திங்கள், 5 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 17

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 17

வாழியெதிராசன் வாழியெதிராசன்
 
திருக்கச்சி நம்பிகளைச் சந்தித்தல்

யாதவப் பிரகாசரிடம் அத்வைதம் கற்றுக் கொண்டிருக்கும் போதே, இளையாழ்வானின் அன்னை காந்திமதியும் இறைவனடி அடைந்துவிட்டார். அதன் பின் திருக்கச்சி நம்பிகளிடம் சிஷ்யராகக் கேட்க அவரும் மறுத்து விட்டார்.

ஆளவந்தாரையாவது குருவாக ஏற்றுக்கொண்டு, அவரிடம் ஸ்ரீ வைஷ்ணவ காலட்சேபம் பண்ணலாம் என்றால் அதுவும் முடியவில்லை. மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தாலும், காஞ்சிபுரம் வந்தடைந்தபின் பேரருளானனுக்கு சாலக்கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கைங்கரியம் செய்தார்.

அப்போது திருக்கச்சி நம்பிகளை வழக்கம் போலச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரைப் பற்றி விசாரித்தார். இளையாழ்வானும் தான் திருவரங்கம் சென்றதையும், அங்கு நடந்த சம்பவங்களை பற்றியும் சொன்னார்.

திருக்கச்சி நம்பிகளும் ஆளவந்தார் இறைவனடி அடைந்ததை நினைத்து வருத்த மடைந்தார்.  நம்பிகளுடைய குரு அல்லவா ஆளவந்தார்? திருக்கச்சி நம்பிகளும் சில மணி நேரம் கழித்து மன  சாந்தியடைந்தார்.

இளையாழ்வான் ஆளவந்தாரின் மூன்று ஆசைகள் நிறைவேறாததை அங்கிருந்தோர்களிடம் இருந்து தெரிந்து கொண்டதாகவும், அந்த மூன்று ஆசைகளை தான் நிறைவேற்றுவதாக சபதம் சொன்னதையும், அப்போது மடங்கிய மூன்று விரல்களும் நிமிர்ந்தன என்பதையும் சொன்னார்.

🌺🌾 வசிஷ்டாத்வைதம்

பிரம்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம் எழுத வேண்டும் என்றால், அதற்குத் தம்மை முதலில் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இளையாழ்வானின் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. ஆதிசங்கரருடைய அத்வைதத்துடன் மாறுபட வேண்டும் என்றால், அதற்கு முதலில் தம்மைச் சிறந்த முறையில் தயார் செய்ய வேண்டும்.

அப்படித் தயார் செய்தால்தான், அவருக்கு இணையான ஞானத்தைப் பெற முடியும். இதனால், இளையாழ்வான் வசிஷ்டாத்வைத வியாக்யானம் எழுதுவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

திருக்கச்சி நம்பிகளிடம் அதைப்பற்றி தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார். நம்பிகளும் "தொடர்ந்து கைங்கரியம் செய்து கொண்டிரு, இளையாழ்வா! தக்க காலம் வரும் வரை காத்திரு" என்றார். இளையாழ்வானும் "காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

ஆனால், இளையாழ்வானுக்கு ஆளவந்தார் இறுதி சடங்கில் சபதம் செய்த நினைவு வந்து கொண்டே இருக்கவே, 'தன்னால் இந்த மூன்றையும் நிறைவேற்ற முடியுமா? யாரை குருவாக ஏற்றுக் கொண்டால் இது நிறைவேறும்?' என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

சில தினங்களில் திருக்கச்சி நம்பிகளிடமே தம்முடைய குழப்பத்தைச் சொல்லி, அவர் காஞ்சி பேரருளாளனிடம் கேட்டு தன்னுடைய குழப்பத்திற்குத் தீர்வு சொல்லும்படி  கேட்குமாறு வேண்டினார். நம்பி அதற்கு ஒப்புக்கொண்டார். இளையாழ்வானும் மகிழ்ச்சி அடைந்தார்.

நாளை காஞ்சி பேரருளாளன் தன் திருவாய் மலர்ந்து இளையாழ்வானின் சங்கடத்தைத் தீர்த்து வைத்தாரா  என்பதைப் பற்றி அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 மாசி மிருகசீரிடம்-
ஶ்ரீதிருக்கச்சி நம்பிகள்
திருஅவதார திருநட்சித்திரம்.

ஸ்வாமிகளின் தனியன்:
"தேவராஜ தயாபாத்ரம் ஶ்ரீ காஞ்சிபூரணம் உத்தம ம்,
ராமானுஜ முநேர் மாந்யம்
வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம்"
"தேவப் பெருமாளுடைய திருவருளுக்குக் கொள்கலமானவரும்,
ஶ்ரீ காஞ்சிபூரணர் என்னும் மிகச் சிறந்தவரும்,ராமானுஜருக்குப் பூஜ்யரும்,சத்வகுணமுடையவர்களுக்கு
ஆச்ரயபூதருமானவரைத் தொழுகிறேன்"
பொதுவாகத் தனியனில் போற்றப்படும் ஸ்வாமிகளின், ஆச்சார்யரைப் பற்றிய குறிப்பு இருக்கும்.ஆனால் நம்பிகளின் தனியனில் அவரது அற்புதச் சீடர் ராமானுஜரைப் பற்றிப் பாடியிருப்பதே
ராமானுஜருக்கும்,இவருக்கும் உள்ள தெய்வீக உறவைக் காட்டுகிறது
(தனியனை இயற்றியதும் இராமானுசப்பிள்ளை என்னும் பெயருடைய ஒருவர்)

திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வாருக்குப் பல வகையிலும் புருஷகாரம் செய்து அவரை அகிலம் போற்றும் இராமானுஜர் ஆக்கினார்.
அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1.ஐகதாசார்யாருக்கு,முதல் ஆசார்யர்
            
ராமானுஜர் யாதவப்பிரகாசர் குருகுலத்தில் பயிலும் போதே,அவருக்கு இருந்த ஐயங்களுக்கு நம்பிகளிடம் விளக்கம் கேட்பார்.ஒரு கட்டத்தில் யாதவப்பிரகாசரின் போக்கை ஒத்துக்கொள்ளாத ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளையே ஆசார்யராக வரித்து தம்மைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்
உயர்ந்த அந்தணர் குலத்தில் பிறந்த
ராமானுஜருக்கு,வைசிய குலத்தில் பிறந்த தாம் ஆசார்யராக முடியாது என்று மறுத்து விட்டார்.ஆயினும் தம் முயற்சியை விடாத ராமானுஜர்,அவர் பிரசாதப்பட்ட தளிகையின் சேஷத்தை(மிச்சத்தை)த் தாம் உண்டு அவரிடம் சீடராகிவிடலாம்(ஆசார்ய சேஷப்பிரசாதம் சீடர்களுக்கு மஹாபிரசாதம்) என விழைந்தார்.
நம்பிகளை தம் திருமாளிகைக்கு எழுந்தருளுமாறு வேண்டினார்.
அவ்வாறே அவர் ராமானுஜர் திருமாளிகைக்கு வந்து
பிரசாதப்பட்டார்.ஆனால் ராமானுஜர் அவர் சேஷத்தை உண்பதற்குள் அவர் துணைவியார் தஞ்சமாம்பாள்,நம்பிகள் பிரசாதப்பட்ட மிச்சத்தைத் வெளியே எறிந்துவிட்டு,அவர் அமர்ந்து உண்ட இடத்தையும் கழுவித் துடைத்துவிட்டார்(அந்தக்கால வைதீக க்குடும்பங்களில் இருந்த வழக்கப்படி).ஆனால் எப்படியும் நம்பிகளையே தம் (முதல்)ஆசார்யராக
மனதளவில் வரித்துவிட்டார்.

2.ஞானசீலர் ராமானுஜரை கைங்கர்ய சீலராக்கிய கஜேந்திரதாசர்
(நம்பிகளின் இயற்பெயர்)
           
ஶ்ரீ வைஷ்ணவத்தின் மேலான சிறப்பே
ஞானம்/பக்தி/அனுஷ்டானம் எல்லாவற்றையும் விட கைங்கர்யத்துக்கு(பகவத்/ஆசார்ய/பாகவத) உள்ள ஏற்றம் தான்.சிறந்த
ஞானவானான ராமானுஜரை தேவப்பெருமாளுக்கு தீர்த்தக்கைங்கர்யம் செய்யும் பணியில்
ஈடுபடுத்தினார் நம்பிகள்.
கோவிலிலிருந்து இரண்டு மைல்
தொலைவில் உள்ள சாலைக்கிணற்றிலிருந்து,தினமும்
பெரியகுடத்தில் ராமானுஜர் தீர்த்தம்
கொண்டு வந்தார்.மேலும்
ராமானுஜருக்கு பூமாலை/ந ந்தவனக் கைங்கர்யங்களைச் செய்யத் தூண்டியதும்,நம்பிகள் தேவப்பெருமாளுக்கு செய்த பூமாலைக் கைங்கர்யமே.ராமானுஜர்
திருவாய்மொழி வியாக்யானம் செய்தபோது 'சிந்துபூமகிழும் திருவேங்கடத்து'என்னுமிடத்தில் நிறுத்தியவர் ,அனந்தாழ்வானை,தம் சீடர்களுள் 'ஆண்பிள்ளை' என்று போற்றி ,திருவேங்கடத்துக்கு பூமாலைக் கைங்கர்யம் செய்ய அனுப்பினார் என்பது வரலாறு.ஆனால் இதற்கு ஆதாரமாக இருந்த து,திருக்கச்சி நம்பிகளின் பூமாலைக் கைங்கர்யமே.

3.கலங்கி நின்ற ராமானுஜருக்கு,
வரதராஜரிடம் 'ஆறு வார்த்தைகள்'
பெற்று கலக்கம் போக்கிய 'பார்க்கவ
பிரியர்'(நம்பிகளின் தந்தையார்,
திருமழிசை ஆழ்வார் மீது வைத்திருந்த
பக்தியால் இந்தப் பெயராலும் அழைத்தார்):
              
ராமானுஜருக்கு நம்பிகள் செய்த
ஈடு,இணையற்ற புருஷகாரம் இதுவே.
ராமானுஜருக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு,தேவப்பெருமாளிடம் இருந்து ஆறு விடைகளைப் பெற்று
அவரிடம் உரைத்தார் நம்பிகள்:
1.அஹம் ஏவ பர த த்வம்(நானே பரமாத்மா)
2.தர்சனம் பேத ஏவ சா(சித்,அசித்,ஈஸ்வரன் மூன்றுக்கும் இடையே பேதமுள்ளதே நம் மதம்-விசிஷ்டாத்வைதம்)
3.உபாயேதி பிரபத்திஸ்யாத்(என்னை அடைவதற்கு சரணாகதியே உபாயம்)
4.அந்திம ஸ்மிருதி வர்ஜனம்(என்னைச் சரண டைந்தோர்,இறக்கும் தருவாயில் என்னை நினைக்காவிட்டாலும் அவர்களுக்கு மோட்சமுண்டு).
5.தேஹ வாஸநே முக்திஸ்யாத்(இந்தப் பிறவியின் இறுதியிலேயே,உயிர்,
உடலைப் பிரிந்தவுடன் மோட்சம்)
6.பூர்ணாசார்ய ஸமாஸ்ரயே
(மஹாபூரணர் என்னும்
பெரிய நம்பிகளை ஆசார்யராக ஏற்றுக்கொள்)

4.ஆளவந்தாருக்கு 'ஆம் முதல்வனை'
க்காட்டிய காஞ்சீபூரணர்
             
நம்மாழ்வார்,நாதமுனிகளுக்குக் காட்டிய ,நாதமுனிகள் (உய்யக்கொண்டார்,மணக்கால் நம்பி மூலம்) ,ஆளவந்தாருக்குக் காட்டிய பவிஷ்யத ஆசார்யரைக் காணத் தவம் இருந்தார் ஆளவந்தார்.அவர் காஞ்சிக்கு எழுந்தருளிய போது,சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த இளையாழ்வாரைக் காட்டினார் காஞ்சிபூரணர்.இளையாழ்வாரின் பொருந்திய தேசைக் கண்ட ஆளவந்தார்"ஆம்,முதல்வன்"(இவரே சம்பிரதாயத் தலைவர்) என்று கொண்டாடினார்.

5.இளையாழ்வாரை ராமானுஜர்/எதிராசர் ஆக்கிய பேர ருளாள தாசர்(
பேர ருளாளர் வரதர் மேலிருந்த பக்தியினால் ,ஆசார்யர் ஆளவந்தார் சூட்டிய திருநாம ம்)
        
குறிப்பு 1 ல் கூறியது போல்,நம்பிகளின் சேஷத்தை ஏற்க விடாமல் செய்த தம் துணைவியார் மீதும்/இல்லற வாழ்க்கை மீதும் விரக்தியில் இருந்தார் இளையாழ்வார்.விரைவில்
மேலும் இரண்டு நிகழ்வுகளிலும் தஞ்சமாம்பாள்,இளையாழ்வார் எண்ணப்படி நடந்து கொள்ளாத தால்,இளையாழ்வார் சந்யாசம் பூணத்துணிந்தார்.தேவப்பெருமாள்
திருவடிகளில் வணங்கி,கோவில்
அமிர்தசரஸ் புஷ்கரணியில் தீர்த்தமாடி
காவி வஸ்திரம் தரித்து,திரிதண்டம் ஏந்தி உதய ஞாயிறாக ஒளிர்ந்தார்.
அப்பொழுது அங்கு வந்த நம்பிகள்
தேவப்பெருமாள் அருளிய 'எதிராசரே'
'ராமானுஜரே' என்னும் திருநாமங்களிட்டு அழைத்தார்

6.அதியற்புத சீடர்,கூரத்தாழ்வானை ராமானுஜர் திருவடிகளில் சேர்த்த காஞ்சீமுனி(காஞ்சியில் முனிவர் போல் தவ வாழ்வில் இருந்தார்)
      
காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள கூரம் கிராமத்தில் திருமறுமார்பன் என்னும் சிற்றரசரும்,சிறந்த ஶ்ரீவைஷ்ணவரும் ஆன கூரேசர் திருமாலுக்கும் திருமால் அடியார்களுக்கும் பல கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.அவருடைய திருமாளிகையில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில்
இருந்து நடு இரவு வரை அடியார்களுக்குத் த தீயாராதனை
(உபசரிப்பு) நடந்து கொண்டே இருக்கும்.ஒரு நாள் ,காஞ்சியில் கோவில் கதவுகளை மூடியபின்,
இரவில் கூரத்தில் கூரேசரின் திருமாளிகைக் கதவுகள் மூடும் ஒலி தேவப் பெருமாளுக்கும்,
பெருந் தேவித் தாயாருக்கும் கேட்டது.தாயார்,பெருமாளிடம் 'இது என்ன?நம் கோவில் கதவுகளின் ஒலியைவிடப் பெரிய ஒலியாக உள்ளதே;இவ்வளவு பெரிய திருமாளிகையுடைய செல்வந்தர் யார்?'என்று கேட்க,பெருமாள் கூரேசரின் பெருமைகளைத் தாயாரிடம் கூறினார்.
ஆலவட்டம்(விசிறி) கைங்கர்யம் செய்து கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகள் இதைச் செவியுற்றார்.மறுநாள் கூரேசரிடம்
பெருமாளும்,தாயாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசியதைச் சொன்னார்.இதைக் கேட்ட கூரேசர்
திவ்யதம்பதிகள் பேசும் அளவுக்கு தம் செல்வம் பெரிதா என்று
பதைபதைத்தார்.உடனே
அனைத்தையும் துறந்துவிட்டு,
உடுத்திய ஆடையுடன்,தம் துணைவியார் ஆண்டாளையும் அழைத்துக் கொண்டு ராமானுஜர் திருவடிகளில் வந்து தஞ்சமடைந்து விட்டார்.கூரேசர் முக்குறும்பு அறுத்து,
சிறந்த சீடருக்கு இலக்கணமாகத் திகழ்ந்து கூரத்தாழ்வானாக உயர்ந்த தற்கு,மூலகாரணம் தேவப்பெருமாள் நம்பிகளை விட்டுப் பேச ச்ச்செய்த தாகும்.

படங்கள்:
1.அவதார ஸ்தலமான பூவிருந்தவல்லியில் கோவிலும்,
நம்பிகளும்.
2.&3.காஞ்சீபுரத்தில் நம்பிகள் சந்நிதி.வரதராஜப் பெருமாள் கோவிலில் நம்பிகள்.
4.ஆறு வார்த்தை பெற்றவரும்,
பெற்றுக்கொடுத்தவரும்,
சொன்னவரும்.
5,6,:ஶ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள்

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி💐🙏


கருத்துகள் இல்லை: