திங்கள், 5 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 21


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 21

இன்றைய பதிவில் தஞ்சம்மாள் செய்த மூன்றாவது பிழை என்ன என்பதை அறியலாம்.

மூன்றாவது பிழை

பெரிய நம்பிகள் தம் மனைவியுடன் இளையாழ்வான் வீட்டில் தங்கியிருந்தபோது, ஒருநாள் இளையாழ்வான் ஸ்ரீ பெரும்புத்தூர் சென்றிருந்தார். அந்த சமயத்தில் இளையாழ்வானின் மனைவியும், பெரிய நம்பிகளின் மனைவியும் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இரண்டு வாளியும், நீர் இறைக்கும் பொழுது ஒன்றுடன் ஒன்று உரசி நீர் தெளித்தது. இதைக்கண்ட தஞ்சம்மாள் பெரிய நம்பிகளின் மனைவியிடம் பேச ஆரம்பித்தார். இவள் பேச பதிலுக்கு பெரிய நம்பிகளின் மனைவி பேச வாதம் விவாதமானது.

இதை தெருவில் குடியிருந்தோர் அனைவரும் கேட்டு விட்டனர். இளையாழ்வானின் மனைவி தஞ்சம்மாளை சற்று அதிகமாகவே விவாதம் செய்து விட்டாள். இதை அறிந்த பெரிய நம்பிகள், தன் மனைவியைக் கோபித்துக் கொண்டார்.

"வா! நாம் திருவரங்கம் செல்லலாம்" என்று கூறி, பெரிய நம்பிகள் தன் மனைவியை அழைத்துக் கொண்டு இளையாழ்வான் வீட்டை விட்டுக் கிளம்பினார். ஸ்ரீ பெரும்புத்தூர் சென்றிருந்த இளையாழ்வான் வரும்முன்னே பெரிய நம்பிகள் சென்றுவிட்டார்.

தன் வீட்டிற்கு வந்திருந்த பெரிய நம்பிகளை வீட்டில் அழைத்தபோது இல்லை. "எங்கே சென்றார்?" என்று அருகில் இருந்தோரிடம் விசாரித்த பொழுது, அவர் திருவரங்கம் புறப்பட்டுச் சென்றதையும், தஞ்சம்மாள் நடந்து கொண்டதையும் அருகிலிருப்போர் கூற, தஞ்சம்மாளிடம் பெரிய நம்பிகள் பற்றி விசாரித்தார். தஞ்சம்மாளும் நடந்ததைக்கூற, இளையாழ்வானுக்கு அதிகமாகவே கோபம் வந்துவிட்டது.

"ஆச்சாரியனைத் தேடி தேடி அலைந்து கொண்டிருந்ததற்கு பரிசாக, இறைவனே பெரிய நம்பிகளை ஆச்சாரியனாக ஆக்கிக் கொடுத்தார். அந்த ஆச்சாரியனுக்கே பெரிய பாவத்தை பண்ணிவிட்டாய்" என்று கூறினார். வைஷ்ணவ சம்பிரதாயத்தை பொறுத்தவரை, பாகவதன் பாவத்தை விடவும், ஆச்சாரியானுக்குச் செய்யும் பாவத்தைத் தொலைக்கத்தான் பிராயச்சித்தம் இல்லை. அதற்கு என்ன பரிகாரம் செய்தாலும், செய்த பாவத்தைத் தொலைக்க முடியாது. "இந்த பாவத்தை நான் எப்படி நான் தொலைப்பேன்? என்ன செய்வேன்?" என்றெல்லாம் உரைத்தார்.

தஞ்சம்மாளுடன் குடும்பப் பொறுப்பில் இருக்கும் வரையில், தம்முடைய நோக்கமும், பிரார்த்தனைகளும், ஸ்ரீ வைஷ்ணவ செயல்பாடுகளும் முழுமையாக செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். "இனி, நீ உன் பிறந்தகம் செல்லலாம்" என்று தஞ்சம்மாளிடம் கூறிவிட்டார். தஞ்சம்மாளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்களை வரவழைத்து அவர்களுடன் தஞ்சம்மாளை அனுப்பி வைத்து விட்டார்.

'தஞ்சம்மாளுக்கும் எனக்கும் இருக்கும் உறவு முறிந்துவிட்டது. இனி, ஸ்ரீ வைவஷ்வ சம்பிரதாயங்களில் சுதந்திரமாகச் செயல்படலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அதன் பின் இளையாழ்வான் செய்த செயல் என்ன? இளையாழ்வானுக்கு இன்று உலகமே போற்றும் இராமானுஜர் எனும் பட்டம் யாரால் கிடைக்கிறது?  நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏

கருத்துகள் இல்லை: