ஞாயிறு, 3 ஜனவரி, 2021

திருக்கேதீஸ்வரம் - இலங்கை


திருக்கேதீஸ்வரம் - இலங்கை

இதுதான் ஈழத்தின் மன்னாரில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம். இது திருஞானசம்பந்தரால் திருப்பாடல் பாடப்பெற்ற திருத்தலமாகும். 2400 வருடங்களுக்கு முன் கட்டபட்ட இந்தச் சிவன் கோவில், போர்ச்சூழலில் பல அழிவுகளைச் சந்தித்த பின் திருத்தி அமைக்கப்பட்டதாகும்.

இலங்கை தலை மன்னாரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கேதீஸ்வரம். இதுவும் இலங்கையிலுள்ள புகழ் மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இறைவன் கேதீஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் கௌரி அம்மை என்றும் வணங்கப்படுகிறார்கள். இங்கு தரப்படும் திருநீறு பிரசாதம் மிகுந்த சக்தி படைத்தது. பேச்சிழந்தவர்களைப் பேச வைத்த அதிசயம் நிகழ்ந்த ஆலயம் என்கிறார்கள். கொழும்பிலிருந்து ரயிலில் செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று, அங்கிருந்து காரில் பயணிக்கலாம்.

அருள் மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில்


அருள் மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில்
 
மூலவர்:மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்)
அம்மன்:மரகதாம்பிகை, லலிதா
தல விருட்சம்:புளியமரம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை
ஊர்:ஈங்கோய்மலை
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

 வினையாயின தீர்த்(து) அருளே புரியும்விகிர்தன் விரிகொன்றை நனையார் முடிமேல் மல் மதியஞ் சூடுநம்பா நலமல்கு தனையார் கமல மலர் மேல் உறையான் தலையோ(டு) அனல் ஏந்தும் எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரையில் 63வது தலம்.   
       
திருவிழா:பங்குனியில் பிரம்மோற்ஸவம், மாசிமகம், தைப்பூசம், பவுர்ணமி பூஜை.   
       
தல சிறப்பு:இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால் இவருக்கு மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சிவனின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருப்பவை மிகக்குறைவு. அதில் ஒன்று திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலை.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 63 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னரே அர்ச்சகரிடம் தொடர்பு கொண்டுவிட்டு செல்வது நல்லது.  
     
முகவரி:அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் , ஈங்கோய்மலை - 621 209. திருச்சி மாவட்டம்.போன்:+91- 4326 - 2627 44, 94439 - 50031  
      
பொது தகவல்:பிரகாரத்தில் வல்லப விநாயகர், மகாவிஷ்ணு ஆகியோரும் உள்ளனர்.   
       
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.  
      
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
      
தலபெருமை:சக்திமலை: அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை "சக்திமலை' என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர்.

அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கேற்ற காட்சி இது. ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று.

ஈ வழிபாடு: தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இங்கு வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியபோது, ஈ வடிவம் பெற்றார். பின் இம்மலை மீது பறந்து வந்து, சன்னதி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். பின் மீண்டும் தன் பழைய வடிவம் பெற்று திரும்பினார். அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், "திருஈங்கோய்மலை' என்றும், சிவனுக்கு "ஈங்கோய்நாதர்' என்றும் பெயர் உண்டு.

புளியமரத்தில் ஒளிந்த சிவன்: சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார். சுந்தரர், சிவனை எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார். சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் "எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,' என சொல்லிவிட்டு திரும்பி விட்டார்.

இத்தலத்தின் விருட்சம் புளியமரம். ஆனால், சுந்தரர் புளி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சபித்துவிட்டதால் இங்கு புளியமரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சம்: மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சுந்தரர் மட்டுமின்றி, நக்கீரர் ஈங்கோய் எழுபது என்ற பாமாலையை அருளியிருக்கிறார். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம். தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். ஆடிக்கிருத்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.

ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. கோஷ்டத்தில் ஒரு தெட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தெட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த தெட்சிணாமூர்த்தி என குரு பகவானின் வித்தியாசமான வடிவங்களை காணலாம்.

தல வரலாறு:பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். இந்த விளையாடலுக்கு கட்டுப்பட்ட அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச்செய்தார்.

ஆதிசேஷன் மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒருபகுதி இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார்.  மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், "மரகதாசலேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். இவருக்கு "திரணத்ஜோதீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.

மஹா சுதர்ஸன மஹாமந்திரம்


மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
 
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
 
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்
 
காக்கும் கடவுளான கருணை மிக்க மஹாவிஷ்ணு தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது
 
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.
 
சக்கராயுதம்- சுதர்சனம் என்பது மகா சக்கரம். நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான "உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்' என்ற சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது.
 
பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ் வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதைக் காண்கிறோம். காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப் பான தலங்கள் என்பர். காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப் படுகிறார்.
 
குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார்.
 
மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார். பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதை கள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங் கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளி யுள்ளார். இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும்
 
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங் களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம' என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
 
திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.
 
திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார்
 
சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப் பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோரா வது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே!
 
மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகத் திகழ்ந்தது.
 
அம்பரீச மன்னனுக்கு சுதர்சனர் அருளிய வரலாறும் உண்டு.
 
இந்திரத்யும்னன் என்ற மன்னன்அகத்தியரின் சாபத்திற்கு உள்ளாகி கஜேந்திரன் என்னும் யானையாக மாற நேர்ந்த்து.. ஒருநாள் தடாகத்தில் கஜேந்திரன் இறங்கியபோது முதலை ஒன்று யானையின் காலைக் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கவே, "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் குரல் கொடுக்க, மஹா விஷ்ணு உடனே கருட வாகனத்தில் தோன்றினார். அப்போது திருமாலின் கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீசுதர்சனச் சக்கரம் முதலையை வதைத்து, கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றியது.
 
பொதுவாக சக்கரம் மஹாவிஷ்ணுவின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும்.
 
ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.
 
பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது
 
திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது.
 
"ஸ்ரீ ஸுதர்ஸன மகா மந்திரங்களை யார் ஒருவர் மன ஒருமைப் பாட்டுடனும், பக்தியுடனும், அன்புடனும் ஜபம் செய்து வருகிறாரோ அவருக்கு எல்லா விதக் கார்யங்களும் வெற்றியுடன் நடக்கும்" என்று கயிலை நாதரான ஸ்ரீ பரமேஸ்வரர் தமது பத்தினியான உமை அம்மையாருக்கு உபதேசம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அத்தனை மகிமை உள்ளது சுதர்சன மந்திரம்.
 
சுதர்சன சக்கரத்தால் சூழ்வினை ஓட்டும் விஷ்ணுவை, வியாழக் கிழமைகளில்,
கோலமிட்டு, ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம் சொல்லி வணங்க மலர்ச்சி தருவார் மஹாவிஷ்ணு.
 
ஓம் நமோ நாராயணாய.
 
ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்

அருள் மிகு கும்பேஸ்வரர் திருக்கோவில்


அருள் மிகு கும்பேஸ்வரர் திருக்கோவில்
 
மூலவர்:கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
அம்மன்:மங்களாம்பிகை
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:மகாமகம், காவிரி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருக்குடமூக்கு
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர்

தேவாரப்பதிகம்

நக்கரை யனை நாடொறும் நன்னெஞ்சே வக்கரை உறைவானை வணங்கு நீ அக்கரை யோடு அரவரை யார்த்தவன் கொக்கரை யுடையான் குட மூக்கிலே.-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 26வது தலம்.

திருவிழா:மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ, தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது.   
       
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 89 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி சக்தி பீடம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணம்- 612 001, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-435- 242 0276.  
      
பொது தகவல்:மலையாள ஆண்டின் (கொல்லம்) துவக்க மாதமாக சிம்மம் எனப்படும் ஆவணி உள்ளது. இம்மாதத்தில் சூரியனின் நிலையைப் பொறுத்தே ஆண்டு முழுவதும் சீதோஷ்ண நிலை அமையும். எனவே, சூரிய பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் பொருட்டும், பயிர்களை அழிக்கும் எலிகள் முதலான ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பு பெற நாகராஜாவை வேண்டியும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

உலகம் அழிந்த போது, உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான், பிரம்மா மூலம் படைப்புக்கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். இதனால் "கும்பேஸ்வரர்' என்று பெயர்பெற்றார். கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் இவரது தலத்திலும் ஆவணி ஞாயிறன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

ராஜகோபுரம் வழியாக நுழைந்து, நீண்ட மண்டபத்தை கடந்து, பலி பீடத்தையும் கொடி மரத்தையும் வணங்கி, வாசலில் உள்ள நந்தி தேவரிடம் அனுமதி பெற்று கோயிலுக்குள் நுழைய வேண்டும். கும்பேஸ்வரரை வணங்கிய பிறகு, முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ஈசான லிங்கம், பசுபதி லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம், பீம லிங்கம், மகாலிங்கம், தெட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசித்து, சற்று தள்ளியுள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் பிட்சாடனர், முருகன், அட்சயலிங்கம், சகஸ்ரலிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, கோஷ்டத்திலுள்ள பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை வழிபட்டு அம்மன் சன்னதியை வணங்க வேண்டும்.பிறகு கண்ணாடி அறையில் இறைவன் பள்ளி கொண்டுள்ள காட்சியை கண்டு, அஷ்ட புஜ துர்கையை வணங்கி, அருகிலுள்ள நவநீத விநாயகர், கிராத மூர்த்தி, பைரவர், கால பைரவர்,ஜுரகேஸ்வரர், சாஸ்தா, மகான் கோவிந்த தீட்சிதர், நாகாம்பாள் ஆகியோரை தரிசிக்க வேண்டும்.  இதன்பிறகு, நவக்கிரகமண்டபத்தை சுற்றி கோயிலிலிருந்து வெளியேற வேண்டும். இம்முறைப்படி வணங்கினால், வாழ்வுக்குத் தேவையான பாதுகாப்பு அனைத்தும் கிடைக்கும்.

பிரார்த்தனை:கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.  
      
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும்,நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
      
தலபெருமை:நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோயில்களில் சுவாமி, அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பே இருக்கிறது.

இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது. இது சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.

நவராத்திரி மண்டபத்தில் ஒரு சிங்க வாகனம் தனது தலையில் நீண்ட படுக்கை கற்களை தாங்கியபடி அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். கோயிலின் முன்பு பொற்றாமரைக்குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக்குளத்திலும் நீராடுவர்.

நவகன்னியரான நதிகள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும்.

மங்கள நாயகி: இத்தல அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை "வளர்மங்கை' என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக "மந்திரபீடேஸ்வரி' என்ற திருநாமமும் பெறுகிறாள்.அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது.

அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மகாமக தீர்த்தம்: ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை "பூமி குழிந்து தாங்குக' என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. இங்கு தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது தான் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதாக ஐதீகம். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும், அவரைச்சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன.

சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் "ஆதி விநாயகர்' எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறுமுகம், ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என கூறப்படுகிறது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

சிவபெருமான் வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இங்கு கிராதமூர்த்திக்கு சன்னதி உள்ளது. மகம் நட்சத்திர நாளில், இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது, பிரம்மா தனது படைப்புத்தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், ""நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய்.

அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில்மிதக்க விடு,'' எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் ஒரு இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது.

கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே "கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.

ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!


ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

கிருபானந்த வாரியார் வாரத்தின் ஏழு நாட்களும் இறைவனை வணங்க ஏழு சின்னச்சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப் பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் சொல்லலுங்கள். கந்தவேல் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி
மீயுயர் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி

திங்கட்கிழமை

துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதம் போற்றி

செவ்வாய்க்கிழமை

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி
தெவ்வாதனை இல்லாத பரையோகியர் சிவதேசிக போற்றி
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி

புதன்கிழமை

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி

வியாழக்கிழமை

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி
தயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி

வெள்ளிக்கிழமை

அள்ளி வழங்கும் ஆறுமுகத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே
வெள்ளிமலைநேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி

சனிக்கிழமை

கனிவாய் வள்ளி தெய்வயானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி

இவ்வாறு  கிருபானந்த வாரியார் இயற்றிய தினம் ஒரு துதியைக் கூறுவதன் மூலம் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

திருவண்ணாமலை தீர்த்தங்கள்!


திருவண்ணாமலை தீர்த்தங்கள்!

தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.

இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:

திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.

திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.
திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.

திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.

திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.

திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.
நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.

திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.

திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.

திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.

விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.

திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.

எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்.

சிவனின் சிறப்பு செய்திகள்


சிவனின் சிறப்பு செய்திகள்

* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

* மகாராஷ்டிரா மாநில் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

* பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

மாங்கல்ய தாரணத்தின் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள்…


மாங்கல்ய தாரணத்தின் போது  சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள்…

இந்துக்களை அவமானப்படுத்தும் விசமிகளின் செயல் வருத்தத்திற்குரியது. உண்மைக்கு குரல் கொடுப்பதுகாலத்தின் தேவையாகின்றது. வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தில், தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்ன என்று தெரியுமா ..?!

‘மாங்கலயம் தந்துனானே’ என தொடங்கும் இம்மந்திரத்தில், ”சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ” என்ற வரிகள் வரும்.

விசமிகளால் வெளியிடப்பட்டுள்ள பொய்யான விளக்கம் கீழ்வருமாறு.

”நீ(மணமகள்) முதலில் சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய்,
பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.”

இந்த மந்திரத்திற்கு உண்மையான பொருள் கீழ்வருமாறு:

நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கிறோம். கண்களுக்குச் சூரிய பகவான்; கைகளுக்கு இந்திரன் – இது போன்று. இதே போல குழந்தை ஜனித்ததிலிருந்து அது வளர்ந்து பெரியவனா(ளா)கும் வரை ஒவ்வொரு பருவத்திலும் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஓவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்திற்கு – தெய்வத் தன்மைக்குப் ஒப்புமைப் படுத்தியிருக்கிறோம்.

இதன்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம் வரை “ஸோமனின் (Moon God)ஆதிக்கத்தில்” இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போலவே “குளிர்ச்சியாக” இருக்கிறாள். (ஆண்கள் அணியும் வேஷ்டியின் பெயரும் சோமன்).

பிறகு இந்தச் “சோம பருவத்திலிருந்து” “பூப்பெய்தும் பருவம் வரை” விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பியிருக்கும் பெண் குழந்தை. இப்பருவத்தில் அவள் “கந்தர்வனின் ஆதிக்கத்தில்” இருக்கிறாள் அவள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய கந்தர்வ பருவம்!

பூப்பெய்திய பருவத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை அவள் “அக்னியின் ஆதிக்கத்தில்” – அதாவது அக்னி போன்று எழுந்து தகிக்கும் காம உணர்வுகளுடன் – இருக்கிறாள்.

இப்பொழுதிருக்கும் எவ்வித வசதிகளுமற்ற, எந்தவித நவீனத் தாக்கங்களும், தேவைகளுமற்ற எளிய வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டத்தை மனதில் கொண்டால், பெண் வீட்டைப் பார்த்துக்கொள்ள, ஆண் வெளியில் வேலை செய்து பொருளீட்டி ஜீவனத்தை நடத்தும் குடும்ப அமைப்பை மனதில் கொண்டால், பருவமடைந்து அக்னியின் பிடியில் இருக்கும் – காம உணர்வுகளில் உந்தப்பட்டுக்கொண்டிருக்கும
ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுப்பதே பெற்றவர்களின் முக்கிய கடமையாக இருந்தது – அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கும் பெண் – குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கைகளில் ஒப்படைக்கப் படுகிறாள்.

ஆக, நிலவைப் போல் குளிர்ந்து நிற்கும் குழந்தை, விளையாட்டுத் தனம் நிரம்பி அழகு ததும்பும் பருவத்தைக் கடந்து, பூப்பெய்தி, பிறகு அவ்வயதிற்குரிய உணர்வுகளால் உந்தப்பட்டு காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும் போது, ஆண்மகனைக் கைப்பிடித்து திருமண பந்தத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையைத் துவங்குகிறாள் – என்று இதைப் புரிந்துகொண்டால் நலம்.

சமயபுரம் மாரியம்மன் ஸ்தல வரலாறு....


சமயபுரம் மாரியம்மன் ஸ்தல வரலாறு....

பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இதை `பச்சைப் பட்டினி' விரதம் என்கிறார்கள். மாசி மாத கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த பச்சை பட்டினி விரதம் ஆரம்பிக்கிறது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த சமயபுரம் மாரியம்மன் முற்காலத்தில் `வைஷ்ணவி' என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அங்கிருந்த இந்த அம்மனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்ற சிலர், கண்ணனூர் என்ற இடத்தில் அம்மனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

அவ்வாறு சிலை வைக்கப்பட்ட கண்ணனூர்தான் இன்றைய சமயபுரம் என்றும், அந்த அம்மன்தான் இன்றைய சமயபுரத்தம்மன் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், கண்ணனூர் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாரியம்மனை வழிபட்டார்.

போரில் வெற்றிபெற்றால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக்கொண்டார். அதன்படி, போரில் ஏற்பட்ட வெற்றியை அடுத்து மாரியம்மனுக்கு கோவில் எழுப்பினார். தற்போதுள்ள கோவில் கி.பி.1804-ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும்.

தற்போதுள்ள கோவில், பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சமயபுரம் கோவிலின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்.

அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். சமயபுரத்து மாரியம்மனின் விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் இதற்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

போக்குவரத்து வசதி......

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சென்னைக்கு செல்லும் வழியில் சமயபுரம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.

மாவீரன் சிவாஜியின் பக்தி அடையாளம்..!


மாவீரன் சிவாஜியின் பக்தி அடையாளம்..! 


மாவீரன் சிவாஜியின் பக்தி அடையாளம்..! மாவீரன் சத்ரபதி சிவாஜியின் ஆன்மிகப்பற்று, இந்து சமயத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் அவர் கட்டிய கோயில் திருப்பணிகள் எல்லாமே மிகப்பெரியன. மஹாராஷ்டிரா மாநிலம் கொங்கண் கடற்கரையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சில கோயில்கள் உள்ளன. அவற்றுள் பகவதி தேவி கோயில், கணபதிதாரி கோயில் மற்றும் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில்கள் மிகவும் புகழ்பெற்றவை. கொங்கண் காட்டுப்பகுதியில் உள்ள சவந்தவாடி என்ற குன்றிலிருந்து உற்பத்தியாகும் நீர், கர்லா என்ற நதி வழியாக தாமாப்பூர் ஏரிக்கு வந்து சேருகிறது. அந்த ஏரிக்கரையின்மேல் அமைந்துள்ள கோயிலில் பகவதி தேவி தரிசனமளிக்கிறார். அக்கோயிலைச் சுற்றி ஓடுகள் வேயப்பட்டு கேரளபாணியில் கட் டப்பட்ட மண்டபங்கள் உள்ளன. அவை இத்தலத்திற்கு புனிதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்டவை. அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் மால்வன் என்ற கோட்டைக்கு அருகில் கணபதிதாரி என்ற இடத்தில் ஒரு கிணற்றில் புனித கங்கை நீர் ஊற்றெடுக்கிறது. அதன் அருகில் வலது பக்கத்தில் ஒரு துளசிமாடம் உள்ளது. மாவீரன் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பரம்பரை பூசாரிகள், கணபதிதாரி கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்துத் தருகிறார்கள். அலங்கரிக்கப்பட்ட பாய் மீது அக்குடத்தை வைத்து மலர் மாலை அணிவித்து பக்தர்கள் பூஜை செய்கின்றனர். சம்பந்தப்பட்ட மந்திரங்களை பூசாரி ஓ துகிறார். சந்தன மணம் கமழும் ஊதுவத்தி, ஆரத்தியாக காட்டப்படுகிறது. லட்டு போன்ற இனிப்பு வகைகள் அக்குடத்திற்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற விரும்பிய மாவீரன் சிவாஜி இங்கு வந்து கங்கா பூஜை செய்து ள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்று கங்கா தேவி அக்கிணற்றுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் நினைவாகவே மேற்படி பூஜை. சற்று தூரம் சென்றால், மால்வன்கோட்டைக்கு தெற்குப் பக்கத்தில் மன்னன் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில் உள்ளது. அக்கோயில் முழுவதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. சிவாஜி தன் கைகளாலேயே செங்கல் எடுத்து வைத்து, கட்டு மானப்பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார். கோயில் கருவறையில் காட்சி தரும் சிவராஜேஸ்வர் சிலையின் முகத்திற்கு உலோகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெரிய மீசையுடன் கம்பீரமாக போர்வீரனைப் போல் காணப்படுகிறார். முகம் தவிர மற்ற பாகம் முழுவதும் சிவப்புத்துணியால் மறைக்கப்பட்டுள்ளது. இச்சிலையையொட்டி சிவாஜி பயன்படுத்திய இருமுனைவாள் (தோதார்) வைக்கப்பட்டுள்ளது. கீழே அமர்ந்த நிலையில் உள்ள சிவராஜேஸ்வர் படமும் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை சிவாஜி கோயில் என்றும் அழைக்கின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள கோட்டைகள், கிணறுகள், மதகுகள், எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும் சுரங்கவழிப் பாதைகள், திசை காட்டும் உயரமான கோபுரங்கள், மணிக்கூண்டுகள் மற்றும் சிவராஜேஸ்வர் கோயில் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் சிவாஜியின் வலது கை அடையாளம் பதிக்கப்பட்டு இன்றும் அப்படியே காணப்படுகிறது. ஒரு முகமதிய வியாபாரி தன் சரக்குகளை கப்பலின் ஏற்றிக் கொண்டு கொங்கண் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இடி மின்னலுடன் பெருமழை பெய்து பெரும் புயலும் வீசியது. அதனால் அந்தக் கப்பல் வழிதடுமாறி ஒரு கருப்பு மலையில் மோதிக் கொள்ள இருந்தது. அப்போது அந்த மலையிலிருந்து ஒரு ஒளி தோன்றியது. அந்த வெளிச்சத்தில் மலைமீது ஒரு மூங்கில் கொட்டகை இருப்பது அந்த வியாபாரியின் கண்களில் பட்டது. பின்னர் இறைவன் அருளால் புயல் அபாயம் நீங்கியது. அதனால் மகிழ்ந்த வியாபாரி இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்பி மூங்கிலாலேயே ஒரு சிவபெருமான் உருவத்தைச் செய்து அந்த மூங்கில் கொட்டகையில் வைத்து வணங்கினார். இன்றும் அந்த மூங்கில் ஆலயம் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிவருகிறது. மும்பை வந்து விட்டால் இக்கோயில்களுக்குச் செல்ல வசதிகள் உள்ளன. காடுகள் நிறைந்த மலைப்பிரதேசமாக இருப்பதால் வழிகாட்டிகளை அழை த்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும்தான் இங்கு செல்ல முடியும்.
 
மாவீரன் சத்ரபதி சிவாஜியின் ஆன்மிகப்பற்று, இந்து சமயத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் அவர் கட்டிய கோயில் திருப்பணிகள் எல்லாமே மிகப்பெரியன. மஹாராஷ்டிரா மாநிலம் கொங்கண் கடற்கரையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சில கோயில்கள் உள்ளன. அவற்றுள் பகவதி தேவி கோயில், கணபதிதாரி கோயில் மற்றும் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில்கள் மிகவும் புகழ்பெற்றவை. கொங்கண் காட்டுப்பகுதியில் உள்ள சவந்தவாடி என்ற குன்றிலிருந்து உற்பத்தியாகும் நீர், கர்லா என்ற நதி வழியாக தாமாப்பூர் ஏரிக்கு வந்து சேருகிறது.
 
அந்த ஏரிக்கரையின்மேல் அமைந்துள்ள கோயிலில் பகவதி தேவி தரிசனமளிக்கிறார். அக்கோயிலைச் சுற்றி ஓடுகள் வேயப்பட்டு கேரளபாணியில் கட் டப்பட்ட மண்டபங்கள் உள்ளன. அவை இத்தலத்திற்கு புனிதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்டவை. அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் மால்வன் என்ற கோட்டைக்கு அருகில் கணபதிதாரி என்ற இடத்தில் ஒரு கிணற்றில் புனித கங்கை நீர் ஊற்றெடுக்கிறது. அதன் அருகில் வலது பக்கத்தில் ஒரு துளசிமாடம் உள்ளது.
 
மாவீரன் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பரம்பரை பூசாரிகள், கணபதிதாரி கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்துத் தருகிறார்கள். அலங்கரிக்கப்பட்ட பாய் மீது அக்குடத்தை வைத்து மலர் மாலை அணிவித்து பக்தர்கள் பூஜை செய்கின்றனர். சம்பந்தப்பட்ட மந்திரங்களை பூசாரி ஓ துகிறார். சந்தன மணம் கமழும் ஊதுவத்தி, ஆரத்தியாக காட்டப்படுகிறது. லட்டு போன்ற இனிப்பு வகைகள் அக்குடத்திற்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற விரும்பிய மாவீரன் சிவாஜி இங்கு வந்து கங்கா பூஜை செய்து ள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்று கங்கா தேவி அக்கிணற்றுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது.
 
அதன் நினைவாகவே மேற்படி பூஜை. சற்று தூரம் சென்றால், மால்வன்கோட்டைக்கு தெற்குப் பக்கத்தில் மன்னன் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில் உள்ளது. அக்கோயில் முழுவதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. சிவாஜி தன் கைகளாலேயே செங்கல் எடுத்து வைத்து, கட்டு மானப்பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
 
கோயில் கருவறையில் காட்சி தரும் சிவராஜேஸ்வர் சிலையின் முகத்திற்கு உலோகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெரிய மீசையுடன் கம்பீரமாக போர்வீரனைப் போல் காணப்படுகிறார். முகம் தவிர மற்ற பாகம் முழுவதும் சிவப்புத்துணியால் மறைக்கப்பட்டுள்ளது. இச்சிலையையொட்டி சிவாஜி பயன்படுத்திய இருமுனைவாள் (தோதார்) வைக்கப்பட்டுள்ளது. கீழே அமர்ந்த நிலையில் உள்ள சிவராஜேஸ்வர் படமும் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை சிவாஜி கோயில் என்றும் அழைக்கின்றனர்.
 
மேலும் அப்பகுதியிலுள்ள கோட்டைகள், கிணறுகள், மதகுகள், எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும் சுரங்கவழிப் பாதைகள், திசை காட்டும் உயரமான கோபுரங்கள், மணிக்கூண்டுகள் மற்றும் சிவராஜேஸ்வர் கோயில் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் சிவாஜியின் வலது கை அடையாளம் பதிக்கப்பட்டு இன்றும் அப்படியே காணப்படுகிறது. ஒரு முகமதிய வியாபாரி தன் சரக்குகளை கப்பலின் ஏற்றிக் கொண்டு கொங்கண் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இடி மின்னலுடன் பெருமழை பெய்து பெரும் புயலும் வீசியது.
 
அதனால் அந்தக் கப்பல் வழிதடுமாறி ஒரு கருப்பு மலையில் மோதிக் கொள்ள இருந்தது. அப்போது அந்த மலையிலிருந்து ஒரு ஒளி தோன்றியது. அந்த வெளிச்சத்தில் மலைமீது ஒரு மூங்கில் கொட்டகை இருப்பது அந்த வியாபாரியின் கண்களில் பட்டது. பின்னர் இறைவன் அருளால் புயல் அபாயம் நீங்கியது. அதனால் மகிழ்ந்த வியாபாரி இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்பி மூங்கிலாலேயே ஒரு சிவபெருமான் உருவத்தைச் செய்து அந்த மூங்கில் கொட்டகையில் வைத்து வணங்கினார். இன்றும் அந்த மூங்கில் ஆலயம் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிவருகிறது.
 
மும்பை வந்து விட்டால் இக்கோயில்களுக்குச் செல்ல வசதிகள் உள்ளன. காடுகள் நிறைந்த மலைப்பிரதேசமாக இருப்பதால் வழிகாட்டிகளை அழை த்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும்தான் இங்கு செல்ல முடியும்.

திருச்செந்தூர் திருப்புகழ்


திருச்செந்தூர் திருப்புகழ் - ஏவினை நேர் விழி
 
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
       ஏதனை மூடனை நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
       ஏழையை மோழையை  அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
       வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
       வாழ்வுற ஈவது மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
       நாரத னார்புகல் குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
       நாயக மாமயி  லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
       தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
       சீரலை வாய்வரு பெருமாளே.
 
வாழ்வு நன்கு அமைய ஒரு வேண்டுகோள் துதி இது அம்பு போன்ற கண்களை உடைய விலை மாதரை விரும்பும் கேடனை,மூடனை,கல்வி இல்லாதவனை,பிணியால் பீடிக்கப்பட்டவனை,இகழாமல் சிலம்பணிந்த உன் திருவடிகளில் உற்ற பெரு வாழ்வைத் தந்து அருளும் ஒரு நாளும் உண்டோ?நாரதர் எடுத்துரைத்த வள்ளி நாயகியை நாடிச் சென்று அவளைக் கூடிய வீரனே.மயில் வாகனனே.பராபரியான பார்வதி பெற்ற சிறியவனே. உயர்ந்த சோலைகளின் நிழலில் விளங்கும் சீரலைவாயில் உறைகின்ற பெருமாளே நான் வாழ்வுற உன் திருவடிகளை தரும் நாள் ஒன்று உண்டோ?
 
 
பதம் பிரித்து உரை
ஏவினை நேர் விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறி பேணா
 
ஏவினை நேர் = அம்பை நிகர்க்கும் விழி மாதரை = கண்களை உடைய விலை மாதரை மேவிய = விரும்பும் ஏதனை = கேடனை மூடனை = முட்டாளாகிய என்னை நெறி பேணா = நல்லொழுக்கம் விரும்பாத.
 
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு
ஏழையை மோழையை அகலா நீள்
 
ஈனனை = இழிந்தோனை வீணனை = வீணாகக் காலம் கழிப்பவனை ஏடு எழுதா = படிப்பு இல்லாத முழு ஏழையை= முழு ஏழையை மோழையை= மடையனை அகலா நீள் = விட்டு நீங்காத நீண்ட
 
மா வினை மூடிய நோய் பிணியாளனை
வாய்மை இலாதானை இகழாதே
 
மாவினை மூடிய = பெரிய வினை மூடியுள்ள நோய் பிணியாளனை = நோயும், பிணியும் கொண்டவனை வாய்மை இலாதனை = உண்மை இல்லாதவனை இகழாதே = இகழ்ந்து ஒதுக்காமல்.
 
மா மணி நூபுர சீதள தாள் தனி
வாழ்வு உற ஈவதும் ஒரு நாளே
 
மா மணி நூபுரம் = சிறந்த மணியாலாகிய சிலம்பணிந் துள்ள சீதள = குளிர்ந்த தாள் = (உன்) திருவடிகளை தனி வாழ்வு = முத்தி இன்பத்தை உற = நான் பெற ஈவது ஒரு நாளே= (எனக்குத்) தந்து உதவும் ஒரு நாளும் உண்டோ?
 
நாவலர் பாடிய நூல் இசையால் வரு
நாரதனார் புகல் குற மாதை
 
நாவலர் = புலவர்கள் பாடிய = பாடியுள்ள நூல் இசையால்
வரும் = நூல்களில் புகழப்பட்ட நாரதனார் புகல் = நாரத முனிவர் எடுத்துரைத்த  குற மாதை = குறப்பெண்ணாகிய வள்ளியை.
 
நாடியே கான் இடை கூடிய சேவக
நாயக மா மயில் உடையோனே
 
நாடியே = நாடிச் சென்று கான் இடை = காட்டில் கூடிய சேவக = அவளைக் கூடிய வீரனே நாயக = நாயகனே மா மயில் உடையோனே = சிறந்த மயில் வாகனனே.
 
தேவி மநோமணி ஆயி பராபரை
தேன் மொழியாள் தரு சிறியோனே
 
தேவி மநோமணி ஆயி பராபரை = தேவி, மனோமணி, ஆயி, பராபரை (ஆகிய பார்வதி) தேன் மொழியாள் = தேன் போலும் மொழியையுடையவள் தரு = பெற்ற சிறியோனே= இளையவனே.
 
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ்
சீரலை வாய் வரு பெருமாளே.
 
சேண் உயர் = ஆகாயம் வரை உயர்ந்தசோலையின் நீழலிலே திகழ் = சோலைகளின் நிழலில் விளங்கும் சீரலை வாய் = திருச்செந்தூரில் வரும் = எழுந்தருளியிருக்கும் பெருமாளே = பெருமாளே.

நாரதனார் புகல் குற மாதை
வேடுவர்களின் அரசனும் முற்பிறவியில் தவம் பல செய்தவனுமாகிய நம்பி குலதெய்வமாக விளங்கிய முருகனை வழிபட்டு வந்தான்.பல ஆண் குழந்தைகள் அவர்களுக்கு இருந்தனர்.அவனுக்கும் அவன் மனைவிக்கும் பெண் மகவு இல்லையே என்ற குறை இருந்தது.கணவன் மனைவி இருவரும் பெண் குழந்தை வரம் வேண்டி பல விரதங்களை மேற் கொண்டார்கள்.

கண்வ மகரிஷியின் சாபத்தினால் விஷ்ணுவும் லக்ஷ்மியும் பூவுலகில் முனிவராகவும் மானாகவும் பிறந்தார்கள்.முனிவர்,மலையடிவாரத்தில் தவம் புரிந்தார்.மானாகப் பிறந்த மகாலக்ஷ்மி அம்மலையருகே உலவி வந்தது.ஒருநாள் முனிவர் தவம் கலைந்து தம் அருகே இருந்த அழகிய மானைக் கண்டதும் மோகம் கொண்டார்.
 
முருகப்பெருமானை மணம் புரிந்து கொள்வதற்காகவே சுந்தரவல்லி என்ற பெயர் கொண்ட விஷ்ணுபுத்திரி தவம் செய்தாள். முனிவர் மான்மீது மோகம் கொண்டதும் அம்மானின் வயிற்றில் சுந்தரவல்லி கருவானாள். முனிவரின் மோகப் பார்வையால் மான் கருத்தரித்து பெண்மகவை ஈன்றது.உடனே மானின் சாபம் நீங்கப்பெற்று மகாலக்ஷ்மி வைகுந் தத்துக்குச் சென்றாள்.
 
வனத்திலே குழந்தை அழுது கொண் டிருந்தது.நம்பிராஜன் தம் வீரர்களுடன் தினைப்புனத்தைப் பார்வையிட வந்த பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச் சென்றான்.வள்ளிக் கொடிக்கு அருகிலே மகாலக்ஷ்மியைப் போன்ற பேரழகுடன் பெண்குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது.
 
“ஆகா முருகப்பெருமானின் அருளே அருள்.”என்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான்.ஓடோடிச் சென்று குழந்தையை அள்ளியணைத்தான்.வள்ளிக்கொடியருகே கிடந்ததால் ‘வள்ளி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் நம்பியும் அவன் மனைவியும்.வள்ளி சீரும் சிறப்புமாக வளர்ந்தாள்.வேடுவர்களின் குலவழக்கத்தின் படி வள்ளிக்கு பதினான்கு வயதாகும்போது அவளை தினைப்புனம் காப்பதற்காக அனுப் பினார்கள். தினைப்புனத்தில் உயரமான பரண் மீது தோழியருடன் வள்ளியம்மை நின்ற வண்ணம், ‘ஆலோலம்’ பாடி கிளி, கௌதாரி காடை போன்ற பறவை இனங்களை விரட்டினாள்.கொடிய மிருகங்கள் வராமல் விரட்டினாள். பறவைகளோ வள்ளியின் ஆலோலப் பாட்டின் இனிமையிலும் அவள் அழகிலும் மயங்கி திரும்பத் திரும்ப தினைப்புனத்திற்கு வந்தன.வள்ளி ‘ஆலோலம்’ பாடியபடியே முருகப்பெருமானை உளமாரப் பூஜித்து வந்தாள். கலிதீர்க்க கந்தன் என்று வருவாரோ என்று வழி பார்த்திருந்தாள்.
 
வள்ளியின் பிறப்பின் பின்னணியை அறிந்து கொண்ட நாரதர் திருத்தணிகைக்குச் சென்றார். தணிகைவேலனைத் தரிசித்து வள்ளியின் தணியாத ஆவலை எடுத்துரைத்தார்.அவளை விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டினார்.
 
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8
 
தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.
இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்
பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த)
பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற
பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்
முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !
 
குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).
 
திருப்பாவை பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
     மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
     கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
     மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
     ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

மாவாய் - குதிரை வடிவு கொண்ட கேசியின் வாயை;
மல்லர் - சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்யுத்தம் செய்பவர்களை;
மாட்டிய - அழியச் செய்த; ஆ ஆ என்று அருள் - ஆ ஆ என்று இரங்கி;