புதன், 23 அக்டோபர், 2013

இளைஞர் தினம்: கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்!

ஜனவரி 12: விவேகானந்தரின் 150வது பிறந்ததினம். விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியைத் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்:

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"
    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
    கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்
    உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
    அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
    தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
    கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
    மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
    கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.
    சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
    ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
    உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
    சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.
    ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
    கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.
தை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு மற்றும் விரதங்கள்!

சாவித்ரி கவுரி விரதம் : தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தார் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மவுன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மலையில் பூஜையை முடிக்க வேண்டும். பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோதி முறங்களில்.. ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு - ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

பைரவ வழிபாடு : தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வடை மாலை சாற்றி வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

வீரபத்திர வழிபாடு : மங்கலவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் வீரபத்திரரை வழிபட, வல்வினைகள் நீங்கும். வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது சிறப்பு. இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.
குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.
விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய 18 பணிகள்!

நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத மற்றும் பண்டிகை நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

1. சன்னதிதோறும் கோலமிடுதல்
2. ஆலய வளாகத்தை அலங்கரித்தல்
3. தரைப் பகுதியைப் பெருக்குதல்
4. மேல்பகுதிகளில் ஒட்டடை நீக்குதல்
5. கட்டிடங்களில் உள்ள செடிகளை அகற்றுதல்
6. விளக்கு, திருவாசிகளைத் தேய்த்தல்
7. மின் அமைப்பைப் பராமரித்தல்
8. நந்தவனத்தைப் பேணுதல்
9. அபிஷேக நீர்த்தொட்டியை சுத்திகரித்தல்
10. மண்டபங்களைக் கழுவி விடுதல்
11.சிறப்பு வழிபாடுகளை நடத்துவித்தல்
12. பூஜைப் பணிகளில் உதவுதல்
13.தரிசிப்போரை வரிசைப்படுத்துதல்
14. பிரசாதம் வழங்களில் உதவுதல்
15. புதியவர்க்கு வழிகாட்டல்
16. இறைத் துதிகளை கற்றுவித்தல்
17. இறை நூல்களை விநியோகித்தல்
18. வழிபாட்டில் முழுமையாக பங்கேற்றல்.
கை குலுக்கும் பழக்கம் குரங்குகளிடமிருந்து மனித இனத்தைத் தொற்றியதா?

ஷேக் ஹாண்ட் கொடுக்கும் பழக்கம் மேல்நாட்டுக்காரர்களிடம் இருந்து இன்று உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை டிவிகளில் காட்டுகிறார்கள். இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றிய சுவாரஸ்யமான கதை உங்களுக்கு தெரியுமா?

ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை பாணிக்ரஹணம் என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி க்ருஹயதாம் பாணினா பாணிம் என்றான். கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது என்று பொருள். ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு முதன் முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக் காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்களாம்.
இடதுகண் துடித்தால் ஆண்களுக்கு கேடு என்பது ஏன்?

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.
உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு விதமான பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் சகுன சாஸ்திரங்களை நம்பி அதன்படி நடக்கின்றனர். எனினும், எல்லாம் அறிந்தவர் இறைவன் ஒருவரே. இந்தக் காரணங்களினால் இந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நம்மை வழிநடத்திச் செல்பபவர் அவரே. கடுமையாக உழைத்தால் அதற்கு ஏற்ற பலன்களை இறைவன் நமக்கு நிச்சயம் அளிப்பார். இதுபோன்ற மக்களின் மூடநம்பிக்கைகளில் நேரத்தை செலவழிக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வோம். இறை அருள் நமக்கு எதை அருளினாலும் அதை ஏற்றுக்கொள்வோம்.
இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன் அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானது அவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும் அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என மிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.

தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவே தங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோ பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள். முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்.
பக்தர்கள் கருப்பு மற்றும் மஞ்சள் ஆடை அணிவது ஏன் தெரியுமா?

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கருப்பு, காவி மற்றும் கருநீலம், பச்சை ஆகிய நிறங்களில் ஆடைகள் அணிகிறார்கள். ஆனால் கருப்பு ஆடை அணிவது தான் ஏற்றது. கருப்பு ஆடை அணிந்தால் தீங்கு விளைவிக்கக் கூடிய மிருகங்கள் நெருங்காது. இதற்கு அடுத்ததாக காவி உடையை தேர்வு செய்யலாம் இந்த ஆடை அணிந்தால் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிட்ட வரவே வராது.

மஞ்சள் ஆடையின் மகிமை: சில ஊர்களில் கோயில் திருவிழா ஆரம்பித்ததும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கொள்வார்கள். அது பக்தியின் அடையாளம் தான் என்றாலும், அதனால் பல நன்மைகளும் இருக்கிறது. அதாவது, திருவிழா நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு. அந்த கிருமிகள் தாக்குதலை தடுக்கும் சக்தி இந்த மஞ்சள் ஆடைக்கு உண்டு. மேலும் மன ரீதியாக தெய்வ நம்பிக்கையையும் இந்த மஞ்சள் ஆடை அதிகரிக்கிறது.
சனி பெயர்ச்சியால் சங்கடமா? இருக்கு எளிய பரிகாரம்!

சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர்களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( திருவாரூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள  கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வரலாம்.

அஷ்டமச்சனி பரிகாரம்: நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெயையும் கலந்து, ஒரு இரும்பு விளக்கில் எட்டு முகம் வைத்த திரியை கொண்டு சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி, அவரை வலம் வந்து வழிபட்டால் அஷ்டமச்சனி விலகிவிடும். நிம்மதி பிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாகும்.
யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள், 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம், 9. பயன்படுத்திய மந்திரம். இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.