வெள்ளி, 13 டிசம்பர், 2019

வேதாத்திரி மகரிஷி

கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன உலகில் ஏன் வறுமை உள்ளது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் 35-வது வயதில் ஞானம் பெற்றார். தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார். எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். 1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது.
சத்குரு சாய் மகராஜ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ரி எனும் கிராமத்தில் கங்கா கவாடியா - தேவகிரி என்ற இந்து தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார் பாபா. பாபா பிறந்த போது அவரது தந்தை இறைவனின் தரிசனத்திற்காக காட்டில் தவம் செய்ய புறப்பட்டார். இவர் சென்றதும் தேவகிரி பிறந்த குழந்தையை நடுக்காட்டில் விட்டு விட்டு கணவன் பின் சென்று விட்டார். அப்போது காட்டு வழியே வந்த பாட்டீல் என்ற முஸ்லிம் தம்பதியினர் குழந்தையின் அழுகுரலை கேட்டு அந்த குழந்தையை எடுத்து வளர்த்தனர். சிறுவயாதான அந்த பாபாவின் செயல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. தர்காவிற்கு செல்லும் அவன் சிவலிங்கத்தை வைத்து  கீதை, வேதம், உபநிஷதங்கள் சொல்வான். சில சமயம் இந்து கோயிலுக்கு சென்று குரான் ஓதுவான். இதனால் இந்துக்களும், முஸ்லிம்களும் பாபாவை வெறுக்க தொடங்கினர்.ஒரு முறை பாபா தன் பக்கத்து வீட்டு மாமி பையனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தன் வீட்டு பூஜையறையில் வைத்திருந்த சாளக்கிராம உருண்டையை பந்தயப் பொருளாக வைத்து விளையாடி பாபாவிடம் தோற்றான். இதையறிந்த மாமி பாபாவை அரட்ட, பாபா சாளக்கிராமத்தை தன் வாயில் போட்டு விட்டான். வாயை திறந்தான். அப்போது கண்ணனின் வாயில் யசோதை கண்ட காட்சியை பாபாவின் வாயில் மாமி பார்த்தாள். மயங்கி விழுந்தாள். சில நாட்களில் பாட்டீல் இறந்து போனார். அதன்பின் அவ்வூர் வெங்கடாசலபதி பக்தரான கோப்லராவ் அவனை வளர்த்தார். பத்தாண்டுகள் வரை அவரிடம் வளர்ந்த பாபா பள்ளிக்கு செல்வில்லை.

கோபால் ராவிடமே பலவிஷயங்களை கற்று கொண்டார். இஸ்லாமிய, இந்து மத பிரார்த்தனைகளை மேற்கொண்டார். கோபால்ராவின் கடைசி காலம் நெருங்கி விட்டது. எனவே தனது தெய்வீக சக்திகளை பாபாவிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டு உயிர் துறந்தார். ஏழு ஆண்டுகள் கழிந்தன. புனேயிலிருந்து 75 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஷிர்டி என்னும் கிராமத்தில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இளைஞனாகத் தோன்றினார் பாபா. இவரது சக்தி குறித்து அக்கிராம மக்கள் நெரிந்து கொண்டனர். ஒரு முறை சாந்த்படேல் என்பவர் தன் அண்ணன் மகன் திருமணத்திற்கு பாபாவை அழைத்து சென்றார். அங்குள்ள கந்தோபா சிவன் கோயில் பூஜாரி தன்னை மறந்து ஆவோ சாயி (சாயியே வருக) என அழைத்தார். திருமணம் முடிந்ததும் அனைவரும் ஊர் திரும்பி விட்டனர். ஆனால் பாபா அங்கேயே தங்கி விட்டார். அதுவரை பக்ரி என அழைக்கப்பட்ட அவர் பாபா என்றும் சாய் என்றும் அழைக்கப்பட்டார். அவ்வூரில் இருந்த மசூதியில் தான் பாபா தங்கினார். மூன்று ஆண்டுகளில் ஒரு தோட்டத்தை உருவாக்கினார் (இந்த இடத்தில் தான் பாபாவின் புனித சமாதி உள்ளது). ஒரு முறை மசூதியில் விளக்கேற்ற வழக்கமாக எண்ணெய் தரும் வியாபாரி எண்ணெய் தர மறுத்துவிட்டதால் தண்ணீரிலேயே விளக்கெரிய வைத்தார். அன்று முதல் அவரது புகழ் மேலும் பரவியது. ராமநவமி, சந்தனக்கூடு ஆகிய இந்து முஸ்லிம் விழாக்களை இவ்வூரில் நடத்தி வந்தார். இந்து சடங்குகள் அந்த மசூதியில் செய்யப்பட்டு வந்தது. அவரை இந்துவா, முஸ்லிமா என் யாரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் மசூதியை பாபா துவாரகா மயி என அழைப்பார். துனி எனும் அணையாத அக்னியை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் உதி என்ற சாம்பலை நோய் கண்டவர்களுக்கு கொடுத்து குணமாக்குவார். ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத் நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது. நான் எல்லா உயிர்களிடமும் வாழ்கிறேன் கடவுளை அடைய சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும். உலக விஷயங்களில் விரக்தி தோன்ற வேண்டும். மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார். சத்குரு சாய் மகராஜ் எனப்பட்ட பாபா 1918 விஜயதசமி தினத்தன்று முக்தியடைந்தார்.
20ம் நூற்றாண்டின் இணையற்ற சித்தர்

ஞானானந்தகிரி. இவர் சென்ற நூற்றாண்டின் இணையற்ற சித்தர். 100 வயதுக்கு மேல் வாழ்ந்த இவர் மக்களிடையே தியானம், கூட்டு வழிபாடு, நாம பஜனை மூலம் பக்தியை பரப்பியவர் திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஞானானந்த தபோவனம் அமைத்து குருகுல முறைப்படி கல்வி கற்க ஏற்பாடு செய்தவர். இன்றும் இந்த தபோவனத்தில் இவர் கூறியபடி ஆராதனை நடந்து வருகிறது. கர்நாடக மாநிலம் மங்களபுரியில் வெங்கோபகணபதி, சக்குபாய் தம்பதியினர் வசித்தனர். இவர்களின் செல்வப் புதல்வராக தை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் இவர் அவதரித்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். ஞானக்கல்வியை மக்களிடையே போதிக்க பிறந்தவராதலால், சிறுவயதில் ஏட்டுக் கல்வியில் நாட்டம் கொள்ளவில்லை. தன் 12ம் வயதில் குருநாதரை தேடி வீட்டை விட்டு வெளியேறி நடந்தே பண்டரிபுரம் வந்து, சந்திரபாகா நதிக்கரை மணலில் அமர்ந்து உறங்கிவிட்டார். இறைவன் ஒரு முதியவர் வடிவில் வந்து இவரை எழுப்பி, பண்டரிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய ஜியோதிர் மடத்தின் தலைவர் சுவாமி சிவரத்னகிரியை குருவாக ஏற்கும்படி கூறி மறைந்தார். சிவரத்னகிரியிடம் சீடராக சேர்ந்த சுப்ரமணியம், தன் பணிவிடையாலும், குருபக்தியாலும் அவரது பாராட்டை பெற்றார். அந்த ஆசான் இவருக்கு ஞான ஒளி வீசும் விளக்காக திகழ்ந்து. அஷ்டாங்க யோகம், சாஸ்திரங்கள் உபநிஷத் உண்மைகளை கற்பித்தார். அஷ்டாங்க யோகத்தில் தனித்திறமை பெற்று ஞான உணர்வை நாடி அடிக்கடி உணவும், உறக்கமும் மறந்து தியானத்தில் அமர்ந்து விடுவார். சிவரத்னகிரி சுவாமிகள் இவருக்கு தீட்சை அளித்து ஞானானந்தகிரி என்ற நாமம் சூட்டி, தனக்கு பின் பீடாதிபதியாகும் பொறுப்பையும் தந்து முக்தியடைந்தார்.

பீடாதிபதி ஆன பிறகும். அதில் சுவாமி மகிழ்ச்சி கொள்ளவில்லை. மக்களிடையே பக்தியை பரப்ப விரும்பி, ஆனந்தகிரி என்பரிடம் மடத்தின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை கிளம்பினார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்றார். தன் புனித யாத்திரையின் போது ராமகிருஷ்ண பரமஹம்சர், சீரடி சாய்பாபா, ராமலிங்க அடிகள், அரவிந்தர், ரமணர் போன்ற மகான்களை சந்தித்தார். காடுகளிலும் மலைகளிலும், கங்கை நதிக்கரையிலும் தவம் செய்து இறைவன் அருள்பெற்று மாபெரும் சித்தராக விளங்கினார். இவர் பல மொழிகளில் புலமை பெற்றிருந்ததால் நாடெங்குமிருந்து பல பக்தர்கள் இவரை நாடி வந்தனர். இவர் தமிழகம் திரும்பி வந்த போது வயது 100. சேலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் தங்கி, அங்குள்ள ஏழை நெசவாளிகளுக்கு வேதாந்த வகுப்புகள் நடத்தி அவர்கள் வாழ்க்கை மேன்மை அடைய செய்தார். பின் 1954 முதன் திருக்கோவிலூர் அருகே பெண்ணாற்றங்கரையில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து நிலையாக தங்கி விட்டார். இதுவே பிற்காலத்தில் ஞானானந்த தபோவனம் என அழைக்கப்பட்டது. தபோவனத்தில் சுவாமி அதிகாலையில் எழுந்து நீராடி, தியானம், கூட்டு வழிபாடு, நாம சங்கீர்த்தனம் போன்ற நெறி முறைகளை ஏற்படுத்தி, அங்கு வந்து தங்குபவர்களுக்கு எளிமையான உபதேசங்களை கூறி, அவர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் நிம்மதியும் கிடைக்கும்படி செய்தார்.

முதிர்ந்த வயதிலும் சிரித்த முகத்துடன், சுறுசுறுப்புடன் ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புக்களையும் கவனித்து கொண்டார். சுவாமியின் தவ வலிமையாலும், அயராத உழைப்பாலும் தபோவனத்தின் புகழ் எங்கும் பரவி பக்தர்களின் கூட்டம் பெருகியது. இரவு வேளைகளில் சுவாமி தனது தவ வலிமையால் ஆசிரமத்திலிருந்து மறைந்து, தான் விரும்பிய திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து திரும்புவார். ஆசிரமத்து குழந்தைகளுக்கு தன் அனுபவத்தை கதையாக கூறுவார். ஆசிரமத்தில் ஞானகணேசர், ஞானஸ்கந்தர், ஞானபுரீஸ்வரர், ஞானாம்பிகை என பல தெய்வங்களின் சன்னதிகளை ஏற்படுத்தினார். தனது உலக வாழ்க்கை முடிவுக்கு வருவதை அறிந்த சுவாமி, 1973 முதல் கூட்டத்திலிருந்து ஒதுங்கி தியானத்தில் அதிக நேரம் செலவழித்தார். 1974 ஜனவரி 6ல் சுவாமிகளின் உடல்நலம் குன்றியது. அன்று விடியற்காலை சித்தாசனத்தில் அமர்ந்த பிறகு எழுந்திருக்கவில்லை. ஜனவரி 10ல் சுவாமி பரம்பொருளுடன் கலந்து விட்டார். அந்த மகான் சமாதி நிலையில் இருந்து, மறையாத கருணையுடன் அனைவரையும் காத்து வருகிறார். ஹரி தாஸ் சுவாமிகள், சுவாமி நாமாநந்தகிரி ஆகியோர் இவரது சீடர்களாவர். திருக்கோவிலூரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த தபோவனத்திற்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு.
மழை பொழிய பாடிய மகான்

ஸ்ரீரங்கப் பெருமாளிடம் மழை வேண்டிப் பிரார்த்தித்து மனமுருகி பாடி மழை பெய்வித்தவர் ஸ்ரீ சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள். இவரது இயற்பெயர் தத்தாத்ரேயா. இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு ....... தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து இந்த பட்டபெயர் திலைத்தது. தீர்த்தார்யா என்றால் சாஸ்திஞானி என்று அர்த்தம். 15ம் நூற்றாண்டில் தஞ்சையில் நாயக்க வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அரசர் அச்சுதப்ப நாயக்கர், முக்கிய அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப்போற்றி ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை) என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர். இவ்வூரில் (1551-1661) பங்குனி திருவோண நட்சத்திரம் அவதரித்த தீர்த்தார்யா சுவாமிடகள் பெருமாளின் சேவைக்காக தன்னையே அர்ப்பணித்த பிரம்மச்சாரி. ஒருமுறை மழையின்றி வறட்சி ஏற்பட்டது. மக்கள் இத்துன்பத்திலருந்து மீள தீர்த்தாய சுவாமியை மக்கள் அணுகி, மழை வேண்டி பெருமாளிடம் பிரார்த்திக்குமாறு வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற சுவாமிகள், சவுராஷ்டிர மொழியில், ஸ்ரீரங்கநாதா ! இத்தருணமே மழை பெய்வித்து ஏரி, கிணறு, நதிகள் நிறையும் படி செய்வாயாக ! அரிசி முதலிய உணவுபொருட்களை மலிவாக கிடைக்க செய்.

உன்னையே கதியென்று சரணடைந்த திரவுபதிக்கு ஆபத்பாந்தவனா ரட்சித்தாய். எங்களையும் வறட்சி எனும் ஆபத்திலிருந்து காத்தருள்வாய் ரங்கா ! முன்பெல்லாம் மக்கள் போதிய வசதியுடன் வாழ்ந்தனர். இன்றோ பஞ்சக்கொடுமையினை அனுபவிக்கின்றனர். உனது திக்கரத்தில் உள்ள சக்கரத்தினை ஏவி அந்த கொடுமைகளை அழித்து விடு ரங்கா ! பஞ்சத்தால் மக்கள் செய்வதறியாது கிடக்கின்றனர். இந்நிலை நீங்க மழை பொழிவிப்பாய் ரங்கா ! பஞ்சம், பசிக்கொடுமையால் மக்கள் கண்டதை உண்ணும் அவல நிலை ஏற்பட்டு அலைகின்றனர். மக்களை இப்படி அலைய விடாமல் போதிய மழையினை பொழியச்செய் ரங்கா ! மழையின்றி மக்கள் பரிதவிக்கும் போது நீ ஆனந்தமாக அறிதுயில் கொள்ளலாமோ ? உன் பக்த ஜனங்கள் நலம் பெற மழை பொழிவிப்பாய் ரங்கா ! ரங்கா ! ரங்கா ! என கீர்த்தனை ஒன்றை முகாரி ராகத்தில் மனமுருகி பாடினார்.  மழையும் பொழிந்தது. நாமும் நீரின்றி வறட்சியால் வாடும் இந்நேரத்தில், சுவாமிகளின் கீர்த்தனைகளை பாடி, மழை பொழிய, பெருமாளை வேண்டுவோம். அதுமட்டுமல்ல, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்தும் பாதுகாப்பை வேண்டிக் கேட்போம்.
 சிவபெருமான் என்ன நிறம்!

சிவபெருமானின் மேனிவண்ணம் பற்றிய குறிப்புகள் தேவாரப் பாடல்களில் உள்ளன.சுந்தரர் தன்பாடலில், ‘பொன்னார்மேனியனே’என்று சிவனைப் பொன் போல ஒளிர்பவராக குறிப்பிடுகிறார்.திருநாவுக்கரசர்,‘ பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறு அணிந்தவர்’என பவளம் போல சிவந்தநிறம் கொண்டவராகப் பாடியுள்ளார். சம்பந்தர்,‘காடுடையச் சுடலைப் பொடி’என்னும் சுடுகாட்டுச் சாம்பலைப்பூசியதால் வெண்ணிறம் கொண்டவராகச் சித்தரிக்கிறார்.ஆனால் சித்திரங்களில் சிவன் நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம். பாற்கடலில் எழுந்த விஷத்தைக் குடித்ததால் கழுத்தில் மட்டும் சிவன் நீலநிறம் கொண்டிருப்பார்.இதனால் இவருக்கு‘நீலகண்டன்’என்று பெயருண்டு.சிவனை நீலநிறத்தில் வரைவதற்கு சாஸ்திர ஆகமங்களில் குறிப்பு ஏதுமில்லை.
சித்தர்கள் இன்றும் இருக்கிறார்களா?

இன்றும் சித்தர்கள் உலகில் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை என்கிறார்கள்.ஒரு ஞானி இதற்கொரு கதை சொல்கிறார்.ஒரு துறவி தம்முடைய சில சீடர்களுடன் ஒரு நகரத்திற்கு வந்திருந்தார்.அந்தத் துறவிக்கு ஒரு சக்தி இருந்தது. தம் உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து அதன்மூலம் குழந்தைகளின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் அது.இந்த செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவிவிட்டது.தமக்கு தேவியின் அருள் கிட்டியிருப்பதாகவும் அந்த சித்தியின் மூலம் தான் தம்முடைய ரத்தத்தில் மருந்துக்குணம் இருப்பதாகவும் துறவி தெரிவித்தார்.அன்று முதல் துறவியின் இருப்பிடத்தில் பொன் வெள்ளிக்காசுகளும் பழங்களும் மலர்களும் பூஜைக்கான பொருள்களும் வந்து குவியலாயின.ஏகப்பட்ட பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்ட தமது குழந்தைகளுடன் துறவியின் ஆசிரமத்தை முற்றுகையிடலானார்கள்.நோயால் வருந்திய சின்னஞ்சிறு குழந்தைகளின் திரளான கூட்டத்தைக் கண்ட துறவியின் மனதில் கருணை பொங்கித் ததும்பியது.

மறுகணமே துறவி தம் ஆள்காட்டி விரலொன்றைத் திரிசூலத்தில் அழுத்தினார்.குபுகுபுவென்று ரத்தம் வெளிப்பட்டது.ரத்தத் துளிகளின் மகிமையால் குழந்தைகளின் நிலைமையில் அப்போதே முன்னேற்றம் ஏற்பட்டது.பெற்றோர்களின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கியது.ஒரு விரலில் ரத்தம் வருவது நின்றதும் துறவி தமது இன்னொரு விரலைத் திரிசூலத்தின் மேல் வைத்தார்.குணமடைந்த நோயாளிகளின் கூட்டம் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது.ஆனால் நோயாளிகளின் வரிசை வளர்ந்து கொண்டே போயிற்று.துறவியின் பத்து விரல்களிலிருந்தும் ரத்தம் வெளியேறி முடிந்தாயிற்று.அதற்கு மேல் ரத்தம் நின்று விட்டது.ஆயினும் நோயாளிகளின் வருகைக்கு ஒரு முடிவு இருப்பதாகவே தெரியவில்லை.அக்கம் பக்கத்து ஊரின் மக்களும் அங்கே வரத் தொடங்கி விட்டார்கள்.கதையை விவரிப்பானேன்?காரணம் கடைசி கட்டம் முழுக் கதையையும் விளக்கி விடுகிறது.அகதிகள் சிலர் இந்த விவரம் தங்களுக்கு எட்டியதும் அந்தத் துறவியின் குடிசைக்கு விரைந்தார்கள்.அங்கே அவர்கள் கண்ட காட்சி ஐயகோ!

கால்கள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டு துறவி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.திரிசூலத்தால் குத்தப்பட்டு உடல் முழுவதும் சல்லடைக் கண்களாகி வெளுத்துப் போய் விட்டிருக்கிறது.துறவியின் அருகில் கையில் ஒரு நோயாளிக் குழந்தையுடன் நின்ற ஒரு தம்பதியர் சுவாமி!ஒரு துளி ரத்தம் மட்டும் எங்களுக்குத் தாருங்கள்.எங்களுடைய ஒரே குழந்தை இது.தங்கள் சாந்நித்தியத்திலிருந்து நம்பிக்கை இழந்து திரும்ப வேண்டிய அளவுக்கு எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துர்பாக்கியம்?என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மனிதர்கள் அந்த நகரத்தின் அந்நாளைய மனிதர்களிலிருந்து வேறுபட்டுவிட்டனரா?இல்லை! என்பதுதான் மனிதனின் இயற்கை குணங்களை ஆராய்ந்தறிந்த உளவியல் அறிஞர்களின் கூற்று!இந்த சம்பவத்துக்குப் பிறகு இறைவனும் இறைவியும் கொஞ்சம் உஷாராகி விட்டனர்.இந்தத் துறவியைப் போன்ற வரம் பெற்ற சித்தர்கள் இன்றுகூட இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அவர்கள் இப்படி வெளிப்படையாக மனிதர்களிடையே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மேல்படப்பை

 *மூலவர்*ஸ்ரீதழுவக்கொழுந்தீஸ்வரர்
 *தாயார்* காமாட்சி
 *உற்சவர்* சோமாஸ்கந்தர்
 *தலவிருட்சம்* மாமரம்

 *ஸ்தலவரலாறு*

ஒரு முறை பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின்  கண்களைப் பொத்தினார்.  சர்வ லோகத்தையும் கட்டிக் காத்தருளும் ஈசனின் கண்கள் மறைக்கப்பட்டதால், உலகில் இருள் சூழ்ந்தது; இயக்கம் நின்றது; எல்லாமே அற்றுப் போயின. சர்வலோகத்துக்கு அதிபதியான ஈஸ்வரன், உமை யைப் பார்த்துக் கடுகடுத்த குரலில் சொன்னார்: ‘‘உமையே... விளையாட்டின் உச்சத்துக்குப் போவதாக எண்ணி, வினையை உன்னிடம் வரவழைத்துக் கொண்டு விட்டாய். ஒரு நொடிப் பொழுது என் கண்கள் மூடப்பட்டால், என்னென்னவெல்லாம் ஆகும் என்பதை இப்போதாவது உணர்ந்து கொண்டாயா? நம்மை நம்பி இருக்கும் உயிர்களுக்கு நாமே அம்மை- அப்பன் என்பதை ஏன் மறந்தாய்? அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் காப்பதே நமது பொறுப்பு. இதை அறியாதவளா நீ? போ, பூலோகம்! உன்னைச் சூழ்ந்த வினையை வேரறுத்து விட்டு என்னிடம் வா. இதுதான் உனக்கு சாபம்!’’ என்று இறுக்கமுடன் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஈசன். கலகலப்பாக ஆரம்பித்த சூழல், கவலையைத் தனக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டதே என்று வருந்திய தேவி, பூலோகம் வந்தாள். தன்னைச் சூழ்ந்த சாபத்தை விரட்ட அந்த சர்வேஸ்வரனையே துதித்து, அவன் தரிசனம் பெற்று பாவம் போக்க எண்ணினாள். மந்திர மலையில் இருந்து புறப்பட்ட அவள் அப்படி வந்து சேர்ந்த இடம்தான் காஞ்சி மாநகரம். தனது தவத்துக்கு இந்த நகரையே தேர்ந்தெடுத்தாள்.
தெள்ளிய நீர் பொங்கிப் பெருகும் கம்பா நதிக் கரையில் லிங்கத்தை ஸ்தாபித்து, தூய அன்புடன் நறுமலர்கள் கொண்டு பூஜை மற்றும் வழிபாடுகளைச் சிறப்பாகவே செய்து வந்தாள். உமையம்மையின் தொடர் வழிபாட்டில் மகிழ்ந்த ஈஸ்வரன், ஒரு நாள் தேவியைச் சோதிக்க நினைத்தார். எனவே, கம்பா நதியில் திடீர் வெள்ளத்தை வரவழைத்தார். திடீரென பெருக்கெடுத்து வரும் வெள்ளம் கண்டு திகைத்தாள் தேவி. தனது, ‘பூஜையில் என்ன குறை வந்ததோ?’ என்று கலங்கினாள்.க ஈஸ்வரனை நினைந்து பிரார்த்தித்தாள். எனினும், வெள்ளத்தின் வேகம் அடங்கவில்லை. கம்பா நதிக் கரையில், தான் ஸ்தாபனம் செய்து வழிபட்டு வரும் லிங்கத் திருமேனியை இந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமோ என்று பயந்தாள். தவித்தாள். ஒரு கட்டத்தில் ஓடிப் போய் தன் நாயகனாம் சிவலிங்கத் திருமேனியை, மெல்லிய தன் இரு கரங்களால் அணைத்து மார்போடு இறுக்கிக் கொண்டாள். பார்வதிதேவியின் தழுவலுக்குக் குழைந்ததால்  இறைவன் பின்னாளில் ‘தழுவக் கொழுந்தீஸ்வரர்’ ஆனார்.

 *ஆலய அமைப்பு*

கிழக்குத் திசை பார்த்த ஆலயம். மூன்று நிலை ராஜ கோபுரம். ஐந்து கலசங்கள். உள்ளே நுழைந்தவுடன் தழுவக்கொழுந்தீஸ்வரரைப் பார்த்த வண்ணம் சூரியன் மற்றும் சந்திரனின் விக்கிரகங்கள், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியன உள்ளது.வலப் பக்கம் அன்னை ஸ்ரீகாமாட்சி சந்நிதி. இதை அடுத்து, சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பஞ்சலோக விக்கிரகங்கள் அமைந்துள்ள தனி மண்டபம். சுதையால் ஆன துவாரபாலகர்களைதாண்டி உள்ளே நுழைந்தால், தழுவக்கொழுந்தீஸ்வரர் கருவறை. ஈஸ்வரனை வணங்குவதற்கு முன் பிராகார வலம் வருவோம். பிராகார வலத்தின்போது முதலில்  நால்வர் தனி மண்டபத்தில் தரிசனம் தருகின்றனர். வீரபத்திரர், சரபேஸ்வரர், வெற்றி விநாயகர், காசி விஸ்வநாதர், நந்தி தேவர்- பலிபீடத்துடன் கூடிய திருவாலீஸ்வரர்- திருநல்லழகி அம்பாள், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வர பகவான், நவக்கிரகம் முதலான சந்நிதிகள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. தவிர, கோஷ்ட தெய்வங்களான நர்த் தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோர் தங்களுக்கு உரிய இடத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். மகா மண்டபம், அர்த்த மண்டபம் தாண்டி விசாலமான கருவறை. உள்ளே- தழுவக்கொழுந்தீஸ்வரர், லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு இடப் பக்கம், காமாட்சி அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. பிராகார வலத்தின்போது கோஷ்ட தெய்வங்கள் வைஷ்ணவி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரது சன்னதிகள் உள்ளன.

 *அமைவிடம்*

சென்னை- தாம்பரம்- காஞ்சிபுரம் பாதையில் தாம்பரத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள படப்பையில் உள்ளது இவ்வாலயம்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் கோயில் இருக்கிறது.

 *ஆலய முகவரி*

அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்,
மேல்படப்பை கிராமம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் 601 301

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தென்பொன்பரப்பி

 *மூலவர்* சொர்ணபுரீஸ்வரர்
 *தாயார்* உமையாள், சொர்ணாம்பிகை
 *தல விருட்சம் :* அரசமரம்

 *ஸ்தலவரலாறு*

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 *ஆலய அமைப்பு*

இந்த சிவாலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மகத ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசனான வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது. புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டும், நுணுக்கமான வேலைப் பாடுகளுடனும் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங் களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார்.நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்ட்டுள்ளதால், உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ணபுரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.

 *அமைவிடம்*

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் - ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலை வில், இயற்கை எழில் கொஞ்சும் பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது.

 *ஆலய முகவரி:*

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்.
606 201

இவ்வாலயம் காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
சிவன்மலை

 மூலவர்:* சுப்பிரமணியர்
 *தாயார்:* வள்ளி
 *தீர்த்தம்:* காசித் தீர்த்தம்
 *தல விருட்சம் :* தொரட்டி மரம்

 *ஸ்தலவரலாறு*

மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்டது இந்த முருகன் கோயில் ஆகும்.

 *ஆலய அமைப்பு*

சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்குமுகமாக உள்ளன. மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.
நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.
பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக இருக்கிறார்.
இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.

 *ஆண்டவன் உத்தரவு பெட்டி*

சுப்பிரமணிய ஸ்வாமி சன்னதியின் முன் மண்டபத்தில், "ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது.பக்தர்கள் கனவில் முருகப்பெருமான் ஏதேனும் ஒரு பொருளைக் கூறி, அதை ஆண்டவர் பெட்டியில் வைக்குமாறு கூறுகிறார்.அந்தப் பொருளை, சம்பந்தப்பட்ட பக்தர் கோவிலுக்கு கொண்டு வருவார். அவர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, மூலவர் சன்னதியில் பூ போட்டு உத்தரவு கேட்கப்படும். ஸ்வாமி உத்தரவு கிடைத்தால், அந்தப் பொருள், "ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். அடுத்த பொருள் வரும் வரை, இந்தப் பொருளுக்கு தினசரி பூஜை நடக்கும். இக்கோவிலில், பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது..

 *அமைவிடம்*

காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 7 வது கி.மீட்டரில் அமைந்த அழகிய குன்று சிவன் மலையாகும் . திருக்கோவில் குன்றின் மேலே செல்ல படிகட்டு வழி மற்றும் எல்லா வகையான வாகனங்களில் செல்லும் விதமாக தார் சாலை  அமைத்துள்ளார்கள் .மலைப்பாதை வழியில் சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் திருக்கோவில் முகப்பை அடையலாம்.

 *ஆலய முகவரி*

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், சிவன்மலை, காங்கயம் வழி, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு -638701.

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 *குறிப்பு*

பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் முதல் பூசை விநாயகருக்கே நடக்கும். சிவன்மலையில் முதல் பூசை முருகனுக்கே நடக்கிறது. விநாயகரே முருகனை வழிபடுவதாக ஐதீகம்.

வியாழன், 12 டிசம்பர், 2019

முதல் தமிழ் வருடம்!

முதல் தமிழ் வருடம் பிரபவ எனப்படும். வியாழன் (குரு) ஒரு முறை வான வட்டத்தை சுற்றுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். சனி ஒருமுறை சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். இவை இரண்டும் அசுவினி (அசுவதி) நட்சத்திரத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும். அசுவினி நட்சத்திரங்களில் முதன்மையானது. இவ்வாறு கூடும் நாளே தமிழ் முதல் ஆண்டின் துவக்கநாள் ஆகிறது. பிரபவ முதல் அட்சய வரை 60 ஆண்டுகள் உள்ளன.
அம்மனுக்கு உப்பு, மிளகு காணிக்கை ஏன்?

பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்பாளுக்கு உப்பும், மிளகும் காணிக்கையாக படைக்கின்றனர். நமது உடலை உப்புக்கும், உடலில் உள்ள அகங்காரத்தை மிளகிற்கும் ஒப்பிடுகிறோம். அகங்காரத்தை அகற்றி நல் உடம்பைத் தரவேண்டும் என அம்பிகையிடம் வேண்டிக்கொள்வதற்காகவே இந்த வழக்கம் ஏற்பட்டது.