வெள்ளி, 11 அக்டோபர், 2024

படலம் 66 : சண்டிகேஸ்வர பிரதிஷ்டை... இரண்டு

படலம் 66 : சண்டிகேஸ்வர பிரதிஷ்டை... இரண்டு

51. லோக பாலர்களையோ சண்டிகேஸ்வர அஷ்ட மூர்த்திகளாயோ சந்தனம், புஷ்பங்களால் பூஜித்து, தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களை பூஜிக்கவும்.

52. ஆத்ம வித்யா, சிவ தத்வங்களையும் பிரம்மா முதலியவரை அதன் அதிபர்களுடனும் க்ஷ்மா மூர்த்திகள் அதன் ஈசர்களையும் லோக பாலர்களையும் பூஜிக்க

53. முன் சொன்ன மூர்த்திகளையோ அல்லது ருத்ர பக்தர் முதலானவர்களையோ சண்ட ஆஸந மூர்த்தி மூலத்துடன் பிரும்மாங்க ஸஹிதமாய் பூஜிக்க

54. ஆசார்யர், ரித்விக்குகளுடன் ஹோமத்திற்கான குண்டத்தை அடைக. குண்டத்தையும் அக்னியையும் ஸம்ஸ்கரித்து திக்குகளில் தத்புருஷம் முதலான மூலமந்த்ரங்களையும்

55. தென்கிழக்கு முதலான கோண குண்டங்களில் ஹ்ருதயாதி மந்திரங்களையும் ப்ரும்மாங்கங்களுடன் பிரதானத்தில் சண்டேசரையும் பூஜித்து சமித்து, நெய், அன்னம், எள் முதலியவற்றால் ஹோமம் செய்யவேண்டும்.

56. நெல், பொறி, ஸத்துமா, யவைகளுடன் புரசு, அத்தி, ஆல், இச்சி சமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும் பிரதானத்தில் புரசையும்

57. வன்னி, கருங்காலி, மயில் கொந்றை, பில்வ சமித்துக்களை தென் கிழக்கு முதலிய திசை குண்டங்களிலும் தத்வம், மூர்த்தி மூர்த்தீசர்களை முறைப்படி தனியாக ஹோமம் செய்ய வேண்டும்.

58. சாந்தி கும்ப ஜலத்தை பிரோக்ஷித்து அந்தந்த மந்திரங்களின் ஜபகார்யத்தை தர்பையைத் தொடுவதின் மூலம் ஒவ்வொரு பாகத்திலும் செய்யவேண்டும்.

59. பிறகு விடியற்காலையில் ஆசார்யர் ரித்ரிஜர்களுடன் சுத்தராய் சண்டபிம்பத்தை எழுப்பி கும்பத்தையும் அக்னியையும் பூஜிக்க

60. ஆசார்யர், பிராயச்சித்தத்தின் பொருட்டு பூர்ணாஹுதியை செய்து அவர்களை வஸ்திரம், தங்க மோதிரங்களால் பூஜிக்கப்பட்டு தட்சிணையை அடைந்தவராய்

61. தட்சிணையானது ஐந்து நிஷ்கம் என்பது அதமமாகும். அதன் இருமடங்கு மத்யமம் ஆகும். அதன் மும்மடங்கு உத்தமமாகும். மற்றவர்களுக்கு முன்போல் செய்ய வேண்டும்.

62. பிரம்ம சிலைகளின் பிரதிஷ்டை விஷயத்தில் ஆசார்யன் முன் போல் நல்ல முகூர்த்தத்தில் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து, மந்திரங்களால் பூஜிக்க

63. ஆசார்யன் சண்டேசருக்கு முன்னால் ஸ்தண்டிலத்தில் உள்ள கும்பங்களிலிருந்து கும்ப ஜலத்தை சண்டேசருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

64. ஸ்நபனம், அதிகமான மஹா நைவேத்யங்களையும் உற்சவர் எனில் உத்ஸவத்தையும் தேவியுடனோவெனில் தேவியின் பிரதிஷ்டையையும் செய்ய வேண்டும்.

65. இந்த சண்டேச்வர பிரதிஷ்டையை பாலஸ்தாபனத்துடனோ, இல்லாமலோ செய்யலாம். இவ்வாறான சண்டேசஸ்தாபனத்தை எந்த மனிதர் செய்கிறாரோ அவர்

66. ஆயுளை விரும்பியவர்கள், பூர்ண ஆயுளையும், தனத்தை விரும்பியவர் ஐஸ்வர்யங்களையும், வித்யையை விரும்பியவர்கள் குறைவிலா வித்யையையும் புத்ரனை விரும்பியவர் புத்திரனையும் அடைவர்.

67. செல்வத்தை வேண்டியவர் செல்வத்தையும் இன்பம் வேண்டுவோர் உயர்ந்த ஸ்தீரீகளையும் அடைவர் சண்டேசரை வணங்கியவருக்கு பிறவித் துன்பம் இல்லை.

68. இவ்வாறான சண்டேச ஸ்தாபனத்தில் பின் அவர் பூஜை கூறப்படுகிறது. முன் போல் ஸ்நபனம் முதலியவற்றைச் செய்து ஸகளீகரணம் செய்து

69. சண்டேசரை ஹ்ருதயத்தால் தியானித்து, சாமான்யர்க்யத்தை செய்து, ஹா என்ற சந்தனாதிகளாலோ விருப்பம் போலோ, த்வார பாலகர், த்வார பூஜை செய்து, த்வார நடுவில் அஸ்த்ரத்தால் பூஜித்து

70. ஆலயத்தினுள், பிரவேசித்து, பூதசுத்தி செய்து ஸகளீகரணம் செய்த தேஹராய் சண்டேசரை ஹ்ருதயத்தில் பூஜித்து

71. அஸ்த்ர பிராகாராதி, திக் பந்தனங்களினால், ஸ்தான சுத்தியை செய்து, ஸம்ஹிதா மந்திரங்களினால் பாத்யம், அர்க்யம், ஆசமனம் கொடுத்து

72. விசேஷார்க்யம் மட்டும் செய்து, அந்த அர்க்யத்தாலோ, த்ரவ்யத்தை ஹ்ருதய மந்திரத்தால் புரோக்ஷித்து ஹ்ருதயத்தில் மந்திர சக்தியின் பொருட்டு மந்திரங்களைக் கூறி சுத்தி செய்யவேண்டும்.

73. முன் போல் பூஜித்து, சண்டேசாநாய வித்ம ஹே எனச் சொல்லி டங்க ஹஸ்தாய தீமஹி என்ற பதத்தையும் பின்

74. தன்னஸ்ச்சண்ட என்ற பதத்தையும் பின் பிரசோதயாத் என்ற பதத்தையும் கூறி ஸாமான்யர்க்யத்தைக் கொடுத்து நிர்மால்யத்தை ஜலத்தில் விட வேண்டும் (சண்டேசாநாய வித்மஹேடங்கஹஸ்தாய தீமஹி தன்ன ஸ்சண்ட: பிரசோதாயத்)

75. சண்டரை அஸ்த்ர மந்திரத்தாலும் சாமான்யர்க்க ஜலத்தாலும் சோதித்து, ஆஸநம், மூர்த்தி, மூலத்தால் பூஜித்து, ஈசானாதி மந்திரங்களாலும் பூஜித்து

76. ஹ்ருதயாதிகளையும் அங்கங்கு பூஜித்து மூலத்தால் சண்டேசரை பிந்துவிலிருந்து ஆவாஹித்து ஸ்தாபித்து ஹ்ருதய மந்திரத்தால் ஸன்னிரோதனம் செய்து

77. ஹ்ருதயாதி மந்திரங்களை நியாஸம் செய்து, அங்கங்களையும் ஒன்றிய பாவனையாக செய்து, பாத்யம், ஆசமனம், அர்க்யம், ஹ்ருதய மந்திரத்தால் கொடுத்து

78. தைலாபிஷேகம் முதலியவைகளாலும் பஞ்ச கவ்யம், பஞ்சாம்ருதங்களாலும் அபிஷேகம் செய்து வஸ்த்ரம், சந்தனம், புஷ்பங்களால் சண்டேசரை சக்திக்கேற்ப அலங்கரித்து

79. அர்ச்சநாங்க முறைப்படி தூப, தீபங்களை ஹ்ருதய மந்திரத்தால் கொடுக்க ஹ்ருதயாதிகளையும், ருத்ரபக்தர்களையும், திக் பாலர்களுடன் அஸ்த்ரங்களையும்

80. சண்டநாதரைச் சுற்றியுள்ளதாக, ஆவரணமாக பூஜித்து அர்க்யம் முதலான உபசாரங்களையும் கொடுத்து நைவேத்யமும் தாம்பூலமும் கொடுத்து

81. பராங்கமாக இருப்பின் சிவ நிவேதனத்தையும் நிவேதிக்க. ஜபம் செய்து ஸமர்பிக்க. பரிவாரங்களுக்கு பலியையும் கொடுக்க.

82. விமர்சையாக செய்யுமிடத்தில் புரசு, நெய், அன்னங்களால், ஹோமம் செய்து மூலத்தின் தசாம்சத்தில் அங்க மந்திரங்களினால் ஹோமம் செய்து

83. நித்யோத்ஸவத்தில் சண்டேசருக்கு தனி உத்ஸவம் செய்ய வேண்டும். சண்டேச அஸ்திரத்தால் புஷ்பம், அன்னம், அக்ஷதை லிங்கங்களைப் பூஜிக்க

84. காலை, மதியம், இரவுகளிலோ, சண்டே சரின்றியோ, பாதுகா ஆராதனத்துடன் ஆலயத்தை நோக்கி நுழைய வேண்டும்.

85. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு காலங்களிலும் விருப்பமான காலங்களிலும் சண்டேசரை ஒவ்வொரு நாளும் முறையுடன் பூஜிக்க வேண்டும்.

86. சண்டநாதரின் பராங்க பூஜை முறையின் விசேஷம் இங்கு கூறப்படுகிறது. முதலில் நிர்மால்ய பூஜையையும் பீடம் முதலானவைகளில் ஹ்ருதய மந்திரங்களினால்

87. சண்டேசருக்கு என்று எது தீர்மானித்ததோ, சிவனுக்கு நிவேதிக்கப்பட்டதோ அந்த நைவேத்யம் முதலியவைகளை பூஜையின் முடிவில் சண்டேசருக்கு நிவேதிக்க வேண்டும்.

88. மூலாலயம் சென்று, சுத்த ஜலம், சந்தனம் புஷ்ப மாலைகளால் பூஜித்து அந்த பூஜிக்கப்பட்ட நிர்மால்யத்தை சண்டேசருக்கு நிவேதிக்க வேண்டும்.

89. ஆத்மார்த்த பூஜையிலும் பரார்த்த பூஜையிலும், சாமான்யமாக இம்மாதிரி சொல்லப்படுகிறது. நித்யம் இம்மாதிரி அனுசரிப்பது போக மோக்ஷத்தைக் கொடுப்பதாயுள்ளது.

90. ஆயுள், ஞாபக சக்தி, ஆரோக்யம், சவுபாக்யம் குறைவிலாச் செல்வம் மற்றவைகளும் சண்டருடைய அர்ச்சனையினால் அடையப்படுகின்றது.

91. இஷ்ட ஸித்தியின் பொருட்டு சண்டேசருக்கு ஸ்நபனம், ஹோமம் செய்ய வேண்டும். முன்பு போல் ஸ்நபனம் அமைத்து மத்திய கும்பத்தில் சண்டேசரையும்

92. தேவியுடன் எனில் வர்த்தனியில் தேவியுடன் பூஜிக்க வேண்டும். அஷ்ட மூர்த்திகளை கிழக்கு முதலான திக்குகளிலும் பஞ்ச பிரம்மத்துடன் பூஜிக்க

93. ருத்ர பக்தர்கள், எட்டு பேரை நவகலசாபிஷேகத்திலும், இந்திராதிகள், வஜ்ராதிகளை வெளியில் இருபத்து ஐந்து கலசத்திலும்

94. ஐம்பது கலசங்களில் வெளியில் சண்டேச அஸ்த்ரத்தை மட்டுமோ நூறு கலச ஸ்னபனத்தில் வெளியில் ஹ்ருதயம் மந்திரம் மாத்திரமோ பூஜிக்க

95. உத்ஸவம், தமனாரோஹனம், பவித்ரோத்ஸவங்களைச் செய்யவும். தீபாவளி, வஸந்தோத்ஸவம், தனுர்மாத பூஜை, முதலிய மாஸோத்ஸவத்தையும் செய்ய வேண்டும்.

96. நவ நைவேத்யம் என்ற பூஜையும், ஜீர்ணோத்தாரணத்தையும், பிராயச்சித்தத்தையும், செய்ய வேண்டும். மேலும், உத்ஸவத்தின் கொடியில் டங்கத்தையோ (மழு), வ்ருஷபம், மாத்திரமோ எழுத வேண்டும்.

97. சிவோத்ஸவத்திலும் சண்ட நாதருக்கு உத்ஸவத்தை இங்கு செய்ய வேண்டும். த்வஜ, ஹோம, பலியுடனோ இல்லாமல் வெறும் வீதி வலம் மட்டுமோ செய்ய வேண்டும்.

98. சண்டாஸ்த்ரத்தில் மழு போல் செய்து, அதில் சண்டிகேஸ்வரரின் பிம்பத்தை அமைக்கவும். பிரதிஷ்டை, உத்ஸவம் முதலிய கார்யங்களில் எது கூறப்பட வில்லையோ அவை எல்லாவற்றையும் முன் போல் அமைப்புடன் சண்டிகேஸ்வர மந்திரத்துடன் கூடியதாக செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாம மஹாதந்திரத்தில் சண்டேச பிரதிஷ்டா விதியாகிற அறுபத்தி ஐந்தாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: