ஞாயிறு, 14 ஜனவரி, 2024

சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மா!

சாது  ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மா!
--------------------------------------------------------------
இறைவன் கருணைக் கடல் - அனைவருக்கும் பொதுவானவர்.  அவரை உள்ளுணர்ந்து அனுபவிப்பவர்களுக்கே சாகரத்தின் தன்மை புலப்படும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இறை அனுபவம் ஒரு பிரமிப்பான விஷயம் மட்டுமே. இறை நிலையை ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே அடையும் பாக்கியம் ஏற்படுகிறது. சிலருக்கோ மத்திம வயதை தாண்டி அடைய முடிகிறது.

இங்கு நாம் சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாளைப் பற்றி தெரிந்து கொள்வோம். கருணை பொங்கும் முகத்தோடு தன்னை நாடி வரும் அன்பர்களின் தேவையை அறிந்து அருள் செய்தவர். கடலூர் முது நகரை சேர்ந்த லட்சுமி அம்மாள், அரங்கசுவாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் கிருஷ்ணவேணி. சிறுவயதிலேயே உறவினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கணவரின் வேலை நிமித்தமாக வட இந்தியாவிற்கு பயணமான கிருஷ்ணவேணி அம்மாள் பாட்னா, ஹரித்வார் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அதுவே அவரின் ஆன்மீக தேடலுக்கு ஆரம்ப புள்ளி. வாழ்க்கைப் பயணம் சுமூகமாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரின் கணவர் இறந்து விட, அவரின் துறவற வாழ்க்கை ஆரம்பமானது. அவரின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களுக்கு பித்தர் போல் இருக்கவே அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். திருச்செந்தூர் சென்ற  கிருஷ்ணவேணி அம்மாள் ஒரு சித்தர் தன் பின்னே தொடர்ந்து வரும் படி ஆணையிட அவரைத் தொடர்ந்து பாபநாசம் - பொதிகை மலைக்கு சென்றார். சித்தர் அங்கிருக்கும் ஒரு குகையை சுட்டிக்காட்டி அங்கு இருக்கும் படி கூறினார். அங்கு ஒரு சிவலிங்கமும் இருக்கின்றது. அதுவே கிருஷ்ணவேணி அம்மாளின் இருப்பிடமாக மாறியது. அக்குகையில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேல தவம் செய்திருக்கிறார். இந்த குகை புலஸ்தியர் தவம் செய்த இடம் என நம்பப்படுகிறது.

துறவரம் பூண்ட ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாள் பொதிகை மலையில் 75 வருடங்களுக்கு மேலாக தன்னந்தனியாக வசித்து வந்தார். பல முறை ஸ்ரீ அகத்திய முனிவர் உள்ளிட்ட சித்தர்கள்  கிருஷ்ணவேணி அம்மாளுக்கு காட்சி கொடுத்துள்ளனர். ஸ்ரீ துர்க்கை அடிக்கடி காட்சி கொடுத்து வழி நடத்தியதாக  கிருஷ்ணவேணி அம்மாள் கூறியிருக்கிறார்.

பொதிகை மலையில் அகத்தியர் அருவிக்கு மேலே கல்யாண தீர்த்தத்திற்கு மிக அருகில் கிருஷ்ணவேணி அம்மாள் வசித்த இடம் இருக்கிறது. சிவன் - பார்வதி திருமண கோலத்தை காண உலகமே திரண்டிருந்த கால கட்டத்தில் வடதிசை மக்களின் சுமை தாங்காமல் தாழ்ந்த விட அதை சமன் செய்வதற்காக அகத்தியர் தென்திசைக்கு அனுப்பப்பட்டார். தென்னிந்தியாவில்  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிகை மலைக்கு வந்த ஸ்ரீ அகத்திய முனி மலையில் தவம் மேற்கொண்டதற்கு புராண சான்று இருக்கின்றன. இங்கு அகத்தியருக்கு சிவன் - பார்வதி திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடமே கல்யாண தீர்த்தம்.

தனி பெண்மணியாக யாருமே அதிகம் நடமாடாத இடத்தில்  வசித்த கிருஷ்ணவேணி அம்மாளுக்கு பல நேரங்களில் குகைக்கு வெளியே கரடியும் உள்ளே பாம்பும் காவல் காத்து வந்தன. வன தேவதை போல் வாழ்ந்த கிருஷ்ணதேவி அம்மாளை சில சமயம் பார்க்க வரும் அன்பர்கள் பழம் உணவு கொடுத்துள்ளார்கள் . அவ்வாறு கொடுத்தவர்களின் வாழ்வில் ஏற்றங்கள் வர ஆரம்பித்தது. அதிலிருந்து சாது கிருஷ்ணவேணி அம்மாள் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரைக் காண மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. பக்தர்களின் நலன் பொருட்டு கிருஷ்ணவேணி அம்மாள் கீழிருந்து மேல் கல்யாண தீர்த்தம் வரை படிக்கட்டுகள் தானே அமைத்து வசதி செய்து கொடுத்தார். அங்கே ஒரு மடமும் அமைத்தார்.

கிருஷ்ணவேணி அம்மாளின் தவ ஆற்றல் அளப்பரியது. மிகவும் வறட்சியான காலத்தில் வருண ஜெபம் செய்து மழையை பொழியச் செய்துள்ளார். ஒரு சமயம் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளக்காடாக காட்சி அமைத்த கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி எங்கேயும் கிருஷ்ணவேணி அம்மாவின் நடமாட்டம் தெரியவில்லை. என்ன ஆனாரோ அனைவரும் பயந்தனர். நான்கு நாட்கள் கழித்து குகையிலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல், மிகவும் மலர்ச்சியாக வெளியே வந்தார் சாது கிருஷ்ணவேணி அம்மாள் .

அவர் காலத்தில் இருந்த சித்தர்களான மாயம்மா, பூண்டிசித்தர் போன்ற மகான்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் கிருஷ்ணவேணி அம்மாள். 2011 ஆம் ஆண்டு, தன்னுடைய 120 ஆவது வயதில் சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஸ்தூல தேகத்தை துறந்தார். இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இன்றும் அவரின் அஸ்தி அவர் கட்டிய மடத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது. அவரை எண்ணி வேண்டிய செயல்கள் யாவும் இன்றும் அவர்கள் பக்தர்களுக்கு நடந்தேறுகிறது.  

சித்திரை, அவிட்டம், மிருகசீரிஷம் அன்பர்கள் சாது கிருஷ்ண வேணி அம்மாளை வணங்கி வர அவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். மேலும் ஜாதகத்தில் குரு/சந்திரன்/ சனிக்கு 1, 2, 5, 9ல் கேது இருக்க பெற்றவர்களுக்கு எளிதாக சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும் கிடைக்கும். இவர்கள் கிருஷ்ணவேணி அம்மாளை தியானித்து வர நன்மை பயக்கும். இந்த அமைப்பு இல்லாமல் இருந்தாலும் மேற்கூறிய கிரகங்களுக்கு 1, 2, 5, 9ல் கோட்சார கேது வரும் காலங்களிலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கப் பெறும்.

சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாள் மடம்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அகத்தியர் அருவிக்கு மேலே சாது கிருஷ்ணவேணி அம்மாள் மடம் உள்ளது.

கருத்துகள் இல்லை: