புதன், 30 அக்டோபர், 2013

02.பூதத்தாழ்வார்

பயோடேட்டா

பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் :  7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தெரியவில்லை, (ஐப்பசி வளர்பிறை நவமி திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

மகாபலிபுரத்தில் மல்லிகைப்புதரின் நடுவில் நீலோத்பவ மலரின் பெருமாளின் கவுமாதிதி என்னும் கதையில் அம்சமாக பிறந்தார் பூதத்தாழ்வார். இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார். இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர். பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார். பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார். மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை, பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி, திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார். பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார்.பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (5)

1. திருநீர்மலை (அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2. திருவிடந்தை (அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்)
3. திருக்கடல் மல்லை (அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்)
4. அத்திகிரி (அருள்மிகு வரதராஜப்  பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
5. திருத்தங்கல் (அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்)

பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)

பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)

பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)

பூதத்தாழ்வார், பெரியாழ்வார்,  திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)

1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)

பூதத்தாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

பூதத்தாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
01.பொய்கையாழ்வார்

பயோடேட்டா

பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !

இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார். வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர். இவர்  காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார்.

ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு      சேவை செய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு, சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)

பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)

1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்  திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
01.வான்மீகர்

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.
02.உரோமரிஷி

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார்.  புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம்  1000
உரோமரிஷி சூத்திரம்  1000
உரோமரிஷி ஞானம்  50
உரோமரிஷி பெருநூல்  500
உரோமரிஷி குறுநூல்  50
உரோமரிஷி காவியம்  500
உரோமரிஷி முப்பு சூத்திரம்  30
உரோமரிஷி இரண்டடி  500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி,
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்:

இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்...

1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்,
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.
03.பதஞ்சலி முனிவர்

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும், பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.

இத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார், திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன்.  உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம் என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன். பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்று பதஞ்சலி கூறினார்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள்  பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார்.

படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர்  பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்

ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல்  பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும், பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
3. ஒளிமயமானவரே போற்றி!
4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
5. கருணாமூர்தியே போற்றி!
6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
7. பூலோகச் சூரியனே போற்றி!
8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
10. இன்மொழி பேசுபவரே போற்றி!
11. இகபரசுகம் தருபவரே போற்றி!
12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம்  பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்: இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.

பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:
1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்
2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்
3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்
4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்
5. நன் மக்கட்பேறு உண்டாகும்
6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்
7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்
8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்
9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும்.

பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.
04.நந்தீஸ்வரர்

நந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 நாள் ஆகும்.
05.மச்சமுனி

மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ஆகும்.
06.கமலமுனி

கமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ஆகும்.
07.தன்வந்திரி

தன்வந்திரி  முனிவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 32  நாள் ஆகும்.
08.அகப்பேய் சித்தர்

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளைத் தேடி அலைந்தது.

மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் தரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக் கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரியபல மந்த்ர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்திரைவாழ்த்தி விட்டு வியாசர் மறைந்தார், மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும் தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை எழுதினார்.

அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நங்சுண்ணவும் வேண்டாம் நாதியற்று திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான் என்பது இவரின் வாக்கு.

இவர் இயற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை

அகப்பேய் சித்தர் பாடல் 90
அகப்பேய் பூரண ஞானம்
சித்தி அடைந்த திருத்தலம்- திருவையாறு
இலை உடையுடன் கலை உருவாய்
காட்சி தரும் காரியசித்தி ஸ்வாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில்
பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை
இசைகின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே

அகப்பேய் சித்தர் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் ஸ்வாமியின் படத்தை வைத்து, அப்படத்திற்கு முன்பு மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருகக்கூற வேண்டும். பின்பு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களை காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தை போக்குபவரே போற்றி!
7. சங்கீதப்பிரியரே போற்றி!
8. சூரியன், சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூஜை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்குக் காட்சி அளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான, ஓம் அகப்பேய் சித்தரே போற்றி என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.

பின்பு நிவேதனமாக இளநீர்(வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பால் பழம் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூறி வேண்ட வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ அகப்பேய் சட்டமுனி ஸ்வாமிகள் பூஜை பலன்கள்:

இவர் நவக்கிரஹத்தில் குரு பகவானால் பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்

1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அகலும்
2. பணப்பிரச்சனை, புத்திரபாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சனை போன்றவை அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
4. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,
5. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை வழக்குகள் அகலும்.
6. அரசாங்கத்தால் பிரச்சனை, அரசாங்க அதிகாரிகளுக்குள்ள பிரச்சனை நீங்கும்,
7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.
8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்

இவரை பூஜிக்க சிறந்தநாள் வியாழக்கிழமை ஆகும்.
09.வல்லபசித்தர்

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.

அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.

மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள். அவளது விருப்பம் அவரை மிகவும் கவர்ந்தது. அவர் அவளிடம், மகளே! கலங்காதே. உன் விருப்பம் விரைவில் நிறை வேறும். உன் வீட்டிலுள்ள பாத்திரங்களை எடுத்து வா. சிலைசெய்ய நான் வகை செய்கிறேன், என்றார்.அவள் அந்த சோகத்திலும் நகைத்தாள். சுவாமி! என்னிடம் பித்தளையும், செம்பும், சிறு வெள்ளி பாத்திரமுமே உள்ளன. இதை விற்றால் வெற்றிலை வாங்கக்கூட பணம் கிடைக்காதே, என்றாள். மகளே! நான் சொல்வது உனக்குப் புரியவில்லை. பாத்திரங்களை என் முன்னால் எடுத்து வை. நான் அவற்றில் திருநீறு தூவுகிறேன். இன்றிரவு, அவற்றை தீ மூட்டி அதற்குள் தூக்கிப் போடு. அவை அனைத்தும் என்ன எடை இருக்கிறதோ, அதில் பாதியளவுக்கு தங்கமாக மாறிவிடும். அதைக் கொண்டு நீ சிலை செய்து விடலாம். சாதாரண சிலை வடிக்க இருந்த நீ, உன் பெயரிலுள்ள பொன்னைப் போல, பொன்னாலேயே சிலை வடித்து விடலாம், என்றார். அடியவரின் வாக்கை சிவவாக்காக கருதிய பொன்னனையாள், பாத்திரங்களை எடுத்து வைத்தாள். அவர் திருநீறைத் தூவினார். அவள் அடியவரிடம், சுவாமி! தாங்கள் இன்று இரவு என் வீட்டிலேயே தங்க வேண்டும். பாத்திரங்களை நெருப்பில் போடும்போது, நீங்களும் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும், என்றாள். தாதியின் பேச்சை மறுத்த அடியவர், அம்மா! சிவனடியார்கள் யார் வீட்டிலும் இரவு நேரத்தில் தங்குவதில்லை. நான் மதுரைக்கு புறப்படுகிறேன். அங்குள்ள ஆலயத்தில், சோமசுந்தரக் கடவுளின் பிரகாரத்தில் தங்கியிருப்பேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் அங்கு வா, எனச் சொல்லி கிளம்பி விட்டார். பொன்னனையாள் அன்றிரவில் பாத்திரங்களை நெருப்பில் போட்டாள். என்ன ஆச்சரியம்!

தீயிலிட்ட பாத்திரங்கள் உருகி பொன் மட்டும் வெளிப்பட்டது. தீ அணைந்ததும், பொன்னை வாரி எடுத்த பொன்னனையாள், அதை ஒரு சிறந்த சிற்பியிடம் ஒப்படைத்து,சிவனின் உற்சவர் சிலையை வடிக்கச் சொன்னாள். அந்தச்சிற்பியும் அழகிய சிலை வடிவமைத்தார். அதைப் பார்த்த அவளது கண்களில் ஆனந்தக்கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. சிலையின் அழகில் சொக்கிப்போன அவள், அதன் மேல் ஆசை கொண்டவளாய், சிலையில் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டாள். தன் வீட்டுக்கு வந்து, இந்த அதிசயம் நிகழக்காரணமாக இருந்த சிவனடியாரிடம் சிலையைக் காட்டுவதற்காக எடுத்துக்கொண்டு, மதுரை சென்றாள். இதனிடையே மதுரைக்கு வந்த அந்த அடியவர்,நகர வீதிகளில் அலைந்து திரிந்தார். அப்போது, அவர் ஒரு ஆணை பெண்ணாக்கினார். ஒரு முதியவரை இளைஞனாக்கினார். இரும்பை தங்கமாக்கினார். பிறவியிலேயே பேசாத ஒருவனை பேச வைத்தார். ஊசியை தரையில் நிறுத்தி, அதன் மேல் கால் கட்டை விரலை வைத்து நடனமாடினார். இவரது சித்து வேலைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஊரெங்கும் இவரைப் பற்றி எழுந்த பேச்சு, அப்போது மதுரையை ஆண்ட அபிஷேகப் பாண்டியனையும் எட்டியது. சித்தரை அழைத்து வர ஆட்களை அனுப்பி வைத்தான். என்னைப் பார்க்க வேண்டுமானால், உன் மன்னனை இங்கே வரச்சொல், என சொல்லிவிட்டார் சித்தர்.

மன்னனும் வந்து பார்த்தான். அவரைப் பற்றி அவன் அவரிடமே கேட்டான். என்னை எல்லாம் வல்ல சித்தர் என்று நீ அழைக்கலாம். நானே ஆதியும், அந்தமும் ஆவேன்,என்றார். சித்தரே! உம் சித்து வேலைகளை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீரே கடவுள் என்பதைப் போல் பேசுகிறீரே! எங்கே! இந்தக் கோயிலில் இருக்கும் கல்லால் செய்யப்பட்ட இந்த யானை, உம் சக்தியால் கரும்பு தின்னுமா? என்று கேட்டான். ஒரு கட்டு கரும்பை வரவழைக்கச் சொன்னார் சித்தர். கல்யானையின் முன்னால் போட்டார். சாப்பிடு என கண்ஜாடை காட்டினார். அம்மட்டிலே அது உயிர் பெற்று எழுந்து சாப்பிட ஆரம்பித்து விட்டது. மன்னன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அவனுக்கு புத்திர பாக்கியம் இல்லை. சித்தரிடம் தன் குறையைச் சொன்னான். அடுத்த ஆண்டிலேயே ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானான். இப்படி பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த சித்தரைக் காண வந்த பொன்னனையாள், மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி விட்டு, பிரகாரத்தில் இருப்பதாகச் சொன்ன அடியவரை தேடி அலைந்தாள்.

துர்க்கை சன்னதி அருகில், ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரை உற்று நோக்கிய போது, அவள் வீட்டுக்கு வந்த அடியவர் தான் என்பதில் சந்தேகமில்லாமல் போயிற்று. அவரை வணங்கிய அவள், சுவாமி! என்னை நினைவிருக்கிறதா? தாங்கள், சில மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு அமுதுண்ண வந்திருந்தீர்கள். அப்போது, சிவனின் சிலை செய்யும் என் லட்சியத்தை வெளியிட்டேன். ஞாபகப் படுத்திப் பாருங்கள், என்றாள். ஓ! பொன்னனையாளா? நலமாக இருக்கிறாயா? உன் ஆசை பூர்த்தியாகி விட்டதா? என்றார் ஏதுமறியாதவர் போல.அவள் அந்தச்சிலையை அவர் முன்னால் எடுத்து வைத்தாள். பார்த்தாயா! நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம். நீ, நான் சொன்னதை நம்பி பாத்திரங்களை தீயில் இட்டிருக்கிறாய். நினைத்ததை சாதித்து விட்டாய், என்றதும், சுவாமி, தாங்கள் யார்? தங்கள் பெயர் என்ன? தாங்கள் துறவு மேற்கொண்ட கதையை எனக்குச் சொல்ல வேண்டும், என்றாள் பொன்னனையாள். பெரியவர் சிரித்தார். எனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக அழைப்பார்கள். சிலர் சிவனே என்பார்கள். சிலர் பரமசிவா என கூப்பிடுவார்கள். இருந்தாலும், இந்தக் கோயிலில் உள்ளவர்கள் சுந்தரேசா என்பார்கள். ஆனால், இந்த எளிய மானிடன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் வல்லபன்,என்றார். அவள் அவரது பாதத்தை மீண்டும் நமஸ்கரித்து, அவரைச் சுற்றிலும் தான் கொண்டு வந்த பூக்களால் பந்தல் போல் அலங்கரித்தாள். அந்த சமயத்தில், அவர் தியானத்தில் இருந்தார். நீண்டநேரம் அப்படியே இருக்கவே, அவரிடம் விடை பெறுவதற்காக, தியானத்தைக் கலைக்க முற்பட்டாள் பொன்னனையாள். ஆனால், அவர் எழவே இல்லை. அப்படியே கற்சிலையாக மாறி விட்டார். அவள் அழுது தீர்த்தாள்.

சுவாமி! தங்களை வணங்க வந்தேன். தங்களையே எங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று, இச் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தேன். தாங்களோ கல்லாய் சமைந்து விட்டீர்களே! இனி,நான் என்ன செய்வேன்? என அவர் மீது விழுந்து கதறினாள். அப்போது அசரீரி ஒலித்தது. மகளே! கலங்காதே. உன் வீட்டுக்கு வந்த நானே சிவன். சித்தராய், இப்பூவுலகில் அமர்ந்து கருணை செய்யவே வந்தேன். மதுரையம்பதியில், நான் இதே பிரகாரத்தில் சித்தராய் இருப்பேன். எனக்கு நீ பூப்பந்தல் இட்டு அலங்காரம் செய்ததைப் போல், யாரெல்லாம் எனக்கு பூப்பந்தல் வழிபாடு செய்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் நடக்காது என ஒதுக்கி வைத்த செயல் களைக் கூட வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவேன், என்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் செல்பவர்கள் சுவாமி பிரகாரத்தில், துர்க்கை சன்னதியை ஒட்டியுள்ள வல்லப சித்தரை தரிசிக்கலாம். சன்னதியில் தியானகோலத்தில் இவர் அமர்ந்திருப்பார். இப்போதும் பூப்பந்தல் வழிபாடு நடக்கிறது. பூக்கூடார வழிபாடு என்று இப்போது சொல்கிறார்கள். இவருக்கு வல்லபசித்தர் என்ற பெயர் தவிர சிவசித்தர், சுந்தரானந்தர் என்ற பெயர்களும் உண்டு. குழந்தையில்லாத பெண்களும், கணவனைப் பிரிந்திருக்கும் பெண்களும், கல்வியில் முதல்நிலைக்கு வர வேண்டும் என விரும்பும் மாணவர்களும் இந்த சித்தரை வணங்கி பூக்கூடாரமிட்டு வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.

நூல்:

சந்தரானந்தன் வைத்திய திரட்டு
சந்தரானந்தர் விஷ நிஷவாணி
சந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சந்தரானந்தர் கேசரி
சந்தரானந்தர் சித்த ஆனம்
சந்தரானந்தர் தீட்சா விதி
சந்தரானந்தர் பூசா விதி
சந்தரானந்தர் அதிசய காரணம்
சந்தரானந்தர் சிவயோக ஞானம்
சந்தரானந்தர் மூப்பு
சந்தரானந்தர் தண்டகம்

தியானச் செய்யுள்:

சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன்பாதம் சரணம்

வல்லபசித்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 28 நாள் ஆகும்.