புதன், 23 டிசம்பர், 2020

அருள் மிகு வைத்தியநாதர் திருக்கோவில்

அருள் மிகு வைத்தியநாதர் திருக்கோவில்
 



மூலவர்:வைத்தியநாதசுவாமி
அம்மன்:சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம்:பனை மரம்
தீர்த்தம்:கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் பூஜை :காமிய ஆகமம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:மழுவாடி, திருமழபாடி
ஊர்:திருமழபாடி
மாவட்டம்:அரியலூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 54வது தலம்.

திருவிழா:மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.   
       

சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி-621851. அரியலூர் மாவட்டம்.போன்:+91 04329 292 890, 97862 05278.  
      
பொது தகவல்:இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு. இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை:கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்  
      
நேர்த்திக்கடன்:கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர்.  
      
தலபெருமை:இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. "நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்' என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார்.

இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தலம் இது.பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

தல வரலாறு:திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,""முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்கப்போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள "அயனஅரி' தீர்த்த குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர் வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார். அதன் பின் ஜபேசருக்கும், சுய சாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து சிவகணங்களின் தலைமைப் பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.

அருள் மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்
 



மூலவர் :மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
அம்மன் :கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி
தீர்த்தம் :கோடி தீர்த்தம்
பழமை :3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :திருக்கோகர்ணம்
ஊர் :திருக்கோகர்ணம்
மாவட்டம் :உத்தர் கன்னடா
மாநிலம் :கர்நாடகா
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர்
தேவாரப்பதிகம்

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லாதான் காண் கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் கட்டங்கன் காண்கையிற் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான் காண் ஆடினான் காண்பாணி யாக நின்று மறையோடு மாகீதம் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

திருஞானசம்பந்தர், அப்பர்
தேவாரப்பதிகம்

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லாதான் காண் கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் கட்டங்கன் காண்கையிற் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான் காண் ஆடினான் காண்பாணி யாக நின்று மறையோடு மாகீதம் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
-திருநாவுக்கரசர்,தேவாரப்பாடல் பெற்ற துளுவ நாட்டுத்தலம்.

திருவிழா:மாசி சிவராத்திரியில் 9 நாள் திருவிழா. முதல் நாள் தேர்த் திருவிழாவும் 8ம் நாள் பிரமோற்ஸவமும் நடைபெறுகிறது. கார்த்திகை பவுர்ணமியில் திரிபுரதகன விழா.   
       
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது.அம்மனின் சக்தி பீடங்களில் இது கர்ணபீடமாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 267 வது தேவாரத்தலம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.போன்:+91- 8386 - 256 167, 257 167  
      
பொது தகவல்:கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன.மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது.  பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.

விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் "துவிபுஜ விநாயகராக'க் காட்சிதருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்பர். கோயில் சிவலிங்கவடிவில் ஆதிகோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார்.

பிரார்த்தனை:சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.  
      
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
      
தலபெருமை:நதி வடிவ அம்பிகை: கைலாயத்தில் சிவன் மலை வடிவிலும், அம்பிகை நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும், அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்மனே இங்கு நதியாக ஓடுவதாக கூறப்படுகிறது.

இக்கோயிலின் முன்புறம் நதியும், அதற்கடுத்து மலையும் இருக்கிறது. சிவன் மலையாக வீற்றிருக்கும் தலங்களில், கிரிவலம் மிகவும் விசேஷம். ஆனால், இங்கே நதி இருப்பதால் கிரிவலம் வர முடியாது.

சித்தி தலம் : சிவபெருமான், சுயம்புவாக எழுந்தருளிய தலங்களில் ஒன்று இது. சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பதால் இது ஒரு சித்தி தலமாக விளங்குகிறது. இவரை மகாபலேஸ்வரர் என்கின்றனர். இங்குள்ள அம்மன் "தாமிர கவுரி' எனப்படுகிறாள்.

பிசாசு மோட்சம்: இத்தலத்தில் அதிகளவில் பித்ருபூஜை செய்கிறார்கள். இதனால் முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் சொர்க்கம் செல்வார்கள் என்பதும், பவுர்ணமியன்று இந்த ஆற்றில் நீராடி சிவனை வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்ததற்கு ஈடான பாவம்) விலகும் என்பதும் நம்பிக்கை.

இத்தலத்தில் செய்யப்படும் ஒரு புண்ணிய காரியம் கோடி மடங்கு செய்ததற்கான பலன் தரும். சிவன் இத்தலத்தில் தானே தோன்றியதால் மற்ற சிவத்தலங்களை விட மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். அகத்தியர் இங்கு பூஜை செய்துள்ளார். தேவாரப்பாடல் பெற்ற தலம். மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் "பிசாசு மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது.

ருத்ர பூமி : பிரம்மனின் படைப்பில் அதிருப்தியடைந்த ருத்ரன், பிரம்மாவின் படைப்புக்களை அழிக்க பூதகணங்களை தோற்றுவித்தார். இதையறிந்த விஷ்ணு ""ருத்ரனே! பிரம்மனை மன்னித்தருள வேண்டும். அவரது படைப்புக்களை பிரளய காலத்தில் மட்டும் அழித்து அருள்புரிய வேண்டும். அத்துடன் நீங்கள் இத்தலத்தில் இருந்து வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தந்தருள வேண்டும்,''என்றார். ருத்ரனும் அதை ஏற்றார். அன்றிலிருந்து இத்தலம் "ருத்ரபூமி' ஆனது.

தாமிர கவுரி : ஒருமுறை பிரம்மா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்போது ருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி கவுரி என்ற பெயரில் நதியாக ஓடிக்கொண்டிருந்த பார்வதி அவரது வலக்கையில் தோன்றினாள். பிரம்மா அவளிடம் நீ விரைவில் ருத்ரனின் மனைவி ஆவாய் என்றார். அவளும் ருத்ரரை சந்திக்க சென்றாள். அவரை அடைவதற்காக பக்தியுடன் தாமிர பர்வத மலையில் நதிவடிவில் தவமிருந்தாள். இவளது பக்திக்கு மகிழ்ந்த ருத்ரன் அவளை திருமணம் செய்து கொண்டார்.

இதன்பிறகு அந்த இடம் "வைவாஷிக பர்வதம்' (கல்யாண கிரி) என்று அழைக்கப்பட்டது. அம்பிகை "தாமிர கவுரி' ஆனாள். இந்த நதி கோயிலுக்கு எதிரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆத்மலிங்க பூஜை: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஆத்மலிங்க பூஜை செய்வார்கள். இந்த லிங்கத்தை இராவணனிடமிருந்து விநாயகர் மீட்டுத் தந்தார். அதைத்தான் இப்படிப் பூஜிக்கின்றனர். ஓரடி உயரமுள்ள சாளக்கிரம ஆவுடைமீது சொர்ண ரேகையுடன் நடுவில் குழியோடு இந்த ஆத்ம லிங்கம் காட்சி தருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பீடத்தை அகற்றி பூஜித்து, பக்தர்கள் தரிசனத்திற்கும் வைக்கிறார்கள்.   
       
தல வரலாறு:இத்தலத்தின் வரலாறு, விபீஷணன் ரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை கணபதி தடுத்ததை ஒத்துள்ளது. கணபதியைப் பார்த்தால் பக்தர்கள் தான் தலையில் குட்டிக் கொள்வார்கள். ஆனால், இத்தலத்தில் குட்டு வாங்கிய கணபதி இருக்கிறார். இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட ராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக, கயிலை மலை வந்து, சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான்.

இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம், ""ராவணன் இந்த லிங்கத்தை கொண்டு சென்றால், தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும்,''என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் ராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான்.

ஈசன் இந்த லிங்கத்தை ராவணனிடம் கொடுக்கும் முன், ""ராவணா! நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதை கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராது,''என கூறி அனுப்பியிருந்தார். அவனிடமிருந்து அந்த லிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு, ராவணன் சந்தியாவந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து, கணபதியை அழைத்து,""நீ பிரமச்சாரி வேடத்தில் ராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. ராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் லிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான்.

நீ அவனிடம், லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால், லிங்கத்தை கீழே வைத்து விடுவேன் என்று சொல்,'' என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, ராவணன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண லிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை ராவணனை அழைத்தார்.

அப்படி அழைத்தும் ராவணன் வராத காரணத்தினால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர். சந்தியாவந்தனம் முடித்து வந்த ராவணன், லிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு கணபதியின் தலையில் கோபத்தில் குட்டினான். தன் 20 கைகளாலும் லிங்கத்தை தூக்கி பார்த்தான். முடியாமல் போனதால் அங்கேயே விட்டுவிட்டு இலங்கை சென்றான்.

பிறகு தேவர்கள் தேவசிற்பியை அழைத்து லிங்கத்தை சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவனை மகாபலேஸ்வரர் என்றும், நதிவடிவிலுள்ள அம்பிகையை தாமிரகவுரி என்றும் அழைக்கின்றனர்.

கோகர்ணம்- பெயர் விளக்கம் முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய ருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று அவரை வேண்டினார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு, தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார்.

இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால், அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி, ""இறைவா! தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து, தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள்,''என கெஞ்சினாள்.

இவளது வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து, ""பூமாதேவியே! நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் "ருத்ரயோனி' என்றும், அதற்கு காரணமான நீ "கோ' (பசு) என்றும், உனது காது "கர்ணம்' என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் "கோகர்ணம்' ஆனது. எனவே, இத்தலத்தை "காது துவார தலம்' என்றும் அழைக்கிறார்கள்.  

அருள் மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்

மூலவர்:ஞானபுரீஸ்வரர், இடைசுர நாதர்
உற்சவர்:சந்திரசேகர்
அம்மன்:இமயமடக்கொடி, கோபரத்னாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:மதுரா தீர்த்தம்
ஆகமம் பூஜை :சிவாகமம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருஇடைச்சுரம், திருவிடைச்சுரம்
ஊர்:திருவடிசூலம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு

கானமும் சுடலையும் கற்படு நிலனும் காதலர் தீதிலர் கனல் மழுவாளர் வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் நானமும் புகையொளி விரையொடுகமழ நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர் ஏனமும் பிணையலும் எழில்திகழ்ச் சாரல் இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 27வது தலம்.

திருவிழா:சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு உற்ஸவம்.   
       
தல சிறப்பு:சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 260 வது தேவாரத்தலம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம் - 603 108. திருஇடைச்சுரம், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 44 - 2742 0485, 94445 - 23890  
      
பொது தகவல்:பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தில் வடிவில் அருளுகின்றனர் என்பதால் இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என நம்புகின்றனர். சிவன் மறைந்த குளம் ""காட்சிக்குளம்'' என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.

தலவிநாயகர்: வரசித்தி விநாயகர். கோயிலில் பிரமாண்டேஸ்வரருக்கும், பிரமாண்டேஸ்வரிக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

பிரார்த்தனை:முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தலவிருட்சத்திற்கு வஸ்திரம், மஞ்சள் கயிறு கட்டி வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர்.  
      
தலபெருமை:பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன், அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்' என்றும், அம்பாளை கோவர்த்தனாம்பிகை (கோ - பசு) என்றும் அழைக்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அம்பாள் அமைப்பு: பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக, ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும். சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.

திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு!'' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர். காலில் ஊனம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.

சிறப்பம்சம்: இடைச்சுரநாதரை கவுதமர், பிருங்கி மகரிஷி ஆகியோர் வணங்கிச் சென்றுள்ளனர். மூலவர் மரகத லிங்கமாக கிழக்கு திசை நோக்கி பளபளப்புடன் இருக்கிறார். பிரதான வாயில் தெற்கு பக்கம் இருக்கிறது. தீப ஆராதனையின் போது லிங்கத்தில் பிரகாசமாக ஜோதி தெரிவது சிறப்பு. ஜோதி ரூபனாக சுவாமியை தரிசித்தால் தீய குணங்கள் மறையும், வாழ்க்கை பிரகாசமடையும் என்பது நம்பிக்கை. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் சுவாமியை அழகு மிகுந்தவர் என குறிப்பிட்டுள்ளார். இத்தலத்து தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தெட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார்.

தல வரலாறு:நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏற, ஏற வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான். கையில் தயிர் களையம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை அறிந்து தயிரை பருக கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் நீங்கள் யார்? என்று இடையன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றி கூறினார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன், அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியவில்லை.

இடையனாக இருந்தாலும் அழகு மிகுந்தவனாக இருந்ததைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், "எல்லாம் சிவன் சித்தம்' என்றெண்ணிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, "இடைச்சுரநாதா!'' என்று வணங்கி பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். "இடைச்சுரநாதர்' என்ற பெயரும் பெற்றார்.


அருள் மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோவில்

மூலவர்:ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்
அம்மன்:இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:தேவ, பானு மற்றும் சங்கு தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமீகம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:அச்சுஇறுபாகம், அச்சிறுபாக்கம்
ஊர்:அச்சிறுபாக்கம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பு அனையர்தம் திருவடி தொழுவார் ஊன்நயந்து உருக உவகைகள் தருவார் உச்சிமேல் உறைபவர் ஒன்றலாது ஊரார் வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை உடையார் ஆனையின் உரிவை போர்த்த எம்மடிகள் அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29வது தலம்.
 
திருவிழா:சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.   
       
தல சிறப்பு:ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார். அகத்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் அவருக்கு துவார பாலகர்களாக இருக்கின்றனர். உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியானநந்தி இருக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 262 வது தேவாரத்தலம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்- 603 301. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 44 - 2752 3019, 98423 - 09534.  
      
பொது தகவல்:சிவனின் பிறபெயர்கள்அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். தலவிநாயகர்: அச்சுமுறி விநாயகர் ராஜகோபுரம்: ஐந்து நிலை பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னதியில் இருக்கின்றனர்.
 
பிரார்த்தனை:ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக்குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.
 
நேர்த்திக்கடன்:சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம்.  
      
தலபெருமை:கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் இங்கு வழிபட்டுள்ளனர். விலகிய கோபுரம்: பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான். உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது.

உடும்பு வெட்டுப் பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப்பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார். அவருக்கு இங்கேயே கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு "திரிநேத்ரதாரி' எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார்.

தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன் இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான். நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோயில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்). புரியாத மன்னன் காரணம் கேட்டான். ""உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார். எனவே, உங்களுக்கு காட்சி தந்த "உமை ஆட்சீஸ்வரருக்கு' பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும், "எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு' பிரதான கருவறையுமாக வைத்து கோயில் கட்டினேன்'' என்றார் திரிநேத்ரதாரி. மன்னனும் ஏற்றுக்கொண்டான். சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம். திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது.

பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு. அச்சு முறித்த விநாயகர்: சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகராக' கோயிலுக்கு வெளியே தனிச்சன்னதியில் மேற்கு திசையை பார்த்து அமர்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு ""அச்சிறு பொடி செய்த'' என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை துவங்கியுள்ளார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.
 
தல வரலாறு:பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்துகொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.

தேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்து தேராக்கி அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன துணை வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.

கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனை செல்லவிடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார்.

தந்தை சொல்கேட்ட விநாயகர் தேர் அச்சை சரியாக்கினார். பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமென்பதால் இத்தலம் "அச்சு இறு பாகம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "அச்சிறுப்பாக்கம்' என்றானது. சிவன் "அட்சீஸ்வரர்' என்றும், "ஆட்சிபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.


அருள் மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்

மூலவர்:வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்
அம்மன்:திரிபுரசுந்தரி
தல விருட்சம்:வாழை மரம்
தீர்த்தம்:சங்குதீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கழுகுன்றம், திருக்கழுகுன்றம்
ஊர் :திருக்கழுகுன்றம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே-திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 28வது தலம்.
  


விழா:சித்திரை பெருவிழா - 10 நாட்கள் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இத்திருவிழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர் ஆடிப்பூரம் - அம்பாள் உற்சவம் -10 நாட்கள் - இவ்விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் கிரிவலம்: பௌர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு. திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர்.   
       

சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம். இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 261 வது தேவாரத்தலம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் - 603109, காஞ்சிபுரம் மாவட்டம். போன்:+91-44- 2744 7139, 94428 11149  
      

தகவல்:இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான்.தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
பிரார்த்தனை:இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.தீராத வியாதிகள் தீருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர். இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும் .திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை. சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.  
      

பெருமை:கழு - கழுகு -கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள்.கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்கு திருக்கழுகுன்றம் என பெயர் வந்தது. பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம். சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் வேதமே மலையாக அமைந்த தலம் கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம் சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்தால் தியானம் செய்ய ஏற்ற தலம். இறைவன் காதலித்துறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய தலம் மாணிக்கவாசகருக்கு சுவாமி காட்சி தந்த தலம். என்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம். உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் பரவசமாய் புகழப்பெற்ற தலம். சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம். மார்க்கண்ட முனிவர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது. மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறந்து கொண்டிருப்பதால் சங்கு தீர்த்தம் என பெயர்பெற்றது.

மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் :

1. இந்திர தீர்ததம்
2. சம்பு தீர்த்தம்
3. உருத்திர தீர்த்தம்
4. வசிட்ட தீர்த்தம்
5. மெய்ஞான தீர்த்தம்
6. அகத்திய தீர்த்தம்
7. மார்க்கண்ட தீர்த்தம்
8. கோசிக தீர்த்தம்
9. நந்தி தீர்த்தம்
10. வருண தீர்த்தம்
11. அகலிகை தீர்த்தம்
12. பட்சி தீர்த்தம்

குளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடீய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆதியில் மார்க்கண்டேய மகரிஷி இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது. இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன்  பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார். மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வான். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வான். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை. அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள்.
 
ஸ்தல வரலாறு:பூஷா , விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டி தவஞ்செய்தனர். இறைவன் தோன்றி வரம் தரும்போது மறுத்து சாயுஜ்ஜியப் பதவி தந்து,. இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை கழுகுருவம் அடைக என்ற சாபமிட்டார்.

கழுகுகளாய்ப் பிறந்து சம்பு ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர். தினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம்.

கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள். சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்ததாகவும் அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது.

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

பாஸ்கர ராயர்

பாஸ்கர ராயர்

பாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை இருக்கலாம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார். அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார்.

இவருக்கு வித்யையை <உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வென்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது <உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் <உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பியிருக்க வேண்டும். அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது.

பாஸ்கரராஜபுரத்தில் வெகுகாலம் வசித்து, அம்பாளின் உபாசனையில் திளைத்து, தமது இறுதிக்காலத்தை மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூரில் கழித்த பாஸ்கரராயர், அங்கு தமது 95-வது வயதில் தேவி சரணங்களை சென்றடைந்தார். அவர் காலத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேச்வர் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார். இந்த ஆலயம் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் உள்ள  திருவாலங்காடு அருகே அமைந்துள்ளது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் தலைசிறந்தவரான பாஸ்கரராயர் அம்பாளின் வரப்பிரசாதத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறார். நமது சநாதன வைதீக மார்க்கத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தவர். குப்தவதீ என்னும் தமது சப்தசதீ வியாக்கியானத்தில் ஆதிசங்கர பகவானை வெகுவாகத் தோத்திரம் செய்துள்ளார். பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல எழுதியுள்ளார் என்றும், அவற்றில் பெரும்பகுதி தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவியம், சுருதி, ஸ்மிருதி, புராணம், தோத்திரங்கள், மந்திர சாஸ்திரம் முதலிய துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்களை ஆராய்ந்தோர், இம்மகானுக்குத் தெரியாத வித்தையோ, சாஸ்திரமோ இல்லை என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள். மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்கள் பற்றி அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. மந்திர சாஸ்திரத்திலேயே பதினேழு நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவற்றில் ஒன்றுதான் சௌபாக்ய பாஸ்கரம் என்ற லலிதா சகஸர நாமம் விளக்க உரை நூல். இவர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதியதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள். அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு "சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார். அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர், கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம், மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம், தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது, வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.

பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உ<பாசனை செய்து வந்திருக்கிறார். இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் கூறப்படுவது உண்டு. அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு <உட்கார்ந்திருப்பது வழக்கம். அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். ஆனால், பாஸ்கர ராயர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யமாட்டார். இது அவ்வூர் மக்களுக்கு சற்று வியப்பை ஊட்டியது. சிலர் ஆத்திரமடைந்தார்கள். ஒருநாள் கோயிலில் பாஸ்கர ராயரும் அந்த சந்நியாசியும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், துறவியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதற்கு பாஸ்கரராயரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது பாஸ்கரராயர், இல்லறத் தர்மத்தின்படி தாம் சந்நியாசிக்கு நமஸ்காரம் செய்திருந்தால், அவரது தலை சுக்கு நூறாக உடைந்திருக்கும் என்றும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். பின்னர் அதை நிரூபிப்பதற்காக அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் முதலியவற்றை ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்தார். அடுத்த கணம் அவை மூன்றும் சுக்கு நூறாக உடைந்து சிதறின. அதைக் கண்டதும் அத்துறவி பாஸ்கரராயரின் மகிமையை உணர்ந்தார். பொது மக்களும் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.


மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.

இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார்.

பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம்செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.

பாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர்.

நீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது.

மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. கூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து நின்றார். பாட்டி! உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. உடனே அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது. இதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள் தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார். அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.

ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.


ஸ்ரீபடே சாஹிப்

ஸ்ரீபடே சாஹிப்

விழுப்புரம் - பாண்டிச்சேரி மெயின் ரோட்டில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம். அதாவது கண்டமங்கலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு சுமார் 20 கி,மீ,; பாண்டிச்சேரிக்கும் சுமார் 20 கி. மீ. தொலைவு. இந்தப் பேருந்து தடத்தில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் இறங்கிக் கொண்டு, சுமார் 2 கி. மீ. தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்கிற ஊர் உள்ளது. இங்குதான் ஸ்ரீபடே சாஹிப்பின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தார். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். சாயபு என்பது பொதுவான பெயர். படே என்றால் உயர்ந்த என்று பொருள். உயர்ந்த உத்தமமான மகான் என்கிற பொருளில் இவர் படே சாயபு என்று அழைக்கப்பட்டு வருகிறார். மகான் படே சாஹிப் எவரிடமும் பேசியதில்லை. எப்போதும் மௌனம்தான். தன் வாழ்நாளில் இவர் காத்து வந்த மௌனம், இவருடைய தியானத்துக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. தன் வாழ்வில் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். மகானின் அருள் பெற்றுத் திரும்பிய பலரின் வாழ்வும் ஜகஜோதியாகப் பிரகாசித்தது. இவரது சந்திப்பிலேயே சகாயம் பெற்றார்கள், இவரைத் தேடி வந்தவர்கள்.

ஆசிர்வாதத்தால் நோயாளிகள் குணமடைந்தனர். தீரவே தீராது என்று பலர் அனுபவித்து வந்த வியாதிகள், இவரது ஸ்பரிசத்துக்குப் பின் நிரந்தரமாக நீங்கி விட்டது. ஒருமுறை இவரை கருநாகம் தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார். பக்தர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்றிருந்த வேளையில் சாஹிப்பை தீண்டிய கருநாகம் வந்து விஷத்தை அனைத்தும் எடுத்து விட்டு அவர் பாதங்களுக்கருகில் விழுந்து வணங்கி உயிர் விட்டது. அந்த கருநாகத்திற்கு மோட்சம் அளித்தார் மகான் அவர்கள். மேலும் திருடுவதையேக் குலத்தொழிலாக வைத்திருந்த திருடர்கள் திருந்தினார்கள். மொத்தத்தில், படே சாஹிப்பின் தரிசனம் பெற்று சகல ஜீவ ராசிகளும் பலனடைந்துள்ளன. மகான் அவர்கள் தன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். வியாதியின் அவஸ்தையுடன் தன்னிடம் வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்புவார். இன்னும் சிலருக்குத் தன்னிடம் உள்ள கொட்டாங்குச்சியில் இருந்து நீர் தருவார். நோயின் வீர்யம் அதிகம் இருப்பவர்களிடம் அங்குள்ள கொன்னை மரத்தை அடையாளம் காட்டி, அதைச் சுற்றி வா என்று ஜாடையால் சொல்வார்.

படே சாஹிப்பிடம் வந்தாலே, வியாதிகள் தீர்கின்றன என்ற பேச்சு எங்கெங்கும் பரவி, அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் இவரைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர். படே சாஹிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவருடைய அவதார தினம் எது போன்ற தகவல்கள் தெரியவில்லை, என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது கி.பி. 1868-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி என்கிற குறிப்பு இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. ஆயில்ய நட்சத்திரம். எனவே, இவரது ஜீவ சமாதியில் செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு விசேஷமாக இருக்கும். மகானின் அருளாசி வேண்டி திரளான பக்தர்கள் குவிவார்கள். வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும். தவிர குருவாரம் என்பதால் வியாழக்கிழமைகளிலும், விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பிஸ்கெட், சாக்லெட் மிகவும் உகந்த பிரசாதம் என்கிறார் இந்த ஜீவ சமாதியின் பூசாரி. ஜீவ சமாதிக்கு வருகிற பக்தர்கள் வாங்கி வரும் பிஸ்கெட் மற்றும் சாக்லெட்டுகளை அதிஷ்டானத்தில் வைத்து விட்டு பக்தர்களிடம் தருகிறார் பூசாரி. அங்கு இருக்கும் அனைவருக்கும் அது விநியோகிக்கப்படுகிறது. இன்றைக்கும் தன் ஜீவ சமாதி தேடி வரும் பக்தர்களின் பிணியை - அபூர்வ மருத்துவராக இருந்து தீர்த்து வருகிறார் படே சாஹிப். இவரது தரிசனத்தால் பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சி!


பாணினி மாமுனிவர்

பாணினி மாமுனிவர்

கல்லைப் போல் வறட்சியான மொழி அறிவியலை வாடாத மணமுள்ள மலராக்கியவர் பாணினி. பாணினியின் அஷ்டாத்யாயி, நவமணிகள் நன்கு பதித்த ஒரு பெரிய அணிகலன். 395 சூத்திரங்களில் சம்ஸ்கிருதத்தின் சொல்வளம் முழுவதையும் நுணுக்கமாக அமைத்தார் பாணினி. எந்த மொழியிலும் பெயரும் வினையும் முக்கியமான சொல்வகைகள், ஒரே விகுதி கொள்ளும் பல சொற்கள் ஒரு விதிக்குள்ளே அடங்குவதை பாணினி கண்டார். வகை வகையான விதிகளுக்குள் அடங்கும் இத்தகைய பெயர்ச் சொற்களைக் கூட்டங் கூட்டமாக வகைப்படுத்தினார். பெயர்ச்சொற்களின் இக்கூட்டத்துக்கு, கணபாடம் என்பர், உதாரணமாக நத்யா திப்யோ டக் என்ற சூத்திரத்தால், நதியில் உண்டானது - நாதேயம் என்றாகிறது. இது போல, சம்ஸ்கிருதத்திலுள்ள சொற்கள், 2115 தாதுக்களைக் (வினைவேர்களை) கொண்டு இயங்குவதை பாணினி கண்டார். இவற்றை அவர் பத்துப் பிரிவுகளாகத் தொகுத்தார்; தாதுக்களும் அவற்றின் அர்த்தங்களும் அடங்கிய இத்தொகுதி தாதுபாடம் எனப்படும். பெயர்ச் சொற்களில் வரும் வேற்றுமை விகுதிகளை பாணினி ஒரே சூத்திரத்தில் ஸு என ஆரம்பித்து ப் என்று முடித்தார். அதனால் இதற்கு ஸுப் என்று பெயர். இப்படிப் பல எழுத்துக்களை சூத்திரத்திலிருந்து சுருக்கின் கூறும் முறை ப்ரத்யாஹாரம் என்ப்படும். இப்படி வினை விகுதிகள் எல்லாம் ஒரே சூத்திரத்தில் தி என்று தொங்கி ங் என முடிக்கிறார். அதனால் இதற்கு திங் என்று பெயர். ஸுப்திஙந்தம் பதம். ஸுபதம் என்பது பெயர்ச்சொல்; திஙந்தம் என்பது வினைச்சொல்.

பெயரடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு தத்திதம் என்றும், வினையடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு க்ருதந்தம் என்றும் பெயர். இப்படி சம்ஸ்கிருத மொழியிலுள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்து அறிவியல் முறையில் இலக்கணத்தை அமைத்தவர் பாணினி. அதனால்தான் பதஞ்சலி, பாணினி சூத்திரத்தின் அமைப்பில்தான் என்ன அழகு ! என வியக்கிறார். உழைப்பும் ஆராய்ச்சியும் :  பிற்காலத்தில் வியாகரணத்துக்குத் தம்மையே மக்கள் ஆதாரமாகக் கொள்வார்கள் என்று தமது பொறுப்பை நன்கு உணர்த்த பாணினி, தர்ப்பத்தை அணிந்து தூய கையினராக, கிழக்கு முகமாக அமர்ந்து, ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் பேருழைப்புடனும் அஷ்டாத்யாயியை இயற்றினார் என மஹா பாஷ்யகாரரான பதஞ்சலி குறிப்பிடுகிறார். பாணினி வாக்கு : பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத மொழியை மட்டுமின்றி, பழங்காலக் கல்வெட்டுக்களையும் நாணயங்களையும் போல் பாரதப் பண்பாட்டைப் பற்றியும் அறிவதற்கு முக்கியச் சான்றாகத் திகழ்கிறது. பாணினி தாம் கண்ட ஐநூறு ஊர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த ஊர்கள் அத்தனையும் இன்றும் இருக்கின்றன. பாணினி மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டவர். வாழ்வில் நாம் அன்றாடம் வழங்கும் சொற்களைப் பாணினி விளக்கும் முறை எளிது. பாணினி இலக்கணம், உலகம் கண்ட இலக்கியப் படைப்புகளுள் மிகச் சிறந்தது; பாணினியின் வியாகரணம்உண்மையிலே சமஸ்கிருதத்தின் ஒரு வகையான இயற்கைச் சரித்திரம் என்றார் கோல்ட்ஸ்டுகர்.

அக்காலத்திய பல மொழிகளில் பாணினி வல்லவர்;  பாணினியின் வாக்கு, இன்றும் உலகெங்கும் பெருவழக்காக நீடித்திருந்து, மேலோங்கி வாழ்கிறது - பாணிநீ சப்தோ லோகே ப்ரகாசதே என்று காசிகாகாரர் சொன்னது எவ்வளவு உண்மை ! தம்மையே தந்தவர் : பாடலிபுத்திரத்துக்குப் புறப்பட்ட நாளிலிருந்து தமது இறுதி நாள் வரையில், பாணினி சொல்லுலக யாத்திரிகராகவே வாழ்ந்தார். பல மாணவர்களுக்கு பாணினி பாடம் கூறி வந்தார். அவரது மாணவர்களில் முக்கியமானவர் கௌத்ஸர்.  ஒரு நாள் மாலை, காட்டில் சீடர்களுக்கு பாணினி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நீரருந்த ஒரு புலி ஏரிக்கு வந்தது. புலி வருவதைக் கண்ட மாணவர்கள் மரங்களில் ஏறிக்கொண்டனர். பாணினி புலியைப் பார்த்தார். ஆனால் அவர் அசையவில்லை. அசைவனவும் நிற்பனவுமான இந்த உலகை விழுங்கி ஆட்கொள்ளும் பரம்பொருளே புலியுருவில் நம்மிடம் வருகிறது - அத்தா சராசரக்ரஹணாத் என் அவர் கருதினார். அக்கணத்திலும், புலியைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பற்றி அவர் ஆராய்ந்தார் ! புலிக்கு வ்யாக்ர : என்று பெயர். காட்டு விலங்குகள் எல்லாவற்றுக்குமே மோப்பச் சக்தி உண்டு. புலிக்கு அது சிறப்பாக அமைந்தது. புலி சுற்றிச் சுற்றி வந்து மோப்பம் பிடிப்பதால், வ்யாஜிக்ர தீதி வ்யாக்ர: - வ்யாக்ரம் என்று அதைச் சொல்கிறார்கள் என அவர் கண்டுபிடித்தார். இறக்கும் தறுவாயிலும் உலகுக்கு ஒரு சொல்லின் தன்மையை அவர் உணர்த்திச் சென்றார். பாணினி சிங்கத்துக்கு இரையானதாகப் பஞ்ச தந்திரம் கூறும். பாணினி உடலை உகுத்த தினம் திரயோதசி என்பர். மாதமும் பக்ஷமும் தெரியாமையால், இன்றும் காசி முதலிய இடங்களில் ஒவ்வொரு திரயோதசியையும் வியாகரணம் பயிலாத (அநத்யயன) தினமாக வைத்துள்ளார்கள். மக்கள் அறியாமையுடன் பேசும் சொற்களிலுள்ள குறைகளை, பாணினி புனிதமாக்கி, மங்கலச் சொற்களை வழங்க வைத்து, மக்களின் அறியாமையை அறவே நீக்கினார். அந்த மாமுனி பாணினியை நாம் வணங்குவோம்.


சுத்தானந்த பாரதியார்

சுத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்தர் 11.5.1897 அன்று சிவகங்கையில் ஜடாதரர், காமாட்சி அம்மையாரின் நான்காவது மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன் என்பதாகும். அன்னை மீனாட்சி அம்மனின் பேரருளால் தனது எட்டு வயதில் சுத்தானந்தர் கவிதா சக்தி பெற்றார். சிறிய பாட்டனார் பூர்ணானந்தரிடம் யோகம் பயின்றார். இமாலய மகான் ஞான சித்தர் சுத்தானந்தம் என்ற தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். சிருங்கேரி நரஸிம்ஹ பாரதி சங்கராசார்ய சுவாமிகள் கவியோகி பாரதி என்றும், சுவாமி சிவானந்தர் மஹரிஷி என்றும் சிறப்புச் செய்தனர். ஷீரடி சாய்பாபா ஓமொலி வழங்கினார். பகவான் ரமணர் தன்னறிவு பெறச் செய்தார். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் தொடர்ந்து மோனத்தவம் புரிந்து சாதனை படைத்தார். காட்டுப்புத்தூரிலும், தேவகோட்டையிலும் சுத்தானந்தர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். விடுதலைப் போராட்ட காலத்தில் தலைமறைவுத் தொண்டராக பணியாற்றிய போது திலகர், காந்திஜி, நேதாஜி, வ.வே.சு. அய்யர், சிதம்பரனார், சிவா, பாரதியார், செண்பகராமன், ராஜா மகேந்திர பிரதாப் போன்ற தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். காந்திஜி அறிவுரைப்படி கிராமப்பணி, கதர்ப் பணியாற்றியும் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, உயிர்ப்பலி தடுத்தல் போன்ற சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். இயற்கை, சமரஸ போதினி, பாலபாரதி, ஸ்வராஜ்யா (தமிழ்) ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ், வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு உள்பட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் இயற்றினார். தமது நூல்களில் சுத்தானந்தர் பெரிதும் போற்றியவை பாரதசக்தி மகா காவியம் மற்றும் யோகசித்தி என்ற நூல்களாகும். பாரத சக்தி தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாமன்னன் ராஜராஜன் விருது பெற்றது. அனைத்து சமய நூல்களையும் கற்று அவை காட்டிய நெறிகளைப் பழகி வாழ்ந்தார். ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்ம நேயர் நாம் என்று உலகிற்கு அறிவுறுத்தினார். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் ஆன்மீக, கலாசாரப் பயணங்கள் மேற்கொண்டார். சுத்தானந்தரின் செய்தி சமயோகம். அகவாழ்வு சிறந்த யோகம்; புறவாழ்வு செழிக்க அறிவியல். யோகமும் அறிவியலும் மனித வாழ்வில் இணைந்து விட்டால் மானுடம் தெய்வ நிலை எய்தும்; மண்ணில் விண்ணரசு தோன்றும். 1977-ஆம் ஆண்டு சிவகங்கையில் சுத்தானந்த யோக சமாஜம் என்ற அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். 1979-இல் சுத்தானந்த பாரத தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை சோழபுரத்தில் நிறுவினார். சோழபுரத்தில் தவக்குடில் அமைத்துக் கொண்டு தமது இறுதி காலம் வரை அனைவரிடமும் அன்பு காட்டி வாழ்ந்த கவியோகி சுத்தானந்தர் 7.3.1990 அன்று மகா சமாதி அடைந்தார்.

சிவானந்த ஜோதி

கங்கையைப் போலத் தெளிந்தநல் உள்ளம்,
கருணைமா முகிலெனத் தோற்றம்;
திங்களைப் போல நிலவிடும் சாந்தம்,
தினகரன் போலொளிர் ஞானம்,
தங்கமே யனைய சாதுக்க ளுடனே
சதானந்தக் குடிலில்வே தாந்தச்
சிங்கமே போன்று ப்ரணவ கர்ஜனைசெய்
சிவானந்த ஜோதியைப் பணிவாம்.

உலகெலாம் புகழும் உத்தமச் சோதி,
ஓம் சிவம் ஓம் சிவம் என்றே
சலசலத்தோடும் சாந்தமாச் சோதி
தற்செருக் கிம்மியும் இன்றி,
நிலவிடும் அன்பு நிறைந்ததற் சோதி
நிமலவே தாந்தமாச் சோதி
இலகிடும் வெள்ளி இமாலயச் சோதி
சிவானந்த ஜோதியைப் பணிவோம்.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான பாரத சக்தி மகாகாவியம் அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். இவர் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர் காலம்: 1891-1990 அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் சுத்தானந்தர், ஆயுட்காவியம் என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் பாரத சக்தி மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.


துக்காராம்

துக்காராம்

பதினாறாம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவை சத்ரபதி சிவாஜி ஆட்சி செய்து வந்தார். இக்காலகட்டத்தில் அருளாளராக துக்காராம் அவதரித்தார். இவரை நாமதேவரின் மறுஅவதாரம் என்று குறிப்பிடுவர்.  தேவநகரம் என்னும் ஊரில் மாதவராவ் என்னும் பக்தசீலரின் பிள்ளையாக 1598ல் பிறந்தார். தந்தை செய்து வந்த தானிய வியாபாரத்தை இவரும் செய்தார். கல்வியறிவு பெறாவிட்டாலும் இயற்கையிலேயே இசைஞானம் பெற்றவராக இருந்தார். கவிதை எழுதும் ஆற்றலும் இருந்தது. குடும்பத்தினர் வழிவழியாக பாண்டுரங்கன் மீது பக்திசெலுத்தியதை துக்காராமும் பின்பற்றினார். இசைஞானமும், பக்தி ஞானமும் துக்காராமின் இருகண்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் தானிய வியாபாரம் குறைந்து, துக்காராமின் குடும்பம் வறுமையில் சிக்கியது. வாழ்க்கை கசந்தது. இந்த நிலையிலும், பாண்டுரங்கன் மீதான பக்தி மட்டும் குறையவில்லை. பாண்டுரங்கன் பல அற்புதங்களை இவருடைய வாழ்வில் நிகழ்த்தினார். ஒரு சவுகாரிடம் கடன் பெற்று தானியம் வாங்க வெளியூர் சென்றார். தானியத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவுவேளை.. பலத்தமழை புயல்காற்றுடன் பெய்தது. மாடுகளை அவிழ்த்துவிட்டு ஓரிடத்தில் ஒதுங்கினார். களைப்பாக இருக்கவே தூங்கி விட்டார். மறுநாள் விழித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வண்டி, மாடு, தானியம் எதையும் காணவில்லை. மனவேதனைக்கு ஆளானார். மிகவும் சோர்வுற்ற துக்காராம், பாண்டுரங்கனைக் குறித்து தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரத்தில், பாண்டுரங்கனே துக்காராம் போல் உருவை மாற்றிக்கொண்டு, மாட்டுவண்டியில் புறப்பட்டார். தானிய வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை மனைவி ஜீஜாபாயிடம் கொடுத்துவிட்டு, நீராடக் கிளம்பினார். ஜீஜாபாய் கடனாக வாங்கிய பணத்தைக் கொடுக்க சவுகார் வீட்டுக்குச் சென்றாள். ஆனால் அவர், துக்காராம் நேரில் வந்து கடனைத் திருப்பி கொடுத்து விட்டார், என்று சொன்னதும் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த துக்காராமையும் காணவில்லை.  தியானத்தில் இருந்து கண்விழித்த துக்காராம் வருத்தத்துடன் வீடு திரும்பிவந்தார். வீட்டில் நடந்த விபரங்களை ஜீஜாபாய் மூலம் அறிந்து கொண்ட துக்காராம் ஆச்சரியத்தில் மூழ்கினார்.  தன்னைப் போல வந்து அற்புதத்தை நிகழ்த்தியர் பாண்டுரங்கனே என்பதை எண்ணி தம்பதியர் இருவரும் ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். துக்காராம் பாண்டுரங்கன் கோயிலில் பாடல்கள் பாடுவதை தன் முழுநேரப் பணியாகக் கொண்டார். கோயிலில் பக்தர் கூட்டம் பெருகியது. பலரும் இவருடைய சீடர்களாக மாறினர். சிலர் அவர் மீது பொறாமையும் கொண்டனர்.

அதில் ராமேஸ்வரபட் என்பவர், துக்காராம்! நீ பிறப்பால் தாழ்ந்தவன்! அதனால், நீ பாடும் பாடல்களை பாண்டுரங்கன் ஏற்றுக் கொள்ளமாட்டான். நீ எழுதிய பாடல்களை இந்திராயணி ஆற்றில் நானே எறிந்து விடுகிறேன் என்று சொல்லி ஆற்றில் தூக்கி எறிந்தார். துக்காராம் பாண்டுரங்கனை எண்ணி தியானத்தில் மூழ்கினார். நதிதேவதை மூலம் மீண்டும் பாடல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன. இதனை தன் கவிதையில், என் கவிதைகளே என் மூலதனச் சொத்து. பாடல்கள் ஆற்றில் அமிழ்ந்ததைக் கண்டு என் உள்ளம் அளவிலா துன்பம் கொண்டது.ஆனால், நாராயணன் என்னைக் காத்தருள்செய்தான் என்று பாடியுள்ளார்.  இந்நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு துன்பம் செய்த ராமேஸ்வரபட்டும் துக்காராமின் சீடராக மாறினார். துக்காராம் மீது வீரசிவாஜி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். ஒருமுறை அவர், துக்காராமைச் சந்திக்க மாறுவேடத்தில் வந்திருந்தார். ஒற்றர்கள் மூலம் இவ்விஷயத்தை அறிந்த அவுரங்கசீப்பின் படைகள் பாண்டுரங்கன் கோயிலைச் சுற்றி வளைத்தன. சிவாஜியைக் காப்பாற்றும்படி பாண்டுரங்கனை துக்காராம் வேண்டிக் கொண்டார். பாண்டுரங்கனே, வீரசிவாஜி போல குதிரையில் தப்பி ஓட, அவுரங்கசீப்பின் படைவீரர்கள் பின்தொடர்ந்தனர். அதனால், உண்மையான சிவாஜி காப்பாற்றப்பட்டார். இதற்காக, துக்காராமுக்கு பொன்னும் பொருளும் சன்மானமாக வீரசிவாஜி கொடுத்தபோதும், அவற்றை துக்காராம் ஏற்றுக் கொள்ளவில்லை.

துக்காராமுக்கு கமலாபாய் என்ற மனைவியும் உண்டு. ஒருநாள் அவள் தன் சேலையை துவைத்து வெயிலில் உலர்த்தப் போட்டுவிட்டு ஏதோ வேலையாக வெளியில் சென்றுவிட்டாள். கிழிந்த சேலை கட்டியிருந்த ஒரு ஏழைப்பெண்ணுக்கு உதவும் எண்ணிய துக்காராம், கமலாபாயின் சேலையை அவளிடம் கொடுத்து விட்டார். அவளும் அதை கட்டிக் கொண்டு புறப்பட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கமலா, தன் சேலையை உடுத்தியிருந்த பெண்ணைக் கண்டதும், துக்காராமிடம் கோபித்தாள். பாண்டுரங்கா! பாண்டுரங்கா! என்று சொல்லி வீட்டையும் பாழாக்குறீங்களே!  என்று கத்தினாள். குழவிக்கல்லை எடுத்துக் கொண்டு பாண்டுரங்களை அடிக்க கோயிலுக்கு புறப்பட்டாள். கோயிலில் புன்னகையுடன் ருக்மணியே கமலாபாயின் புடவையைக் கட்டிக் கொண்டு காட்சி அளித்தாள். பலவிதமான ஆடை, ஆபரணங்களை கமலாபாய்க்கு கொடுத்து அருள்புரிந்தாள். ஓடிவந்து துக்காராமின் பாதங்களில் விழுந்து கதறி அழுதாள் கமலா.  துக்காராம் கமலாபாயிடம், கமலா! நீயே பாக்கியசாலி! வழிபட்டும் காணமுடியாத பிராட்டியைக் கண்ணாரக் கண்டு தரிசிக்கும் பாக்கியம் பெற்ற விட்டாயே! நீ பாக்கியவதி என்று சொல்லி மகிழ்ந்தார். அவர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு பாண்டுரங்கனே ஒரு அதிதியாக(விருந்தினனாக) அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டு வந்தார்.

துக்காராம், கமலாபாய் இருவரும் பாண்டுரங்க நாம சங்கீர்த்தனத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டனர். இன்றும் துக்காராமின் பாடல்கள் மக்கள் மனதில் பக்தியை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.  நாற்பத்தைந்து ஆண்டுகளே பூவுலகில் வாழ்ந்த துக்காராமின் முடிவும் அதிசயமானது. பலர் பார்த்துக்கொண்டிருந்தனர், அவர் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, வெளியூருக்குக் கிளம்புவார்கள் நான் போய்விட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் எப்படிச் சொல்லிக்கொண்டு போவார்களோ, அதுபோல் எல்லோரிடமும் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டே வைகுண்டம் கிளம்பினார். எப்படி என்கிறீர்களா ? இறந்தபிறகு அல்ல ! இந்தப் பூத உடலுடன் பாடிக்கொண்டே, அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே ! அவருடைய அனுக்கிரகத்தின் மகிமை எத்தகையது என்பதை, அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். துக்காராம் எப்பொழுதும்போல் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள்போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது.

விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. ஹ்ருதயத்தில் பக்தியானது, ஊற்றாகக் கிளம்பி காட்டாற்று வெள்ளம்போல கட்டுக்குள் அடங்காமல் கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை, அன்பு, அமைதி, திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்றுசேர்ந்து குடிகொண்டிருந்தது. இப்படி ஒருவரைக் காண முடிந்தால், நமக்கும் அத்தகைய நிலையை அடையவேண்டும் என்ற ஆசை அந்த நேரத்திலாவது ஒருவருக்குத் தோன்றத்தானே செய்யும் ! அப்படித்தான் துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி ஸித்திக்க, தாங்கள் அருள்செய்ய வேண்டும் என்று மன்றாடி பிரார்த்திக்கின்றனர். துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தனுப்பினார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம். நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால், இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது, ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருந்தார். அதுதான் அவருடைய வேலை. வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அது அவரிடத்தில் தன் வேலையைக் காண்பித்தது. ஆம் ! அவர் மகா பக்தராகிவிட்டார். சாங்கேவர்மன் என்பது அவருடைய பெயர். குருவின் பெருமைகளைப் பாடிய அவருடைய குருத்யாயி என்ற பாடலை பக்தர்கள் இன்றும் பாடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. மகான்களின் சம்பந்தம் பெற்ற எதுவுமே மகத்தானது என்பதை இதன்மூலம் அறியலாம்.