திங்கள், 18 நவம்பர், 2019

அருள் மிகு நரசிம்மர் திருக்கோயில்

மூலவர்  :  நரசிம்மர்
தாயார்  :  அமிர்தவல்லி
பழமை  :  2000 வருடங்களுக்கு முன்
ஊர் :  திருக்குறையலூர், சீர்காழி
மாவட்டம்  :  நாகப்பட்டினம்
மாநிலம் :  தமிழ்நாடு

திருவிழா : நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி    
           
சிறப்பு : நரசிம்மரை இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது. திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது.    
           
திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.  அருள் மிகு நரசிம்மர் திருக்கோயில், திருக்குறையலூர் - 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91- 94435 64650, 94430 07412.   
          
தகவல் : சுவாமி மலைக்கும், திருக்கூடலூருக்கும் இடையே காவிரியில் துணை ஆறாக பிரியும் மண்ணியாறு இத்தலத்தின் வழியாக சென்று கடலில் கலக்கிறது.இதன் சிறப்பை வைணவ ஆச்சாரியார்கள் "மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்' என்று சிறப்பித்து பாடியுள்ளனர். குலசேகர ஆழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர்.

பிரார்த்தனை : மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.   
           
ஸ்தல பெருமை : தாயார் அமிர்தவல்லி தனி சன்னதியில் அருளு கிறாள். பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். அமாவாசை நாட்களில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுதர்சன ஹோமம் நடக்கிறது. நவக்கிரக தோஷம், பித்ரு தோஷம், எதிரிகளின் தொந்தரவுக்கு ஆளானவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொள்கிறார்கள். கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், திருமங்கையாழ்வார், வைணவ ஆச்சாரியார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.
   
ஸ்தல வரலாறு : சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள். அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது.நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தந்து அமைதிப்படுத்தி யதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.

ஆழ்வார் அவதார தலம் :  திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில் உபரிசிரவஸு என்ற மன்னனாகப் பிறந்த இவர், இங்கு நரசிம்மரை வழிபட்டு, அடுத்த பிறப்பில் நீலன் என்னும் மன்னனாக இங்கு அவதரித்ததாக மங்களபுரி மகாத்மியம்கூறுகிறது.திருமங்கையாழ்வார், 108 திவ்ய தேசங்களில் 86 தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் அவதரித்த இத்தலத்து நரசிம்மரை வழிபட்டால் 86 பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.இத்தலத்தில் அவதரித்திருந்தாலும், திருமங்கையாழ்வார் இங்கு சுவாமியை மங்களாசாசனம் செய்ய வில்லை. வேறு தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது, இத்தல நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதி அகோபிலம் : தைமாத அமாவாசையை ஒட்டி, இவ்வூர் அருகில் உள்ளதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது மான திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.அப்போது, திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள் வார். "திருப்பல்லாண்டு தொடக்கம்' என்னும் தமிழ்மறை பாடி சுவாமியை வழிபடும் வைபவம் நடக்கும். மிகவும் பழமையான இத்தலத்தை "ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஷேத்திரம் என்பதால் "தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள். பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீபூரணபுரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
எமதருமன்!

உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி. ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு எமதருமன் என்றும் தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம்  தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு. அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன். மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன். அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.

விஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண்டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சனி, மனு, தப்தி ஆகியோர். எமனும் சனியும் சூரிய புத்திரர்கள். எனவே, சகோதரர்கள். எமன் இயற்கையிலேயே நியாயஸ்தன். நீதி, நேர்மை தவறாதவன். சத்தியத்தின் பிரதிநிதி. சம்ப்ஜனாவின் நிழல்தான் சாயா என்ற உருவத்தில் சூரியனின் பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்ததை அறிந்த எமன், சாயாவைக் குற்றம் சாட்டினான். அவள் சூரியனை ஏமாற்றுவதாகக் குறை கூறி, கோபத்தில் காலால் உதைத்தான். இதனால் கோபமடைந்த சாயா, எமனுக்குக் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டுத் துன்பப்படுமாறு சாபம் அளித்துவிடுகிறாள்.

பின்னர் சூரியனின் ஆணைப்படி எமன் சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான். சிவபெருமான் தோன்றி, அவனைத் தென் திசைக்குக் காவலனாக்கி, மனித உயிர்களின் ஆயுள் முடியும்போது, அவற்றைக் கவர்ந்து பாவங்களுக்கேற்ப தண்டனை அளிக்கவும், புண்ணிய பலன்கள் அளித்து வாழ வழி செய்வதற்கும் அதிகாரத்தை வழங்கி, அவனை நரகலோகம் எனும் எமலோகத்துக்கு அதிபதியாக்கினார். இரண்டு கூரிய சிகரங்களிடையே அதலபாதாளத்தில் அக்னி ஆறு.  சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு தலைமுடியில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க, அதில் அமர்ந்துதான் எமதருமன் நீதி வழங்குகிறான். அவனது நீதியின் தன்மை எள்ளளவு மாறினாலும் அந்த சிம்மாசனம் அறுந்து, அதனுடன் எமனும் அக்னி ஆற்றில் விழுந்துவிடுவான். இத்தகைய சூழ்நிலையில்தான் எமன் நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

சிவபெருமான், தனது வாகனத்துக்குச் சமமான ஒரு வாகனத்தை எமனுக்குத் தர விரும்பினார். ரிஷபத்தைப் போலவே தோற்றமுடைய, கரிய எருமைமாடு ஒன்றை உருவாக்கி, எமனுக்கு வாகனமாக அருளினார். விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு ஜீவன்களின் பாபபுண்ணியங்களை அனுசரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார். இந்தப் பணியைத் தவறின்றிச் செய்ய எமனுக்கு பல தடவை அக்னிப் பரீட்சை நிகழ்ந்தது. அவற்றிலெல்லாம் தவறாமல் தனது கடமையைச் செய்தவன் எமதருமன். ஆனால், ஸ்ரீராம அவதார முடிவில் எமனுக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான். இருந்தாலும் யாரோ ஒருவன் சொன்ன அபவாதத்துக்காகச் சீதையைக் காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமனின் புதல்வர்கள் லவ- குசர்கள் தோன்றினர். ஸ்ரீராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரையை லவ- குசர்கள் தடுத்து, அதனால் ராமனே தன் புதல்வர்களை எதிர்த்துப் போரிடும் நிலைமை உருவாயிற்று.

பின்னர், லவ-குசர்கள் யாரென்று அறிந்து மனமகிழ்ந்தார் ஸ்ரீராமன். அவர்களுக்கு முறைப்படி பட்டம் சூட்டப்பட்டது. ஸ்ரீராமன், தனது அவதாரத்தின் கடமைகளை முடித்து மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டிய தருணமும் வந்தது. இந்தப் பணி நிறைவேற எமனுடைய கடமை முக்கியமாக இருந்தது. மகாவிஷ்ணுவின் சக்தியை ஸ்ரீராமனின் ஸ்தூல சரீரத்தில் இருந்து எடுத்து, மீண்டும் வைகுண்டம் சேர்க்க வேண்டியது எமனின் கடமையானது. அப்போது, எமதருமன் பிரம்ம தேவனை வேண்டினான். பிரம்மன் தோன்றி, இதற்கான வழிமுறையை அவனுக்கு எடுத்துரைத்தார். அதன்படி எமதருமன் அதிபலா மகரிஷியின் சீடன் போல் வடிவெடுத்து, அயோத்திக்கு வந்தான். அங்கே ஸ்ரீராமனைச் சந்தித்தவன், தான் ராமனுடன் தனியாக சில தேவ ரகசியங்கள் பற்றி பேசவிருப்பதால், யாரும் தங்கள் அறைக்குள் வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தான் அவனது விருப்பப்படியே ஸ்ரீராமனும் தன் சகோதரனான லட்சுமணனை அழைத்து, அறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்தினார். தாங்கள் பேசி முடிக்கும் வரையிலும் எவராக இருந்தாலும் உள்ளே விடக்கூடாது என உத்தரவிட்டார்.

எமனும் ஸ்ரீராமனும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீராமனைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். லட்சுமணன் அனுமதிக்க வில்லை. ஆனால், துர்வாசர் அவனை அலட்சியம் செய்யாமல், கோபத்துடன் ராமன் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். (வேறு விதமாகவும் சொல்வதுண்டு.) இதனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று கலங்கினான் லட்சுமணன். சரயு நதிக்கரைக்கு ஓடோடிச் சென்று, ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று ஜபித்தபடியே ஆற்றுக்குள் இறங்கி பிராணத் தியாகம் செய்தான். தகவல் அறிந்த ஸ்ரீராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, அதன் வெள்ளத்தில் மூழ்கினார். ராமாவதாரம் முடிந்தது. எமதருமன் தனது கடமையை முடித்துக் கொண்டு ராம- லட்சுமணர்களின் ஆத்மாக்கள் வைகுண்டத்தை அடையவழி செய்தான்.

நசிகேதஸ் என்பவன் எமதரும ராஜனை சந்தித்து, அவனோடு பேசி தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதாக உபநிடதம் கூறுகிறது. அதுபோலவே, ஸ்ரீராமனும் எமனுடன் உரையாடி, பிறப்பு- இறப்பு, ஆத்ம விடுதலை பற்றிய பல தத்துவங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்ததாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்து தத்துவங்களையும் அனைவருக்கும் கண்ணன் உபதேசமாக வழங்குவதற்கு, ராமாவதாரத்தில் எமதரும ராஜனோடு உரையாடிய சம்பவமும் உதவியிருக்கலாம். அவதார புருஷர்களுக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு ஞானம் பெற்றவன் எமதருமன். இதற்கான வரலாறும் ஒன்று உண்டு. பதினாறு வயது நிரம்பிய மார்க்கண்டேயனின் உயிரைக்கவர எமதருமன் சென்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறான். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீதும் விழுந்தது. சிவன் கோபத்துடன் எமனைத் தண்டித்து தடுத்தத்துடன், மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று அருள்புரிந்தார்.

அந்த தருணத்தில் சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்தார் என்ற வரலாறு உண்டு. இதற்கும் ஒரு உட்பொருள் இருந்தது.. நீதியும் நேர்மையும் தவறாமல் சத்தியத்தைக் காக்கும் பொறுப்பேற்ற எமதருமன், அதற்கான மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும்தவம் செய்தான். அம்பிகை தோன்றி அருள்புரிந்து அளப்பரிய ஞானத்தை நல்கினாள். ஆதிசக்தியின் திருவடிகள் தன் மார்பின் மீது பட வேண்டும் என்று விரும்பினான் எமன். காலம் வரும்போது அது கைகூடும் எனக்கூறி மறைந்தாள் ஆதிசக்தி. மார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது சிவபெருமான், தன் இடது காலால் காலனை உதைத்தார்.  அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் இடது கால், அன்னை ஆதிபராசக்தியின் காலல்லவா? ஆக, எமன் வேண்டிக்கொண்டபடியே அன்னையின் திருப்பாதங்கள் அவன் மார்பில் பட்டது. ஞானம் வேண்டி எமன் செய்த தவம் பூர்த்தியானது.

பல்வேறு யுகங்களில் எமனும் சில அவதாரங்கள் எடுத்து அருள்புரிந்ததாக புராண வரலாறுகள் உண்டு. மகாபாரத காலத்தில் எமதருமனின் அம்சத்தில் தோன்றியவர்தான் விதுரர். அவர் கூறிய நீதிகளும் வழிகாட்டிய சன்மார்க்க வழிகளும் விதுரநீதி என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது. பாண்டவர்களில் மூத்தவரான தருமமும் குந்திதேவிக்கு எமதருமனின் அனுக்ரஹத்தால் பிறந்தவர். எந்த நிலையிலும் தருமம் தவறாது அரசு புரிந்த யுதிஷ்டிரர், எமதருமனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் என்றதுமே மரணம் என்று பலர் சிந்திக்கின்றனர். பாசக் கயிற்றைப் போட்டு உயிரை எடுத்து நரகத்தில் தள்ளும் கொடிய தேவதையாக நினைத்து பயப்படுகின்றனர். ஆசையிலும் பேராசையிலும் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நம்பியே வாழ்பவர்கள் மரணத்துக்கு பயப்படுவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு தவம் செய்பவர்கள், மரணத்துக்கு பயப்படுவதில்லை. எமன் எனும் தர்மராஜனை அவர்கள் தரிசிக்க விரும்புகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது
சட்டம்பி

கேரளத்தில் வாழ்ந்த சட்டம்பி சுவாமிகள் பெரும் மகான். இவரது மேன்மைகளைப்பற்றி அறிந்த ஓர் அரசு அதிகாரி அவரைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார். அந்த அதிகாரி லஞ்ச லாவண்யத்துக்குப் பெயர் போனவர். அவரைப் பற்றி சட்டம்பி சுவாமிகள் நன்கு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டார். விருந்துக்கு அவரது சீடர்களும் வருவார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன். அதிகாரி சம்மதித்தார். குறிப்பிட்ட நாளன்று சட்டம்பி சுவாமிகள் தனியாக அந்த அதிகாரியின் வீட்டிற்குச் சென்றார்.

அதிகாரி சுவாமிஜி, சீடர்கள் எங்கே? என விசாரித்தார். அவர்கள் வெளியே உள்ளார்கள், உணவு பரிமாறியதும் வருவார்கள். உணவு பரிமாறப்பட்டதும் சுவாமிகள், அருமைச் சீடர்களே உள்ளே வாருங்கள் என்று உரக்க அழைத்தார். உடனே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பல தெருநாய்கள் வரிசையாக வந்து ஒவ்வோர் இலையிலும் அமர்ந்து பரிமாறப்பட்டிருந்த உணவுகளை உண்டன. அந்த நாய்கள் சத்தம் ஒன்றும் செய்யாமல், உண்டுவிட்டு வந்தது போலவே வரிசையாகத் திரும்பிச் சென்றன. வீட்டிலிருந்த யாவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

அட, நாய்களுக்கு இவ்வளவு அடக்கமும், அமைதியுமா! சிரித்தவாறே சுவாமிகள் அவர்களிடம், இவை இப்போது சாதாரண நாய்களாக இருக்கலாம்; ஆனால் போன ஜன்மாவில் ஊழல் பேர்வழிகளாக இருந்தவர்கள். செய்த ஊழல்களின் பயனாக இந்த நாய்ப் பிறவியைப் பெற்று அவை செய்த தீயவினைகளை அனுபவிக்கின்றனர். என்றார். இதைக் கேட்டதும் அந்த அதிகாரி கலங்கினார். அவரது அகக்கண் திறந்தது. அன்று முதல் தனது ஊழல் செயல்களை விட்டு நல்ல வாழ்க்கையை மேற்கொண்டார். ஸ்ரீநாராயணகுருவின் குருவான சட்டம்பி சுவாமிகள் சுவாமி விவேகானந்தரின் பாரத யாத்திரையின் கேரள பகுதி பயணத்தில் சுவாமிஜியைச் சந்தித்து உரையாடி உள்ளார்.

வியாழன், 14 நவம்பர், 2019

ஆழ்வார்களும் அவதாரமும்

7. தொண்டரடி பொடியாழ்வார்

பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்
நட்சத்திரம் : மார்கழி கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
பாடிய பாடல் : 55
வேறு பெயர் : விப்பிர நாராயணர்
சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்
பிற பெயர்கள் : பக்தாங்க்ரிரேணு, விப்ரநாராயணர், திருமண்டங்குடியார், பள்ளியுணர்த்தியபிரான்

சோழநாட்டின் திருமண்டங்குடி என்ற கிராமத்தில் வேத விசாரதர் என்பவர் சிறந்த திருமால் தாசராக விளங்கி வந்தார். இவர் எப்பொழுதும் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பூமாலைகள் தொடுத்து பெருமாளுக்கு சாற்றி வந்தார். அந்த உலகளந்த பெருமாளின் கருணையால் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருமாலின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாக ஒரு புதல்வர் பிறந்தார். பெற்றோர்களும் அவருக்கு விப்பிர நாராயணர் என்றுபெயர் சூட்டினார்கள். சகல கலைகளையும் கற்றுணர்ந்த விப்பிரநாராயணருக்காக விண்ணுலகிலிருந்து திருமாலின் சேனைத்தலைவரான சேனை முதலியர் பூமிக்கு வந்து உண்மைப்பொருளை உணர்த்தி சென்றார். இதன் பிறகு விப்பிர நாராயணருக்கு அரங்கனைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. இதனால் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரிய விரதத்தையே உயர்வாக எண்ணி வாழ்ந்து வந்தார்.
ஒரு முறை திருமாலின் திருத்தலங்கள் அனைத்தையும் பார்த்து வர ஆசைப்பட்டு முதலில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தார். அவர் பெருமையை கேட்டறிந்தார். அரங்கனைப்பார்த்த மகிழ்ச்சியில் திருமால் பெருமைக்கு நிகரில்லை எனவே பெருமானே போதும் வேறெதுவும் வேண்டியதில்லை என்று நினைத்து பச்சை மாமலைபோல் மேனி ! பவள வாய்க் கமலச் செங்கண் அச்சுதா ! அமரா ! ஆயர்தம் கொழுந்தே எனும் இச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே  என்று நெஞ்சுருகி பாடினார்.

ஸ்ரீரங்கத்துப்பெருமாளுக்கு சேவை செய்வதற்காக கோயிலிலேயே தோட்டம் அமைத்து பூக்களை பறித்து பெருமாளுக்கு தினமும் மாலை தொடுத்து கொடுப்பார். அதன் பின் பிற வீடுகளுக்கு  சென்று உணவு வாங்கி அருந்துவார். இவருக்கு ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. அனைவரிடமும் சமமாக பழகுவார். இதை சோதிக்க நினைத்தார் பரந்தாமன். திருக்கரம்பனூரில் தேவி, தேவதேவி என இரு தாசிகள் இருந்தனர். இவர்கள் உறையூர் அரசசபையில் ஆடி பாடி பரிசுகள் பல பெற்று திரும்பும் வழியில் விப்பிர நாராயணரின் தோட்டத்தின் அழகில் மயங்கி அதை பராமரிப்பவர் சந்திக்க சென்றார்கள். ஆனால் இவர்கள் வந்ததையோ இவர்களது  பேச்சையோ கவனிக்காமல் பெருமாளுக்கு பூமாலை தொடுப்பதிலேயே கவனமாக இருந்தார். இவரது கவனத்தை திருப்பி தன் மீது எப்போதும் மாறாத அன்புவைக்க சபதம் ஏற்றாள். அதே போல் பெருமாளுக்கு தானும் சேவை செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக விப்பிர நாராயணரின் மனதில் இடம் பிடித்தார். தேவதேவி இல்லாமல் தான் இல்லை என்ற நிலைக்கு மாறி விட்டார். தன் குடும்பத்தை பார்க்க சென்ற தேவதேவியுடன் விப்பிரநாராயணனும் சென்றார். அவரிடம் இருந்த செல்வம் எல்லாம் தீர்ந்ததால் தேவ தேவியில் தாயாருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே வெளியே சென்று தோட்டத்தில் அமர்ந்தார். அப்போது பெருமாள் ஒரு பொன் கிண்ணத்தை விப்பிர நாராயணன் கொடுத்ததாக தேவதேவியின் தாயாரிடம் கொடுத்தார். மறுநாள் கோயிலில் தங்ககிண்ணம் காணாமல் தேவதேவியின் தாயாரையும் விப்பிரநாராயணனையும் விசாரித்து விட்டு இவரை மட்டும் சிறையிலடைத்தான் மன்னன். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விப்பிரநாராயணனின் பெருமைகளை கூறி அவரை விடுவிக்க கூறினார். அதன்பின் விப்பிரநாராயணன் தொண்டரடிப்பொடியாழ்வாராக நெடுங்காலம் பெருமாளை  பாடி இறைவனுடன் கலந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் தொண்டரடி பொடியாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 2 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

சனி, 9 நவம்பர், 2019

ஸ்ருதி ஸ்மருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்.

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம் அஸ்மதாசார்ய  பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர                                                    காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

வழக்கம் போல் இல்லாமல் தயவு செய்து முழுவதையும் படித்து பார்த்து லைக், கமட் & ஷேர் செய்யவும்.

நண்பர்கள் அனைவருக்கும் அடியேனின் பனிவான வணக்கம்... ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட நமது ஸ்ரீ காஞ்சி காமகோடி மடம் அவர் வழி வந்த ஸ்ரீமடத்தில் இதுவரை எழுபது ஆச்சார்யர்கள் நமக்கு ஜகத் குருக்களாக இன்றும் நமக்கு வழிகாட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வழி வந்த நமது அறுபத்தி எட்டாவது ஆச்சார்யாள் நமது நடமாடும் தெய்வம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளால் தற்போது நடமாடிக்கொண்டிருக்கும் ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்கிஹத்துடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளால் இந்த பாரத தேசம் முழுவதும் எண்ணற்ற வேத பாடசாலைகள், பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ் மற்றும் வேதிக் பாடசாலைகள், சங்கரா காலேஜ், சங்கரா மருத்துவமனை, சங்கரா கண் மருத்துவமனை இப்படி பல பல நல்ல கார்யங்களை தங்கு தடையின்றி இன்றைக்கும் வழங்கிக்கொண்டும் நம் சனாதன மதத்திற்கு இவர் ஆற்றிய தொண்டு எண்ணிலடங்கா..... இது போன்று பல நல்ல திட்டங்களை நமது சனாதன தர்மத்திற்கு பல நல்ல காரியங்களை செய்து வரும் நம் குரு நாதரை பற்றி உலகறிய செய்ய ஒரு மிகப்பெரும் முயற்சி செய்வதற்காக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பற்றிய ஒரு குறும்படம் எடுப்பதற்காக நேற்று காலை சுமார் பன்னிரெண்டு மணிக்கு திரு. மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்கள் இல்லத்தில் முதற் கட்டமாக கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த முதல் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சுந்தர்ராம வாஜ்பாயே அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் பல முக்கிய தகவல்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த முயற்சியில் காஞ்சி காமகோடி பக்தர்கள் பேறவை அமைப்பாளர் வலசை ஜெயராமன், மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம், சுந்தராம்பாள் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த குறும் படம் எடுப்பதற்காக மஹா பெரியவாளின் பரிபூரண அனுக்கிஹத்தை பெற்ற பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்களின் குமாரருமான திரு. எஸ்.பி. காந்தன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள். புது பெரியவாளை  பற்றிய அற்புதங்கள் சேகரிப்பதற்காகவும், புது பெரியவாளின் மிகவும் பழமையான புகைப்படங்கள், வீடியோக்கள், புது பெரியவாளை பற்றிய தங்களுக்கு தெரிந்த அற்புதங்கள் {MIRACLES} பற்றி தெரிந்தவைகளை தயவு செய்து  தெரிவிக்கவும். மேலும் தங்களின் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய இது வாய்ப்பாக அமையும். நமது குரு நாதரை பற்றி தங்களுக்கு நடந்த அற்புதங்களை  நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலு‌ம் தொடர்பு கொள்ள : Mahalakshmi Subramanian Cell number : +91 - 9840053289, Mail Id vcsmani@yahoo.com; Valasai Jayaraman : +91 - 9444279696, Mail Id : valasaikjayaraman@gmail.com: Hari Haran. B, Mail Id  cvbhariharan@gmail.com, Cell Number : +91 - 9941258112, +91 - 8667398347
ஆழ்வார்களும் அவதாரமும்

6. ஆண்டாள்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : பெரியாழ்வார் (வளர்ப்புத்தந்தை)
பிறந்த காலம் : 9ம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம்
நட்சத்திரம் : ஆடி பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி
பாடிய பாடல் : 173
சிறப்பு : கரும்பார் குழல் கோதை என்ற சிறப்பு பெயர் பெற்றவள், திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள். (பூமிப்பிராட்டியாம்சம்)
பிற பெயர்கள் : கோதைப்பிராட்டி, சூடிக்கொடுத்த நாச்சியார்

ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது ஆண்டாளை எடுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள். ஒரு முறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதை கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும் படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில் அந்த மாலையை ஆண்டாள் அணிவதை கண்டார். ஆண்டாளை கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள். ஸ்ரீ ரங்கப்பெருமாளை திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையும். காதலின் வரமாக நாச்சியார் திருமொழியையும் காதலின் வீரமாக நாச்சியார் திருமொழியையும் பாடினார். தன் தந்தையிடமும் இந்த தெய்வீக திருமணம் பற்றி கூறினார். ஆழ்வாரும் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடந்த ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டாள் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய ரெங்கநாதர் அவளை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் ஆண்டாள் ரெங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது. பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

வெள்ளி, 8 நவம்பர், 2019

பெரும்பாலான நதிகளுக்கு பெண் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது ஏன்?

நமது சாஸ்திரங்கள் கடலை ஆணாகவும் நதிகளை பெண்ணாகவும் போற்றுகின்றன.பெண் மென்மையானவள்.அனைவரையும் அரவணைத்து அந்தக் குடும்பத்தார் அனைவரின் நலனுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பவள்.சூரியனால் கடல் நீரானது நீராவியாகி மேகங்களின் வாயிலாக மழையாகப் பெய்து அவை நதிகளின் மூலம் ஊர்மக்கள் பயனடைய வளைந்து மெலிந்து ஓடி கடைசியில் கடலிலேயே நதிகள் சங்கமிக்கின்றன.இது போன்று பெண்ணானவள் ஒரு குடும்பம் நன்றாக இருக்க விட்டுக்கொடுத்து புரிந்துகொண்டு தியாகம் செய்து வாழ்கிறாள்.அவள் எவ்வளவு தியாகம் செய்திடினும் முடிவில் தனது கணவன் இன்னார் இன்னாரின் மனைவியே தான் என்பதிலேயே பெருமை கொள்கிறாள்.வளர்ச்சிக்கு வித்தாக பெண்களும் நதிகளும் விளங்குவதினால்.நதிகள் கங்கா காவிரி யமுனா என்று பெண்பால் சொற்களாலேயே சிறப்பிக்கப்படுகின்றன.உலகம் இன்று இருப்பது பெண்களால்தான்! அதுபோன்று நதிகளே ஒரு தேசத்தை உயர்ந்ததாக ஆக்குகின்றன.பெண்கள் இணைந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு வளர்ச்சி என்பது போன்று.நதிகள் அனைத்தும் இணைந்தால் நமது நாடும் வளம்பெறும்.
ஆழ்வார்களும் அவதாரமும்
        5. பெரியாழ்வார்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : ஆனி சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்
பிற பெயர்கள் : பட்டநாதன், பட்டர்பிரான், விஷ்ணுசித்தன், ஸ்ரீவில்லிபுத்தூரார், ஸ்ரீரங்கநாதஸ்வஸுரர்

பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டுவதை தன் முக்கிய பணியாக கொண்டிருந்தார் இவர். அக்காலத்தில் மதுரையில் அரசனான வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும்படி கேட்டார். அந்த வேதியரும் மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்காகப் பகலிலும். கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும் முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார். மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாள் விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி மதுரையில் நடந்த சம்பவத்தை கூறி உனக்குத்தான் பொற்கிழி சென்று வாரும் என்றார். அதற்கு விஷ்ணு சித்தர் கல்லாதவனான என்னால் முடியுமா ? என்று கேட்க, பெருமாளும் இதற்கு நானே பொறுப்பு என்றார். விஷ்ணு சித்தர் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இக்கோலத்தை ரசிக்க பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார். ஆழ்வார் மருண்டார். நல்ல காலத்திலேயே இம் மண்ணுலகில் தீங்கு செய்வர். இக்கலியிலே முகம் காட்டுகிறானே, இதனால் கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால். யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் பண்ணினார். எனவே தான் ஆழ்வார்களிலே பெரியாழ்வார் எனப்பட்டார். பொற்கிழியை கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருங்கோயிலுக்கு சமர்ப்பித்து மீண்டும் தொண்டு செய்தார். கண்ணன் லீலையை முற்றும் அனுபவித்து அதன் விளைவாக பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தை வெளியிட்டார். பெரியாழ்வாரின் வம்சத் தோன்றல்கள்  வேதப்பிரான் பட்டர்கள் என்ற திருநாமத்துடன் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகிறார்கள். பெருமாளின் 108 திருப்பதிகளில் பெரியாழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோயில்களையும் என மொத்தம் 19 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
4. திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்.

சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்துச்சென்று வளர்த்தார். ஆனால் ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து இவருக்கு கொடுத்து அருந்தக் கூறினார். இப்படியே தினமும் வேளாளர் கொடுத்த பாலை குடித்து வந்த ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அவர்களிடமே அருந்தக் கூறினார். மனைவியுடன் அந்த பாலை அருந்திய வேளாளர் தன் முதுமை நீங்கி இளமை பெற்றார். பாலின் மகிமையால் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். பல சமயங்களில் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்கச் செய்ததுடன் திருமந்திர உபதேசம் செய்தார். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் அங்குள்ள திருவெங்குடி திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார். இவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னன் இவளை தன் மனைவியாக்கினான். தனக்கும் இளமை வரம் வேண்டும் என்று விருப்பப்பட்ட மன்னன். ஆழ்வாரின் சீடனான களிகண்ணனிடம் தனக்கும் இளமை வரம் கேட்டான். ஆனால் எல்லோருக்கும் ஆழ்வார் வரம் தர மாட்டார் என களிக்கண்ணன் கூறியதால் அவனை நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டார். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளிறே முடிவு செய்து காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையை சுருட்டிகொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் இந்த பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதன் பின் கும்பகோணம் வந்த ஆழ்வார் நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து திருவடியை அடைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்

ஞாயிறு, 3 நவம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 85 ॐ

                  {முடிவுரை}

சிதம்பரம் கோயில் பற்றிய பல விஷயங்களையும் பல்வேறு விதமான தகவல்களையும் பரிமாறிக் கொண்டோம் சுமார் மூன்று மாதங்களாய். இங்கே பூஜை முறைகள் வைதீக முறைப்படியே நடைபெறுகின்றன என்பதையும் பார்த்தோம். ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் கோயில்களில் வழிபடுபவர் திருமணம் ஆகாதவராய் இருந்தாலும் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்யவும் நடராஜரின் கருவறைக்குள் நுழையவும் திருமணம் ஆனால் மட்டுமே தகுதி பெறுகின்றனர். மனைவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மேலும் சில ஹோமங்கள் யக்ஞங்கள் முறைப்படி செய்து அதன் மூலம் குருவின் அனுமதி பெற்றே கருவறையில் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஹோமங்களும் யக்ஞங்களும் மனைவி அருகில் இல்லாமல் செய்ய முடியாது. ஆகவே அநேகமாய் தீட்சிதர்கள் அனைவருமே சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுகின்றனர். அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டாலும் கோத்திரம் பார்ப்பது பொருத்தங்கள் பார்ப்பது என்ற சம்பிரதாயங்களும் உள்ளன. திருமணத்தில் மணமகனுக்குச் சாதாரணமாய்க் கொடுக்கப் படும் வரதட்சணையோ இல்லை நகைகளோ அல்லது விலை உயர்ந்த பாத்திர பண்டங்களோ பெரியதாய்க் கருதிக் கொடுப்பதில்லை. அவர்கள் சக்திக்கு உட்பட்டுக் கொடுக்கவும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம். இதை ஒரு பெரிய விஷயமாய்க் கருதுவதில்லை. பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதுமே முக்கியமாய்க் கருதப்படுவதோடு வைதீக சம்பிரதாயங்களுமே முக்கியமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. திருமணம் முடிந்ததுமே பெண் மணமகன் வீட்டிற்கு வாழ வந்து விடுவதில்லை. தற்காலங்களில் பள்ளிப் படிப்பு முடிந்ததுமே பெரும்பாலான திருமணங்கள் நடந்தாலும் பின்னர் மேலே படிக்க விரும்பினாலும் அங்கேயே உள்ளூர் கல்லூரிகளிலேயோ பல்கலைக் கழகத்திலேயோ படிக்க அனுமதிக்கப் படுகின்றனர். பல தீட்சிதர்களின் பையன்களும் பெண்களும் பல்கலைக் கழகப்பட்டப் படிப்பு பட்ட மேற்படிப்பு முனைவர் பட்டங்கள் என்று சர்வ சாதாரணமாய்ப் பெற்று இருக்கின்றதையும் கண்கூடாய்க் காணமுடியும். சிதம்பரம் கோயில் சிவனுக்கு என்று இருக்கும் கோயில்கள் அனைத்திலும் மிகவும் முக்கியமானதாய்ச் சொல்லப்படுவதன் காரணமே அது இதயப் பகுதியில் இருப்பதால் தான். ஈசனே அங்கே ஆடும் நடனம் ப்ராணாயாம நடனம் என்று தஹரவித்யா கூறுகின்றது. நடராஜரின் ஊன்றிய பாதம் ப்ராணப்ரதிஷ்டையைக் குறிப்பதாயும் சொல்லுகின்றனர். ப்ரணவ சொரூபத்தில் ஆடும் நடராஜரின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு குறிப்பும் இந்த உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஏற்கெனவே ஐந்தொழில்களையும் புரிகின்றார் என பார்த்தோம். டமருகம் பொருந்திய கரம் சிருஷ்டியையும், அபயம் அமைந்த கரம் ஸ்திதியையும், அக்னி ஏந்திய கை ஸ்ம்ஹாரத்தையும், முயலகன் முதுகில் ஊன்றிய வலத்திருப்பாதம் திரேதானம் என்னும் மறைத்தலையும் குஞ்சித பாதம் என்னும் இடத்திருப்பாதம் அனுக்ரஹத்ட்தையும் செய்கின்றது என்பதையும் பார்த்தோம். அவரின் டமருகத்தின் ஓசையில் இருந்து ப்ராணிகளின் அழைப்பும் அபயஹஸ்தம் காத்தலையும் அக்னி ஹஸ்தம் ஸத்யப்ரமாணத்தையும் தொங்கவிட்டிருக்கும் மற்றொரு கரம் சுட்டிக் காட்டுதலையும் குஞ்சிதபாதம் அபேதானந்த முக்தியையும் சுட்டிக் காட்டுகின்றது. அபயஹஸ்தம் ஆசார்ய பாவம் ஸ்வரூபத்தையும், டமருக் ஒலி மஹா வாக்ய உபதேசத்தையும் அக்னி ஹஸ்தம் அஞ்ஞான நிவர்த்தியையும் குஞ்சிதபாதம் நித்யானந்தப்ராப்தியையும் கொடுப்பதாய் ஆனந்த தாண்ட உண்மை கூறுகின்றது. ஈசனின் சர்வ அவய ஸ்வரூபம் ஓங்காரத்தைச் சுட்டிக் காட்டுகின்றது என்பதையும் கண்டோம். அக்னி ஹஸ்தம் "ந" காரத்தையும் பாதாம் புஜங்கள் "ம" காரத்தையும் லம்ப ஹஸ்தம்(தொங்கவிடப்பட்டிருக்கும் கரம்) "சி" காரத்தையும், டமருக ஹஸ்தம் "வா" காரத்தையும் அபய ஹஸ்தம் "ய" காரத்தையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறு ஈசன் பல்வேறு தொழில்களையும் புரிந்து கொண்டு இடை விடாது சந்திரனின் சம்பந்தம் பெற்ற இடாநாடியின் உதவியைக் கொண்டு இடது நாசியில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டும் சூர்ய சம்பந்தம் பெற்ற வலது நாசியால் மூச்சை வெளிவிட்டுக் கொண்டும் அந்த மூச்சை உள்ளிழுத்து கும்பகம் செய்து ப்ராணப்ரதிஷ்டா காலத்தில் வலக்கால் கட்டை விரலால் ப்ராணபிரதிஷ்டை செய்து கொண்டும் தன் ஆனந்தத் தாண்டவத்தை ஆடி வருகின்றார். இந்த உலகம் இயங்குகின்றது. நாமும் இயங்குகின்றோம். அனைத்தும் அவனே. எல்லா உயிர்களிலும் நிறைந்து நின்று மூச்சுக் காற்றாக நின்றும் வெளி வந்தும் உள்ளிழுத்தும் அனைவரையும் இயக்கும் அந்த ஆட வல்லான் திருவடிப் பாதங்களுக்குச் சரணம் செய்து இதை முடிக்கின்றேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

இந்தத் தொடரை எழுத எனக்குப் பெருமளவு துணையாக இருந்து அவ்வப்போது வேண்டிய தகவல்களையும், சிதம்பரம் பற்றிய நினைவுகளையும், கோயில் பற்றிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட என் நண்பர்களுக்கு தான் இது சொந்தம். மற்றும் எனக்கு வேண்டிய தகவல்களை நான் தேடி எடுத்துக் கொள்ள சிதம்பரம் கோயிலின் தீட்சிதர்களுக்கும் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்துக் கொண்டு இந்த எழுத்தை அவர்களுக்கே காணிக்கை ஆக்குகின்றேன். இவற்றைத் தவிர முக்கியமாய் பேராசிரியரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான திரு நாகசாமியின் சில குறிப்புகளைக் கொடுத்து உதவினார்கள். திரு திவா தி.வாசுதேவன் அவர்கள் சிதம்பரம் பற்றிய இரு புத்தகங்கள் கொடுத்து உதவினார். சரித்திரத் தகவல்களும் அவ்வப்போது நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து பார்க்கப்பட்டது. நெய்வேலி நடராஜ ஸ்வாமி தீட்சிதர், தொலைபேசி உரையாடல் Sambanatesan Umanathan  மூலமும் ராஜா தீட்சிதர் அவர்கள் எழுதிய திருவாதிரை பற்றிய குறிப்புகள் அனைத்தின் உதவியாலுமே இதை எழுத முடிந்தது. அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்குகின்றேன்.
  
            {சிதம்பர ரகசியம் முடிவுற்றது}

பொறுமையாய்ப் படித்த அனைவருக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

பெரியவா கடாக்க்ஷம் பரிபூர்ணம்
             ॐ பெரியவா சரணம் ॐ
பதஞ்சலி முனிவர் {போனஸ்}

இவர் பிரம்ம தேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரிமகரிஷிக்கும் மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.இத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்குநேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார் திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம்என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன்.பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி,வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்றுபதஞ்சலி கூறினார்.பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும்எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார்.படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர் பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர்சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரேசப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரேபக்தியுடன் வணங்கும் எமக்குநல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரேபதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும் பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
3. ஒளிமயமானவரே போற்றி!
4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
5. கருணாமூர்தியே போற்றி!
6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
7. பூலோகச் சூரியனே போற்றி!
8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
10. இன்மொழி பேசுபவரே போற்றி!
11. இகபரசுகம் தருபவரே போற்றி!
12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.நிவேதனம்: இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:
1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்
2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்
3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்
4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்
5. நன் மக்கட்பேறு உண்டாகும்
6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்
7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்
8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்
9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும். பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.