புதன், 22 ஜூலை, 2020

சமயபுரம் மாரியம்மன் வரலாறு

சமயபுரம் மாரியம்மன் வரலாறு
சமயபுரத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது.

சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வோம்.

வசுதேவர்-தேவகி தம்பதியரின் 8-வது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார். அவரை நந்தகோபர்- யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்தார் வசுதேவர். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முயன்றபோது, அது வானில் பறந்து மறைந்தது. அந்தக் குழந்தையே சமயபுரம் மாரியம்மன் என்கிறது தலவரலாறு.


இங்கு வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.

அன்னை இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயைக் குறிக்கின்றன.

எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.

இங்கு ஒரே சன்னிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தை தணிக்க காஞ்சி பெரியவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் கூறியபடி ஆலயத்திற்கு வலதுபுறம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன் மூலம் அம்மனின் மூல விக்கிரகத்தில் இருந்த கோரை பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக அன்னை மாற்றப்பட்டாள்.

அம்மனின் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டது. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

ரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சமயபுரம் மாரியம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து, பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த விரதம் தொடங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டுமே நைவேத்தியம் செய்யப்படும். சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவையே அந்த நைவேத்தியம்.

சமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும், தெற்கு - வடக்காக 150 அடி அகலத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.

கொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதை ‘தீர்த்தவாரி விழா’ என்பார்கள்
*தீர்க்க சுமங்கலி பவா என்றல் என்ன ? அறிந்துகொள்வோம்* .

தீர்க்க சுமங்கலி பவா ! என்ற ஆசிக்கு *மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

திருமணத்தில் ஒன்று,
 *60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று* .
 *70 வயது பீமரத சாந்தியில் ஒன்று* .
 *80 வயது சதாபிஷேகத்தில்ஒன்று* .
 *96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று* !

#இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:

ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு

சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,
சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும்,
ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,
கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

 *அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84  கலசங்கள் எதைக் குறிக்கின்றன* ?

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

அக்னி,
சூரியன்,
சந்திரன், 
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள்,
பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான்
84 கலசங்கள் என்பது ஐதீகம்.

பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.

இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.
*கர்மபலன்* இதுதான்...!

*ப்ரத்யக்ஷ தெய்வம்* என்று நாமெல்லாம் கொண்டாடும் நம் *பெரியவாளும்* இதைப் பலமுறை கூறியிருக்கிறார்.

நாம் பேசும் பேச்சுக்கூட கணக்காயிருக்கணும் என்று பெரியவா உபதேஸிப்பார். நம் ஆத்திரம், கோபத்தை தீர்த்துக் கொள்ள, அடுத்தவர்களை தூற்றுவது, உருவத்தை வைத்து கேலி செய்வது, நம் குழந்தைகள் மட்டுமில்லை, நம் சுற்றம்-நட்பு, ஏன்? முன்பின் தெரியாதவர்களானாலும், அவர்களை நோக்கி வீசப்படும் வசவுகள், நிந்தனைகள் எல்லாமே..... அப்படி நிந்திப்பவர், அதை தூண்டுபவர், ஆமோதிப்பவர், அதைத் தடுக்காமல் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பவர் இப்படியாக இத்தனை பேர் கணக்கிலும் debit side-ல் வரவு வைக்கப்படுகிறது.

நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், இது அத்தனைபேருக்கும் பொதுவான இயற்கையின் விதி! நியதி!

இந்த ஜன்மத்தில் நமக்கு வாய்த்திருக்கும் _அம்மா, அப்பா, ஸஹோதர-ஸஹோதரிகள், நண்பர்கள், கணவன்-மனைவி, சுற்றம்_, அத்தனையுமே... நாம் பூர்வ ஜன்மங்களில் ஆசைப்பட்டதுதான்! ஆனாலும், நம்முடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளால், இவை அநுகூலமாகவோ, ப்ரதிகூலமாகவோ இருக்கும்.

நல்ல அன்பான பெற்றோர்கள், கணவன்-மனைவி, ஸொந்தங்கள் இருந்தும், நாம் அவர்களை மதிக்காமல், கரித்துக்கொட்டி வெறுத்து ஒதுக்கினால், இந்த ஜன்மத்தில் நாம் ஏதோ அவர்களை பழி வாங்கியதாக நினைத்து ஸந்தோஷப்படலாம். ஆனால், இந்த அன்பான நன்மை, அடுத்தடுத்த ஜன்மங்களில், நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதே ஸத்யம்!

அதோடு, இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமுமே கிடைக்காது! இல்லாத ஒன்றுக்காக அலைவதை விட்டுவிட்டு, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்டி, பகவானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

*ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்...*

🙂🙏
அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்திற்கு வந்தார் முனிவர் ஒருவர். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லாததால், அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசியளித்த அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பரிசளித்தார்.

அதன் முன் நிற்பவருக்கு பிரியமானவர் யாரோ அவரது முகமே கண்ணாடியில் தெரியும். உத்தரை உற்றுப் பார்த்தாள். அவளது கணவர் அபிமன்யு தெரிந்தார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய அபிமன்யு கண்ணாடியைப் பற்றிய விபரம் அறிந்து வியந்தான். அவன் பார்த்த போது அதில் மனைவியான உத்தரை தெரிந்தாள். அன்புக்கயிறால் இருவரும் கட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது அபிமன்யுவின் தாய்மாமன் கிருஷ்ணர் அங்கு வந்த போது, ”கண்ணாடியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்களே! என்ன விஷயம்?” என்றார்.

”மாமா! இந்த கண்ணாடியில் நீங்கள் தெரிய மாட்டீர்கள். உங்களுக்கு அன்புக்குரியவர் யாரோ அவரே தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தவர் அத்தை ருக்மணியா, பாமாவா” என்றான் அபிமன்யு. யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் சிக்குவானா அந்த மாயக்கிருஷ்ணன்! அவன் கண்ணாடி யைப் பார்த்த போது அதில் சகுனி தெரிந்தான்.

”இதென்ன விந்தை” என்றான் அபிமன்யு. ”அபிமன்யு! பக்தர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால் துாக்கத்திலும் கூட என்னைக் கொல்லத் துடிக்கிறான் சகுனி. எப்போதும் அவனுக்கு என் நினைவு தான். அதனால் எனக்கும் அவன் நினைவு” என்றார். நிந்தனை செய்தாலும் நாத்திகர்கள் தான் கடவுளை அதிகம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு சகுனியே சாட்சி.

செவ்வாய், 14 ஜூலை, 2020

நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது.*

‘நவ’ என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது.

நவ துர்க்கைகள் - துர்க்கை அவதாரங்கள் :

1.சைலபுத்ரி

2.பிரம்மசாரிணி

3.சந்திர காண்டா

4.கூஷ்மாண்டா

5.ஸ்கந்த மாதா

6.காத்யாயனி

7.காளராத்திரி

8.மகாகௌரி

9.சித்திதாத்ரி

1.சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.

இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார்.

ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.

நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்

2.பிரம்மசாரிணி

நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கையாக பிரம்மசாரிணி தேவியை வணங்கப்படுகிறது.

‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.ம். இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை.

சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார் என்பது புராணக் கதை.

அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பொறுமையைத் தர வல்லவள். அதோடு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவர்.

பிரம்மசாரிணி துர்க்கைக்கு கன்னியாகுமரியில் கோயில் உள்ளது.

ஆதி சக்தி பீடமாக விளங்கும் தாராதாரிணி கோயில் வரலாறு!

3. சந்திரகாண்டா

நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னையை வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘காண்டா’ என்றால் மணி என்று பொருள்.

சந்திர மணி அணிந்த சந்திர காண்டா, பத்து கைகளை கொண்டு காட்சி தருகின்றார். இவர் சிங்க வாகனத்துடன் அருளுகின்றார்.

சந்திரகாண்டா போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருகிறார்.

இவளின் கோவில்கள் : உத்தர பிரதேசம், வாரணாசியில் உள்ள சித்ரகந்த குல்லி கோயில்

4. கூஷ்மாண்டா:

நவராத்திரி விழாவின் 4ஆம் நாளான சதுர்த்தி தினத்தன்று ‘கூஷ்மாண்டா’ வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம்.கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது.

கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும். இவர் சூரியமண்டலத்தை இயக்குவதாகக் கூறப்படுகின்றது. இவரை வணங்குவோர் உடல் , மன வலிமை பெறுவர்.



கூஷ்மாண்டாவுக்கான கோவில்கள் : உத்தர பிரதேசம், கான்பூர் நகரரில் உள்ள கதம்பூர்.

5. ஸ்கந்த மாதா

ஸ்ரீ ஸ்கந்த மாதா நவராத்திரி விழாவின் 5ம் நாளில் வணங்கப்படுகின்றாள். ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை அதாவது முருகனின் தாய் ஆவார்

இவர் தேவர்கள், மனிதர்களுக்கு பகைவர்களாக விளங்கிய சூரபத்மனை (தாரகாசுரனை) வதம் செய்தவள். தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகனின் தாயாக மிகவும் மதிக்கப்படுபவள் ஆவார்.

உருவம்:

நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்றும், மற்றொரு கரம் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார்.

இவரை வணங்குவோரை கைவிட மாட்டாள். மோட்சத்திற்கு இட்டுச் செல்வார் என நம்பப்படுகின்றார்.

மற்ற தேவிகளுக்கு இல்லாத சிறப்புகள் இவருக்கு உண்டு. இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசி நமக்கு கிட்டுகின்றது.

குலச்சேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சிறப்புகள்

6. காத்யாயனி

நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில் மாதா காத்யாயனியை வணங்குவது வழக்கம்.

முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவருக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் வந்தது. இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.

காத்யாயனி கோவில்கள் :

டெல்லி, சட்டர்பூரில் கோயில் உள்ளது.

தமிழகத்தில், தஞ்சையில் காத்யாயனி அம்மன் கோவில் உள்ளது.

7. காளராத்திரி

நவராத்திரி திருவிழாவின் ஏழாம் நாளில் ‘காளராத்திரி’ யை வழிபடுவது வழக்கம். அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம்.

காள என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.

இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது.இவளின் நான்கு கைகளின், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது.

இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது. இவளின் பார்வை பட்டாலே துன்பமும், பாவமும் தொலைந்திடும். பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்றும் நம்புகின்றனர்.

காளராத்திரி கோவில்கள்:

காளராத்திரி துர்கா ஆலயம், வாரணாசி, உத்தரப் பிரதேசம்

8. மகாகௌரி

மகா கௌரி துர்க்கை அம்மனை நவராத்திரி தினத்தின் 8ஆம் நாளில் வணங்கப்படுகின்றது.

மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவரின் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றார்.

முற்காலத்தில் மகாகௌரி, ஈசனை மணம் செய்து கொள்ள வேண்டி கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அப்போது அவரின் உடலை மண் சூழ்ந்து கருமையாக்கியது. இவரின் தவத்தை மெட்சிய சிவன் இவரை மணந்து கொள்வதாக கூறினார். ஆனால் அதற்கு முன் கங்கை நீரில் நீராடினார். அப்போது தேவியின் உடல் பால் போன்று வெண்மையாக மாறியதால் இவரை மகாகௌரி என அழைக்கப்படுகிறார்.

நான்கு கரம் கொண்ட மகாகௌரி, ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு வெண்மையான காளை வாகனமாக இருக்கின்றது. இவளின் அருள் கிடைத்தால் நம் வாழ்வு வசந்தமாகும்.

மகாகௌரி கோவில்கள் : கண்க்ஹல், ஹரித்வார், உத்தரகண்ட் மாநிலம்

9. சித்திதாத்ரி

நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் ‘சித்தி தாத்ரி’ துர்க்கை வழிபாடு செய்வர். ‘சித்தி’ என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள்.

மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகளான சித்திகள் -அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, பிரகாமியம், வாசித்வம், ஈசத்வம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி, நான்கு கரங்களில், இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவள்.

சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம். சிவன் பெருமானே இவளை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தேவி புராணம் கூறுகிறது.

மோட்சத்தை அருளக்கூடிய சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் மனிதர், தேவர், முனிவர், யட்சர், கிங்கரர் வழிபடுவர்.

இப்படி 9 விதமான துர்க்கைகள் உள்ளன.