திங்கள், 5 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 22

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 22

தஞ்சம்மாளின் பிரிவிற்குப் பின் இளையாழ்வான் என்ன செய்தார்? இன்று உலகமே போற்றும் 'இராமானுஜர்'  எனும் பட்டம் யாரால் கிடைக்கிறது?
 துறவறம் மேற்கொள்ளுதல்

சன்னியாசஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார் இளையாழ்வான். வேதசரஸ் புஸ்கரணிக்குச் சென்றார். அங்கு நீராடினார். அங்கிருந்து பேரருளாளனை நோக்கி பிரார்த்தித்தார்.

'தான் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிவிடுவோம். இனி அதைக்கொண்டு தான் சம்பிரதாயத்தை வளர்க்க வேண்டும்' என்று திருவுளம் கொண்டு தேவராஜப்பெருமாளை பிரார்த்தித்தார்.

பேரருளாளன் சன்னிதிக்குச் சென்று "இவ்வளவு நாள் தாய், தந்தை, மக்கள் என்று இருந்தேன். இனி எனக்கு எந்த உறவும் இல்லை. இந்த பிறவியும் வேண்டாம்"  என்று பிரார்த்தித்தார்.

காஞ்சி பேரருளாளனே ஆச்சாரியனாக வந்து விண்ணப்பம் செய்ய, தேவனே - காஷாயம், திரிதண்டம் - இரண்டையும் இளையாழ்வானுக்குக் கொடுத்தார். ஒருவர் சன்னியாசனம் ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஆச்சாரியானிடத்திலேதான் திரிதண்டம் - காஷாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இளையாழ்வானோ எங்கே, யாரைப் போய்த் தேடுவார்? அதனால்தான் காஞ்சி தேவப்பெருமாளே ஆச்சாரியானாக வந்துவிட்டார் இளையாழ்வானுக்காக.

ஆச்சாரியானாக வந்த தேவப்பெருமாளை இளையாழ்வான் சேவிக்க, அவரோ திரிதண்டத்தை அர்ச்சகர் மூலம் கொடுத்து, "இனி நீர் உள்ளவரையும் தரிசிக்கப்படுவீர். உமக்கு 'இராமானுஜ முனி' என்று திருநாமம் உகந்தருளினோம்!" "இனி இராமானுஜரை மடத்திலேயே வைத்து வாரும்" என்று திருக்கச்சி நம்பிகளுக்கும் அருளினார்.

காஞ்சி தேவப்பெருமாளே ஆச்சாரியானாக உகந்தருளிய 'இராமானுஜர்' என்ற திருநாமமே இன்று உலகம் முழுவதும் அனைவராலும் போற்றப்படுகிறது.

இளையாழ்வான் திரிதண்டத்தைப் பெற்றுக்கொள்ளும் பொழுது நம் மருமகன் முதலியாண்டானைத் தவிர மற்ற அனைத்து சொந்தங்களையும் இழந்தோம் என்றார். முதலியாண்டானைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

🌻🍁 ஸ்ரீ வைஷ்ணவ சன்னியாசம்

சாதாரணமான சன்னியாசம் மேற்கொள்பவர்கள் வைத்திருக்கும் தண்டத்தில் ஒரு கொம்பு தான் இருக்கும். ஆனால், வசிஷ்டாத்வைதத்தில் சன்னியாசி வைத்திருப்பதில் மூன்று கொம்புகள் இருக்கும்.

'சத்தியம் ஒன்று' என்பது ஆதிசங்கரருடைய கொள்கை. அதனால் ஏக தண்டம்.

'தத்துவங்கள் மூன்று' என்பது இராமானுஜரின் கொள்கை. சித்து, அசித்து, ஈஸ்வரர்கள் என்பது மூன்று கொம்பின் தத்துவமாகும். திரிதண்டத்தை எப்பொழுதும் கையிலிருந்து நழுவ கூடாது. காஷாயத்தை எப்பொழுதும் நிலையிலிருந்து மாற்றக்கூடாது.

சிகை - குடுமி உண்டு. யக்ஜோபவீதம் - பூணூல் உண்டு. இடுப்பில் காஷாய வஸ்திரம் உண்டு. கையில் எப்பொழுதும் திரிதண்டத்தைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இவற்றைதான் இராமானுஜர் பெற்றுக் கொண்டார். இப்பொழுது இராமானுஜரை சேவித்துப் பார்த்தால் உயர்ந்த சூரியன் பளபளவென்று விடிவதெற்குத் தயாராக இருப்பது போல் இருக்கிறார்.

இளையாழ்வான் என்று இதுவரை அழைத்தோம். இப்பொழுதிருந்து இளையாழ்வானை "இராமானுஜர்" என்று அழைப்போம்!

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை விரிவாக்க இராமானுஜர் எடுக்கும் முயற்சிகளை இனிவரும் பதிவில் காணலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


கருத்துகள் இல்லை: