புதன், 25 செப்டம்பர், 2024

நவராத்திரி நான்காம் நாள்...

நவராத்திரி நான்காம் நாள் : வழிபடும் முறை!

அக்டோபர் நான்காம் தேதி அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். அருளாளரான குமர குருபரர் மீனாட்சி அம்மன் சந்நிதியில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றம் செய்தார். இதில் அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன. அக்காலத்தில் ஐந்து வயதுப் பெண் குழந்தைளை பெற்றோர் ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை ஊசல் பருவம் என்பர். அதுபோல நவராத்திரியின் நான்காம் நாளான மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக மாறி ஊஞ்சலில் ஆடுவதை காண்போமே!

நைவேத்யம்: புளியோதரை
தூவ வேண்டிய மலர்கள்: செந்தாமரை, ரோஜா

பாட வேண்டிய பாடல்:

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே!
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே!
உத்தமி பைரவி ஆடுகவே!
வழிபடும் எங்கள் வாழ்வினிலே
வழித்துணையாய் வந்து ஆடுகவே! 



கருத்துகள் இல்லை: