வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்!
நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்? என்ற கேள்விக்கு ஒன்றும் கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை... என்று ஒரு வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப் பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை, "சஞ்சித கர்மா என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ, புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால் அபகரிக்கவும் முடியாது. இது நமக்கே நமக்கு உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின் காலியாகும்.இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர். "என்ன சார்... உங்க பையன் இப்படி இருக்கிறானே? என்று கேட்டால், "என்ன சார் செய்றது? ஏதோ பிரார்த்தம்! இப்படி வந்திருக்கு... என்று தலையிலடித்துக் கொள்கிறார்.
இதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும்.இந்த ஜென்மத்தில் நாம் சும்மாவா இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம். இதற்கு, "ஆகாமி கர்மா என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக இருக்கும் சஞ்சித கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து விடுகிறது. இதனாலேயே தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே அனுபவிக்க முடிவதில்லை.நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு சேர்ந்திருக்கிறது. அந்த பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம் செய்யும் காரியத்துக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை செய்யும்போது, இன்று நாம் செய்யும் கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாது.இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம். அபிஷேக ஆராதனை செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது. நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன் பலன், "ஸ்டாக் செய்யப்பட்டு விடுகிறது. காலம் வரும் போது பலன் தரும்.பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம் அழுக்கடைந்து விடுகிறது. கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை எப்படி அறுத்து தள்ளுவது? ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி, ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால், பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து விட்டால், பிரம்மத்தை அடையலாம். அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே இராது. முடியுமா என்று பாருங்கள்.

முக்கிய பவுர்ணமி விரதங்களும் அவற்றின் சிறப்பும்!

சித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைவதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.
வைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.
ஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.
ஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.
ஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷõபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.
புரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.
ஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபி÷க்ஷகமும் வி÷க்ஷம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.
கார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.
மார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.
தைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நக்ஷத்ரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.
மாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.
பங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்?

அவசரமாக ஒரு செயலைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிற நேரத்தில், புதன்கிழமை அமைந்து விட்டால் வேறு எதையும் பார்க்காமல் செய்து விடலாம். பொன்னைக் கூட(தங்கம்) விலை கொடுத்து வாங்கி விடலாம். நமக்குப் பொருத்தமாக புதன் கிடைப்பது அரிது என்பது இதன் பொருள்.
கோயில் சொத்தில் கை வச்சா என்னாகும்?
ராமராஜ்யம் அயோத்தியில் நடந்து கொண்டிருந்த போது, மக்கள் யாராவது குறைகளைச் சொல்ல வருகிறார்களா என காவலர்களிடம் அக்கறையுடன் கேட்பார். இல்லை என்றே அவர்கள் பதிலளிப்பர். ஒருநாள் ஒரு நாய் ரத்தக்காயத்துடன் ஓடி வந்து ராமனைப் பார்க்க வேண்டும் என்றது. நாயை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் ராமர்.  ராமராஜ்யத்தில் எல்லா உயிர்களும் சமமே. ராமா! உன் ஆட்சியில் எனக்கு ஏற்பட்ட அவலத்தைப் பார்த்தாயா! ஒரு சன்னியாசி, சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை கல்லால் அடித்து  விட்டான். காரணமே இல்லை, என்றது.  சன்னியாசி இழுத்து வரப்பட்டார். ஏன் நாயை அடித்தீர்? அதுவா ராமா! நான் பிச்சை கிடைத்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவன். இன்று பிச்சை கிடைக்கவில்லை. நான் பட்டினி கிடக்கிறேன். 
இந்த நாய், என் முன்னால் தனக்கு கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்த நாய்க்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லையே என்ற  எரிச்சலில் அடித்தேன்,. கொடியவனே! வாயில்லா ஜீவனை வதைத்திருக்கிறாயே! உனக்கு மரணதண்டனை,. அப்போது நாய் சொன்னது. ராமா! மரணதண்டனை போதாது. அதை விட கொடிய தண்டனை தர வேண்டும்,. ராமன் ஆச்சரியப்பட்டார். மரணத்தை விட கொடியது எது? என்றார்.  நான் சென்ற பிறவியில் ஒரு கோயில் அறங்காவலராக இருந்து, அங்குள்ள சொத்துக்களைச் சாப்பிட்டேன். அதனால்இப்போது நாயாகப் பிறந்து, குப்பையில் கொட்டுவதைச் சாப்பிடுகிறேன். கல்லடி வாங்குகிறேன். இவரையும் ஒரு கோயில் அறங்காவலரா போடுங்க! இந்த ஆள் நிச்சயம் கோயில் பணத்தை தின்பான். என்னை மாதிரி நாயா பிறந்து கல்லடி படட்டும், என்றது நாய்.

நமஸ்காரங்கள் எத்தனை வகை?
நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.
ஓரங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.
மூன்று அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்
பஞ்ச அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.
அஷ்டாங்க நமஸ்காரம்: ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.
சாஷ்டாங்க நமஸ்காரம்: வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.
நமஸ்கார தத்துவம்:
என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;
எல்லாம் உன் செயல்;
என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்
கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?
கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.

ராவணனுக்கு பத்து தலை வந்தது எப்படி?
ராவணனுக்கு பத்து தலைகள், இருபது கைகள். ஏன் இப்படி குறையுள்ள பிள்ளையாக பிறந்தான் தெரியுமா? விச்ரவசு மகரிஷியின் புதல்வன் குபேரன். பிரம்மாவுக்கு கொள்ளுப்பேரன். அவன் தனது தாத்தா பிரம்மாவை நினைத்து தவம்இருந்து சகலசெல்வங்களையும் பெற்றான். அதில் முக்கியமானது நவரத்தினங்களாலான புஷ்பக விமானம். அதில் நினைத்த இடத்திற்குப் பறந்து சென்று, செல்வத்தைக் கொண்டு வந்து குவிப்பான். உலகிலேயே பெரும் பணக்காரன் அவன்தான். சுமாலி என்ற அசுரன் இதைக் கவனித்தான். தனக்கும் குபேரனைப் போன்ற ஒரு பிள்ளை இருந்தால், உலகையே கட்டி ஆளலாம் என கணக்குப் போட்டான். தன் மகள் கைகனி யிடம், மகளே! அசுரர் குலம் தழைக்க, நீ விச்ரவசு முனிவரை மணந்து கொள்ள வேண்டும். உடனடியாகக் குழந்தை பெற வேண்டும். அந்தக் குழந்தை மூலம் நம் குலம் சாகாவரம் பெற்று, உலகையே ஆட்டிப்படைக்கும், என்றான். கைகனியும் சம்மதித்தாள். காட்டிலிருந்த விச்ரவசு முனிவரை சந்தித்தாள். பேரழகுப்பதுமையான அவளைக்கண்டதும் அவர் மயங்கினார். தன்னைத் திருமணம் செய்யும்படி அவளேகேட்டதால் சம்மதித்தார்.
அந்த நேரமே தன்னோடு உறவு கொள்ளும்படி அவள் வேண்டினாள். கைகனி! இது அந்திக் கருக்கல் நேரம். இந்நேரத்தில் யார் ஒருவர் உறவுகொள்கிறாரோ அவருக்கு விகாரமான குழந்தையே பிறக்கும். குழந்தை குறையுள்ளதாக இருக்கும். எனவே இரவு வரை காத்திரு, என்றார். முனிவர் மனம் மாறிவிடுவாரோ என பயந்த கைகனி, அந்நேரமே உறவு கொள்ள நிர்ப்பந்தித்தாள். முனிவரும் வேறு வழியின்றி, உறவு கொள்ளவே, அவள் கர்ப்பமானாள். அந்த சிசு, பத்து தலைகள், இருபது கைகள், பயங்கரவிழிகள் கொண்டதாக ஒழுங்கற்ற வடிவத்தில் பிறந்தது. குழந்தையைக் கண்டு தாயே பயந்துவிட்டாள். முனிவரின் பேச்சைக் கேட்காமல் இருந்ததற்காக மன்னிப்பு கேட்டாள். தவவலிமையைப் பயன்படுத்தி குழந்தைக்கு ஒற்றைத்தலை வேண்டுமென கேட்டாள். கைகனி! அது நடக்காத காரியம். என் தவவலிமையினால், அழகற்ற இவனை அழகனாக வேண்டுமானால் மாற்றுகிறேன். இவனது பத்து முகங்களும் அழகாக இருக்கும்.
வஜ்ரம் பாய்ந்த உடல், கைகளுடன் இவன் பலவானாக விளங்குவான், என்றார். அவனுக்கு தசமுகன் என்று பெயரிட்டனர். அவன், ஒருமுறை கைலாயத்திற்கு சென்றான். தன்னால், எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் கைலாயமலையை தூக்கி கடலில் போட எண்ணினான். அவ்வாறு அவன் செய்ய முயன்ற போது, சிவன் தன் கட்டை விரலால், மலையை அழுத்த அவனது பத்து கைகளும் மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டது. அவன் வலி தாங்காமல் ஓவென கதறி அழுதான். அந்த அலறல் உலகம் முழுமையும் கேட்டது.  அப்போது அங்கு வந்த முனிவர் ஒருவர், தசமுகா! சிவனை  பணிந்து பாடு. அவர் உன்னை மன்னிப்பார், என்றார். தசமுகனும் சிவனுக்குப் பிடித்த சாமகானப் பாடல்களைப் பாடினான். அதுகேட்டு மகிழ்ந்த சிவன் அவனை விடுவித்தார். தசமுகா! நீ வலி தாங்காமல் உலகமே நடுங்க அழுததால் ராவணன் என அழைக்கப் படுவாய். அந்தப்பெயரே உனக்கு நிலைக்கும். நீ புகழ் பெற்று நீண்டகாலம் வாழ்வாய், என்று ஆசிர்வதித்தார். ராவணன் என்ற சொல்லுக்கு அழுது கொண்டே இருப்பவன் என்பது பொருள். ராவணன் இலங்கை மன்னனாக பலகாலம் புகழுடன் ஆட்சி செய்தான். பிறன் மனைவியை நாடியது மட்டுமே அவன் செய்த குற்றம். அந்த குற்றத்தால் அவன் ராமனால் கொல்லப்பட்டான்.

அன்றே சாட்டையை சுழற்றிய ராஜராஜசோழன்!
ராஜராஜசோழன் ஆன்மிகத்தில் எந்தளவுக்கு உயர்ந்தவனோ, அந்தளவுக்கு அரசு நிர்வாகத்திலும் சிறந்தவன். இவனது காலத்தில் ஐந்து வாரியங்கள் இருந்தன.சம்வத்சர வாரியம் வழக்குகளை விசாரிக்கும். ஏரி வாரியம் வாய்க்கால், குளக்கரைகளைப் பாதுகாத்தல், தண்ணீரைப் பங்கிட்டுக் கொடுக்கும். நிலவளம் குறித்து ஆய்வு செய்து தீர்வளிப்பது தோட்ட வாரியம். பொற்காசுகளையும், செப்புக்காசுகளையும் ஆய்வு செய்து போலிகளைக் கண்டுபிடிப்பது பொன் வாரியம் (எப்பவுமே ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்திருக்காங்க) நிலவரி, பிற வரிகளை வசூலிப்பது பஞ்சவார வாரியம்.இந்த வாரியங்களின் நிர்வாகிகளாக கணக்காளர்கள் நியமிக்கப்பட்டனர். வாரியங்களை கண்காணிக்க ஒரு சபை இருந்தது. சபையாளர்கள் கேட்கும்போது, கணக்காளர்கள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.
கணக்காளருக்கு சம்பளம் என்ன தெரியுமா?தினமும் ஒருநாழி நெல், வருடத்துக்கு ஏழரை கழஞ்சு (39.750 கிராம்) தங்கம் போனஸ், இரண்டு சீருடை. கணக்கை வாசிக்கும்போது, என் மனதறிந்து இதில் எந்தத் தவறுமில்லை. யாருக்கும் எந்த சலுகையும் காட்டவில்லை, என்று உறுதி சொல்ல வேண்டும். சும்மாவா! பழுக்கக் காய்ச்சிய கோடரியை கையில் பிடித்துக் கொண்டு சொல்ல வேண்டும். கணக்கை முடித்ததும், கையில் காயம் படாமல் இருந்தால் ஏழேகால் கழஞ்சு (உத்தேசமாக 38.425 கிராம்) தங்கம் சிறப்பு போனஸ். காயம் பட்டாலோ, கழுதை மேல் ஏற்றி, சாட்டையால் அடித்து ஊர்வலம்... பத்து கழஞ்சு (53 கிராம்) தங்கம் அபராதம் வேறு. அபாராதம் கட்டாவிட்டால் சிறை.அந்தக் காலத்திலே ராஜாக்கள் நேர்மையா இருந்திருக்காங்க! இப்ப இது மாதிரி தண்டனை பத்தி பேசினாலே, மனித உரிமையை பறிச்சுட்டோமுனு போர்க்கொடி தூக்கிட மாட்டாங்களா என்ன!

கோயிலுக்கு கொடிமரம் அமைப்பது ஏன்?
கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது  உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.
ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். கொடிமரம் சிவபெருமான்; கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைந்து கொடி மரத்தை சூக்கும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.
கஷ்டங்களை ஏன் கடவுளிடம் சொல்கிறோம்?
நம் பாவத்துக்கு பலனாக கஷ்டங்கள் வருகின்றன. என் மனமறிந்து யாருக்கும் எந்தக் கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்? என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள். அப்படியானால் கஷ்டம் நிஜம் என்று ஆனபிறகு, கடவுளை வணங்குவானேன்! அதை அனுபவித்து விட்டு போய்விடுவோமே என்றால், கஷ்டத்தை தாங்கும் சக்தியில்லை. இந்த சமயத்தில் நாம் கடவுளை துணைக்கு அழைக்கலாம். எப்படி தெரியுமா? நீலகண்டதீட்சிதர், அன்னை மீனாட்சியை துணைக்கு அழைத்த மாதிரி! ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற தனது நூலில், அவர், அம்மா மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும், உன்னிடம் கஷ்டங்களை வாய்விட்டு சொல்லாவிட்டால், மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்வது ஆறுதல் தருகிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன், என்கிறார். நாமும், நம் கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு மனதில் இருக்கும் பாரத்தைக் குறைப்போம். மனச்சாந்தி பெறுவோம்.
முருகன் திருவுருவம் எப்படி இருக்க வேண்டும்?
முருகனது திருவுருவம் சிவந்தமேனியும், அபயவரத்துடன் கூடிய திருக்கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வயானை இடத்திலும் அமைய ஓவியத்தில் வரைவதே முறை. இறைவன் மூன்று கண்களை உடையவன். சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்று சுடர்களே முக்கண்கள். முருகன் இமையா நாட்டம் உடையவன். கண்களை மூடுவதில்லை. தாமரை சூரியனைக் கண்டு மலர்வது; நீலோத்பலம் என்ற குமுதம் சந்திரனைக் கண்டு மலர்வது. முருகனது வலப்புறத்தில் விளங்கும் வள்ளி தேவியின் திருக்கரத்தில் உள்ள தாமரை, முருகனின் வலநேத்திரமாகிய சூரியஒளி பட்டு, அறுபது நாழிகையும் சுருங்காமல் மலர்ந்த வண்ணமாக விளங்கும். இடப்புறத்தில் தெய்வயானை அம்மையின் திருக்கரத்தில் உள்ள நீலோத்பலம் இட நேத்திரமாகிய சந்திர ஒளிபட்டு, அறுபது நாழிகையும் மலர்ந்தே இருக்கும். முருகனை உபாசனை செய்பவர்களின் வாழ்வு என்றைக்கும் மலர்ந்திருக்கும். இப்போது பெரும்பாலும் படம் வரைபவர்கள் இரண்டு தேவிமார்களின் கரங்களிலும் தாமரையையே போட்டு விடுகிறார்கள். இது தவறான முறையாகும்.
காய்ச்சலை குணமாக்கும் சாமி..!
மருத்துவத்துறையில் நவீன வளர்ச்சிகள் வந்தாலும், நமக்கு ஏதாவது உடல் சார்ந்த நோய்கள் வரும் போது, மருத்துவத்துடன், நம் இஷ்ட தெய்வங்களை முறையிட்டு, அந்த நோயிலிருந்து விடுபடுகிறோம். காய்ச்சல் வந்தால், அதை குணப்படுத்தும் சாமி, நம்மூரில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியுமோ...
மேலமாசிவீதியில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலில் உள்ள ஜூரஹரலிங்கம் முன் ரசம் சாதம் படைத்து, மிளகு வைத்து பூஜித்தால் காய்ச்சல் பறந்து விடும், என்பது ஐதீகம்.ஞாயிறு ராகுகாலத்தில், இங்குள்ள காலபைரவர் சன்னதியில் உள்ள சூலத்தில், எலுமிச்சம் பழம்சாத்தி வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும்.அரசு பதவி அடைவதற்கு, சிவலிங்கத்தை திங்கள் தோறும் அல்லது 21 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடுமாம்.பிரம்மா வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதால், பிறவி புண்ணியத்தை இந்த பிறவியில் அனுபவித்து, நற்கிரியை அடைய பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தல் சிறப்பு. கல்வி வளர்ச்சிக்கு குருஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி, திட்டை, திருச்செந்தூர் என்ற சிறப்பு பட்டியலில் இக்கோயிலும் இடம் பெற்றுள்ளது. பொதுத் தேர்வு எழுதுவோருக்கும், மாணவர்களுக்கும் ஞாபக சக்தி வளரச் செய்யும் தட்சணாமூர்த்தி சகல பாக்கியமும் தருவார்.
ஆடிவீதியில் பிரதட்சணம் செய்தால் விதிபயனையும் மாற்றிவிடும். இங்கு மேற்கு @நாக்கி இருக்கும் சிவனை வழிபடுவதால் ஐஸ்வரியம் பெருகும். தினமும் காலை 6.30 - காலை 11.45 மணி, மாலை 4 - இரவு 9.30 மணி வரை நடை திறந்திருக்கும். சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலவச ஆன்மிக வகுப்புகள் மற்றும் தினமும் காலை யோகா, தியான பயிற்சிகள் நடக்கிறது. மாதந்தோறும் பூசநட்சத்திரத்தில் நடக்கும் கூட்டுப்பிரார்த்தனையில், இளம்பிறை மணிமாறனின் சொற்பொழிவு நடக்கும். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோயிலில், ஸ்தல அர்ச்சகராக தர்மராஜ் சிவன், மேலாளராக இளங்கோ, கண்காணிப்பாளராக எழில் அரசன் செயல்படுகின்றனர். கோயில் வழிபாடு மற்றும் சிறப்புகளை அறிய 94434 55311ல் தொடர்பு கொள்ளலாம்.