சனி, 3 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள்  அருள் மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : ஜம்புகேஸ்வரர்
உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வெண்நாவல்
தீர்த்தம் : நவ தீர்த்தங்கள்
ஆகமம் பூஜை  : சைவாகமம், ஸ்ரீவித்யா வைதீக பூஜை
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா
ஊர் : திருவானைக்கா
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருநாவுக்கரசர்

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே. திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 60வது தலம்.  
      
விழா : பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம். அம்மனின் சக்தி பீடங்களில் இது ஞான பீடமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 05:30 பகல் 01:00 மணி, மாலை 03:00 இரவு 08:30 மணி. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும். இந்நாட்களில், காலை 06:00 - 06:30, 08:00 - 09:00, 11:00 - 12:30, மாலை 05:00 - 06:00, இரவு 08:30- 09:00 ஆகிய நேரங்களில் மட்டும் சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.

     
முகவரி : நிர்வாக அதிகாரி, அ/மி. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம். போன் : 91-431- 2230 257.
 
தகவல் : சுவாமி சன்னதிக்கு பின் புறத்தில் சரஸ்வதி நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை, ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டாதேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.  
      
பெருமை : சிவன் வடிவில் அம்பாள் அம்பாள் வடிவில் சிவன்! பிரம்மா ஒரு முறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு "ஸ்திரீ தோஷம்' உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம் பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால் அம்பிகை சிவனிடம் நான் உங்களது வேடத்தில் வருகிறேன் நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்! என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறு வேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால் அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

மாணவி அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறாள். அகிலாண்டேஸ்வரி இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்து விட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.
ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி திரு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை இரண்டு  மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரெண்டு  மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய  அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நவ துளை ஜன்னல்: ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியே தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல் மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால் கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.

சித்தராக வந்த சிவன் : மதுரையைப் போல இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான். சிவன் விபூதிச்சித்தராக வந்து பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் திருநீற்றான் திருமதில் என்றும் பிரகாரம் விபூதி பிரகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது. அன்னையை சாந்தப்படுத்தும் பிள்ளைகள் ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால் இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ரத்துக்குப் பதிலாக இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில் அம்பாளுக்கு எதிரே விநாயகரையும் பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார். கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும் படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும் புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது. இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும் படி செய்தார். சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால் யானைகள் புக முடியாத படி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது. திருக்கல்யாணம் இங்கில்லை இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்த போது அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால் பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள் பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி தரும் அம்பிகை: வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள் வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம் நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன் என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டி விட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். கோயில் பாழ்படாமல் இருக்க எந்த தியாகத்தையும் செய்வேன் பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள் என்றார். அம்பாளும் அப்படியே செய்ய அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

முருகன் பாதத்தில் அசுரன் : முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும் காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில் ஒரு அசுரனாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.

ஸ்தல வரலாறு : சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிட பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.
சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர் அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு "ஜம்பு' என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால் சுவாமி ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றார்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள் : அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : வித்யூஜோதிநாயகி
தல விருட்சம் : கடம்பமரம்
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
ஆகமம் பூஜை  :  காமிகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கடம்பூர்
ஊர் : மேலக்கடம்பூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர்

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனைத் தாங்குதல் என் கடன்பணி செய்து கிடப்பதே. திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 34வது தலம்.

விழா : சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம்.  
      
சிறப்பு : இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும். ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகு தான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.  
      
திறக்கும் நேரம் : காலை 07:30 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 05:30 மணி முதல் இரவு 07:30 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சிவனை தரிசிக்கலாம். அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்- 608 304. கடலூர் மாவட்டம். போன் : +91- 264 638, 93456 56982. 
     
தகவல் : தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்த நாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது. பின்புற சுவரில் மகா விஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர் ஆலிங்கன மூர்த்தி ஆகியோரும் இருக்கின்றனர். விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல் வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

பிரார்த்தனை : செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் செய்து கொள்கிறார்கள்.
     
ஸ்தல பெருமை : நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.
அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை வித்யஜோதிநாயகி (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு ஜோதிமின்னம்மை என்றும் பெயர் உண்டு. திருமண புத்திர தோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கு வளையல் வைத்து  வழிபடுகிறார்கள். திருநாவுக்கரசர் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இத்தலத்தில் தான் பதிகம் பாடினார். ரிஷபதாண்டவர் இத்தலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் பத்து கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒரு நாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தெட்சிணா மூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

ஆரவார விநாயகர் : இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும் தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடது புறமாக சாய்த்த படி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.

செவ்வாய்தோஷ தலம்: சூரனை அழிக்க செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம் தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்த படி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்து கொண்டாடினாராம் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள். அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல் சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.  
      
ஸ்தல வரலாறு : பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதனை பருக சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அமுதகலசத்தை எடுத்து சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும் படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும் படி கூறினார். அதன் படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள் புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்து செல்ல எண்ணி கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான். அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை.
விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம் தான் தேரை எடுத்து செல்ல வழிவிடும் படி வேண்டினார். விநாயகர் அவனிடம் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர் ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி ஒரு லிங்கத்தை செய்யும் படி கூறினார். அதன் படி இந்திரன் ருத்ரகோடீஸ்வர லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம் என்றார். இந்திரனும் ஏற்று கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.
----------------------
274 சிவாலயங்கள் : அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சவுந்தர்யேஸ்வரர்
அம்மன் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் :  புன்னை
தீர்த்தம் : செங்கழுநீர்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநாரையூர்
ஊர் : திருநாரையூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்
      
தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான் பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம் ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு கந்தான் அடங்கார் மதில்மூன்றும் ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவாமே. திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.  
      
விழா : வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு பதிமூன்று நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி.  
      
சிறப்பு : முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள் பாலிக்கிறார்.  
      
திறக்கும் நேரம் : காலை மணி 06:00 முதல் 12:00 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை திறந்திருக்கும். 
அருள் மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர் : 608 303, காட்டு மன்னார் கோவில் வட்டம், கடலூர் மாவட்டம். போன்:+91- 94425 71039 
     
தகவல் : மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.  
      
பெருமை : நம்பியாண்டார் நம்பியின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்ப இதைப் பார்ப்பார். அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையை போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து பிள்ளையாரை சாப்பிடும் படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.
இதை நம்பாத மன்னன் ராஜராஜ சோழன் பலவகையான பலகாரத்துடன் நேரில் இக்கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நம்பி மூலம் நைவேத்தியம் வைக்க கூறினான் . ஆனால் பிள்ளையார் சாப்பிடவில்லை. அப்போது நம்பி பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாசுரங்களை மனமுருகப் பாடினார். மனமிரங்கிய பிள்ளையார் ராஜராஜனின் நைவேத்தியத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். மூவர் பாடிய தேவாரப்பாடல்களைத் தொகுத்தவரும் இவரே. இவரது சிலை கையில் கலசம் ஏந்திய நிலையில் உள்ளது. தேவாரத்தை தொகுக்க பாடுபட்ட ராஜராஜ சோழனின் சிலையும் உள்ளது.
முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி  விநாயகரின் ஆறாவது படை வீடாகும்.  
      
ஸ்தல வரலாறு : கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும் படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும் படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். இதன் பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.  
274 சிவாலயங்கள் : அருள் மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பதஞ்சலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : கோல் வளைக்கையம்பிகை
தல விருட்சம் : எருக்கு
தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி
ஆகமம் பூஜை  : சிவாகமம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருக்கானாட்டுமுள்ளூர்
ஊர் :  கானாட்டம்புலியூர்
மாவட்டம் :  கடலூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள் : சுந்தரர்
      
விடை அரவக்கொடி ஏந்தும் விண்ணவர்தம் கோனை வெள்ளத்து மாலவனும் வேத முதலானும் அடியிணையும் திருமுடியும் காண அரிதாய சங்கரனைத் தத்துவனைத் தையல் மடவார்கள் உடைஅவிழக் குழல்அவிழக் கோதை குடைந்தாடக் குங்குடங்கள் உந்திவரும் கொள்ளிடத்தின் கரைமேல் கடைகள் விடுவார் குவளை களைவாருங் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே. சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 32வது தலம்.
 
விழா : சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.  
      
சிறப்பு : இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை அம்புஜாட்சி கானார்குழலி என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்யலாம். அருள் மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர் : 608 306, கடலூர் மாவட்டம். போன் : +91& 4144 & 208 508, 208091, 93457 78863. 
     
தகவல் : கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும் விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன் மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
 
பிரார்த்தனை : நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம்.
     
பெருமை : கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு மதூகவனம் என்றும் பெயருண்டு. கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார். தமிழ் வருடப்பிறப்பின் போது மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்த போது மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால் வெளியில் இருந்தே சிவனை தரிசித்து விட்டு சென்றார்களாம். எனவே இத்தலத்து மண்ணை மிகவும் விசேஷமானதாக கருதுகிறார்கள். மண்ணை எடுத்து சென்றால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நடராஜர் தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி உடலை பின் புறமாக சாய்த்த படி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன் மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். பதஞ்சலி நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர் ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு. வரப்பிரசாதியான இந்த அம்பாளுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் குழந்தை பேறு கிடைப்பதாக நம்புகிறார்கள்.
 
ஸ்தல வரலாறு : பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகா விஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காண விரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒரு சமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்த போது அவரை இத்தலத்திற்கு வரும் படி கூறவே இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி. சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம் என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே! என்றார். தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் பதஞ்சலி. சிவன் அவர் விரும்பிய படியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பெயரையே தனக்கும் சூட்டி பதஞ்சலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
அம்மன் : அபிராமி
தீர்த்தம் : அபிராமி அமிர்த புஷ்கரிணி
பழமை : 50 வருடங்களுக்குள்
ஊர் : சேலையூர் கேம்ப்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா : மாசி மகம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம்.  
      
தல சிறப்பு : இங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு  
      
திறக்கும் நேரம் : காலை 08:00 மணி முதல் 01:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.  
அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சேலையூர் கேம்ப், சென்னை.
     
தகவல் : கோயிலுக்குள்ளாகவே அபிராமி அமிர்த புஷ்கரிணி(திருக்குளம்) அமைந்துள்ளது. சுற்றுச்சுவர்களில் கங்கை முதல் காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவது போல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று இந்த நதிகளுக்கு சிறப்பாக விழாவும் கொண்டாடுகிறார்கள்.  
     
பெருமை : மாசி மகத்தன்று பதினெட்டு நதிகளின் புனித நீர் கொணரப்பட்டு, ஹோமங்கள் வளர்த்து, பதினெட்டு குடங்களில் உள்ள தீர்த்தத்தால் பதினெட்டு நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் இந்த பதினெட்டு நதி நீரை திருக்குளத்தில் கலக்கிறார்கள். இதன்பின்னரே பக்தர்கள் பதினெட்டு நதிகளிலும் தனித்தனியாக கொட்டும்  தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடுகிறார்கள். நிறைவாக பதினெட்டு நதி நீரும் கலந்துள்ள இந்தத் திருக்குளத்தில் நீராடுகிறார்கள். பின்னர் சிவனையும் அம்பாளையும் வணங்கி அர்ச்சனை செய்தல் சிறப்பு. ஸ்நானம் செய்ய இயலாத பக்தர்கள் தலையில் இந்த நதி நீரை ப்ரோக்ஷித்துக் கொள்ளலாம். திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் போன்று இங்கும் மாதத்துக்கு நான்கு ஐந்து சஷ்டியப்த பூர்த்தி ஹோமங்களை அவரவர் வசதிக் கேற்ப எளிமையாக நடத்துகிறார்கள்.

அபிராமிக்குச் சிறப்பானது தை அமாவாசை. அன்று மாலை 04:30 முதல் 05:00 க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பாராயண நிறைவில் அம்மனுக்கு ஒன்பது வகையான பதார்த்தங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அன்னை மிகச்சிறந்த வரப்பிரசாதி. இங்குள்ள அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்து வைத்து நமக்கு அருள்வது போல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். அம்பாளை ஒருதரம் பிரதக்ஷிணம் வந்தாலே ஷோடச மண்டபத்தில் அமைத்திருக்கும் ஷோடச லக்ஷ்மிகளையும் வலம் வந்த பலன் உண்டு. வெள்ளிக் கிழமைகளில் இந்த ஷோடச லக்ஷ்மிக்கு சிறப்பு அர்ச்சனையும் உண்டு.
 
ஸ்தல வரலாறு : 1970-ல் காஞ்சி மஹா பெரியவர் சென்னை விஜயம் செய்த போது இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக்கண்டு பிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்தது தான் இந்த கோயில். இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. அதை அகற்றும் போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர். நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது. 1972 ஆண் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் கோயிலும், அமிர்தகடேஸ்வரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்
 
மூலவர் : திரியம்பகேஸ்வரர்
அம்மன் :கருமாரி திரிபுரசுந்தரி
தல விருட்சம் : இலந்தை மரம்
பழமை: 500 வருடங்களுக்குள்
ஊர் : சாமியார்தோட்டம்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
 
விழா : பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பகல் பத்து, ராப்பத்து விழாக்கள், அனுமன் ஜெயந்தி, பங்குனி உத்திரம், சிவராத்திரி      
             
சிறப்பு : இங்கு கையில் திருச்சாத்துருண்டையை ஏந்திய கோலத்தில் முத்துக்குமார சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. திறக்கும் நேரம் காலை 05:00 மணி முதல் 08:00 மணி வரை, மாலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், அசோக்நகர்- சாமியார் தோட்டம், சென்னை.
           
பொது தகவல் : இங்கு செல்வ விநாயகர், வைத்தீஸ்வரன், முத்துக்குமார சுவாமி, துர்கை, ஸ்ரீநிவாச பெருமாள் ஆகிய தெய்வங்களும் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.      
             
ஸ்தல பெருமை : சில வருடங்களுக்கு முன் கால பைரவர் மற்றும் மனைவி லோபா முத்திரையுடன் அகத்தியர் ஆகியோரின் விக்கிரகத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதோஷ வழிபாடும், இறைத் திருமேனிகளுக்குச் செய்யப்படுகிற அலங்காரங்களும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள்! புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ நிவாசப் பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், சுதர்சனர் ஆகியோரைத் தரிசித்துப் பலன் பெறுகின்றனர் பக்தர்கள். ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கு துளசி மாலையும் பத்மாவதி தாயாருக்கு தாமரைப் பூவும் சார்த்தி வழிபட... விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை! கருமாரி திரிபுரசுந்தரி அம்பிகைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, புடவை சார்த்தி வணங்கினால் விரைவில் குழந்தை பாக்கியம் பெறலாம் சகல சவுபாக்கியங்களுடன் வாழலாம் என்பது ஐதீகம். சரபேஸ்வரருக்கும் அனுமனுக்கும் இங்கே தனித் தனிச் சன்னதிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரருக்கும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, துர்கைக்கு ராகு கால பூஜை என மாதம் முழுவதும் வழிபாடுகள் குறையற நடைபெற்று வரும் இந்தக் கோயிலில், மார்கழி மாதத்தில்... ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் பகல் பத்து ராப்பத்து விழாக்கள் உத்ஸவங்கள் எனக் களை கட்டியிருக்கும்! அதே போல் அனுமத் ஜயந்தி நாளில்.. ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தி, விசேஷ அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி தருவார் அனுமன். முக்கியமாக... மூலவர் திரியம்பகேஸ்வரர், அம்பாள் கருமாரி திரிபுர சுந்தரி ஆகியோருக்கு பங்குனி உத்திர நன்னாளில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். கருமாரி திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரியம்பகேஸ்வரரையும் பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாளையும் வழிபட வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.      
             
ஸ்தல வரலாறு : சுமார் ஐநூறு  வருடங்களுக்கு முன் இலந்தை மர நிழலில் சூல வடிவினளாக அருள் பாலித்து வந்தாளாம் கருமாரி திரிபுரசுந்தரி. பிறகு பக்தர் சக்தி சுந்தரேசன் மற்றும் அந்தப் பகுதி மக்களின் பெரு முயற்சியால் அழகிய கோயில் கட்டப்பட்டு, அங்கே விக்கிரகத் திரு மேனியளாக குடியேறினாள் என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் அபய வரத முத்திரைகளும், சூலமும், உடுக்கையும் கொண்டு ஒரு காலை தரையில் தொங்கவிட்டு, இன்னொரு காலை மடித்து, வீராசனத்தில் காட்சி தருகிறாள் கருமாரி திரிபுரசுந்தரி. தேவியின் சிரசுக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்து நிற்பது போன்ற அமைப்பு சிலிர்க்கச் செய்கிறது

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

 274 சிவாலயங்கள் : அருள் மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : திருமாகறலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர்
அம்மன் : திரிபுவனநாயகி
தலவிருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி
ஆகமம் பூஜை : 4 காலம்
பழமை :3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமாகறல்
ஊர் : திருமாகறல்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் 11 பதிகம் பாடியுள்ளார்.தேவாரப்பதிகம்

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யால்இனிது இறைஞ்சி இமை யோரிலெழு மாகறலுளான் மின்னை விரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 7வது தலம்.
 
விழா : மாசி மாதம் பத்துநாள் பிரம்மோற்ஸவம்.  
      
சிறப்பு : இத்தல இறைவனுக்கு அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப, முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை மணி 06:00 முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் : 631 603, காஞ்சிபுரம் மாவட்டம். போன் : +91- 94435 96619. 
     
தகவல் : அழகிய சுதை சிற்பங்களோடு ஐந்து நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் உள்ளது. பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தியைக் காணலாம்.
 
பிரார்த்தனை : இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.


 
ஸ்தல பெருமை : முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி "மாகறலீசர்' என்று மாறியது.
 
ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் பிரம்மா இத்தலத்தில் சிவபூஜை செய்து விட்டு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசய பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள் தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் தலைச்சுமையாக இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன். பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால் நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பி விட்டனர்.  மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன்  என்றான். அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான். காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் உடன் சென்றான். ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டு திரும்பிய போது ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும் படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன் படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது.
108 திவ்ய தேசங்கள் :அருள் மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்

மூலவர் : தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்).
தாயார் : வரமங்கை தாயார்.
தல விருட்சம் : மாமரம்,
தீர்த்தம் : சேற்றுததாமரை
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வானமாமலை, திருவரமங்கை
ஊர் : நாங்குனேரி
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : நம்மாழ்வார், மங்களாசாசனம்
      
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே. நம்மாழ்வார்  
      
விழா : பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்ஸவம் இத்தலத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் ஆகும்.  
      
சிறப்பு : ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்த மண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக பதினொரு பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும்.  
      
திறக்கும் நேரம் : காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி : 627108 திருநெல்வேலி மாவட்டம்.போன் : +91- 4635 - 250 119 
     
தகவல் : மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர்.
     
ஸ்தல பெருமை : இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ராஜ தர்பார் கோலத்தில் அரசராக அமைந்திருப்பதும் இத்தலத்தில் மட்டுமே. பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கிய படி வைத்து எவன் தன் பாதத்தில் சரணடைகிறானோ அவனுக்கு தன் மடியில் இடம் உண்டு என்பது போல் ஒரு கையை மடியில் வைத்திருக்கிறார். பெருமாளின் கையில் பிரத்யேக சக்கரம் உள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள்.

திருப்பதியில் இருந்து வந்த தாயார் :  இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீவரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி இவள் நாங்கு நேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள் என கூறியதால் இத்தலத்திற்கு வந்து விட்டாள். மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இங்குள்ள சடாரியில் சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஸ்தல வரலாறு : மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை மகா விஷ்ணு அழித்த போது அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து விஷ்ணுவின் அருள் பெற்றாள். மாசு கழுவப்பெற்றாய் என்று சொல்லி வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது.  
      
சிறப்பம்சம் : ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும் அர்த்த மண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக பதினொரு பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வட இந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம்.


108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில்

மூலவர் : ஸ்ரீநிவாசன், கிழக்குநோக்கிநின்றகோலத்தில்
அருளுகிறார்.
உற்சவர் : ஸ்ரீ தேவர் பிரான்
தாயார் : அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்.
தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம்.
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருத்தொலைவில்லி மங்கலம்
மாவட்டம் : தூத்துக்குடி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: நம்மாழ்வார், மங்களாசாசனம்
      
துவளில் மாமணிமாட மோங்குந் தொலைவில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னை மீர் உமக்காசையில்லை விடுமினோ தவளவொன் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கனென்றும் குவளையொண் மலர்கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமோ. நம்மாழ்வார்  
      
விழா : வைகுண்ட ஏகாதசி  
      
சிறப்பு : நவதிருப்பதிகளில் இது 8வது திருப்பதியாகும், இரட்டைத் திருப்பதியில் ஒன்றாவது திருப்பதி நவக்கிரகங்களில் இது ராகு தலம்.  
      
திறக்கும் நேரம் : காலை 08:00 மணி முதல் 12:00 மணி வரை, மதியம் 01:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு ஸ்ரீ நிவாஸன் திருக்கோயில், நவதிருப்பதி (இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம்- 628 752 தூத்துக்குடி மாவட்டம்.  
போன்:+91 4639 273 607 


     
தகவல் : இத்தலத்தில் பெருமாள் குப்த விமானத்தில் கீழ் அருள்பாலிக்கிறார்.  
     
ஸ்தல பெருமை : சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம். நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி.  
      
ஸ்தல வரலாறு : தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் பதினொரு பாசரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன்
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

(சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!)

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!

விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

(சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!)

மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது.