ஞாயிறு, 14 ஜனவரி, 2024

தியாகராஜ சுவாமிகள்...

தியாகராஜ சுவாமிகள்.. அவர்களின்  ஆராதனை விழா... பொதிகை டீவியில்..

காமிரா சுவாமிகளின் பிரதிமை, நடக்கும் அபிஷேக ஆராதனைகளையும் காட்டின. கூடவே இரு வரிசையில் அமர்ந்து உற்சாகமாக "எந்தரோ" என தலை ஆட்டியபடி  தாளம் போட்டு பாடிக் கொண்டு இருந்த ஆண்/ பெண் பாடகர் /பாடகியரையும். பெண்கள் பட்டுப்புடவை, பெரிய பெரிய நெக்லஸ், வடங்கள் . வைர மூக்குத்தி, கம்மல்கள் டாலடிக்க... அவர்களைப் பார்த்த உடன்  என் மனதில் இவர்கள் எல்லோரும் குறிப்பாக பெண்கள்... இன்று இங்கு வந்து உட்கார்ந்து பாட வழி வகுத்த அந்த மாது சிரோண்மணியின் நினைவு வந்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது.

அவர் "வித்தியாசுந்தரி.. பெங்களூர். புட்டலஷ்மி நாகரத்னம்மா" அவர்கள். அவர் 1878 இல், மைசூர் நஞ்சன் கூட்டில் பிறந்தவர்.
பெற்றோர்  புட்டலஷ்மி, வழக்கறிஞர் சுப்பாராவ்... புட்டலஷ்யின் மூதாதையர்கள். மைசூர் அரசவையில் பாடகர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும், விதூஷிகளாகவும் பணியாற்றியவர்கள். தேவரடியார் மரபு...

நாகரத்னம்மாவிற்க்கு ஸமிஸ்கிரதம், இசை, கன்னடம், ஆங்கிலம், தமிழ் தெலுங்கு, நடனம், ஹரிகதை ஆகியவை இயற்க்கை யாகவே கை வந்தது கலை. தனது 15 வது வயதில் வயலின் கலைஞராகவும் நடனக் கலைஞராகவும் தனது முதல் மேடை நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.

 மைசூர், விஜயநகரம், திருவிதாங்கூர், பொப்பிலீ அரசவைகளில் ஆஸ்தான விதூஷி பதவி, பெயர், புகழ். பெரும் பொருள் அவர் வீட்டுக் கதவைத் தட்டியது... செல்வம் கொழித்தது. ஆனால் அவர் மனம் தாமரை இலை தண்ணீர் போல் அவற்றில் ஒட்டவில்லை. சென்னையில் இருந்த போது நாகரத்னம்மா தனது குருவான 'பிதாரம் கிருட்டிணப்பா' மூலம் அப்போதைய தியாகராஜரின் சமாதியின் பாழடைந்த நிலையை கேல்விப்பட்டார்... அவர் மனம் துடித்தது. எப்பேர்பட்ட இசை பிதாமகரின் சமாதிக்கு இந்த நிலையா? தியாகப்பிரம்மத்தின் கிருதிகளை பாடி பல வித்வான்கள் பெரும் பொருள் ஈட்டுகிறார்கள், மேடைக்கு மேடை பலர் வாய் கிழிய பேசுகிறார்கள்... ஆயிரக்கணக்கான சங்கீத ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.. ஆனால் அவர் சமாதியை பராமரிக்க நாதி இல்லையா? அங்கும் நீயா/நானா போட்டி பெறாமைகள் அதன் பலன் சாமாதி சீர் குலைந்து கிடந்தது .

நாகரத்னம்மா செயலில் இறங்கினார். தன் சொந்தப் பணத்தில் சமாதி நிலத்தை மீட்டெடுத்து... திருத்திக் கட்டி... ஸ்ரீ தியாகராஜரின் பிரதிமையை 1921 இல் ஸ்தாபித்தார்... கும்பாபிஷேகம்... தினமும் பூஜை பிரார்த்தனை  ஏற்பாடு செய்தவர் இந்த மாது சிரோண்மணி தான். தியாகராஜரின் நினைவாக வருடாந்திர இசை ஆராதனையை முதன் முதலாக சிறப்பாக, கிரமமாக நடத்த  பிள்ளையார் சுழி போட்டவரும் இவரே. அங்கும் காழ்ப்புணர்ச்சி பெண்கள் ஆண்களுடன் சமமாகப் உட்கார்ந்து பாடுவதா? என்று குறிப்பாக இவர் 'நீ அந்த மரபு' என. கட்டிடம் எழும்பியது, நிலம் மீட்டது, கும்பாபிஷேகம் எல்லாம் இவர் பணத்தில் ஆனால் இவர் அங்கு பாட அனுமதி இல்லை. "நான் பாடவில்லை ஹரிகதை செய்யவாவது அனுமதியுங்கள்" என்று கெஞ்சினார். ஊகும்... சனாதன தர்மம் என்ன ஆவது? என ஆங்கார மறுப்பு. இவரா அஞ்சுபவர்? ஆராதனை நாளில் கட்டிடத்தின் பின் பெண்களைக் கூட்டி பாட ஆரம்பித்தார். அதை "பொண்டுகள் கட்சி" என பரிகசித்தது. ஆண்களின் "பெரிய கட்சி.." பிறகு நாகரத்னம்மா முயற்ச்சியால் இரண்டும் இணைந்ததாம்... பல இலக்கிய இசை நூல்களை மீட்டெடுத்து தன் சொந்த செலவில் பதிப்பித்தவர்.

முக்கியமாக திருவையாற்று "முத்துப்பழனி" (1730 - 1790) தஞ்சை நாயக்க அரசரான பிரதாபசிம்மன் (1739-1763) அரசவையில் இருந்த இளம் தெலுங்குப் பெண் கவிஞர். தேவரடியார் மரபில் வந்தவர்... இவரது புகழ்பெற்ற படைப்பு "ராதிகா சாந்தவனம்" இந்தநூல் ராதை யின் பார்வையில் பெண்களின் விரக தாபத்தை நாயகன் நாயகி பாவத்தை வெளிப்படையாகப் பேசும் ஒரு  அற்ப்புத இலக்கியம் நாட்டியத்திற்க்கு மிகவும் தோது. அப்போதைய அரசர் அவையினரால்  பாராட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாடி அபினயிக்கப் பட்டை புகழ் பெற்றது.

இது 1910ல் பெங்களூர் நாகரத்தினம்மாவால் திருத்தப்பட்டு  மறுபதிப்பு கண்ட போது சில வக்கிர புத்திக் காரர்களால் ஆபாசப் பிரதியாக சித்தரிக்கப்பட்டு தடை. "ஒரு தேவரடியாள் எழுதினாள்.. மற்றொரு தேவரடியார் பதிப்பிதாள்"  என கேவலமாக பேசினார்கள். இவர் அசரவில்லை..  அதன் அற்ப்புதமான இலக்கியச் சுவயைப் பாருங்கள் என தொடர் போராட்டம் இத்தடை 1947ல் இல் விலகியது. புத்தகம் வெளி வந்து புகழ் பெற்றது.

இவர் வெளிட்ட மற்ற நூல்கள்: “மத்யா பானம்”
“தியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி”  “பஞ்சகீரண பௌதீகம்”  போன்றவை. ஒரு துறவி போல் வாழ்ந்தார். பெண் உரிமைகளுக்கு போராடினார். குறிப்பாக தேவரடியார் பெண்கள் நல்வாழ்விற்க்கு.

நாகரத்னம்மா அவர்கள் மே மாதம் 19 ஆம் தேதி 1952 இல் தனது 74 வயதில் மறைந்தார். தியாகராஜரின் சமாதிக்கு அடுத்ததாக இவரது நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் மட்டும் அன்று சமாதி நிலத்தை மீட்டெடுத்து, சிலை அமைத்து வழிபாடு, ஆராதனை ஆரம்பித்து இருக்காவிட்டால்? அந்த முயற்ச்சி எடுத்திருக்க விட்டால்? "ஆத்மீக பூமியாம்"!! செந்தமிழ் நாட்டில் எத்தனையோ கோவில்கள் பாழடைந்து,, மண்ணோடு மண்ணாகி கிடப்பது போல் சமாதியின் கதியும்  ஆகி இருக்கும். அது பற்றி ஆவேச பட்டி மன்றங்கள் நடந்தபடி இருந்து  இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெங்களூர் நாகரத்னம்மா அவர்களின்  மலர் பாதம் பணிந்து  நமஸ்காரம்  

வாழ்க அவர் புகழ்...

கருத்துகள் இல்லை: