திங்கள், 5 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 18

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 18

காஞ்சி தேவப்பெருமாள் சொன்ன வார்த்தைகள்
======
இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளிடமே தன் பிரச்சினையைத் தீர்க்க உபாயம் சொல்லவேண்டி வரதராஜரான தேவப்பெருமாளிடம் கேட்டுச் சொல்லும்படி சொல்ல, திருக்கச்சி நம்பிகளும் தேவப்பெருமாளுக்கு பரிவட்டம் வீசச் செல்லும் பொழுது கேட்பதாக உறுதியளித்தார்.

நம்பிகள் வழக்கம்போல காஞ்சி பேரருளாளனுக்கு ஆலவட்டம் வீசும் பணியைச் செய்து முடித்தார். முடிந்ததும் உடனே கிளம்பாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட தேவப்பெருமாள் "நீர் இன்னும் கிளம்பலையா? இங்கேயே நிற்கிறீர்? எதுவும் முக்கியமான விசயமா?" என்று தன் திருவாய் மலர்ந்தார். திருக்கச்சி நம்பிகளும் இளையாழ்வான் தன் சந்தேகத்தைத் தீர்க்கச் சொன்னதைப் பற்றி சொன்னார். "அவருக்கு என்ன சந்தேகம்? எதில் சந்தேகம்?" என்று புரியாதவாறு கேட்டார் மாயக்கண்ணன் தேவப்பெருமாள்.

திருக்கச்சி நம்பிகளும், "இளையாழ்வானிடம் கேட்டால் உங்களுக்குத் தெரியும். தேவரீர் நிச்சயம் தீர்த்து வைப்பீர் என்று சொல்கிறார். நீரோ என்னிடம் என்னவென்று கேட்கிறீர்!" என்றார்.

🌾🌾 உரைத்த ஆறு

காஞ்சி வரதராஜப் பெருமாள் உரைத்த ஆறு விசயங்கள் புகழ் பெற்றவை. திருக்கச்சி நம்பியிடம் இராமானுஜர் கீழ்க்காணும் நான்கு கேள்விகளைத் தம் பொருட்டுக் கேட்டார்.

1. உபாயங்களில் எது நல்லது?
2. மோட்சம் அடைவதற்கு முன் அந்திமஸ்ருதி வேண்டுவது எப்போது?
3. எந்த ஜென்மத்தில் மோட்சமடைவது?
4. எந்த ஆச்சார்யரை நான் ஏற்றுக் கொள்வது?

இக்கேள்விகளை இராமானுஜர் கேட்பதாக திருக்கச்சி நம்பிகள் தேவப்பெருமாளான வரதரிடம் கேட்க அவர் 6 வார்த்தைகளில் பதில் கூறுகிறார்.

1. அஹம் மேவபரம்தத்வம்
2. தர்சனம் பேத ஏவச
3. உபாயேஷ் பேத ஏவச
4. அந்திமஸ்மருதி வர்ஜனம்
5. தேக வஸானே முக்தில் ஸ்யாத
6. பூர்ணசச்யார்ய ஸமாச்ரய

🥀🥀 அதன் விளக்கமானது:

👉 அஹம் மேவபரம்தத்வம்

"நானே பரம்பொருள்!"

ஸ்ரீமந் நாராயணனான நானே உலகிற்கும், உலக காரணிகட்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள் என்பதாகும். முடிவான உண்மை நானே.

👉 தர்சனம் பேத ஏவச

"ஜீவாத்மா, பரமாத்மா (ஜீவன்-ஈஸ்வரன்) இரண்டும் வெவ்வேறானவை"

(ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை. அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை). நாம் எல்லாம் ஜீவாத்மா. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் ஒருவரே பரமாத்மா.

👉 உபாயேஷ் பரப்த்திய ஸ்யாத்

"என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.

பகவானை அடைய (மோட்சம் அடைய) சரணாகதியே சிறந்தவழி. அதைத்தான் ப்ரபத்தியே உபாயம் என்பார்கள். எம்பெருமானிடம் நாம் "பூரண சரணாகதி" அடைந்தாலே போதும்.

👉 அந்திமஸ்மருதி வர்ஜனம்

மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, "உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன்." (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆச்சார்யாரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்).

ஒரு மனிதனின் அந்திமகாலத்தில் பெருமாளை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை. இந்த ஜீவனானது சரீரத்தில் இருக்கும் இளமைக் காலங்களில் எம்பெருமானைத் துதித்தால் போதும். ஆகையால் அந்திமக் காலத்தைப் பற்றி நினைக்காமல், நம்முடைய கடமையைச் செய்தும், இறைவனுக்குத் தொண்டு செய்யலாம்.

👉 தேக வஸானே முக்தில் ஸ்யாத

சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்.

"என்னை உபாயமாகக் கொண்ட இத்தகைய பக்தருக்கு இந்த உடல் கழிந்தவாறே (இப்பிறவி முடிந்ததும்) மோட்சத்தை நானே அருளுகிறேன்."

இறுதிக் காலத்தில் நாம் பகவானை நினைக்காமல் விட்டாலும் பகவான் நம்மைத் தேடி வந்து நமக்கு "மோட்ச சாம்ராஜ்ஜியமான சரீர விடுதலை" அளிக்கிறார்.

👉 பூர்ணசச்யார்ய ஸமாச்ரய

"நற்குண பண்டிதராய் இருக்கும் மகா பூர்ணரான பெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்வாயாக."

🍁🍁 திருக்கச்சி நம்பிகளின் மகிழ்ச்சி

இவ்வாறு ஆறு வார்த்தைகள் கேட்ட திருக்கச்சி நம்பிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

"இளையாழ்வானோ ஆதிசேனின் அவதாரம், அவரோ உம்மிடம் கேட்காமல் என்னிடம் கேட்கிறார். நீரோ அவருக்கு எதையும் உணர்த்தாமல், என் மூலம் இளையாழ்வானின் சந்தேகங்களுக்கு விடையளித்து, கட்டளையிடுகிறீர். உங்கள் இருவருக்கும் இடையில் நானா? நான் பாக்கியம் பெற்றிருக்கிறேன்" என்று அருளாளப்பெருமாளிடம் கூறினார்.

நம்பிகள் இளையாழ்வாரிடம் சென்று பகவானின் இந்த ஆறு கட்டளைகளையும் தெரிவித்தார்.  இளையாழ்வாரும் திருக்கச்சி நம்பிகளின் பேருதவிக்காக நன்றி தெரிவித்தார்.

அதே சமயம், இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை குருவாக ஏற்பது  தன்னுடைய விருப்பமும் கூட என்று கூற, திருக்கச்சி நம்பிகள் பகவானின் திருவுள்ளமும் இளையாழ்வாரின் திருவுள்ளமும் ஒரே விதமாக இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

*வந்தாரை வாழ்விக்கும் பேரருளாளர்*

ஆளவந்தாரின் சீடரான திருமலையாண்டானிடம் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியையும், திருவரங்கப் பெருமாள் அரையரிடத்தே ஏனைய மூவாயிரம் பாடல்களையும், ராமானுஜர் கற்றார். பின், யஜ்ஞமூர்த்தி எனும் அத்வைத வித்வான் கங்கைக்கரையில் உள்ள பண்டிதர்களை எல்லாம் வென்று திருவரங்கத்தில் வந்து ராமானுஜரோடு வாதிட்டார். வாதப்போர் பதினேழு நாட்கள் ஆகியும் தொடர்ந்தது. கவலையுற்ற ராமானுஜரின் கனவில் காஞ்சி தேவப்பெருமாள் தோன்றி வேதாந்தத்தின் கருத்தான வசிஷ்டாத்வைதத்தின் ஆழ்பொருளை உணர்த்தினார். அடுத்த நாள் அக்கருத்துகளைக் கேட்ட யஜ்ஞமூர்த்தி  மனம் மாறினார். ராமானுஜர் திருவடிகளைப் பற்றினார். அவரையணைத்த உடையவர், ஸ்ரீவைஷ்ணவ மரபுப்படி பஞ்சஸம்ஸ்காரம் செய்து தன் பெயரையும் தேவப்பெருமாள் திருநாமத்தையும் சேர்த்து " அருளாளப் பெருமாள் எம்பெருமானார் " என்று பெயர் சூட்டினார். அன்று முதல் தன் பூசைக்குரிய பெருமாளையே அவரிடம் ஒப்படைத்து திரு ஆராதனம் செய்து வரச் சொன்னார். வந்தாரை அரவணைத்து ஏற்றுக் கொள்ளும் பேரருளை நினைத்து சீடர்கள் போற்றினர்.
"

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?..."

தேவராஜ! தயாஸிந்தோ!  தேவதேவ ஜகத்பதே!

"ஹஸ்து ஸ்ரீஸ்தந கஸ்தூரீ
வாஸநாவாஸிதோரஸே

ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய தேவராஜாய மங்களம்"

-காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் திருவடிகளே சரணம்

*ஸ்ரீ உடையவர் திருவடிகளே சரணம்.*

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏


கருத்துகள் இல்லை: