வரலாற்றுப் போக்கில் திருவானைக்கா தாடங்க ப்ரதிஷ்டை... ஒன்று...
ஸ்ரீ பராபரகுரு ஸ்வாமிகள் - ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஸ்ரீ மடத்தின் 64 ஆவது பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்ய ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் திருவானைக்கா ஶ்ரீஅகிலாண்டேஶ்வரீ அம்பாளுக்கு 1846ஆம் ஆண்டு நிகழ்த்திய தாடங்க பிரதிஷ்டை பற்றிய குறிப்புகள் - (ஶ்ரீமடம் ஆவணக் களஞ்சியத்திலிருந்து)
பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஒன்றான ஜம்புகேஶ்வரம் என்னும் திருவானைக்காவலில், கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ அகிலாண்டேஶ்வரீ தேவியின் திருச்செவிகளில் ஶ்ரீசக்ர தாடங்கங்களை பூஜ்ய ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்கள் அவர்கள் ப்ரதிஷ்டை செய்தது உலக ப்ரஸித்தம்.
19 ஆம் நூற்றாண்டின் மையக் காலத்திற்குச் சற்று முன்பாக ஶ்ரீ அம்பிகையின் தாடங்கங்கள் ஜீரணமடைந்தும், சிதிலமாயுமிருந்த சமயத்தில் திருவானைக்காவல் கோவில் ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள், தர்மகர்த்தாக்கள் மற்றும் அவ்வூர் மஹாஜனங்கள், ஆகிய அனைவரும் சேர்ந்து இவ்வூர் தேவஸ்தானம் மற்றும் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பூர்வாசார்யார்களின் வழக்கப்படி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (64வது பீடாதிபதியான இவ்வருளாளர் பூஜ்ய ஸ்ரீ மஹா பெரியவாளின் பராபரகுரு ஸ்வாமிகள் ஆவர்) அவர்களைப் பணிந்து ஶ்ரீசக்ர தாடங்கங்களை ஜீர்ணோத்தாரணம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டுமென ப்ரார்த்தித்து, மரபு வழக்கப்படி விக்ஞாபன பத்ரம் ஒன்றையும் ஸமர்ப்பித்துக் கொண்டனர்.
பூஜ்ய ஸ்ரீ ஆசார்யாள் அவர்களும், இந்த ப்ரார்த்தனையை ஏற்று குரோதி வருஷம் முற்பகுதியில் (1844) திருவானைக் கோவிலுக்கு விஜயம் செய்து தாடங்க ப்ரதிஷ்டைக்குத்
தேவையானவற்றை மேற்கொண்டு செய்ய அருள் ஆணையிட்டார்கள்.
அந்த க்ஷேத்ரத்தில் கருங்கல்லாலான மண்டபங்களைக் கொண்ட ஶ்ரீ காமகோடி பீடத்திற்குச் சொந்தமான பண்டைக் காலத்திலிருந்து ஏற்பட்டுள்ள கிளை மடத்தில் தங்கலானார்கள். இம் மடத்தில் கருங்கற்களால் அமைக்கப்பட்ட மூன்று கிணறுகளும், மூன்று முற்றங்களுமு உண்டு. முற்றங்கள் அக்காலத்தில் மண் சூழ்ந்தவைகளாகவே இருந்தன. தாடங்க பிரதிஷ்டை காரியங்களுக்காக இங்கு அதிக காலம் தொடர்ந்து தங்க வேண்டியதாயிற்று.
பூஜ்ய ஸ்ரீ பராபரகுரு ஸ்வாமிகள் தாடங்க ப்ரதிஷ்டையின் நிமித்தமாய், திருவானைக்காவலுக்கு விஜயம் செய்திருக்கும் விபரம் கர்நாடக மாநிலத்தில் பூஜ்ய ஶ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள் பரம்பரையினரான ஶ்ரீதுங்கா ஶ்ருங்கேரி மடாதிபதிக்கு தெரியலாயிற்று. உடன் அவர் தம் மடத்து ஏஜண்டைக் கொண்டு தாடங்கப் பிரதிஷ்டை செய்வதற்குத் தங்களுக்கு மட்டுமே பாத்யதை இருப்பதாகவும் தாங்களே அதனைச் செய்ய வேண்டும் என்றும் அக்காலத்திய திருச்சிராப்பள்ளி பிரின்ஸிபல் ஸதர் அமீன் கோர்ட்டில் வழக்குத் தொடங்கி விட்டார்கள் (1844 ஜூலை). இந்த வழக்கில் வாதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குரை மிகவும் பொய்மை நிரம்பியதாகக் கருதப்படுகிறது.
இரண்டு மடங்கள் சார்பிலும் பல தஸ்தாவேஜுகள் இரு மடங்களின் ஸம்ப்ரதாயங்கள், குருபரம்பரை முதலியன கோர்ட்டின் கவனத்திற்காக வைக்கப்பட்டன.
இதற்கு முன்னர் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பல்வேறு ஜகத்குரு ஆசார்யர்களும் இங்கு தாடங்க ப்ரதிஷ்டை செய்திருந்ததும், அதிலும் குறிப்பாக ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 59 ஆவது ஜகத்குரு ஆசார்யர்கள் பூஜ்ய ஶ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களால் பொ.யு. 1686 ஆவது தமிழ் அக்ஷய ஆண்டிலும், 62 ஆவது ஜகத்குரு ஆசார்யர்கள் ஶ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களால் பொ.யு 1757 ஆவது தமிழ் ஈஶ்வர ஆண்டிலும் இங்கு ஶ்ரீசக்ர தாடங்கங்கள் செப்பனிடப்பட்டு ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது தேவஸ்தானத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அதே போல் மிகச் சமீப காலத்தில் இயற்றப்பட்ட மடாம்நாயம் என்னும் நூல் பிரவுட க்ரந்தம் அல்ல என்றும் அதைக் காட்டிலும் சிவ ரஹஸ்யம், மார்கண்டேய ஸம்ஹிதை, ஆசார்ய விஜயம் ஆகியவை காலத்தால் மிகவும் பழமையானவை ஆதலின் அவற்றை மட்டுமே ஏற்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப் பட்டது.
கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் பூர்வீகமாக ஹைதராபாத் நிஜாம் ஸமஸ்தானத்தைச் சேர்ந்தவர். அவர் எல்லா தஸ்தாவேஜுகளையும் நன்கு பரிசீலித்து, எல்லாவற்றிலும் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நீதிபதி வாதி துங்கா ஶ்ருங்கேரி மடத்தின் சார்பில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள சாக்ஷிகளின் வயது, அவர்களின் சாக்ஷியம், மற்றும் அவர்கள் தரப்புக்கு ஆதாரமாகத் தரப்பட்ட தஸ்தாவேஜுகள் எல்லாம் சரியானதாகவும், ருஜுவானதாகவும் இல்லை என்று நிரூபணம் செய்து அவற்றை ஏற்காமல் நிராகரித்துத் தள்ளி விட்டார்.
பிறகு துங்கா மடத்தார் திருச்சி ஸிவில் கோர்ட்டில் அப்பில் வழக்குத் தொடுத்தார்கள். அக்கோர்ட்டின் நீதிபதியும் அப்பீல் வழக்கில் வாதி மடத்தார் தரப்பில் கீழ் கோர்ட்டில் அளிக்கப்பட்ட சாக்ஷியம், தஸ்தாவேஜுகள் முதலியவற்றை நன்றாகப் பரிசீலித்து, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்து. அப்பீல் வழக்கைத் தள்ளி விட்டார்.
அதன் பின்னர் துங்கா மடத்தினர், அக்காலத்திய ஸதர் அதலத் என்ற உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த நீதிமன்றமும் கீழ் நீதி ஸ்தலங்களில் ஏற்பட்ட விசாரணைகள், தீர்ப்புகள் முதலியவற்றை பரிசீலனை செய்து, துங்கா மடத்தின் அப்பீல் வழக்கைத் தமது ரத்னச் சுருக்கமான தீர்ப்புடன் தள்ளுபடி செய்து விட்டது.
இத்தோடு நில்லாது துங்கா மடத்தார் இந்தத் தீர்ப்புச் சரியல்ல. மறு விசாரணை செய்ய வேண்டும் என்று அதே உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார்கள். ஸதர் அதலத் கோர்ட்டார் இந்த மனுவுக்குக் காரணம் ஒன்றும் இல்லை என்று கூறி இந்த மனுவையும் நிராகரித்து விட்டனர்.
இப்படி நான்கு ஆண்டு காலத்திற்கு மேலாக அம்பிகையின் தாடங்க ஜீர்ணோத்தாரணம், பிரதிஷ்டை ஸம்பந்தமான பாத்யதை பற்றிய வழக்குகள் வளர்ந்து கொண்டிருந்த போது தான் திருவானை
க்கா மடத்தின் முற்றத்தில் முளைத்த எலுமிச்சைச் செடிகளும் காய்க்கத் தொடங்கின. அந்தப் பழங்களைப் பிழிந்து எடுக்கப்பட்ட சாறு ஶ்ரீ சந்த்ரமௌளீஶ்வர ஸ்வாமிக்கு அபிஷேகத்திற்குப் பயன் படுத்சப்பட்டது.
மூன்று நீதிமன்றங்களினாலும் பரம்பரையாக ஶ்ரீ காமகோடி பீடத்திற்கு அகிலாண்டநாயகியின் தாடங்க ஜீர்ணோத்தாரண பாத்யதை ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின், பூஜ்ய ஶ்ரீ பராபரகுரு ஸ்வாமிகள் அவர்கள், 1838ஆம் ஆண்டு காஞ்சியில் ஸ்ரீ காமாக்ஷிக்கு செய்த படி, திருவானைக்காவல் ஶ்ரீ சக்ர தாடங்கங்களுக்கும் தம்முடைய மரபு விதிப்படியே கலாகர்ஷணம் செய்து, தாடங்கங்களைத் தக்கபடி துரஸ்து செய்து. பரமானந்தத்துடன், 1846ஆம் ஆண்டு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையின் திருச்செவிகளில் அவைகளைச் சாற்றி, தமக்கும் உலக மக்களுக்கும் தேவியின் பரமானுக்ரஹத்தை ஸம்பாதித்துக் கொண்டார்கள்.