திங்கள், 5 அக்டோபர், 2020

அருள் தரும் அன்னை


அருள்தரும் அன்னை ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு

அனைவருக்கும் வணக்கம்.

மக்களை காப்பவன் மன்னன். மழை, வெள்ளம், புயல், வெயில் மற்றும் நோய், நொடி என அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்து மனமகிழ்ச்சியோடு வைத்து இருந்து அழகு பார்ப்பவள் அனைத்துலகிற்கும் அன்னையான அம்மன்.

மண்ணுலக மக்கள் வணங்கும் அம்மன் அவதாரங்கள் எத்தனையோ என்றாலும் நெல்லைச் சீமையில் 'முப்பிடாதி’ என்ற பெயர் மிகப் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன், அசுரர்கள் மூவருக்கு காவல் தெய்வமாக திகழ்ந்தவள். அந்த மூன்று  அசுரர்களின் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு. 

முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று பெயர். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர். இது தவிர, நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள் என்றும் கூறுவது உண்டு. நெல்லை வட்டார பகுதிகளில் முப்பிடாரி, முப்பிடாத்தி, முப்புடாதி என்கிற பெயர்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுப்பெயராகி இன்றும் வழங்கி வருகிறது.

ஸ்ரீ முப்பிடாதி அம்மன்  காயத்ரி மந்திரம்
“ஓம் த்ரிவதனாயை ச வித்மஹே
த்ரிஸூல ஹஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்”

அருள்மிகு ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு

அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால்  முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான  கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

கயிலாயம் விட்டு வந்த அஷ்ட காளியர்கள் பொதிகை மலைக்கு வந்து  சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்குப் பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி  மக்களுக்கு உணர்த்தி கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றனர். மகிசாசுரனை அழிக்க அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி.

அசுரர் குலத்துப் பெண் தானாவதி தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள்.தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மதேவன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக மகிஷாசுரன் பிறந்தான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்டு சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைபெற்ற மகிஷாசுரன், " ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் " என்று வரம் கேட்டான். அதனைக் கேட்ட சிவபெருமான், " அப்படியே ஆகட்டும் " என்றார்.

வரங்களை பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை. என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் (தற்போதைய மைசூர், மகிஷன் ஆண்டு வந்த ஊர் என்பதால் மகிஷா ஊர் என்று அழைக்கப்பட்டது. அது மருவி மைசூர் என்றானது) பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான். தனது சுயநலத்திற்காக கொடுஞ் செயல்கள் புரிந்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். 

இதனிடையே ஒருநாள் கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக வந்தபோது சிவபெருமான் இருகண்களும் திறந்திருந்த நிலையில் ஆழ்ந்த தியானநிஷ்டையில் இருந்ததைக் கண்ட விநாயகப் பெருமான், அன்னை சக்தியிடம், “ தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார்.  தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்ய வேண்டும் என்று வினா தொடுத்தார்.” அதற்கு பார்வதி தேவி, “தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்” என்றார். 

அப்போது குறுக்கிட்ட முருகன், “தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்” என்றார். “இதை எப்படி தந்தையிடம் கூற, என்று விநாயகர் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறு கணமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக் கொண்டு கண்ணை திறந்தார் சிவன். “என்ன விளையாட்டு இது” சினம் கொண்டார், சிவன். பணிந்தார் பார்வதிதேவி, “சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காக செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்.” என்றார். 

இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன்,  " நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்ட காளியாக பிறக்க வேண்டும் " என்று சபித்தார். " இந்தச் சிறிய தவறுக்கு மானிடப் பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா " என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன். பாதாள லோகத்தில் நாகக்கன்னி பிள்ளை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப்பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைக்களாக உருமாறி வெளி வந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடைகாத்து வந்தாள்.

நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. இரண்டாவதாக பிறந்தாள் மாகாளி என்ற பத்திரகாளி, மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி - என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால் முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, இதுவும் மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பதுண்டு. ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். கடைசியாக பிறந்தாள் காந்தாரி.

பிள்ளைகள் எட்டுபேரையும் நாகக்கன்னி, அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். " அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே " என்று கேள்வி எழுப்ப, " எல்லாம் அந்த சிவனார் செயல் " என்றாள் நாகக்கன்னி. உடனே, " நம்மை  ஏன், தாயைப்போல் நாககன்னிகளாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்க வேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப் போகிறோம். அதை அந்த சிவனிடமே கேட்போம் " என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். 

அவர்களின் தவத்தைக் கண்ட சிவன் அவர்கள் முன் தோன்றினார். அஷ்ட காளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, " மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷாசுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு " என்று சிவனும் பதில் கூறினார்.  அஷ்டகாளிகளும், " தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும் " என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.

சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வத மலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடக்கிறது. தனித்தனியாக நிற்பதை விட, ஒரு சேர நின்றால் தனது வலிமை அதிகம் என்பதை உணர்ந்து அஷ்ட காளிகள் எட்டுபேரும் ஒருசேர அமைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், " தாயே என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை மனித குலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம் தந்தருள வேண்டும் " என்றான். ஆங்கார ரூபினியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த ரூபினியாக மாறினாள். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக்கி, தனது வாகனமாக்கிக் கொண்டாள். அன்றிலிருந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர நின்ற கோலத்தில் உள்ள தேவி மகிஷாசுரமர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டாள்.

கருத்துகள் இல்லை: