சனி, 3 மே, 2014

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.
 
 

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில்அ பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]
 
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.
 
 
தெய்வ சீந்தனை

சாதாரணமாக எல்லா ஜனங்களுக்குமே தெய்வ சிந்தனை இருக்கத்தான் வேண்டும். மநுஷ்ய ஜீவன் அந்தப் பெயருக்கு லாயக்காக இருக்க வேண்டுமானால் தனக்கு ஜீவ சக்தியைக் கொடுத்த ஸ்வாமியைச் சிந்தித்து, அவன் அருள் வழிகாட்டுகிற படிதான் ஜீவனம் நடத்த வேண்டும். இந்த (தெய்வ) சிந்தனை நாமே பண்ணுவதாக இருந்தால், நம்முடைய சித்தம் ஓடுகிற தாறுமாறான ஓட்டத்தில் உருப்படியாக ஒன்றும் தேறாது. அது மாத்திரமில்லா மல் நமக்கு ஸ்வாமியைப் பற்றி சோந்த அனுபவமாக என்ன தெரியும்? நமக்குத் தெரியாதவரைப் பற்றி நாம் என்னத்தைச் சிந்திக்க முடியும்? இங்கே, அப்படித் தெரிந்துகொண்ட பெரியவர்கள் பாடிய ஸ்தோத்திரங் கள் – தமிழ் முதலான ப்ரதேச பாஷைகளில் இருக்கிற துதிகளுந்தான் – நமக்குக்கை கொடுத்துத் தூக்கிவிட ஓடி வருகின்றன. பல காலமாக அவற்றை, ஸ்வாமியை சோந்தத்தில், நேரில் தெரிந்துகொண்ட எத் தனையோ பேர் சோல்லிச் சோல்லி அவற்றுக்கு தெய்விக சக்தி கூடிக் கொண்டே வந்திருக்கும். அவற்றைச் சோல்வதே, அதாவது ‘ஸ்தோத்ர பாராயணம்’, ‘துதி ஓதுதல்’ என்பதே நம்முடைய சித்தத்தை ஸ்வாமியிடம் சேர்த்து வைக்கும்.

கருணைக் கடல்:நம் தேசம் செய்த பாக்கியம், இம்மாதிரி ஸ்துதிகள் ஒவ்வொரு தெய்வத்தையும் குறித்துக் கணக்கு வழக்கு இல்லாமலிருக்கின்றன. நம் தேசத்திலும் இந்தத் தமிழ்நாட்டில் பிறந்தவர்களின் பாக்கியம் இங்கே தோன்றிய நம் முன்னோர்கள் நம்முடைய தமிழ் பாஷையில் துதிகளை அப்படியே கொட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் ஜனங்கள் அவரவரும், தாங்களே படித்துப் பாராயணம் பண்ணலாம். குருமுகமாகக் கற்றுக் கொண்டுதான் பண்ணணும் என்று கண்டிப்பு இல்லை. அநுபவம் கண்ட குரு எடுத்து வைத்துப் பண்ணினால் அது ரொம்ப விசேஷந்தான்; ஸந்தேஹமேயில்லை. ஆனால் அப்படிக் கட்டாயமாக விதி இல்லை.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஆளகாள கூட விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே – சம்பந்தர்.)
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.
 

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.