வியாழன், 23 ஜூலை, 2020

தேவியின் மகிமை:-

உலகில் துன்பம் நீங்கிச் சுகத்தை அடையும் பொருட்டு, துக்க காலத்தில் அம்மா என்று தாயை நினைத்துக் கொள்கிறோம். அது ஏன். நம்மைப் பெற்று நமக்குப் பால் கொடுத்து வளர்த்தவள் தாய். அதனால் வேதமும் மாத்ரு தேவோ பவ என்று தகப்பனுக்கு முன் தாயை வணங்கு என்கிறது.

இந்த ஒரு தேஹத்தை உண்டு பண்ணி வளர்த்த தாயின் மஹிமை இவ்வாறானால் ஜகன்மாதாவான ஸர்வேசுவரியின் மஹிமையை எப்படி அளவிட முடியும். தாய்க்குக் குழந்தையிடமுள்ள அன்பு சிநேகம் குழந்தைக்குத் தாயிடமுள்ள அன்பைவிடப் பலமடங்கு அதிகரிக்கிறது. கெட்ட புத்திரனுண்டு, கெட்ட தாய் கிடையாது என்பது பழமொழி.

உலகத்திற்கு மூலாதரமானது நிர்குண ப்ரஹ்மம். அது முக்குணமுள்ள மாயையின் சேர்க்கையால் ஸகுண ப்ரம்மமாகிறது.ஸத்வகுணத்தால் விஷ்ணுவாகவும் ரஜோகுணத்தால் ப்ரஹ்மாவாகவும் தமோ குணத்தால் ருத்ரனாகவும் ஸகுண ப்ரஹ்மம் வழங்கப்படுகிறது.

விஷ்ணுவும் ராவணாதி ஸம்ஹார காலத்தில் சிவமே. சிவனும் பக்தனை பரிபாலிக்கும்போது விஷ்ணுவேயாவர். இது மாத்திரமல்ல.

உபாஸகர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு பரப்ரஹ்மமும் லக்ஷ்மீ, ஸரஸ்வதி, கௌரீ என்ற மூன்று வித ரூபங்களையும் எடுத்துக்கொள்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகினறன.

தேவிக்கும் ப்ரஹ்மத்திற்கும் தர்ம தர்மி ஸம்பந்தம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எனினும் தேவியின் உருவம் ஸச்சிதானந்த ப்ரஹ்ம ஸ்வரூபமே தவிர வேறு எதுவும் இல்லை.

தத் பத லக்ஷ்யார்த்தா, சிதேகரஸ ரூபிணீ, நிர்குணா, நித்யா என்ற பெயர்களும் தேவியின் ப்ரஹ்ம ரூபத்தைக் காட்டுகினறன. ஆகவே தேவியை ஸ்த்ரீ என்றோ, புருஷன் என்றோ, நபும்ஸக மென்றோ கொள்ளக்கூடாது.

நாம் நம்முடைய தாயையே அப்படி நினைக்கிறதில்லை. தாயாகப் பகவானை நினைத்துத் துதித்தாலும் பூஜித்தாலும் த்யானித்தாலும் நமக்குச் சீக்கிரம் ஸித்திகள் உண்டாகும். ஆதலால் தாயாகப் பகவானை வழிபடுவது உத்தமமான கொள்கை.

தேவியின் இருப்பிடம் மஹா மேரு மத்தியில் ஸ்வர்ண மயமான நகரமென்று ஸ்ரீ துர்வாஸர் லலிதாஸ்தவரத்தினத்தில் கூறுகிறார். அவ்விடம் இரண்டு நகரங்களுள். ஒன்று க்ஷீரஸமுத்ர மத்தியில் இருக்கிறது. ரத்னமயமானது. சுற்றிலும் கல்ப விருஷங்களாலும் மந்தாரம், பாரிஜாதம், கதம்பம் முதலிய விருஷங்களாலும் சூழப்பட்டுள்ளது. அதன் மத்தியில் புஷ்பராக ரத்ன பிராகாரம். அதன் பின் கிரமமாகப் பத்மராக மணிப் பிரகாரம், கோமேதகரத்னப் பிரகாரம் வஜ்ர பிரகாரம்,

மரகதமய ரத்ன பிரகாரம், பவழரத்ன பிரகாரம் இவைகளுக்குள் மாணிக்க்ய மண்டபம். அதற்குள் ஆயிரங்கால் மண்டபம். அதற்குள் மஹா பத்மாடவீ மத்தியில் ஒர் சிந்தாமணி மயமான கிருஹத்தில் இருக்கிறாள் தேவி.

அந்த கிருஷத்திற்கு நான்கு வாசல்கள். பூர்வாம்நாயம். தக்ஷிணாம்நாயம் முதலியவைகள். கிருஹ மத்தியில் பிரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈச்வரன் எண தேவமயமான கால்கள் கொண்ட மஞ்சத்தில் ஸிம்ஹாசஸனத்தில் வீற்றிருக்கிறாள்.

தேவி இருக்கும் ஸ்தானம் ஒன்பது சக்கரங்களால் சூழப்பட்டுள்ளது. முதலில் த்ரைலோக்ய சக்ரம். இதில் அணிமாதி ஸித்திகள் தேவீ ரூபத்தை எடுத்துக் கொண்டு காத்துவருகிறார்கள். தவிரவும் பிராஹ்மீ, மஹேச்வரீ முதலிய ஸப்த மாதாக்களும் ஸர்வஸம்க்ஷேபிணீ முதலிய பிரகட யோகினிகளும் தேவியை ஸேவித்து வருகிறார்கள்.

இரண்டாவது ஸர்வசா பரிபூரக சக்ரம். அதில் கர்மாகர்ஷிணீ, புத்தி ஆகர்ஷிணீ முதலிய தேவிகள் வீற்றிருக்கின்றன. இவர்கள் குப்த யோகிகள் எனப்படுவர்.

மூன்றாவது ஸர்வஸம்க்ஷேபண சக்ரம். அதில் அநங்க குஸுமா முதலிய தேவிகள் அனுக்ரஹம் செய்கின்றார்கள்.

 நான்காவது ஐந்தாவது ஸர்வாத்த ஸாதக சக்ரம். அதில் ஸர்வ ஸித்திப்ரதா, ஸர்வ ஸம்பத் ப்ரதா முதலிய தேவிகள் அனுக்ரஹம் செய்கிறார்கள்.

ஆறாவது ஸர்வரத்னாகர சக்ரம். அதை ஸர்வக்ஞாதேவி, ஸர்வ சக்தி தேவி முதலியவர்கள் பரிபாலிக்கிறார்கள்.

ஏழாவது ஸர்வ ரோகஹர சக்ரம், வசிநீ வாக் தேவி முதலியவர்களால் சூழப்பட்டது.

எட்டாவது ஸர்வஸித்திப்ரதசக்ரம், காமேசுவர காமேசுவரிகளின் ஆயுதங்கள் தேவதா ஸ்வரூபத்தை எடுத்துக்கொண்டு தயாராக இருக்கின்றன.

ஒன்பது ஸர்வாநந்தமய சக்ரம். அதன் மத்தியில் பரப்ரஹ்ம ஸ்வரூபமான பிந்து ஸ்தானத்தில் ஸ்ரீ லலிதா தேவி வீற்றிருக்கினாறாள்.

ஆகவே இப்படிப்பட்ட ஸ்தானத்தில் தேவீ வீற்றிருக்கின்றாள் என்றும் அவளுக்குப் பரிசாரக தேவிகள் ஸகல அபீஷ்டகத்தையும் கொடுக்க வல்லவர்கள் என்றும் தியானித்தாலேயே நமக்கு வேண்டியவைகள் கிடைக்கு மென்றும் இருக்க அவர்களைப் பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ தேவியின் ஸ்தானமான ஸ்ரீ சக்கரத்தைப் பூஜித்தால் அபீஷ்டகங்கள் ஸித்திக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா.

பகவத்பாதர்கள் தேவியிடம் மிகவும் ஈடுபட்டவர்கள். தேவி பரமாகப் பல ஸ்துதிகளும் மானஸ பூஜைகளும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு அமிர்தமயமாக இருக்கும். தேவீ பக்தர்களுக்கு வாக்விலாசம் மிகவும் அழகாக இருக்கும். காளிதாசனுக்குத் தேவீ அனுக்ரஹத்தால் வாக்ஸித்தி ஏற்பட்டது. அவர் தம் குருவான கீர்வாணேந்திர ஸரஸ்வதியைப் புகழும்போது ''ஸர்வாத்மநாசைல ஸுதாத்மகோ ய என்று அவர்கள் தேவீ பக்தியால் தேவீ ஸாயுஜ்யமடைந்ததாகச் சொல்கிறார்கள் ஆசார்களும் தேவீ மாநஸ பூஜையில்............

யத்ரஸ்மின் ஸமயே தவார்சன விதவானந்த ஸாந்த்ர ஸ யோ யாதோஹம் த்வபின்னதாம் தவ சிவே ஸோயம் ப்ரஸாதஸ் தவ

(அன்னையே உன் பூஜா காலத்தில் விஷயங்களை எல்லாம் மறந்து உன்னுடன்அபேதத்தை அடைந்திருப்பது உன் பிரசாதத்தால் அன்றோ) என்று சொல்லி தேவி ஸாயுஜ்யத்தை ஸசிக்கின்றார். ஸ்ரீகாமாக்ஷி தேவியினிடம் நிகரற்ற பக்தியுள்ளவர் மூக கவி. அவர்

லீயே புரஹர ஜாயே மாயே தவ தருண பல்லவச் சாயே|

சரணே சந்த்ராபரணே, காஞ்சீஸரணே நதார்த்தி ஸம்ஹரணே||

என்று சொல்லும்போது தாம் தேவியின் சரணத்தில் லயித்திருப்பதை ஸந்தோஷத்துடன் கூறுகிறார்.

தேவியின் துர்க்கை என்ற அவ​தாரம் ​ பக்தர்களுக்கு ஸகல ஸங்கடங்களிலிருந்தும் விடுதலை கொடுக்கும். துர்கா ஸப்த ஸதி பாராயணம் செய்பவர்கள் கஷ்டத்திலிருந்து விடுபடுகின்றனர்.

யுதிஷ்டிரர் 12 வருடம் காட்டில் வசித்துவிட்டுப் பிறகு அக்ஞாதவாஸம் போகும் காலத்தில் துர்க்கையைத் தியானித்துக் கொண்டு துதி செய்தார்.

அன்னையே எங்கள் அக்ஞாத வாஸத்தை ஒருவரும் அறியாதிருக்கும்படி நிறைவேற்றிப் பிறகு நாங்கள் ராஜ்யத்தை அடைய உதவி செய்வீராக என்று வேண்டிக் கொண்டார்.

துர்க்கை நேரில் தோன்றி யுதிஷ்டிரருக்கு வரம் கொடுத்து ஸமாதானம் செய்தாள் என்று மஹாபாரதத்தில் சொல்லியிருக்கிறது.
தேவியைக் கவிகள் எப்படி வர்ணிக்கிறார்கள் என்பதைக் கவனிப்போம்.

தேவியின் ஸ்வரமாதுர்யத்தைப் பற்றி ஆசார்ய பகவத்பாதாள்......

விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதே

த்வயாரப்தே வக்தும் சலித ஸிரஸா ஸாது வசனே

ததீயைர் மாதுர்யை ரபலபித தந்திரீ கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம்

தேவி ஸரஸ்வதீ தேவியானவள் உன் எதிரில் வீணையை மீட்டிக் கொண்டு பரமசிவனுடைய நாநாவித லீலைகளைப் பாடும்போது  அவளுக்கு சபாஷ் கொடுக்கும் பொருட்டு ஸாது என்ற வார்த்தையை உச்சரிக்குங்கால் ஸா என்ற அக்ஷரத்தை கேட்ட உடனேயே அந்த அக்ஷரத்தின் மாதுர்யம் வீணை ஸ்வத்தைத் தோற்கடிக்கவே ஸரஸ்வதீ தேவி தன் வீணையை உறையில் போட்டு மறைத்து விட்டாள். இப்படி  அவள் புகழை எழுதிக் கொண்டே செல்லலாம். அவள் அருளால் அவள் புகழ் பாடிக் கொண்டிருப்போம்.
அப்பைய தீக்ஷிதர்      
       
         மார்க்க பந்து ஸ்தோத்ரம்**
வழித்துணைவா உன்னை நமஸ்கரிக் கிறேன்**
இது அப்பய்ய தீக்ஷிதர் எழுதியது. அப்பய்ய தீக்ஷிதரும் ஒரு சிறந்த சிவபக்தர். ஸமஸ்க்ரிதத்தில் பாண்டித்யம் மிகவும் உள்ளவர். அவர் சிவபெருமானை எனக்கு துணைக்கு வா என்று பயணம் மேற்கொள்ளும்போது வழியில் எந்த ஆபத்தும் வராமல் காக்கவேண்டும் என்று கேட்பது அற்புதமாக புரிகிறாற் போல் உள்ளது:**
என் தகப்பனார் வீட்டை விட்டு எங்கு சென்றாலும் இந்த ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டே நடப்பார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நொண்டிச்சிந்து  ராகத்தில்  ''நந்தவனத்தில் ஓர் ஆண்டி'' மெட்டில் பாடிப் பாருங்கள் .உற்சாகமாக இருக்கும்.

**शिव शम्भो महादेव देव शिव शम्भोशम्भो महादेव देव ..
சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ,     தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ

மகாதேவா நீயே வாழ்வளிப்பவன், சாந்தி அருள்பவன், சகல சௌபாக்கியங்களும் அள்ளி தருபவன். உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.**

फालावनम्रत् किरीटं.   भालनेत्रार्चिषा दग्धपंचेषुकीटम्  शूलाहतारातिकूटं
शुद्धमर्धेन्दुचूडं भजे मार्गबंधुम् .. शम्भो
பாலாவநம் ரத்ந கிரீடம் பாலநேத்ராச்சிஷா தக்த பஞ்சேஷுகீடம்
சூலா ஹதாராதிகூடம் சுத்தமர்த் தேந்து சூடம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

என்னை வழிகாட்டி நடத்திச் செல்லும் என் உற்ற நண்பன் சாம்பசிவன் தலையில் பளபளவென்று மின்னும் கிரீடம் அணிந்தவன், கையில் தரித்த சூலாயுதத்தால் எதிரிகளை த்வம்சம் செய்பவன். குளிர்ச்சியோடு கண்ணைப் பறிக்கும் அமிர்தம் சொட்டும் இளம்பிறையை சிரத்தில் சூடியவன், அதே சமயம் நெற்றிக்கண் அக்னியால் மன்மதன், திரிபுரத்தையும் அழித்தவன், பரமேஸ்வரா, நீயே எனக்கு வழித்துணைவனாக மார்கபந்துவாக வந்து ரக்ஷிக்க வேண்டும்.

अंगे विराजद् भुजंगं    भ्र गंगा तरंगाभि रामोत्तमांगम्  ॐकारवाटी कुरंगं
सिद्ध संसेवितांघ्रिं भजे मार्गबंधुम् .. शम्भो..

 அங்கே விராஜத் புஜங்கம் அம்பரகங்கா தரங்காபி ராமோத்த மாங்கம்
ஓங்கார வாடீ குரங்கம் ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

சர்ப்பம் சங்கரனின் ஆபரணம். அவன் உடலில் கழுத்தில், சிரத்தில் நாகம் குடிகொண்டிருக்கும். இன்றும் எத்தனையோ சிவாலயங்களில் நாகம் வசிக்கிறது. அம்புலியோடு அழகிய கங்கையையும் சிரத்தில் சூடியவனே, பிரணவம் எனும் ஒம்கார நந்தவனத்தில் மான் போல் துள்ளி விளையாடுபவராக காணும் ஆனந்த நடேஸா , சகல ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும், ஞானிகளும் பூஜிக்கும் திருவடியை உடையவனே, வா வந்து வழிகாட்டு வழித்துணைவா, மார்க்க பந்துவே உன்னை நமஸ்கரிக்கிறேன் என்னை ரக்ஷித்தருள்

नित्यं चिदानंदरूपं   निह्नुताशेष लोकेश वैरिप्रतापम्  कार्तस्वरार्गेद्र चापं
कृतिवासं भजे दिव्य मार्गबंधुम् .. शम्भो.

.நித்யம் சிதானந்த ரூபம் நின் ஹுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்
கார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம் க்ருத்தி வாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும் (சம்போ)
பரமேஸ்வரா, நீ சத்யன், நித்யன், பரம்பொருள், சிதானந்த ரூபன், சாதுக்களை இம்சிக்கும் ராக்ஷஸர்களை, கொடூரர்களை உடனே அழிக்கும் சக்தி ஸ்வரூபா, களிற்றின் தோலில் ஆடை அணிந்தவா, தங்க மேரு போன்ற வில்லை யுடையவரும், சத்யஸ்வ ரூபனுமான சாஸ்வதமானவருமான, மார்கபந்து, வழிகாட்டியருளும் தெய்வமே, உன்னை சரணடைந்தேன். நிர்பயமாக நான் பயணத்தை மேற்கொள்ள கூடவே வந்து வழித்துணை வனாக காத்தருள்வாய்.**

कंदर्प दर्पघ्नमीचं   कालकण्ठं महेशं महाव्योमकेशम् *कुन्दाभदन्तं सुरेशं
कोटिसूर्यप्रकाशं भजे मार्गबंधुम् .. शम्भो..
கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம் காலகண்டம் மஹேசம் மாஹ வ்யோ மஹேசம்
குந்தாபதந்தம் ஹுரேசம் கோடி சூர்ய ப்ரகாசம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

மன்மதனுடைய கர்வத்தை,  தலைக் கனத்தை அடக்கி அவனை அழித்தவரும், ஆலஹால விஷத்தை விழுங்கிய நீலகண்டரும், பரந்த ஆகாகாசத்தை விரிந்த சடையாக கொண்டவரும், வெண்ணிற மல்லிகைப்பூக்களை, அரும்புகளை போல் பற்களை கொண்டவரும், பொன்னார் மேனியர், கோடி சூர்ய பிரகாசத்தை தனது ஒளியாக கொண்டவருமான பரமேஸ்வரன் மார்கபந்துவாக என்னோடு கூட பிரயாணம் செயது என் வழித்துணை வனாக வந்து என்னை ரக்ஷிக்க வேண்டும் .

मंदारभूतेरुदारं मंथरागेन्द्रसारं महागौर्यदूरम् सिंदूर दूर प्रचारं
सिंधुराजातिधीरं भजे मार्गबंधुम् .. शम्भो..
மந்தார பூதேருதாரம் மந்தார கேந்த்ர ஸாரம் மஹா கௌர்ய தூரம்
ஸிந்தூர தூரப்ராசரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

மந்தார புஷ்பம் சிவனுக்கு ரொம்ப  பிடிக்கும். மந்தாரம் ஒரு கற்பக விருக்ஷம். கேட்பதெல்லாம் அ ளிக்கும், சிவனின் உடலோ மந்தரமலையை விட உறுதியானது. பலமிக்கது. கௌரியை இணைபிரியா அர்த்தநாரிஸ்வரா, தாம்ரவர்ணா , ரிஷபாரூடராக எங்கும் காட்சி தருபவரே, தைரியத்தில்,  தீரத்தில், சமுத்ரராஜனை மிஞ்சியவனே, என்னோடு சேர்ந்து கூடவே வழித் துணைவனாக வா, மார்க்க பந்து, வழித்துணை நண்பா உன்னை போற்றி வணங்குகிறேன்.**

अप्पय्ययज्वेन्द्रगीतं स्तोत्रराजं  पठेद्यस्तु भक्त्या प्रयाणे  तस्यार्थसिद्दिं विधत्ते
मार्गमध्येऽभयं चाशुतोषी महेशः ||
அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம் ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்த ஸித்திம் விதத்தே மார்க மத்யே பயம் சாசு தோஸோ மஹேச; (சம்போ)
இது பலச்ருதி. யாரெல்லாம் பிரயாணம் மேற்கொள்கிறார்களோ, வழியில் எந்த இடையூறும், தடங்கலும் இல்லாமல் இனிய பயணமாக நிறைவு பெற இந்த மார்க்க பந்து ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்துவிட்டு பிரயாணம் துவங்கினால் சகல காரியமும் சித்தியாகும், சந்தோஷம் அபரிமிதமாக கிடைக்கும், இந்த அப்பய்ய தீக்ஷிதர் ஸ்லோகங்கள் பழையகாலத்தில் வழிப்போக் கர்கள் விடாமல் சொல்லும் மந்திரமாக இருந்தன. அப்போது மின்சாரம் இல்லை, துஷ்ட மிருகங் கள், கள்வர்கள் பயம், இருட்டு, விஷ ஜந்துக் கள் இவற்றிடமிருந்து பாது காக்க உதவியாக இருந்தது. இன்று  கொரோனா  போன்ற வேறுவிதமாக பயம் பிரயாணத்திலும்  இருக்கிறது என்பதால் இந்த ஸ்லோகம் இன்றும் மிக்க பயனுள்ளது. பயத்தை போக்குவது. சிவன், சம்பு , கூடவே வழித்துணை வனாக, மார்க்க பந்துவாக வருவான் . தேவை.

புதன், 22 ஜூலை, 2020

அமாவாஸ்யையை கணிக்கும் முறை.ஶ்ராத்த திதிக்கும் இதேதான் கணக்கு.

பஞ்சாங்கத்தில் பகற்பொழுதை "அஹஸ்"என்ற சொல்லால் குறிப்பிட்டு இருப்பார்கள்.அஹஸ்ஸானது முப்பது நாழிகைக்கு வெயில் காலங்களில் கூடுதலாகவும் பனி காலங்களில் குறைவாகவும் இருக்கும். ஆந்த அஹஸ்ஸை ஐந்தாக பிரித்துக்கொள்ளவேண்டும்.
அவை
1)ப்ராத:காலம்
2)ஸங்கவகாலம்
3)மாத்யாஹ்னகாலம்
4)அபராஹ்ன காலம்
5)சாயாஹ்ண காலம்
என்பனவாகும்.

இவற்றில் ஜன்மநக்ஷத்ரம், ஷஷ்ட்ப்த பூர்த்தி, வ்ரதங்கள் ஆகியவை ப்ராத:காலத்தை வைத்து கணிக்கப்படும்.

காயத்ரி ஜபம்,தீட்டின் நிவ்ருத்தி ஆகியவை ப்ராயஶ்சித்தங்களை  ஸங்கவ காலத்தை வைத்து.

நாந்தி முதலியவை மத்யாஹ்ன காலத்தை வைத்து

அமாவாசை ,சிராத்ததிதி நிர்ணயத்திற்கு அபராஹ்ன எனப்படும்  பிற்பகல் 01:12 மணிமுதல் 03:36 வரையில் திதி இருப்பதை கொண்டு நிர்ணயிக்கவேண்டும்.இரண்டு நாளும் அபராஹ்ன வ்யாப்தி இருந்தால் அதிகவ்யாப்தி என்றைக்கு அன்றைக்குதான் அமாவாஸ்யை பித்ருதர்ப்பணதினம்,சிராத்ததிதி.

*அயல் நாடுகளில் உள்ளவர்கள் ஸங்கல்பங்கள் செய்யும் பொழுது _"பாரத வருஷே"_ என்ற இடத்தில் என்ன சொல்வது என்ற சிறு தடுமாற்றத்தை போக்கவே இந்த பதிவு.......*

01. இந்தியா — *பாரத வர்ஷம்*.,

02. அட்லாண்டிக் பெருங்கடல் — *கேதுமாலா வர்ஷம்*.,

03. ஐரோப்பா — *ஹரி வர்ஷம்*.,

04. வடதுருவம் — *இலாவ்ருத வர்ஷம்*.,

05. தென் அமெரிக்கா — *குரு வர்ஷம்*.,

06. வட அமெரிக்கா — *ஹிரண்யக வர்ஷம்*.,

07. Green Land — *ரம்யக வர்ஷம்*.,

08. ஆசியா — *கிம்புருஷ வர்ஷம்*.,

09. பஸிபிக் சமுத்திரம் — *பத்ராஸ்வ வர்ஷம்*.

அயல் நாடுகளில் ஸங்கல்பங்களுக்கு இவற்றை கையாளலாம்.

ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.
தெய்வத்துக்கு பிடித்த எட்டு புஷ்பங்கள் : --
அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் – இறைவனுக்கு பிடித்த எட்டு புஷ்பங்களில் முதன்மையாக அஹிம்சையே சொல்லப்பட்டிருக்கிறது. கொசுவாக இருக்கட்டும். மனிதனாக இருக்கட்டும்… எல்லாமே ஜந்துதான்.இன்னொரு ஜீவனை அழிக்க உரிமை கிடையாது. அஹிம்சை என்பது ரொம்ப முக்கியம்.
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ – கடைபிடிப்பதிலேயே கஷ்டமானது இதுதான். ஐம்புலன்களையும் அடக்கிவிட்டு உள்ளன்போடு புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ: என்று சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கும் இறையருளே உதவும்.

சர்வ பூத தயா புஷ்பம் – பூத தயை என்றால் எல்லா விலங்குகளிடமும் தாவரங்களிடமும் அன்புடன் இருத்தல்என்று பொருள். மரங்களை வெட்டுவது பாவம் என்கிறது வேதம். தாவரங்களிடத்தும் நமக்கு தயை இருக்கவேண்டும் என்று பகவான் எதிர்பார்க்கிறார்.

க்ஷமா புஷ்பம் விசேஷத: – க்ஷமை என்றால் இரட்டையை பொறுத்துக்கொள்ளும் குணம். இரட்டை என்றால்?இரண்டு எல்லைகள் என்று பொருள். உஷ்ணம் – குளுமை; சுகம் – துக்கம்; லாபம் நஷ்டம்; எல்லாவற்றையும்சமமாக பாவிப்பது. பூமி மாதாவுக்கு க்ஷமா என்றொரு பெயர். ராமனுக்கு க்ஷமயா தரித்ரி என்று ஒரு வர்ணனை – பூமியைப்போல் பொறுமை காப்பவன் என்ற பொருள்.

சாந்தி புஷ்பம் – மனமது அடங்கி உள்ளம் பகவானிடம் கரைந்த நிலையில் எழும் அமைதியே புஷ்பம்.

தவம் புஷ்பம் – எம்பெருமானை எப்போதும் நினைத்து தவம் பண்ணுவதும் ஒரு புஷ்பம். தவம் என்றால் ஒன்றையேநினைத்து உருகுதல். அந்தியும் பகலும் நிரறாத கண்களால் பகவானுடைய திருக்கல்யாண குணத்தை நினைத்துநினைத்து உருகுவதே தவம்.

ஞானம் புஷ்பம் – நல்ல ஞானம் – ஐயம் திரிபற்ற முறையில் மஹான்களிடத்தில் கேட்டு பெற்ற ஞானம் புஷ்பம்.தெளிந்த ஞானத்தை பெறுவதோடல்லாமல் மற்றவரை தெளிவிக்கவும் வேண்டும்.

த்யானம் புஷ்பம் – காற்றில்லாத இடத்திலே ஏற்றி வைக்கப்பட்ட தீப ஜ்வாலையைப்போல் ஒரே ரீதியாக ஆடாமல் அசையாமல் இருப்பது. மனம் சஞ்சலமடையாமல் எம்பெருமானை த்யானம் செய்வது.

சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதி கரம்பவேத்:

விஷ்ணுவுக்கு உகந்த புஷ்பம் சத்யம். உள்ளதை உள்ளவாறு சொல்வதல்ல சத்யம். அதை மனதுக்கு இதமான முறையில், சுயநலமாகவோ முகஸ்துதியாகவோ இல்லாமல், பிறருடைய துன்பம் குறையும் வகையில் சொல்லப்படும் உண்மையின் வடிவமே சத்யம். சத்யமே எல்லாவற்றுக்கும் முதன்மையானது. இவ்வாறு சத்யம் உள்ளிட்ட எட்டு புஷ்பங்கள் பகவான் விஷ்ணுவுக்கு ரொம்ப ப்ரீதியானவை.

अहिंसाप प्रथमं पुष्पं । पुष्पंमिन्द्रिय निग्र: ॥
सर्वभूतदया पुष्पं । क्षमा पुष्पं विशेषत: ॥
शान्ति पुष्पं: तप: पुष्पं । ध्यान पुष्पं तथैवच: ॥
सत्यं अष्दमिदं पुष्पं । विष्णोर् प्रितिकरं भवेत् ॥

சர்வம் விஷ்ணுமயம் ஜகத்:

(முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் உபதேசங்களிலிருந்து)
#சிவ_சிவ

அருள்மிகு விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில், விருத்தாசலம்.

ஆராய்சியாளர்களால்
3 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என கணிக்கப்பட்ட தலம்.
3000 ஆண்டுகள் பழமையான வன்னிமரத்தை தலவிருட்சமாக கொண்ட தலம்.
பிரளயகாலத்திலும் அழியாத தலம்.
நடுநாட்டின் 22 சிவதிருத்தலங்களில் 9வது தலம்.
சைவ சமயத்தின் 28 ஆகமங்களுக்கும் 28 லிங்கங்களை முருகபெருமானே நிலைநிறுத்தியதாக அறியப்படும் ஒரே தலம்.
இல்லற வாழ்விலும் ஈசனை இடைவிடாது வழிபட்ட நாதசர்மாவும் அனவர்த்தியும் சிவகணங்களாகவே ஆன தலம்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை மணிமுத்தாற்றில் இட்ட தலம். (பின்னர், திருஆரூர் கமலாயகுளத்தில் எடுத்தார்).
உலகபடைப்பில் சிவபெருமானே மலையாக தோன்றியதால் பழமலைநாதர் என பெயர் பெற்ற தலம்.


பஞ்சாட்சர ஐந்தெழுத்து மந்திரத்தின்படி இத்திருகோவிலில் அனைத்தும் ஐந்து ஐந்தாக இருப்பது வேறெங்கும் காண இயலாத சிறப்பாகும்.

பதிவின் முடிவில் நமக்கு மிகவும் தேவையான ஐந்தும் உள்ளது ஐயா.....

ஐந்து மூர்த்தங்கள்: 
விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்

ஈசனின் ஐந்து திருநாமங்கள்: விருத்தகிரீஸ்வரர்
பழமலைநாதர்
விருத்தாசலேஸ்வரர்
முதுகுன்றீஸ்வரர்
விருத்தகிரிநாதர்

ஐந்து விநாயகர்கள்:
ஆழத்து விநாயகர்
மாற்றுரைத்த விநாயகர் முப்பிள்ளையார்
தசபுஜ கணபதி
வல்லப கணபதி

இறைவனை தரிசனம் கண்ட ஐவர்:
உரோமச முனிவர்
விபசித்து முனிவர்
குமார தேவர்
நாத சர்மா
அனவர்த்தினி

ஐந்து கோபுரங்கள்:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்

ஐந்து பிரகாரங்கள்(திருச்சுற்று):
தேரோடும் திருச்சுற்று
கைலாய திருச்சுற்று
வன்னியடித் திருச்சுற்று
அறுபத்து மூவர் திருச்சுற்று பஞ்சவர்ணத் திருச்சுற்று

ஐந்து நந்திகள்: 
இந்திரநந்தி
வேதநந்தி
ஆத்மநந்தி
மால்விடைநந்தி
தர்மநந்தி

ஐந்து உள் மண்டபங்கள்:
அர்த்த மண்டபம்
இடைகழி மண்டபம்
தபன மண்டபம்
மகா மண்டபம்
இசை மண்டபம்.

ஐந்து வெளி மண்டபங்கள்: 
இருபது கால் மண்டபம் தீபாராதனை மண்டபம் நூற்றுக்கால் மண்டபம்
விபசித்து மண்டபம்
சித்திர மண்டபம்

ஐந்து வழிபாடுகள்: 
திருவனந்தல்
காலசந்தி
உச்சிகாலம்
சாயரட்சை
அர்த்த ஜாமம்

ஐந்து திருவிழாக்கள்:
வைகாசி வசந்த உற்சவம்
ஆனி திருமஞ்சனம்
ஆடிப்பூரம் திருக்கல்யாணம்
மார்கழி திருவாதிரை
மாசிமகம் 10நாள் பிரம்மோற்ஸவம்.

ஐந்து தேர்கள்:
விநாயகர் தேர்
முருகன் தேர்
பழமலை நாதர் தேர்
பெரியநாயகி தேர்
சண்டிகேஸ்வரர் தேர்

தலத்தின் ஐந்து பெயர்கள்: திருமுதுகுன்றம்
விருத்தகாசி
விருத்தாசலம்
நெற்குப்பை
முதுகிரி

பெருமானின் பம்பர் பரிசு:
இத்தலத்தில் பிறந்தால்,
வாழ்ந்தால், வழிபட்டால்,
நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட நமக்கு முக்தி நிச்சயமாம்.

எம்பெருமான் அருளால் தங்களை இத்தலத்தை நினைக்க வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
பெரும் பேறு பெற்றீர்கள் ஐயா !

கடைசியாக.......
இத்தலத்தை தரிசித்ததால் அடியேனுக்கு ஏதேனும் பலன் இருப்பின் அவை அனைத்தையும்  இப்பதிவை  படித்தோருக்கு பழமலைநாதர் மீது ஆணையாக மனதார அளிக்கிறேன்.

நன்றி

திருச்சிற்றம்பலம்
இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு ஶ்ரீ மஹாகணபதி கோவில், கோகர்ணா, கர்நாடகா

இது சாலையின் அருகில் ஒரு சிறிய கோவில் போல் தெரிகிறது… இருப்பினும், இது சாதாரண கோவில் அல்ல, ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு (சுமார்  5000ம் வருடங்கள்) முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது கோகர்ணாவில் உள்ள மஹாகணபதி கோவில்.

ராமாயணத்தின் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ராவணன், சிவபெருமானின் வசிப்பிடமான கைலாயத்திலிருந்து சென்று ஒரு லிங்கத்தைக் இலங்கைக்கு  கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்தார். ராவணணன் தான் இலங்கையிலேயே சிவனை வழிபடவும், தனது தாய் வழிபடவும், கடும் தவமிருமிருந்து வரங்களை பெற்றான், அதன் அடிப்படையில் ராவணனுக்கு சிவ பெருமான் தனது ஆத்மாவின் பிரதியான ஒரு ஆத்ம லிங்கத்தை ராவணனுக்கு தருகிறார்.

இந்த ஆத்ம லிங்கம் ஶ்ரீலங்காவிற்க்கு எடுத்துச்செல்லப்பட்டால், ராவணன் யாராலும் கொல்ல முடியாத பராக்ரமசாலியாக மாறிவிடுவான் என்று சிவபெருமான் அறிந்திருந்தார்.

இதை அறிந்த தேவர்கள் அனைவரும், இது ஆபத்தின் அடையாளம் என்று அஞ்சிய அவர்கள், ராவணன் ஆத்ம லிங்கத்தை
ஶ்ரீ லங்காவுக்கு எடுத்துச் செல்வதைத் தடுக்க கணேசரிடம் உதவி கேட்டார்கள். விநாயகர் ஒரு சிறுவனின் வடிவில் இராவணனை அணுகினார், அதே நேரத்தில் தேவர்கள் வானத்தை இருட்டடித்து சூரிய அஸ்தமனத்தின் மாயையை உருவாக்கினர். நித்ய கர்மாவான ஸந்த்யாவந்தனத்தை விடாது செய்யும்  பக்தியுள்ள விசுவாசியாக இருந்த ராவணன், சூரியன் மறையும் முன் தனது மாலை ஸந்த்யாவந்தனத்தை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தான். ஶ்ரீ லங்காவை அடைவதற்கு முன்பு ஆத்மலிங்கத்தை தரையில் வைக்க கூடாது என்று சிவனால்  கூறப்பட்டிருந்ததால், ராவணன் மிகவும் தெய்வாம்சத்துடன் தோன்றிய சிறுவனிடம்,
ஸந்த்யாவந்தனத்தை
செய்யும்போது லிங்கத்தைப் கையிலேயே பிடித்து இருக்க சொன்னான்

அந்த சிறுவன் சம்மதித்தான், ஆனால் ஒரு நிபந்தனையை வைத்தான் - தன்னால் முடிந்தவரை மட்டுமே அதை வைத்திருப்பான். பின்னர் அவர் மூன்று முறை கூப்பிடுவேன். அதற்குள் ராவணன் திரும்பி வரவில்லை என்றால், அவன் லிங்கத்தை தரையில் வைத்துவிட்டு போய்விடுவேன் என்று கூறினான். ராவணன் ஒரு குழப்பத்தில் இருந்தான், ஆனால் சம்மதித்து, தனது ஸந்த்யாவந்தனத்தை தொடங்கினான். குறிப்பைப் போல, சிறுவன் கூப்பிட்டான் “லிங்கம் கனம் மிகவும் அதிகரிக்கிறது. இனி என்னால் அதை கையில் வைத்திருக்க முடியாது. வந்து அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்என்று கூச்சலிட்டான்.! ”ராவணன் சிறுவனைப்பார்த்து சற்று பொறு வந்துவிடுகிறேன் என்று சைகை செய்தான். ஆனால் ஆத்மலிங்கத்தை சிறுவன் தரையில் வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

அவசர அவசரமாக வந்த ராவணணன் சிறுவன் தரையில் லிங்கத்தை வைத்துவிட்டு போனதற்க்கு கோபப்பட்டான். அப்போதைக்கு சிறுவனை விட்டுவிட்டு, ராவணன் தனது கவனத்தை லிங்கத்தின் பக்கம் திருப்பி, அதை தரையில் இருந்து எடுக்க முயன்றான், ஆனால் அவனுடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகின. ஆத்மலிங்கத்தை தரையில் இருந்து எடுக்க முடியவில்லை. அவன் முறுக்கித் திருப்பி இழுத்தாலும், அது அங்கேயே அப்படியே இருந்தது. அவரது செயல்களின் பயனற்ற தன்மையை உணர்ந்தபோதுதான், ராவணன் தனது கவனத்தை பிரச்சினைக்கு  காரணமான சிறுவன் மீது திருப்பினான் - சிறுவன், ஆபத்தை உணர்ந்து ஓட ஆரம்பித்திருந்தான், ஆனால் ராவணன் பிடித்து, தலையில் குட்டினான். சிறுவன் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்திய போது தான் தேவர்கள் தன் மீது இத்தகைய தந்திரத்தை விளையாடினார்கள் என்று ராவணன் அதிர்ச்சியடைந்தான். பின்பு ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து, ஆத்மலிங்கம் இல்லாமல் ஶ்ரீலங்கா சென்றான்.

தரையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆத்ம லிங்கத்தின் மீது இங்கு முதன்முதலில் ஒரு கோவிலைக் கட்டியது ராவணன் என்று கூறப்படுகிறது. அது ‘மகாபலேஸ்வரர்’ - சக்திவாய்ந்த லிங்கம் என்று அறியப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து வந்த மன்னர்கள் கோவிலைக் புனரமைத்தனர், இங்கு கோவில் கொண்டிருக்கும் லிங்கத்திற்கு பொறுப்பானவர் - விநாயகர். அவர் ‘மஹாகணபதி’ என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் இங்கு நிற்கும் தோரணையில் காணப்படுகிறார்,  மேலும், அவரது தலையில் ஒரு சிறிய குழி உள்ளது, இது இராவணனின் குட்டியதால் வந்தது என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலின் துவாரபாலகர்கள் கூட விநாயகராகவே இருக்கின்றனர்.

கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை,

மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கடற்கரையோரத்தில் 6 விநாயகர் கோவில்கள் உள்ளன, அவை விநாயகரை ஒரே வடிவத்தில் காட்டுகின்றன. 

கரையோர கர்நாடக சுற்றுப்பயணத்தில் இந்த கோவில்களைப் தரிசிக்கலாம். அவற்றைப் பற்றி இங்கே எழுதியுள்ளோம்.

மற்ற 5 கோவில்களும் இடகுஞ்சி, ஆனேகுடே, ஹட்டியங்கடி, மங்களூர் மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் அமைந்துள்ளன, நீங்கள் எப்போதாவது இப்பகுதியில் இருந்தால், சென்று தரிசிக்கவும் உங்கள் பயணத்தைத் திட்டமிட உதவும் சில விவரங்கள் இங்கே:

கோவில்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ மஹா கணபதயே நம:
ஒரு அம்மா சொன்னார் " நான் நிறைய ஸ்லோகங்க‌ள் பாராயணம் செய்கிறேன் ! மத்தியானம் சாப்பிடவே ஒரு மணியாகின்றது ! ஆனாலும் என் பிரச்சினைகள் தீரவில்லை ! பகவான் கண் பார்க்கவே இல்லை ! "

“ஸ்லோகம் சொல்லும் பொழுது ஸ்வாமியின் முன்னால் அம‌ர்ந்து கொண்டு ஸ்வாமியை மனதில் நிலை நிறுத்திக் கொண்டுதானே பாராயணம் ?” என்றேன் !

“அதெப்படி முடியும் ? குளித்துக் கொண்டும் பிற‌ வேலைக‌ளைப் பார்த்துக் கொண்டும்தான் சொல்லுகின்றேன் ! எல்லாம் என‌க்கு மனப்பாடம் ! தவ‌றுத‌லே வராது ! ” என்றார் அம்மையார்.

காய் நறுக்க வேண்டுமானால் அரிவாள் மணை அல்ல‌து கத்தியைக் அருகில் வைத்துக் கொள்கிறோம் !? சமைக்க வேண்டுமென்றால் அடுப்பிற்குக் கிட்டே போகிறோம் !? குளிக்க, துவைக்க என்றால் தண்ணீரின் பக்கத்திலே போகிறோம் !? ஸ்கூட்டர், கார் எதுவானாலும் அத‌னிட‌ம் சென்று ஓட்டினால்தான் ஓடுகிற‌து !?

ஆனால் ஸ்வாமிக்கு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்றால் ந‌ம் மனது ஸ்வாமிக்குக் கிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” யாக‌ எங்கும் இருப்ப‌வ‌ன்தான் அவன் ! ஆனாலும், முக்கிய‌மான‌ பிரச்சினை ந‌ம‌க்குத் தீர‌ வேண்டும் என்றால் நாம்தானே ம‌ன‌தை ஒருநிலைப் ப‌டுத்தி அவ‌ன் பக்கத்தில் சென்று உட்கார்ந்து அனுசரணையாக‌ சிரத்தையாக‌ சொல்ல‌ வேண்டும் !? அப்ப‌டிச் சொன்னால் நிச்சயம் கேட்பான் !

வேறு வேலைக‌ளைக் கவனம் இல்லாமல் செய்தால் விபத்து நடக்கும் என‌ அறிந்து கொள்ளும் நாம் ப‌க‌வானுக்கு ம‌ட்டும் முழு க‌வ‌ன‌ம் இல்லாமல் ஸ்லோகங்க‌ளை முணுமுணுத்தால் போதும் என்று நினைக்கலாமா ?

ம‌ல‌ர்ந்த‌ புது பூவைப் பார்த்தால் பகவானுக்குத் தரவேண்டும் என்று ஆசை வரவேண்டும் ! ந‌ல்ல‌ வாச‌மிகு சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்க வேண்டுமென்று எண்ண‌ம் வரவேண்டும் ! அம்பாளின் அல‌ங்கார‌ ரூப‌ம் எண்ணி ஒருநிலையாக‌ தியானம் செய்தால் கருணை செய்கின்றவ‌ள் அல்ல‌வா !?

கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டால் மூழ்கி விடும் ! ஆனால் மரத்தால் கப்பல் செய்து அதிலே எத்தனை கற்க‌ளை ஏற்றினாலும் மூழ்குவ‌து இல்லை !

கவலைகள் கற்க‌ளைப் போன்ற‌வை ! பகவான் தெப்பத்தைப் போன்ற‌வ‌ர் ! மனது என்கிற சமுத்திரத்தில் பகவானைத் தெப்பமாக்க‌ வேண்டும் ! தெய்வ‌த்தை இணைக்கின்ற ஆணிகள்தான் பூஜை மந்திரங்கள் எல்லாம் !

பிற‌கு, கவலைக‌ள் எனும் க‌ற்களைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம் ! சம்சார சாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் நாம் சுல‌ப‌மாக‌க் கரை சேர்ந்து விடலாம் !

                            - காஞ்சி ஸ்ரீ ம‌ஹா பெரிய‌வ‌ர்
நான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன்.

எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை.

ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும்.

காரணம், நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு, கடன்கள் பட்டு பல வருடங்களாக வாழ்ந்த நேரம் அது.

ஒருநாள் மதியம் திருவானைகா சிவன் கோவிலில் ( ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிரே உள்ளது.) கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட நடந்தே சென்றுவிட்டேன்.

சாப்பிட்டுவிட்டு அகிலாண்டேஸ்வரி சன்னதியில் வெளியே உள்ள மண்டபத்தில் "அம்மா நீ ஒருத்தி தான் எனக்கு உதவ முடியும்" என்று மனதில் கூறி அவளை வெளியில் இருந்தவாறே வேண்டி கும்பிட்டுவிட்டு களைப்பாற அமர்ந்தவன் எப்படியோ படுத்து உறங்கிவிட்டேன்.

அன்னையின் மடியில் படுத்து உறங்கியது போன்ற உணர்வு அன்று எனக்கு ஏற்பட்டது.

கனவிலே முருகன் வந்து 'என்னைப் பற்றி பாடு' என்றான்.

அன்னையின் எச்சில் என் உதட்டிலும், நாவிலும் பட்டு தெறித்தது.

'திடுக்'கிட்டு விழித்துக்கொண்டேன்.

'அம்மா, முருகா' என்று சொல்லி வணங்கிவிட்டு நடையாகவே வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டில் அனைவரும் 'எங்கே சென்றுவிட்டாய்? சாப்பிட்டாயா?' என்று கேட்டார்கள்.

'நண்பன் வீட்டில் அம்மா சாப்பாடு கொடுத்தார்கள்' என்று சமாளித்து விட்டேன்.

வீட்டில் சொல்ல முடியாது.

'அதுவும் சிவன் கோவிலுக்கு போனியா?' என்று வேற கேள்வி வரும். நண்பர்களிடம் மெதுவாக சொன்னேன்.

அங்கு கொடுத்ததோ ஒரு கையளவு பிரசாதம் தான், ஆனால் எனக்கு வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு,

பிறகு சாப்பிட்ட களைப்பு போல அங்கேயே தூங்கியதையும் சொன்னேன். கிண்டல் அடித்தார்கள், கற்பனை, கற்சிலை என்று எல்லாம் என்னிடம் நகையாடினார்கள்.

ஆனால் என் உள்ளுணர்வு சொல்லியது இது உண்மை என்று.
.
எனக்கு TMS அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும். அவரின் விலாசத்தை கஷ்டப்பட்டு வாங்கிவிட்டேன். நண்பர்கள் சொன்ன வரிகள் என்னை உறுத்தியது.

அதன் வரியில் முருகன் மேல் பாடல் புனைந்து TMS க்கு போஸ்ட் கார்டு லே எழுதி அனுப்பிவிட்டேன். அகிலாண்டேஸ்வரி தாயே நீயும் உன் மகனும் தான் இனி எனக்கு துணை என்று வேண்டிக்கொண்டேன்.
.
TMS இருக்கும் பிஸியில் என் போஸ்ட் கார்டை எங்கு பார்ப்பார் என்று நினைத்து மறந்துவிட்டேன்.

ஆனால் என் தாயின் அருள், முருகனின் கருணை TMS என் கார்டை பார்த்து, அவரே அதற்க்கு மெட்டும் போட்டு பாடிவிட்டார்.

பிறகு எனக்கு அவரிடம் இருந்து கடிதம் வந்தது, 'என் முருகன் பாடலை நீ எழுதி கொடுத்தாய், மிகவும் நன்றாக இருந்தது, நானே இசை அமைத்து பாடி உள்ளேன், வரும்
திங்கள் அன்று வானொலியில் காலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகும், கேட்டுவிட்டு உன் கருத்தை அனுப்பு, மெட்ராஸ் க்கு வா, உனக்கு நான் சன்மானம் தரணும், இது போன்று பாடல்கள் நிறைய நீ எழுது' என்று போட்டு இருந்தார்.

எனக்கு நம்ப முடியவில்லை, சந்தோசத்தில் 'தாயே, முருகா' என்று வீட்டிலேயே உரக்க கூவிவிட்டேன். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம், கோபம், என்னது என்று கோபமாக கேட்டார்கள்.

நான் பதில் பேசவில்லை, கடிதத்தை கொடுத்தேன். அனைவரும் வாங்கி படித்தார்கள்.

அவர்களுக்கும் சந்தோசம் தான்.

முகத்தில் தெரிந்தது, ஆனால் வெளியில் காட்டி கொள்ளாது இருந்துவிட்டார்கள்.

அப்பா மட்டும் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பதில் சொல்லவில்லை.

ஆனால் எனக்கு உற்ச்சாகம் அளித்தார், அப்போதும் அவர்
ரெங்கநாதனை பற்றி ஒரு பாட்டு எழுதி TMS பாடணும்
என்றார்.

எனக்கு உள்ளூர சிரிப்பு, இதுவரை சாப்பாடு போடாத ரெங்கநாதனை பற்றி நான் என்ன எழுதணும் என்று நினைத்தேன்.

அப்பா மெட்ராசுக்கு செல்ல உத்தரவு கொடுத்துவிட்டார்.

நண்பர்கள் தான் அதிக அளவு சந்தோஷப்பட்டார். மெட்ராஸ் சென்றேன், TMS சை பார்த்தேன், பாடலுக்குண்டான அன்பளிப்பாக சின்ன தொகையை கொடுத்து என்னை 'நீ ஏன் சீனிமாவுக்கு பாடல் எழுத கூடாது?' என்று கேட்டார்.

'நான் என்ன வர மாட்டேன் என்றா சொன்னேன்? கூப்பிடுங்கள் உடனே உங்கள் பின்னால் ஓடி வருகிறேன்' என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
.
ஒருநாள் அவர் என்னை விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்தி இவனை சரியாக பயன்படுத்து, நன்றா எழுதுகிறான் என்று சொல்லி வைத்தார்.

என் மனதில் தோன்றியது காசி விஸ்வநாதர் தான். அம்மையும் அப்பனும் எனக்கு கருணை புரிந்து விட்டார்கள் என்றே நினைத்தேன்.

ஆம் விஸ்வநாதன் உதவியால் நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த நான், சாப்பாட்டில் கை வைக்க நேரமில்லாமல் எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தேன்.''

- கவிஞர் வாலி.

வாலியின் முதல் முருகன் பாடல்:-
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
.
- கற்பனை என்றாலும்
.
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கவிஞர் வாலி
அண்ணாமலையாா் திருவடிகளை அன்புடன் வணங்குகின்றேன்.  "கேதார்நாத் ஏன் விழித்திருக்கும் மஹாதேவ் ' என்று அழைக்கப்படுகிறது..?

ஒரு முறை சிவ பக்தர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கேதார்நாத் சிவனை தரிசிக்க புறப்பட்டார். அங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை,
அவர் நடை பயணமாக . கேதார்நாத் வழி கேட்டபடி மனதில் சிவனை பார்த்துக்கொண்டே சென்றார்.

நடைபயணம் துவங்கி பல மாதங்கள் கடந்துவிட்டன. இறுதியாக ஒரு நாள் அவர் கேதார்நாத்தை அடைந்தார். .!

கேதார்நாத்தில் கோவிலின் கதவுகள் 6 மாதங்கள் திறந்திருக்கும் 6 மாதங்கள் மூடப்பட்டிருக்கும்.

அவர் அங்கு சென்று சேரும் நேரம் கோவிலின் கதவுகள் மூடப்பட்டன.
அவர் பண்டிட் ஜி அவர்களிடம், நான் தொலைவிலிருந்து மாதக்கணக்கில் வந்துள்ளேன் பண்டிட் ஜியிடம்  பிரார்த்திக்கிறேன், தயவு செய்து கோவில்  கதவுகளைத் திறந்து கடவுளை தரிசிக்க அனுமதியுங்கள் என கெஞ்சுகிறார்.
ஆனால் பண்டிட்ஜியோ கோவிலுக்கென்று  ஒரு விதி உள்ளது, ஒரு முறை மூடப்பட்டது பின்னர் மூடப்பட்டது தான். மீண்டும் திறக்க இயலாது என்கிறார்.

பக்தன் நிறைய அழுதான். மீண்டும் மீண்டும் சிவபெருமான் இறைவனை மனதினுள்ளே வேண்டினார். எல்லோரையும் பிரார்த்தித்தார், ஆனால் யாரும் கேட்கவில்லை.

பக்தரே தாங்கள் இப்போது சென்று மீண்டும் 6 மாதம் கழித்து வாருங்கள், 6 மாதம் கழித்து, இங்கு கதவு திறக்கப்படும் என்றார் பண்டிட்ஜி.

6 மாதங்கள் பனிக்கட்டி மற்றும் குளிர் மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

பக்தர் அழுதார். இரவு அழத்தொடங்கியது. இரவு இருட்டாக இருந்தது. ஆனால் பக்தர் சிவனை  சுவாசிப்பதை நிறுத்தவில்லை. நிச்சயம் அருள் புரிவான் என்று நம்பினார். மிகவும் பசியாகவும் தாகமாகவும் உணர்ந்தார். அப்போது யாரோ வரும் சத்தம் அவருக்கு கேட்டது.

ஒரு சன்யாசி  அவரிடம் வருவதை பார்த்தார். அந்த சன்யாசி  அவரிடம் வந்து அமர்ந்தார்.
அவர் பக்தரிடம் கேட்டார் - எங்கிருந்து வந்தாய் மகனே..? எல்லா நிலைகளையும் விளக்கிய பக்தர், என் வருகை இங்கே வீணாகிவிட்டது என அழுது புலம்பினார்.!

சன்யாசி அவருக்கு ஆறுதல் சொன்னார், அவருக்கு உணவும் கொடுத்தார். பிறகு  அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார்.

சன்யாசி  பக்தரிடம் கருணையாக  காலைல கோவில் திறக்கும்னு நினைக்கிறேன் மகனே என்றான். நீ கண்டிப்பாக சிவனை தரிசிக்கலாம் என்கிறார்.

பக்தனுக்கு தூக்கம் வந்ததே  தெரியவில்லை. அயர்ந்து தூங்கினார்.
திடீரென  பேச்சுக்குரலாலும் சூரிய ஒளியால் பக்தனின் கண்கள் திறந்தன.

அவர் சன்யாசியை தேடினார், ஆனால் அவர் எங்கும் இல்லை.பக்தர்  புரிந்துகொள்ள முற்படுகிறார்.

பண்டிட் ஜி தனது முழு சபையுடன் கோவில் திறக்க வருவதை பக்தர் காண்கிறார்.

பண்டிதரை வணங்கி ஐயா நேற்று 6 மாதம் கழித்து தான் கோவில் திறக்கும் என்று சொன்னீர்களே..?
இடைப்பட்ட காலத்தில் யாரும் இங்கு வரப்போவதில்லை என்றீர்களே, ஆனால் நீங்கள் காலையில் வந்து விட்டீர்களே  என்கிறார் பக்தர்.

பண்டிட் ஜி அவரை கவனமாகப் பார்த்தார், அடையாளம் காண முயற்சித்தார். அடையாளம் தெரியவில்லை.
நீங்கள் நேற்று கோவில் வாசலுக்கு வந்தீர்களா..?  என்னை சந்தித்தீர்களா.? என கேட்டார்.

நாங்கள் 6 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் திரும்பி வருகிறோம்..! என்ன ஆச்சரியம் என்கிறார்.!

பக்தரோ..இல்லை, நான் எங்கும் போகவில்லை. நேற்று நான் உங்களை சந்தித்தேன், இரவில் நான் இங்கேயே தூங்கிவிட்டேன். நான் எங்கும் போகவில்லை என்கிறார்.

பண்டிட் ஜிக்கு ஆச்சரியத்தின் அளவு எல்லை கடந்தது..!

ஆனால் நான் 6 மாதம் முன்பு கோவிலை பூட்டிவிட்டு 6 மாதம் கழித்து இன்று வந்தேன். ஆறு மாதங்கள் நீங்கள் எப்படி இங்கு வாழ முடியும்..?

பண்டிட் ஜி மற்றும் அனைத்து சபைகளும் ஆச்சரியமடைந்தனர். இப்படி ஒரு குளிர்காலத்தில் தனி ஒருவன் எப்படி ஆறு மாதம் வாழ முடியும்.?

அப்போது அந்த பக்தர் சன்யாசி  மற்றும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு, பேசிய அனைத்து காரியங்களையும் பண்டிட்ஜி மற்றும் குழுவினரிடம்  கூறினார்.

நடந்த அனைத்தையும் அவர்கள் மகாதேவனின் சக்தி லீலைகள் என புரிந்து கொண்டனர்.!

பண்டிட் ஜி மற்றும் அனைவரும் அவரது கால்களில் விழுந்தனர்.
இறைவன் தரிசனம் கண்ட நீங்கள் தான் உண்மையான பக்தன். சிவனை நேரில் தரிசனம் செய்தது நீங்களே என்றனர்.

அவர் உங்கள் 6 மாதங்களை தனது யோகா மூலம் இரவாக மாற்றினார். அது
மாயா எனப்படும். காலத்தை சுருக்கிவிட்டார். இது எல்லாம் உங்கள் புனித மனதின் காரணமாக, உங்கள் நம்பிக்கை காரணமாக. உங்கள் பக்தியை வணங்குகிறோம் என்று பக்தரை வணங்கினர். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில் இருந்து
“கடவுளைக் கண்ணால் காண முடியுமா….?” என்று ஒருவர் கேள்வி கேட்க வாரியார் சுவாமிகள்
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் …., ஒரு கேள்வி, தம்பீ……! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”
“எனக்கென்ன கண் இல்லையா…….? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்…!!”
“தம்பீ……! கண் இருந்தால் மட்டும் போதாது……!! கண்ணில் ஒளியிருக்க வேண்டும்……!!
காது இருந்தால் மட்டும் போதுமா…..? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்…..!!
அறிவு இருந்தால் மட்டும் போதாது…….!! அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!!
உடம்பை நீ பார்க்கின்றாய்….!! இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?”
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
“அப்பா…! அவசரப்படாதே…..!! எல்லாம் தெரிகின்றதா….?”
“என்ன ஐயா….! தெரிகின்றது…, தெரிகின்றது…, என்று எத்தனை முறை கூறுவது….? எல்லாம்தான் தெரிகின்றது….?”
“அப்பா….! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?”
“ஆம்! தெரிகின்றன.”…..!!
“முழுவதும் தெரிகின்றதா…?”
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,
“முழுவதும் தெரிகின்றது” என்றான்….!!
“தம்பீ…! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?”
மாணவன் விழித்தான்.
“ஐயா…! பின்புறம் தெரியவில்லை.” என்றான்.
“தம்பீ…! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்….!! இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே….!! சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?”
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.’…!! நிதானித்துக் கூறு….!!.”
“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்….!! எல்லாம் தெரிகின்றது.’…!!’
“தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான, ” முகம் தெரிகின்றதா”…..?
மாணவன் துணுக்குற்றான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,
“ஐயனே…! முகம் தெரியவில்லை….!” என்றான்.
“குழந்தாய்…! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை…..!! முன்புறம் முகம் தெரியவில்லை……!!
நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்…..!! இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்….!!
அன்பனே…!
இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,
இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு, இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,
ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.
ஒன்று திருவருள்….!!
மற்றொன்று….
குருவருள்…….!!
திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால், ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்….!!
தம்பீ…..! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்……, அதனைக் குருவருள் மூலமே பெறமுடியும்…..!!
திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை...!!
அந்த மனிதன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்…..!!
சித்தர்கள் அருளிய கற்ப வகைகளின் வரிசையில்  "கருநெல்லி கற்பம்" இந்த கற்ப வகையினைப் பற்றிய குறிப்பு அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

அகத்தியர் அருளிய கருநெல்லி கற்பம் பற்றி பார்ப்போம்..

காணவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
கருநெல்லிப் பழமைந்தின் சாருவாங்கி
பேணவே அதுக்குநிகர் தேனுங்கூட்டி
பிரியமுடன் அந்திசந்தி மண்டலங்கொள்ளு
பூணவே வாசியது பொருந்திநின்று
பூரணமாய்த் தேகமது சித்தியாகும்
ஊணவே தேகமது சித்தியானால்
ஒருதீங்கு மில்லையடா சோதியாச்சே.

- அகத்தியர்.

ஐந்து கருநெல்லிப் பழங்களில் இருந்து சாறு எடுத்து, அதன் எடைக்கு சம அளவில் சுத்தமான தேன் கலந்து உண்ண வேண்டுமாம்.. இப்படி தினமும் இரு தடவை அந்தி சந்தி வேளைகளில் உண்ண வேண்டுமாம்.. அதாவது ஒரு நாளைக்கு காலையில் ஐந்து பழம், மாலையில் ஐந்து பழமென இரண்டு தடவை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட கூறுகிறார்..

இப்படி ஒரு மண்டலம், அதாவது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம்.. ஒரு நாளைக்கு பத்துக் கரு நெல்லி பழங்கள் வீதம், நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் நானூற்றி எண்பது பழங்கள் தேவைப்படும்.. எனவே இந்த பழங்கள் கிடைக்கும் காலத்தில் இந்த கற்பத்தினை முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு ஒருமண்டல காலம் தொடர்ந்து உண்டால், சுவாசம் சீரடைந்து தேக சித்தியும் கிட்டுமாம்.. தேக சித்தி கிடைத்த பின் உடலுக்கு எந்த தீங்கும் உண்டாகாது என்றும் சொல்கிறார்.. இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை..
#ஃ