புதன், 30 அக்டோபர், 2013

25.குதம்பை சித்தர்

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது. இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார். ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.

குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி...இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார். அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை. அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்... தவம்... தவம்... எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன்.  இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும். என்றான். குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. யார் வாசியோகம் என்ற  கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இங்கு இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!

தியானச் செய்யுள்:

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே
அத்திமரம் அமர்ந்து
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்
நல்லாசி தருவாய் குதம்பை பெருமானே

காலம்: குதம்பை முனிவர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் ஆகும்.
26.பிண்ணாக்கீசர்
கோபாலா, எனக்கு பசிக்கிறதே! யாராவது உணவு தாருங்களேன், என்று அரற்றினார் பிண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால், பிண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம். பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும். நல்லதை எண்ணியிருந்தால், தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ, கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும். டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு, சர்க்கரை, உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும். காரணம் என்ன தெரியுமா? எண்ணங்களின் வண்ணம் தான்! கெட்ட எண்ணங்கள், பிறரை வஞ்சிக்கும் குணம், பணத்தைப் பற்றிய நினைப்பு, அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும், அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை. சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம், செழிப்புடன் திகழ்வார்கள். இதே போல், பிண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார். அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுவார்.

இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர், தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார். கண்ணா, கண்ணா, கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது. பசி வந்தால் கோபாலா, எனக்கு உணவு கொடேன், எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால், பழம் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு பழம், கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார். பசி தீர்ந்து விடும். மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து, இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார். இப்படியே காலம் கடந்த வேளையில், ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார். சீடனே, பொந்தில் இருந்து வெளியே வா, என்றார். கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார். கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார். கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார். உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் பிண்ணாக்கீசர். இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின. ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார். தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார். நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார். அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன. சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது. சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார். அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது. மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின. இதனால், அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார்.

தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம், உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார். அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். தங்களைச் சீடர்களாக ஏற்று, அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர். அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும், உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர், அதற்கு மறுத்து விட்டார். மேலும், தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். பின்னர், ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர். அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான். உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ, புதைக்கவோ செய்தால் இந்த  கோவணம் உன்னோடு வருமா? கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார். அவற்றைப் பாடல்களாக வடித்தார். ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார். அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர், அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை. ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது. சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள், அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர். 18 சித்தர்கள் தொடரை படித்த நாம், அவர்களை தினமும் மனதார வணங்கி, தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.

புதன், 23 அக்டோபர், 2013

எது இனிய இல்லற வாழ்க்கை முறை?

ஆண் - பெண் உறவையோ, இயக்கத்தையோ உலகத்தின் எந்த மதமும் மறுத்ததில்லை. அப்படி எந்த மதமாயினும் மறுத்திருக்குமானால் உலக இயக்கமே தடுமாறிப் போயிருக்கும் இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துமதம் இவை அனைத்துமே முழுக்க இல்லறத்தை ஆதரித்தவையாகும். பெண்டு பிள்ளைகளைத் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதி உடையவன் ஆக மாட்டான் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் உபதேசிக்கிறார். பெண்டுகள், பிள்ளைகள், சுற்றத்தார், இனத்தார், நாட்டாரை துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனவலிமை இல்லாமையே அதன் காரணம். வசிஷ்டர், வாமதேவர் முதலிய மகரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்து கொண்டு மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக அக்காலத்து ரிஷிகள் பிரம்மச்சாரிகளாக இருந்த, நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்து முடித்து, பின்பு இல்வாழ்க்கையில் புகுதலே மஹரிஷிகளுக்குள் வழக்கமாக நடைபெற்று வந்தது. ஆண் - பெண் உறவு என்பது வெறும் காம இச்சை அன்று. உடல் உறவின் புனிதத் தன்மையைக் கோயில் பிரகாரத்தில் இருந்து கோயிலின் உள்ளேயும் பார்க்கிறோம் அல்லவா! அப்படியே வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்க வேண்டும்.

உற்சாகமான ஒரு தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொள்வதை, ஆடவர்கள் புனிதமான கோயில் வாழ்க்கையாக எண்ணிக் கொள்ள வேண்டும். வெறும் வரட்டுத்தனமும், வெறும் காம வேட்கையுமல்ல இல்லற வாழ்க்கை என்பது. பல கடமைகளுக்கு நடுவே காதல் என்றாலும், காதல் தான் முதலிடம் வகிப்பது அந்த முதலிடத்தைக் கணவன் தான் மனைவிக்குத் தந்தாக வேண்டும். கற்புடைய மனைவியுடன் காலதலுற்று அறமும் தர்மமும் தவறாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே கோயில், வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைக்குகையிலோ, மற்ற கோயிலிலோ கடவுளைக் காண மாட்டான். மனைவியுடன் துயிலும் போது, மனைவியின் கையால் சாப்பிடும் போது, மனைவி தமக்குப் பெற்றெடுத்துத் தந்த குழந்தை தொட்டிலில் தூங்கும் போது இந்தப் புனிதமான வாழ்க்கை உலகில் எவருக்கும் அமையாது என்கின்ற உற்சாகம் வேண்டும். பல கடமைகளுக்கு மேலே தான் அவள் காதலை வைத்திருக்கிறாள் என்றாலும் அவளுடைய உடம்பையும் அமைதிப் படுத்த வேண்டியது, நிம்மதிப்படுத்த வேண்டியது கணவனின் கடமையாகும். ஒரு பெண் வாழ்ந்தாள் என்று சொல்வதே அவள் கணவனோடு வாழ்ந்தாள் என்பதைத் தான் குறிக்கும்.

இல்லறமல்லது நல்லறமில்லை. அனுசரித்துப் போவது தான் இல்லறத்தில் மிக முக்கியம். நல்ல குழந்தை ஒரு வீட்டில் பிறந்திருக்கிறதென்றால் கணவன், மனைவி நன்றாக வாழந்திருக்கிறார்கள் என்பது அதன் பொருளாகும். கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடக்கூடாது. மனைவியிடம் இருந்து கணவனும் கடமையை எதிர்பார்க்கலாம். அதை நிறைவேற்ற அவள் தயங்கக் கூடாது. ஒரு இந்தியப்பெண் தன்னுடைய கணவனின் தேவைகளை எந்தக் காலத்திலும் மறுக்கவும் மாட்டாள். மறக்கவும் மாட்டாள். எனவே கணவன் - மனைவி உறவு என்பது புனிதமானது. கோயில் போன்றது. கோபுரத்துச் சிலை போன்றது என்பதை மனதிலே கொண்டு வாழ்வைத் துவக்குங்கள். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். அவனுக்கு வருகின்ற மனைவியும் - அவளுக்கு வருகின்ற மண மகனும், ஆக மாப்பிள்ளை வந்தாலும் மருமகள் வந்தாலும் உங்களைப் பார்த்து அவர்கள் வாழக் கற்றுக் கொள்வார்கள். ஆரோக்கியமான சந்ததி உருவாகும். உங்களாலே நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகள் வாழ்கின்றன. உங்கள் பேரன் பேத்திகள் வாழ்கின்றார்கள். உங்களைப் பார்த்து அடுத்த வீடு, அக்கம் பக்கம் வாழ்கின்றது. அத்தோடு சமுதாயமே வாழ்கின்றது. நல்ல சமுதாயத்துக்கு அடிப்படை ஒரு நல்ல குடும்பம்.
காதலில் வெற்றிபெற செல்ல வேண்டிய கோயில் எது தெரியுமா?

எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று ஒரு சில கோயில்கள் உள்ளது. இப்படி தனித்துவம் வாய்ந்த கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் போது, காதலிப்பவர்களை ஒன்று சேர்ப்பதற்கென்று கோயில் ஏதும் உண்டா என்பது பலரது கேள்வியாக உள்ளது.

அது சரி....

காதல் என்றால் என்ன? ஒரு சிலரிடம் கேட்டால் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பது காதல் என்பார்கள். காதல் என்றால் இதுமட்டும் தானா? இல்லை....இல்லவே இல்லை...

காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது. விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன்  ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரிடம் வைக்கும் அன்பு இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பால் திரிபவர்களும், தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் ஆகும்.

தாரகாசூரன் போன்ற அசுரர்கள் அழிய முருகனின் அவதாரம் தேவை. எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் கூறி சிவன் மீது அம்பெய்து சிவனது தியானத்தை கலைக்க கூறினர். மன்மதனும் சிவன் மீது கணை தொடுக்க, கோபமடைந்த சிவன் மன்மதனை எரித்து விடுகிறார். பதறிப்போன ரதி தேவி, சிவனிடம் மடிப்பிச்சை கேட்க சிவனின் அருளால் மன்மதன் உயிர்ப்பிழைக்கிறான். சிவன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

காதலர் தினத்தன்று ஆண், பெண் காதலர்கள் தான் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதில்லை. பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று  இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் பற்றி மேலும் அறிய..
ஆன்மீகம் மற்றும் மருத்துவம் கூறும் துளசியின் மகத்துவம் தெரியுமா?

துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர்.

துளசியின் மருத்துவ குணங்கள்:  எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா?

அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா?

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர். அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன். இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். இத்தகைய கர்ணனை தான் கொடைத் தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.
சித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்!

பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிபிட்டுள்ளனர் அவை ..

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும். நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும். மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.

வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
மாமியார் உடைத்தால் மண் குடம்: மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பதன் விளக்கம் தெரியுமா?

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.
ரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்?

சூரியனுக்குரிய வடதிசைப்பயணம் துவங்கும் மாதம் தை. இம்மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமியன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சூரியனின் தேர் மேற்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம். சூரியன் வலம்வரும் பொன்மயமான தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்களும், ஏழு ஜ்வாலைகளும், ஏழு சமித்துகளும், ஏழு ஹோமங்களும் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன என்று வேதங்கள் சொல்கின்றன. பொதுவாக, தேருக்கு எட்டு குதிரைகள் பூட்டுவார்கள். ஆனால் சூரியனின் தேருக்கு ஏழு குதிரை மட்டுமே உள்ளது. ஒளியின் வண்ணங்கள் ஏழு. அதுவே ஏழு குதிரைகள் என்று கூறப்படுகிறது. அவை: காயத்ரி, பிரகுஹதி, உஷ்ணிக், ஜகதி, திரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பங்கி என்பனவாகும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதால், அன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

ரதசப்தமி குளியல்: சூரிய உதயத்துக்குமுன் எழுந்து சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளில் ஏழு எடுத்து, அத்துடன் அட்சதையும்(பச்சை அரிசி சிறிதளவு), சிறிதளவு விபூதியும் தலையின்மீது வைத்துக்கொண்டு கிழக்குத் திசை நோக்கி நீராட வேண்டும். சுமங்கலிகள் குளிக்கும்போது, ஏழு எருக்க இலைகளை அடுக்கி, மேல் இலையில் சிறிது மஞ்சள் தூளும், அட்சதையும் வைத்து, உச்சந்தலையில் வைத்து நீராட வேண்டும். ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் தேர்க்கோலமிட்டு, சுற்றிலும் செங்காவிப்பட்டை இட்டு சூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழி பாட்டால் ஆரோக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்!

சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஏற்படும் போது அவர்களை மச்சக்காரன் என்பார்கள். பிறக்கும்போதே இருக்கும் மச்சம் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களையும், யோகங்களையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும் பலன்களை ஆண் மற்றும் பெண்களுக்கு கீழ் கண்டவாறு குறிபிட்டுள்ளனர்.

ஆண்களுக்கான பலன்கள்: புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள், நெற்றியின் வலது புறம் – தனயோகம், வலது புருவம் – மனைவியால் யோகம், வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம், வலது கண் – நண்பர்களால் உயர்வு, வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம், இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி, மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை, மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம், மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை, மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல், மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம், வலது கன்னம் – வசீகரம், தயாள குணம், இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு,வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம், இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம், காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம், தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம், கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை, இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார், வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர், வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை,அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

பெண்களுக்கான  பலனகள்: நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து, நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு, நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி, மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி, மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள், மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம், மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர், இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு, வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை,வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம், நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம், கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்,இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்,  தலை – பேராசை, பொறாமை குணம், தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை, தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம், தொப்புள் – ஆடம்பரம், படாடோபம், வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை, அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள், இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.