செவ்வாய், 18 செப்டம்பர், 2018

சங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா?

சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சதுர்த்தியின் மகிமை : சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
சீதை ராமனுக்கு கூறிய மூன்று விதமான பாவங்கள்!

ஒரு கணவன் கோபத்தில், உணர்ச்சி வசப்பட்டு பிறருடன் அனாவசியமாக சண்டைப் போட்டால், மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி, அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும். மாறாக, அவன் தவறு செய்யும் போது அதை அனுமதித்துவிட்டு, துன்பம் நேர்கையில் அவனோடு சேர்ந்து துயரப்படுவதில் பயனில்லை. செய்தக்க அல்ல செயக்கெடும் என்பது போலவே செய்தக்க செய்யாமையினும் கெடும் அல்லவா? இதற்கு ராமாயணத்திலேயே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஸ்ரீராமபிரான் தண்டகாரண்யத்துக்குப் போனபோது ஸுதீஷர் முதலிய மகரிஷிகள் அவரைக் கண்டார்கள். தாங்கள் அரக்கர்களால் படும் துன்பங்களை அவரிடம் கூறி, அவர்களைத் தண்டிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். ஸ்ரீராமரும் அவ்வாறே அரக்கர்களை அழிப்பதாக வாக்களித்தார். பின்னர் சீதாபிராட்டி, இதைத் தவறு என்று கருதி, அன்போடும் இதமாகவும் சில வார்த்தைகளை ஸ்ரீ ராமபிரானுக்குச் சொன்னாள். உலகத்தில் மூன்று விதமான பாவங்கள் ஏற்படுவது உண்டு. அவை: 1. பொய் வார்த்தை, 2. பிறர் மனைவியைக் கவர்வது, 3. பகைமையில்லாதவரிடம் கொள்ளும் கோபமும், அதனால் ஏற்படும் நாசமும். தங்களுக்குப் பொய் என்பதே நாவில் வந்ததில்லை. பிற பெண்களைத் தாங்கள் இச்சிப்பதேயில்லை. ஆனாலும், மூன்றாவது தோஷம், ஒரு வித தீங்கும் நமக்குச் செய்யாதவர்களைக் கொல்வது. இதை நீங்கள் புரிவது நியாயமில்லை.

ஒரு மகரிஷி செய்த கடும் தவத்தைக் கெடுக்க கூர்மையான கத்தி ஒன்றை தேவேந்திரன் அவரருகில் கொண்டு வந்து வைத்துவிட்டான். தியானம் முடிந்தபின், அந்த ரிஷி கத்தியைக் கையில் எடுத்து பலவிதமாகப் பயன்படுத்தி, தமது தவப்பயனை இழந்தார் என்று ஒரு வரலாறு உண்டு. தங்களுக்குத் தெரியாத நியாயமில்லை. நான் தங்களுக்குப் புத்தி புகலவில்லை. ஆனால், நினைவுபடுத்துகிறேன். எதற்கும், தம்பி லட்சுமணனைக் கலந்து கொண்டு, நியாயப்படி செய்யலாம் என்றாள். இதைக் கேட்ட ராமபிரான், நீ சொல்வதுதான் நியாயம். ஆனால் நான் அரக்கர்களைத் தெரிந்து கொண்டு அவர்களின் கொடூரங்களை அறிந்தபின்னரே, அவர்களை அழிக்க முற்படுகிறேன் என்றார். இதுபோல் ராமாயணத்தில், சுக்ரீவன், வாலியை சண்டைக்கு இழுத்தபோது, வாலியின் மனைவி தாரை வாலியிடம் வந்து, ராமன் என்பவன் அவனுக்கு உதவிகரமாக வந்திருக்கிறான். அவன் மகா பராக்கிரமசாலி. தாங்கள் சண்டைக்குப் போக வேண்டாம் என்று சொல்லித் தடுத்தும், வாலி சண்டைக்குச் சென்று உயிரை இழந்தான். அதுபோலவே ராவணனும், தன் மனைவி மண்டோதரி சொன்ன வார்த்தையைக் கேட்காமல் உயிரை இழந்தபோது, மண்டோதரி அதையே சொல்லி பிரலாபித்து அழுதாள்.

ராமர் பிறந்த இடமான அயோத்தியைச் சுற்றி புராதன பல குளங்கள் உள்ளன. அவை ராமாயணம் சார்ந்த பல கதாபாத்திரங்களை நினைவூட்டுகின்றன.

பிரம்ம குளம் : அயோத்தியின் டெக்ரி பஜாரிலிருந்து ராஜ்காட் செல்லும் பாதையில் பிரம்ம குளம் உள்ளது. பிரம்மா இங்கு தங்கி யாகம் செய்து பலன் பெற்றதாக ஐதீகம். இந்தக் குளம் அருகில் பிரம்மாவுக்குக் கோயில் உள்ளது. இந்தக் குளத்தில் குளித்து பிரம்மாவை தரிசித்து மனமார வேண்டினால் பிரம்மலோகம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

சீதா குளம் : ராமர் காலார நடந்த பகுதியை அசோக வனம் என அழைக்கின்றனர். இதனுள் சீதாகுளம் உள்ளது. இந்தக் குளத்தை உருவாக்கியதே சீதாதான் என்பது நம்பிக்கை. வருடா வருடம் அகர்காயன் கிருஷ்ண சதுர்த்தியிலும், வைகாசி சுக்ல நவமியிலும் இந்தக் குளத்தில் குளித்து சீதையை வணங்கினால் பெண்களின் மனம்போல் வாழ்வு அமையும்.

வசிஷ்டர் குளம் : அயோத்தி நகருக்குள் சக்கர தீர்த்தத்தின் அருகே வசிஷ்டர் குளம் உள்ளது. இதன் அருகில் வசிஷ்டர், தன் மனைவியுடன் வசித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குளத்தில் குளித்தால் வசிஷ்டர் போல் ஞானம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் அருகிலேயே வசிஷ்டர் கோயில் உள்ளது. அவருடன் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்ணர், சீதா ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

தசரத குளம் : பஞ்சகோசி பரிக்கிரமா சாலையில் தசரத குளம் உள்ளது. பத்ரலாத் பூர்ணிமா தினத்தன்று இங்கு நீராடி பக்தர்களுக்கு அன்பளிப்பு வழங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

ஹனுமான் குளம் : 250 வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியை ஆண்ட மன்னர் ஹைக்ரீவ் மகராஜ், இந்த பகுதிக்கு வந்த போது இந்த இடத்தில் தங்க இடம் கொடுத்ததுடன் குளமும் வெட்டிக் கொடுத் தாராம். அப்போது கிடைத்த சலவைக்கல்லாலான அழகிய அனுமன் சிலையை, குளத்தின் அருகிலேயே நிறுவியுள்ளனர்.

தன்ட்தவான் குளம் : இந்தக் குளத்தில்தான் ராமரும் சகோதரர்களும் அதிகாலையில் நடந்து வந்து பல்தேய்த்து முகம் அலம்புவார்களாம். ஸ்ரீராமநவமியன்று இங்கு நீராடினால் ஜன்ம பாபம் விலகும் என நம்புகின்றனர். இந்த இடத்தில் கௌன்டில்ய முனிவர் ஒரு காலத்தில் தவம் செய்து வந்ததாகவும், அப்போது அவர் அமர்ந்துகொள்ளும் மான்தோல் குளத்தில் விழ... அதிலிருந்து உயிருள்ள மான் ஒன்று எழுந்து கரையேறி, முனிவரை தரிசித்து விண்ணுலகம் சென்றது.

வித்யா குளம் : அயோத்தி - தர்ஷன் நகர் வழியில் இந்தக் குளம் உள்ளது. இங்கு வித்யா (சரஸ்வதிக்கு) ஆலயம் உள்ளது. அஷ்டமியன்று பக்தர்கள் இக்குளத்தில் குளித்து, சரஸ்வதியை வழிபட்டு சகல பேறுகளும் பெறுகின்றனர்.

விபிஷணன் குளம் : அயோத்தி ராஜ்காட் பாதையில் தபால் நிலையம் அருகே இந்தக் குளம் உள்ளது. இதில் நீராடினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சூர்ய குளம் : அயோத்தியிலிருந்து 6வது கிலோ மீட்டரில் இந்தக் குளம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இதில் நீராடி சூரியனை பக்தர்கள் வணங்குகின்றனர். சூரிய வம்சத்தைச் சார்ந்த கோஷ் என்ற மன்னன் இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தபோது அங்கு குளம் போன்று தேங்கியிருந்த தண்ணீரில் குளித்தான். அப்போது அவர் உடலில் நீண்டகாலமாக இருந்த தோல் நோய் முற்றிலும் நீங்கியது. பின்னர் அந்தக் குளத்தை புனரமைத்து அருகில் சூரியனுக்கு கோயிலும் கட்டி வைத்தான். இந்தக் குளத்தில் நீராடி, சூரியனை மனமார வேண்டினால் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் மறைந்து விடுகிறது என்பது நம்பிக்கை.

÷ஷான்கார் குளம் : வைகாசி சுக்லதுவாதசியன்று இந்தக் குளத்தில் நீராடினால் செல்வசெழிப்பு ஏற்பட்டு சுகபோகத்துடன் வாழ்வர் என்பது நம்பிக்கை. இதனால் மாசி மகத்தன்று மாமாங்க குளத்தில் குளிப்பது போல் நம்பிக்கையுடன் நீராடி ராமபிரான் அருளைப் பெறலாம்.
அம்பிகையை வேண்டி ராமபிரான் கடைப்பிடித்த நவராத்திரி விரதம்!

கைகேயியின் சூழ்ச்சியால் ராமன் காட்டிற்குச் சென்றான். அரசுரிமையை இழந்தான். வனவாசத்தின்போது சீதையையும் பிரிந்தான். ராமன் சந்தித்த சோதனைகள் ஏராளம். இதனால் ராமனுக்கு மனச் சோர்வு ஏற்பட்டது. பின்னர் மனச்சோர்வும் கலக்கமும் நீங்கி, இலங்கை செல்ல பாலம் கட்டி, ராவணனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினான். இதற்குக் காரணம் ராமபிரான் அம்பிகையை வேண்டி கடைப்பிடித்த நவராத்திரி விரதத்தின் பலன்தான் என்கிறார் சூத மகரிஷி. தேவலோக தச்சன் மயன். இவன் ஒரு சமயம் பூலோகம் வந்து விஷ்ணுவை நோக்கி தவம் செய்தான். சங்கு சக்கரங்களுடன் அவனுக்குக் காட்சி தந்தார் மகாவிஷ்ணு. அவரைக் கண்டு மகிழ்ந்த மயன், இறைவா! எனக்கு ராமபிரானாக காட்சிதரவேண்டும் என்று கேட்டான். உடனே விஷ்ணு தன்னிடமிருந்த சங்கு சக்கரங்களை அருகே இருந்த கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு மயனுக்கு ராமபிரானாகக் காட்சி தந்தார். கும்பகோணம் - அணைக்கரை சாலையில் உள்ள திருவெள்ளியங்குடியில் தான் கருடாழ்வார் இப்படிக் காட்சி தருகிறார்.

நாகை மாவட்டத்தில் பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள ஊர் திலதர்ப்பணபுரி. இந்த ஊர் சிதலைப்பதி, செதல்பதி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்கு முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே சந்திர தீர்த்தம் உள்ளது. இங்கு அரிசிலாறு பாய்கிறது. ராமரும் லட்சுமணரும் தம் தந்தை தசரதருக்கு தர்ப்பணம் செய்த இடம் இது என்கிறது தலபுராணம். கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயத்தில் ராமகாதை தொடர்பான சிற்பங்கள் உள்ளன. தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் ராமகாதையை கல்லில் சிற்பமாக வடிவமைத்துள்ளனர். இது நாயக்கர் கால திருப்பணி என்கின்றனர். சீதை இலங்கையில் அசோக வனத்தில் வாடிக் கொண்டிருந்தபோது அவளை மீட்டு வரவேண்டுமே எனக் கவலைப்பட்டார் ராமர். இடையில் உள்ள கடலை எப்படிக் கடப்பது என்று விபீஷணரிடம் ஆலோசனை கேட்டார். அவரது ஆலோசனைப்படி தர்ப்பப் புல்லைப் பரப்பி, அதன் மீது படுத்த நிலையில் வருணபகவானை நோக்கி ஏழு நாட்கள் தவம் இருந்தார் ராமர். ராமபிரான் தவமிருந்த இத்தலமே தர்ப்பசயனம் எனும் திருத்தலமாகும். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நூல்களில் சப்தார்த்த சிந்தாமணி என்பதும் ஒன்றாகும்.

கி.பி.1684 முதல் 1712 வரை தஞ்சையை ஆண்ட ஷாஜி என்ற மராட்டிய மன்னரின் அவைப் புலவராய் விளங்கிய சிதம்பரக்கவி என்பவரால் இது எழுதப்பட்டது. இந்த நூலுக்குத் தனிச்சிறப்பு ஒன்று உள்ளது. வடமொழியில் உள்ள இந்நூலை முதல் சுவடியில் இருந்து படிக்கத் தொடங்கினால் ராமாயணமாகவும், கடைசி சுவடியிலிருந்து திரும்பிப் படித்தால் பாகவதமாகவும் அமைந்துள்ளதாம். இவ்வாறு அமைந்து இருப்பது அதிசயமல்லவா! ராமர் மூலவராக உள்ள ஸப்த (ஏழு) ராமர் கோயில்கள். 1. அயோத்தி, 2. திருப்புல்லாணி, 3. சீர்காழி, 4. திருவெள்ளியங்குடி, 5. திருஎவ்வுள், (திருவள்ளூர்) 6. புள்ளம் பூதங்குடி, 7. திருப்புட்குழி முதலியன. ஸ்ரீராமநவமியன்று பக்தர்கள் தம் சக்திக்குத் தகுந்தபடி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை யாரேனும் ஒருவருக்கு தானமாகத் தருவது நல்லது. ஸ்ரீராமர் வழிபாடும், வரலாறும், பெருமைகளும் எங்கும் பரவவேண்டும் என்பது இவ்வகை தானத்தின் நோக்கம். சிலர் பலருக்கு விசிறிகளை தானமாகத் தருகின்றனர். அஷ்ட மங்கலப் பொருள்களில் விசிறியும் ஒன்று. ஸ்ரீராமரை வழிபட்டால் எங்கும் மங்கலம் பொங்கித் தங்கும் என்பதை விசிறி புலப்படுத்துகிறது.நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம்.

இங்கு பஞ்சலோகத்திலான கோதண்ட ராமர், சீதாபிராட்டியார், இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள், விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள ரட்சை, எழுத்துகளுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.சீதா -ராம கல்யாணம் முடிந்து அயோத்தி வந்த ராமரை எல்லோரும் வாழ்த்தி விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். அப்போது மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி அழகிய பாதுகைகளை மிகவும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். பின்னர், உயரிய பரிசுகளை பலர் தரும் போது நாம் அற்ப பாதுகைகளையா தருவது என வருந்தி பின் வாங்கினான். இதைக் கவனித்த ராமர், உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள, மித்ரபந்து மகிழ்ந்து போனான்.

ராமர் காட்டுக்குப் புறப்பட்ட போது, வனவாசம் போகும் போது எதையும் உடன் எடுத்துப் போகக் கூடாது தான். இருந்தாலும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்கிறேன் என்று கைகேயியிடம் கூறிவிட்டு, கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை. உன்னுடைய பாதுகைகள் தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது என்றார். அந்தப் பாதுகைகள் தான் 14 வருஷம் அயோத்தியையும் ஆண்டது. காசியில் அனுமன் காட் என்னும் இடத்தில் ஆஞ்சநேயருக்குப் பெரிய திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஸமர்த்த ராமதாசர் அனுமனைப் பிரதிஷ்டை செய்தார் என்று கூறுகின்றனர். வைணவ சித்தாந்தத்தில் அனுமனை சிறிய திருவடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேய வழிபாடு செய்பவர்களை சனி பகவான் துன்புறுத்துவது இல்லை. கையைப் பிடித்துக் கொள்வதும் ஆரத்தழுவுவதும் அன்பின் வெளிப்பாடுகள். ராமபிரான் அனுமனையே தான் பெற்ற எல்லா செல்வங்களுக்கும் ஈடு இணையாக எண்ணி ஆரத்தழுவினான் என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. சஞ்சீவையா என்பது ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெயர். அனுமன் மருந்து மலையான சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து, போர்க் களத்தில் மயங்கிய லட்சுமணனைக் காப்பாற்றினார். இச்செயலால் ஆந்திர தேசத்தார் அனுமனை சஞ்சீவையா என்று அழைக்கின்றனர்.
தரணியாள வந்த தர்மத்தின் தலைவன்

மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி : "ராமன் என்பதற்கு ஆனந்தமாக இருப்பவன், ஆனந்தம் தருபவன் என்று இருவிதமான பொருள்கள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்கும்போது, புறச்சூழ்நிலைகள் ஒருவனை பாதிப்பதில்லை. கைகேயி பெற்ற வரத்தால் பட்டு உடுத்தி பட்டாபிஷேகத்திற்கு தயாரான ராமன், மரவுரி கட்டி காட்டுக்கு கிளம்பிச் சென்றார். முகத்தில் எந்த வருத்தமும் இல்லை. மலர்ந்த தாமரை மலரைப் போல புன்னகையுடன் கிளம்பினார். கவிச்சக்கரவர்த்தி கம்பர் இதனை "சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை முகத்தினன் என்று குறிப்பிடுகிறார். கடவுளாகிய மகாவிஷ்ணு, தர்மத்தை மனிதனால் கடைபிடிக்க முடியும் என்று வாழ்ந்து காட்டுவதற்காக ராமனாக அவதரித்தார். எந்த இடத்திலும் ராமன் "இது என் அபிப்ராயம் என்று சொன்னதே இல்லை. "தர்மம் இப்படி சொல்கிறது "மகான்கள் இவ்விதம் சொல்கிறார்கள் என்று தான் சொல்வார். தந்தை தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ராமன் காட்டுக்குச் சென்று தர்மத்தை நிலைநாட்டினார். எந்தநிலையிலும் அவர் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் மலர்ச்சியையும் இழந்ததே இல்லை.

மகிழ்ச்சி தந்த ராமாயணம் : மூதறிஞர் ராஜாஜி "சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதினார். அவர் ராமாயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ""சீதை, ராமன், அனுமன், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு செல்வமோ நிம்மதியோ இல்லை. இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. கங்கையும், காவிரியும் ஓடும்வரையில் சீதாராம சரிதம் பாரத நாட்டில் இருந்து அனைவரையும் தாய் போல் பக்கத்தில் இருந்து காக்கும். நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றைவிட "சக்கரவர்த்தி திருமகன் எழுதி முடித்தது தான் மேலானபணி என்பது என் கருத்து. அதுவே என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தது. சீதாபிராட்டியைத் தியானிப்போமாக. நம்முடைய பிழைகள் அதிகம். அவளுடைய கருணையன்றி நமக்கு கதியில்லை. "குற்றம் செய்யாதார் எவர் தாம் என்று கேட்ட அவள் நம்மையும் காப்பாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த சீதை :கம்பர் பாடிய கம்பராமாயணம் புகழ்பெற்றது. அவர் தன் நூலில், சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிச் சென்ற நிகழ்ச்சியை விவரிக்கும்போது, வால்மீகியிடம் இருந்து வேறுபடுகிறார். ராவணன் சீதையைக் கையால் தீண்டாமல், பர்ணசாலையோடு (சீதை தங்கியிருந்த இடம்) பெயர்த்துக் கொண்டு போனதாக குறிப்பிடுகிறார். ஒரு கொடியவன் ஒரு பெண்ணிடம் அதர்மமாக நடந்து கொண்டான் என்று சொல்லக்கூட, கம்பரின் அன்பு நெஞ்சம் இடம் தரவில்லை. துளசிதாசர் தன்னுடைய இந்தி ராமாயணத்தில் ராவணன் தூக்கிச் சென்றது உண்மையான சீதை அல்ல என்று கூறுகிறார். ராவணன் வந்த போது பிராட்டியார், மாயா சீதையை உருவாக்கி விட்டு மறைந்து விட்டதாகவும், ராமன் அக்னி பரீட்சை நடத்தும்போது உண்மையான சீதை தீயில் இருந்து வந்தததாகவும் குறிப்பிடுகிறார். இந்த ராமாயணம் வடநாட்டு மக்களிடம் பெரிதும் பரவியுள்ளது.

காட்டுக்குச்சென்ற கட்டுச்சோறு : ராமபிரான் காட்டுக்குச் செல்லும்போது கட்டுச்சோறு கொண்டு சென்ற விபரம் உங்களுக்கு தெரியுமா? கோசலையின் மணிவயிறு, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றது. அவள் தன் பிள்ளையைக் கண்ணின் மணிபோல காத்து வந்தாள். எந்தப் பிள்ளை வெளியூருக்குக் கிளம்பினால் அப்பா தன் பங்குக்கு பணமும், அம்மா பசிக்கு கட்டுச்சோறும் கொடுத்து அனுப்புவது அக்கால வழக்கம். ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது தசரதர் பிள்ளைக்கு "சத்தியம் என்னும் பணத்தை தந்தார். கோசலை ஒரு விசேஷமான கட்டுச்சோறு செய்து கொடுத்தாள். "ஒருநாள் இருநாள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாதது இது என்று ராமனிடம் சொன்னாள். ""என் கண்ணே! ராகவா! நீ எந்த தர்மத்தை பக்தியோடு அனுசரித்து வந்தாயோ அந்த தர்மத்தையே கட்டுச்சோறாக தருகிறேன். அதை என்றென்றும் பின்பற்று. அது உன் உடனிருந்து காக்கும், என்று ஆசியளித்தாள்.

ராமராஜ்ய மன்னர்கள் : ராவணவதம் முடிந்து ராமர்,சீதை, லட்சுமணர் அயோத்தி திரும்பினர். ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தேறியது. மங்களஇசை முழங்கியது. அந்தணர்கள் வேதம் ஓதினர். சங்குகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தவஞானிகள் மந்திரம் சொல்லி புனிதநீரால் ராமனுக்கு அபிஷேகம் செய்தனர். தம்பியர் சூழ்ந்து நின்று வெண்சாமரம் வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான். அனுமன் ராமபிரானின் திருவடிகளைத் தாங்கி நின்றார். அப்போது குலகுரு வசிஷ்டர் கிரீடத்தை ராமனின் தலையில் சூட்டி மகிழ்ந்தார். அக்காட்சியைக் கண்ட அனைவரும் தங்களையே மன்னர் போல உணர்ந்து மகிழ்ந்தனர். தங்கள் தலையிலேயே கிரீடம் வைத்தது போல எண்ணினர். ஏனென்றால், ராமராஜ்யத்தில் ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது. அனைவரும் சமமாக மதிக்கப்பட்டனர். கடைநிலையில் உள்ள பிரஜையாக இருந்தாலும், ராமபிரான் அவருடைய எண்ணத்திற்கும் மதிப்பளித்து அரசாட்சி நடத்தினார்.

பத்துதலை ராணனை ஒற்றைத்தலை ராமன் வென்றான் : தர்மத்தை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற மனநிலை வேண்டும். தர்மவாதிகளை உலகம் பரிகாசம் செய்தாலும், விடாமல் பின்பற்றும் தைரியம் வேண்டும். ராமபிரான் வாழ்வில் எத்தனையோ துன்பத்தைச் சந்தித்தாலும் தர்மத்தைக் கைவிடவில்லை. எவன் ஒருவன் தர்மத்தைக் காக்கிறானோ அவனைத் தர்மம் காக்கும். ராமபிரானும், ராவணனும் தர்மத்தைப் பின்பற்றும் விஷயத்தில் எதிர் துருவங்கள். ராமனுக்கு ஒரு தலை. ராவணனுக்கு பத்துத்தலை. ஒருதலையிடம் பணிவும், தர்மமும் இருந்தது. பத்துதலையிடம் ஆணவமும், அதர்மமும் இருந்தது. அதர்மம் ஆயிரம் வழிகளில் தர்மத்தைச் சுற்றி வளைத்தாலும், தர்மமே இறுதியில் வெற்றி பெறும் என்பதை ராமகாவியம் வலியுறுத்துகிறது. இதையே "தர்மம் தலை காக்கும் என்று இன்றும் போற்றுகின்றனர்.

அருள் கொடு அயோத்தி ராமா! ராமநவமி பிரார்த்தனை : ராமநவமியன்று மட்டுமல்ல! யாரொருவர் தினமும் காலையில் இந்தபாராயணத்தைப் பக்தியுடன் படிக்கிறாரோ, அவர் பக்தர்களில் சிறந்த ரத்தினமாவார். ரகுகுல திலகமான ராமச்சந்திரமூர்த்தியின் திருவருளால் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு அடைவார்.

* புன்சிரிப்பும், இனிய பேச்சும்
கொண்டவரே! செந்தாமரைக்
கண்களால் அருள்பவரே! அகன்ற நெற்றியை உடையவரே! நீண்ட
குண்டலங்களை அணிந்தவரே!
ரகுவம்ச திலகமே! ராமபிரானே! உமது மலர்முகத்தைத்
தியானிக்கிறோம்.
* பகைவர்களுக்கு பயத்தைக்
கொடுப்பவரே! வேண்டியவர்
விரும்பும் வரங்களைத்
தருபவரே! சிவதனுசை முறித்து
சீதாதேவியை திருமணம்
செய்தவரே!, ராமபிரானே! உமது மலர்முகத்தை வணங்குகிறோம்.
* பத்மம், அங்குச ரேகைகளைக் கொண்ட கைகளால்
பக்தர்களுக்கு மங்களத்தை
அருள்பவரே! ஞானியர்களின் மனம் என்னும் வண்டால்
சேவிக்கப்படுபவரே! கவுதம
மகரிஷியின் மனைவியான
அகல்யாவின் சாபத்தைப்
போக்கியவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தைப் போற்றுகிறோம்.
* வேதங்களால் துதிக்கப்படுபவரே! நீலவண்ணம் கொண்டவரே!
ரகுவம்ச நாயகரே! நீலரத்தினம் பதித்த ஆபரணங்களை
அணிந்தவரே! பக்தியில்சிறந்தவர்களால்
பூஜிக்கப்படுபவரே! முத்துக்கள் இழைத்த சிம்மாசனத்தில்
வீற்றிருப்பவரே! பட்டாபிஷேக
ராமபிரானே! உமது மலர்முகத்தைச் சிந்திக்கிறோம்.
* எல்லாவித பாவங்களையும்
போக்குபவரே! கிரகதோஷத்தை
நீக்குபவரே! பார்வதிதேவியும்,
பரமேஸ்வரனும் பக்தியுடன் பூஜிக்கும் திருநாமத்தைக் கொண்டவரே!
விஷ்ணுசகஸ்ர நாமத்தால்
ஆராதிக்கப்படுபவரே! ராமபிரானே! உமது மலர்முகத்தை எண்ணி
மகிழ்கிறோம்.
தமிழ் வருடங்களுக்கு சரியான ஆங்கில ஆண்டுகள்!

பிரபவ                   1867-68 1927-28 1987-88
விபவ                    1868-69 1928-29 1988-89
சுக்கில                   1869-70 1929-30 1989-90
பிரமோதூத          1870-71 1930-31 1990-91
பிரஜோத்பத்தி      1871-72 1931-32 1991-92
ஆங்கீரஸ             1872-73 1932-33 1992-93
ஸ்ரீமுக                   1873-74 1933-34 1993-94
பவ                        1874-75 1934-35 1994-95
யுவ                       1875-76 1935-36 1995-96
தாது                      1876-77 1936-37 1996-97
ஈஸ்வர                 1877-78 1937-38 1997-98
வெருதான்ய        1878-79 1938-39 1998-99
பிரமாதி                1879-80 1939-40 1999-2000
விக்ரம                 1880-81 1940-41 2000-01
விஷு                   1881-82 1941-42 2001-02
சித்ரபானு             1882-83 1942-43 2002-03
சுபானு                  1883-84 1943-44 2003-04
தாரண                  1884-85 1944-45 2004-05
பார்த்திப               1885-86 1945-46 2005-06
விய                      1886-87 1946-47 2006-07
சர்வஜித்து            1887-88 1947-48 2007-08
சர்வதாரி               1888-89 1948-49 2008-09
விரோதி                1889-90 1949-50 2009-10
விக்ருதி                1890-91 1950-51 2010-11
கர                          1891-92 1951-52 2011-12
நந்தன                   1892-93 1952-53 2012-13
விஜய                    1893-94 1953-54 2013-14
ஜய                         1894-95 1954-55 2014-15
மன்மத                   1895-96 1955-56 2015-16
துன்முகி                 1896-97 1956-57 2016-17
ஹேவிளம்பி        1897-98 1957-58 2017-18
விளம்பி                  1898-99 1958-59 2018-19
விகாரி                     1899-1900 1959-60 2019-20
சார்வரி                    1900-01 1960-61 2020-21
பிலவ                       1901-02 1961-62 2021-22
சுபகிருது                 1902-03 1962-63 2022-23
சோயகிருது            1903-04 1963-64 2023-24
குரோதி                    1904-05 1964-65 2024-25
விசுவாவசு             1905-06 1965-66 2025-26
பராபவ                    1906-07 1966-67 2026-27
பிலவங்க                1907-08 1967-68 2027-28
கீலக                        1908-09 1968-69 2028-29
சௌமிய                 1909-10 1969-70 2029-30
சாதாரண                1910-11 1970-71 2030-31
விரோதிரிகிருது     1911-12 1971-72 2031-32
பரிதாபி                    1912-13 1972-73 2032-33
பிரமாதீச                 1913-14 1973-74 2033-34
ஆனந்த                    1914-15 1974-75 2034-35
இராக்ஷஸ               1915-16 1975-76 2035-36
நள                            1916-17 1976-77 2036-37
பிங்கள                     1917-18 1977-78 2037-38
காளயுக்தி                1918-19 1978-79 2038-39
சித்தாத்ரி                  1919-20 1979-80 2039-40
ரௌத்ரி                    1920-21 1980-81 2040-41
துன்மதி                    1921-22 1981-82 2041-42
துன்துபி                    1922-23 1982-83 2042-43
ருத்ரோத்காரி           1923-24 1983-84 2043-44
ரக்தாக்ஷி                   1924-25 1984-85 2044-45
குரோதன                  1925-26 1985-86 2045-46
அக்ஷய                      1926-27 1986-87 2046-47
27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்!

அஸ்வினி  - கேது
பரணி  - சுக்கிரன்
கார்த்திகை - சூரியன்                               
ரோகிணி - சந்திரன்
மிருகசீரிஷம் - செவ்வாய்
திருவாதிரை - ராகு
புனர்பூசம் - குரு (வியாழன்)
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
சுவாதி - ராகு
விசாகம் - குரு (வியாழன்)
அனுஷம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராகு
பூரட்டாதி - குரு (வியாழன்)
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்.

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெயர்கள் எந்த எழுத்தில் துவங்க வேண்டும்?

நட்சத்திரம்       நட்சத்திர எழுத்துக்கள்

அசுவினி          சு-சோ-சோ-ல
பரணி                  லி-லு-லே-லோ
கிருத்திகை      அ-இ-உ-ஏ
ரோகிணி            ஒ-வ-வி-வு
மிருகசீரிஷம்  வே-வோ-கா-கி
திருவாதிரை    கு-க-ங-ச
புனர்பூசம்         கே-கோ-ஹா-ஹீ
பூசம்                   ஹு-ஹே-ஹோ
ஆயில்யம்       டி-டு-டெ-டோ-டா
மகம்                  ம-மி-மு-மே
பூரம்                   மோ-டா-டி-டு
உத்திரம்           டே-டோ-பா-பி
அஸ்தம்           பூ-ஜ-ண-டா
சித்திரை           பே-போ-ரா-ரி
சுவாதி               ரு-ரே-ரோ-தா
விசாகம்           தி-து-தே-தோ
அனுஷம்         ந-நி-நு-நே
கேட்டை           நோ-யா-யீ-யு
மூலம்                யே-யோ-பா-பி
பூராடம்              பூ-தா-பா-டா
உத்திராடம்      பே-போ-ஷ-ஜி
திருவோணம் ஜு-ஜெ-ஜொ-க
அவிட்டம்        க-கீ-கு-கே
சதயம்               கோ-ஸ-ஸீ-ஸு
பூரட்டாதி          ஸ-ஸோ-தா-தீ
உத்திரட்டாதி  து-த-ஜ-ஞ
ரேவதி                தே-தோ-ச-சி
நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி

சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந் தது நவராத்திரி. ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள்,  நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.

நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம். பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபடுவது மிகவும் உகந்ததாகும். நவராத்திரி என்பது நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முக்கியமாக பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பு. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (இச்சை என்றால் விருப்பம், ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செய்தல்) என்ற முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பாகும். இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் உண்டு. குமரி பூஜை நவராத்திரியில் மிக முக்கியமான ஒன்றாகும். 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமான வேடங்கள் அணிவித்து, அந்த அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும். பல்வேறு சக்தி அம்சங்கள் இருந்தாலும், மிக முக்கிய அம்சங்களான குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி, மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி சாமுண்டி என்று இந்த நாமாக்களை சொல்லி ஒவ்வொரு இரவும் பூஜிக்க வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற கணக்கில் கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவை, மிருகங்கள், காய்கறி, பழவகைகள் போன்ற பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு மாவிலை சொருகி, அதன் மீது தேங்காய் வைக்கலாம். அதன் முன்பு முப்பெருந்தேவியரான சக்தி, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். அடுத்தடுத்த படிகளில் சாமி சிலைகள், இறைவனின் மற்ற அவதாரங்கள், தட்சிணாமூர்த்தி போன்றவற்றையும், பின்னர் சாய்பாபா, ஆதிசங்கரர் போன்ற மகான்களின் சிலைகள், பிறகு மனிதர்கள், அதன் கீழே விலங்குகள், பூச்சிகள், அதற்கும் கீழே காய்கறி, பழ வகைகள், பாத்திரங்கள் போன்ற பொம்மைகளை வைக்கலாம். உயிரற்ற பொருட்களும் குறைந்த அறிவுள்ள பொருட்களும் கீழ் நிலையில் இருக்கின்றன. படிப்படியாக ஞானம் பெற்றால் உயர்நிலையை அடையலாம் என்பது இதன் தாத்பர்யம்.

மாலையில் கொலு படி அருகில் கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அவரவர் வசதிப்படி பொங்கல், சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். இசை என்பது பக்தியின் ஒரு வடிவம். கல் நெஞ்சையும் உருக வைக்கும் மகத்துவம் இசைக்கு உண்டு. பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகள் இசைக்க தெரிந்தவர்கள் தினமும் மாலை நேரத்தில் பக்திப் பாடல்கள் பாடுவது சிறப்பு. ஸ்லோகங்கள் சொல்லலாம். தினமும் நடுவாசலிலும் கோலம் போட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நிவேதனம் செய்த பொங்கல், சுண்டல் போன்றவற்றுடன் ஜாக்கெட் பிட், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், தேங்காய், பரிசு பொருட்கள் கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம்.

ஆடம்பரமாகத்தான் கொலு வைக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வசதிப்படி ஒரு படி வைத்து நாலைந்து பொம்மைகளை வைத்தால்கூட அது கொலுதான். முப்பெருந்தேவியரை நம் வீட்டில் எழுந்தருளச் செய்து 9 நாட்களும் வழிபட வேண்டும் என்பதே முக்கியம். ஒரேயடியாக எல்லா பொம்மைகளையும் வாங்குவது என்பது பலருக்கு சிரமமாக தெரியும். ஒவ்வொரு ஆண்டும் சில பொம்மைகள் வாங்கி கொலு வைக்க தொடங்கி, ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைவது போல நம் வாழ்க்கையிலும் வளம் பெருகும்.
சிரஞ்சீவிகள் ஏழு பேர் !

அஸ்வத்தாமன், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமான், விபீஷணன், மாபலி சக்ரவர்த்தி, வியாசர் இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள். இவர்கள் எழுவரும் சிவாலயங்களையும், சிவனையும் பாதுகாப்பவர்கள். நாம் சிவாலய தரிசனம் முடித்ததும், ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்து விட்டு கிளம்புவோம். அப்போது அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம். அதனால் கோயிலுக்குச் சென்று விட்டு நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!
கிருஷ்ணர் வழிபட்ட துர்க்கை !

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுயம்புவாக தோன்றிய தேவி, கனகதுர்க்கா என்ற திருநாமத்துடன் அருள் புரிகிறாள். கிருஷ்ணர், பரசுராமர், பரத்வாஜர், அகத்தியர், பாண்டவர்கள், ஆதிசங்கரர் என்று பலரும் இவளை வழிபடிருக்கிறார்கள். இந்தக் கோயிலின் நான்கு பக்கமும் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரங்களைக் காணலாம்.
தியாகராஜர்!

தியாகராஜர் மன்முறுகித் தொழுது வணங்கும் ராமர், சீதை பெயர்களே அவருடைய பெற்றோருக்கும் இருந்தது தான் அதிசயம்.'சீதம்ம மாயம்ம,  ஸ்ரீராமுடு நாதன்றி' என்ற பாடலில், சீதம்மா என் தாய், ஸ்ரீராமர் என் தந்தை என்ற பொருள் பட அவர் பாடியிருப்பது, இரட்டை அர்த்ததில் அழைத்தது.

சரபொஜி மகாராஜா தன்னைப் போற்றிப்பாட அழைத்த போது போகாத தியாகராஜர்,'மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? என்ற அர்த்தம் கொண்ட' நிதி சால சுகமா' கீர்த்தனையைப் பாடினார். கோபமடைந்த அவரது தமையனார், தியாகராஜர் பூஜித்து வந்த சீதா, ராம, லஷ்மண விக்ரகங்களைத் தூக்கி காவிரியில் எறிந்து விட்டார். அதில் வேதனையுற்ற தியாகராஜர் 'உன்னை எங்கெல்லாம் தேடுவேன்?' என்ற வேதனை ஒலிக்கும் தே' நெந்து வெத குதுரா'கீர்த்தனையைப் பாடினார். பின்னர் ராமபிரான் அருளால் அந்த விக்ரகங்களைக் கண்டு பிடித்து மகிழ்ச்சியடைந்தார்.
போகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம்

போகர் சித்தர்க்கு அஷ்டமாசித்திகள் கைகூடிய ஆலயம் என்பது மட்டுமல்லாமல் மன்மதனுக்கு அருளல் மற்றும் ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற ஏராளமான தெய்வீகச் சிறப்பை தன்னகத்தே கொண்ட அற்புதமான ஆலயம்தான் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உடனுறை ஸ்ரீசிவகாமசுந்தரி ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் ஆகும்..

சிவபோக சக்கரம் : போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பிறகு அதில் சரியான திதியும், நட்சத்திரமும், ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார். அதன் விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகு விரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின. இதை அறிந்த பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமா சித்துக்களில் சித்தி பெற்றனர். ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பது தான் ஆச்சரியமான உண்மை! வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹாமண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தை தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் ஈசான பாகத்தில் சிவலிங்க வடிவில் போகர் சித்தர் அரூபமாக இன்னும் தவம் செய்து வருவதாக ஐதீகம் மேலும், அகத்தியர் நாடியிலும், வசிஷ்டர் நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களை விவரித்துள்ளனர்.

தல பெருமை : பாற்கடல் கடைந்த போது வெளிவந்த அமுதம் அசுரர் களுக்கு கிடைக்காமல் இருக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியை பார்த்து சிவபெருமான் மோகித்தார். இதையறிந்த மஹா லட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். மேலும் இதுபற்றி சிவனிடம் கேட்டறிய அவரை அழைத்தாள். ஆனால் சிவபெருமான் வரவில்லை. இதனால் பூலோகத்துக்கு சென்று வெள்ளூரில் ஈசனை நோக்கி தவம் செய்தாள். அப்போதும் சிவன் வரவில்லை. எனவே தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன் பின் ஈசன், மஹா லட்சுமி முன் தோன்றி ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி கோபத்தை தணித்து சாந்த மாக்கினார். மஹா விஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். ஈசனை பூஜிக்க மஹா லட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மஹா லட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது.         

வில்வாரண்யேஸ்வரர் : ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே இவ்வூர் வெள்ளூர் எனப்பெயர் பெற்றது. வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.        

ஐஸ்வர்ய மஹாலட்சுமி : தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற தலம் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு தரும். வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மஹா லட்சுமி வீற்றிருக்கிறாள்.

இக்கோவில் குறித்த புராணச் செய்தி : தட்சன் யாகம் : ஈசனை விட தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மகளான தாட்சாயினியின் கணவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. வேண்டுமென்றே ஈசனை தட்சன் தவிர்த்தான். ஆனால் தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால் யாகசாலைக்கு சென்ற பராசக்திக்கு அவமானமே மிஞ்சியது. கணவனின் சொல் கேட்காமல் வந்ததற்கு இது தேவை தான் என்று எண்ணிக்கொண்ட தாட்சாயினி தந்தையின் யாகம் அழிந்து போக சாபம் கொடுத்து விட்டு வந்தார். ஆனாலும் தனது சொல் கேட்காமல் சென்ற காரணத்தால் ஈசனின் கோபத்திற்கு ஆளானார். தான் பெரும் தவறு செய்து விட்டதை உணர்ந்த தாட்சாயினி, பூலோகத்தில் மீண்டும் பிறப்பெடுத்து சிவபெருமானை அடையும் நோக்கில் தவம் இருந்தார். இறைவனும் இறைவியும் பிரிந்த காரணத்தால் உலக சிருஷ்டி தடைபட்டது. சிவனையும், சக்தியையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் கூடி விவாதித்தனர். சின்முத்திரையுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சிவபெருமானை விழிக்கச் செய்து பார்வதியின் மீது ஈர்ப்புவர மன்மதனை அம்பு எய்தும் படி தேவர்கள் கூறினர். அதற்கு மன்மதன் மறுப்பு தெரிவித்தான். ஈசன் மேல் அம்பை தொடுப்பது எனக்கு நானே அழிவை தேடிக்கொள்வதற்கு சமம் என்று தேவர்களிடம் வாதாடினான். இதனால் தேவலோகமே ஒன்று திரண்டு மன்மதனுக்கு சாபமிட முயன்றதால் வேறு வழியின்றி ஈசன் மீது காம பாணம் தொடுக்க மன்மதன் ஒப்பு கொண்டான்.

திருக்காமேஸ்வரர் : உலகம் இவ்வாறு தான் இயங்க வேண்டும் என்று அனுமானித்த ஈசனால் நடக்கப்போவதை கணிக்க முடியாதா என்ன? பல மைல் தூரத்தில் இருந்து காம பாணம் எய்திய மன்மதனை தனது நெற்றிக் கண்ணை லேசாக திறந்து பார்த்தார் ஈசன். அதன் வெப்பம் தாங்காமல் மன்மதன் சாம்பலாகி போனான். அப்போது ஈசனுக்கு தன்னை நோக்கி தவம் செய்யும் பார்வதி தேவியின் எண்ணம் வந்து அவருடன் கூடி திருக்காமேஸ்வரராகவும், அன்னை பார்வதி தேவி சிவகாம சுந்தரியாகவும் காட்சியளித்தனர்.

மன்மதனுக்கு அருளல் : இந்த நிகழ்வை சித்திரிக்கும் புடைப்புச் சிற்பம் கோவிலில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக்கணை விடும் மன் மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவி ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திருப்பி தர வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே நேரம் மன்மதன் இல்லாததால் ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு அற்றுப்போய் உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார் சிவபெருமான். அதோடு ‘மன்மத மதன களிப்பு மருந்து’ எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார். இந்த மருந்து சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆலயத்திற்கு தெற்கு வாசல் கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிரகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மஹா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னிதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.

இருப்பிடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம்,முசிறி வட்டம், திருச்சியில் இருந்து குணசீலம் செல்லும் சாலையில் மேற்கே 32 கி.மீ.தொலைவிலும், முசிறியிலிருந்து கிழக்கே 6 கி.மீ.தொலைவிலும் அமைந்திருக்கும் கிராமம் வெள்ளூர் ஆகும். இந்த ஆலயத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகா உடனுறை திருக்காமேஸ்வரர், ஸ்ரீஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் அமைந்திருக்கிறது.