சனி, 23 மே, 2020

பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை

,🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒரு முறை நாரத முனிவர், வைகுந்தம் சென்று லட்சுமி தேவிக்கு பணிவுடன் சேவை செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, நாரதருக்கு வேண்டிய வரத்தை தர விழைந்தார். நாரத முனிவர் லட்சுமி தேவியிடம், தான் வேண்டும் வரத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அவ்வாறே நாரதருக்கு லட்சுமி தேவி வாக்களித்த பிறகு, நாரதர், தனக்கு பகவான் நாராயணருடைய மஹா பிரசாதம் வேண்டுமென்று கேட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத லட்சுமி தேவி, வருத்தத்துடன் நாரதரிடம், "என் கணவர் என்னிடம் அவருடைய மகா பிரசாதத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். நான் எவ்வாறு என் கணவரின் ஆணையை மீற முடியும்? என்னால் முடியாது" என்று பதிலளித்தார். லட்சுமி தேவியின் வாக்கை நினைவுபடுத்திய நாரதர் தனக்கு எவ்வாறாவது பகவானுடைய மகா பிரசாதம் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட லட்சுமி தேவி, செய்வதறியாது தவித்தார். அன்று மதியம் பகவானுக்கு அன்போடும் கவனத்தோடும்  உணவு பரிமாறினார் லட்சுமி தேவி. இருப்பினும் பகவான் நாராயணர், தன் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்று அறிந்து அதற்கான காரணத்தை கேட்டார். பகவானின் பாதகமலங்களில் சரணடைந்த படியே, வேதனையுடன் தன்னுடைய சூழ்நிலையை எடுத்துரைத்தார் லட்சுமி தேவி. மிகவும் பரிவோடு பகவான், தன் மனைவியிடம், "இன்றொருநாள் என்னுடைய ஆணையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிட்ட தட்டை நீ நாரதருக்கு வழங்கலாம். ஆனால் நான் என் முகத்தை எதிர்திசையில் திருப்பியவுடன், எனக்கு தெரியாமல் நீ தட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, அவ்வாறே செய்தார். நாரத முனிவரிடம் மகா பிரசாதத்தை வழங்கினார்.

அதை பெற்ற நாரதர் மிகவும் மரியாதையுடன் அதனை உண்டு மகிழ்ந்தார். மகா பிரசாதத்தை உண்டவுடன் நாரதர், மெய் மறந்த நிலையில் பகவானின் நாமங்களை பாடியபடி இடைவிடாது ஆடவும் செய்தார். அவருடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்ஒரு பைத்தியக்காரனை போல் அண்டம் முழுவதும் ஒவ்வொரு கிரகமாக ஓடி கொண்டிருந்தார். இறுதியாக சிவ பெருமானின் இருப்பிடமான கையிலாயத்திற்கு வந்தடைந்தார்.

சிவபெருமான் நாரதருடைய நிலை கண்டு ஆச்சரியமடைந்தார். பகவான் விஷ்ணுவின் பக்திக்கடலில் மூழ்கியிருந்த நாரதர், தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த சிவபெருமான், நாரதரை சமாதானப்படுத்தி அவரிடம் அதற்கான காரணத்தை வினவினார். நாரத முனிவர், பகவானின் மகா பிரசாதம் கிடைத்த கதையை கூறினார். சிவபெருமான் மிகவும் ஆச்சர்யத்துடன் நாரத முனிவரிடம், "நாரத முனிவரே! பகவான் நாராயணருடைய மகா பிரசாதத்தை உண்ணக்கூடிய பெரும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். எனக்கு சிறிது மகா பிரசாதத்தை கொண்டு வந்துள்ளீர்களா?" என்று வினவினார். நாரதர், தான் மகா பிரசாதம் ஏதும் எடுத்து வரவில்லை என்று கை கூப்பிய படி தன் வருத்தத்தை சிவபெருமானிடம் தெரிவித்தார். அப்போது தன் கைவிரலின் நகக்கண்ணில் ஒரு சிறுதுளி மகா பிரசாதம் இருந்ததை பார்த்த நாரதர், மகிழ்ச்சியில் துள்ளியபடி, சிவபெருமானிடம் காண்பித்தார். அதை தன் வாயில் வைத்தவுடன், சிவபெருமான் மிகவும் பக்திக்கடலில் மூழ்கியபடி, பிரளயம் ஏற்படும்போது மட்டும் ஆடும் சிவதாண்டவத்தை ஆடினார். இதனால் அண்டம் முழுவதும் அதிர்ந்தது. தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இது பிரளயத்திற்கான சமயம் இல்லை. பிறகு ஏன் சிவபெருமான் தாண்டவம் ஆடுகின்றார்? என்று குழம்பினர். இருப்பினும் சிவபெருமானை நெருங்க பயந்து, அனைவரும்  பார்வதி தேவியை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமானை  சமாதானப்படுத்தாவிடில், பிரளயம் ஏற்படும் என்று கூறினர்.

பார்வதி தேவியும் இதற்கு சம்மதித்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானை நெருங்கிய பொது, அவர் சுய நினைவிற்கு வந்தார். பார்வதி தேவி, சிவபெருமானிடம், "ஐயனே! தங்களுக்கு என்னவாயிற்று? எதற்காக தாண்டவம் ஆடினீர்கள்?" என்று வினவினார். சிவபெருமான் நடந்ததை விவரித்தார். பார்வதி தேவி மிகவும் ஆச்சரியமடைந்தார். அதோடு சிவபெருமானிடம், "எனக்கு மகா பிரசாதம் வைத்துள்ளீர்களா?", என்று வினவினார். சிவபெருமான், "எனக்கே நாரதருடைய நகக்கண்ணில் இருந்த ஒரு துளி மகா பிரசாதம் மட்டும் தான் கிடைத்தது. அதில் நான் எப்படி மீதம் வைக்கமுடியும்?" என்று பதிலளித்தார்.

இதை கேட்ட பார்வதி தேவி மிகவும் கோபம் கொண்டார். அவருடைய கோபத்தினால் எழுந்த அக்னி, அண்டம் முழுவதும் வெட்பத்தை உண்டாக்கியது. பாதாள லோகங்கள் முதல் பிரம்மலோகம் வரை இருக்கும் அனைவராலும் அந்த வெட்பத்தை உணர முடிந்தது. ஏதோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். உடனடியாக பிரம்மதேவரின் தலைமையில் அணைத்து தேவர்களும் பகவான் விஷ்ணுவிடம் இதை தெரிவிப்பதற்காக வைகுந்தம் விரைந்தனர். பகவான் விஷ்ணு, உடனடியாக கருட வாகனத்தில், கயிலாயம் நோக்கி புறப்பட்டார்.

பகவான் விஷ்ணுவை கண்டவுடன், பார்வதி தேவி, தனது வணக்கங்களை தெரிவித்தார். பகவான் விஷ்ணு, பார்வதி தேவியை ஆசீர்வதித்து, "உனக்கு எவ்வளவு மகா பிரசாதம் வேண்டுமென்றாலும் நான் தருகிறேன். தயவு செய்து உன்னுடைய கோபத்தை கைவிடுவாயாக. இல்லையென்றால் அகிலம் முழுவதும் அழிந்து விடும்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பார்வதி தேவி இதற்கு சம்மதிக்கவில்லை. "எனக்கு மட்டும் நீங்கள் மகா பிரசாதம் கொடுத்தால் போதாது. என்னுடைய பிள்ளைகளான அகிலத்து வாசிகள் அனைவருக்கும் உங்களுடைய மகா பிரசாதம் கொடுக்க வேண்டும். உங்களுடைய மஹாபிரசாதம் கிடைக்காமல் நான் தவித்ததுபோல் என்னுடைய பிள்ளைகளும் தவிக்க நான் விரும்பவில்லை" என்று கூறினார். இதை கேட்ட பகவான் விஷ்ணு, "ததாஸ்து (அப்படியே ஆகட்டும்)" என்று கூறினார். மேலும், பார்வதி தேவியிடம், "உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் நீலாசால தாமம் என்ற இடத்தில அவதரிப்பேன். என்னுடைய இந்த கோவிலானது பிரசாத விநியோகத்திற்கென்றே பிரசித்தி பெறும். இங்கு வந்து யார் பிரசாதம் உண்டாலும் அவர்கள் முக்தி அடைவார்கள்.  என்னுடைய பிரசாதம் அனைத்தும் உனக்கு முதலில் நெய்வேத்தியம் செய்யப்படும். அதன் பிறகே அது மகா பிரசாதம் என்று ஏற்கப்படும். இந்த மகா பிரசாதம் அனைவருக்கும் விநியோகிக்கப்படும். இதற்காக நீ என்னுடனேயே இருக்க வேண்டும். என்னுடைய கோவிலின் சந்நிதானத்திலேயே உன்னுடைய ஆலயமும் இருக்கும். உன்னுடைய கணவர் உனக்கு மகா பிரசாதம் கொடுக்க தவறியதால் அவருடைய ஆலயம் என்னுடைய சந்நிதானத்திற்கு வெளியே இருக்கும்" என்று கூறினார்.

பகவான் விஷ்ணு, பூரியில். ஜெகந்நாதராக அவதரித்தார். பார்வதி தேவி அங்கு விமலா தேவியாக அவதரித்தார். பகவான் ஜெகந்நாதருக்கு நெய்வேத்தியம் செய்யப்படும் அனைத்தும் விமலா தேவிக்கும் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அதன் பின்னரே அது மஹாபிரசாதமாக ஏற்கப்படுகிறது. இந்த மகா பிரசாதத்தை அனைத்து மக்களும் பாகுபாடின்றி பெற்றுக்கொள்ளலாம். சாஸ்திரங்கள் கூறுவது யாதெனில், "ஒரு நாயின் வாயிலிருந்து கூட ஒரு பிராமணர் மஹாபிரசாதத்தை எடுத்து உண்ணலாம். எந்த வித தீட்டும் கிடையாது. இதுவே பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை".
கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருடிய கதை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருட ஆரம்பித்த கதை மிகவுமே சுவாரசியமானது. கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது தாய் யசோதை கிருஷ்ணருக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் தருவாள். இதன் சுவை கிருஷ்ணருக்கு மிகவுமே பிடிக்கின்றது. வெண்ணெய் எங்கிருந்தோ வருவதால்தான் அம்மா நமக்கு சிறிதளவே வழங்குகின்றாள் என்று கிருஷ்ணர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒருமுறை கிருஷ்ணரும் பலராமரும் தவழ்ந்தவாறு விளையாடிக் கொண்டே ஒரு அறையின் பக்கமாக சென்றனர். அந்த அறை இருட்டாக இருப்பினும் உள்ளே சென்ற அவர்கள் பானைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதில் என்ன இருக்கின்றது என்ற ஆவலில் அதனைப்பிடித்துக் கொண்டு எழுந்துநின்று, பானைக்குள் கைவிட, அது வெண்ணெயால் நிறைந்திருப்பதைக் கண்டு வியப்புற்று அள்ளி அள்ளி உண்டார்கள். இவ்வளவு வெண்ணெயை வைத்துக் கொண்டு அம்மா நமக்கு சிறிது சிறிதாகத்தானே தருகின்றாள் என்று எண்ணியாறு விளையாட்டையும் மறந்து வெண்ணெயை உண்டு கொண்டிருந்தார். அச்சமயத்தில் குழந்தையை தேடிக்கொண்டு அங்கே வந்த யசோதை கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களின் ஒளியில் வெண்ணெய் மயமாக இருப்பதைக் கண்டார். என்ன கிருஷ்ண வெண்ணெய் திருடி உண்கின்றாயா என்றாள். உடனே கிருஷ்ணர் என்ன சொல்வதென்று தெரியாமல் இல்லையம்மா நீங்கள் என்னை உடல் முழுவதும் ஆபரணங்களால் நிரப்பியுள்ளீர்கள், இந்த ஆபரணங்கள் எனது உடலை மிகவுமே சூடுபடுத்துவதால் அதனை தணிக்கவே வெண்ணெய் பானைக்குள் கைவிட்டு குளிர்ச்சி செய்துகொண்டேன் என்றாள். உடனே அவள் உனது கன்னம் மற்றும் வாயில் வெண்ணெய் நிரம்பியுள்ளதே அது எப்படி என்றாள். மாட்டிக்கொண்டோமே என்று நினைத்த கிருஷ்ணர் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்தவர், இந்த அறையின் இருட்டில் எறும்புகள் என்மேல் ஏறியதே தெரியவில்லை, எறும்புகள் எனது கன்னத்தை கடித்தபோது, எனது வெண்ணெய் கையுடன் அதனை தள்ளிவிட்டேன், அதனால்தான் கன்னம் முழுவதும் வெண்ணெயாக இருக்கின்றது அம்மா என்றார். அடடா எனது கண்ணனை நானே தவறாக நினைத்துவிட்டேனே என்றவாறு அன்புடன் தூக்கியணைத்து கொண்டாள். அப்போதுதான் கிருஷ்ணர் ஆஹா விருந்தாவனத்தின் புத்திசாலி பெண்மணியான எனது அன்னையையே நான் ஏமாற்றிவிட்டேன் என்கின்றபோது இனி யார் வீட்டில் வேண்டுமானாலும் எளிதாக வெண்ணெய் திருடலாம் என்று முடிவு செய்தார். இவ்வாறாக கிருஷ்ணர் முதன்முதலாக தனது நவநீத சோரத்தை அதாவது வெண்ணெய் திருடிய லீலையை மிக அழகாக அரங்கேற்றினார்.
*தேவி மஹாத்மயம்*

2) *வைக்ருதிக ரஹஸ்யம்.-*

ரிஷி சொன்னார்- ஓம். சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களுடையவள் தேவி. அவளே சர்வா, சண்டிகா, துர்கா, பத்ரா, பகவதி, ஆவாள்.

ஹரியின் யோக நித்ராவாக இருக்கும் பொழுது, தமோ குணம் நிறைந்த மஹா காளியாவாள். இவளை மது கைடப அசுரர்களை வதம்  செய்யும் பொருட்டு, ப்ரும்மா

எழுப்பினார். அவளும் மாயையாக வந்தாள். பத்து வாய், பத்து புஜங்கள், பத்து கால், கைகள், முப்பது விசாலமான கண்கள், பற்கள் என்று பயங்கரமாக இருந்தாலும், மஹாலக்ஷ்மியால் உருவாக்கப் பட்டவளாதலால் தனித் தன்மையுடையவளாக கவர்ச்சியாகவே இருந்தாள். கைகளில், வாள், பாணம், கதை, சூலம், சக்கரம், சங்கம், புசுண்டி என்ற ஆயுதம், இவைகளையும், பரிகம், கார்முகம், சிர்ஷம் என்பவைகளையும்  வைத்திருந்தாள். இவளே வைஷ்ணவி மாயா. மஹாகாளியே இவள். எளிதில் இவளை நெருங்க முடியாது. வணங்கி ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு வசப்படுவாள்.

அனைத்து தேவ சரீரங்களிலும் இருந்து, தோன்றிய மஹாலக்ஷ்மி, மஹிஷமர்தினி என்ற பெயர் பெற்றவள். வெண்ணிறமும், அதை விட வெண்மையான ஸ்தனங்களும், கருமையான புஜங்களும், சிவந்த மத்ய பாகமும், பாதங்களும், கருமையான முழங்கால்களும், அழகிய பின் பாகமும், சித்ர விசித்ர ஆபரணங்களுமாக, வாசனைப் பொருட்கள் நிறைந்த அங்க ராகங்களுமாக, காந்தி, உடலமைப்பு, இவைகளால் மங்களகரமாக , விளங்குபவளுமாக, பதினெட்டு புஜங்களும், சில சமயம், ஆயிரம் கைகளுடையவளுமாக, சதியான இவளை பூஜிப்பவர் சொல்வர். இவள் கைகளிலுள்ள ஆயுதங்கள் – அக்ஷ மாலா, கமலம், பாணம், அசி என்ற வாள், குலிசம், கதை, சக்கிரம், த்ரிசூலம், பரசு, சங்கம், கண்டா- மணி, பாசக்கயிறு, சக்தி, தண்டம், சர்ம, சாபம், பான பாத்ரம், கமண்டலு, இந்த ஆயுதங்களுடன் கமலத்தில் அமர்ந்தவளான மஹா லக்ஷ்மி, அனைத்து தேவர்களும் ஒன்றாக விளங்கும் மகா சக்தி ஆவாள். இந்த விதமாக பூஜிப்பவர்கள், இவ்வுலகிலும், பரலோகத்திலும் ப்ரபுவாக, அரசனாக ஆள்வான்.

அதே போல, சத்வ குணம் நிறைந்த கௌரியின் உடலில் இருந்து வெளிப்பட்டவளே சாக்ஷாத் சரஸ்வதி என்பவளாவாள். அவளே சும்பாசுரனை அழித்தவள். அதன் பொருட்டு எட்டு புஜங்களையும், பாண முஸலங்களையும், சூல, சக்கரங்களையும், சங்கையும், கண்டா என்ற மணி இவை தவிர லாங்கலம், கார்முகம் என்பவைகளையும் தரித்தவள். பக்தியுடன் இவளை நன்றாக பூஜை செய்பவர்களுக்கு சர்வஞத்வம் – அனைத்தையும் அறியும் சக்தி என்பதைத் தருவாள். இவளே நிசும்ப மதினி- நிசும்பனை சம்ஹாரம் செய்தவள். அரசனே, இவைகள் தான் அம்பிகையின் ரூபங்கள். இவர்களை உபாசிக்கும் விவரங்களையும் சொல்கிறேன் கேள்.  பூமியை ஆளும் அரசனே. ஜகன்மாதாவின் பல விதமான உபாசனை முறைகளையும் தெரிந்து கொள்,

மஹாலக்ஷ்மியை பூஜை செய்யும் பொழுது, மஹா காளி, மஹா சர/ஸ்வதி – இவர்களை முறையே, தெற்கு, வடக்கு திசைகளில் பூஜிக்க வேண்டும். பின் பாகத்தில் இரட்டையர்களான மூவரும் இருக்க வேண்டும். ப்ரும்மா, ஸ்வரா என்பவளுடன் மத்தியிலும், ருத்ரன் கௌரியுடன் தென் பாகத்திலும், இடப் பக்கத்தில், லக்ஷ்மி தேவியுடன் ஹ்ருஷீகேசனையும், முன் பாகத்தில் மூன்று தேவதைகளையும், பதினெட்டு கைகளையுடைய ரூபம் மத்தியிலும், அவளது இடப்பக்கத்தில் பத்து முகங்களையுடையவள் என்ற பொருளில் தசானனா என்பவளையும், தென் பாகத்தில் எட்டு கைகளையுடைய லக்ஷ்மியை மஹதி என்றும் பூஜிக்க வேண்டும்.

பதினெட்டு கைகளையுடைய தேவியாக பூஜிக்க நினைத்தால் , நராதிபனே, இந்த தசானனா, தென் பாகத்திலும் எட்டு கைகளையுடையவளாக வடக்கிலும் வைக்க வேண்டும்.

இடர்கள் தீர, கால ம்ருத்யு இவர்களையும் பூஜை செய்ய வேண்டும். எட்டு கைகளையுடையவளாக, சும்பாசுரனை வதைத்தவள், அவளுடைய ஒன்பது சக்திகளையும் பூஜிக்க வேண்டும். அத்துடன் ருத்ர, மற்றும் வினாயகரையும் பூஜிக்க வேண்டும். நமோ தேவ்யா என்ற மந்திரத்தால் மஹா லக்ஷ்மியை அர்ச்சிக்க வேண்டும். மூன்று அவதாரங்களை அர்ச்சிக்கும் மந்திரங்கள், துதிகளைச் சொல்ல வேண்டும். மஹிஷ மர்தினி – எட்டு கைகளுடையவள். மஹா லக்ஷ்மியே, மஹா காளி, மஹா சரஸ்வதி என்றும் அழைக்கப் படுவர். சர்வ லோக மஹேஸ்வரி, புண்ய பாபங்களை நிர்வஹிப்பவள்.  மஹிஷனை வதைத்தவள் என்று, ஜகத்ப்ரபுவே பூஜித்தார். சண்டிகா பகவதீ என்ற இவளே, பக்த வத்ஸலா. அர்க்யம் முதலானவைகளும், அலங்காரங்களும், கந்த புஷ்பங்கள், அக்ஷதைகள், தூப தீபங்கள், பல விதமான நைவேத்யங்கள், ப்ரணாம, ஆசமனியங்கள், சுகந்தமான சந்தனம், கர்பூரம் சேர்த்த தாம்பூலங்கள், இவைகளை பக்தி பாவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இடது பாகத்தில், தேவியின் எதிரில் மகா அசுரனின் சிதைந்த தலையை வைக்க வேண்டும், இவனும் தேவியின் கரத்தால் வெட்டுண்டதால் சாயுஜ்யம் என்ற பதத்தை அதைந்தான் அன்றோ. தென் பாகத்தில் தேவியின் முன் தர்மமே உருவான சிங்கம் விளங்கும். இது தேவியின் வாகனம்.

இதன் பின் மனம் ஒன்றி தேவியை துதிக்க வேண்டும். கைகூப்பி வணங்கியபடி, இந்த சரிதங்களை சொல்லி துதிக்க வேண்டும். மத்யம சரிதம் என்ற ஒரு அத்யாயம் மட்டுமாக துதிக்கலாம். மற்ற பகுதிகளை தனியாக சொல்வதில்லை. பாதி சரித்திரத்தில் நிறுத்தக் கூடாது. அது பாதி ஜபம் – என்பதால். பிரதக்ஷிண நமஸ்காரங்கள், தலியில் அஞ்சலி செய்பவனாக ஜகன் மாதாவிடம் அபராத க்ஷமா என்பதை செய்ய வேண்டும். முடிந்தால் பிரதி ஸ்லோகத்திற்கும் பாயசம் வைவேத்யம் செய்யலாம்.

எள், நெய், சுத்தமா ஹவிஷ் முதலியவையும் நைவேத்யம் செய்யலாம். ஸ்தோத்ர மந்திரங்களால் அர்ச்சிக்க வேண்டும்.  பின் நாம பஜனைகள், ஆத்ம நிவேதனம் என்ற பாவனையுடன் தன்னையே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மனம் ஒன்றி தேவியை பூஜிப்பவன், சகல விதமான போக்யங்களை இக லோகத்தில் அனுபவித்து பின் தேவியின் சாயுஜ்யம் என்ற பதவியை அடைந்து விடுகிறான். பக்த வத்ஸலாவான இந்த தேவியை பூஜிக்கத் தெரியாதவன், தெரிந்தும் செய்யாதவன், புண்யங்கள் அழிய, தேவியினாலேயே வதைக்கப் படுவான். பூபால, அதனால், பூஜை செய். சர்வ லோக மஹேஸ்வரி இவள். உசிதமான விதத்தில் பூஜை செய். சுகத்தை அடைவாய்.
பாலா? பாதுகையா?
ஆனந்த தாண்டவபுரம் என்ற சின்ன ஊரில் பெரியவா முகாம். பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணும் பாக்யம் பெற்ற ஒரு சிறுவனுக்கு சந்த்ரமௌலீஶ்வரர் அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் பாலை ஸேகரித்து பூஜைக் கட்டில் கொண்டு வந்து வைக்கும் பொறுப்பு குடுக்கப்பட்டது!
ஒருநாள் காலை குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு தன் திருவடிகளை தண்ணீரில் நனைத்து "விளையாடி" கொண்டிருந்தா பெரியவா. பக்கத்தில் கைங்கர்யம் பண்ணும் சின்னப் பையன்கள் இருந்தனர். அந்த ஸமயம், ஒரு பக்தர் பாலை ஒரு பாத்ரத்தில் கொண்டு வந்து பெரியவா முன் பணிவோடு நின்றார்.
"என்னது?"
"அபிஷேகத்துக்கு பால்........"
"செரி...செரி...வை"
அந்த பக்தர் கொஞ்சம் தள்ளி அந்த பால் பாத்ரத்தை வைத்தார்.
கொஞ்சநேரத்தில் பெரியவா எழுந்து நடக்க ஆரம்பித்ததும், வேறொரு பையன் அந்த பால் பாத்ரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு பெரியவா பின்னால் நடக்க ஆரம்பித்தான். இதைப் பார்த்ததும், பால் கைங்கர்யம்" பண்ணும் பையனுக்கோ ஒரே ஆத்திரம்! ஏனென்றால், அது அவனுக்கு குடுக்கப்பட்ட கைங்கர்யம். அவனுடைய உரிமை! இவன் எப்படி அதை தட்டிப் பறிக்கலாம்?
பெரியவாளோடேயே நடந்து கொண்டிருந்தாலும், மெல்ல முணுமுணுவென்று " டேய்! பாலை மரியாதையா எங்கிட்ட குடுத்துடு....இல்லே....தொலைச்சுப்புடுவேன்! குடுடா......." என்றான்.
அந்தப் பையனோ காதில் விழாதமாதிரி பெரியவாளோடு போய்க் கொண்டிருந்தான்.
ஆனால் பெரியவா சட்டென்று நின்று, தன் பாதுகைகளைக் கழற்றி "பால் கைங்கர்யம்" பையனிடம் குடுத்து "இந்தாடா....இதை தூக்கிண்டு வா. அதுல ஏதோ குத்தறது" என்றார்.
மஹா மஹா பாக்யசாலியான அந்தப் பையன் ஸ்ரீராமனின் பாதுகையைத் தாங்கிய பரதாழ்வார் போல் புளகாங்கிதமடையவில்லை, மேனி சிலிர்க்கவில்லை, ஆனந்தத்தின் உச்சியை அடையவில்லை. பாவம்! சின்னப்பையன்தானே! மனஸ் முழுக்க "பால் கைமாறிப் போச்சே!" என்ற கோபம்.
எனவே அந்த இன்னொரு பையனைப் பார்த்து "மடத்துக்கு வா.......ஒதைப்பேன்..செருப்பாலேயே அடிப்பேன்" என்றெல்லாம் அவனுக்கு மட்டும் கேட்கும்படி பொருமிக்கொண்டே வந்தான். மனம் முழுக்க த்வேஷம்! ஆனால் அவனுடைய பாக்யம் செய்த கைகளிலோ,பெரியவாளுடைய பாதுகைகள்!
முகாமுக்கு வந்ததும் ஸ்ரீ பாதுகையை பூமியில் வைத்தான். பெரியவா பாதங்களில் அது மறுபடியும் தஞ்சம் அடைந்தது. பொருமி பொருமி சூளுரைத்தபடி, அந்தப் பையனை நன்றாக வெளுத்துக் கட்டிவிட்டான்!
அன்று ஸாயங்காலம் ஒரு வீட்டுத் திண்ணையில் பெரியவா வந்து உட்கார்ந்து கொண்டார். சுற்றி கீழே தரையில் எல்லாரும் அமர்ந்து கொண்டனர். பெரியவா டக்கென்று பேச ஆரம்பித்தார்.....
"இன்னிக்கு....பாலா? பாதுகையா?...ங்கற தலைப்புல பேசப் போறேன்"
பெரியவா பண்ணின உபன்யாஸங்களுக்கு கணக்கே கிடையாது...ஆனால், " இன்னிக்கி, இன்ன topic பத்தி பேசப்போறேன்" என்று, தலைப்புக் குடுத்து எதுவும் பண்ணியதில்லை என்பதால், எல்லாருக்கும் ஆச்சர்யம்!
பெரியவாளின் மதுரமான குரல் ஒலித்தது.....
"நந்திக்ராமத்ல எதுக்கு பாலாபிஷேகம் ஆச்சு தெரியுமோ?.........பாதுகைக்கு! ஸாதாரணமா கால்ல போட்டுக்கறதை செருப்புன்னு சொல்லுவா.......ஆனா, அதையே ஸன்யாஸிகள் போட்டுண்டா...அதுதான் பாதுகை...ன்னு சொல்லுவா. பரதன் ஸ்ரீ ராமனோட பாதுகையை ஸிம்ஹாஸனத்ல வெச்சு அபிஷேகங்கள்...அதுவும், பாலாபிஷேகம்! பண்ணினான்........அதுனால, பால் ஒஸத்தியா? இல்ல.... பாதுகை ஒஸத்தியா?" என்று கேட்டுவிட்டு அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், "கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்" என்று புண்டரீகம் போட்டுவிட்டு உபன்யாஸத்தை முடித்துவிட்டார்.
"பால் கைங்கர்ய"த்துக்கோ, பொட்டில், ஸம்மட்டியால் அடித்த மாதிரி உறைத்தது!
"எவ்ளோவ் பெரிய பாவி நான்! ரொம்ப ரொம்ப ஒஸந்த பாதுகையை எங்கிட்ட குடுத்து எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கா பெரியவா! பாதுகைல ஏதும் குத்தவேயில்லே....எனக்கு அந்த பாக்யத்தை குடுக்கணும்...ங்கறதுக்காக, மஹாப்ரபு, தான்... வெறும் பாதத்ல நடந்துண்டு அப்டி ஒரு நாடகம் நடத்தியிருக்கா! நான் பைத்தியக்காரத்தனமா அதை புரிஞ்சுக்காம, அதோட அந்த பையனையும் போட்டு தலைகால் புரியாம அடிச்சேனே! எனக்கு கெடச்ச பாக்யத்தை என்னால புரிஞ்சுக்க முடியாதபடி, ஸ்வாமி என் கண்ணை மறைச்சுட்டாரே!" என்று இன்றும் அந்த பக்தர் கண்களில் நீர் தளும்ப புலம்புகிறார்.
ஸ்ரீவிட்டோபா ஸ்வாமிகள்

உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு, ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். சாப்பாடு கிடையாது; ஒருவேளை பசித்தால், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி... இல்லையேல், பட்டினி தான். நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி, அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர், இந்த உத்தம துறவியின் நிலை உணர்ந்து இரங்கி, தினந்தோறும் அத்துறவி வரும்போது, அவரை வணங்கி உபசரித்து, உணவு அளிப்பார். துறவியும் அன்போடு இடப்படும் அந்த அன்னத்தை ஒரு கவளம் வாங்கி கொள்வார். இந்த உத்தமருக்கு உணவளிக்காமல், நான் உண்பதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தார் அந்தப் பெண்மணி.

ஒருநாள்... அந்த வீட்டுக்கு, உணவிற்காக துறவி சென்றபோது, பெண்மணி வீட்டில் இல்லை; ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார். பெண்மணியின் கணவர் மட்டும் வீட்டில் இருந்தார். துறவியைப் பார்த்தார்; துறவியின் கோலமும், தோற்றமும் அந்த மனிதருக்கு, அலட்சியத்தையும், சினத்தையும் உண்டாக்கின. ஆதலால், அவர் தன் கையில் இருந்த பிரம்பை ஓங்கி, ’போ, போ... இங்க நிக்காதே... போ...’ என்று திட்டி, விரட்டி விட்டார். துறவியும் வாய் திறவாமல், நகர்ந்து விட்டார். இது நடந்து நீண்டநேரம் கடந்து, பெண்மணி வீடு திரும்பினார். துறவி வந்ததோ, அவரைத் தன் கணவர் அவமானப்படுத்தித் துரத்தியதோ, பெண்மணிக்குத் தெரியாது. அவர், ’என்ன ஆச்சு இன்னிக்கி... அந்த மகான் உணவுக்கு இன்னும் வரலியே...’ என்று கவலையில் ஆழ்ந்தார். அலுவலகம் சென்ற, அந்தப் பெண்மணியின் கணவர் எழுதத் துவங்கினார்; ஊஹூம், எழுத முடியவில்லை. சில வினாடிகளில் கை முழுதுமாக உணர்ச்சியற்று, செயலற்றுப் போய் விட்டது. மருத்துவரிடம் ஓடினர்; பலனில்லை. அதனால், அவரை வீட்டிற்கு கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினர் நண்பர்கள்.

பதறித் துடித்தார் மனைவி, ’ஏன் இப்படி நடந்தது...’ எனக் குழம்பினார். அந்த நேரத்தில் அவர் கணவர், ’இன்று, ஒரு பரதேசி வீட்டிற்கு வந்தார். பிரம்பை ஓங்கி, கண்டபடி திட்டி, அவரை விரட்டினேன். ஒருவேளை, அதனால், இப்படி ஆகியிருக்குமோ...’ என்றார், மனைவியிடம். பெண்மணிக்கு உண்மை புரிந்தது. ’ஆகா! வந்தது, நம் மரியாதைக்கு உரிய துறவி தான். நம் கணவர் அவமானப்படுத்தியது அவரைத்தான்...’ என்பதை உணர்ந்தார். உடனே, கணவரை ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு, துறவியைத் தேடிப் போனார். துறவி, ஒரு இடத்தில், உட்கார்ந்து, கைகளால் தாளம் போட்டபடி, பாடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், பெண்மணி, வண்டியிலிருந்து இறங்கி, துறவியின் திருவடிகளில் விழுந்தார்; துறவியின் முன், கணவரை நிறுத்தி, மன்னிக்கும்படி வேண்டி அழுதார். அவர் கணவரின் பாதிக்கப்பட்ட கையை, கருணையோடு பார்த்த துறவி, ’ஜா ஜா...’ என்று சொல்லி, பழையபடி பாடலை முணுமுணுத்து தாளம் போடத் துவங்கினார்.

அதே வினாடியில், செயலற்று இருந்த கை செயல்படத் துவங்கியது. கணவரின் கை செயல்படத் துவங்கியதைக் கண்ட பெண்மணி, ஆனந்தக்கண்ணீர் சிந்த, கணவரோடு சேர்ந்து, துறவியின் திருவடிகளில் மீண்டும் விழுந்து வணங்கினார். அந்தத் துறவி, விட்டோபா சுவாமிகள். இந்நிகழ்ச்சி நடந்த இடம், திருவண்ணாமலையில் இருந்து வேலுார் செல்லும் வழியில் உள்ள போளூர் என்னும் ஊர். ஸ்ரீவிட்டோபா சுவாமிகளின் சமாதி, இன்றும் அங்கே உள்ளது. யாரையும் இழிவாகப் பேசி, அவமானப் படுத்தாமல் இருந்தால், தெய்வத் திருவருள் தானே வந்து பொருந்தும் என்பதை விளக்கும் வரலாறு இது.இவர் சித்தியான போது ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகள் வானத்தை நோக்கி அதோ விட்டோபா போறான் என்று பல முறை கூறினாராம்
மதுரகாளிதாசன்
தெரிந்த புராணம் தெரியாத கதை.

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை
 இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*.

*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*.

*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*.

*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*.

*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்!
அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*.

*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.

*அர்ஜுனன் இந்தச் சம்பவத்தை வனவாசத்தில் வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்.

அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்

*“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்*.

*பல ஆண்டுகள் கழிந்தன*.

*மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்*.

*“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்*.

*அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குசென்று விடு!” என்று  கண்ணன் பகர்ந்தான்.

*கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்*.

*அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்*.

*அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்*

*வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்*.

*“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்*.

*"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது*.

*இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்*.

*மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின்
அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்*.

*ஆனால் கண்ணனின் அருள் பெறாத
கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்*.

*அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்*.

*இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது*.

*இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”*
                   
*( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்*.

*இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்*.

ஓம் நமோ நாராயணாய

சர்வம் ஶ்ரீகிருஷ்ணார்ப்பணம்
சந்தேகக் கோடு; அது சந்தோஷக் கேடு...

🌍மஹாபாரதத்தில் அதிகம் அறியப்படாக கதை;🌍

அஸ்வத்தாமனை சரியாக புரிந்து கொள்ளாத துரியோதனன்…

சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேகம், சந்தோஷத்தின் எதிரி.

இதற்கு மஹாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது.

கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான். யுத்தம் வந்தால், கவுரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என, பரமாத்மாவுக்கு தெரியும்.

அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.

அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், எனப் பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான்.

அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் ஏதோ பேசினான்,

அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான் கிருஷ்ணன் சொன்னதை ஆமோதித்தது போல ஆம் என்று தலையை ஆட்டினான். பின், கிருஷ்ணனின் விரலில், மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.

இதைப் பார்த்த துரியோதனன், ‘"நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்’ என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான்".

இந்த சந்தேகத்தால், அவனை, கடைசி வரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை.

17ம் நாள் யுத்தத்தில், துரியோதனன் பீமனால் தாக்கப்பட்டு, கால்கள் தொடைகள் உடைந்து, யுத்த களத்தில் இருந்தான், அப்போது, அவனை அஸ்வத்தாமன் சந்தித்தான்,

‘நான் சிரஞ்சீவி வரம் பெற்றவன்; என்னை  சேனாதிபதியாக நியமித்திருந்தால், யுத்தத்தின் முடிவு மாறியிருக்கும்’ என்றான் அஸ்வத்தாமன்.

அதற்கு துரியோதனன், "நீதான், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்தாயே’ என, கேட்டான்.

‘யார் எப்போது எங்கே சத்தியம் செய்தது ?’ என, கேட்ட அஸ்வத்தாமனிடம், கிருஷ்ணன் துாது வந்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தான் துரியோதனன்.

இதைக் கேட்ட அஸ்வத்தமான் விரக்தியில் சிரித்தான்.

‘கிருஷ்ணனின் விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது. அதைத் தான் எடுத்து கொடுத்தேன். இன்று வெய்யில் அதிகமா என்று என்னிடம் வானத்தைச் சுட்டிக் கட்டி கேட்டான். நான் "ஆமாம்" என்று தலையசைத்தேன். பின்னர் மரியாதை நிமித்தம் கிருஷ்ணனின் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டேனே தவிர  சத்தியம் எதுவும் செய்யவில்லை.

தேவையின்றி  என் மீது சந்தேகப்பட்டு, நீயே உன் தோல்வியை தேடி கொண்டாய். அப்போதே இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால், நடந்தது என்ன என்று உனக்குத் தெரிந்திருக்கும்.

இதுவும், அந்த கிருஷ்ணனின் விளையாட்டுதான்’ என்றான் அஸ்வத்தாமன்.

உண்மைதான்; சந்தேகம் ஏற்பட்டால், அது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் துரியோதனன் போல், தோல்வியை தழுவ வேண்டியது தான்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
தானம் வேறு. தர்மம் வேறு

எது தானம்?  எது தர்மம்?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார். சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? என ஈசன் கேட்க, பரம்பொருளே!  இல்லை என கூறாமல் சகல விதமான தான தருமங்களையும் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

சிரித்துக்கொண்டே ஈசன், சூரியனே, நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள். தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

இதைக்கேட்ட சூரிய தேவன் " இறைவா! நன்கு புரிந்தது! தானமும் , தர்மமும் , பாவமும் , புண்ணியமும் எல்லாமும் நீயே என்பதை உணர்ந்தேன்! ஈசன் சொன்ன விளக்கம் சூரிய தேவனுக்கு மட்டுமல்ல நமக்கும் நன்றாக புரிந்திருக்கும்!

கேட்டு கொடுப்பது தானம்! கேட்காமல் கொடுப்பது தான் தர்மம்!
#அலமேலு_பாட்டி

நான் நாகப்பட்டினம் ஐஓபியில் பணியாற்றிய போது நாகூர் ப்ரசித்தி பெற்ற பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள தெருவில் அலமேலு பாட்டி என்ற மூதாட்டி வசித்து வந்தார். நான் அங்கிருக்கும் போது அடிக்கடி சென்று அந்த பாட்டியை தரிசனம் செய்வதுண்டு. (2002 - 2004) அந்த பாட்டியின் ஒரு மகன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியாக இருந்தார்.
அந்த பாட்டியை பற்றிய சுவையான பல தகவல்கள் பாட்டியின் வாயால் கேட்டறிந்தது.

தினமும் பால் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெருமாள், (சுமார் 80 ஆண்டுகள்) பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட அற்புதம்.

1915 இல் பிறந்த அலமேலு ஏழுவயது சிறுபெண். சிறுவர்களுடன் அந்த நாகூர் பெருமாள் கோயில் நந்தவனத்தில் ஓடிப்பிடித்து விளையாடி ஓர் ஓரமாய் போய் சாய்ந்து கிடந்த தூண் மீது உட்கார்ந்தாள். திடீரென யாரோ அவளைக் கூப்பிட்ட மாதிரி இருந்தது. கண்ணெதிரில் எவரும் இல்லை. "பசிக்குது பால் கொடு''ன்னு குரல் கேட்டது. மெல்ல தலைதூக்கிய அச்சத்துடன் குரல் வந்த இடத்திற்குப் போய்ப்பார்க்க சுமார் 4 அடி உயரத்தில் பெருமாள் சிலையாய் மல்லாந்து வானத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். மெல்ல அசைத்துப் பார்த்தாள். நகரக்கூட இல்லை. தன் வீட்டில் இருந்தவர்களிடம் அந்த பெருமாள் பற்றிய விவரம் கேட்டாள்.

”நந்தவனம் தோண்டும் போது கிடைச்ச பழைய பெருமாள், "வெளிதேசத்திலிருந்து படையெடுத்து வந்த போது கர்ப்பகிரகத்திலிருந்து எடுத்து வந்து பாதுகாப்பா புதைச்சு வைச்சாங்க. பின்னாடி தோண்டி நிமிர்த்தும்போது கை சின்னதா பின்னமாப்போச்சு. வேற சிலை செய்து மூலஸ்தானத்தில் வைச்சுட்டாங்க' என்ற விவரம் சொல்லப்பட்டது. இனம் புரியாத பற்றும் பாசமும் அவளுக்கு அந்த பெருமாளின்மீது ஏற்பட்டது.

மறுநாள் நந்தவனம் பக்கம் போனபோது மீண்டும் " பசிக்குது பால் வேணும்''ன்னு குரல் கேட்டது. வீட்டுக்கு ஓடினாள் அலமேலு. அவளுக்கென வைத்திருந்த பாலை எடுத்துக்கொண்டு போய் கீழேயிருந்த சிலையின் வாயருகில் வைக்க மெல்ல பால் எங்கே போகிறது எனத்தெரியாமல் கீழேயும் சிந்தாமல் குறைந்து போனது.

அதுமுதல் இப்படியே தினமும் தொடர ஊராரின் நக்கல் நையாண்டிப்பேச்சும் அதிகரித்தது. அந்தப் பெண் கல்யாணம் ஆகியும் அங்கேயே வாழ்க்கைப்பட்டு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு பெருமாள் பணியையும் தொடர்ந்து செய்து வந்தாள்.

பெருமாள் மழையிலும் வெய்யிலிலும் இவ்வாறு கிடப்பது மனதை உறுத்தவே பின்னப் பட்ட விக்ரகத்தை தனி சந்நிதியில் வைத்து பூஜை செய்ய அனுமதி கேட்க, காஞ்சி கலவைக்குச் சென்று மஹாபெரியவாளை சந்தித்தார் அலமேலு . வரிசையில் நின்ற அந்தப்பெண்ணை அலமேலு என்ற பெயர் சொல்லி அழைத்தார் மஹாபெரியவா.

ஆச்சரியத்தோடு வணங்கி பெருமாளை என்னசெய்வது எனக்கேட்டாள். பரமாச்சாரியாரோ "உன்னோட பிள்ளைக்குக் கை உடைந்தால் தூக்கி தோட்டத்துல கடாசிடுவியா ? உன்னிடம் பால் வாங்கிக் குடிச்ச பெருமாள் உன் பிள்ளை மாதிரி. தனியா சந்நிதியில் வை. ஸ்தபதி மூலமா கையை சரி செய்''ன்னு உத்தரவு கொடுத்தார். நாகூருக்குத் திரும்பிய அவளிடம் பெரும் பணம் எதுவும் இல்லை. யாரோ செய்த உதவியில் தனி சந்நிதி கட்டப்பட்டு ஸ்தபதியால் கை சரிபார்க்கப்பட்டு நிறுவப்பட்டது.

அன்று இரவு பெருமாள் மறுபடியும் பேசினார். "தினம் பாலே தர்றியே. வளந்துட்டேனே, எனக்கு பழம் தரக்கூடாதா?''ன்னு கேட்டார். மறுநாள் பழம் வாங்கிக் கொண்டு பெருமாள் வாய்கிட்டே கொண்டு போனவுடனே கொஞ்சம் கொஞ்சமாக பழம் குறைந்து போனது. தினமுமிது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஊரார் மரியாதையோடு ஆச்சரியப்படத் தொடங்கினர். பெருமாள் சாப்பிட்ட மீதி பழத்தை எதிரில் நிற்கும் யாருக்காவது அலமேலு அம்மாள் கொடுப்பார்கள். பெருமாள் சாப்பிட்ட மீதிப்பழத்தைச் சாப்பிட அவர்களின் பலவிதக்குறைகள் நீங்கி விரும்பிய பலன் பெறுவது பழக்கமாகிப் போனது. அதற்காக வெளியூரில் இருந்தெல்லாம் மக்கள் வரத்தொடங்கினர். அவர்களின் கவலைகள் குறைகள் அனைத்தையும் பெருமாளின் வாழைப்பழப் பிரசாதத்தை அலமேலு கொடுப்பதனால் நீக்கியது தொடர்ந்து கொண்டிருந்தது.

1977- ஆம் ஆண்டு நல்ல மழை பெய்த போது கோயிலின் ராஜகோபுர நாசித்தலை இடிந்து சிதிலமானது. அதனை முன்னின்று எடுத்துச் செய்ய யாரும் இல்லை. பெருமாளிடம் உத்தரவு கேட்டார் அலமேலு. பெருமாள் காட்டிய ஆட்கள் மூலம் அந்த திருப்பணியை அவர்களே செய்ய ஏற்பாடு செய்து அந்தப் பணியையும் முடித்தாள்.

1995-ஆம் வருடம் கோயில் கும்பாபிஷேகம் செய்யவேண்டுமென்று அலமேலு அம்மாள் சொன்னவுடன் யார் யாரோ எங்கிருந்தோ வந்தார்கள். அவர்களே முன்னின்று அவர்களின் கைப்பட அலமேலு வழிகாட்ட செய்தார்கள். கும்பாபிஷேகம் நன்றாக நடந்தது, 2004 ஆம் ஆண்டு ஒருநாள் காலை அலமேலு பெருமாள் திருவடி சேர்ந்தாள்.

ஒரு பெண் ஊட்டிய பாலும் பழமும் சாப்பிட்ட பெருமாள் இன்றைக்கும் வாழைப்பழப் பெருமாள் என அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேற பெருமாளை வேண்டிக்கொண்டு மீண்டும் வந்து வாழைப்பழமாலை சாற்றி எல்லோருக்கும் கொடுத்த பிறகு மீதியை வீட்டுக்கு பிரசாதமாக எடுத்துச் சென்று பலன் பெறுகிறார்கள்.

நாகூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என அழைக்கப்படும் தலத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம், கொடிமரம், கருடாழ்வார் சந்நிதிக்கு வலப்புறம் சந்நிதியில் மஹாலட்சுமி உருவத்துடன் நின்று பெரும்பாலும் பக்தர்கள் சார்த்திய வாழைப்பழமாலையுடன் காட்சி தருகிறார். அந்த சந்நிதியின் மேலே அலமேலு அம்மாளின் சுதை உருவம் எப்போதும் வணங்கிக் கொண்டிருக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

மூலவர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் . பிரகாரத்தில் ஸ்ரீ சுதர்சனரும் தனி சந்நிதியில் அலர்மேல்மங்கைத் தாயார் அமைந்துள்ளார். ஆண்டாள் ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன. திருக்கோயிலின் திருக்குளம் கோயிலின் வலப்புறம் அமைந்துள்ளது. அதன் கரையில் தேங்காய் கட்டி ஆஞ்சநேயர் என்னும் பெயரில் வீர ஆஞ்சநேயர் உள்ளார். இவர் சந்நிதியில் பிரார்த்தனைத் தேங்காய் கட்டினால் ஒரு மண்டலத்துக்குள் காரியம் சித்தியாகும்.

எல்லா நாள்களிலும் வாழைப்பழப் பெருமாளையும்; ஒவ்வொரு சனிக்கிழமை பெருமாளுக்கும்; அமாவாசை ஆஞ்சநேயருக்கும்; தினமும் மாலை பிரதோஷ நேரங்களில் சுதர்சன யோக நரசிம்மருக்கும்; சுதர்சனருக்கும் புதன்கிழமைகளிலும்; பெளர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அலமேலுமங்கை தாயாரையும் வழிபடுவதால் பலன் உண்டு.

வாழைப்பழப் பெருமாளுக்கு அஸ்தம், பெருமாளுக்கு திருவோணம். அனுமாருக்கு மூலம், தாயாருக்கு உத்திரம் ஆகிய நாள்களில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் தரிசனம் செய்ய புரட்டாசி மாதம் சிறப்பானது என்றாலும் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி பலன் பெறுவதற்கென பலர் வந்து பலன்பெற்றுச் செல்லும் தலமாகும்.

கலியுகத்தில் உலகத்தைக் காத்து ரக்ஷிக்க இவ்வூரில் வந்து பெருமாள் பிரசன்னமானதால் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் எனவும் தென்திருப்பதி அல்லது சின்னத் திருப்பதி எனவும் அழைக்கப்படுகிறது. திருப்பதி செல்ல முடியாதவர்கள் இயலாதவர்கள் நாகூர் அலர்மேல்மங்கைத் தாயார் உடனாய பிரசன்ன வெங்கடாஜலபதியை வணங்கினால் போதும் என்று சொல்லப்படுவதால் இத்திருக்கோயிலைப் பொறுத்தவரை புரட்டாசி மாதம் முழுவதும் மிகவும் சிறப்பானதாக பக்தர்கள் வருகையுடன் இருக்கும்.

இன்றும்கருடாழ்வார் சன்னதிக்கு அருகில் மேலே அலமேலு பாட்டி பெருமாளுக்கு வாழைபழம்  கொடுப்பது போன்ற சன்னதி உள்ளது.

நாகூரில் பரிகார ஸ்தலமான நாகநாத ஸ்வாமி திருக்கோவிலும் உண்டு. மஹாசிவராத்ரி அன்று நான்காவது கால பூஜை இங்கு விசேஷம்.

ஒன்று முதல் நான்காம் கால பூஜைகளை முறையே

1. கும்பகோணம் நாகநாத ஸ்வாமி
2. திருநாகேச்வரம்
3. திருப்பாம்பரம்
4. நாகூர் நாகநாத ஸ்வாமி

முதலிய க்ஷேத்ரங்களில் தரிசிப்பது விசேஷம்.
"ரயிலைக் கோட்டை விட்ட ஒரு இண்டர்வியூ போன பெரியவா பக்தர்"

கம்பெனியின் உரிமையாளரே காரில் அழைத்துப்போய் வேலையும் கொடுத்த அதிசயம்

இது காஞ்சிமகானின் அருட்பார்வையல்லாமல் வேறென்ன?


ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன். வைதீக முறைப்படி தன் வாழ்க்கையை, அமைத்துக் கொண்டவர் அவருக்கு வேலை தேட வேண்டிய கட்டாயம்.

அவருக்கு திருப்பத்தூரில் வேலைக்கு ஒரு இண்டர்வியூவிற்காக அழைப்பு வந்தது. ஜோலார்பேட்டையில் டிரெயினைப் பிடித்துப் போக வேண்டும். ஸ்டேஷனுக்கு வந்தவர் டிக்கெட்டும் வாங்கிவிட்டார். ரயிலில் போனால்  குறித்த நேரத்தில் போய்ச் சேர முடியும்.

ஸ்டேஷனுக்குள் நுழையும் முன், அவர் கண் எதிரே ஒரு வயதான மனிதர், மயங்கிச் சுருண்டு விழுந்தார் லட்சுமணன் அருகில் போய், அவரைத் தாங்கிப் பிடித்து, வேண்டிய முதலுதவிகளைச் செய்து அவரை ஒரு வழியாக உட்கார வைத்தார். அதற்குள் ரயில் போய்விட்டது. அடுத்த ரயிலில் போவதற்குள் இண்டர்வியூ நேரம் முடிந்துவிடும். அதனால் இனி அங்கே போய் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர்த் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். இது இல்லாவிட்டால் இன்னொரு வேலையை அவர் தராமலா போய்விடுவார் என்கிற நம்பிக்கை  அவர் மனதில்.

ரஸ்தாவில் எந்தவிதமான வாகனமும் வரவில்லை.ஒரு கார் அப்போது அங்கு வர, தைரியமாக அவர் கையைக் காட்டி நிறுத்தினார். கார் டிரைவரும் வண்டியை நிறுத்தினார். லட்சுமணன் நடந்ததைச் சொல்லி தான் ஊர் போய் சேர 'லிஃப்ட்' தரமுடியுமா என்று கேட்டார்.

"மயங்கிக் கிடந்தவருக்கு உதவி செய்யப்போக, நீங்கள் ரயிலைக் கோட்டை விட்டு விட்டீர்கள் இல்லையா?"

"ஆம்"

"சரி, எனக்கு திருப்பத்தூரில் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு,'உங்களை உங்கள் இண்டர்வியூ இடத்தில் இறக்கிவிடுகிறேன். போதுமா?"

பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று லட்சுமணனுக்கு. காரை ஓட்டி வந்தவர் பெரிய இடத்து மனிதர் போல் தோற்றமளித்தார்.காரில் போகும்போதே லட்சுமணனின் வரலாற்றைக் கேட்டுக் கொண்டே வந்தார். திருப்பத்தூரில் அவரது காரியாலயத்தில் இறங்கிவிட்டு, சற்றுப் பொறுத்து வருவதாகவும், அதுவரை, அவரை (லட்சுமணன்) ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

லட்சுமணன் உள்ளே நுழையும் போதே காரியாலயத்தில், காஞ்சி மகானின் பெரிய உருவப்படம், அவரை வரவேற்றது. வணங்கியபின் ஒரு பக்கமாக அமர்ந்தார். அங்கிருந்த ஒரு சிப்பந்தியிடம், அந்தக் கம்பெனியின் பெயர் என்ன, தன்னை அழைத்துக் கொண்டு வந்தவர் யார் என்றெல்லாம் கேட்டார்.

கம்பெனியின் பெயரைக் கேட்டவுடன் வியந்து போனார். தான் இண்டர்வியூவிற்கு வரவேண்டிய கம்பெனி தான் அது. வண்டியை ஓட்டி வந்தவர் கம்பெனியின் உரிமையாளர். அவர் வந்தவுடன் லட்சுமணனை விசாரித்து சொல்கிறார்;

"எப்போ பிறருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம்,ஒருவன் மனதில் இருக்கிறதோ, இதனால் தனக்கு வரும் துன்பங்களையும் அவன்  பொறுத்துக் கொள்கிறானோ....அவன் பக்திமான்களை விட மிகச் சிறந்தவன் என்று காஞ்சி மாமுனிவர் சொல்லியிருந்ததை, நீங்கள் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போதே புரிந்து கொண்டேன்..."

என்று சொன்ன அந்த நிர்வாகி,இண்டர்வியூவுக்கு வந்த லட்சுமணனுக்கு, வேலை போட்டுக் கொடுத்து விட்டார்.

இது காஞ்சி மகானின் அருட்பார்வையல்லாமல் வேறென்ன?.
அம்மா என்று அழைத்தால் ஓடி வருவாள்.  நம் துயர் துடைத்திட, நம்மை காத்திட பல பல வடிவங்களில் அவதாரம்  தரித்தாள் அன்னை பராசக்தி. 

அவள் நாமங்கள் பல பல கோடி. அவைகளை பதிவிட என் இந்த ஆயுட்காலம் போறாது. ஆனாலும் நான் படித்து மகிழ்ந்த சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.

சத்-சித்-ஆனந்தம்

‘ஸத் சித் ஆனந்த ரூபிணீ’ சச்சிதானந்த வடிவினள். அதாவது, உண்மை, அறிவு, மகிழ்ச்சி ஆகிய மூன்றின் வடிவினள்.

இறைவன் என்றும் அழியாத சத்தாக-உண்மையாக-மெய்ப்பொருளாக விளங்குகிறான். தேவி எப்போதும் பேரறிவு வடிவாகத் திகழ்பவள்.