ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்... சில நினைவுகள்!


 ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்... சில நினைவுகள்!
 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து திருத்துறை பூண்டி செல்லும் சாலையில் கோட்டூர் என்ற ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 'இருள் நீக்கி' கிராமத்தில் மகாதேவ ஐயருக்கும், சரஸ்வதி அம்மாளுக்கும் குமாரராக 1935-ம் ஆண்டு ஆடி மாதம் 3- ம் தேதி ஜயேந்திரர் பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஒரு நன்னாளில் `சுப்ரமண்யம்' எனப் பெயர் சூட்டினார்கள்.

அவரது வாழ்க்கை விழுப்புரத்தில் தான் ஆரம்பித்தது. ஏனெனில் இவரது தந்தைக்கு தென்னக ரெயில்வே விழுப்புரத்தில் தான் பணி. மகாதேவ ஐயர் சம்ஸ்கிருத அறிவும், ஆங்கில அறிவும் அதிகமுள்ளவர். சுப்ரமண்யத்துக்கு வீட்டிலேயே கல்விப் பயிற்சி குருமுகமாகத் தொடங்கி நடைபெற்றது. பின்னர் சுப்ரமண்யம் விழுப்புரம் பீம நாயக்கன் தோப்பில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலத் தொடங்கினார்.

பள்ளியில் முதல் மாணவராகத் திகழ்ந்த சுப்ரமண்யத்தின் மீது அந்தப் பள்ளிஆசிரியருக்கு அளவு கடந்த பிரியம். ''ஊரும், உலகமும் புகழும் பிள்ளையாக உங்கள் மகன் வரப்போகிறான்" என்று சரஸ்வதி அம்மாளிடமும், மகாதேவ ஐயரிடமும் ஆசிரியர் சொல்வார். சுப்ரமண்யம் ஜகத்குருவாகி உலகமே போற்றும் படி வாழ அவர் வாக்கு பலித்திருக்கிறது. ஜயேந்திரருக்கு`மஹா பெரியவா `ஶ்ரீ பரமாசார்யாள்’ என்று உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றி வணங்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் 1954 - ம் ஆண்டு மார்ச் 22 - ம் தேதி ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69 - வது ஆச்சார்யராக நியமிக்கப்பட்டார்.

ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தன்னை 'இச்சாசக்தி' என்றும் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை 'கிரியா சக்தி' என்றும் வர்ணித்திருக்கிறார். இவர் பீடாதிபதியாக இருந்த காலங்களில் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பல்வேறு ஆன்மிகப் பணிகளையும், அறப்பணிகளையும் செய்திருக்கிறார். பல திருக்கோவில் கும்பாபிஷேகங்களையும் நடத்தியிருக்கிறார்.

'ஜன் கல்யாண்' மற்றும் 'ஜன் ஜாக்ரன்' ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களுக்குப் பல வகைகளிலும் சேவை செய்திருக்கிறார். சேரிப் பகுதிகளுக்குச் சென்று அவர்களிடமும் ஆன்மிக உணர்வைப் பரப்பினார். ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் நினைவுகள் குறித்து முனைவர் சங்கர நாராயணனிடம் பேசினோம்...

"குழந்தை போன்ற உள்ளம் கொண்டவர். எல்லோரிடமும் கனிவாகத்தான் பேசுவார். குருமீது அளவில்லா பக்தி கொண்டவர். அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து குருவின் [மஹா பெரியவா] அதிஷ்டானத்தை வந்தனம் செய்த பிறகே அன்றாடக் காரியங்களைத் தொடங்குவது அவரது வழக்கம். குருவுக்கான பூஜைகளை நியமப்படி நடத்தி வந்தார்.

ஆன்மிகப் பணிகளை மட்டுமே அதிகம் செய்து வந்த நிலையில் இவரது காலத்தில் காஞ்சி மடம் சமூக பணிகளையும் அதிகம் செய்ய தொடங்கியது. வடகிழக்கு மாநிலங்களில் கூட கல்வி, மருத்துவப் பணிகளை செய்து வந்தது காஞ்சி மடம்.

பழங்குடி மக்களின் கல்வி, மருத்துவத்தில் அதிகம் கவனம் செலுத்தியவர் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். ஏனாத்தூர் பல்கலைக்கழகத்தில் நவீனக் கல்வி முறைகள் உண்டாகக் காரணமானவரும் இவர் தான். பாலிடெக்னிக், இன்ஜினீயரிங் கல்லூரி முதலிய தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவித்துக் கொண்டுவரச் செய்தார்.

நாட்டில் எங்கே எப்போது இயற்கைப் பேரிடர்கள் நடை பெற்றாலும் உடனே பரிதவித்துப்போவார். அங்கே என்ன செய்யலாம்? என்ன என்ன பொருள்களை உதவிக்கு அனுப்பலாம் என்று உடனே ஆலோசிப்பார். சுனாமி, புயல், உத்தரகாண்ட் பெரு வெள்ளம்... என எல்லாப் பேரிடர்களின் போதும் காஞ்சி சங்கர மடம் பங்கு கொண்டு நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்க ஆணையிடுவார்.

பொருள்கள் போய் சேர்ந்து, மக்களை அடையும் வரை தூங்கவே மாட்டார். மக்களின் மீது மாளாத பிரியம் கொண்டவர் ஸ்வாமிகள். சத்தமில்லாமல் அவர் செய்த சமூகப்பணிகள் ஏராளம்.

வயதாகி உடம்பு ஒத்துழைக்காத வேளையில் கூட அவரது ஆன்மிகப்பணிகள் ஓயவே இல்லை. அவரிடமிருந்து கற்க வேண்டிய விஷயம் அவரது மனோபலம் தான். எந்த நிலையிலும் தளர்ந்து போக மாட்டார். அவருடைய அசாத்திய உழைப்பு அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும். இறுதி வரை தொடர்ந்த ஜபதபங்கள், வாசிப்பு, சிந்தனை, சொற்பொழிவு எல்லாமே ஆச்சர்யப்படுத்துபவை.

இம்மி அளவு கூட விரதங்களில் சமரசம் செய்துகொள்ளாதவர். தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் எத்தனை, எத்தனை மருத்துவ மனைகள், கல்வி நிலையங்கள், ஆதரவு நிலையங்கள்! எல்லாவற்றையும் தமது நேரடிப் பார்வையிலேயே நிர்வாகம் செய்தவர் ஸ்வாமிகள்.

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆலயங்களைப் புனரமைத்தவர் ஸ்வாமிகள். காஞ்சி காமாட்க்ஷி ஆலயத்தின் விமானத்துக்குத் தங்கம் வேய்ந்தது, ஏகாம்பர நாதருக்கு பெரிய தேர் செய்தது என அவரது ஆலயப்பணிகள் எண்ணிலடங்காதவை. வட நாட்டில் தமிழகக் கோவில்கள் பலவற்றை உருவாக்கினார்.

எத்தனையோ இடிந்து போன கோவில்களைப் புனருத்தாரணம் செய்து நித்ய பூஜைகள் நடைபெறக் காரணமாக இருந்தவர். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு அவர் செய்த திருப்பணிகள் ஏராளம். அழிய இருந்த எத்தனையோ ஆன்மிகப் புத்தகங்களைப் படியெடுக்க உதவி செய்து பாதுகாத்தவர்.

ஆன்மிகம் குறித்து அவர் செய்த ஆய்வுகள், பல புதிய புதிய தகவல்களை நமக்குக் கொடுத்திருக்கிறது. வௌவால்கள் பறந்து கொண்டிருந்த அநேக ஆலயங்களில் கடந்த 30 ஆண்டுகளில் மறு மலர்ச்சி உண்டாக்கி, மக்களை வரச்செய்த புண்ணிய காரியங்களைச் செய்தவர்.

நாட்டில் எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து, அம்பாள் நாமங்களைப் பாராயணம் செய்து கொண்டேயிருப்பார். அங்குள்ள மக்கள் குணமாகவும், நிலைமை சீரடையவும் வேண்டிக் கொண்டேயிருப்பார். எளிமையாக, எளிய மக்களுக்கு ஆதரவாக வாழ்ந்தவர் ஸ்வாமிகள்.  அவரது பணிகளைத் தொடர்ந்து செய்வதும், எளிய மக்களைத் தொடர்ந்து பாதுகாப்பதும் அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாக அமையும்...


 

கருத்துகள் இல்லை: