வியாழன், 24 ஏப்ரல், 2014

இப்படியும் தர்மம் செய்தாங்க!

உஞ்சவ்ருத்தி என்றால் பிச்சை ஏற்பது, அல்லது வீடு, வீடாகச் சென்று அரிசி போன்றதானியங்களை பெற்றுக் கொள்வது. தர்ம சாஸ்திரம் கூறும் உஞ்சவிருத்தி இதிலிருந்து வேறானது. அந்தக் காலத்தில் வயலில் நெல்லை அறுத்து, களத்து மேட்டில் குவிப்பார்கள். நெற்கதிரை அடித்து நெல்லை மலைபோல ஒன்று திரட்டி மூடையாக கட்டுவார்கள். எடுப்பதெல்லாம் கொடுப்பதற்கே என்னும்சிந்தனையோடு களத்தில் சிறிது அளவு நெல்லை விட்டுச் செல்வர். இதை தர்மம் செய்வதாகக்கருதினர். சோற்றுக்கு வழியில்லாத ஏழைகள் களத்தில் சிதறி கிடக்கும் நெல்லை எடுத்துச் செல்வர். உஞ்சவிருத்திஎன்பதற்கு சிதறிக் கிடப்பதை ஒன்று திரட்டுவது என்றும் பொருள் உண்டு.

ஸ்ரீயும் வேணும்! ஹ்ரீயும் வேணும்!!

பிறருக்கு தானம் அளிக்கும் போது மனசு ஸ்ரீயாக(லட்சுமிகரமாக) மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும். அப்போது ஹ்ரீயும் (வெட்கமும்) உண்டாக வேண்டும்என்கிறது தைத்திரீயோபநிஷத் என்னும் நூல். தானம் கொடுப்பவன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது சரி. ஏன் வெட்கப்பட வேண்டும் என்றுஎண்ணலாம். இந்த வெட்கம், கவுரவக் கூச்சத்தால் உண்டாவது.தன்னை நாடி வந்தவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்க முடியவில்லையே என்பது ஒருபுறம். தானம் செய்வது வெளியில் நாலுபேருக்குத் தெரிந்து பாராட்டத் தொடங்கினால், நான் என்ற எண்ணம் வந்து விடுமே என்பதுமறுபுறம். அதனால், தானம்கொடுக்கிறோம் என்று கருதாமல். நம்மை இவ்வாறு கொடுக்க வைத்த கடவுளுக்கு நன்றி என்றஉணர்வோடு தானம்அளிக்க வேண்டும்.
உ போட்டு ஏன் எழுதுகிறோம்?

பிரணவ மந்திரமான ஓம் என்பது அ, உ, ம என்னும் மூன்று எழுத்துக்களின் கூட்டாகும். அ என்பது படைத்தலையும், உ என்பது காத்தலையும், ம என்பது அழித்தலையும் குறிக்கும். இதனை அகார, உகார, மகார சேர்க்கை என்று குறிப்பிடுவர். இந்த மூன்றிற்கும் இதயமாக நடுவிலுள்ள உ என்பதே பிள்ளையார் சுழியாக உள்ளது. இதயமே மனிதனைக் காக்கிறது. இதயம் நின்று போனால் ஜீவன் போய் விடும். அதுபோல், தன்னை நம்பி வந்தவரை காப்பது தான் என் கடமை என விநாயகர் காத்தல் எழுத்தான உ வைத் தனக்குரியதாக கொண்டிருக்கிறார். அதனால் தான், எதை எழுத ஆரம்பித்தாலும், உ என்ற பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம். அம்பிகைக்குரிய தேவி பிரணவம் எனப்படும் உமா என்ற மந்திரத்திலும் உ என்பது முதல் எழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
குளிச்சா புண்ணியம் போச்சு!

காவிரி, கங்கை போன்ற நதிகள், ராமேஸ்வரம், சேதுக்கரை, திருச்செந்தூர் போன்ற கடல்களில் புனித நீராடிவிட்டு, மீண்டும், தங்கியிருக்கும் விடுதியிலோ (லாட்ஜ்), வீடுகளிலோ குளிக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், அந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம்கிடைக்காமல் போய்விடும். புனித நீராடல் மட்டுமில்லாமல், மந்திரச் சடங்குகளுக்கும் இது பொருந்தும். ஹோமம், யாகம் போன்றவற்றில் கலந்து கொண்டபின், வீட்டுக்கு வந்து குளித்தாலும் புண்ணியம் இல்லை.
பலிபீடத்தை தொடாதீர்!

கோயிலில் கோபுரவாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு பலிபீடம் என்று பெயர். நித்யபூஜையின் முடிவில், பலிபீடத்தில் கோயிலிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாகஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்.
அரசுத்தேர்வில் வெற்றி பெற எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

தேர்வில் வெற்றி பெற, முதலில் அன்றாடம் நன்கு படித்து பயிற்சி பெறுங்கள். அறிவு வளம் பெற சரஸ்வதியை வழிபடுங்கள். பயிற்சியும்,வழிபாடும் மனோபலத்தை அளிக்கும். பிறகு வெற்றிக் கனியை எளிதில் பறித்து விடலாம். வெற்றி பெற வழிபாடு மட்டுமே போதும் என்றால் புத்தகம், பேனா இவையெல்லாம் தேவையில்லாமல் போய் விடுமே!
நோய் நொடி நீங்க எந்த ஹோமத்தை வீட்டில் நடத்தலாம்?

தன்வந்திரி ஹோமம் செய்ய வேண்டும். மூலிகைப்பொருட்களால் இந்த ஹோமத்தைச் செய்வது நல்லது. கூடவே, மிருத்யுஞ்ஜய ஹோமமும் செய்யலாம்.
வடை மலை எந்தெந்த கடவுளுக்கு உகந்தது?

ஆஞ்சநேயருக்கு மட்டுமே வடைமாலை சாத்தும் வழக்கம் இருந்தது. இப்போது பைரவர், துர்க்கை போன்ற தெய்வங்களுக்கும் வடைமாலை அணிவிக்கிறார்கள். ஆபரணம் அணிவிப்பது போல பழம், காய்கறி, பட்சணம் போன்றவற்றாலும் அலங்கரித்து வழிபடும் முறையில் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.
மந்திரம் கால்... மதி முக்கால் என்பது உண்மையா?

முயற்சியே செய்யாமல் மந்திரத்தில் மாங்காய் விழும் என்று வீணே இருப்பவர்களை எப்படியாவது திருந்தச் செய்ய இந்த முதுமொழி ஏற்பட்டது. மதி என்றால் அறிவு. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து முயற்சிக்கும் போது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதே மந்திரம். அதாவது முயற்சியே செய்யாமல் மந்திரத்தை மட்டும் நம்பி சோம்பேறிகளாகும் பலருக்கு சொல்லப்பட்டதே இந்த முதுமொழி. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருக்குறளும் இங்கு சிந்திக்கத்தக்கது.
கோயிலில் நீராடச் செல்லும் போது வீட்டில் நீராடி விட்டுத் தான் போக வேண்டுமா?

குளிப்பது என்பது வேறு. புனித நீராடல் என்பது வேறு. சோப்பு முதலியவற்றைஉபயோகித்து அழுக்கைப் போக்கிக் கொள்ள புண்ணிய தீர்த்தங்கøளைப் பயன்படுத்தக் கூடாது. கோயில் குளத்தில் இறைவன் திருநாமத்தைஉச்சரித்தவாறு மூழ்கி எழ வேண்டும். இதற்கே புனித நீராடல் என்று பெயர். கோயில் குளத்தில் பல் துலக்குவது,குளிப்பது, துணி துவைப்பது போன்ற அன்றாடக் கடமைகளைச் செய்வது பாவமாகும். பலரும் புனித நீராட வேண்டிய தீர்த்தத்தை மாசுபடுத்தாமல் இருப்பது அவசியம். கோயிலில் நீராடும் முன் வீட்டில் குளித்து விட்டுச் செல்வது அவசியம்.
இன்று பறித்தாலும் என்றும் பூஜிக்கலாம்!

தெய்வங்களுக்கு பூஜை செய்வதற்குரிய மலர்கள், வீட்டுத் தோட்டத்தில் பூஜைநேரத்தில் பறித்ததாக இருப்பது ரொம்பவும் விசேஷம். இதற்காக பெரிய இடமெல்லாம் தேவையில்லை. வீட்டில் ஒரு தொட்டியை வைத்து, ஏதேனும் ஒரு மலர்ச்செடி வளர்த்தாலே போதும். இந்தப் பூக்களை பறித்த அன்றேசூட்டினால் முழு பலனும் கிடைக்கும். மறுநாள் சூட்டினால் சுமாரான பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். குளத்தில் பூக்கும் தாமரை, அல்லிப் பூக்கள் மற்றும் வில்வம், துளசி, விபூதிப் பச்சிலை, மருக்கொழுந்து, வெள்ளி, தங்கப் பூக்களுக்கு தோஷம் கிடையாது. அதாவது, இவற்றை எப்போது பறித்தாலும், குறிப்பிட்ட நாள் என்று இல்லாமல் எத்தனை நாள் கழித்து வேண்டுமானாலும் சூட்டலாம். அதே போல, கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளின் தீர்த்தத்திற்கும் தோஷம் கிடையாது. இந்த தீர்த்தங்களை எப்போது வேண்டுமானாலும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
ழுகையை ஆப் பண்ணுங்க!

சந்தியா என்றால் சேர்க்கை அதாவது சந்திக்கும் நேரம் என்று பொருள். பகலும், இரவும் சந்திக்கும் மாலையிலும், இரவும், பகலும் சந்திக்கும் காலையிலும் வரும் இரண்டு நாழிகையை (48 நிமிடம்) சந்தியாகாலம் என்பர். சூரிய உதயம், மறைவுக்கு முன்வரும் 36 நிமிடமும், சூரிய உதயம், மறைவுக்குப் பின்வரும் 12நிமிடமும் இதில் அடங்கும். இந்த சமயத்தில் வாசல் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆண்கள் சந்தியாவந்தனம், பூஜையில் ஈடுபட வேண்டும். லட்சுமி வீட்டுக்கு வரும் இந்த நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஜெபிப்பது சிறப்பு. இந்த சமயத்தில் சாப்பிடுவதோ, தூங்குவதோ, வீண் பேச்சு பேசுவதோ கூடாது என்கிறது சாஸ்திரம். குறிப்பாக டிவியில் வரும் அழுகைத் தொடர்களைப் பார்க்காமல் ஆப் செய்து விட வேண்டும். இன்று முதலாவது சந்தியா நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்களேன்!