அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்
மூலவர் : லட்சுமிநாராயணர்
உற்சவர் : வெங்கடேசப்பெருமாள்
தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : வரகூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:கிருஷ்ண ஜெயந்தி
தல சிறப்பு:லட்சுமி நாராயணர், வராகமூர்த்தி, கண்ணன் என மூன்று கோலங்களில் பெருமாள் இத்தலத்தில் அருள்புரிகிறார்.
திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், வரகூர்-613 101 தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 4362 280 392, 94879 92680, 94428 52145
பொது தகவல்:இவ்வூரில் வசித்த ஆனைபாகவதர், சுவாமி மீது பல கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார். நாராயணகவி என்ற பக்தர் இங்கு நடக்கும் உறியடித் திருவிழாவை "கிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்ற பிரபந்தம் பாடியுள்ளார்.
பிரார்த்தனை:குழந்தை பாக்கியம் இல்லாதோர், சுவாமி பாதத்தில் வெள்ளிக்காப்பு வைத்து வேண்டி, அதை அணிந்து கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:சுவாமி பாதத்தில் வைத்து வேண்டிய வெள்ளிக்காப்பை குழந்தை பிறந்ததும் காணிக்கையாக செலுத்தி விடுகின்றனர்.
தலபெருமை: மூலஸ்தானத்தில் லட்சுமி நாராயணர், பத்ம விமானத்தின் கீழ், இடது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி அமர்ந்திருக்கிறார். இவருக்கு தினமும் திருமஞ்சனம் உண்டு. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள உற்சவர் வெங்கடேசப்பெருமாள் பிரசித்தி பெற்றதால், இவரது பெயரால் கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், சாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா: நாராயண தீர்த்தருக்கு சுவாமி, கிருஷ்ணராகக் காட்சி தந்ததால் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கு கிருஷ்ணருக்கென சிலை வடிவம் எதுவும் கிடையாது. லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகிறார்கள்.கோகுலாஷ்டமியன்று சுவாமி மடியில் குழந்தை கிருஷ்ணரை வைத்து, பெருமாளையே யசோதையாக அலங்கரிப்பர். பின், கிருஷ்ணர் பிறப்பு பற்றிய சொற்பொழிவு நடக்கும். இவ்வேளையில் சுவாமிக்கு முறுக்கு, சீடை, தட்டை, பழம் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யமாகப் படைப்பர். மறுநாள் காலையில் சுவாமி கடுங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவில் அவர் வெண்ணெய்க் குடத்துடன் தவழும் கண்ணனாக, கோயிலுக்குத் திரும்புவார். இவ்வேளையில், பக்தர்கள் அவரை பின்தொடர்ந்து வீதிகளில் அங்கபிரதட்சணம் வருவர். அப்போது, ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள் "உறியடியோ கோவிந்தோ' என்று கூச்சலிடுவர். அதாவது, கண்ணனின் அழகைக்காக கொட்டகையில் அடைக்கப்பட்ட பசு, கன்றுகளை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். இவ்வேளையில் முறுக்கு, தட்டை, சீடைகள் வைத்த மண்பானையுடன் உள்ள மூங்கில் கூடை கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தில் உறியடி உற்சவம் நடக்கும். பின், சுவாமி வழுக்கு மரம் உள்ள இடத்திற்குச் செல்வார். வழுக்கு மரம் ஏறும் வைபவம் முடிந்ததும் சுவாமி, கோயிலுக்குத் திரும்புவார். மறுநாள் கிருஷ்ணர் ருக்மிணி திருமணம் நடக்கும்.
விசேஷங்கள்: சுவாமியே இங்கு பிரதானம் என்பதால் பரிவார மூர்த்திகள் கிடையாது. மாட்டுப்பொங்கலன்று இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாவார். கூர்ம, வராகம், நரசிம்மம், பலராமர் ஜெயந்தி நாட்களில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனத்துடன், புறப்பாடும் உண்டு. ராமநவமி விழா, ராதா கல்யாண விழாவும் இங்கு விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதோர், சுவாமி பாதத்தில் வெள்ளிக்காப்பு வைத்து வேண்டி, அதை அணிந்து கொள்கின்றனர். குழந்தை பிறந்ததும் அதை காணிக்கையாக செலுத்தி விடுகின்றனர்.
தல வரலாறு:மகாவிஷ்ணு, தாமாகத்தோன்றி அருள்புரிந்த தலங்கள் சுயம்வியக்த சேத்ரம் எனப்படும். அவ்வகையில் மகாவிஷ்ணு இங்கு லட்சுமி நாராயணராக எழுந்தருளினார். ஆந்திராவில் வசித்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தார். இப்பகுதிக்கு வந்தவர் ஓர்நாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், "நாராயணா! நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா! உன் பிணி தீரும்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த லட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், "பக்தா! உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு!' என்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், அவ்வாறே பாடினார். "கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற அற்புத பாசுரம் கிடைத்தது. சுவாமி வராகராக காட்சி தந்ததால் ஊருக்கு "வரகூர்' என்ற பெயர் ஏற்பட்டது.