வெள்ளி, 4 டிசம்பர், 2020

பக்தசேனா

பக்தசேனா

உத்திரபிரதேசத்தில் உள்ள அவந்தி என்ற சிறுநகரில் சேனா என்பவர் வசித்தார். முடி திருத்தும் பணியாளரான இவர், சிறந்த கிருஷ்ண பக்தர். அரண்மனையில் பணிபுரிந்தார். மன்னர் தரும் கூலியால் இவரது வாழ்க்கை நல்ல முறையில் சென்றது. கண்ணனை தினமும் தியானம் செய்வது சேனாவின் வழக்கம். அவரை நினைத்து, தியானத்தில் ஆழ்ந்து விட்டால் இவரை யாராலும் எழுப்ப முடியாது, இவரது மனைவி உட்பட! ஒருமுறை இப்படித்தான் சேனா கடும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அப்போது மன்னர் ஆள் அனுப்பி, அவரை அவசரமாக அரண்மனைக்கு அழைத்து வரச்சொன்னார். காவலர்கள் விரைந்தனர். வீட்டு வாசலில் நின்றபடி, ஏய்! சேனா, உடனே புறப்படு. மன்னர் அழைக்கிறார். அவருக்கு சவரம் செய்ய வேண்டும், என கத்தினர். உள்ளிருந்து அவரது மனைவி வந்தாள். கணவர் உள்ளிருப்பது தெரிந்தால், அவர்கள் உள்ளே புகுந்து விடுவார்கள். இதனால் அவரது தியானத்திற்கு தொந்தரவாகிவிடும் என நினைத்தாள் அவள். எனவே, காவலப் பெருமக்களே! அவர் வீட்டில் இல்லை. வெளியே எங்கோ சென்றிருக்கிறார். வந்தவுடன் வரச்சொல்கிறேன் என்றாள். காவலர்கள் அவளிடம் அதிகாரமாக, எப்போது வருவான்? எங்கே போயிருக்கிறான், என கேட்டனர். ஐயா! அவர் எங்கு செல்கிறார் என்பது பற்றி என்னிடம் கூறவில்லை. அவர் வந்தவுடன் அனுப்புகிறேன். மன்னர் பிரானிடம் தயவு செய்து சற்று நேரம் தரச்சொல்லுங்கள். அவர் எங்கிருந்தாலும் நானே தேடி அழைத்து வந்து விடுகிறேன், என கெஞ்சலாகச் சொன்னதும், காவலர்கள் புறப்பட்டு விட்டனர். மன்னரிடம் தகவல் சொல்லப்பட்டது.

எனக்கு அவசரப்பணி உள்ளது. அவன் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து வாருங்கள், என்று உத்தரவிட்டார் மன்னர். அவரது உத்தரவையடுத்து காவலர்கள் மேலும் இரண்டு முறை சேனாவின் வீட்டிற்குச் சென்றனர். மீண்டும், மீண்டும் அவரது மனைவி அதே பதிலைத்தான் சொன்னாள். காவலர்கள் செய்வதறியாமல் பதைபதைப்புடன் நின்றனர். பக்கத்து வீட்டில் இருந்த ஒருவனுக்கு சேனாவைப் பிடிக்காது. அவன் காவலர்களிடம் ஓடிவந்தான். ஐயாமார்களே! எனக்கு சேனா இருக்குமிடம் தெரியும், என்றான். காவலர்கள் முகத்தில் பிரகாசம். எங்கே... எங்கே... ? அவசர அவசரமாய் கேட்டனர். அதோ! வீட்டிற்குள் தான் ஒளிந்திருக்கிறான். சோம்பேறி! வேலைக்கு செல்ல சோம்பல்பட்டு உள்ளே இருந்து கொண்டு பொய் சொல்கிறான், என்றான். காவலர்களுக்கு ஆத்திரம். உடனே அவரது மனைவி தடுத்தும் உள்ளே புகுந்து விட்டனர். அங்கே ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் சேனா. அவரை முதலில் எழுப்பிப் பார்த்தனர். அவர் எழவில்லை. எனவே தூக்கிப் பார்த்தனர். கண்ணனோடு ஐக்கியமாயிருக்கும் நிலையில் அவரைத் தூக்க அவர்களால் முடியுமா என்ன? மன்னருக்கு தகவல் பறந்தது. அவருக்கு மீசை துடித்தது. என்னிடம் பணிசெய்யும் ஒருவன் என்னை மதிக்கத் தவறி விட்டானா? அவன் இனி உயிருடன் இருக்கக்கூடாது. அவன் கையைக் கட்டி கடலில் தூக்கி போடுங்கள், என உத்தரவிட்ட நேரத்தில், சேனா வந்து விட்டார். மன்னன் சினம் தணிந்தான். ஏய்! மடையனே! இவ்வளவு நேரம் எங்கே போய் தொலைந்தாய்? அவசரமாய் வெளியே செல்ல வேண்டியுள்ளது. வந்து சவரம் செய்து தொலை, என்று கத்தினார். தங்கக் கிண்ணத்தில் தைலம் கொண்டு வரப்பட்டது. சேனா கையை கிண்ணத்தில் விட்டான். அவ்வளவுதான். தங்கக்கிண்ணத்துக்குள் இருந்த தைலம் பிரகாசித்தது. தைலத்தில் பாண்டுரங்கன் சிரித்துக்கொண்டிருந்தான். இதைக்கண்ட மன்னர் அதிர்ந்தே விட்டார். இதென்ன வியப்பு! இவன் கிண்ணத்தை தொடவும், அதில் பாண்டுரங்கன் தெரிகிறானே! ஐயையோ! தியானத்தில் இருந்த இவன் உண்மையிலேயே சக்திமிக்கவன் தான். இவனது கை தைலத்தில் நனைந்ததும் பாண்டுரங்க தரிசனம் கிடைக்கிறதே, என எண்ணிய மன்னன் தன் ஆசனத்திலிருந்து எழுந்தான். சேனாவின் காலில் பொத்தென விழுந்தான். சேனா! என்னை மன்னித்து விடு. உன் மகிமை தெரியாமல், உன்னை கடலில் வீசச் சொன்னேன். உன் தியானத்தைக் கெடுத்து விட்டேன், என மன்றாடினான். சேனாவின் கழுத்தில் தான் அணிந்திருந்த முத்து மாலையை அணிவித்தான். விலை உயர்ந்த நவரத்தின மோதிரத்தையும் மாட்டி விட்டான்.

சேனா மன்னரிடம், என்ன காரியம் செய்தீர்கள். இந்த கீழ்மகனின் பாதத்தில் தாங்கள் விழுவதா? நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என கேட்க, சேனா! உன் மகிமை உனக்கு தெரியாது. சென்று வா, என்றார். அரசவையில் இப்படி நடக்க, அதே நேரத்தில் சேனா வீட்டில் தியானம் கலைந்து எழுந்தார். அவரது மனைவி நடந்ததைச் சொன்னாள். மன்னர் ஆள் அனுப்பியதும், அவர்கள் தூக்க முயன்றதையும் சொல்லி கலவரமடைந்த சேனா, அவசரஅவசரமா அரண்மனைக்கு தன் சவரப் பெட்டியுடன் ஓடினார். மன்னா! என்னை மன்னியுங்கள். கண்ணன் மீது கொண்ட பக்தியால் தியானத்தில் மூழ்கிப்போனேன். தவறு நடந்து விட்டது. வாருங்கள். நொடியில் சவரம் செய்து விடுகிறேன், என்றார். மன்னருக்கு ஏதும் புரியவில்லை. அன்பனே! என்னப்பா இது. சற்று முன்தானே இங்கே வந்தாய். பொற்கிண்ணத்தில் பாண்டுரங்கனின் தரிசனம் காட்டினாய். இப்போது மீண்டும் வந்துள்ளாயே! காவலர்கள் கொடுத்த தொல்லையால் குழம்பிப் போய் விட்டாயோ? என்றார் கனிவுடன். பின்பு சேனாவின் கழுத்தையும், கையையும் கவனித்தார். தான் பரிசளித்த முத்துமாலை, மோதிரமும் இல்லை. அவை எங்கே? என்றார் மன்னர். தாங்கள் எனக்கு பரிசளித்தீர்களா? அவ்வளவு விலையுயர்ந்த அணிகலன்களை அணியும் பாக்கியம் இந்த ஏழைக்கு ஏது மன்னா! என்றார் சேனா குழப்பத்துடன்.  அவையோர் குழம்பினர். மன்னனோ மயக்க நிலைக்கே போய்விட்டான். சேனா கலக்கத்தில் தன் கையிலுள்ள சவரப் பெட்டியை நழுவ விட்டார். உள்ளிருந்து முத்துமாலையும், மோதிரமும் கீழே விழுந்தன. ஆ... இவை என் பெட்டிக்குள் எப்படி வந்தன? என கூக்குரலிட்டார் சேனா. அப்போது ஒரு குரல் ஒலித்தது. பக்தர்களே, கலங்க வேண்டாம். நான் தான் பாண்டுரங்கன்! என் பக்தன் சேனா, என் நினைவாக தியானத்தில் இருந்த போது, அவனது பணியை நானே செய்தேன். நானே பரிசு பெற்று, சேனாவின் பெட்டிக்குள் வைத்தேன். கிண்ணத்தில் கையை நனைத்து என்னை நானே வெளிப்படுத்தினேன், என்றது. பாண்டுரங்கனே! நீயே நேரில் வந்தாயா? இந்த மனிதப்பிறவியைத் தொட்டு சவரம் செய்தாயா? சேனா! உன்னால் எனக்கு அந்த பாண்டுரங்க தரிசனம் கிடைத்தது. அவனது கை என் உடலில் பட்டது. நான் பாக்கியசாலி... பாக்கியசாலி..., என கத்திய மன்னர் மயங்கியே விட்டார். சேனாவின் நிலை அதை விட மோசமாயிற்று. பாண்டுரங்கா! மன்னருக்கு காட்சி தந்தாய். இந்த ஏழையை ஏன் மறந்தாய்? எனக்கும் காட்சி தரமாட்டாயா? என அவர் அழுதார். கிருஷ்ண பரமாத்மா அவருக்கும் காட்சி கொடுத்தருளினார். அதன்பின், சேனாவை தன் குருவாக ஏற்றுக் கொண்டான் மன்னன். அவரது உபதேசங்களைக் கேட்டு, நல்லாட்சி புரிந்தான். பாண்டுரங்கனின் கருணையே கருணை


கருத்துகள் இல்லை: