வியாழன், 7 நவம்பர், 2013

மண்ணுக்குள் மறையும் முன்னோர் வீரம்: சிதிலமடையும் வரலாற்று சின்னம்!

ஆனைமலை: தென் கொங்கு நாட்டில் (ஆனைமலை) பல்வேறு வரலாறு கூறும் சின்னங்கள் சிதிலமடைந்து யாராலும் கவனிக்கப்படாமல் உள்ளன. அரசு தொல்லியல் துறையினர் இது குறித்து அகழ்வராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கொங்கு 24 நாடுகளில் ராஜகேசரி பெருவழி என அழைக்கப்பட்ட ஆறை நாட்டு பகுதியான இன்றைய கோவை நகர் பகுதி, அவினாசி வட்டம், பல்லடம் வட்டம் ஆகிய பகுதிகளிலும், வையாபுரிநாடு, நல்லுருக்காநாடு என அழைக்கப்பட்ட இன்றைய உடுமலை, பழநி வட்டங்களில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது முதுமக்கள் தாழி, கல்திட்டைகள், நாணயங்கள் கிடைத்தன. பல வரலாற்று செய்திகளும் வெளி வந்தன. அதுபோல் வீரநாரயணன் பெருவழி அமைந்ததாக எண்ணப்படும், தென் கொங்கு நாடுகள் என அழைக்கப்பட்ட ஆனைமலை நாடு (பொள்ளாச்சி வட்டத்தின் தென் பகுதி), காவடிக்கா நாடு (பொள்ளாச்சி வட்டத்தின் தென் மேற்கு பாகம்) ஆகிய பகுதிகளை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்யவில்லை. இதனால் பல வரலாறுகள் மண்ணில் புதைந்து கிடக்கிறது.ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர்-கோட்டம்பட்டி ரோட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட புலி குத்தி கல் 3 அடி உயரத்தில் கம்பீரமாக புடைப்பு சிற்பங்களுடன் உள்ளது. முன்னோர்களின் வீரத்தை பறை சாற்றும் இந்த புலி குத்தி கல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வேடிக்கை பொருளாகி வருகிறது.

கோவை கல்வெட்டியல் பட்டயப்படிப்பு பொறுப்பாசிரியர் ரவி கூறியதாவது:இந்த சிற்பமானது அடுக்குக்கல் சிற்ப வகையைச்சேர்ந்தது. ஒரு கல்லில் கூறிய செய்தியின் தொடர்ச்சியை அடுத்த கல்லில் கூறுவதே அடுக்கு கல் சிற்பமாகும். ஒரு கல்லை முழு தனி சிற்பமாக செதுக்காமல், கல்லில் உருவம் மட்டும் வெளிப்படுமாறு செதுக்குவதை புடைப்பு சிற்பம் எனப்படும். மேலும் இதற்கு புலி குத்திக்கல் என்று பெயர்.முற்காலங்களில் வேளாண்மையின் உப தொழிலாக கால்நடை வளர்ப்பும் இருந்து வந்தது; அச்சமயம் வன விலங்குகளிடம் இருந்து கால்நடைகளையும், மக்களையும் காக்க அன்றைய காலத்தில் கிராம காவல் வீரர்கள் அடங்கிய படை ஒன்று இருந்தது.

புலி,சிறுத்தை போன்ற வன விலங்குகளிடம் இருந்து மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளையும், அவற்றை மேய்ப்பவர்களையும் காப்பதே அவர்களின் பணியாகும். இந்த சிற்பத்தில் கூறப்படும் செய்தி; கை கூப்பிய நிலையில் காணப்படும் பெண்ணின் உருவமானது; அப்பெண் இறந்து தெய்வீக நிலையை அடைந்ததைக்குறிக்கிறது. கை கூப்பிய நிலையில் காணப்படும் ஆணின் உருவமும், அவனும் தெய்வீக நிலையை அடைந்ததை விளக்குகிறது. புலியின் உடலில் காணப்படும் வரிகள், அது சிறுத்தை வகையை சேர்ந்தது என்பதைக்காட்டுகிறது. மேலும் ஆணின் உடலில் இருந்து ஒரு ஆயுதம், சிறுத்தையின் உடலில் பாய்ந்து வெளியே வருவதும், அவன் சிறுத்தையுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளதைக்காட்டுகிறது. சிறுத்தையின் வால் அதன் தலை வரையில் நீண்டு இருப்பது அதன் ஆக்ரோஷத்தை குறிப்பிடுகிறது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற, ஒரு பெண்ணை சிறுத்தையானது தாக்கிக்கொன்றுள்ளது. ஒருபடைவீரன், பெண்ணை கொன்ற அந்த சிறுத்தையுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்ததின் நினைவாக புலிகுத்திக்கல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணின் உருவத்தில், ஆபரணங்கள் அணிந்து இருப்பது அவன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதைக்கூறுகிறது.அடுத்த சிற்பத்தில் கை கூப்பிய நிலையில் ஆணும், செண்டு (வெண் சாமரம்) வீசிய நிலையில் பெண்ணும் காணப்படுகிறது; இது வீரமரணம் அடைந்த அவ்வீரனை தேவமங்கையொருத்தி வெண்சாமரம் வீசி தேவலோகத்துக்கு அழைத்துச்செல்வதை குறிக்கிறது.இருவருக்கும் இடையில் மேலே கொம்புடன் கூடிய விலங்கின் உருவம் உள்ளது. அது அப்பகுதியில் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் (பாளையக்காரர்கள்) அரசு சின்னத்தைக்குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.நமது முன்னோர்களின் வரலாற்றையும், வீரத்தினையும் வெளிப்படுத்தும் இந்த வரலாற்று சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தஞ்சை பெரியகோயிலும் கருவூரார் சித்தரும்!

தஞ்சை பெரியகோயில் கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களை அழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழன் மனச்சோர்வடைந்தார். அப்போது, கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது, என்று அசரீரி வாக்கு கேட்டது. உடனே மன்னர், கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது, என கேட்டார். போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயில் வந்தடைந்தார். கருவூரார் போகரிடம், எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே!, அடியேனை அழைத்தது எதற்காக? என்று கேட்டார். போகர், நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்க இவ்வாறு செய்தேன், என்றார். மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி லிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும் சிவசிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவருக்கு ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.

பிரம்மாண்டமான சிவலிங்கம்: கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சண்டிகேஸ்வரர் சன்னதியில் கை தட்டி வணங்குவது ஏன்?

பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவனை வணங்கி விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இவரை வணங்கும் பக்தர்கள், சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ வணங்குவார்கள். ஆனால் அப்படி வணங்க கூடாது. சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்றவர். இவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை கைதட்டி, வந்தேன்...வந்தேன்...வந்தேன்... சிவனின் தரிசனம் கண்டேன்... கண்டேன்.. கண்டேன்...என கூற வேண்டும். அப்படி வணங்கினால் சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்வார். உடனே நமது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்!

1.நன்னீர் - தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணை - நலம்தரும்
3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்
4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்
5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால், தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)
7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும்
10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி
11. நெய் - முக்தியளிக்கும்
12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர் - நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும்
17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராøக்ஷ - திடசரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி
22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை
24. திருநீறு - சகல நன்மையும் தரும்
25. அன்னம் - அரசுரிமை
26. சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்
27. பன்னீர் - சருமம் காக்கும்
28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.
கோயில்களில் கொடி மரம் அமைப்பது ஏன்?

தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும் கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும், கோயில்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடி மரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கடுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிக மிகக் குறைந்த நன்மை அளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதான அமைப்பு மிகவும் சிறப்பாகும். கொடிக் கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியில் இருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சி வரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண் கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சம்ஹாரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமைக்கப்பெற்ற அமைக்கப்பெற்றது.
ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். கொடி மரம் சிவ பெருமான், கொடிக்கயிறு திருவருட்சக்தி கொடித் துணி ஆன்மா, தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும். ஆன்மசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். அறுமாறு மனத்தை பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும்.

திருவிழாவில் முதல் நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் பக்தர்களை உயர் பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் எழுந்தருளி அருள் பாலிக்கப்போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைத்து கொடி மரத்தை சூக்ஷம லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். சிவன் கோயிலில் கருடனையும் அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல் பகுதியில் அமைத்திருப்பார்கள். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடி மரத்தில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடி மரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு இவற்றாலான தகடுகள் பொருத்தப்பட்டு இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.
தீபாவளியில் பக்தனுக்கு மரியாதை..!

குடந்தையில் லட்சுமிநாராயண சுவாமி என்னும் பக்தர் இருந்தார். பிரம்மச்சாரியான இவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி பலரும் வற்புறுத்தினர். ஆனால், சாரங்கபாணியின் தாசனாக இருக்கவே எனக்கு விருப்பம் என்று கூறி, விடாமுயற்சியோடு பக்தர்களின் துணைக்கொண்டு குடந்தை சாரங்கபாணி கோயிலின் 145 அடி உயர ராஜகோபுரத்தைக் கட்டி முடித்தார். இவர் ஒரு தீபாவளியன்று இரவு வைகுண்டபதவி அடைந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் இவருக்கு ஈமச்சடங்குகள் செய்துவிட்டு மறைந்துவிட்டாராம். பெருமாளே வந்ததாக உணர்ந்து அனைவரும் வியந்தனர். அன்று முதல் தீபாவளியன்று சிரார்த்த சமையல் செய்து மூலவர் சன்னதியில் படைக்கப்பட்டு, பின் இரண்டு அந்தணர்களுக்கு அதை போஜனமாக அளிக்கின்றனர். இவ்வாறு சிரார்த்த உணவு படைப்பது குடந்தை சாரங்கபாணி கோயிலில் மட்டும்தான்!
சாப்பாட்டை சிந்தக்கூடாது.... ஏன் தெரியுமா?

தனக்கு தேவையான உணவை தானே சமைத்துக் கொள்வதை சுயம்பாகம் என்பர். மற்றவர்கள் சமைக்கும் உணவை விட இது உயர்வானது. ஏனென்றால், சமைப்பவரின் எண்ணங்கள் சமையலைப் பாதிக்கும். சமைக்கும்போது, தெய்வ சம்பந்தமாகவே கடவுளின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே சமைக்க வேண்டும். சாப்பிடும்போது, நான் உண்ணும் இந்த உணவைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன், என்று சொல்ல வேண்டும்.நாம் உண்ணும் அன்னமும் சிவன். அதை ஜீரணிக்கும் அக்னியும் சிவன். அதை சாப்பிடுபவனும் சிவன். அதனால் அடையப்போகும் லட்சியமான கடவுளும் சிவன், என்கிறார் காஞ்சிப்பெரியவர். அதாவது, சாப்பாட்டை தெய்வமாகவே மதிக்க வேண்டும். அதனால் தான் குழந்தைகள் சாப்பிடும் போது, சிந்தாமல் சிதறாமல் சாப்பிடு, என கற்றுக் கொடுக்க வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவற்றை தெரியுமா?

மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி, மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா மலயத்துவசன், காஞ்சனமாலை, மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது. மீனாட்சி அம்மன் வலது கையில் கிளி வைத்திருப்பார், மீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பெயர் பொற்றாமரைக் குளம், மீனாட்சி அம்மன் கோயில் விமானத்தின் பெயர் இந்திர விமானம். பஞ்ச சபைகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சபையின் பெயர் வெள்ளியம்பல சபை. மீனாட்சி அம்மன் கோயிலில் கால் மாறி நடனமாடியவர் நடராஜர். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மிகப்பெரிய விநாயகர் பெயர் முக்குறுணி விநாயகர். மதுரையில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்த நாயன்மார் மூர்த்தி நாயனார், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறியவர் நக்கீரர். மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள கோபுரங்கள் எத்தனை ? 14 கோபுரங்கள். மீனாட்சி அம்மன் கோயிலின் மிக உயரமானது தெற்கு கோபுரம். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புகழ்பெற்ற மண்டபம் எது? ஆயிரங்கால் மண்டபம் நவகிரக ஸ்தலங்களில் மீனாட்சி அம்மன் கோயில் புதன் ஸ்தலமாகும்.

மீனாட்சி குங்குமத்தில் காந்தம்: மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.
நமஸ்காரம் எவ்வாறு செய்ய வேண்டும் தெரியுமா?

நமஸ்காரம் என்பது பணிவன்புடன் மரியாதை கலந்து தேவர்களையும் பெரியோர்களையும் வணங்கும் முறையாகும். இது தண்டாக்ருதியாய் விழுந்து நமஸ்கரித்தலும், நின்றபடியும் இருந்தபடியும் நமஸ்கரித்தலுமான இரு வகைப்படும். விழுந்து நமஸ்கரித்தலிலும் இரு வகைப்படும். அவை அஷ்டாங்க நமஸ்காரமும் பஞ்சாங்க நமஸ்காரமும் ஆகும். இவற்றுள் அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புஜங்களிரண்டு என்னும் எட்டு அவயங்களும் நிலத்தில் பொருந்தும் படியாக விழுந்து நமஸ்கரிப்பதாகும். இது பூமியில் சிரத்தை வைத்து மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப் பின் அம்முறையே மடக்கி வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந்தச்செய்வது. இவ்வகை நமஸ்காரம் ஆண்களுக்குரிய தாகும். பஞ்சாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அவயங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும். பெண்கள் இவ்வகை நமஸ்காரம் செய்வதற்கு உரியர். பெண்கள், மார்பு பூமியில் படாமல் வணக்கம் செய்ய வேண்டும். எனவே அங்கப்பிரதட்சணம் பெண்கள் செய்யக்கூடாது என்பது மரபு. தலை மட்டுமே குனிந்து வணங்கல் ஏகாந்த நமஸ்கராம் எனப்படும். தலைக்கு மேல் இரு கரங்கூப்பி வணங்குவது திரியங்க நமஸ்காரம் எனப்படும்.

நம் உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வீழ்ந்து வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும். இதை தண்டனிடுதல் என்பர். அல்லது தண்டம் சமர்ப்பித்தல் என்பர். தண்டம் என்பது கழி அல்லது கோல். கையில் பிடித்துள்ள ஒரு கோலை விட்டு விட்டால் அது கீழே விழுந்து விடும். நமஸ்காரம் செய்வதை தண்டம் போல் செய்ய வேண்டுமென்று சொல்வது வழக்கம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை, அது தண்டமாகி விட்டது என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்து விட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கி விட்டு அதற்கு அடையாளமாக ஈஸ்வரன் முன் இந்தச் சரீரத்தை கீழே போட வேண்டும். இதுதான் தண்டம் சமர்ப்பித்தல் என்கிறார் ஜகத்குருஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள். இந்த நமஸ்காரம் தாய், தந்தை, குரு, தேவர், பெரியோர், மூத்தோர் முதலியவர்களுக்கு உரியதாகும். தவத்தாலும் வயதாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்கள் நித்தியம் நமஸ்கரித்தக்கவர்கள். எந்த குருவானவர் வேத சாஸ்திர உபதேசத்தால் துக்கத்தைப் போக்கடிக்கத் தக்கவரோ அவரை நித்தியம் நமஸ்கரிக்க வேண்டும். கெட்ட மரியாதையுள்ளவனையும், நன்றி மறந்தவனையும், கள்வனையும், வஞ்சகனையும், பித்தனையும், மூர்க்கனையும், சூதாடுபவனையும், தன்னிச்சையாக நடந்துகொண்டிருப்பவனையும், அசுசியானவனையும், எண்ணெய் தேய்த்துக் கொண்டிருப்பவனையும், ஜெபம் செய்து கொண்டிருப்பவனையும், வேத பாஷ்யனையும், காரூட வித்தைக்காரனையும், சோதிடங் கூறிப் பிழைப்பவனையும், பாதகனையும், அது போலவே புருஷனைக் கொன்ற பூவையையும், ரஜஸ்வலையானவளையும், விபச்சாரம் செய்பவளையும், பிரசவித்தவளையும், அதிகக் கோபக்காரனையும் எக்காரணம் கொண்டும் நமஸ்கரிக்கக் கூடாது.

சபையிலும், யாக சாலையிலும், தேவாலயத்திலும், புண்ணிய ÷க்ஷத்திரத்திலும், புண்ணிய நதி தீர்த்தத்தில் நீராடுபவனையும், வேதத்யயன காலத்திலும் பிரத்தியேகமான நமஸ்காரம் செய்வது பூர்வத்தில் செய்த புண்ணியத்தைப் போக்கும். சிரார்த்தம், தானம், தேவ தர்ச்சனம், யக்ஞம், தர்ப்பணம் செய்பவனையும் நமஸ்கரிக்கக் கூடாது. ஆலயத்தில் பலி பீடத்திற்குப் பின்னுள்ள கொடிக் கம்பத்தின் முன்புதான் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். ஆலயத்தின் உள்ளே எந்தச் சன்னதிகளின் முன்பும் நமஸ்காரம் செய்யக் கூடாது. பலிபீடம் இறைவனின் மாயா சக்கரம். நாம் பிறப்பு இறப்பு என்னும் மாயா சக்கரமான பலி பீடத்தில் மும்முறை வணங்குவதும், அதை உட்படுத்தி வலம் வருவதும் ஸ்தூல சூட்சும காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவிப்பாயாக என்று வேண்டுவதைக் குறிப்பதாகும். கிழக்கு மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்தும், தெற்கு வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலை வைத்தும் விழுந்தும் நமஸ்கரிக்க வேண்டும். தான் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சன்னதியும் இருத்தல் கூடாது. கொடி மரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எத் தெய்வச் சன்னதியும் இருக்காது. எனவேதான் கோயிலில் இங்கு மட்டும்தான் விழுந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர். நமஸ்காரம் செய்வது மிகவும் புனிதமான செயலாகும். அதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் !
லிங்க வடிவில் சிவனை வழிபடுவது ஏன்?

லிங்கம் என்றால், உருவமற்ற அருவ வடிவிலான பொருளின் அடையாளம் எனப் பொருள். கை, கால் போன்ற எந்த உருவ அமைப்பும் இல்லாமல் அருவ வடிவில் பிரகாசிக்கும் சிவனின் அடையாளமே லிங்கமாகும். இவ்வுலகில் பெயர் மற்றும் உருவத்துடன் தோன்றும் அனைத்தும், இறுதியில் பிரளய காலத்தில் அதனதன் பெயர் மற்றும் உருவம் மறைந்து அருவமாக இறைவனிடத்தில் (லிங்கத்துக்குள்) அடங்குகிறது என்னும் சிறப்பும் லிங்கத்துக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியன்று சிவராத்திரி எனப்படும். மாக (மாசி) மாதத்தில் நிகழும் இந்த நாள் மகா சிவராத்திரி எனப்படும். இந்த மகா சிவராத்திரி நாளன்று நள்ளிரவு நேரத்தில் சிவலிங்கத்தின் வடிவத்தில் சிவன் தோன்றினார் என்கின்றன ஆகம சாஸ்திரங்கள். இவரே லிங்கோத்பவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். அந்த நாள் முதல் சிவனை பக்தர்கள் லிங்க வடிவில் பூஜிக்க ஆரம்பித்தார்கள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று..ஏன்?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் ஒளவையார். ஆலயம் என்பது ஆ+லயம் எனப் பிரிக்கலாம். ஆ என்பதற்கு ஆன்மா என்று பொருள். லயம் என்பதற்கு லயமாவதற்கு அல்லது சேருவதற்குரிய இடம் என்பது பொருள். ஆகவே கடவுள் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கூறலாம். ஆ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கி இருத்தலையும் குறிக்கும். அதனால் ஆலயம் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறுவர், இதனை கோயில் எனவும் கூறுவர் கோ-கடவுள் இல் தங்குமிடம். கோயில்-கடவுள் தங்குமிடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவேதான் ஆலய வழிபாடு என்பது இறைவழிபாடு என்று பொருள்படும். அது பற்றியே மெய்கண்ட தேவநாயனாரும். ஆலயந்தானும் அரனெனத் தொழுமே என்றருளினார். எங்கும் நீக்கமற்ற நிறைந்துள்ள இறைவனை ஆலயங்களில் மட்டும் ஏன் வழிபட வேண்டும் எனச் சிலர் கருதுவர். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இறையருள் எல்லா இடங்களிலும் விளங்கித் தோன்றுவதில்லை.

பால் முழுவதும் நெய் கலந்துள்ளது. எனினும் தயிரிலிருந்தே விளங்கித் தோன்றும். பூமியின் அடியில் எங்கும் தண்ணீர் வியாபித்திருந்தாலும், நாம் அதை உபயோகப்படுத்த வேண்டுமானால் ஒரு கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போன்றவற்றின் மூலம்தான் பயன்படுத்த முடிகிறது. இவற்றைப்போல் கடவுள் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் சிறப்பாக நின்று அருள் செய்கின்றார். பசுவின் உடம்பெல்லாம் பால் வியாபித்திருந்தாலும் அது அகடுகளின் (மடி) வழியாகவே நமக்குக் கிடைக்கிறது. அதுபோல் இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும் ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் வழியாகவே அருளைச் சுருக்கிறான்.

ஆலயம் மனிதவடிவம்
கோயில்கள் நமது உடம்பின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை சேஷத்திரம் சரீரப்பிரஸ்தாரம் என்பர். ஆலயம் மனிதர் உடம்புபோல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் பொருள். இதனை திருமூலரின் பின்வரும் பாடல் மூலம் உணரலாம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், (மந்திரம், பாவனை கிரியைகளால்) அவனருள் ஆலயத்தில் விளங்கித் தோன்றும். சிவஞான யோகிகளும், மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவம் ஆயவேல் அவை அருள் மயமாகும்? என்றருளினார். எனவே ஆலய வழிபாடு மிக அவசியம் என்பது உணரப்படும்.

ஆலய அமைப்பும் எல்லா இடங்களிலும் ஒரே முறையாக இருந்து வருகின்றது. பொதுவாக எல்லா சிவாலங்களிலும் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், தம்ப மண்டபம், நிருத்த மண்டபம் முதலியனவும்; ஐந்து அல்லது மூன்று பிராகாரங்களும், கோபுரமும், யாகசாலை, நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியவையும் முக்கியமாகக் காணப்படுவனவாகும். இவ்வமைப்பு உடலமைப்பை ஒட்டியது என்பர் ஆன்றோர். தேகமாகிய ஆலயத்துள்ளும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு ஆதாரங்களும் அறியப்படும். இவ்வுடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்று ஐந்து கோசங்கள் உள்ளன. (கோசம்-சட்டை). கோயிலிலுள்ள ஐந்து பிராகாரங்களும் இவற்றைக் குறிக்கின்றன. அன்னமய கோசம் முதலியவற்றைத் தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரணச் சரீரம் என அறிக.

ஆலயத்தில் தரிசிக்க வேண்டியவை ஏழு
1. சிவாலயக் கோபுரம் (இது தூலலிங்கம் எனப்படும்) 2. சிவாலயத்தின் வாயில். 3. பலிபீடம்(இது பத்ரலிங்கம் எனப்படும்)4. பிராகாரம். 5.கர்ப்பக்கிருக விமானம்(இது தூயலிங்கம் எனப்படும்) 6. அர்ச்சகர். 7. சிவலிங்கப் பெருமான்(சதாசிவ மூர்த்தி என்றும், பார்த்தலிங்கம் என்றும் கூறப்படும்).

ஆலய தரிசனம் செய்ய விரும்புவோர் நீராடி, தோய்த்துவந்த உடைகளை அணிந்து செல்லவேண்டும். ஆலயத்தை நெருங்கியதும் கால்களைக் கழுவிக் கொண்டு பின் தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தை தரிசித்து. இரண்டு கைகளையும் தலைக்குமேலே குவித்த வண்ணம் சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே செல்லவேண்டும். உள்ளே சென்றதும். பலிபீடத்தையும் கொடிமரத்தையும். இடபதேவரையும் வணங்கவேண்டும். பின் பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும்(கிழக்கு, மேற்கு நோக்கிய சன்னிதகளாயின் வடக்கே தலைவைத்தும், தெற்கு, வடக்கு நோக்கிய சன்னிதிகளாயின் கிழக்கே தலைவைத்தும் வணங்கவேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால்நீட்டி வணங்கக்கூடாது) ஆண்கள் எட்டுறுப்புகளும், பெண்கள் ஐந்துறுப்புகளும் நிலத்தில் தோய வணங்கவேண்டும். (தலை, கையிரண்டு, செவி இரண்டு, மேவாய், புயங்கள் இரண்டு என்பன எட்டுறுப்புகள். தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என்பன ஐந்துறுப்புகள்.)

பின்னர், தலையிலேனும் மார்பிலேனும் கைகளைக் குவித்துக்கொண்டு, குறைந்தது மூன்று முறை பிராகாரத்தை மெதுவாக வலம் வர வேண்டும். (கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டோ, கட்டிக்கொண்டோ வலம் வரக்கூடாது) மீண்டும் பலிபீடத்திற்கு இப்பால் விழுந்து வணங்கவேண்டும். (இந்த இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் குற்றமாகும்) பின்பு துவார பாலகர்களை வணங்கி உள்ளே சென்று கணநாத ராகிய திருநந்திதேவரை வணங்கி, பகவானே, உம் திருவடிகளை அடைந்து அடியேன் உள்ளே சென்று சிவபெருமானை தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அனுமதி செய்தருளும் என வேண்டிக் கொண்டு உள்ளே செல்லவேண்டும்.

உள்ளே சென்றதும் விக்னேசுவரனை வணங்க வேண்டும். (இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து நெற்றியில் மூன்றுமுறை குட்டி, வலச்செவியை இடக்கையினாலும், இடச் செவியை வலக்கையினாலும் பிடித்து மூன்று முறை தாழ்ந்து எழுவேண்டும்) பின்னர் சிவலிங்கப் பெருமான் சன்னிதியை அடைந்து வணங்கியபின்., உமாதேவியார் சன்னிதி அடைந்து வணங்கி விபூதி, குங்குமம் வாங்கித் தரித்துக் கொள்ளவேண்டும். பின்பு சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திசேகரர், சுப்பிரமணியர்யும், சமயக்குரவர் நால்வரையும் தரிசனம் செய்தல் வேண்டும், பின்னர் உள்பிராகாரத்தில் வலம்வந்து, சண்டீசர் சன்னிதி அடைந்து தாளத்திரயம் செய்து சிவதரிசன பலத்தைத் தரும்படிப் பிரார்த்திக்க வேண்டும். (தாளத்திரயம் என்பது மெல்லிய ஒலி எழும்படி வலது கை விரல்கள் இடது உள்ளங்கையில் மூன்று முறை தட்டுதல். பின் வலமாக வந்து இடபதேவரை வணங்கி, அங்கிருந்தே சிவலிங்கப் பெருமானை தரிசித்து பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும், பின்பு ஓரிடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து சிவமந்திரத்தை செபித்துப் பின் எழுந்து வீட்டிற்குச் செல்லவேண்டும். சிவாலயத்திற்குச் செல்வோர் தங்கள் தகுதிக்கேற்ப பழம் முதலியன கொண்டு சென்று அர்ச்சிப்பித்து விபூதி பிரசாதம் பெறவேண்டும். ஒன்றும் இயலாதவர் சன்னிதியில் கிடக்கும் குப்பை முதலியவற்றை நீக்குதல் அலகிடுதல், கோலமிடுதல் முதலிய தொண்டுகள் செய்யவேண்டும். தினந்தோறும் ஆலய தரிசனஞ்செய்ய இயலாதவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை, சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் தரிசனம் செய்தல் வேண்டும்.