செவ்வாய், 10 செப்டம்பர், 2019

குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவை!

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.

7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.

10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.

12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.

15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.

18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.

19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.

20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.

23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.

24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.

25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.

26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.

28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.

29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.

30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.

32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.

33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.

34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.

35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.

37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.

38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.

39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.

41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.

42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.

44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.

45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.

48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.

49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.

50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.

52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.

53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.

55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.

57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.

59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.

60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.

62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.

63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.

64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.

65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.

66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.

67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.

68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.

70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.

72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.

74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.

75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.

77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.

78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.

79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.

80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

81. சங்கல்பம் மிக முக்கியம்.

82. கோபுர தரிசனம் கோடி நன்மை.

83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.

84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.

86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.

87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.

88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.

92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.

93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.

94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.

95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.

97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.

98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.

99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.

100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
பஞ்சாங்கம் ஏன் படிக்க வேண்டும்?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு மாதிரி அமைவதுண்டு. ஒரு ஆண்டு முடிந்து இன்னொரு புத்தாண்டு பிறக்கும் சமயத்தில், இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்குமோ என்று மனதில் சஞ்சலமும், எதிர்பார்ப்பும் ஏற்படுவதுண்டு. சென்றவருடம், செழிப்பாய் இருந்தேன். இந்த வருடமும் அதேபோல் இருக்க வேண்டுமே என்று புத்தாண்டை இனிய முகத்தோடு வரவேற்பவர்களுமுண்டு. சென்ற ஆண்டு பட்டதே போதுமடா சாமி, இந்த ஆண்டாவது நிம்மதியாய் இருக்க ஆண்டவனே எனக்கு அருள்புரிவாய் என்று அழுது புலம்புபவர்களும் உண்டு. ஆங்கிலப் புத்தாண்டை ஆவலோடு அமோகமாகக் கொண்டாடும் நம் தமிழர்களுக்கு, தமிழ்ப்புத்தாண்டையும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் ஏனோ ஏற்படுவதில்லை. அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களையும் முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? கேரளத்தில் விஷுவுக்கு, ஆந்திராவில் யுகாதிக்கும் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து வைத்திருப்பவர்கள் கூட ஒருசிலர் மட்டுமே.

ஒவ்வொரு நாட்டிற்கும், அவரவர்கள் மொழி கலாச்சார வழக்கப்படி காலம் - நேரம் போன்றவற்றை கணக்கிடுகையில், ஆண்டுகள், வரிசைப்படி வருவதுண்டு மோதுவதுண்டு. தமிழ் கலாச்சாரப்படியும்,சம்பிரதாயப்படியும் சித்திரை முதல் தேதி தமிழ் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகக் கலாச்சாரப்படி தமிழ் வருடப்பிறப்பை எப்படி யெல்லாம் கொண்டாடவேண்டுமென்று நமது பெரியோர்களும், தமிழ் அறிஞர்களும் சில வதிமுறைகளையும், வழிமுறைகளையும் வகுத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். இதில் முக்கியமானது பஞ்சாங்கப் படனம் என்பது. மனிதனின் வாழ்வை அவனது ஜாதகம் எப்படி கணிக்கிறதோ, அதுபோல ஒருவருடத்தின் பாலபலன்கள், நன்மை தீமைகளை விவாஹ சக்ர, திதிநேத்ர, ஜீவமூர்த்தி, கிரஹ மூர்த்திகளை வழிபட்டு, வரவேற்று, எல்லோருக்கும் தெரிந்து கொள்ளும்படியாக அந்த பஞ்சாங்கத்தை இறைவன் முன்பு வைத்துப் படிப்பதே பஞ்சாங்கப் படனம் என்று அழைக்கப்படுகிறது.

ஓருநாட்டின் காலநேரம், வறுமை, செழுமை என எத்தனையோ விஷயங்கள் நமக்கு விஞ்ஞான ரீதியாகத் தெரிந்திருந்தாலும், அவைகளை விஞ்ஞானம் சொல்வதற்கு முன்பே பஞ்சாங்கம் சொல்லிவிடுகிறது. எனவே, இந்தப் பஞ்சாங்கத்தை ஒரு கோயிலில் அதிகாலை வேளையிலே தூய்மையுடன் இறைவன் முன்பு வைத்து பூஜித்துவிட்டு படிக்க வேண்டும். தெய்வீகக் காரியங்களில் ஈடுபட்டுள்ள ஸத்சங்க நிர்வாகிகளோ, இறைபக்தியில் ஈடுபாடு கொண்ட பெரியோரோ, மரியாதைக் குரியவர்களோ இந்தப் பஞ்சாங்கத்தை ஊர்மக்கள் முன்னிலையில் படித்து, அந்த ஆண்டின் முக்கிய பண்டிகைகள் வரும் நாள், நல்ல காரியம் தொடங்க நல்ல நாள், முகூர்த்த வேளை போன்ற விவரங்களை விளக்கமாகக் கூற வேண்டும். திதியைப் போற்றினால் ஐஸ்வரியம் கிட்டும். வாரம், நான் போன்றவற்றை ஆராதனை செய்தால், தீர்க்கமான ஆயுள் நிறைந்திருக்கும். நட்சத்திர பூஜை செய்தால், கர்மவினைகள், நோய்கள் நீங்குகின்றன. கரணதேவதையைப் பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும் நீராடி, புத்தாடை அணிந்து, தூய உள்ளத்துடன் தூய்மையாக அந்த ஆண்டின் அதிதேவதை முன்பு ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியை வைத்து, அக்கண்ணாடிக்குப் பொன்னால் அலங்காரம் செய்து பொட்டிட்டு, பூவிட்டு, பழவகைகளை வைத்து, விளக்கேற்றி அக்கண்ணாடியில் இவைகளைக் கண்டுகளித்து அந்த வீட்டின் மூத்த தம்பதியர் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற வேண்டும். இப்படிச் செய்து இறைவனை பிரார்த்தனை செய்தால் நாட்டில் நல்ல மழை பெய்யும். செல்வம் செழிக்கும். தர்மம் என்பதும் நிலைத்திருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம். பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மகா பெரியவா  அமர்ந்திருந்தார்.  அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல் வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து  தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி  வைத்து விட்டு ஓய்ந்து போய் உட்கார்ந்தான். அவருடைய  சோர்ந்த முகம் மஹானின் கண்களில் பட்டது. மடத்து  ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே
அழைத்து வரச் செய்தார். மெதுவாக வியாபாரியை
விசாரித்தார்.

"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி
நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?"
போன்ற விவரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
தன்னுடன் வயதான தனது தாயாரும்,மனைவி
மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள்
என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம்
மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக
இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச்
சொன்னார்.

அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல்
வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக்
கொள்ள வேண்டும்" என்று சொன்னவர்,அதற்கேற்ற
விளக்கமும் தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா
வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு
வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும்
கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி
அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப்
புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!"
என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்
எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து  வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார்.  அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாக
இருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன்
வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.

பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி,
புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு
அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.

இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம்
குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத
விதமாக உதவியைச் செய்து விடுகிறார் மகான் என்று
அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும்
வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால்
தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம்
எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!
தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ள சிறு கிராமம் திருச்செங்காட்டங்குடி. அந்த ஊரில் தான் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டரை சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டு சிறுத்தொண்டரும் தன் ஒரே மகன் சீராளனை படையலிட்டு சிவபெருமான் மீண்டும் சீராளனை உயிர்ப்பித்துக் கொடுத்த ஊர்.

சிறுத்தொண்டர் வழியில் தொடர்ந்து ஒரு ஆண்வாரிசு மட்டுமே இன்று வரை தொடர்கிறது. சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இருந்த வாரிசுதாரர் பணியின் காரணமாக பெங்களூர் குடியேறிவிட்டார். ஆண்டுதோறும் பிள்ளைக்கறியமுது படைக்கும் பொறுப்பு இவருக்கே உரியது. திருவிழா ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்பே ஊர்வெட்டியான் ஒருகட்டு விறகைக் கொண்டு வந்து இவர் வீட்டில் போட்டுச் செல்வான். தொடர்ந்து திருவிழாவின் பொறுப்புகளை இவர் நிறைவேற்ற வேண்டும்.

இனி இதைத் தொடரமுடியாதென்ற முடிவிற்கு வந்து ருத்ராபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகளிடம் இந்நிலையைக் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் காஞ்சி மஹாப் பெரியவாளிடம் அனுமதி பெற்று வாருங்கள் என அனுப்பினர்.

காஞ்சி சென்று பெரியவாளைத் தரிசிக்கக் காத்திருக்கும் வரிசையில் அமர்ந்தார். உள்ளிருந்து வந்த ஊழியர் இவர் பெயரைச் சொல்லியழைத்தார். இவர் கவனமெல்லாம் எப்படி இப்பொறுப்பிலிருந்து விடுபடுவதென்பதிலேயே இருந்ததால் அழைப்பைக் கவனிக்கவில்லை. உள்ளே சென்ற ஊழியர் மீண்டும் வந்து சிறுத்தொண்டரை ஸ்வாமிகள் அழைக்கிறார் என்றதும், பதறிப் போய் எழுந்து உள்ளே சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார்.

மஹாப்பெரியவாள் மெதுவான குரலில் சொன்னார் “இந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை. உன் முன்னோர்கள் மிக்க பயபக்தியுடன் ஆண்டவன் நமது வீட்டிற்கு எழுந்தருளுகிறார் கிடைக்கக் கூடிய பாக்கியமா இது? என்ற பெருமிதத்துடன் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தப் பணி யார் செய்ய வேண்டுமோ அவரைத் தான் சிறுத்தொண்டர் வாரிசாக ஸ்வாமி அனுப்புகிறார். அது தான் ஒரு வாரிசாக வரும் ரகஸ்யம். இதை மீற உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எங்கிருந்தாலும் பிள்ளைக்கறியமுது பிரசாதம் திருச்செங்காட்டங்குடியிலுள் உன் வீட்டில் உன்னால் தயாரிக்கப்பட்டு அங்கு எழுந்தருளும் ருத்ராபதீஸ்வரக்குப் படைக்கவே நீ அனுப்பப்பட்டுள்ளாய். மறுக்காமல் இதைத் தொடர்ந்து செய்துவா. க்ஷேமமாய் இருப்பாய்” என்று பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தனுப்பினார்.

அப்பணி அக்குடும்பத்தினரால் தொடரப்படுகிறது.
குரு என்றால் கனமானது, பெரியது, அதாவது பெருமை உடையவர். மகிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை 'மஹாகனம் பொருந்திய' என்று சொல்கிறோம். கனமென்றால் வெயிட் அதிகமென்றா அர்த்தம்? உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் படிப்பிலே பெரியவர். நடத்தையால் வழிகாட்டுவதில் சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவிடமிருந்து புறப்பட்டு போய், சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செல்லுவது 'தீட்சை' என்று அறியப்படுகிறது. மஹா பெரியவா
பாவங்களைப் போக்கும் காவிரி புஷ்கர புண்ய விழா!

 இனியமாலைவணக்கம்
ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பார்கள் முன்னோர்கள். அத்தனைப் பெருமை வாய்ந்தது மயிலாடுதுறை. ஆயிரம் வருடங்கள் கங்கையில் தினம் தினம் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் துலா கட்ட காவிரியில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

காவிரி மகாத்மீயம் எனும் நூலில், மகான்களின் பெருமை, துறவிகளின் பெருமை, சாளக்கிராமத்தின் ஆராதனை மகிமை, காவிரியின் சிறப்புகள் ஆகியவற்றை உபதேசிப்பதைக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள், ஜன்மாந்திரப் புண்ணியம் செய்தவர்களுக்கே காவிரியைக் காண்பதற்க்கான பாக்கியமும் அதில் ஸ்நானம் செய்யும் பாக்கியமும் கிடைக்கும் என்கிறது. மேலும் காவிரி மகாத்மீயம் நதிகளில் உயர்ந்தது காவிரியே என்றும் கூறுகிறது.

கன்ம மகரிஷி என்ற மாமுனிவரை ஒரு நாள் கருத்த நிறத்தில் உள்ள மூன்று மங்கையர் தரிசித்து நமஸ்கரித்தார்கள். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்டார் மகரிஷி. தான் கங்கை என்றும், மற்றவர்கள் யமுனை, சரஸ்வதி என்றும் புண்ணிய நதிகள் என்றும், மனிதர்கள் செய்யும் பாவத்தை தங்களிடம் கொட்டித் தீர்த்ததனால், தாங்கள் கருமை நிறம் அடைந்துவிட்டதாகவும் தாங்கள் எங்களுக்குப் பாவத்தை போக்க வழி வகை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதைக் கேட்ட மகரிஷி, அவர்களுக்காக கடும் தவம் புரிந்தார். தவமிருந்து கண் விழித்த கன்ம மகரிஷி, மூவரும் தென்பாரத தேசத்தில் உள்ள மாயூரம் நகரில் உள்ள துலா காவிரியில் துலா மாதத்தில் நீராடி, மயூர நாதரையும், பரிமள ரங்கநாதரையும் தரிசித்து பாவங்களை போக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதன்படி, மூவரும் துலா மாதத்தில், மாயூரம் வந்தனர். காவிரியில் புனித நீராடினர். தங்களது பாவங்களை தொலைத்து புதிய பொலிவுடன் வடபாரதம் சென்றனர் என்கிறது புராணம். அத்தகைய பெருமை வாய்ந்த துலா கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடுவது வழக்கம்.

இப்போது… காவிரியின் பெருமையைப் பறைசாற்றும் உன்னத விழா. நம் பாவங்களையெல்லாம் போக்கிக் கொள்வதற்கான அற்புதப் பெருவிழா. புஷ்கர விழா.

நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் பிரம்மனை நோக்கி தவமிருந்தார். குருவின் கடும் தவ வலிமையைக் கண்டு வியந்து மகிழ்ந்த பிரம்மா, குரு பகவானின் முன்னே தோன்றி தரிசனம் தந்தார். பிரம்மாவைக் கண்டு சிலிர்த்த குரு பகவான், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.

‘‘உங்களிடம் உள்ள புஷ்கரத்தை எனக்கு வழங்கி அருளுங்கள்’’ என்றார் குரு பகவான். ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்றார் பிரம்மா. இதைக் கேட்டு துடித்துப் போன புஷ்கரம், ‘‘உங்களிடம் இருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’’ என்று கெஞ்சியது. என்ன செய்வது என்று ஒருநிமிடம் குழம்பித் தவித்தார் பிரம்மா. பிறகு, குருவுக்கும் புஷ்கரத்துக்கும் இடையே சமாதானமாகச் செல்ல வழியொன்றைச் சொன்னார்.

அதாவது, குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசிவரையான 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பாலிப்பது என்று புஷ்கரத்துக்குச் சொல்லப்பட்டது. அதன்படி புஷ்கரம் மேஷம்-கங்கை, ரிஷபம்- & நர்மதை, மிதுனம் & -சரஸ்வதி, கடகம் & -யமுனை, சிம்மம் & -கோதாவரி, கன்னி & -கிருஷ்ணா, துலாம் & -காவிரி, விருச்சிகம் & -தாமிரபரணி, தனுசு- & சிந்து, மகரம் & -துங்கபத்ரா, கும்பம்- & பிரம்மபுத்திரா, மீனம் & -பரணீதா ஆகிய நதிகளில் குருபகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன் அதே காலக்கட்டத்தில் பிரம்மா. விஷ்ணு, சிவனார், இந்திரன் ஆகியோரும் ஒருசேர இருந்து மக்களுக்கு அருள்பாலிக்கவும் செய்வார்கள். மேற்படி காலகட்டத்தில், மக்கள் இந்தப் புனித நதிகளில் நீராடினால் அனைத்து துன்பங்கள் நீங்கி செழிப்பும் வளமும் கொண்டு வாழ்வு வாழ்வார்கள் என்பதே புஷ்கர மகிமை!

அதன்படி வருகிற 2017ம் ஆண்டு காவிரி புஷ்கரம் எனும் வைபவம் நிகழ்கிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாநிகழ்வு ஆண்டு இது! அதனால்தான் இதை காவிரி மகா புஷ்கரம் என்று அழைக்கின்றனர்.

குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மாறும் குருப் பெயர்ச்சி புண்ணிய காலத்தில் வருகிற 12.-9.- 2017ல் இருந்து மகா புஷ்கரம் நடைபெறுகிறது. குறிப்பாக, துலா ராசிக்கு உரிய காவிரியில், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டதில் அன்று முதல் 12 நாட்கள் காவிரி புஷ்கர புண்ணிய காலம். இதை ஆதி புஷ்கரம் என்று அழைப்பார்கள்.

அடுத்தஆண்டு குருப் பெயர்ச்சி நடைபெறும் முன் உள்ள 12 நாட்களை அந்தி புஷ்கரம் என்பார்கள். மேற்படி தினங்களில் காவிரியில் நீராடுவதால் பலவகை தோஷங்களும் நீங்கும். பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் ஆகியன நீங்கி, வறுமை,பஞ்சம் அகலும். உலகம் சுபிட்சம் பெறும்.

குறிப்பாக கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்கள் காவிரியில் புனித நீராடுவதால் நல்ல நல்ல பலன்களைப் பெறுவார்கள். பித்ருக்கள் ஆசியும் காவிரித்தாயின் அருளும் கிடைத்து ஆனந்தமாக வாழலாம் என்பது ஐதீகம்.

காவிரியை வணங்குவோம். காவிரியில் நீராடுவோம். மகா புஷ்கரப் பலன்களைப் பெற்று வாழ்வோம்!
7:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

               7:ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                           (கி.மு.124-55)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த சூரிய நாராயணமஹி என்பவரின் தவப் புதல்வர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமம் சின்னையா சக்தி உபாசகர். அஷ்டமி, பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் கௌரி தேவிக்கு விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அருளால் அளவிட முடியாத படி இலக்கிய ஆற்றல் பெருகியது. ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கும், ஸ்ரீ சுரேஸ்வரர் அருளிய வார்த்திகங்களுக்கும் எளிய நடையில் குறிப்புரை எழுதினார். அதற்கு "ஆனந்த கிரி டீகா" என்று பெயர். இவர் வட நாடெங்கும் விஜயயாத்திரை புரிந்து திரும்பும் போது நடுவழியில் ஆந்திராவிலுள்ள ஸ்ரீ சைலத்தில் கி.மு.55 ஆம் ஆண்டு, குரோதனவருஷம், வைகாசிமாதம், கிருஷ்ணபக்ஷம், நவமியன்று சித்தியடைந்தார்.
6: நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

                   6:ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                            {கி.மு.205 -124}
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் மருத்துவராகப் பணியாற்றிய பார்வு பண்டிதர் என்பவரின் திருமகனாவார். இவரும் திராவிட அந்தணர். தந்தை இவருக்கு வைத்த நாமதேயம் விஸ்வநாதர். ஹிந்து மதம் வளர பெரும் பாடு பட்டவர். ஸ்ரீசந்திர மௌலீஸ்வர பூஜையை பெரும் ஈடுபாட்டோடு செய்து வந்த ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.மு.124ல் நாளாம் வருடம் சித்திரை மாதம் சுக்லபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தியுற்றார்.

திங்கள், 9 செப்டம்பர், 2019

கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்?

மனித வாழ்க்கை எப்படி எல்லாமோ முடிவுக்கு வந்து விடுகிறது. இப்படி, எப்படியாவது வாழ்க்கை நடத்தி விட்டால் போதுமா! நமக்கு நற்கதி ஏற்பட, ஏதாவது செய்ய வேண்டாமா... வீட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாகி விட்டது. இதெல்லாம், பிறருக்கு தான் உதவும். நமக்கு உதவுவது, நாம் செய்யும் புண்ணியம் மட்டும் தான். இதை சுலபமாக சம்பாதித்து விடலாம் என்கின்றனர் முன்னோர். ஆலயத்தை பிரதட்சணம் செய்வது ஒரு புண்ணியம். வாக்கிங் போகிற மாதிரி, சாயந்திரம் கிளம்பி, ஒரு ஆலயத்தை சுற்றி விட்டு வந்தாலே, ஆலயப் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைத்து விடும். ஒரு சின்ன கதை! சோழ மகாராஜா ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம், ஹரதத்தர் என்ற மகானை தரிசிக்க வந்தார். மகானை சந்தித்த ராஜா, அவரை வணங்கி, நான் கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு ஹரதத்தர், நீர் கஞ்சனூர் முதலான ஏழு சிவ ஸ்தலங்களை, அரை யாம நேரத்தில் தரிசித்து வந்தால், உன் ஆசை நிறைவேறும்... என்றார். உடனே ராஜா, இதென்ன பிரமாதம்... என்று சொல்லி, பஞ்ச கல்யாணி குதிரை மீது ஏறி, குடைபிடித்து ஒருவன் ஓடிவர, ஏழு சிவஸ்தலங்களையும் அரை யாமத்தில் தரிசித்தார். 
அதே சமயம், குதிரையும், குடைபிடித்து ஓடிவந்தவனும் மயங்கி விழுந்து, இறந்து போயினர். அந்த நிமிடமே, வானிலிருந்து ஒரு விமானம் வந்து, குதிரையையும், குடைபிடித்தவனையும் ஏற்றிக் கொண்டு, கைலாசம் சென்றது. அந்த அதிசயத்தை கண்டு ஆச்சரியப்பட்ட சோழ ராஜன், தானும், ஆலயத்தை சுற்றி வந்திருக்கும் போது, குதிரைக்கும், குடை பிடித்தவனுக்கு மட்டும், கைலாயம் போகும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே... நமக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று எண்ணினார். நேராக ஹரதத்தரிடம் சென்று, நடந்த விபரத்தை சொன்னார். அதற்கு ஹரதத்தர், குதிரையும், குடை பிடித்தவனும் காலால் நடந்தே, ஆலயத்தை வலம் வந்தனர். அந்த புண்ணியத்தால், அவர்களுக்கு கைலாசம் போகும் பாக்கியம் கிடைத்தது. நீ, குதிரை மேல் ஏறி வந்ததால் சரீர சுகம் தான் கிடைத்தது. கைலாயம் போகும் பாக்கியம் கிடைக்கவில்லை... என்றார். அரசன் மறுபடியும் அவரை வணங்கி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்... என்று கேட்க, நீ பாதசாரியாகவே அந்த ஏழு சிவாலயங்களையும் பிரதட்சணம் செய்... என்றார். அரசனும், ஆசார சீலனாக பக்தியுடன், நடந்தே ஏழு சிவாலயங்களையும் வலம் வந்து, அவர் முன் வணங்கி நின்றார். அடுத்த வினாடி, விமானம் வந்து அரசனை, கைலாசத்துக்கு சகல மரியாதைகளுடன், அழைத்துச் சென்றது. இதன் மூலம் அறிந்து கொள்வது என்னவென்றால், ஆலயம் வலம் வருவது என்பது, காலால் நடந்து வலம் வர வேண்டும். ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறி பவனி வந்து, நான் நூறு சுற்று சுற்றி விட்டேன்... என்றால், அது பயன்படாது. புண்ணியம் என்பது சிரமப்பட்டு சம்பாதிக்க வேண்டியது; விலைக்கு வாங்குவதல்ல.
--------------------------------------‐----------------------------------------
அமாவாசையன்று வாசலில் கோலம் போடக் கூடாது?

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு திதி விசேஷமானது. சதுர்த்தி-விநாயகருக்கு சஷ்டி-முருகனுக்கு, ஏகாதசி-மகாவிஷ்ணுவுக்கு. அஷ்டமி-பைரவருக்கு, சதுர்த்தசி-சிவனுக்கு. பவுர்ணமி-அம்மனுக்கு... இதைப் போலவே, மறைந்த முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி, அதுதான் அமாவாசை. ஆகவே தான், அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும் தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு நம் முன்னோர்களை நம் இருப்பிடத்துக்கு வரவழைத்து, அவர்களின் பசி தாகம் தீர எள்ளு கலந்த ஜலத்தால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, அவர்கள் நம் இருப்பிடம் வந்து நாம் தரும் எள்ளு கலந்த ஜலத்தை ஏற்றுக்கொண்டு பசி, தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள். அவ்வாறு தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால். இவை பித்ருக்களுக்குப் பிடிக்காது. ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை,  அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும்(தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும்) தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவேதான், அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர். வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.
--------------------------------------‐----------------------------------------
பேராசைப்படுபவரா நீங்கள்?

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் யாக யக்ஞங்களால், தேவர்கள் திருப்தியடைகின்றனர். எப்படி? இங்கு அக்னியில் போடப்படும் அவிஸ், அமிர்தமாகி அவர்களை அடைகிறது. பதிலுக்கு அவர்கள் மழையைக் கொடுக்கின்றனர். இப்படி பரஸ்பரம் உதவி நடக்கிறது. ஒரு சமயம், மனிதர்களுக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தது. ஆசை இருந்தால் தானே அது நிறைவேற ஏதாவது செய்ய வேண்டும்! ஆசை இல்லாமையால் அவர்கள் எந்த யாக யக்ஞங்களோ, கர்வங்களோ செய்யவில்லை. அதனால், கவலைப்பட்ட தேவர்கள். அவர்களது குருவான பிரகஸ்பதியிடம் முறையிட்டனர். அதற்கு அவர், நான் இதில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரம்மாவிடம் முறையிடுங்கள்... என்றார். இதே சமயம் சத்யலோகத்தில், மற்றொரு காரியத்தில் ஈடுபட்டிருந்தார் பிரம்மா. பிரம்மாவிடம் சென்ற தேவர்கள், பூலோகவாசிகள் யாகம், யக்ஞம் எதுவும் செய்வதில்லை. எங்களை மதிப்பதில்லை... என்று புகார் செய்தனர். அதற்கு அவர், உலகில் மானிடர்கள் தனக்கு ஏதாவது பயன் உண்டாக வேண்டும் என்பதற்காகவே பிறருக்கு உதவி செய்கின்றனர். மானிடருக்கு உங்கள் உதவி தேவையில்லை. அதனால், அவர்கள் வேள்வி செய்யவில்லை. இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் மகாலட்சுமியிடம் முறையிடுங்கள்.என்றார். தேவேந்திரனும், மற்ற தேவர்களும் இமயமலை சென்று மகாலட்சுமியைக் குறித்து, ஸ்தோத்திரம் செய்தனர். மகாலட்சுமி, அவர்கள் முன் தோன்றி, தேவர்களே... உங்கள் துதியைக் கேட்டு சந்தோஷப்படுகிறேன். உங்கள் குறை யாது? என்றாள்; தேவர்களும் தங்கள் குறையைத் தெரிவித்து; ஸ்தோத் திரம் செய்தனர். அந்த ஸ்தோத்திரத்தை கேட்ட மகாலட்சுமி, மனிதர்களில் யார் இந்த நாமாக்களை சொல்லி, ஸ்தோத்ரம் செய்கின்றனரோ, அவர்கள் செல்வந்தர்களாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் இருப்பர்... என்று சொல்லி, மறைந்தாள். சில காலம் சென்றது. அப்படியும் தேவர்கள் குறை தீரவில்லை. மறுபடியும் மகாலட்சுமியை துதித்தனர்; மகாலட்சுமியும் வந்தாள்; விவரம் தெரிந்தது. ஓஹோ... இதற்குக் காரணம் மனிதர்களிடம் ஆசை என்பதே இல்லாமல் இருப்பதுதான். ஆசை இருந்தால் தானே அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணம் எழுந்து, யாக யக்ஞங்களைச் செய்வர். அதற்கு ஒரு வழி செய்கிறேன்... என்று சொல்லி, காமன் என்ற குழந்தையை உண்டாக்கி, தேவர்களிடம் கொடுத்து, இதை நன்றாக வளருங்கள். உங்கள் குறையை தீர்த்து வைப்பான்... என்று சொல்லி மறைந்தாள். இந்த காமன் தான் (காமன் என்றால் ஆசை, விருப்பம்!) மனிதர்களின் மனதில் புகுந்து, பலவித ஆசைகளை உண்டாக்கி அவை நிறைவேற வேண்டி, பூஜை, ஹோமம், யாகம், யக்ஞம் எல்லாவற்றையும் செய்யும்படி செய்தான். தேவர்களுக்கு முன்போல் அமிர்தம் கிடைத்து, நிம்மதியாக இருந்தனர் என்பது கதை. ஆக, மனிதர்களுக்கு காமம் (ஆசை, விருப்பம்) என்பது இருந்தால் தான், பலவித காரியங்கள் நடைபெறும். மனிதர்களும், தேவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். இந்த ஆசை என்பது நிதானமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். பேராசையாகவும், அநியாயமாகவும் இருக்கக் கூடாது; ஞாபகம் இருக்கட்டும்!
--------------------------------------‐----------------------------------------
மங்கல வாழ்வு அருளும் மதுரைக்கு அரசி!

மதுரையில், மலையத்துவஜ பாண்டியன் நீண்டகாலமாக மகப்பேறு வாய்க்காமல் வருந்தினான். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். பாண்டியனின் மனைவியான காஞ்சனமாலை முற்பிறவியில் வித்யாவதி என்ற பெயரில் பிறந்து, பராசக்திக்கு சேவை செய்து வந்தாள். இன்னொரு பிறவியில், அம்பிகையே தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தாள். அதன் பயனாக, அவள் மூன்றுவயது பெண்குழந்தையாக யாகத்தீயில் தோன்றினாள். தடாதகை என்னும் பெயரிட்டு குழந்தையை வளர்த்தனர். குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்ததைக் கண்டு காஞ்சனமாலை வருந்தினாள். காஞ்சனமாலையே! வருந்தாதே!  தடாதகை தனக்கு மாலைசூடும் மணாளனைக் கண்டதும் மூன்றாவது தனம் மறைந்துவிடும்! என்று வானில் அசரீரி ஒலித்தது. ஆதிபராசக்தியின் அவதார மான தடாதகை வீரதீரம்மிக்கவளாக வளர்ந்தாள். தக்கவயதை அடைந்ததும் மன்னன் பாண்டியநாட்டின் இளவரசியாக முடிசூட்டினான்.  உலகில் உள்ள தேசங்களை எல்லாம் கைப்பற்ற எண்ணிய தடாதகை, திக்விஜயம் புறப்பட்டாள். அஷ்டதிக்பாலகர்களான (எட்டுதிசை காவலர்கள்) இந்திரன், அக்னி,யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்களை வென்று கைலாயம் அடைந்தாள். அங்கு கயிலைநாதனைக் கண்டாள். அவளின் வீரம் நொடியில் காணாமல் போனது. நாணத்தால் முகம் சிவந்தாள். அசரீரியின் வாக்கை மெய்ப்பிக்கும் விதத்தில் தடாதகையின் மூன்றாம் தனம் மறைந்தது. அங்கயற்கண்ணி மீனாட்சியாக உருவெடுத்தாள். ஐயனும் சொக்கேசப்பெருமானாக வந்து அவளின்கரம் பற்றினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடிநிற்க மதுரையில் மீனாட்சிகல்யாணம் நடந்தேறியது. அம்மையும் அப்பனும் பாண்டியநாட்டின் மன்னராக பட்டம் சூடி அரசாட்சி நடத்தினர். மீனாட்சியை மீன்+அக்ஷி என பிரிப்பர். மீன் போன்ற கண்களையுடையவள் என்பது இதன் பொருள். மீன் தன் பார்வையாலேயே குஞ்சுகளின் பசியைப் போக்கி விடும். அதுபோல், அங்கயற்கண்ணி எம்பிராட்டியும் தம் பார்வையாலேயே பக்தனின் குறையைப் போக்கிடுவாள். இதனால் தான் அவள் மீனாட்சி என்ற பெயர் பெற்றாள். மதுரையில் மீனாட்சி சந்நிதி விசேஷமானது. இங்கு அம்மனுக்கு நடக்கும் தனிவிழாக்களில் நவராத்திரி சிறப்பானது. கொலுமண்டபத்திற்கு எழுந்தருளும் மீனாட்சியம்மன் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தந்து மங்கல வாழ்வு அருள்வாள். கொலுவும் வைக்கப்படும்.
--------------------------------------‐----------------------------------------
சாஸ்திரங்களை மாற்ற முடியுமா?

சாஸ்திரங்களும் வேதங்களும் அநாதி காலமாக இருந்துவரும் சத்தியமான உண்மைப் பொருள். இவற்றை மாற்றவோ, திருத்தவோ கூடாது. மகரிஷிகளும் முனிவர்களும் கடும் தவம்புரிந்து நினைத்து நினைத்து உணர்ந்து, எது உண்டோ அதை எழுதினார்களே தவிர, தங்கள் கற்பனையினால் எழுதவில்லை. அதை எல்லாம் நாம் மாற்றப் பார்த்தோமேயானால் விபரீதமான விளைவுகளையே அனுபவிக்க நேரிடும். இதை விளக்க ஒரு சம்பவம்.  ஒரு ஆச்சாரியர் சீடர்களுக்கு பாடங்கள் போதித்து வந்தார். ஒருநாள் இந்திரியங்கள் வித்வான்களை ஆகர்ஷிக்காது என்று போதித்தார். ஆனால் சீடர்களோ, இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. வித்வான்களையும் இழுக்கும் சக்தி கொண்டவை என்றார்கள் ஆச்சாரியரோ அதை ஒப்புக்கொள்ளவில்லை. மறுநாள் காலை ஆசிரமத்தில் ஆச்சாரியர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அந்தசமயம் ஆசிரமத்தின் வழியாக ஒரு அழகான பெண் கையில் குடத்துடன் தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். ஒரு வினாடி ஆச்சாரியரின் மனம் ஸ்தம்பித்துவிட்டது. என்ன சவுந்தர்யம்! என்ன நளினம்! மனம் எண்ணிக் கொண்டிருக்கும்போதே அந்த பெண் அவரைக் கடந்து ஆசிரமத்தில் நுழைந்து உட்பக்கமாகத் தாளிட்டுக் கொண்டாள்.
ஆச்சாரியரோ நடுங்கிப் போனார். சீடர்கள் பாடம் கேட்கவரும் நேரமாகிவிட்டது. ஆச்சாரியர் கதவை பலமுறை தட்டிப் பார்த்தார் கதவு திறக்கப்படவில்லை. உடனே ஆச்சாரியர் ஆசிரமத்தின் மேலே ஏறி, வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுகளைப் பிரிக்கத் தொடங்கும்போது இரண்டு மூங்கில்களுக்கிடையில் கால்கள் மாட்டிக் கொண்டன. மூங்கில் கணுக்கள் குத்தி ரத்தம் வழிந்தது வேதனை தாங்கவில்லை. அந்தசமயம் சீடர்கள் வந்தனர் ஆச்சாரியர் நேற்று சொல்லிக்கொடுத்தபடியே. இந்திரியங்கள் வித்வான்களை ஆகர்ஷிக்காது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆச்சாரியரோ தாங்கமுடியாத அவஸ்தையில் இருந்தார். சீடர்கள் ஆசிரமத்தின் மேலே ஆச்சாரியர் இருப்பதைப் பார்த்தார்கள். அவர்கள் வியப்போடு குருவே மேலே என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க, ஆச்சாரியரோ, நான் செய்வது இருக்கட்டும். நேற்று நான் சாஸ்திரத்தை திருத்தி எழுதிய மந்திரத்தை உடனே மாற்றி எழுதுங்கள் பலவான் உடனே மாற்றி எழுதுங்கள் பலவான் இந்த்ரியக்ராம் வித்வாம்ஸமபி கர்ஷதி, கர்ஷதி, கர்ஷதி, கர்ஷத்யேவ என்று கதறினார். இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை அவை வித்வான்களையும் இழுக்கும் இழுக்கும் இன்னும் இழுக்கும் என்று சொன்னபோதே ஆச்சாரியர் பொத்தென்று உள்ளே விழுந்தார். ஆனால் அங்கு யாரையுமே காணவில்லை. அப்படியானால் வந்தது யார்? சாஸ்திரமே பெண் உருக்கொண்டு வந்து அவரைத் திருத்தியிருக்கிறது.
இராவணேஸ்வரனைப்போல சர்வ வல்லமை படைத்தவர் யாருமே இல்லை. சிவ பக்தன் வீராதி வீரன். கயிலை மலையையே தனது கைகளால் தூக்கி, தனது நரம்புகளையே வீணையாக மீட்டி சாமகானம் பாடி, சிவபெருமானிடம் சந்திரஹாஸம் என்ற வாளைப் பெற்றவன். எத்தனை இருந்தும் தன் உள்ளே இருக்கிற காம இச்சையை அடக்க முடியாமல் மனைவி, மக்கள் உற்றார், உறவினர், நாடு, செல்வம், புகழ் என அனைத்தையும் இழந்து தன்னையும் இழந்தான். ஐம்புலன்களை வெல்வதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. தியானம், தவம் போன்றவற்றைத் தொடர்ந்து பழகவேண்டும். இந்த இந்திரியங்களை வென்றால் நாம் எதையும் பெற்றுவிடலாம்.
--------------------------------------‐----------------------------------------
யார் யார் கொடியில் என்னென்ன சின்னங்கள்!

ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவின் மாபெரும் காவியங்கள். இவை, மன்னர்கள் மற்றும் இளவரசர்களின் வீரக் கதைகளை மட்டுமின்றி, அன்றைய சமூக அமைப்பை விவரிக்கும் கண்ணாடியாகவும் திகழ்வன. அந்தக் காலத்தில் கொடிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனின் கொடியில் அனுமன் இடம்பெற்றிருந்த விஷயம் பெரும்பாலானோருக்குத் தெரியும். அதேபோன்று... தருமர் தமது கொடியில் நந்தா, உப நந்தா எனப்படும் இரண்டு மிருதங்கங்களைக் கொண்டிருந்தாராம். பீமன் - சிம்மக்கொடி; நகுலன் - சரபக்கொடி; சகாதேவன் - அன்னம்; அபிமன்யு - சாரங்கப் பறவை; பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகுக் கொடியுடன் திகழ்ந்தார்களாம். திருஷ்டத்யும்னன் கோவி தாரா கொடியும், ஸ்ரீகண்ணன் கருடக் கொடியும், அவரின் மகன் பிரத்யும்னன் மகரக் கொடியும் கொண்டிருந்தார்கள்.
கவுரவர்களின் சார்பில்... பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாளக்கொடி கொண்டிருந்தார் (தாள மரம் என்பது பெரிதும் மதிக்கப்பட்ட மூங்கில் மரமாம்). துரியோதனன் - சர்ப்பக் கொடி கொண்டிருந்தான். துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலமும் இருக்கும்படியான ஒரு சித்திரத்தை சின்னமாக வைத்திருந்தார். கிருபாச்சார்யர் எருதுக்கொடியும், அஸ்வத்தாமன் சிங்கவால் கொடியும் வைத்திருந்தனர். கர்ணன் தனது கொடியில் யானைச் சங்கிலி சின்னம் பொறித்திருந்தான். ஜெயத்ரதன் கரடியையும், சல்லியன் கலப்பையையும் கொடியில் கொண்டிருந்தனர். பீஷ்மரை எதிர்த்து பாண்டவர் தரப்பில் போரிட்டவன் சிகண்டி. ஒரு காலத்தில் பெண்ணாக இருந்தது மட்டுமல்லாமல், அவனது கொடியில் அமங்கலமான ஒரு சின்னத்தை பொறித்து வைத்திருந்ததாலும் அவனுடன் போர் புரிய மறுத்துவிட்டாராம் பீஷ்மர்.
--------------------------------------‐----------------------------------------
இறைவனைப்பற்றி நினைப்பதுண்டா நீங்கள்?

மனிதன், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டோ, யோசித்துக் கொண்டோ தான் இருக்கிறான். ஆனால், கடவுளைப் பற்றி நினைக்கத்தான் நேரமில்லை என்கிறான். என்ன சார், இன்னிக்கு பிரதோஷமாச்சே... கோவிலுக்குப் போகலையா... என்று கேட்டால், அப்படியா... இன்னிக்கு பிரதோஷமா... எங்கே சார் நேரமிருக்கு... இங்கேயே வேலை சரியா இருக்கு... என்று பதில் சொல்லி, டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார். ஆனால், பகவானோ, என்னை வழிபடு, என்னை தியானம் செய். என் கோவிலுக்கு வா... என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவனவனுக்கு என்ன பிராப்தமோ அதன்படி நடக்கட்டும் என்று விட்டு விடுகிறார். நான் உன்னை விடமாட் டேன்... என்று, எந்த பக்தன் அவரை பிடித்துக் கொள்கிறானோ, அவனை கை விடாமல் காப்பாற்றுகிறார். நாம் ஒவ்வொரு நாளும், எவ்வளவோ விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் கிறோம்.  நேரப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறோம். ஞாபகமாக காலை, 6:00 மணிக்கு காபி சாப்பிடுகிறோம். பிறகு டிபன் 9:00 மணியானதும் அலுவலகத்துக்குப் போக வேண்டும். எதற்காக? சம்பளம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற. வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், வைத்தியரிடம் ஓடுகிறோம். அவர் கொடுக்கும் மருந்தை வாங்கி வந்து, நேரம் தவறாமல் கொடுக்கிறோம். அப்போது, அலுவலகம் போவதை முக்கியமாக கொள்வதில்லை. நோயாளியை குணப்படுத்துவதே முக்கியமாக கருதுகிறோம். இதுவரையில் அலுவலகம் முக்கியம். இப்போது வீட்டில் உள்ளோர் முக்கியம். இவைகளை தவிர, வேறு பல வேலைகளும் உள்ளது. அதற்காக நேரங்களை ஒதுக்கி, அவைகளை கவனிக்கிறோம். அன்றைய பொழுது போய் விடுகிறது; இரவும் வந்து விடுகிறது. அப்பாடா...இன்னிக்கு ஒரே அலைச்சல்... களைப்பாயிருக்கிறது... என்று சொல்லி, சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்று விடுகிறோம். இவ்வளவு நேரம் செலவிட்ட போதும், இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வைத்து கொண்ட போதும், கடவுள் ஞாபகம் மட்டும் வருவதில்லை; அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. ஒருவன், ஒரு ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. ஞாபகமாக, 10 நாள் முந்தியே டிக்கெட் ரிசர்வ் செய்து, அதை பத்திரமாக வைத்துக் கொள்கிறான். என்ன தேதி, எந்த ரயில், எத்தனை மணிக்கு என்பதையும், ரயிலுக்குப் புறப்படும் முன், என்னென்ன பொருள், துணிமணிகள், எவ்வளவு பணம் எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்து, தயார் செய்து கொள்கிறான். சரியான நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனை அடைவதிலேயே. கவனம் முழுவதும் இருக்கிறது. ஆனால், சிறிது நேரமாவது கடவுளை நினைக்கவோ, அதற்கு நேரம் ஒதுக்கவோ முடியவில்லை. ஸ்டேஷனுக்குப் போகும் வழியில், ஒரு கோவில் இருந்தால் கூட, உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்ய நேரமில்லை என்று, வாசலிலிருந்தே ஒரு கையால் அவசர கும்பிடு போட்டு விட்டுப் போகிறான். இந்த உலகில் நாம் பிறந்து, நல்ல நிலைமைக்கு வந்து சுகமாக இருப்பதே, அவனருளால் தான் என்பதே மறந்து விடுகிறது! உலக வாழ்க்கை என்பது எவ்வளவு நாட்கள் என்பது நிச்சயமில்லை. எப்படி எல்லாமோ நாட்களை கழிக் கிறோம். நமக்கு என்று ஒரு நற்கதியை தேடிக்கொள்ள வேண்டாமா? இது எப்படி கிடைக்கும்? கடவுள் ஞாபகமும், கடவுள் வழிபாடும் இருந்தால் தான் கிடைக்கும். ஈசனை நினைக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!
--------------------------------------‐----------------------------------------
ஆதிசங்கரர் அருளிய ஞானோபதேசம்!

காஷ்மீர் முதல் குமரி வரை பல முறை யாத்திரை செய்து, ஞான நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர். தன் அவதாரம் பூர்த்தியாகும் காலத்தில், தன்னைப் பிரிய வேண்டியிருப்பது குறித்து வருந்திய சீடர்களுக்கு, சில உபதேசங்களைச் செய்து உள்ளார். அவை:நித்யம் வேதம் ஓது; அதன் விதிப்படி தர்மத்தை செய். கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூஜை செய்; காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே; உலகப் பற்றை ஊட்டும் இன்பங்களெல் லாம், முடிவில் துன்பங்களா கவே மாறும் என்பதை மறவாதே; உன்னை நீ அறிவதில் ஆவல் கொள்; தன்னலப் பற்றிலிருந்து உன்னை மீட்டுக் கொள்; நல்லவர்களிடத்தில் உறவு கொள். பகவானிடத்தில் மாறாத அன்பு வை; புலன்களை அடக்குதல் போன்ற உத்தம குணங்களை பழகிக் கொள்; இல்லறத்துக்குரிய கர்மங்களை விடுத்து, துறவறத்தை மேற்கொண்டு, ஆத்ம ஞானியை குருவாக நாடி, அவரது திருவடித் தொண்டை மேற்கொள்; அவரிடம் பிரண உபதேசத்தை வேண்டிக் கொள்; வேதங்களின் முடிவான பொருளை உரைக்கும் வாக்கியங் களைக் கேட்டு தெரிந்து கொள்; வீண், தர்க்க வாதங்களில் ஈடு படாதே.வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்கு துணை செய்யும் நியாயமான காரணங்களை மட்டும் நன்கு ஆலோசித்து கொள்; எங்கும் நிறைந்த பரம்பொருளே இந்த உடலில், நான் என்னும் அறிவுப் பொருளாக நிற் கிறது என்ற உண்மையை, நினைவில் வைத்துக் கொள்; நான் ஞானவான் என்னும் கர்வத்தை அறவே ஒழித்து விடு; படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்; பசிப் பிணிக்கு அன்னத்தை மருந்தாக உட்கொள்; ருசியுள்ள உணவைத் தேடியலையாதே; தெய்வாதீனமாக தானாகக் கிடைத்ததைக் கொண்டு மகிழ வேண்டும்.
குளிர், உஷ்ணம் போன்ற உபாதைகளைப் பொருட்படுத் தாமலிரு; பயனில்லாத வார்த்தைகளை சொல்லாதே; பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசு; எதிலும் பற்றற்ற நிலையில் இரு; உலகத்தாரின் போற்றுதல், தூற்றுதல் இவைகளை மனதில் வாங்கிக் கொள்ளாதே; ஏகாந்தத்தை நாடு.உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய்; எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்த பரிபூர்ண நிலையில் பார்; ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமுமாய் நிற்பதால், இந்த பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருட்களும் வெறும் தோற்றமே எனும் தெளிவைப் பெறு; இவ்விதத் தெளிவினால், முன் செய்த வினைகளை யெல்லாம் அழித்து விடு; இவ்விதத்தெளிவின் பலத்தினால், வருங்காலத்தில் ஏற்படும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு; இந்தப் பிறவியின் இன்ப, துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று அனுபவித்து விடு; இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள். — இப்படியெல்லாம் உபதேசங்களைச் செய்து உள்ளார். அவரது ஞானோபதேங்களைப் பலரோ, சிலரோ பின்பற்றுவதால் தான், இன்னமும் மனித வர்க்கம் நல்லபடியாக இருக்கிறது என்பது பெரியோர்களின் கருத்து. இந்த உபதேசங்கள், சோபான பஞ்சகம் என்ற ஐந்து சுலோகங்களாக அமைந்துள்ளது. இந்த உபதேசம், சீடர்களாகிய நம் எல்லாருக்கும் சொல்லப்பட்டது தான் என்பதை யும் மறந்து விடக்கூடாது. முடிந்த வரையில் அனுசரித்து நடப்பது நல்லது. சொல்வதும், எழுது வதும் சுலபம் தான். அனுசரிக்க முடியுமா சார்? என்று கேட்டால், அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னார். முயன்று பார்க் கலாம். முடியாவிட்டால், மனசே ராஜா, புத்தியே மந்திரி. நம் இஷ்டம்!
--------------------------------------‐----------------------------------------
பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!

கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.  பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.

ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது. விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!
--------------------------------------‐----------------------------------------
கண்ணன் வழிபட்ட காமதேனு!

மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்த சமயத்தில், கோகுவாசிகள் ஆண்டுதோறும் செய்துவந்த இந்திர பூஜையை நிறுத்தச் சொன்னார். அதனால் இந்திரன் கோபம் கொண்டு கடும் மழை பொழியச் செய்தான். ஊரும் உயிர்களும் நீருள் மூழ்கித் தவிக்க, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து அதன்கீழ் சகலரையும் இருக்கச் செய்து காத்தார். கோகுலவாசிகளை தன்னால் எதுவும் செய்ய இயலாது என உணர்ந்து கண்ணனிடம் வந்து மன்னிப்புக் கேட்டான் இந்திரன். இந்திரபூஜை நின்றாலும், இந்திரனை அவனது தம்பி உபேந்திரனையும் சேர்த்து வழிபடச் சொல்லி, அப்படி வழிபடுவோர்க்கு எல்லா சுகங்களும் கிடைக்கட்டும் என்று பகவானே ஆசியளித்தார் அந்த நாளே, போகி.  இந்திர உப÷ந்திரர்களுடன் கோகுலவாசிகளும் இணைந்து நாராயணனின் அம்சமாகிய சூரியநாராயணனை வழிபட்டனர். அந்த தினமே ஸங்கராந்தி(பொங்கல்) பசுக்களைக் காத்ததால், காமதேனு ஆநிரைகளோடு முன்னின்று தனது பாலால் அபிஷேகித்து கண்ணனை வழிபட்டு கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்தாள்.  கோவிந்தனை கோவாகிய காமதேனு வழிபட்டு செய்த பூஜையே மாட்டுப் பொங்கல்.  சூரியனை, தினமும் காயத்ரியாலும், சூரியநமஸ்காரத்தாலும், ஆதித்ய-ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்களாலும் பூஜிக்கிறோம். ராமபிரான், ராவணனை வெல்லவும், பாண்டவர் அட்சயபாத்திரம் பெறவும், ஸத்ராஜித் என்னும் அரசன் ஸ்யமந்தக மணியைப் பெறவும் அவர்கள் சூரியனை வழிபட்டதே காரணம். கிருஷ்ணருக்கும் சாம்பவதிக்கும் பிறந்தவனான ஸாம்பன் சாபத்தால் பெற்ற பெரு நோய், சூரியனின் அருளால், நீங்கப் பெற்றான், ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண அதாவது எப்போதும் சூர்ய மண்டலத்தில் மத்தியில் இருப்பவன் நாராயணன் என்கிறது. வேதசாஸ்திரம். அருள், ஆரோக்கியம், அறிவு, ஆகியன தருபவன் சூரியன். இந்திரனைப்போல் சகல பாக்யங்களும் பெற வேண்டி போகியும் அவற்றை முழுமையாக அனுபவித்திட ஆயுளும் ஆரோக்யமும் வேண்டிச் செய்யும் சூர்ய நமஸ்காரமும் ஸங்காரந்தியும் (பொங்கல்) மறுநாள் மகாலட்சுமியின் அருள்கிட்டச் செய்யும் கோ பூஜையான மாட்டுப்பொங்கலுமேல மார்கழி கடைசிதினமும், தையின் முதல் இரு நாட்களும் பண்டிகை கொண்டாடுவதன் உட்பொருளாகும்.
--------------------------------------‐----------------------------------------
ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மை

விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.டயட்டீசியன்களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று இருதயவியல் நிபுணர்கள் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதைத் தான், நமது முன்னோர் விரதம் என்றார்கள்.ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் லங்ஙனம் பரம ஒளஷதம் என்று சொல்லப்பட்டுள்ளது. லங்ஙனம் என்றால் உணவு. ஒளஷதம் என்றால் மருந்து. உணவே சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும். நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங் களை நம் முன்னோர் வகுத்தனர்.விரதமாவது.. ஒன்றாவது... மனுஷன் செவ்வாயிலே வெள்ளம் வந்துச்சான்னா ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கான், இதிலே விரதம் கிரதமுனு பாடாபடுத்துறா எங்க அம்மா! என்று இனியும் சொல்ல மாட்டீர்கள் தானே!
--------------------------------------‐----------------------------------------
அரோகரா என்றால் என்ன?

ஹர என்ற சொல்லுக்குப் பாவங்களைப் போக்குவது என்று பொருள். ஹ என்ற எழுத்து தமிழில் அ என்று வரும். ஹரஹர என்ற சொல் தமிழில்அரோகரா என்று வந்தது. சிவபெருமானுடைய திருநாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹரா என்று இடைவிடாமல் உச்சரித்தால், நம் பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல் எரிந்து ஒழியும்.  -வாரியார் உரையிலிருந்து ..
--------------------------------------‐----------------------------------------
சிவன் அருள்பாலிக்கும் தலங்களும் அவற்றின் சிறப்பும்!

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்

*ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

*தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன், இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் காட்சி தருகிறார், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

*அமர்நாத்தில் உள்ள பனி லிங்கம் சந்திரனைபோலவே 15 நாளில் வளர்ந்து பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

*அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்

*மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள குஸ்மேசம் என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

*பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்டுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

*திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும் தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

*ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1 காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வரர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நல்லூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

விஷ்ணு சிறப்புச் செய்திகள்

*திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

*திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

*நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

*உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

*ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு சக்ரத்துடன் காட்சியளிக்கிறார்.

*திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும் இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

*திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

*ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைந்த சிவன்-திருமால் கோயில் இது மட்டுதான்.

*திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.

*காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர். அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.

*திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

*கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.

*திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

*பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீ வைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிப்படுகிறார்கள்.

*கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

*மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் இல்லை.

*காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன, பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.
--------------------------------------‐----------------------------------------
வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.
------------‐-----------------------------------------
சதுர்த்தியன்று கடைபிடிக்க வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,
ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும்படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.
------------‐-----------------------------------------
கணபதிக்கு பிரியமானவை!

கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.
------------‐-----------------------------------------
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் காலத்தால் பழமையான ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் திருவுடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும்.

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும். நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

இருப்பிடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில், திருப்புத்தூர் - காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி. திருப்புத்தூரிலிருந்து சுமார் 9 கி.மீ., தூரத்திலும், காரைக்குடியிலிருந்து மதுரை வரும் ரோட்டில் சுமார் 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது.
------------‐-----------------------------------------
விநாயகர் அவதாரம்!

விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.

ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.

என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.
------------‐-----------------------------------------
விநாயகரின் 32 வடிவங்கள்!

விநாயகரின் 32 வடிவங்கள்: 1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. த்ரயக்ஷர கணபதி, 20. சிப்ரப்ரசாத கணபதி, 21. ஹரித்ரா கணபதி, 22. ஏகதந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருணமோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29. சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்க்கா கணபதி, 32. சங்கடஹர கணபதி.

கோபுர கணபதி: கோயில்களின் கோபுர வாயிலில் கணபதிக்குத் தனிச்சன்னதி அமைக்கப்படும். அவரைக் கோபுரக் கணபதி என்று கூறுவர். அவ்வாறு இல்லாதபோது கோபுர கோஷ்டத்தில் இவரை அமைப்பர். இவரை வணங்கிய பிறகே, பக்தர்கள் ஆலய தரிசனத்தைத் தொடங்குவர். சில ஆலயங்களில் கோபுரக் குடைவரை எனப்படும் கோபுரத்தின் உட்புறம் அமைந்த மேடைகளிலும் விநாயகரைக் காணலாம். இவரைக் குடைவரைப் பிள்ளையார் என்பர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் குடைவரையில் கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயரில் குடைவரைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

எதிர்நோக்கும் கணபதி: சில ஆலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க ராஜ கோபுரம் அல்லது தலைவாசல் தெற்கு நோக்கி இருக்கும். இத்தகைய கோயில்களில் கோயிலுக்குள் நுழைந்ததும் வழிபடத்தக்க வகையில் உள்மதில் ஓரமாக வாயிலை நோக்கியவாறு ஒரு கணபதியைச் சிறிய சன்னதியில் எழுந்தருள வைத்துள்ளனர். இவரை எதிர்கொள் கணபதி என்பர். மேற்கு நோக்கிய திருமயிலை கபாலீசுவரர் ஆலயத்தில் கிழக்கு வாயிலுக்கு நேராகவுள்ள நர்த்தன கணபதி, திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலயத்தின் தேவராஜகணபதி, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் முல்லைவன கணபதி முதலான கணபதியர் எதிர்கொள் கணபதியராக விளங்குகின்றனர்.

கொடிமர கணபதி : கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கொடிமரத்திற்கு முன்பாகவோ, அவற்றின் பீடத்தின் அடியிலோ சிறிய மாடத்துள் இருப்பவரைக் கொடிமரக் கணபதி என்றும், கம்பத்தடி கணபதி என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கொடிமரக் கணபதியாகப் படித்துறை விநாயகர் அமைந்துள்ளார். இந்த ஆலயம் செப்பு ஓடு வேய்ந்து மூன்று கலசங்களுடன் அழகிய சபையாக உள்ளது. தனிச் சன்னதியாக அமைக்க முடியாதபோது பலிபீடத்தின் கிழக்கு அடிப்பட்டைப் பகுதியில் சிறிய மாடம் அமைத்து அங்கு விநாயகரை அமைப்பர். இப்படிச் சிறிய மாடத்துள் இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற விநாயகரைப் பல இடங்களில் காணலாம். திருவலஞ்சுழியில் மூலஸ்தானத்தில் கடல் நுரையால் ஆன வடிவில் விநாயகர் ஸ்வேத (வெள்ளை) விநாயகர் என்ற பெயரில் விளங்குகிறார். பலிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கணபதிக்குச் சிறப்பளித்து முகமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை அமைத்துத் தனி ஆலயமாக ஆக்கியுள்ளனர். இவருக்குக் கொடியேற்றி விழா நடத்துகின்றனர். பலிபீடத்திற்கு முன்பாக அமையும் கணபதிக்குச் சங்கல்ப கணபதி என்று பெயர். முன்னாளில் இவருக்கு முன்பாகச் சங்கல்பம் செய்து கொண்டு, அன்றைய பஞ்சாங்கத்தைப் படித்த பின்னரே ஆலயத்தில் பூசைகளை மேற்கொள்வர்.

கன்னிமூலை கணபதி: பிராகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்குமுனையில் விநாயகர் சன்னதி அமைப்பது வழக்கம். அனைத்துப் பிரகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி ஆலயம் அமைகிறது என்றாலும் முதல் பிரகாரத்தில் அமையும் கன்னிமூலை கணபதியே பிரதான கணபதியாகப் போற்றப்படுகிறார். இவரைத் தல விநாயகர் என்று கொண்டாடுகின்றனர். சபரிமலையில் கன்னிமூலை கணபதி மிகவும் விசேஷமானவர்.

துவார கணபதி: ஆலயத்தின் ஒவ்வொரு வாயிலிலும் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனும் அமைக்கப்படுகின்றனர். இவர்களை முறையே துவார கணபதி, துவார சுப்பிரமணியர் என்று அழைப்பர். தத்துவவாதிகள் இவர்களை உலக உற்பத்திக்கு ஆதாரமான பிந்து நாதங்களின் வடிவம் என்கின்றனர். மேலும், விநாயகர் கல்யாண கணபதி, பந்தக்கால் கணபதி, நந்தவனப் பிள்ளையார், வசந்த மண்டப கணபதி, தேரடிமண்டப கணபதி என்று பல்வேறு பெயர்களில் ஆலயத்தில் பல இடங்களில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

விமான கணபதி: ஸ்ரீவிமானத்தில் அமையும் பஞ்ச கோட்டங்களில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கோட்டத்தில் நர்த்தன விநாயகரைக் காணலாம். இவர் கோஷ்ட கணபதி. சில விமானங்களில் மேற்பகுதியில் விநாயகரை அமைத்துள்ளனர். மயிலாடுதுறை மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஸ்ரீவிமானத்தின் அருகில் சிறிய சன்னிதியில் ஸ்ரீவிமான கணபதி எழுந்தருளியுள்ளார். அகத்தியர் மணலைத் திரட்டி இவரது திருமேனியை அமைத்து வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகிறது.
------------‐-----------------------------------------
வினை நீக்கும் மந்திரம்!

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.  அதே போல் எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.

பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும்போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள்  தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.
------------‐-----------------------------------------
சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே!

பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!

ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே!

என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே!

தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே!

எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட
மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத்
தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.
------------‐-----------------------------------------
விநாயகர் அகவல்!

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும் மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் கட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயக விரை கழல் சரணே!
------------‐-----------------------------------------
வடக்கே தலை வச்சா என்னாகும்?

இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை பெரியவர்கள் கண்டித்தால் நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன! என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள். பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில் சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன் வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் கண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம். பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால் குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால் வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்குசள்ளேகனம் என்றும் பெயருண்டு. நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.  அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளவே பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புரிகிறதா!
------------‐-----------------------------------------
பிள்ளையார் என்பது ஏன்?

தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
------------‐-----------------------------------------