பத்தை கூற்றின் மறுஉருவம் போல் சர்வ நாசமாக்கியவன்.

“கிருஷ்ணா! சகுனி என் சகோதரன். மேலும், நீ மேற்கூறிய அனைவரும் என் உற்றார் உறவினர் ஆச்சாரியர்கள் அல்லவா?

“பார்த்தாயா காந்தாரி! அறியாமை உன் புத்தியை மட்டுமல்ல பக்தியையும் மறைக்கிறது. அப்போது நான் யார்? உனக்கு   சொந்தமில்லையா?  பாண்டவர் என்னை சொந்தமெனக் கொண்டனர். அதனால் பிழைத்தனர்.

“கபடனே! குந்தி உன் சொந்த அத்தை. அதனால் தான் ஒருதலை நீதியாக பாண்டவர் பக்கம் நின்று என் குலத்தை வேரோடு சாய்த்துவிட்டாய்”

“பேதையே! அதுவல்ல நிஜம். உலகில் நல்லோரெல்லாம் என் சொந்தம். நான் அவர்களுக்குப் பூரணமாய் சொந்தம். அவர் மனமே நான் நித்யவாசம் செய்யும் வீடு.

“சரி அதைவிடு காந்தாரி! பாண்டவர் அழிந்து துரியோதனன் பட்டம் கொண்டிருந்தால் உனக்கு மகிழ்ச்சி தானே ஏற்பட்டிருக்கும்? அது சுயநலம் அல்லவா? அதற்கு என்ன செய்தால் தகுமோ அதை துரியோதனாதிகளைச் செய்ய விட்டாயே?

“கிருஷ்ணா! ஒரு தாய் தன் மக்கள் நன்றாய் இருக்க வேண்டும் என நினைப்பது தவறா?”

“அப்படியானால் நான் இந்த உலகுக்கெல்லாம் தாயன்றோ! எனக்கும் சுயநலம் இருக்கக் கூடாதா? உலகம் முழுமையும் என் சொத்து. அதை நல்விதம் ஆத்தலும், காத்தலும் என் பொறுப்பு. அதையே செய்தேன்”.

என் அவதார நோக்கை நிறைவேற்ற இந்தப்போர் ஒரு சாக்கே. ஆனால் ஏன் அதை தனி ஒருவனாக நான் செய்யவில்லை? ஏன்  என எண்ணிப்பார்.

“என் 100 பிள்ளைகளையும் கொன்றுவிட்டாயே? இனி நான் எண்ணிப்பார்க்க என்ன இருக்கிறது?

“அப்படியில்லை. நான் கர்மேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன் எனினும், சில விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேன்.

கர்மா – அவரவர் முன்வினைப் பயன்கள்
பகுத்தறிவு – நல்லவை, தீயவைகளை அறிந்து கொள்ளும் திறன்.

இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள  இவ்விரண்டிலும் நான் தலையிடுவதில்லை”

மேலும், இராமனாக ஏன் காடுகளில் திரிந்து வானரர் உதவியோடு இராவணனை அழிக்க நான் சிரமப்பட்டிருக்க வேண்டுமென எண்ணிப்பார். நான் உயர்வற உயர் நலம் உடையவன். அதை யாருக்கும் விளம்பரப்படுத்த அவசியமில்லாதவன். ஆனால் என் பக்தர்கள்? பக்தர்களுக்கு ஏற்றம் அளித்தல் என் கடமை.

போரில்லாவிட்டால் அபிமன்யு எனும் வீரன் சரித்திரத்தில் எவ்வாறு இடம் பெற்றிருப்பான்? கர்ணனின் கொடைத்திறனும், செஞ்சோற்றுக்கடன் தீர்த்த தீரமும் எப்படி விளங்கியிருக்கும்? பீஷ்மனின் வைராக்யம் எப்படி மற்றவர்க்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கும்?

மறுபுறம், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், அவ்வளவு ஏன்? உன் சகோதரன் போன்ற கீழ்மக்களிடம் இருந்து பிறருக்குப் பாடம் புகட்டவேண்டியது என் கடமையல்லவா?

“எனினும், எங்கள் பக்கம் நீ இருக்கவில்லையே கண்ணா?”

“அதற்கும் ஒரு வாய்ப்பு வந்ததே காந்தாரி. உன் மகன் தான் நிராயுதபாணியான நான் வேண்டாம் என்று என் சேனைகளை எடுத்துக்கொண்டான். மேலும் விதுரனின் வடிவில், அவன்  திருவாக்கில் நான் உங்கள் கூடவே இருந்தேனே? நல்லோர் உருவில் என்றும் நான் இருப்பேன். என்னை அறிய நீங்கள் முயலவில்லை. உன் கனவில் இன்று நான் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு கணம் நினைப்பவர்க்கே ஓடி வருபவன் நான். நீ என் பக்தை.

“கிருஷ்ணா! உன்னையே சபித்த என்மேல் இவ்வளவு உனக்கு அன்பும் கருணையுமா உள்ளன?”

“காந்தாரி! உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டு உன்னை பெரும் பாவத்திலிருந்து காத்தருளினேன்”

“பெரும் பாவமா? அது என்ன கிருஷ்ணா?”

“ஒருவேளை நீ பாண்டவர் யாரையாவது சபித்திருந்தால், பாகவத அபசாரம் எனும் படுகுழியில் வீழ்ந்திருப்பாய். என்னை நிந்தித்தலிலும் அது மிக மிகக்கொடுமையான பாவம்”.

“கிருஷ்ணா! ஜனார்தனா! என் அறிவுக்கண்களைத் திறந்தாய். ஆனால் என் சக்திக்கு ஏற்ற உன்னைச் சரணடையும் ஒரு உபாயம் சொல்வாயா?”

“கலங்காதே! பதினெட்டு அத்தியாயங்களாய் அர்ச்சுனனுக்கு உரைத்ததை ஈரடியில் உனக்குச் சொல்கிறேன்.

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக்க்ஷேமம் வஹாம் யஹம் ||

“நீயென்றால் அது நானே. உனக்குள் இருந்து உன்னைப் பேசவைத்தேன். கர்மாவுக்கு பேதம் இல்லை. நான் உட்பட. உன் சாபம் பலிக்கும். என் பழைய பகைவன் வாலியே என்னை அழிக்க வேடனாக வந்து வஞ்சம் தீர்ககப்போகிறான். நான் அழிவற்றவன். அவதாரம் மறையலாம். ஆனால்,

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

என்ற என் வாக்கிற்கேற்ப நான் என் எண்ணப்படி மீண்டும் மீண்டும் பிறப்பேன்”

“கிருஷ்ணா! அறிவுச்சுடர் ஏற்றியவனே! போதும் இந்த வாழ்வு! இனி நான் என் கணவருடன் அனைத்தையும் துறந்து வடக்கிருந்து உன் நிழல் தேடி வந்து சேர்வேன்”.

இவ்வாறு கூறியதும் சட்டென்று நினைவு வந்தவளாய், எழுந்து அமர்ந்தாள். கனவு என்றாலும், அதன் உட்பொருளை உணர்ந்து அவள் மனம் தெளிந்தது. திருதராஷ்ட்ரனைக் கண்டு உடனே கானகம் ஏக முடிவு செய்து மெல்ல அவன் அறை நோக்கி நடந்தாள்.

கரிய உருவம் ஒன்று பின்னால் சிரித்தபடி நின்றது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 32 ॐ

மேலே நாம் காண்பது சிவகங்கை என்று அழைக்கப்படும் கோவிலைச் சேர்ந்த கோவிலுக்குள்ளேயே இருக்கும் திருக்குளம் ஆகும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியை அடுத்து நாம் காண்பது நூற்றுக்கால் மண்டபம் ஆகும். சோழர்களின் தளபதியான காளிங்கராயன் என்பவனால் கட்டிக் கோவிலுக்கு அளிக்கப் பட்டதாயும் முற்காலங்களில் நவராத்திரி சமயத்தில் அன்னை சிவகாமியை இங்கே தான் அலங்காரம் செய்து வைப்பார்கள் என்றும் குறிப்புக்கள் கூறுகின்றன. அடுத்தது நாம் மேலே காணும் சிவகங்கைக் குளம்.

{சிதம்பரத்தில் பத்து முக்கிய தீர்த்தங்கள் உள்ளன.}
அவை1. சிவகங்கை மூன்றாவது வெளிப்பிரகாரத்தில் அன்னை சிவகாமி சன்னதிக்கு நேரே உள்ளது.
2.பரமானந்த கூபம் ஏற்கெனவே நாம் பார்த்தோம் சித்சபைக்கு வெளியே கிழக்கே ஒரு கிணறாக உள்ளது.
3. குய்ய தீர்த்தம் என்று சிதம்பரம் நகருக்கு வட கிழக்கே கிள்ளை என்னும் இடத்துக்கு அருகே உள்ள பாசமறுத்தான் துறையில் உள்ளது.
4.சிதம்பரத்துக்குத் தெற்கே புலிமடு என்னும் தீர்த்தம் உள்ளது.
5. வியாக்ரபாத தீர்த்தம் மேற்கே உள்ளது.
6. அனந்த தீர்த்தமும் மேற்கே அனந்தீஸ்வரர் கோவில் அருகே உள்ளது.
7.நாகசேரி என்னும் தீர்த்தம் அனந்த தீர்த்தத்துக்கு மேற்கே உள்ளது.
8. பிரம்ம தீர்த்தம் சிதம்பரத்துக்கு வடமேற்கே திருக்களன்ச்சேரியில் உள்ளது.
9.சிவப்பிரியை சிதம்பரத்துக்கு வடக்கே தில்லைக் காளி கோவில் அருகே உள்ளது.
10.சிவப்பிரியைக்குத் தென் கிழக்கே "திருப்பாற்கடல்" என்னும் தீர்த்தமும் இருந்தன. தற்சமயம் சில குறிப்பிட்ட தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் சிவகங்கை முக்கியமானது.

"ஹேம புஷ்கரணி", "அம்ருதவாபி", "சந்திர புஷ்கரணி" என்றெல்லாம் தல புராணங்களில் வர்ணிக்கப்படும் இந்தக் குளம் பண்டைக் காலந்தொட்டே இருந்து வந்ததாய்க் கூறுகிறார்கள். நமக்கு நன்கு தெரிவது ராஜா ஹிரண்யவர்மனின் காலத்தில் இருந்து தான். சோழத் தளபதியான காளிங்கராயனால் குளத்துக்குள் இறங்கும் 9 படிக்கட்டுக்கள் கட்டுவிக்கப்பட்டதாய்த் தெரிகிறது. பல ரூபங்களில் உள்ள சிவலிங்கங்களும் விநாயக மூர்த்திகளும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் பிரதிஷ்டை பண்ணப் பட்டிருக்கிறது. தென் பகுதியில் தண்ணீருக்குள் "ஜம்புகேஸ்வரர்" லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் தினசரி தீட்சிதர்களால் வழிபாடு செய்யப் படுவதாயும் சொல்கிறார்கள். ( இன்னும் பார்க்கவில்லை இந்த வழிபாட்டை). பல்லவ ராஜா சிம்மவர்மன் உடல் நலம் குன்றி இருந்த சமயத்தில் மகரிஷி வியாகிரபாதரின் ஆலோசனையின் பேரில் அவன் இந்தக் குளத்தில் புனித நீராடி நடராஜரை ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசனம் கேட்டுப் பெற்று வழிபட்டதாயும் அதன் பின்னர் அவன் உடல் நலம் அடையவே தான் பெற்ற பயன் அனைத்து மக்களும் பெறவேண்டி அவன் குளத்தை ஆழப்படுத்தியும் அகலப் படுத்தியும் பராமரிப்புப் பணிகள் செய்ததாயும் கூறுகின்றனர். இதன் பின்னரே அவன் பெயர் ஹிரண்ய வர்மன் என அழைக்கப்பட்டதாயும் கூறுகின்றனர். இந்தக் குளம் ரஜ சபை என அழைக்கப்படும். ஆயிரக்கால் மண்டபத்துக்கும் சிவகாம சுந்தரி சன்னதிக்கும் நடுவே அமைந்துள்ளது. குளத்தின் நடுவில் இருந்து நேரே அன்னை சிவகாமி குளத்தைத் தன் அருட்கண்களால் பார்த்தவண்ணம் அருள் பாலிக்கிறாள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
சிதம்பர ரகசியம் சோகமான சிறப்பு தகவல்

முஸ்லீம் மன்னர்கள் திப்பு சுல்தான் படை எடுப்பின் போது நடராஜரைத் தூக்கிக் கொண்டுத் திருவாரூரில் சில காலமும் திருச்சூரில் ஆலப்புழாவில் சில காலமும் இருந்ததாய்த் தீட்சிதர் ( அடியேனிடம் Sambanatesan Umanatham தீட்சிதர்) என்னிடம் நேரில் கூறினார். பல தீட்சிதர்கள் சித்சபையின் மேலே உள்ள பொன்னால் வேய்ந்த கோபுரத்தின் மேல் ஏறி உயிரை விட்டதாயும் கூறுகின்றனர். வேறு சிலர் மூலவர் ஆன நடராஜரை எடுத்துக் கொண்டு கேரளாவில் மறைந்து இருந்ததாயும் அதன் பின்னர் தான் அங்கே உள்ள கோவில்கள் இவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிதம்பரம் கோவில் அமைப்பில் கட்டப் பட்டதாயும் அவர் கூற்று. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை.
வாரணாசி (காசி) ன் சிறப்பு!

அலகாபாத் நகலிருந்து 123 கி.மீ. தூரத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள புராண சிறப்புள்ள தொண்மையான நகர். கங்கையின் வடக்கே அருணை நதி கலக்கிறது. தெற்கே அஸி நதி கலக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவில் உள்ள நகரம் தான் வாரணாசி என்று அழைக்கப்படுகிறது. காசியின் நீளம் கங்கை கரையில் ஓரமாக நான்கு மைல்கள். இதில் அறுபத்து நான்கு ஸ்நான படித்துறைகள் இருக்கின்றன. அவற்றில் உயர்ந்த மாளிகைகளும், ஆலயங்களும் உள்ளன. ஐந்து ஸ்நான கட்டங்களை முக்கியமானதாக குறிப்பிடுகிறார்கள். அவை-

1. அஸி கட்டம்,
2. தசாசுவமேத கட்டம்,
3. வருணா கட்டம்,
4. பஞ்சகங்கா கட்டம்,
5. மணிகர்ணிகா கட்டம். - இந்த இடுகாட்டில் தான் உயிர்களை சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பதாக சிவன், விஷ்ணுவிடம் ஒரு சத்தியம் செய்து கொடுத்தார்.

ஐந்து கட்டங்களிலும் படகில் பயணம் செய்து கங்கையில் ஸ்நானம் செய்து வரவேண்டும். மணிகர்ணிகா காட் படித்துறையில்  நீராடுவதும், பித்ரு காரியங்களை செய்வதும் மிகவும் விசேஷம். மணிகர்ணிகா காட் ஆதிசங்கரர் மணிகர்னிகாஷ்டகத்தில் மிகச் சிறப்பாக கூறியுள்ளார். ஆகையால் இங்கு சிறுதானங்கள் செய்வது மேன்மையை தரும். அவற்றின் பலன் பல மடங்கு உயரும் என்றும் கூறுவார்கள். ஆகையால் ஏராளமான யாத்திரியர்கள் இங்கே அன்னதானம் முதல் கோதானம் வரையில் செய்வதுண்டு. கங்கையில் நீராடி காரியங்களை செய்பவர்கள் பிறர்மீது படாமல் மடியாக இருப்பதில்லை. யார் மீது யாரும் படலாம். படகோட்டி, பசுமாட்டை அழைத்து வருபவர், பண்டா யார் பட்டாலும், புனிதம் குறைவதில்லை. அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை  இங்கே நிதர்சனமாக காண்கின்றோம். காசியில் இக்காரியங்களை செய்ய வருபவர்களுக்கு உதவ பல தென்னிந்திய புரோகிதர்கள் உள்ளனர். சங்கரமடம், குமரகுருபரர் மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உள்ளன. எந்தவொரு ஐந்தும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால் ஏராளமான மக்கள் காசியிலே இறந்துவிட தங்கள் கடைசி காலத்தை இங்கேயே கழிக்கின்றனர்.
-----------------------------------------------‐-------------------------------

ஆறு சமய வழிபாடு

ஆறு சமய வழிபாடு

ஆதிசங்கரர் ஆறு சமயங்களைத் தொகுத்து, வகுத்து சிறப்பித்தார். இது ஷண்மத வழிபாடு எனப்படும். இறைவழிபாட்டிற்குரிய மாதமான மார்கழி மாதத்தில் ஆறு சமயங்களுக்கு உரிய திருநாள்கள் வருவது சிறப்பு.

காணாபத்யம் - கணபதி வழிபாடு தினமும் காலையில் சாணப் பிள்ளையாரை நிறுத்தி கணபதியை வழிபடுகின்றனர்.
சைவம்-சிவ வழிபாடு - திருவாதிரை
வைணவம் - விஷ்ணு வழிபாடு - வைகுண்ட ஏகாதசி
கௌமாரம் - முருக வழிபாடு - படி உற்சவம்
சாக்தம் - சக்தி வழிபாடு - பாவை நோன்பு
சௌரம் - சூரிய வழிபாடு - தைப் பொங்கலன்று சூரியனை வழிபடுகின்றனர். மார்கழி இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இதுவே தை பொங்கல் விழாவின் தொடக்க நாளாகும்.
-----------------------------------------------‐--------------------------------
பச்சை நிற சிவபெருமான்

பொதுவாக பச்சை நிறம் விஷ்ணுவுக்கு உரியதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் (பச்சை) மரகதத்தால் ஆன சிவனின் சிலை திருஇடைச்சுரம் என்ற ஊரில் உள்ளது. இங்குள்ள ஞாலபுரீஸ்வரர் மற்றும் மரகதாலேஸ்வரர் கோயில்களில் பச்சைக்கல்லாலான சிவலிங்கங்கள் உள்ளன. இவரை தரிசித்தால் வாழ்வில் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி சிவன் கோயிலிலும் பச்சை லிங்கம் இருக்கிறது. ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இந்த லிங்கம் விசேஷ நாட்களில் மட்டும் வெளியே எடுக்கப்பட்டு, பூஜை செய்யப்படுகிறது.
-----------------------------------------------‐-------------------------------
பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்!

தமிழகச் சிவாலயங்களில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைக் கருவறையாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள கோயில்களை பரிவாரத் தலங்களாகக் கொள்ளும் மரபு நிலவுகிறது.

விநாயகர் - திருவலஞ்சுழி
முருகன் - சுவாமிமலை
நந்தி தேவர் - திருவாடுதுறை
சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர்
நடராஜர் - சிதம்பரம்
தியாகராஜர் - திருவாரூர்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
பைரவர் - சீர்காழி
அம்பிகை - திருக்கடவூர்
சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை
சனி - திருநள்ளாறு
-----------------------------------------------‐--------------------------------
திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா?

வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது முன்னோர்களுக்கும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறோம். கங்கா நதி நீர், வெண்மையாகவும், யமுனை நதி நீர், கருணையாகவும், சரஸ்வதி அந்தர்வாகினியாக கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஒடிக்கலப்பதாக ஐதீகம். இத்தகைய திரிவேணி சங்கமத்தில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி நீராடிய புண்ணிய பூமி. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாகவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்கும்பமேளா திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர். பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும். முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை. அவற்றைப் போல் நம் பாவங்கள் களையப்படவேண்டும் என்பதற்காக பிரயாகை ஷேத்திரத்திலே முடி எடுத்து பாவங்களை களைய வேண்டும். பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம். இதன் வேர் பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும், இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த மூன்று இடங்களிலும் வரிசையாக, பித்ரு காரியங்களை செய்ய வேண்டியது தமது கடமை என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
-----------------------------------------------‐---------------------------------
 நடனமாடும் நடராஜர், கண்ணன் படங்களை வீட்டில் பூஜை செய்வதின் பயன்கள்?

நடராஜர் எபவர் எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமானவர். அவரில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன. நான் இவற்றை எழுதுவதும் பதிப்பகத்தார் பதிப்பிப்பதும் நீங்கள் படிப்பதும் என்ற அனைத்து காரியங்களும் அவனது அசைவுகளே! நம்முள் இயங்கிவரும் கோடிக்கணக்கான அணுக்களின் அசைவுகளும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் இதனால் தான்! இது மட்டுமல்ல. காற்று வீசுவதும், தண்ணீர் சென்றுகொண்டிருப்பதும், பறவைகள் பறப்பதும், மீன்கள் நீந்துவதும், எறும்பு நகர்வதும் இப்படி எல்லா விதமான ஆற்றலும் அவரே. இதனாலேயே இவரை விதமான காஸ்மிடான்சர் என்கிறோம். அதாவது பிரபஞ்சகூத்தாடி எனப் போற்றுவது வழக்கம். இவரை தெற்கு நோக்கி வைத்து வழிபட்டால் நமது ஆற்றல் மேம்படும். இப்பேராற்றல் மிக்க நடராஜப் பெருமானை வழிபடுவதினால் உடலாலும் உள்ளத்தாலும் சோர்வு பெற்றிருக்கும் உயிர்கள் சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள் என்பது நமது முன்னோர்கள் கண்ட உண்மை.

கிருஷ்ணரை கோபாலன் என கூறுவர். கோ எனில் பசு; பாலயதி எனில் காப்பாற்றுதல். இங்கு பசு என்பது நாம் வழக்கத்தில் கொண்டுள்ள பசுக்களை மட்டும் குறிக்காது. அனைத்து ஜீவராசிகளையும் குறிக்கும். அவரின் புல்லாங்குழல் ஓசையினால் அனைத்து பசுக்களுமே அவரிடம் ஈர்க்கப்படுகிறது. இது போன்று நாமும் குழல் ஊதும் கண்ணனை வழிபடுவோமானால் தெய்வ ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவோம். இது மட்டுமல்லாமல் அக்காலத்தில் ஒரு மனிதனுடை செல்வத்தை அவனிடம் இருக்கும் பசுக்களை கொண்டே கணக்கிட்டார்கள். ஆதலால் இவரை நாம் வணங்குவதினால் அனைத்து செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை.